ESK-13

ESK-13

சுவாசம் —  13

போர்டிகோவில் வந்து நின்ற கதிரின் காரைப் பார்த்ததும் குழந்தைகள் இருவரும்  ஓடி வந்தனர். கதிருடன் இறங்கிய சிவரஞ்சனியைக் கண்டதும் அவர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது.

காலையில் கண்விழித்ததும் முதலில் அவர்கள் கேட்டது சிவரஞ்சனியைப் பற்றிதான்.  கல்லூரிக்குச் சென்றிருக்கிறாள் என்றதும்    சற்றுச் சுணங்கியவர்கள்,   விடுமுறையில் கண்டிப்பாக இங்கு வருவாள் என்று கூறியதில்  சமாதானமாகி இருந்தனர்.

வெளியில் கிளம்புவதற்குத் தயாராக இருப்பது போல உடையணிந்திருந்த ஆதவனைக் கையில் அள்ளிக் கொண்டவன்,

“எங்கடாப் போறீங்க? ரெண்டு பேரும் கிளம்பி ரெடியா இருக்கீங்க.”

சிவரஞ்சனியிடம் ஒட்டிக் கொண்டிருந்த அனுதான் பதில் கூறினாள்,

“உனக்குப் பொண்ணு பார்க்கக் கோவிலுக்குப் போறோம் மாமா.”

திடுக்கிட்டு விழித்தவன், “என்னடாச் சொல்ற?”   என்று கேட்டபடி சிவரஞ்சனியையும் அழைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். சிவரஞ்சனியும் சற்று அதிர்ந்துதான் போயிருந்தாள்.

“அக்கா…  அக்கா… “

அவன் குரல் கேட்டு சாவகாசமாக வெளியே வந்த வாசுகி,   கதிரையும் சிவரஞ்சனியையும் பார்த்துவிட்டு,

“வாடா…  என்னடா சிவரஞ்சனிய ஹாஸ்டல்ல சேர்க்கல?   திருப்பிக் கூட்டிட்டு வந்திருக்க?”

“அதெல்லாம் சேர்த்தாச்சு க்கா…  நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை லீவுதான,  அங்க தனியாதான   இருப்பா, அதான் திங்கள்கிழமை கொண்டு போய் விட்டுக்கலாம்னு திரும்பக் கூட்டிட்டு வந்துட்டேன். ஆமா, அனு என்னவோ   எனக்குப் பொண்ணு பார்க்கப் போறதாச் சொல்றா…?”

அவன் கடைசியாகக் கேட்ட கேள்வியைச் சட்டை செய்யாமல், உணவு மேஜையில் இருந்த பொருட்களை ஒதுக்கி வைத்தபடி,

“அதுவும் சரிதான், பிள்ளைங்க காலையில எழுந்ததிலிருந்து சிவரஞ்சனியத்தான் தேடுனாங்க. அவ வந்ததும் நல்லதாப் போச்சு, அவங்க கூட விளையாடிட்டு இருப்பா… “

‘பிள்ளைங்களோட விளையாடவா அவளைக் கூட்டிட்டு வந்தேன்’   என்று அவன்  முழித்துக்  கொண்டிருக்கும் போதே,

“ரஞ்சனி…  அனுவுக்கு அழகா தலையை சீவி விட்டுட்டு,   மாடியில போய் அவங்களோட விளையாடிகிட்டு இரும்மா.”

என்றவள் கைக்கொரு பாத்திரமாகத் தூக்கியபடி சமயலறைக்குள் சென்றாள்.

‘மாடிக்குப் போகாதே! இங்கேயே இரு!’ என்று கண்களாலேயே அவன் சிவரஞ்சனியிடம் பேசிக் கொண்டிருக்க,   அனுவும் ஆதவனும், “வாங்கக்கா” என்றபடி அவளது இரு கரங்களையும் ஆளுக்கொன்றாகப் பிடித்து இழுத்துக் கொண்டு மாடியேறினர்.

கதிரைத் திரும்பித் திரும்பிப்  பார்த்தபடியே மாடியேறினாள் சிவரஞ்சனி.

வீடு முழுவதும் ஒருவிதப் பரபரப்பில் இருந்ததை அப்பொழுதுதான் கவனித்தான் கதிர்.  சுந்தரும் அவனது சகாக்களும் ஹாலில்  வாசுகி எடுத்து வந்து வைத்திருந்த பொருட்களைச் சரி பார்த்தபடி இருந்தனர்.

“டேய்…  சுந்தரு…  நீங்க இங்க என்னடாப் பண்றீங்க?”

“நம்ம வீட்டு விசேஷம், நாங்க இல்லாமையா ண்ணா?  அண்ணிய நான்தான் முதல்ல பார்த்து நல்லா இருக்காங்களான்னு சொல்லுவேன்.  அப்புறம்தான், நீங்க சம்மதம் சொல்றீங்க சரியா?”

