அத்தியாயம் 1
“எழில்மதி…”என்று ஹஸ்கி வாயிசில் தனக்கெதிரில் இருப்பவளை கண்ணாலே கபளீகரம் செய்தவாறு அழைத்தான் அவன்…இந்த எழில்மதியை பெண் பார்க்க வந்திருப்பவன்…
இவன் பெயர் என்னவோ அப்பா சொன்னாரே…ஞாபகம் இல்லையே…வா..வா… என்று எழில்மதி தலை குனிந்தவாறே தன் மூளையுடன் வாக்குவாதம் நடத்திக்கொண்டிருந்த வேளையிலே எதிரில் இருந்த அந்த சோ கால்டு மாப்பிள்ளை அதை பெண்ணின் வெட்கம் என்று தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டு அவனின் உள்ளக்கிடங்கை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தான்…
“உன்னை எங்க மாமா வீட்டு விசேஷத்துல பார்த்தவுடனே முடிவு பண்ணிட்டேன் நீ தான் எனக்கு எல்லாமேனு…உன்னை நான்…”என்று அடுத்து அவன் என்ன சொல்ல வந்தானோ அதற்குள்
“க…க..கதிர்….அதானே உங்க பேர்…”என்று கை அசைத்தவாறு கேட்டாள் எழில்மதி…அதற்கு அவனின் முகம் மாறிய விதத்திலே தெரிந்தது எழில் அவனின் பெயரை தவறாக கூறிவிட்டாள் என்று…
“அது இல்லையா…அப்ப கவின்…ஐய்யய அதுவும் இல்லையா…இப்ப சரியாய் சொல்றேன் பாருங்க…கந்தன்….இல்லாட்டி கார்த்திக் …”என்று அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே எழில்மதியின் உளறலை கை நீட்டி தடுத்து நிறுத்தியவன் தன் பெயரைக் கூறினான்…
“ஓஹ்…கேசவனா உங்க பேர்…நல்லா இருக்கு…”என்றாள்
தனக்கு அவள் மேல் இருக்கும் நேசம் இவளுக்கு துளி கூட தன் மேல் இல்லை என்று உணர்ந்தவனின் நெஞ்சம் லேசாக வலியை
உணர்ந்தது…இப்பொழுது இல்லாட்டி என்றால் என்ன திருமணத்திற்கு பிறகு வரவைத்து விடுவோம் என்று தன்னை தானே தேற்றி கொண்டு எழில் மதியை பார்த்து லேசாக சிரித்து வைத்தான்…
அதற்கு மறுமொழியாக பார்த்தவர்களை தொட்டு பார்க்கச்சொல்லும் இடது கன்னத்தில் மட்டுமே அழகாக குழி விழும் அந்த அழகிய மோஹன புன்னகையை கேசவனை நோக்கி வீசினாள் எழில்மதி…அதில் கவரப்பட்ட கேசவன் “நீங்க அழகா சிரிக்குறிங்க…”என்று இவன் என்னமோ வெட்கபட்டுக்கொண்டே கூறினான்…
“அப்டியா..இதே மாதிரி தான் என் “என்று அடுத்து ஒரு பெரிய கதையே கூறினாள்..அதே கேட்ட அந்த கேசவன் முகம் வெளுத்தது…பெண்ணிடம் பேசுவதற்காக என்று சென்ற எழிலின் அறையில் இருந்து வெளிவந்தவன்…பஜ்ஜி காபி என்று மொக்கிக்கொண்டிருந்த தனது குடும்ப அங்கத்தினர் அமர்ந்திருக்கும் இடத்தில போய் அமர்ந்தான்…
கேசவன் அவனின் அம்மா காதில் என்ன சொன்னானோ சாப்பிட்டு கொண்டிருந்த பதார்த்தங்களை அப்டியே வைத்துவிட்டு “வீட்டுக்கு போய் கலந்து பேசிட்டு சொல்றோம்…”என்று எழிலின் தந்தையிடம் கூறியவர்…தான் பெண் பார்க்கவென்று அழைத்து வந்திருந்த கும்பலைக் கிளப்பிக்கொண்டு வெளியேறினார்…
அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் வரை பொறுமையாக இருந்த சின்னத்தம்பி தனது ஆசை இல்லை இல்லை இம்சை மகளை பெருகுரலெடுத்து கூப்பிட்டார்…
“எழில்மதிதிதிதி……”
தன்னை பெற்று சீராட்டி வளர்த்த சாரி அடித்து வெளுத்து வளர்த்த தந்தை இப்படி காட்டு கத்தல் கத்துக்கிறாரே வயதான காலத்தில் எதுவும் ஆகிவிடுமே என்று சிறிதும் பயமில்லாமல் தீ உறைப்பு உறைக்கும் மிளகாய் பஜ்ஜியை உஉஉஉஉ என்று ஊதி சமயலறையில் நின்று தின்றுகொண்டிருந்தாள் எழில்மதி…
