vav2

vav2

 

 

வா… அருகே வா! –  2

மரத்தில் உள்ள இலைகள் அசையாமல் நிற்க, பூங்கோதை ஊஞ்சல் ஆடும் சத்தமும் உஸ் என்ற சத்தம் எழுப்ப, “அடியேய்… பொம்பளை பிள்ளை… பைய ஆடு. கைய, கால உடைச்சிகிட்ட ஒன்னும் பண்ண முடியாது. ஏற்கனவே, உங்க அத்தகாரி, உன் என்ன நொட்டை சொல்லி வேண்டாமுன்னு சொல்லமுன்னு பாத்துகிட்டே இருக்கா.” என்று முத்தமா ஆச்சி கடுப்பாகக் கூறினார்.

“என்ன கிழவி… கடுதாசில என்ன இருக்கு? நீ இப்படி அமைதியா இருக்க, என் ஆச்சி கடுப்பா பேசுது.” என்று கேட்டுக் கொண்டே, ஊஞ்சலிலிருந்து படக்கென்று குதித்து, அந்த ஊஞ்சல் பலகை அவளை வந்து இடிக்கும் முன் பாய்ந்து இவர்கள் அருகே வந்து, அந்த கடிதத்தைப் படித்தாள்.

“ஓ… அவசர சோலியா?” என்று யோசனையாகக் கேட்டாள் பூங்கோதை. அவசர வேலை என்றால், ஏதோ ஒரு இக்கட்டான நிலை, இவர்களை கடிதத்தால் கூட, தொடர்பு கொள்ளும் நிலையில் இருக்க மாட்டான். உயிருக்குக் கூட ஆபத்து வரலாம். இவை அனைத்தும் பூங்கோதையும் அறிவாள்.

“கிழவி… உன் பேரன் கடுதாசி அனுப்பி  நாலு நாள் ஆகியிருக்கும். அதுக்குள்ள மிலிட்டரி சொன்ன அவசர சோலி முடிஞ்சிருக்கும். உன் பேரனுக்கு எதாவது ஆகிருந்தா, இல்லை மிலிட்டரியை எவனாவது கடத்தி இருந்தா இந்நேரம் தகவல் வந்திருக்கும். உன் பேரனை எல்லாம் எவன் கடத்துவான்?” என்று பூங்கோதை கூற, கதிரேசன் அவளை மேலும் கீழும் பார்த்தான்.

“கிழவி…” என்று பூங்கோதை மீண்டும் அழைக்க, “ஏடி பூங்கோதை. என்னை கிழவின்னு கூப்பிடறதுக்கு, உன் பல்லை உடைச்சி கையில ஒரு நாள் கொடுப்பேன்.” என்று பார்வதி ஆச்சி மிரட்டினார்.

“கிழவி, உன் பேரனுக்கு பதிலா உன்னை ராணுவத்திற்கு அனுப்பிருந்தா, நீ ஒரு நாலு தீவிரவாதி பல்லையாவது உடைச்சிருப்ப.” என்று நக்கலாக பூங்கோதை கூற, “ஏல கதிரேசா! நீ இவளை கல்யாணம் பண்ண, உன் வாழ்க்கை அதோகதி தான்.” என்று பார்வதி ஆச்சி கடுப்பாகக் கூறினார்.

“ஏன்? ஊர்ல எல்லாரும் என்னை ராசி இல்லைன்னு சொல்ற மாதிரி நீயும் சொல்லுதியா?” என்று பூங்கோதை கழுத்தை நொடிக்க, “நான் ஏன் உன் ராசியை சொல்லுதேன்? உன் வாயை சொல்லுவேன். என்ன வாய் பேசுத? உன்னை கட்டினவன் செத்தான்.” என்று கூறிக்கொண்டே, பேரனைப் பற்றிய கவலையோடு தளர்ந்த நடையோடு சென்றார் பார்வதி ஆச்சி.

“ராணுவம்ன்னா ஆபத்துன்னு தெரிஞ்சி தான் அனுப்புறேன். ஆனாலும்…” என்று பார்வதி ஆச்சியின் புலம்பல் இவர்கள் காதிலும் விழத்தான் செய்தது.