நறநறவென்று பற்களைக் கடித்தவன், “உன் மண்டையப் பொளக்கப் போறேன் நான்.  வேலையப் பாரு… உன்னை அப்புறம் கவனிச்சுக்கறேன்.”  என்றபடி வாசுகியைத் தேடி சமயலறைக்குள் போனான்.

தான் நினைத்து வந்தது என்ன?   இங்கே நடந்து கொண்டிருப்பது என்ன?  நினைக்க நினைக்கக் கடுப்பாக இருந்தது அவனுக்கு.

சிவரஞ்சனியுடன் சேர்ந்து வாசுகியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய   பிறகு, தாங்கள்   இருவரும் திருமணம்  செய்ய விரும்புவதைச் சொல்லி, வாசுகியின் முகம் மலர்வதைப் பார்க்கும்  ஆவலோடு வந்தால்,  தனக்கு எவளோ ஒருத்தியைப் பெண் பார்க்கவென்று, இவர்கள்   அனைவரும் கிளம்புவது அவ்வளவு எரிச்சலைக் கொடுத்தது.

அதேக் கடுப்புடன் சமையலறையின் உள்ளே நுழைந்தவன்   கண்டது பெரிய பெரிய பாத்திரங்களில் சர்க்கரைப் பொங்கல்,  கேசரி,  வடை  என்று பலவித ஐட்டங்கள் தயாராகிக் கொண்டிருப்பதைத்தான். அதைக் கண்டு அதிர்ச்சி ஆனவன்,

“அக்கா…  என்னக்கா  இதெல்லாம்?”

“சர்க்கரைப் பொங்கல்டா…   சாப்பிட்டதில்ல? போன மாசம் ஆது பிறந்தநாளுக்குச் செய்தேனே.”

“கடவுளே…  அதுத் தெரியுது. எதுக்கு இவ்வளவு செய்து வச்சிருக்க?”

“பிரசாதம்டா…   கோவில்ல குடுக்கறதுக்கு. அபிஷேகம் அர்ச்சனை எல்லாத்துக்கும் ரெடி பண்ணிருக்கேன்.  காலையில  பொண்ணு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னதுல இருந்து, எனக்குக் கையும் ஒடல காலும் ஓடல.  பயங்கர சந்தோஷம்.  அதான் சாயந்திரமே பொண்ணு பார்க்கற ஃபங்ஷன கோவில்ல வச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்.”

“யாரைக் கேட்டு முடிவு பண்ண?  எனக்கு இந்தப் பொண்ணு பார்க்கறதெல்லாம் புடிக்கல.  நான் வரமாட்டேன்.”

“இங்க பாரு கதிரு,  நான் ஏற்கனவே உன் கிட்ட சொல்லியிருக்கேன்.  நான் எந்தப் பொண்ணப் பார்த்துக் கையக் காட்டுறேனோ அந்தப் பொண்ண  நீ கல்யாணம் பண்றன்னு, புரியுதா…  என் கிட்ட வார்த்தையாடாம  ஒழுங்காப் போய் கிளம்பி ரெடியாகு.  எனக்குத் தலைக்கு மேல வேலையிருக்கு.”

“அக்கா,   நான் சொல்றதக் கொஞ்சம் கேளேன்.  நான் கல்யாணம் பண்ணிக்குறேன்கா…ஆனா”  அவனை இடைமறித்து,

“பெருமாளே…  உன் கருணையே கருணை.  அபிஷேகம் ஆராதனை பண்றேன்னு வேண்டிக்கிட்டதுமே,  கதிரு வாயில இருந்து கல்யாணம் பண்ணிக்கறேன்னு வார்த்தை வந்துடுச்சி.  இது போதும் எனக்கு.   பொண்ணோட ராசி ரொம்ப நல்ல ராசி.”

வீட்டின் விட்டத்தைப் பார்த்துக் கும்பிட்ட வாசுகியைக் கடுப்பாக முறைத்தவன்,  “இப்ப நான் சொல்றத முழுசா கேட்கப் போறியா இல்லயா?  எனக்கு நீ பார்த்து வச்சிருக்கப் பொண்ணப் புடிக்கல.”

“பார்க்கறதுக்கு முன்னாடியே எப்படிடா புடிக்கும்?  வந்து கோவில்ல பொண்ணப் பாரு, அப்படியே மயங்கிப் போயிடுவ.  கொள்ள அழகா இருப்பாத் தெரியுமா?”

அவனிடம் பேசிக் கொண்டே தாம்பாளத் தட்டுகளை எடுத்து வந்து சுந்தரிடம் கொடுத்தவள்,

“எல்லாப் பொருளும் சரியா இருக்கா? சுந்தர் செக் பண்ணிட்டியா?”

