ESK-19

ESK-19

என் சுவாசம்  19

வாழ்க்கை சில நேரங்களில், சிலருக்கு தனது கோர பக்கங்களைக் காட்டி விடுகிறது.  அதிலிருந்து மீண்டு வரும் வரை  அவர்தம்  மனதும்  நைந்து போகிறது.  சிலரே  புது உத்வேகத்துடன் மீண்டு வருகின்றனர்.  பலர் அந்தத் துயரத்துள் சிக்கி சிதைந்து போகின்றனர்,  அல்லது தடம் மாறி செல்கின்றனர்.

போலீஸ் ஸ்டேஷனில்  கதிரை வெளியே கொண்டு வந்து விடலாம்  என்று எண்ணிச் சென்ற அழகர் கண்டது,  காவலர்கள் தாக்கியதால் அடிபட்டுக் கன்றிய வெற்றுடலுடன்,  முகம் இறுகிச் சிவந்து போய் வெறித்த பார்வையுடன் சிறைக் கம்பிகளுக்குப் பின் அமர்ந்திருந்த கதிரையும்,  அவனுக்காகப் பரிந்து காவலர்களிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்த ராகவனையும்தான்.

“எப்படி சார் ஒரு மைனர் பையனப் போட்டு  இப்படி அடிப்பீங்க?”  எகிறிக் கொண்டிருந்தார் ராகவன்.

வேறு ஒரு வழக்கின் விபரத்தைப் பெறுவதற்காக காவல் நிலையம் வந்தவரின் கவனத்தை ஈர்த்திருந்தான் கதிர்.  அத்தனைக் காவலர்களும் சூழ்ந்து தாக்க,  ஒற்றை ஆளாக அனைவரையும் சமாளித்தவனை அடக்க முடியவில்லை யாராலும்.  வெகு நேரப் போராட்டத்திற்கு பிறகே  அவனை சிறையில் அடைக்க முடிந்தது அவர்களால்.

“சார்… நீங்களேப் பார்த்தீங்கல்ல ஒரு சின்னப் பையன், இத்தனை போலீஸை ஒத்தையா சமாளிக்குறான்.  அவனைப் புடிச்சு உள்ள போடறதுக்குள்ள நாக்கு தள்ளிடுச்சி எங்களுக்கு.  அவன் இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள அரிவாளால கிழிச்சிருக்கான்.  ட்ரீட்மெண்ட் பண்ண போயிருக்காங்க அவங்க.

நான் கேஸ ஸ்ட்ராங்கா எழுதிட்டேன்.  இவன்லாம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில போட்டாதான் அடங்குவான்.  நீங்க வேணும்னா பாருங்க,  இவன் பெரிய ரௌடியா வருவான்.”

ராகவன் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த காவலர் பேசியது.  அவனுடைய அளப்பறிய ஆற்றலை அவரும் நேரில் கண்டார்தான்.  ஒரு சிறுவனுக்கு இவ்வளவு வலிமையா?  ஆச்சர்யமாக இருந்தது அவருக்கு.

‘இவ்வளவு ஆற்றலையும் நல்ல விஷயங்களுக்குப் பயன் படுத்தினால் இவன் பெரிய ஆளாக வருவான்.  இப்படியே இவனை இங்கே  விட்டுப் போனால்,  இவர் சொல்வது போல பெரிய சமூக விரோதியாகத்தான் வருவான்’  மனதில் எண்ணியவர் அப்பொழுதே முடிவு செய்து விட்டார்,  கதிரைப் பாதுகாத்து அழைத்துச் செல்வது என்று.

அப்பொழுது கதிரைத் தேடி அங்கு வந்திருந்த அழகர்.

“சார், அவன் சாதுவான பையன் சார்… அவனுக்கு ஏற்பட்ட  அதிர்ச்சியில இப்படி நடந்துகிட்டான் சார். கேஸெல்லாம் போட்டுடாதீங்க சார். அவன் வாழ்க்கையே வீணாப் போயிடும்.

இனி அவன நான் இப்படியெல்லாம் செய்யாம பார்த்துக்குறேன் சார்.  அவனை பெத்தவரு பொணமா கிடக்குறாரு.  இவன்தான் சார் இறுதி காரியம் செய்யனும். கொஞ்சம் கருணை காட்டுங்க சார்.”

ஏறக்குறைய, அந்த போலீஸ் அதிகாரியின் காலில் விழுகாத குறையாகக் கெஞ்சிய அழகரை அலட்சியமாகப் பார்த்த அந்த அதிகாரி,

“யோவ்… யாருய்யா நீ?  இவன் சாதுவான பையனா?  ரெண்டு கான்ஸ்டபிள அரிவாளால வெட்டியிருக்கான்.  ரோட்டுல வெறி பிடிச்சவன் மாதிரி அரிவாளத் தூக்கிட்டு ஓடியிருக்கான்.  பஸ் ஸ்டாண்டில பயணிகளை அச்சுருத்தியிருக்கான்.