“கதிரேசா! உங்க அப்பனை வர சொல்லு. பூங்கோதைக்கு சீக்கிரம் கல்யாணம் பேசி முடிக்கணும்.” என்று முத்தமா ஆச்சி கூற, “ஆச்சி! பூங்கோதைக்கு என்ன வயசு? இப்பத்தேன் பன்னிரண்டு, முடிச்சி காலேஜ் போறா. அதுக்குள்ள என்ன அவசரம்? நான் அம்மாவ சரி கட்டுதேன். கொஞ்ச காலம் செல்லட்டும் ஆச்சி.” என்று மழுப்பலாகக் கூறினான் கதிரேசன்.

“என்ன கதிரேசா? அந்தானைக்கு மழுப்பாத, உங்க அம்மைய மாதிரியே! என் காலத்தில், என் பேத்தி கல்யாணம் நடக்கணும்.” என்று முத்தமா ஆச்சி கண்டிப்போடு கூற, “ஆச்சி! பூங்கோதையை நான் பாத்துக்க மாட்டேனா? ஏன் ஆச்சி இப்படி எல்லாம் பேசுதீக?” என்று தன் ஆச்சியின் கை பிடித்துக் உருக்கமான குரலில் கேட்டான் கதிரேசன்.

“ஆச்சி! ஏன் இப்படி கலங்குத? அத்தான், என்னை தவிர, யார் கழுத்திலையாவது தாலி கட்டுமா? இல்லை நான்தேன் விட்டுருவனா? நீ வா ஆச்சி… எனக்கு பசிக்கி. தோசை ஊத்தி குடு.” என்று சமாதானம் போல் ஆரம்பித்து, விளையாட்டாகவே முடித்தாள் பூங்கோதை.

 

கதிரேசன் கிளம்ப, அவனை வற்புறுத்தி முத்தம்மா ஆச்சி, உணவு கொடுக்க, உணவை முடித்துக் கொண்டு கிளம்பினான் கதிரேசன்.

அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

‘திலக் எப்படி இருக்கான்னு தெரியலியே… அவன் கிட்ட பேச கூட முடியாது. பார்வதி ஆச்சி இன்னைக்கு ரொம்ப சோர்வா தெரியராக. நாளைக்கி காலைல, அவுகளை ஒரு எட்டு போய் பாக்கணும்.’ என்று சிந்தித்துக் கொண்டே நடக்க, “அத்தான்… அத்தான்…” என்று பூங்கோதையின் சத்தம் கேட்க, அவளை ஆச்சரியமாகப் பார்த்தான் கதிரேசன்.

“அத்தான் உங்க பையை வச்சிட்டு போய்ட்டிக…” என்று பூங்கோதை மூச்சு வாங்கக் கூற, “ஏன் பூங்கோதை? என்னை ஒரு போன் பண்ணி கூப்பிட்டுருக்கலாம்ல? இப்படி ஓடி வர, செருப்பு கூட போடாம?” என்று அவளை வாஞ்சையோடு பார்த்தபடி கேட்டான் கதிரேசன்.

“அத்தான் நீங்க தான் திரும்பி நடந்து வரணும். நீங்க வீட்டுக்கு போறதுக்குள்ள கொடுக்கனும்ம்னு வந்தேன் அத்தான். என்னைப் பார்த்தா, அத்தை வைவாக.” என்று பூங்கோதை சிரித்த முகமாகக் கூற, “பூங்கோதை…” என்று ஆழமான குரலில் அழைத்தான் கதிரேசன்.

கதிரேசன் ஏதோ பேச தயங்க, “அத்தான்… ரொம்ப சிந்திக்காதீக… வீட்டுக்கு கிளம்புங்க. அத்தை தேடுவாக. ஆச்சி… ஏதாவது சொல்லிகிட்டே தான் இருக்கும். நான் படிப்பை முடிக்கேன் அத்தான்.” என்று கூற தலை அசைத்துச் சென்றான் கதிரேசன்.

பூங்கோதை திரும்பி நடக்க, “பூங்கோதை…” என்று அழைக்க, “அத்தான்…” என்று கேள்வியோடு அவனைத் திரும்பிப் பார்க்க, “பார்த்து போ. வீட்டுக்கு போயிட்டு, ஒரு மெசேஜ் அனுப்பு.” என்று கூறினான்.

‘இங்க இருக்க வீட்டுக்கு, இவ்வுளவா?’ என்ற கேள்வி அவள் மனதில் தோன்றினாலும், தன் அத்தானின் அக்கறையில் கரைந்து உணர்வு பொங்கத் தலை அசைத்தாள் பூங்கோதை.