“எல்லாம் சரியா இருக்குக்கா.  மாலையும் பூவும் மட்டும் வாங்கிட்டாப் போதும்.”

மேஜையின் மேல் வைத்திருந்தக் கவரை எடுத்து கதிரின் கைகளில் திணித்தவள்,

“இங்க பாரு, மசமசன்னு நிக்காத.  கோவிலுக்குப் போகனும்,   நேரமாகிடுச்சி.  இதுல உனக்கு புது பட்டு வேட்டி சட்டை வச்சிருக்கேன்.  உன் ரூம்ல போய் குளிச்சிட்டு ரெடியாகி மாலையும் பூவும் வாங்கிகிட்டு நேராக் கோவிலுக்கு வந்துடு.”

“அக்கா,  நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்கா.”

“அதெல்லாம்  கோவிலுக்குப் போயிட்டு வந்ததுக்கு அப்புறம் நைட்டு   பேசிக்கலாம்.”

தனது ஃபோனை எடுத்தவன்,  “உன் கிட்ட பேசினா சரிப்பட்டு வராது.   நான் தலைவர்கிட்ட பேசிக்கறேன்.”

“அதெல்லாம்   நான் அவர்கிட்ட மதியானமே சொல்லிட்டேன்.   அவருக்கு டபுள் சந்தோஷம்.   நாளைக்கு மதியம் ஃப்ளைட்ல வர்றாராம்.  வந்ததும் பொண்ணு வீட்டுல போய் உறுதி பண்ணிட்டு வந்துடலாம்னு சொல்லியிருக்காரு.  இப்ப கட்சி மீட்டிங்ல இருப்பாரு.”

எரிச்சலுடன் முறைத்தவனைப் பார்த்து,

“சின்னப் புள்ளைங்க மாதிரி அடம் பிடிக்காம கிளம்பி வா கதிரு.   சுந்தர் நீயும் இவனும் போயிட்டு கிளம்பி நேரா கோவிலுக்கு வந்துடுங்க.  மாலையும் பூவும் மறந்துடாதீங்க.”  என்றவள் மீண்டும் சமயலறைக்குள் புகுந்து கொண்டாள்.

படு கோபமாகக் கால்களைத் தரையில் உதைத்தவன்,   சுந்தரின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்தபடி வெளியேறினான்.

ஸ்கார்ப்பியோ அரைவட்டமடித்து வீட்டை விட்டு வெளியேறிய வேகத்தில்  கதிரின் கோபம் தெரிந்தது.  ஸ்டியரிங்கைக் கைகளால் வளைத்துக் கொண்டே,

“எவடா அவ?  அக்கா எனக்காகப் பார்த்து வச்சிருக்கப் பொண்ணு?   யாரோடப் பொண்ணு?”

“ஹி… ஹி…  அதுக்குள்ளப் பொண்ணப் பார்க்கனுமா உனக்கு? அவசரப் படாதண்ணா.  பொண்ணக் கோவில்ல காட்டுவாங்க. அப்பப் பார்த்துக்கலாம்.”

“ஓங்கி மிதிச்சேன்னு வை. ரோட்டுல போய் விழுவ. வாய மூடிகிட்டு வா.”

எரிச்சலாக இருந்தது கதிருக்கு.  தான் சொல்ல வருவதைப் புரிந்து கொள்ளாமல்,    வாசுகிப் பிடிவாதமாக இருப்பது கடுப்பைக் கிளப்பியது.  வாசுகியிடம் பெண் பார்ப்பதை நிறுத்தச் சொல்லி, எப்படிச் சொல்வது என்று யோசித்தபடி வந்தான்.

சற்று நேரம் அமைதியாக இருந்த  சுந்தர் மெதுவாக,

“எனக்கு வாசுகி அக்கா பண்றது ஒன்னும் பிடிக்கல ண்ணா”  என்றவனைப் புருவம் உயர்த்திப் பார்த்த கதிர்,

“ஏன்டா?”

“நீ என்ன சொல்ல வர்றேன்னு காது குடுத்துக் கேட்டுச்சா அக்கா.  உனக்கு எவ்வளவு கஷ்டமா  இருந்திருக்கும்?”

“ம்ப்ச்…  உனக்காவது புரியுதே. எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா? என்னென்னவோ நினைச்சிட்டு வந்தேன்.”

“கவலைப் படாதண்ணா…   நைட்டு போய்ப் பார்த்துக்கலாம்.  எப்படியும்  மீதி இருக்கும்.”

சுந்தரைப் புரியாமல் பார்த்தக் கதிர், “என்னாதுடா?”