இப்ப இங்க ஸ்டேஷன்ல பாரு, எங்களுக்கு எவ்வளவு காயம்னு.  அவனை அடக்கி செல்லுல போட முடியல எங்களால.  இவனைப் போய் சாதுங்கற…  ரௌடிப் பய மாதிரி பிகேவ் பண்றான்.  நான் அவன் மேல கேஸ் ஃபைல் பண்ணிட்டேன்.  எதா இருந்தாலும் கோர்ட்ல பாரு.”

“சார்… சார்… உங்க வாயால அப்படியெல்லாம் எதுவும் சொல்லாதீங்க சார். படிக்கற பையன் சார். குடும்ப சூழ்நிலையால இப்படி ஆகிட்டான் சார். கேஸெல்லாம் போட்டா அவன் வாழ்க்கையே வீணாப் போயிடும் சார்.”  அழுது கதறிய அழகரைப் பார்த்த ராகவன்,

“நீங்க யாரு? அந்தப் பையனுக்கு என்ன வேணும்? “

“நான் அவனோட தாய் மாமா சார்.  தாய் தகப்பன் இல்லாம அநாதையா நிக்குறான் சார் அவன்.” என்றவர் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் விவரித்தார்.

அதன் பிறகு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை ராகவன்.  அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி, அவன் மீது  வழக்குகள் எதுவுமின்றி வெளியே கொண்டு வந்தார்.

எவ்வளவுக்கெவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தானோ, அந்த அளவுக்கு உள்ளுக்குள் ஒடுங்கிப் போனான், நடு வீட்டில் போடப் பட்டிருந்த தனது  தந்தையின் பிணத்தைப் பார்த்து.  ஒற்றைத் துளி கண்ணீர் சிந்தாமல்  இறுகிய முகத்துடன்,  தந்தையின் முகத்தையே வெறித்துப் பார்த்தபடி இருந்தவன், அவரது இறுதி காரியங்களையும் செய்து முடித்தான்.

அதன் பிறகு அந்த வீட்டில் குடியிருக்க முடியாமல், வேறு ஒரு சிறிய வீட்டிற்கு மாறினர் அழகரும் கதிரும்.  ராகவன் அழகரைத் தனக்குத் துணையாக கட்சி வேலைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கும்படி கூறியதால், அழகர் ராகவனுடன் இருந்தார்.

 

ஒரு சில வாரங்களுக்குப் பிறகு கதிரைச் சந்தித்த ராகவன் அவனை பள்ளிக்குச் செல்லும்படி கூற.  உறுதியாக முடியாது என்று மறுத்தான்.  அவனை ஒரு சில வார்த்தைகள்  பேச வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி போனது ராகவனுக்கு.  தனக்குள் இறுகி மௌனமாகிப் போனான்.

இயல்புக்கு மாறாக யாருடனும் பேசாமல், சுருண்டு சுருண்டு படுக்கும் கதிர் அழகருக்குப் புதிதாகத் தெரிந்தான்.  நாளடைவில் இரவெல்லாம் தூங்காமல்  விடிய விடிய விழித்துக் கிடந்தான்.  உணவு உண்ணவோ மற்ற வேலைகளோ அழகர் சொன்னால் மட்டுமே செய்தான்.  இயந்திரம் போன்ற  அவனுடைய நடவடிக்கை பயத்தைக் கிளப்பியது அழகருக்கு.

அவனை ஒரு நல்ல மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர் ராகவனும் அழகரும்.  சோதனை செய்த மருத்துவரோ அவன் மனச்சிதைவுக்கு ஆளாகியிருப்பதாகவும்,  முறையான கவுன்சிலிங்  மற்றும்  சிகிச்சை  மூலம் சரிபடுத்தி விடலாம் என்றும் கூறினார்.

மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து அவனுக்கு சிகிச்சையும்  கவுன்சிலிங்கும்  கொடுக்கப்பட்டது.  கதிர் ஓரளவு நார்மலான நிலைக்கு வந்தவுடன்,

“கதிர் இப்ப ஓரளவு நார்மலாகிட்டான்.  அவனுக்கு நல்ல குடும்ப சூழல்ல பழகுற வாய்ப்பு கிடைத்தால், அவன் பழைய நிலைமைக்கு வர வாய்ப்பு இருக்கு.  இந்த ஊரை விட்டு வேற ஊருக்கு, கொஞ்ச நாள் அவனை மாத்திப் பாருங்க.  அவன் வயசுப் பசங்களோட பழகினா, கொஞ்சம் நார்மலுக்கு வந்துடுவான்.”