“கொழுப்பெடுத்த கழுதை…எப்படி கத்துறேன்…வருதான்னு பாரு…பிள்ளையை பெத்து தாடினா…ஒரு குரங்கு குட்டியை பெத்து வைச்சுருக்க…ஆம்பளை புள்ளையா இருந்திருந்தா இன்னியராம் தண்ணி தெளிச்சு எப்டியோ போது கிரகம்னு விரட்டி விட்டுயிருப்பேன் டி…பொட்டை கழுதையா போச்சே…இது சோட்டு பிள்ளைக எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு கையில ரெண்டு…வயித்துல ஒன்னுனு இருக்குதுக…”என்று சின்னத்தம்பி பாவம் ஒரு பத்துநிமிடத்துக்கு மேலும் தனது சகதர்ம பத்தினி கருப்பாயிடம் புலம்பி தள்ளியும் அவரின் குரங்கு குட்டி வந்த பாட்டை காணோம்…
சின்னத்தம்பி கத்த கத்த வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தலைகுனிந்தவாறு நின்றிருந்தனர்…அவர் ஹாலின் நடுவில் நின்று கூப்பாடு போட…அவருக்கு வலப்பக்க மூலையில் அவரின் சகதர்மபத்தினி கருப்பாயி…இடப்பக்க மூலையில் எழில்மதியின் தம்பி ஆனந்த்…அதற்கு அடுத்த மூலையில் நிறைமாத கர்ப்பிணியான எழில்மதியின் தங்கை மகா என்று ஆளுக்கு ஒரு மூலையில் மூவரும் நின்றுகொண்டு வரும் சிரிப்பை அடக்கிக்கொண்டு நின்றனர்…
இது எப்பொழுதும் அவர்கள் வீட்டில் நடக்கும் ஓர் அன்றாட நிகழ்வு தான் சாப்பிடுவது..தூங்குவதை போல்…அதுவும் பெண் பார்க்கவென்று வரும் கும்பல் இப்படி அடித்து பிடித்து ஓடினால் அன்று கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜ் தான்…
மகராசி அப்படி என்ன செய்வாள் என்றே தெரியாது அவளை விரும்பி பெண்பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார்கள் கூட அடித்துபிடித்து ஓடி விடுமாறு ஏதோ செய்துவிடுவாள்…
அப்படி தனியாக பேச செல்பவர்களிடம் என்னதான் செய்கிறாள் என்று தெரிந்துகொள்ள பாவம் மனிதன் என்ன என்னமோ செய்துவிட்டார்…இதுவரை என்னவென்று தெரிந்த பாடு தான் இல்லை…
தனியாக பேசப்போகும் அறையில் ஜன்னலுக்கு வெளியே நின்று எட்டிப்பார்பது…பக்கத்து அறைக்குச் சென்று சுவரோரம் காதை வைத்து ஒட்டுக்கேட்பது…மொபைலில் ரெக்கார்டர் ஆன் செய்து அவர்கள் பேசப்போகும் அறையில் தெரியாமல் வைப்பது என்று கொஞ்சம் கூட கூச்சம் நாட்சம் இல்லாமல் எல்லாமே செய்து பார்த்துவிட்டார் … ஒன்றும் உதவவில்லை…எப்படி தெரியும்…
சின்னத்தம்பி ஜன்னலுக்கு வெளியே நின்றால் ஏற்கனவே கையோடு கொண்டு சென்ற காபியை பெத்த தந்தை என்று கூட பார்க்காமல் அவர் முகத்திலே சூடு காபியை ஊற்றிவிடுவது…பக்கத்து அறையின் சுவரில் சாய்ந்து கேட்டால் எதையாவது சொல்லி வந்த மாப்பிளை பையனிடமே ஆணி சுத்தியலை கொடுத்து அவர் காதுவைத்து கேட்கும் இடத்திலே அடிக்கச் சொல்லுவது…மொபைலை ஆப் பண்ணி அவர்கள் வீட்டுக்கு இடதுபுறம் உள்ள சாக்கடையில் விசிறியடிப்பது என்று அவரின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்தாள் நமது கதாநாயகி எழில்மதி…