“பாயாசம்…   மதியம் வச்சது.”  கொலை  வெறியில்  கதிர் முறைப்பதைக் கவனிக்காமல்,

“இன்னைக்கு மதியம் வடை பாயாசத்தோட எங்களுக்குச் சாப்பாடுண்ணா.  ஃபுல் கட்டு கட்டுனேன். பருப்புப் பாயாசம். உனக்கு கூட ரொம்பப் புடிக்குமே. அதத்தான அக்காகிட்ட அவ்வளவு நேரமா கேட்டுட்டு இருந்த?”

வண்டியை ஓரம் கட்டி நிறுத்தியவன் அவனைப் பார்த்து,

“கீழ இறங்கி டயர்ல காத்து இருக்காப் பாரு.”  கதிர் கூறியதும்,

“ஏன் ண்ணா? சரியாதான இருக்கும்”  என்றபடி கீழே இறங்கிய சுந்தர் நான்கு டயர்களையும் சுற்றிப் பார்க்க,   கார்க் கதவை மூடி   ஜன்னலைத் திறந்தவன்,

“பொடிநடையா  நடந்து வீட்டுக்கு வா.  அப்பதான் உனக்கு கொழுப்புக் குறையும்”  என்றபடிக் காரைக் கிளப்பிச் சென்று விட்டான்.

“அண்ணா…  அண்ணா… “ கத்தியவன்,  கார் நிற்காமல் போகவும் ஒரு ஆட்டோவைப் பிடித்து கதிரைப் பின்தொடர்ந்தான்.

 

மாடியறைக்குள் சிவரஞ்சனியின் மனம் பல்வேறு யோசனைகளில் தத்தளித்துக் கொண்டிருந்தது.

‘வாசுகி  அக்கா சொல்றத அவர் கண்டிப்பா கேட்பாரு. அவங்க அவருக்குப் பெரிய வசதியான இடத்துல, நல்லா அழகானப் பொண்ணு பார்த்திருப்பாங்க. கண்டிப்பா நாம அதுக்குத் தடையா இருக்கக் கூடாது.’  என்று யோசித்தது ஒரு மனது.

‘ஆனா அவருக்கு என்னைத் தான பிடிச்சிருக்கு.  அத அவங்க அக்காகிட்ட, அவர் சொல்ல மாட்டாரா? அவர் மனசுக்குப் பிடிச்ச என்னைக் கல்யாணம் பண்ணிக்கத்தான அவர் ஆசைப்படுவாரு’  என்று யோசித்தது இன்னொரு  மனது.

‘அவர் ஆசைப்படறது அவங்க அக்கா ஆசைப்படறதெல்லாம் விடு.  உனக்கு  கதிர் மேல் ஆசையில்லயா?  கதிர் இல்லாமல் நீ இருந்து விடுவாயா?’  என்று கேள்வி எழுப்பியது மற்றொரு மனது.

மனம் வெகுவாகக் குழம்பிப் போயிருந்தாலும்,   கைகள் அதன் போக்கில் அனுவுக்கு அழகாக தலைப் பின்னி விட்டிருந்தது.

அனுவும் ஆதவனும் இழுத்த இழுப்பிற்கெல்லாம் சென்று அவர்களுக்குச் சமமாக விளையாடிக் கொண்டிருந்தவள்,  இறுதியாக அவர்களைப் படம் வரையச் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்.

கோவிலுக்கு எடுத்துப் போக வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வேலையாட்களை  வைத்து வண்டியில்   ஏற்றிய வாசுகி, பிள்ளைகளை  அழைக்க மாடியேறினாள்.

“சின்னப் புள்ளைங்களக்கூட கிளப்பிடலாம் போல, இந்தக் கதிரக் கிளப்பறதுக்குள்ள நமக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குது.”  புலம்பியபடி  குழந்தைகளின் அறைக்குள்  நுழைந்தாள்  வாசுகி.

“ஒருவழியா கதிரை சமாதானப் படுத்தி,   கிளம்பி ரெடியாகி  வரச் சொல்லி அனுப்பியிருக்கேன்.  அவங்க நேரா கோவிலுக்கு வந்துடுவாங்க.   நாமும் கிளம்பலாம்.”

“…”

“சிவரஞ்சனி உனக்கு ட்ரெஸ் கீழ ரூம்ல எடுத்து வச்சிருக்கேன்.  நீ போய் சீக்கிரம் கிளம்பு.”

“நான் வரல க்கா.  நீங்க போயிட்டு வாங்க. நான் வீட்டுல இருந்துக்கறேன்.”

“எதுக்கு? வீட்ல தனியா இருந்து என்ன செய்யப் போற?  கோவிலுக்குக் கூட வந்தா இந்தப் பசங்கள நீ பார்த்துக்குவ.  நான் நிம்மதியா மத்த வேலைகளைப் பார்ப்பேன்.