மருத்துவர் கூறியதைக் கேட்ட ராகவன்,  கதிரை வற்புறுத்தி, “படிக்காவிட்டாலும் பரவாயில்லை  அழகருடன் இணைந்து வேலைக்காவது வா” என்று அழைத்துச் சென்று வாசுகியிடம் விட்டார்.

“அக்காவுக்குத் தேவையான வேலையெல்லாம் செய்து குடு.  பாப்பாவ பார்த்துக்கோ.”

வாசுகிக்கும் கதிரைப் பற்றி அனைத்தும் தெரியும் ஆகையால், அவனைத் தாயன்புடன் அரவணைத்துக் கொண்டாள்.  ஆனால், மௌனமாகவே  இருந்தவனைச் சாதாரணமாக அவளுடன் பேச வைக்கவே ஒரு மாதத்திற்கு மேல் ஆனது வாசுகிக்கு.

அனன்யா அப்பொழுது ஆறுமாதக் குழந்தை.  குழந்தையுடன் மட்டும் உடனே ஒட்டிக் கொண்டான்.  அவளது தவழும் அழகும் பொக்கை வாய் சிரிப்பும், மறந்து போயிருந்த மலர்ச்சியை அவன் முகத்தில் கொண்டு வந்தது.  அனுவைத் தரையில் விடாமல் தாங்கிக் கொண்டு திரிந்தான்.

மெது மெதுவாக பேச்சுக் கொடுத்து, அவனை கொஞ்சம் கொஞ்சமாக  இயல்புக்குக் கொண்டு வர,  ஆறு மாதங்களுக்கு மேல் ஆனது வாசுகிக்கு.  அந்த வருடப் படிப்பும் பாழாகிவிட,   அவனை மிகுந்த சிரமத்திற்கு பிறகு மீண்டும் படிக்க ஒப்புக் கொள்ள வைத்தனர் ராகவனும் வாசுகியும்.

அந்த ஊரில் படிக்க மாட்டேன் என்று கூறியவனை வற்புறுத்தாமல், சென்னையில் உள்ள சிறந்த பள்ளியில், மீண்டும் ஒன்பதாம் வகுப்பில் சேர்த்து, ஹாஸ்டலில் சேர்த்தார் ராகவன்.  தன் வயதொத்த மாணவர்களுடன்  இயல்பாக பழக ஆரம்பித்தவனின் மனக்கசடுகள் நாளடைவில் மறைந்து போயின.  பள்ளிக்  கல்வி முடித்தவனை, அவன் விருப்பப்படி வழக்கறிஞர் பட்டம் பெற கல்லூரியில் சேர்த்து விட்டார் ராகவன்.

சென்னையில் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் படித்தவன்,  கல்லூரி படிக்கும் போதே பார்ட் டைமாக வேலையும் பார்க்க ஆரம்பித்தான்.  பழைய நினைவுகள் தன்னை அண்டாத படி,  முழு நேரமும்  பிசியாக வைத்துக் கொண்டான்.  காலம் அவனது ஆறாத காயத்தை ஆற்றி வடுவாக்கியிருந்தது.

விடுமுறைக்கு ஊருக்கு வரும் போதும் அனுவும் ஆதவனும் மட்டுமே அவனது உலகமாகிப் போனது.  அவனது வாழ்வை மீட்டுக் கொடுத்த ராகவனும் வாசுகியும் தெய்வமாக மனதுக்குள் பதிந்து போயினர்.  ஸ்ரீதர் போன்ற நல்ல நண்பர்களின் நட்பு அவனை மேலும் செம்மைப் படுத்தியது.

குடும்பச் சூழ்நிலையால் தடம் மாறி தடுமாறிப் போயிருக்க வேண்டியவனின் வாழ்வு, ராகவன் வாசுகி இருவராலும்  நல்ல நிலைமைக்கு கொண்டு வரப்பட்டது.  படிப்பை முடித்தவன் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய விரும்ப…  அவன் தொட்டதெல்லாம் துலங்கத் தொடங்கியது.

கதிரைப் பற்றி அழகர் சொல்லி முடிக்கும் போது  சிவரஞ்சனியின் மனதில் பெரும் பாரமேறிய உணர்வு.  இன்று சிறு குழந்தை போல தன் மடியைக் கட்டிக் கொண்டவனின் ஏக்கம் புரிந்தது.  தடம் மாறிப் போயிருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தும், மன உறுதியோடு மீண்டு வந்தவனை பெருமையாக எண்ணிக் கொண்டாள்.