இதற்கு மேல் சென்றால் தனது தந்தையின் உயிருக்கு உத்திரவாதம் இல்லையென்று உணர்ந்த எழில்மதியின் தங்கை மகாலட்சுமி எழில்மதி தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த செம்பை பிடுங்கி ஓரமாக வைத்தவள் அவளை தன் தந்தையை நோக்கி இழுத்துவந்தாள்…
“மகா அப்டியே அப்பா முன்னாடி போய் வில்லன் ஹீரோயினை ஹீரோ முன்னாடி சுத்தி விடுவான் பாரு…அதை மாதிரி சுத்தி விடு…”என்று நாடியில் வழிந்த தண்ணீரை புடவை நுனியால் துடைத்தவாறு கண்ணடித்து கூறினாள் எழில்மதி…
கருமம் கருமம் என்று தலையில் அடித்தவாறு கூறிய மகாவும் அவள் சொன்னதை போல தான் சின்னத்தம்பியிடம் சுழற்றிவிட்டாள்…
எண்பதுகளின் கதாநாயகி போலவே தலையை பிடித்தவாறு சுழன்று அவள் அப்பாவின் முன் தடுமாறி நின்றாள் எழில்மதி…
சின்னத்தம்பியிடம் மட்டும் அயன் மேன் உடை இருந்தால் தனது கையை உயர்த்தியே எழிலை பஸ்பமாகி இருப்பார்…கடவுளின் அனுகிரஹத்தாலோ அல்லது அவர் ஹாலிவுட் downey junior ஆக பிறப்பெடுக்காததாலோ என்னவோ எழில் தப்பித்தாள்…
“அந்த மாப்பிளை கிட்ட என்ன சொன்ன…இன்னைக்கே பொண்ணு பார்த்துட்டு பூ வைச்சுட்டு போகலாம்னு வந்தவங்க வீட்டில போய் சொல்றோம்னு துண்டை காணோம்…துணியை காணோம்னு ஓடுறாங்க…”என்று பல்லை கடித்துக்கொண்டு கேட்டார் சின்னத்தம்பி…
“நான் ஒண்ணுமே பண்ணலை சின்னு அப்பா…என் அப்பத்தா மேல சத்தியமா…”என்று ஒன்றும் தெரியாதவள் போல் கண்ணிமைகள் கொட்டி உதடு பிதுக்கி கூறினாள் எழில்மதி….
“செத்தும் எங்க ஆத்தாவை நிம்மதியா இருக்க விடமாட்டியா நீ…”என்று மண்ணுலகம் விட்டு சென்றும் அவரை இப்படி வம்பிழுக்கிறாளே என்று தலையில் அடித்துக்கொண்டார்…
“பேச்சை மாத்தாம உண்மையை சொல்லு…உனக்கு இளையவ கூட கல்யாணம் ஆகி போய்ட்டா…ஆனால் நீ தான் இப்படி வர மாப்பிள்ளை எல்லாம் துரத்திவிட்டுட்டு இருக்க…”என்று கத்தியவர் என்ன நினைத்தாரோ அன்பொழுக எழிலிடம் பேச ஆரம்பித்தார்…
“நான் நல்லா இருக்கும் போதே உனக்கு ஒரு கல்யாணத்தை பார்த்துட்டு போய்ட்டேனா நிம்மதியா செத்துப்போயிருவேன்…உனக்கு ஒரு நல்லது பண்ணாம செத்தா என் கட்டை கூட வேகாது…”என்று ஆக்ஷன் சீன்க்கு தான் படியவில்லை…செண்டிமெண்ட் சீன்க்காவது ஏதாவது கூறுகிறாளா என்று பார்ப்போம் என்று இரு துளி முதலை கண்ணீர் வடித்து எழிலை ஓரக்கண்ணில் பார்த்தார்…
அந்த வீட்டில் இருந்த மீதம் மூவருக்குமே இது நடிப்பு என்று தெரிந்து விட்டபோது அவரின் கேடி தில்லாலங்கடி மகளுக்கு தெரியாதா அவரின் நடிப்பு…
“அதெல்லாம் பத்தி கவலை படாதீங்க அப்பா…”என்று தனது தலை மகள் கண்ணீர் வடித்து கூறியவுடன் தன் நடிப்பை எண்ணி பெருமிதம் அடைந்தவர் சிவாஜி போல் அவரது குடும்பத்தை நோக்கி ஒரு லுக் விட்டவாறு மகளின் தலையை தடவி குடுத்தார்…
“இப்பயெல்லாம் மின்சார மயானம்னு ஒன்னு இருக்கு பா…உங்களை அதுக்குள்ள அனுப்பிவிட்டா ஐஞ்சே நிமிசத்துல ஒரு கைப்பிடி சாம்பல் தந்துருவாங்க அப்பா…”என்று கண்ணீர் வடிய கூறினாள் நடிகையர் திலகம் எழில்மதி…
ஒரு நிமிடம் அவள் கூறியது புரியாமல் முழித்தவர் புரிந்தவுடன் அந்த காலத்து அப்பாக்கள் போல் அவளை அடிப்பதற்கென்றே தனியாக வைத்திருக்கும் குச்சியை எடுத்து அடித்து விளாசிவிட்டார்….