அதுமட்டுமில்லாம நம்ம வீட்டு விசேஷம் இது. நீ இல்லாம எப்படி?   இனி நீயும் இந்த வீட்டுப் பொண்ணுதான்.  போய் ரெடியாகு போ.”

மனம் முழுவதும் பாறாங்கல்லை வைத்து அழுத்தியது போல கணமாக இருந்தாலும்,  துயரத்தை முகத்தில் காட்டாமல் இயல்பாக வைத்தபடி,

“பொண்ணு ரொம்ப அழகா இருப்பாங்களா அக்கா?”

“ம்ம்ம்…  கொள்ளை அழகா இருப்பா. மூக்கும் முழியும் நல்ல லட்சணமா இருக்கும்.  அட, அழகக் கூட விடு.  என்ன மாதிரியான குணம் தெரியுமா?  கதிர் சட்டுசட்டுன்னு கோபப் படற குணத்துக்கு, இவ அப்படியே ஆப்போசிட்.  அவ்வளவு அமைதியான பொறுமையான குணம்.

ரொம்ப நல்ல மனசுள்ள பொண்ணு. பணம் காச விட சொந்தம்தான் முக்கியம்னு நினைக்கிற குணம் யாருக்கு வரும் சொல்லு?”

மிகவும் தயக்கத்துடனே கேட்டாள், “ அ… அவருக்குப் பொண்ணு பிடிச்சிருக்கா? சரின்னு சொல்லிட்டாரா?”

“கதிரப் பத்தி எனக்குக் கவலையே இல்லம்மா.  நான் எந்தப் பொண்ணப் பார்த்துக் கையக் காட்டுறேனோ, அந்தப் பொண்ணு கழுத்துல தாலியக் கட்டுவான்.

அந்தப் பொண்ணு சம்மதம் சொன்னதுதான் எனக்கு ரொம்ப சந்தோஷம்.   அதுக்குதான்   கோவில்ல அபிஷேகமும் பூஜையும் ஏற்பாடு பண்ணியிருக்கேன்.

அப்படியே பொண்ணையும் வரச் சொல்லியிருக்கேன்.  பார்த்துட்டு வந்திடலாம்.”

பேசிக்கொண்டே மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த வாசுகி சிவரஞ்சனிக்கு என்று எடுத்து வைத்திருந்த புடவையையும் சில நகைகளையும் எடுத்துக் கொடுத்தாள்.

“அக்கா இதெல்லாம் வேணாம்.  நான் சுடிதாரேப் போட்டுக்கறேன்.”

“சுடிதார் தினம்தான் போடற.  கோவிலுக்கு வரும்போது புடவைகட்டி தலைநிறைய பூ வச்சி நகை போட்டு வரனும்.  அப்பதான் பார்க்க மங்களகரமா இருக்கும்.  சொல்றதக் கேட்கனும்.  போ…  புடவையக் கட்டிட்டு வா.”

வாசுகியின் பேச்சை மறுக்க முடியாமல்,  சிவரஞ்சனி புடவையைக் கட்டித் தயாராகவும்,  வீட்டைப் பூட்டிக் கொண்டு அனைவரும் கோவிலுக்கு விரைந்தனர்.

மாலையையும் பூவையும் வாங்கிக் கொண்டு கோவிலுக்கு வந்த கதிர் மிகவும் எரிச்சலான மனநிலையில் இருந்தான்.   கோவில் வாசலில் காரை நிறுத்திவிட்டு வந்தவனை எதிர்க் கொண்டனர் சற்று முன்னதாகவே கோவிலுக்கு வந்திருந்த  சுந்தரும் அவனது சகாக்களும்.

“அண்ணா…  கல்யாணச் சாப்பாடு போடப் போறீங்க…  வாழ்த்துகள்.  அண்ணி  தேவதை மாதிரி இருக்காங்க ண்ணா.   உள்ள  போய் உடனே ஓகே சொல்றீங்க…   எல்லாருக்கும் விருந்து   குடுத்து ஜமாய்க்கிறீங்க.”

என்ற சுந்தரைத் தொடர்ந்து மற்றொருவனும்,

“ஆமாண்ணா…  அண்ணி உங்களுக்கு ரொம்பப் பொருத்தம்.”   என்க,  மற்றொருவனோ,

“டேய்…  அண்ணன் இவ்வளவு அழகா பொண்ணு கட்டனும்னுதான் ஆஞ்சநேயர  தினமும் சுத்திச்  சுத்தி  வந்தார் போல…”  என்று கூறி வெடிச் சிரிப்பு சிரிக்க,  கதிருக்கு பிபி கொஞ்சம் கொஞ்சமாக ஏறத் துவங்கியது.