 

இருவரும் அவர்கள் வீட்டை நோக்கி நடக்க, பூங்கோதையின் சிந்தையில் கதிரேசன் நிறைந்திருந்தான். ‘அத்தான் எல்லாம் பாத்துப்பாக…’ என்று எண்ணியபடியே வீட்டை நோக்கி வேகமாக நடந்தாள் பூங்கோதை.

‘பூங்கோதை… பூங்கோதை…’ கதிரேசன் மனதில் பூங்கோதையே நிறைந்திருந்தான். ஆனால்?

 

‘பூங்கோதை… சின்ன பொண்ணு. அவளுக்கு இப்பவே கல்யாணமா? நான் அவளுக்கு நல்ல புருஷனா இருப்பேனா? முடியும் தான். பூங்கோதையை பத்தி எனக்கு தெரியாதா? பூங்கோதை, எனக்காக என்ன  வேணாலும் பண்ணுவா? நான் சந்தோஷமா தான் இருப்பேன். ஆனால், பூங்கோதை என் கூட சந்தோஷமா வாழ முடியுமா?’ போன்ற பூங்கோதையின் எண்ணத்தோடு கதிரேசன் அவன் வீட்டிற்குள் நுழைய, கவனக்குறைவால் அவன் பெருவிரல் திண்ணை அருகே இருந்த படியில் இடிக்க, வலி தாளாமல், “ஸ்…” என்று சத்தத்தை எழுப்பினான் கதிரேசன்.

தார்சாவில் அமர்ந்திருந்த கதிரேசனின் தாயார், செல்லம்மா, “என்ன கதிரேசா? அவளை பாத்துகிட்டு வரியா? அவ மூஞ்சில முழிச்சா என்ன காரியம் விளங்கும்?” என்று கழுத்தை நொடித்தார்.

“அம்மா…” என்று கதிரேசன் கண்டிப்போடு கூற, “நீ மிரட்டினாலும், சத்தம் போட்டாலும், நான் சொல்றதுதேன் நிசம்.  அவ பிறந்த அன்னைக்கே அவ அம்மைய முழுங்கிட்டா. சரி, நடக்கற அன்னைக்கு, உங்க ஆச்சியும், தாத்தாவும் சந்தோசப்பட்டாக. அவ அப்பன் அன்னைக்கு, இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டான். சமைஞ்சு கொஞ்ச நாளில, உங்க தாத்தா போய் சேர்ந்துட்டாரு.” என்று செல்லமா வியாக்கியானம் பேசினார்.

“நல்ல மருத்துவமனைக்கு கூட்டிட்டு போயிருந்தா, என் தங்கச்சி இறந்திருக்க மாட்டா. பூங்கோதை அப்பாவை நீ பேசியே நோகடிக்காமா, இருந்திருந்தா நீ பூங்கோதையை நல்ல பார்த்துபங்குற நம்பிக்கையில், அவர் இன்னொரு கல்யாணம் பண்ணிருக்க மாட்டார். பூங்கோதை சடங்கு வீட்டில், நீ நல்ல விதமா நடந்திருந்தா, என் அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாமலே போயிருக்காது.” என்று அங்கு வந்த கைலாசம் அழுத்தமாகக் கூறினார்.

“ஏன் சொல்லமாடீக? காக்கா உட்கார தென்னம்பழம் விழுந்த கதையால இருக்கு. உம்ம தங்கச்சி மவ, ராசி கட்டை. அதுக்கு என் தலையில் எல்லாத்தையும் தூக்கி வைப்பீகளா?” என்று செல்லமா சண்டைக்குத் தயாராக, “அம்மா… நான் ஆச்சி வீட்டில் சாப்பிட்டுட்டேன். புறவாசல்ல படுக்க போறேன். நாளைக்கி காலையில் சோலி இருக்கு.” என்று கூறிக்கொண்டு பின் கட்டிற்கு சென்றான் கதிரேசன்.

‘இங்க வந்தால், பூங்கோதை என்றும் அம்மாவின் வாயிக்கு அவல் தான்.’ என்ற எண்ணத்தோடு வீட்டின் பின் பக்கம் உள்ள தோட்டத்துக் கயிற்று கட்டிலை நோக்கி நடந்தான் கதிரேசன்.

‘சின்ன பொண்ணு. எவ்வளவு குறும்பா இருந்தாலும், பூங்கோதைக்கு எவ்வளவு பக்குவம். அவளுக்கு இருக்கிற பக்குவம் அம்மாவுக்கு இல்லையே! பாவம்… பூங்கோதை! அவள் வலிகள் அவளுக்குப் பக்குவத்தைக் கொடுத்திருக்குமோ? வயசுக்கும் பக்குவத்துக்கும் சம்பந்தம் இல்லையோ?’ போன்ற கேள்விகளோடு கதிரேசன் வானத்தைப் பார்த்தபடி படுத்திருந்தான்.