அவனை இந்த அளவுக்கு ஆளாக்கிய ராகவனுக்கும் வாசுகிக்கும் காலமெல்லாம் சேவகம் செய்தாலும், பட்ட கடன் தீராது என்று எண்ணிக் கொண்டாள்.  தெய்வத்துக்குச் சமமாகத் தோன்றினர் இருவரும்.

“கதிர் என் கிட்ட வரும் போது அவனுக்கு பதினைந்து வயது ஆரம்பம்.  பால் மணம் மாறாத அந்த முகத்துல இருந்த இறுக்கம், யாரையும் கிட்ட  நெருங்க விடாது.  அவனை என்கூட சாதாரணமா பேசிப் பழக வைக்கவே எனக்குப் பல மாசமாச்சு.  அவனை ஓரளவு தேத்திக் கொண்டு வந்தது அனுதான்.  அவளைப் பார்த்து மட்டும்தான் சிரிப்பான்.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே ராகவனும் வந்திருந்தார். அவருக்கும் தொலைபேசி மூலமாக மாலை நடந்தது முதல் அனைத்து விஷயமும் கூறப்பட்டிருந்தது.

“நான் முதன் முதல்ல கதிர போலீஸ் ஸ்டேஷன்ல பார்க்கும் போது அசந்து போனேன்மா.  அவனுக்குள்ள அப்படி ஒரு தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அதை நல்ல வழியில் பயன்படுத்தினால் ஊருக்கே ஒளி கொடுப்பவனாக வருவான்.  அங்கேயே விட்டுவிட்டு வந்தால் ஒருநாள் ஊரையே எரிப்பான்னு  அங்கயே முடிவு பண்ணினேன்.”

“…”

“நான் ஒரு கதிரைத்தான் உருவாக்கினேன்.  ஆனா அவன் இன்னைக்கு நூற்றுக்கணக்கான கதிரை உருவாக்கிகிட்டு இருக்கான்.  பாதிக்கப்பட்ட, கஷ்டப்படற அனைத்து மாணவர்களும்  நல்லா படிக்கனும்னு அவனோட வற்புறுத்தல்ல ஆரம்பிச்சதுதான் நம்ம ட்ரஸ்ட்.  இன்னைக்கு அந்த  ட்ரஸ்ட் மூலமா படிச்சு நல்ல நிலைமைக்கு வந்த பிள்ளைகள் எத்தனை  பேர் தெரியுமா? “

“ஏன் நம்ம சுந்தரையே எடுத்துக்கோ… சென்னையில பிட்பாக்கெட் அடிச்சிகிட்டு இருந்தவனக் கூட்டி வந்து, படிக்க வச்சு  இன்னைக்கு எப்படி மாத்தியிருக்கான்.  அவன் சத்தமில்லாம செய்யற காரியங்கள்  அவ்வளவும்,  சமுதாயத்துக்கு பயன் தரக் கூடியவைதான்.”

“ஆனா… இன்னைக்கு ரொம்ப மனசு கஷ்டப்பட்டுட்டாங்க.  அவங்க அழுததை என்னால தாங்கிக்கவே முடியல.” கண்ணீர் கரையுடைக்கக் காத்திருந்தது சிவரஞ்சனிக்கு.

“கதிர் கண்டிப்பா பழைய மாதிரி மனசு விட்டுப் போக மாட்டான்மா.  இப்ப அவன் மனசு ரொம்பவே பக்குவப்பட்டு இருக்கு.  இன்னைக்கு திடீர்னு அவங்க அம்மாவ பார்த்ததால வந்த அதிர்ச்சிதான், அவன் இப்படி நடந்துக்க காரணம். இதையும் அவன் கடந்து வருவான்.  ஆனா…  அவனோட அம்மா விஷயத்துல அவன் எடுக்கற முடிவுதான் என்னோடது.  அவனை நான் எதுக்கும் வற்புறுத்த மாட்டேன்.”

வாசுகியும் அவரது கூற்றை ஆமோதித்தாள்.

அழகரும்,  “தான் ஆடாவிட்டாலும்  தன் தசை ஆடும்னு சொல்லுற  மாதிரி,  அந்த சூழ்நிலையில ஜமுனாவைப் பார்த்து அப்படியே விட்டுட்டு வர முடியல என்னால.  ஆனா  என் மாப்ள உறுதியா அவள வேண்டாம்னு சொல்லிட்டா எனக்கும் வேண்டாம்தான். அவன மீறி எனக்கு என் அக்கா முக்கியமில்ல தலைவரே.   அவன் நல்லாத் தூங்கட்டும். நான் நாளைக்கு வந்து அவனைப் பார்த்துக்கறேன்.” என்றபடி அழகர் கிளம்பிச் சென்றார்.