அனைவரும் கோரசாக, “ அண்ணா…  கண்டிப்பா எங்களுக்கு பலமா பேச்சுலர்ஸ் பார்ட்டி வைக்கனும், இப்பவே சொல்லிட்டோம்.”

“மொத்தமா ஒரு டின் பாலிடாயில வாங்கி எல்லாருக்கும் ஊத்திடறேன்.”  கடுப்பாகக் கூறியவன் அவர்களைத் தாண்டி உள்ளே சென்றான்.

கோவிலுக்குள் நுழைந்த  கதிரை எதிர்க் கொண்டார் கோவில் குருக்கள்.

“வாடா அம்பி…  கல்யாணக் களை வந்துடுத்து   நோக்கு. பொண்ணு நன்னா லட்சணமா இருக்காடா அம்பி. கடிவாளம் கட்டின குதிரையாட்டம், ஆஞ்சிநேயர சுத்திட்டு அப்படியே போயிடுவ.  பெருமாள் எப்படி அவர்கிட்ட வரவச்சார் பாரு உன்னை.

போ…  பெருமாள் சன்னதியில  உங்க அக்கா,  புள்ளைங்க எல்லாரும் இருக்காங்க.  அங்கதான் அபிஷேகம் நடக்குது.”

என்றவர் நகர்ந்துவிட,  கடுப்புடன் அவரை முறைத்தபடி பெருமாள் சன்னதி நோக்கி நடந்தான்.

வழியில்… தினமும் அவனைக் கோவிலில் சந்திக்கும் பெண்மணி ஒருவர்,

“கதிரு…   பொண்ணு   சூப்பர்… உனக்கேத்தப் பொண்ணுதான்.  தங்கச்சிலையாட்டம்  இல்ல இருக்கு. இத்தனை  நீ நாள் ஆஞ்சநேயர  சுத்துனது வீண் போகல”   என்று கூறவும், அவர் தலையில் நறுக்கென்று குட்டுவதற்குப் பரபரத்தக்  கையை, மற்றொரு கையில் இருந்த மாலைக் கவரை மாற்றி  அடக்கியவன்,   தன் பற்களை முழுவதும் காட்டி இளித்தான்.

“என்னவோ போ…  பொண்ணு அமைஞ்சதும்தான் கதிர் முகத்துல சிரிப்பையே  பார்க்க முடியுது”  என்று தனக்குள் கூறியபடி நடந்தார் அந்தப் பெண்மணி.

கொலைவெறியில் அந்தப் பெண்மணியைத் திரும்பி முறைத்தவன்,  அனைவரையும் கடித்துக் குதறி விடும் கோபத்தோடு சன்னதிக்குள் நுழைந்தான்.  அவனை எதிர் கொண்ட வாசுகி,

“ஏன் லேட்டு கதிர்?  மாலையையும் பூவையும் கொண்டா.”  அவன் கையில் இருந்த கவர்களை வாங்கியவள், அவனையும் அழைத்துக் கொண்டு கர்ப்பக்கிரகத்தின்   அருகில் சென்று நின்று  கொண்டு, அபிஷேகத்தைப் பார்த்தாள்.

குழந்தைகள் இருவரும்  கதிரின் அருகே வந்து நின்று கொண்டனர்.

கதிரின் கண்களோ வாசுகியின் மறுபுறத்தில் நின்று கொண்டு, ஐயரிடம் அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை, ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த, தன்னவளின் மீதே நிலைத்திருந்தது.

அரக்கு நிறத்தில், மெல்லிய சரிகையிட்டக் காஞ்சிப் பட்டு அவளுடலைத் தழுவியிருந்தது. கண்களை உறுத்தாத மெல்லிய நகைகளை அணிந்திருந்தாள்.  இறுகப் பின்னிய நீண்ட கூந்தலும்,  தலை   நிறைந்த மல்லிகையுமாய் நின்றவளின் அழகு அவனைக் கவர, அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது விலாவில் தனது கைகளால் இடித்த வாசுகி,   “அபிஷேகத்தைப் பாரு” என்க…

‘முடியாது… உன்னால ஆனதைப் பாரு’   என்று மனதிற்குள் முனுமுனுத்தவன், தன்னவளைச் சைட்டடிக்கும் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தான்.

‘என்னைத் திரும்பிப் பாரு…  என்னைத் திரும்பிப் பாரு…’ என்று  மீண்டும் மீண்டும் மனதிற்குள்  சிவரஞ்சனியிடம் கூறி, டெலிபதிக்கு வேறு முயற்சி செய்து கொண்டிருந்தான்.