இந்தியா  பாகிஸ்தான் எல்லையில், திலக்கை அந்த புதை குழி மெல்ல மெல்ல உள் வாங்கிக் கொண்டிருந்தது.

அவனை நோக்கி பல கரிய உருவங்கள் வருவது திலகிற்கு தெரிந்தது. யாரென்று திலக்கால் கணிக்க முடியவில்லை. ஆனால், அவர்களிடம் மாட்டிக் கொள்வது அத்தனை உசிதம் இல்லை, என்று தெரிய அவன் துப்பாக்கியால் அவர்களை தாக்க முற்பட்டான்.

‘அவங்களும் மாட்டிக் கொள்ள விரும்ப மாட்டாக. நம்ம ஆளுங்களுக்கும், இந்த சத்தம் உதவியா இருக்கும்.’ என்ற எண்ணத்தோடு திலக் துப்பாக்கியால் சுட, “டுமீல்… டுமீல்…” என்ற சத்தம் அந்த இருள் நிறைந்த காட்டை கிழித்தது.

சத்தம் வந்த திசையை நோக்கி ராணுவ வீரர்கள் ஓட, பல கரிய உருவங்கள் வேகமாகக் கண்பார்வையிலிருந்து மறைந்தது.

திலக் ஒரு கையால் அருகே இருந்த மரவேரை பிடித்திருந்தாலும், அவன் புதை குழியில் மெல்ல மெல்ல தன் பிடிமானத்தை இழந்து கொண்டிருக்க, அவன் கண்கள் நம்பிக்கையைப் பிரதிபலித்தது. ‘வீரர்கள் வந்து விடுவார்கள்.’  என்ற உறுதியாக நம்பினாலும், இல்லையென்றால் என்ற கேள்வி அவன் மனதில் எழ, ஒரு கையால், அந்த மரவேரை அழுத்திப் பிடித்தான் திலக். அவன் கைகளில் இரத்தம் வர ஆரம்பித்தது.  அங்கிருந்த இந்திய  மண்ணில் அவன் உதிரம்  சொட்டு சொட்டாக வழிய, தன் நெஞ்சின் அருகே இருக்கும் அவள் புகைப்படத்தைத் தழுவ அவன்  மனம் விழைந்தது.

மரணத்தை எட்டிப் பார்க்கும் தருவாயில், உடல் இந்திய மண்ணுக்கு… உயிர் இந்தியத் தேசத்திற்கு… என்ற அவன் வீர முழக்கமிட்ட, மனம் மட்டும் அவளுக்கு என்று அவள் எண்ணத்தை அவனுள் மேலோங்கச் செய்தது.

அந்த வலியிலும், திலகிற்கு அவளின் எண்ணம் மெல்லிய புன்னகையை அவன் முகத்தில் தருவித்தது.

‘சின்ன வயசிலிருந்து பார்த்து வளர்ந்தா காதல் வராதா?’ என்று அவன் அறிவு கேள்வி எழுப்ப, ‘எனக்கு வரும்.’ என்று அவன் மனம் கூறியது.

அவன்  இடுப்பு பகுதி வரை புதை குழி இறங்கி விட, அவள் எண்ணங்களே அவனை உயிர்ப்போடு இருக்க, அவனை ஆட்டுவித்தது. அவன் தன் இடது கையால் மரவேரை பிடித்திருக்க, அவன் வலக்கை அவள் புகைப்படம் இருக்கும் மார்பைத் தழுவியது.

‘அவளை பாவாடை போடும் வயசுலயும் பார்த்தேன். தாவணி போடும் வயசுலயும் பார்த்தேன். அவ எப்பவும் அழகு தான்.’ என்ற எண்ணம் தோன்ற, ‘தான் பார்த்து விட்டால் அவள் இடுப்பை அசைத்து அவள் தலை முடி அங்குமிங்கும் அசைய அவள் நடக்கும் நடை அழகு தான். அந்த இடை என் கையில் சிக்காமலா போய்விடும்?’ என்ற கேள்வி அவன் மனதில் தோன்ற, ‘நான் இப்படி யோசிப்பது தெரிஞ்சா என்ன பண்ணுவா? அவ என்ன பண்ணுவா?’ என்ற எண்ணம் தோன்ற, “கழச்சி கல் விளையாடும் கல்லால என்னை அடிப்பா.” என்று முணுமுணுத்து புன்னகைத்துக் கொண்டான் திலக்.