இப்படி நடுவீட்டில் வயது பெண்ணை கம்பால் விளாசிக்கொண்டிருந்த சின்னத்தம்பியை யாருமே தடுக்கவில்லை…தடுக்கச்சென்றால் அவர்களுக்கும் சேர்த்து அடி விழும்…அந்த கடவுளே வந்து நிற்பாட்ட சொன்னாலும் சின்னத்தம்பி கடவுளையே ஒரு முறைமுறைத்து ஓரமாக நிற்க சொல்லிவிட்டு தன் மகளை அடிப்பார்…
எழில் அடிவாங்குவதை பார்த்து கவலைப்பட்ட கருப்பாயி மகனை சைகை மூலம் தன்னிடம் அழைத்தார்…அவனும் தன் அக்கா அடிவாங்குவதை பார்த்து வருத்தத்தில் இருந்தவன்…அம்மாவிடம் சென்றான்…அவனின் கைபேசி மூலம் யாரையோ அழைத்து வரச்சொல்லுமாறு சைகை செய்தார்…அவர் ஒருவர் வந்தால் மட்டுமே தன் தமக்கையை இதில் இருந்து விடுவிக்கமுடியும் என்று உணர்ந்தவன் சின்னத்தம்பி பார்வையில் படாதவாறு நகன்று நகன்று சமயலறைக்குள் சென்று அந்த நபரை அழைத்து வேகமாக வீட்டுக்கு வருமாறு கூறி கைபேசியை அணைத்தான் ஆனந்த்…
ஆனந்த் கூறிய ஐந்து நிமிடத்தில் அங்கு ஆஜராகி இருந்தாள் ராஜி…முழு பெயர் ராஜப்ரியா இவர்கள் ராஜி என்று அழைப்பர்….எழில்மதியின் உயிர் தோழி…ராஜிக்கு எழில்மதி உயிர் வாங்கும் தோழி…
ராஜியை பார்த்தவுடன் சுவிட்ச் அமர்த்தியதை போல் நொடியில் கம்பை கீழேபோட்டு அடிப்பதை நிற்பாட்டியவர் ராஜியை பார்த்து சிரித்தவாறு வா ராஜி…உள்ளே வா…சாப்டியா…என்று சின்னத்தம்பி கேட்க அவளோ “இவளை தோழியா பிடிச்சுட்டு நிம்மதியா சோத்துலயெல்லாம் கைவைக்க முடியுமா” என்று நினைத்தவள் சின்னத்தம்பிடம் சாப்பிட்டேன் என்று தலை ஆட்டி வைத்தாள்…
“பிள்ளைங்க எல்லாம் ஸ்கூலுக்கு போய்ட்டாங்களா…பிள்ளைக வர நேரமாச்சே…உங்க அப்பன் போய் கூப்பிட்டு வருவானா…இல்லை நான் போய் கூப்பிட்டு வரவா டா…”என்று ராஜியிடம் வினவினார் சின்னத்தம்பி…
இப்பொழுது இவரை இங்கிருந்து அகற்றவேண்டும் என்று நினைத்த ராஜி “அப்பாக்கு இன்னைக்கு வேலை இருக்காம் பா…அதான் உங்களை போக சொல்லலாம்னு வந்தேன் அப்பா…நீங்க போய்ட்டு வரிங்களா பா…”