டெலிபதி வொர்க்  அவுட் ஆகி அவனைத் திரும்பிப் பார்த்தவள், அவனை முறைத்துவிட்டு  மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

‘போச்சுடா…  இவள வேறச் சமாதானப் படுத்தனுமா?’   மனதிற்குள் நொந்து கொண்டவன், பெருமாளிடம் அவசர உடன்படிக்கை ஒன்றைப் போட்டான்.

‘இங்க பாருங்க… நீங்க ரெண்டு பொண்டாட்டி கட்டியிருக்கறதாலதான், நான் இதுவரை உங்களை வந்து பார்க்கலை. தப்புதான் மன்னிச்சிடுங்க.  எப்படியாவது எங்க அக்கா மனச மாத்தி, என் சிவரஞ்சனியை எனக்கு பொண்டாட்டியாக்கிட்டா,  அப்புறம் கோவிலுக்கு வரும்போதெல்லாம் உங்களைப் பார்க்காம போக மாட்டேன்.  டீல் ஓகேவா…’

உன் நிலைமை இப்படி ஆகிடுச்சே கதிரு, என்று   நினைத்த அந்த ஏழுமலையான் சிரித்துக் கொண்டார்.

ஒரு வழியாக அபிஷேகம் அர்ச்சனை அனைத்தையும் முடித்து விட்டு, பிரசாதத்தை அனைவருக்கும் விநியோகித்தவர்கள்,  பிரகாரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

பெண்ணை அழைத்துக் கொண்டு வருவதாக,  கதிரிடம் கூறிவிட்டுச் சென்றிருந்தாள் வாசுகி.

மிகவும் டென்ஷனாக நின்று கொண்டிருந்தான் கதிர்.  சிவரஞ்சனியைக் கண்களால் தேடியவன், அவள் சற்று தூரத்தில் அனுவுக்கும் ஆதுவுக்கும் பிரசாதத்தை ஊட்டிக் கொண்டிருப்பதைக் கண்டான். “கொஞ்சமாவது கவலை இருக்கா பாரு…  பிக்னிக் வந்தவ மாதிரி இருக்குறா…”  மனதிற்குள் புலம்பினான்.

 

‘அக்கா மனசு வருத்தப் படுமேன்னு பார்த்தா,  அவ்வளவுதான் கதிரு… உன் தலையில வேற எவளையாவது கட்டி வச்சிடும். அக்காவ  எதிர்த்துப் பேசறதுதான் சரி.

சும்மாகூட எவளையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை நான்.  இன்னைக்குப் பொண்ணு மட்டும் பார்த்துடுவனா?  யார்கிட்ட?  கண்ண இறுக மூடிக்கடா கதிரு.’  மனதிற்குள் பேசிக் கொண்டவன், கோவில் தூணோரம் கண்களை மூடியபடி நின்று கொண்டான்.

அவன் அருகில் வந்து நின்ற வாசுகி,  “ டேய் தூணோரம் உரசிக்கிட்டு, கண்ண மூடி என்ன ஜெபம் பண்ணிகிட்டு இருக்க?  பொண்ணு   வந்திருக்கா, கண்ணத் தொறந்து பாரு.”

பலமாக மண்டையை ஆட்டியவன், “முடியாது…  நான் பார்க்க மாட்டேன்.  எனக்குப் பொண்ணப் புடிக்கல.”

“டேய்…  அதப் பொண்ணப் பார்த்துட்டுச் சொல்லுடா.”

“நீ என்ன சொன்னாலும் சரி,  எனக்கு இந்தப்   பொண்ணப்  புடிக்கல.  நான் இவளக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.”

அதற்குள் அருகே வந்த சுந்தர், அனு, ஆதவன் அனைவரும் பெண்ணைப் பார்க்கும் படி கூறினர்.

“அண்ணா…  பொண்ணப் பாருண்ணா… தேவதையாட்டம் இருக்கு”

“மாமா… அத்தை சூப்பரா இருக்காங்க, பாரு மாமா”

“முடியாது…  முடியாது…  யார் என்ன சொன்னாலும் என்னால ஒத்துக்க முடியாது.  எனக்கு இந்தப் பொண்ணு வேணாம்.”

“உண்மையாதான் சொல்றியா கதிர்?  இந்தப் பொண்ணோட முகத்தைப் பார்த்து, ஒரு தடவை சொல்லிடு உன்னை விட்டுடறேன்.”

அதுவும் சரிதான், இவர்களிடம் சொல்வதற்கு  பதில், சம்பந்தப்பட்ட பொண்ணுகிட்டயே சொல்லிடலாம், என்று  முடிவெடுத்தவன் வாசுகியின் புறம் திரும்பியவாறே,

“இந்தாம்மா  பொண்ணு…  எனக்குச் சுத்தமா உன்னப் புடிக்கல”   என்றபடி  அருகே நின்றிருந்தப் பெண்ணைப் பார்க்க,   அங்கே குறும்புச் சிரிப்புடன் நின்றிருந்த சிவரஞ்சனியைக் கண்டதும்,  உன்னக் கல்யாணம் பண்ணிக்க முடியாது என்ற வார்த்தைகளை வாய்க்குள் விழுங்கினான்.