திலக் கைகளின் வலி அதிகரித்தது. அந்த புதை குழி அவனை நெஞ்சு வரை உள்ளே இழுத்திருந்தது. இனி துப்பாக்கியை அவன் இயக்க வாய்ப்பில்லை. கண்களில் நம்பிக்கை மட்டுமே மிஞ்சி இருந்தது. வலியை மறக்க, அவன் மனம் அவளை நாடியது.

‘அந்த கழச்சி கல் விளையாடும் பொதுதேன்  நான் அவளை அதிகம் பாக்க முடியும். அவள் கழச்சி கல் விளையாடுவது தனி அழகு தான் அவ பாடிகிட்டே விளையாடும் பொது அந்த விளையாட்டுக்குத் தனி அழகு தான்.’ என்ற எண்ணம் திலகிற்கு தோன்ற,  அவள் பாடும் பாடல் அவன் காதில் ஒலித்தது.

 

“ஓரி உலகெலாம்

உலகெலாம் சூரியன்…

சூரியன் தங்கச்சி

சுந்தர வல்லிக்கி

நாளக்கி கல்யாணம்…”

 

‘அவள் முதல்  கல்லை மேலே போட்டு, அவள் கழுத்தை நொடித்து தலையை அசைத்துப் பாட, அதில் நான் எப்படி மயங்காம இருக்க முடியும்?’ என்ற கேள்வியோடு,  “இந்த  உலகில் அவள் ஒருத்தி தான் பேரழகி. அந்த பேரழகி என் அருகில் வருவாள்.” என்று அவன் உதடுகள் மெல்ல உச்சரித்தது.

 

‘ஜன்னலை விட்டு அகல முடியாமல், ஊருக்குச் சென்ற சில நாட்களும் அவள் கண்களால் தன்னை கட்டிப் போடுவது நிஜம் தான். அவள் விளையாடுவதைப் பார்க்கத்தான் நான் அங்கனையே நிப்பனே’ என்ற திலக்கின் முகம்  வலியோடு வெட்கத்தைக் வெளிப்படுத்த, அவன் கண்மூடி அவளை தன் கண்முன் கொண்டு வந்தான் திலக்.

 

அவள் இரண்டாம் கல்லை மேலே தூக்கிப் போட அவள் இரு கண்கள் மேலும், கீழும் சூழ அவள் உதடுகள்,

 

‘ஈரி ரெண்டு எடுக்கவே

இழந்த தழுக்கவே

குழந்த சமயவே

கொட்டு சத்தம் கேட்கவே.’ என்று கண்களை மூன்றாவது கல்லை எடுக்க கணக்கிட்ட, “அந்த பார்வை எனக்கு மட்டுமே சொந்தம். நான் இங்கிருந்து தப்பிச்சுருவேன். அவளைப் பார்ப்பேன்.” என்று ஏக்கத்தோடு அவன் உதடுகள் எச்சரித்தது.

 

நேரம் செல்ல, செல்ல… வலி அதிகரிக்க, அவன் கைகள் நடுங்க, அவள் புகைப்படத்தை  நெஞ்சோடு அழுத்தி விட்டு, இருக்கைகளையும் சேர்த்து மரவேரை பிடித்தான் திலக்.

‘அவ கிட்ட கூட சொல்லாத காதல். சொல்ல முடியாமலே போய்விடுமா?’ என்ற சந்தேகம் அவன் மனதில் எழுந்தாலும், அதை ஒதுக்கி விட்டு, “நான் இன்னும் நாட்டிற்காக எதையும் சாதிக்கவில்லை? அதற்குள் என் உயிர் போய் விடுமா?” என்று கூறியபடியே  அவன் புன்னகையோடு அவன் உயிரைப் பிடித்துக் கொண்டிருக்க, அவன் தோள்கள் கீழே இறங்கி கழுத்து பகுதியும் இறங்க ஆரம்பித்தது.

இரத்தத்தில் தேச பக்தியையும், மனதில் காதலையும், அன்பையும் சுமந்தவர்களை தன்னுள் வாங்கி கொண்ட யுத்த பூமி  திலக்கை காப்பாற்றுமா?

வா… அருகே வா!  வரும்….

error: Content is protected !!