“சரி டா…இந்த கழுதைக்கு கொஞ்சமாச்சும் புத்திமதி சொல்லு டா…இன்னைக்கும் வந்த மாப்பிளையை தொரத்தி விட்டுருச்சு… பதினஞ்சாவது மாப்பிள்ளை இது…”என்று கூறியவர் தலையில் அடித்துக்கொண்டு வெளியில் நிற்பாட்டிருந்த தனது ஹோண்டா ஆக்ட்டிவா வண்டியை எடுத்துக்கொண்டு ராஜியின் பிள்ளைகளை அழைக்க சென்றுவிட்டார்…
தன் மகள் இப்படி வரும் மாப்பிளையெல்லாம் விரட்டிவிடுவதற்கு மூல காரணமே ராஜி தான் என்று…சின்னத்தம்பிக்கு தெரிய வாய்ப்பில்லை…
சின்னத்தம்பி சென்றதும் அனைவரது கவனமும் எழில் மேல் குவிந்தது…இவ்வளவு அடி அடித்தும் அவள் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை…பாதகத்தி மகளுக்கு வலிக்குமோ வலிக்காதோ…இதுவரை சின்னத்தம்பி அடித்து எழில் அழுததே இல்லை…
எப்பொழுதும் கேட்கும் கேள்வியே அவளின் குடும்பமும் தோழியும் கேட்க எப்பொழுதும் கூறும் பதிலையே கூறி அனைவரையும் சின்னத்தம்பியும்…தன்னையும் திட்ட வைத்தாள்…
“இவ்ளோ அடிவாங்கியும் எப்படி டி இப்படி இருக்க…”
“சின்னு எங்கே என்னை அடிச்சாரு…சும்மா கம்பை ஒத்தி வைச்சுட்டு போறாரு…சின்னு ரொம்ப நல்லவரு தெரியுமா…அடிச்சா கூட வலிக்குற மாதிரி அடிக்கமாட்டாரு…”என்று என்னமோ ஒரு லாரி மணலை ஒரே ஆளாக சுமந்தவள் போல் கைகள் இரண்டையும் தட்டி விட்டுவிட்டு தொலைக்காட்சியை உயிர்ப்பித்து பார்க்க ஆரம்பித்துவிட்டாள்…
அதை கேட்டு ஆனந்தின் தலையிலே நக்கென்று கொட்டிய ராஜி “அவர் தான் வலிக்குற மாதிரி அடிக்கமாட்டாருனு தெரியும்ல டா…அப்பறம் ஏன் டா என்னை கூப்பிட்ட…இப்ப தான் சோத்துல கை வைச்சேன்…திங்கமுடியாம உங்க அக்காகாரியை காப்பாத்த பறந்து வந்துட்டேன்…அம்மா சோறு போடுங்கம்மா…ஏன் டி மகா எங்கே உன் வீட்டுக்காரை காணோம்…”என்று அவர்களிடம் பேசியவாறு எழில் பக்கத்தில் போய் அமர்ந்தாள்….
“அவர் பெங்களூரு வரைக்கும் போயிருக்காரு கா…நாளைக்கு வருவாரு…”என்று கூறிய மகாவும் சோபாவின் மற்றொரு பக்கத்தில் எழிலுக்கு அருகில் அமர்ந்தாள்…
“ஏன் எழில் இப்படி பண்ற…என்ன தான் உனக்கு பிரச்னை….யாரையாச்சும் விரும்புரியா…சொல்லு அப்பாகிட்ட நான் பேசுறேன்….24 வயசாச்சு….உன்னை விட ரெண்டு வருசத்துக்கு இளையவ மஹாவுக்கே கல்யாணம் ஆகி ரெண்டு மாசத்துல பிள்ளை பெக்க போறா….”