அவளைக் கண்டதும் இன்பமாக அதிர்ந்தவன்,  அசடு வழிய வாசுகியைப் பார்த்து,  “சிவா தான் பொண்ணாக்கா?”

அவனைப் பார்த்து ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கிய வாசுகி, “என்னடா பொண்ண உனக்குப் புடிக்கலையா?”

“அய்யய்யோ… அதெல்லாம் இல்லக்கா, நீ சொல்லி நான் மறுத்துப் பேசுவனா?   ஹி…ஹி…ஹி…  பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குக்கா.”

வளைந்து நெளிந்து அசடு வழிந்தவனைப் பார்த்த வாசுகி,  “அய்ய…  ரொம்ப வழியுது கொஞ்சம் துடைச்சிக்கோ.”

“பாரு சிவரஞ்சனி… இத்தனை பேரு சொல்றோம்,  உன்னைப்   பிடிக்கலை  பிடிக்கலைன்னு  சொல்றான்.  அவனைக் கொஞ்சம் என்னன்னு கவனி”  என்று அவனைச் சிவாவுடன் கோர்த்து விட்ட வாசுகி,  பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பிரகாரத்தை வலம் வரச் சென்றாள்.

குறும்பாகப் பார்த்துச் சிரித்தவளை ஆசையுடன் நெருங்கியவன், “ஏய்…  நீயாவது சொல்லக் கூடாது.   நீதான் பொண்ணுன்னு.  எவ்வளவு பயந்து போயிட்டேன் தெரியுமா?”

“எனக்கும் கோவிலுக்கு வரும் வரை தெரியாது. என்னையும் நல்லா பயமுறுத்தி விட்டுட்டாங்க வாசுகி அண்ணி.”

அவளை   ஆசையாகப்  பார்த்தபடி தன் வலது கையை நீட்டி, அவளது கரத்தைப் பற்றிக் கொண்டவன்,  “வா திரும்பவும் சாமிய கும்பிட்டு வரலாம்”  என்று அழைத்தான்.  (டீல் ஓகே ஆகியிருக்கு தேங்க்ஸ் சொல்ல வேணாம்)

அதற்குள் ஒரு சுற்று முடித்து இவர்களை நெருங்கிய வாசுகி, “டேய்…  இது கோவில் கையத் தொடாம பேசு.” என்று  இருவரையும் விலக்கி விட.

கடுப்பான கதிர், “கையதானக்கா பிடிச்சேன். நீ எங்களப் பார்க்காம ஒழுங்கா பிரகாரத்தை சுத்து போ.”

அவனை முறைத்த வாசுகி, “ஓ…  இனிமே இந்த அக்கா தயவு உனக்குத் தேவையில்லயோ?  கவனிச்சுக்கறேன்டா உன்ன”

“சரி…  சரி…  உனக்கு எப்படி  எங்க  விஷயம் தெரியும்?”

கெத்தாக இல்லாதக் காலரைத் தூக்கி விட்டுக் கொண்ட வாசுகி,

“எனக்கு ஊர் முழுக்க ஸ்பை இருக்கு. நீயும் உன் தலைவரும் என்ன செய்தாலும் எனக்குத் தெரிஞ்சிடும். ”

“ஸ்ஸ்…  அப்பாடா…  உன் பில்டப் தாங்கல. எப்படித் தெரியும் சொல்லு?”

“தீனதயாளன் வைஃப் ஃபோன் பண்ணிச் சொன்னாங்க இந்த சார்தான் புருஷன்னு இந்த மேடம் எழுதிக் குடுத்ததாவும்,  கஞ்சி போட்ட சட்டை மாதிரி விரைப்பா இருக்கற நம்ம கதிரு வெக்கப்பட்டு சிரிச்சதாவும்,  எனக்குக் காலையிலயே நியூஸ் வந்துடுச்சி.”

என்றவள் மீண்டும் பிரகாரம் சுற்றச் சென்றாள். போகும் வாசுகியைப் பார்த்து வாஞ்சையுடன் சிரித்தவன்,  மீண்டும் சிவரஞ்சனியின் கரங்களைப் பிடித்துக் கொண்டு சன்னதிக்குள் நுழைந்தான் டீலுக்கு நன்றி சொல்ல.

 

கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அன்னாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்

சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சொப்பனம்
சொல்லாமலும் கொள்ளாமலும் திண்டாடும் பாவம் பெண்மனம்

 

 

காற்று வீசும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!