 

மௌனமாகப் படுக்கைக்கு வந்து படுத்த  சிவரஞ்சனிக்கு இவர்கள் கூறிய அனைத்தும் புரிந்தது.  ஆனால்  அவளது இளகிய மனமோ… தவறு செய்யாதவர்கள் யார் இருக்கிறார்கள் உலகில்?  மனிதனாய் பிறந்த அனைவரும் ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்வது  இயற்கைதானே.

பின் விளைவுகளை கருத்தில் கொள்ளாது ஜமுனா செய்த தவறு அவளது குடும்பத்தையும் அழித்து, அவளையும் அழித்தது விதியின் கோர விளையாட்டன்றி வேறேது? ஜமுனா செய்த தவறால் அவரது குடும்பமே சின்னா பின்னமாகிப் போனது கொடுமையின் உச்சம்தான்.

ஆனால், அவர் செய்த தவறுக்கு கொடும் தண்டனைகளை அனுபவித்து விட்டார் என்பது, அவரைப் பார்க்கும் போதே கண்கூடாகத் தெரிகிறதே. இந்த நிலையில் அவரை அநாதரவாக விட வேண்டுமா என்று  யோசித்தது.

ஆனால் கதிர் பட்ட இன்னல்களும் கண்முன்னே தோன்றி அவளை  இம்சித்தன.  அவனை மீறித் தானும் ஒன்றும் செய்யப் போவதில்லைதான். ஆனாலும் ஜமுனாவின் இன்றைய நிலை அவளுக்குள் பரிதாபத்தை விதைத்தது.

கதிரிடம் இதைப் பற்றி மனம் விட்டுப் பேச வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள். அனைவருக்குமே மனம் முழுக்க ஏறிக் கொண்ட பாரத்தோடு அன்றைய இரவு  கழிந்தது.

 

யாருக்கும் காத்திராமல் காலம் தன் கடமையைச் செய்ய, மறுநாள் வழக்கம் போல விடிந்தது.  அனைவருமே கதிருடன் இயல்பாகவே  நடந்து கொண்டனர்.  அவனாகப் பேசாத வரை யாரும் எதுவும் பேசி அவன் மனதை நோகடிக்க விரும்பவில்லை.  அவனும் எதுவுமே பேசாமல்  குழந்தைகளோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.

காலையில் சாப்பிட வரச் சொன்ன சிவரஞ்சனியிடம் ஊட்டி விடச் சொல்லி வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்.  அந்த நேரம் வந்த அழகரைப் பார்த்து சிறுபிள்ளை போல கோபித்துக் கொண்டு முகத்தைத் திருப்பியவனைக் கண்டு அனைவருக்குமே சிரிப்புதான் வந்தது.

“மாப்ள… என்னடா மாமாவப் பார்த்து முகத்தைத் திருப்புற?  நான் என்னடா தப்பு பண்ணேன்?”

“சிவா… எனக்கு அவரோடப் பேசவே இஷ்டம் இல்லை.  என்னை விட அவருக்கு யார் முக்கியம்னு நினைக்கிறாரோ அவங்க கூடவே போகச் சொல்லு.”

“எனக்கு உன்னைவிட யாரும் முக்கியம் இல்லை மாப்ள. நீ பொறந்ததுல இருந்து நீதானடா என்னோட உலகமே…”

“ஓ… அதனாலதான் உங்க உடன்பிறப்பப் பார்த்ததும் அப்படியே அங்கயேத் தங்கிட்டீங்களோ… இனிமே என்கிட்டப் பேசாதீங்க.  நடந்ததெல்லாம் சுத்தமா மறந்துடுச்சில்ல உங்களுக்கு.”

“அப்படியெல்லாம் சொல்லாத மாப்ள. நடந்த எதையுமே நானும் மறக்கலடா.  அவளைச் சாதாரணமான நிலைமையிலப் பார்த்திருந்தா,  உனக்கு முன்ன நானே அவளைக் கொன்னுருப்பேன்.  ஆனா…  நடைபிணமா  இருக்கறவளப் பார்த்துட்டு,  அப்படியே விட்டுட்டு வர முடியல மாப்ள.

இன்னும் உயிரோட இருக்காளேன்னு கோபமும் பட முடியல… பண்ண தப்புக்கெல்லாம் தண்டனை அனுபவிச்சிட்டான்னு சந்தோஷமும் பட முடியல.

உன் கூடவே நான் வந்திருக்கனும்தான்.  நான்  பண்ணது  தப்புதான்… உனக்கு  வேண்டாம்னா எனக்கும் வேண்டாம்தான் மாப்ள. இனி நான் அங்க போக மாட்டேன்.  ஆனா மாமா கூட பேச மாட்டேன்னுலாம் சொல்லாதடா.”