“நீ இப்படியே இருந்தா அப்பாவுக்கும் சங்கடமா இருக்காதா…அம்மா உன்னை திட்டலை அவ்வளவு தான்…ஒவ்வொரு தடவையும் என்கிட்டே சொல்லி வருத்த படுறாங்க…என்ன தான் வேணும் வாய் திறந்து சொன்னா தானே தெரியும்…உன்கூட சுத்திகிட்டு இருந்த எனக்கும் ரெண்டு பிள்ளை ஆச்சு…ஸ்கூலுக்கு போறாளுக…”
இந்த வார்த்தையின் போது ராஜியை கண்கள் இடுங்க கூர்ந்து பார்த்தவள் ஒன்றும் சொல்லாமல் தொலைக்காட்சியில் மீண்டும் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாள்…
மொத்த குடும்பமும் அவளை கவலையாக பார்த்துவிட்டு எப்பொழுதும் போல் தங்களது வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்…இன்னைக்கு நேற்றா இது நடக்கிறது கடந்த நான்கு வருடங்களுக்கு மேல் இதான் சின்னத்தம்பி வீட்டு காட்சி…
நகரம் என்றும் சொல்லமுடியாமல்..கிராமம் என்றும் தள்ளமுடியாமல் இருக்கும் விருதுநகரின் ஒரு பகுதியில் தான் இவர்கள் இருந்தனர்…சின்னத்தம்பி பிறந்து வளர்ந்ததெல்லாம் இங்கு தான்…மிகவும் கஷ்டமான ஜீவனம் தான் இவர்கள் குடும்பத்து ஜீவனம்..சாப்பாட்டிற்குக் கூட வழி இல்லாத நிலையில் எங்கே பள்ளிபடிப்பெல்லாம் படிப்பது…சின்னத்தம்பியின் படிப்பு கனவெல்லாம் டீ கடையில் கழுவும் எச்சி கிளாசில் கரைந்து கொண்டிருந்தது…இவர் தான் மூத்தவர்…இவருக்கு அப்பறம் ஆண் பிள்ளைகள் நான்கு…பெண் பிள்ளைகள் மூன்று என்று முறையே ஏழு பேர் இருந்தனர்…
சின்னத்தம்பியின் தந்தையும் ரைஸ் மில்லில் வேலை பார்த்தார் தான்..அந்த வரவு குடும்பத்தின் அன்றாட உணவுக்குக்கூட பற்றவில்லை…அதனால் சின்னத்தம்பி மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே படிப்பை நிற்பாட்டி விட்டு ஒரு டீக்கடையில் மாதம் பத்துரூபாய்க்கு வேலையில் சேர்த்துவிட்டார்…அந்த முறையே அடுத்த தம்பியும் ஒரு விறகு கடை…பெண் பிள்ளைகள் இருவர் வீட்டு வேலை….மாடு மேய்ப்பது என்று பிரித்து பார்த்தனர்…
அந்த டீ கடையில் சந்தித்து நட்பானவர்கள் தான் சின்னத்தம்பியும்…ராஜியின் அப்பா சுந்தரமும்…பதினைந்து வயதில் சின்னத்தம்பி கட்டிட தொழிலில் இறங்க…சுந்தரம் ஆட்டோ ஓட்டும் தொழிலில் இறங்கினார்…அந்த டீ கடை நட்பு நாற்பது வருடங்களுக்கு மேல் இன்றும் பசுமையாக தலைமுறை தாண்டி நிற்கிறது…
நிமிர்ந்தாளில் இருந்து கொத்தனாராக பதவி உயர்வு பெற்று இருபத்தியெட்டு வயதில் மேஸ்திரியாக உச்சம் தொட்டு தனியாக வேலை எடுத்து ஆள் பிடித்து பார்க்க ஆரம்பித்தார்…அந்த காலங்களில் அப்படி ஒன்றும் வீடு கடை கனி கட்டுவதற்கெல்லாம் தெருவுக்கு தெரு என்ஜினீயர்கள் முளைக்காத காலம்…அவரே வரைபடம் போடுவார்…கணக்கு போடுவார்…ஒரே நேரத்தில் நான்கு வீடு பார்த்தால் அதை அங்கே போட்டு இதே இங்கே போட்டு லாபம் சம்பாரிக்கும் தொழிலில் நேர்மையாக இருந்தவர்…அவர் வீட்டுக்கு வந்து அலையாய் அலைந்து வரைபடம் வாங்கி போனவன் எல்லாம் இப்பொழுது கார் பங்களா என்று திரியும் போது இவருக்கு லேசாக பொறாமை வரும் தான்…ஆனால் ஒரு தரம் கூட அதை சொல்லி காட்டாதவர்…இந்த வீடு கட்டினதில் பத்தாயிரம் பாக்கி…அந்த வீடு கட்டியதில் இருபதாயிரம் பாக்கி என்று மொத்தத்தில் பிழைக்க தெரியாத மனிதர்…