குரல் தழுதழுக்கக் கெஞ்சியவரைப்  பார்த்தும் பதில் பேசாமல் மௌனமாக இருந்தவனை அதட்டிய வாசுகி,

“அவர்தான் அவ்வளவு சொல்றாருல்ல…  சும்மா மூஞ்சத் தூக்கி வச்சிகிட்டு இருக்க.  உன்னைச் சுத்தி இருக்கற நாங்க யாருமே, என்னைக்கும்  உனக்குப் பிடிக்காதத செய்ய மாட்டோம்.  இனி முடிவு எடுக்க வேண்டியது நீதான்.

உனக்கு  விருப்பம் இருந்தா அவங்களுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கச் சொல்லு.  இல்லையா அவங்க அந்த ஹோம்லயே இருக்கட்டும். உன் மனசு வேதனை எங்க எல்லாருக்குமே புரியுது. நீயே முடிவு எடு.”

“என் மனசெல்லாம் என்னைக்கும் மாறாது.  கண்ணு முன்னாடியே எங்கப்பா உயிர விட்டப்ப, எதுவுமே செய்ய முடியாம தவிச்ச தவிப்பெல்லாம், அவ்வளவு சீக்கிரம் என்னால மறக்க முடியாது.  இப்பவரைக்கும் ஓடிப்போனவ  பெத்த புள்ளங்கற  பேரு என்னைத் துரத்துது.  அவங்க மூஞ்சில முழிச்சதே பாவம்னு நினைக்கிறேன்.  இனி இதைப் பத்தி யாருமே என்கிட்டப் பேசாதீங்க.”

கோபமாகப் பேசியவனை மீறி யாரும் பேசவில்லை அங்கே.  காலை உணவை முடித்ததும்,

“பிள்ளைகளுக்கு இன்னைக்கு லீவுதான… சிவாவையும் பிள்ளைகளையும் கூட்டிட்டு எங்கயாவது போயிட்டு வா கதிரு.”

என்று வாசுகி கூற,  அவனுக்குமே எங்காவது பிள்ளைகளோடு சென்றால் சற்று இறுக்கம்  தளரும் என்று தோன்ற,  பிச்சாவரத்திற்கு அழைத்துச் சென்றான்.

அழகர் ராகவனுடன் வேறு வேலையாகச் சென்றுவிட,  சுந்தர் மட்டும் இவர்களுடன் சேர்ந்து கொண்டான்.

சுரபுன்னை மரங்கள் நிறைந்த அலையாத்திக் காடுகளும்,  வலசையாக வந்திருந்த பல்வேறு பறவையினங்களும்,  கண்களுக்கு விருந்தாகவும்  மனதிற்கு இதமாகவும் இருந்தது.   இரண்டு மணி நேரம் படகை வாடகைக்கு எடுத்து அங்குள்ள தீவுகள் அனைத்தையும் சுற்றிப் பார்த்தவர்கள், அங்குள்ள பூங்காவில் குழந்தைகளுக்கு மதிய உணவைக்  கொடுத்து விட்டு விளையாட விட்டனர்.

சுந்தர் அருகே இருந்து விளையாடும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள,  சிவரஞ்சனியும் கதிரும் சற்று தொலைவில் புல்வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அவன் பேசும் அனைத்திற்கும் பதில் கூறிக் கொண்டிருந்தாலும், சிவரஞ்சனியின் மனமோ அவனிடம் அவனுடைய தாயைப் பற்றி பேசலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தது.

காலையில் அவன் கோபமாகப் பேசியதைக் கேட்ட  பிறகு, அவனிடம் பேசுவதற்கு அவளுக்குமே பயமாக இருந்ததுதான்.  உனக்கேன் இந்த வேண்டாத வேலை என்று கோபப் படுவானோ?  என் விஷயத்தில் தலையிடாதே என்று ஒதுக்கி வைப்பானோ?  மனம் பலவற்றை எண்ணிக் குழம்பிக் கிடந்தது

அவளுடைய முகத்தில் தவழும் குழப்ப முடிச்சுகளைக் கண்டு கொண்டவன்,  அமைதியாக அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவனுடைய பேச்சு நின்று  போனதால்  யோசனை கலைந்து  அவனைப் பார்த்தவளை,

“என்ன யோசனை ஓடுது உன் மண்டைக்குள்ள?  இந்த உலகத்துலயே நீ இல்ல.” என்று லேசாக அவளது தலையைப் பிடித்து ஆட்டினான்.

தயக்கமாக அவனை ஏறிட்டவளைப் பார்த்தவன், “ஏதோ கேட்கனும்னு  நினைக்குற…  நீ என்ன கேட்க போறன்னு எனக்குத் தெரியும். ஆனா, நீ என்கிட்ட முதன் முதல்ல கேட்கறத என்னால முடியாதுன்னு மறுக்கற மாதிரி  தயவு செய்து கேட்காத.

நான் உன் அளவுக்கு நல்லவன் இல்லை சிவா.  என்னால பழசெல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து, அவங்கள மன்னிக்கறதெல்லாம் நினைச்சுக் கூட பார்க்க முடியல. எனக்கு என்னைக்குமே அவங்க வேண்டாம்.

அவங்க எங்கப்பாவ பிடிக்கலைன்னு சொல்லி முறையா பிரிஞ்சு போயிருக்கலாம்.  அப்பவும், அவருக்கு வருத்தம் இருந்தாலும் மனசொடிஞ்சு போயிருக்க மாட்டார்.  அவங்க நல்லா இருக்கட்டும்னுதான் நினைச்சிருப்பார்.

அவங்க மேல அவ்வளவு பிரியமா இருப்பார்.  அவ்வளவு கஷ்டம் வந்த காலத்துலயும் மீண்டு வந்துடலாம்னு திடமா இருந்த மனுஷன,  மனசு வெறுத்து  சாகற நிலைமைக்குக் கொண்டு வந்தவங்களை எப்படி மன்னிக்க முடியும்?

இன்னைக்கு அவங்க நிலைமையைப் பார்த்து, சத்தியமா எனக்கு பரிதாபம் கூட வரமாட்டேங்குது.  என்னால அவங்க முகத்துல கூட முழிக்க முடியாது.  வேணும்னா மாமாவ போய் பார்த்துக்கச் சொல்லுறேன்.  அவ்வளவுதான் என்னால செய்ய முடியும்.”

சொல்லிவிட்டானே தவிர  அவனது விருப்பமின்மையை முகம் தெளிவாகக் காட்டியது.  இந்த வரைக்கும் அவன் கூறியதே பெரிய விஷயம் என்பது சிவரஞ்சனிக்குப் புரிந்தது.  அதுவும் தனக்காகத்தான் என்பதும் புரிந்தது. அவன் மனதுக்கு ஒப்பாத விஷயத்தையும் தனக்காகச்  செய்கிறேன் என்பவனை மனதுக்கு அவ்வளவு  பிடித்தது.  காலம் அவனது மனதில் மாற்றத்தைக் கொண்டு வந்தால் சந்தோஷம் என்று எண்ணிக் கொண்டாள்.

“இது போதும்ங்க… அவங்க  செய்தது மன்னிக்க முடியாத தப்புதான்.  ஆனா, அதுக்காக  அவங்க படாத கஷ்டம் பட்டுட்டாங்க ங்கறதை அவங்களைப் பார்த்தாலே தெரிஞ்சிக்க முடியுது.  அரை உயிரா இருக்கறவங்களை அப்படியே நிராதரவா  விட  மனசு வரலை.  அழகர் அப்பாவப் போய் பார்த்துக்கச் சொல்லுங்க.  அது போதும்.”

“…”

“இதைப் பத்திப் பேசறதே உங்களுக்குப் பிடிக்கலைன்னு புரியுது.  நானும் இனிமே பேச மாட்டேன்.”

மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர்கள்,  குழந்தைகளையும் சுந்தரையும் அழைத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பினர்.

ஊருக்கு வந்ததும் பிள்ளைகளையும் சிவரஞ்சனியையும்  வீட்டில் விட்டவன், தனது அறைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்பொழுது அவனது அலைபேசி ஒலிக்கவும், எடுத்துப் பார்த்தவன் சகாயத்தின் எண்ணைக் கண்டதும், இணைப்பை ஏற்படுத்தி பேசினான்.

பேசி முடித்து அலைபேசி இணைப்பைத் துண்டித்ததும்  சுந்தர்,

“யாருண்ணா? சகாயமா ஃபோன் பண்ணது.”

“ஆமாம்.”

“என்னாவாம் அவனுக்கு?  உனக்கு எதுக்கு ஃபோன் போடுறான்?”

“ஜீவா தியேட்டருக்கு வரச் சொல்லுறான்.  தனியா…” யோசனையோடு வந்தது கதிரின் குரல்.

“எதுக்கு தனியா வரனுமாம்?  அதெல்லாம் நீ போகாதண்ணா.”

“இல்ல… ஏதோ முக்கியமான விஷயம் பேசனும்னு சொல்றான்.  அதான் யோசனையா இருக்கு.”

“அண்ணா…  அவனையெல்லாம் நம்ப முடியாது. நீ தனியால்லாம் போகாத…”

“ம்ப்ச்… அவனால  என்னைய ஒன்னும் பண்ண முடியாது சுந்தரு. எனக்கு என்னவோ, அவன் நமக்கு உதவி பண்ணத்தான் கூப்பிட்டு இருப்பான்னு தோனுது.”

“அப்ப நானும் வரேன்.  என்னன்னு போய் பார்த்துட்டு வரலாம்.”

நேராக வண்டியை தியேட்டருக்கு விட்டவன்  வண்டியை நிறுத்தி விட்டு சகாயத்தின் எண்ணுக்கு அழைத்தான்.  தியேட்டரினுள் இருப்பதாகவும், அமர்ந்திருக்கும் வரிசை எண்ணையும் கூறியவன் உள்ளே வரச் சொன்னான்.

நன்கு இருட்டத் துவங்கியிருந்தது.  அது சற்று ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் தியேட்டர்தான்.  ஏதோ ஒரு பாடாவதி ஆங்கிலப்  படம் ஓடிக் கொண்டிருந்தது.    இங்கே ஏன் வரச் சொன்னான் என்ற யோசனையோடு,  சுந்தரையும் அழைத்துக் கொண்டு  டிக்கட்டையும் வாங்கிக் கொண்டு தியேட்டருக்குள் சென்றான் கதிர்.

தியேட்டருக்குள் கூட்டமும் அவ்வளவாக இல்லை.  அங்கொருவர் இங்கொருவரே அமர்ந்திருந்தனர்.சுந்தர் சற்று தூரம் தள்ளி அமர்ந்து கொள்ள,  கதிர் மட்டும்  சகாயத்தின் அருகே சென்று அமர்ந்தான்.

“என்ன விஷயம்?  எதுக்கு வரச் சொன்ன? “

கதிரின் கையில் ஒரு ஃபைலைத் திணித்த சகாயம்,

“இதுல எக்ஸ் எம்பி நாகராஜனுக்கு சொந்தமான குடோன்கள்ல நடக்குற அத்தனை இல்லீகல் விஷயமும் ஆதாரத்தோட இருக்கு.  இது எல்லாத்துலயும் எம்எல்ஏ குமாருக்கும் பங்கிருக்கு. ஆனா… அவனுக்கு எதிரா என்னால ஆதாரத்தை திரட்ட முடியல.

அவன் ரொம்ப டேஞ்சரான ஆளு  கதிரு. அவன் செய்யற எதுக்கும் ஆதாரம் வச்சிக்க மாட்டான்.  அவனுக்கு எதிரான ஆளுங்களையும் விட்டு வைக்க மாட்டான்.  உன்னையும் கொல்ல ஆள் செட் பண்ணி வச்சிருக்கான்.

உன்னைக் கொன்னுட்டு ஆக்ஸிடென்ட் மாதிரி செட்டப் செய்ய ப்ளான் போட்டு வச்சிருக்கானுங்க.  நீ கொஞ்சம் ஜாக்ரதையா இரு.  எனக்கு வேற எந்த ஆதாரம் கிடைச்சாலும் உன்கிட்ட கொண்டு வந்து தரேன்.”

“நீயும் ஜாக்ரதையா இரு சகாயம்.  குமார் கூட நீ இருக்கறது புலி வாலப் பிடிச்ச மாதிரிதான்.  அவனுக்கு எதிரா நீ இருக்கறது தெரிஞ்சா உன்ன சும்மா விட மாட்டான்.”

“ம்ம்ம். .. தெரியும் கதிரு.  துணிஞ்சுதான் செய்யறேன்.  இத்தனை நாளா பிள்ளைக்கு சொத்து சேர்க்கறதா நினைச்சிருந்தேன்.  இல்லடா…  நீ பாவத்தைத் தான் சேர்க்குறன்னு, மண்டையில அடிச்ச மாதிரி புரிய வச்சிட்டார் ஆண்டவர்.  செய்த பாவங்களுக்கு என்னால முடிஞ்ச பிராயசித்தம்.

இந்த வருடம் பையனுக்கு கவுன்சிலிங் முடிஞ்சு படிப்பும் முடிஞ்சதும், எங்க ஊரோட போயிடலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்.  சொந்த பந்தங்களோட வளர்ந்தா பிள்ளைகளும் ஒழுக்கமா வளரும்.  குமாருக்கு சந்தேகம் வராத வகையில,  நான்  எங்க  ஊருக்குப் போய்  செட்டில் ஆயிடுவேன்.”

“…”

“அடுத்து ஏதாவது  விபரம் தெரிஞ்சா  உனக்கு சொல்றேன் கதிரு.  இதை வச்சு அந்த நாகராஜன ஏதாவது செய்ய முடிஞ்சா செய்.  நான் வரேன்.  வெளியில எங்கயாவது நாம மீட் பண்ணா தேவையில்லாத சந்தேகம் வரும்.  அதான் உன்னை இங்க வரச் சொன்னேன்.”

சகாயம்  சென்றதும் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தனர் கதிரும் சுந்தரும்.

 

காற்று வீசும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!