இருபத்தி எட்டு வயதில் ஒன்று விட்ட அத்தை மகளென்று கருப்பாயியை காட்டி மணந்து கொள்ள பெற்றோர் கூறியபோது மறுவார்த்தை பேசாமல் பொண்ணை கூட தாலிகட்டுவதற்கு முன் வரை பார்க்காமல் திருமணம் செய்தவர்…அதனாலே என்னவோ எழில் ஒவ்வொரு மாப்பிள்ளையும் ஓட ஓட விரட்டும்போது வெறுப்பாகி போகிறது போல அவருக்கு…
பெயர் தான் கருப்பாயி ஆனால் நல்ல மலையாள மஞ்சள் நிறத்தில் இருப்பார்…சின்னத்தம்பி என்ற பெயர்க்கு ஏற்றார் போல் பிரபு மாதிரி சிவந்த நிறம் இல்லை…வெயில் மழை என்று பார்க்காமல் வேலை பார்த்ததால் பிறக்கும் போது மாநிறத்தில் இருந்தவர் கருப்பாகி இருந்தார்…ஆனால் சின்னத்தம்பி குஷ்பூ போல் இருக்கும் பெண்ணை மட்டும் பார்க்காமலே கல்யாணம் முடித்து கொண்டார்…
திருமணமாகி முதல் வருடத்தில் பிறந்தவள் தான் எழில்மதி…அடுத்து இரண்டு வருட இடைவேளையில் மகாலட்சுமி…அடுத்து இரண்டு வருட இடைவேளையில் ஆனந்த்…
அதைபோல் சுந்தரமும் இப்பொழுது நான்கு ஆட்டோவிற்கு உரிமையாளர்…அவரும் தனது இருபத்தியெட்டு வயதில் ஸம்ஸாரஸாகரத்தில் குதித்தார்….மைதிலி என்ற மனைவியும்…ராஜப்ரியா என்ற முதல் பெண்குழந்தையும்…எழிலுக்கு இரண்டுமாதம் இளையவள்…அடுத்து ஒரு பெண் கீர்த்தி அவள் ராஜப்ரியாவிற்கு நான்கு வருடம் கழித்து பிறந்தவள்….
எழிலுக்கு பதினெட்டு வயது இருக்கும் போது பார்த்த மாப்பிள்ளை தான் சிவசுப்ரமணியம்…இராணுவத்தில் வேலை பார்ப்பவர்…குடும்பமும் நல்ல வசதி என்று எப்படியாது எழிலை திருமணம் செய்துவைக்க எவ்வளவு பாடுபட்டும் எழில் மறுத்ததால் அந்த சம்பந்தம் தடை பட்டது…இந்த மாப்பிளையை வேண்டாம் என்று சொல்லும் போது எழில்கு வேறு காரணம் இருந்தது…இப்பொழுது வரும் மாப்பிளையை எல்லாம் விரட்டுவதற்கு வேறு காரணம் இருந்தது….
சிவசுப்ரமணியம் சம்பந்தத்தை விட மனதில்லாத சின்னத்தம்பி தான் பெறாத மகளான ராஜிக்கு இந்த சம்பந்தத்தை பேசி முடித்தார்…ராஜிக்கும் பிடித்து போக கோலாகல திருமணம்…நான்கு வருடத்தில் இரு பெண்பிள்ளைகள் என்று சந்தோசமாக தான் இருந்தாள்…இரண்டாவது மகள் பிறந்து முப்பது நாள் இருக்கும் போது வேலைக்கு சென்ற சிவா…மகளின் முதல் வருட பிறந்த நாளுக்கு திரும்பி வரும் போது பிணமாக தான் வந்தான்…
இதனாலே சின்னத்தம்பி ராஜி முகம் பார்த்து பேசவே மிகவும் சங்கடப்பட்டார்…தான் இந்த வரன் ராஜிக்கு முடிக்காமல் விட்டிருந்தால் அவள் நன்றாக இருந்திருப்பாளே…என்று வருந்ததா நாள் இல்லை…என்ன செய்து விதியை வெல்ல முடியும்..அதில் அனைவருமே கைப்பாவை தான்…அது ஆடுகின்ற ஆட்டத்திற்கு ஏற்றவாறு நாமளும் செல்ல வேண்டும்…
இது எழிலுக்கு 22 வயது இருக்கும் போது பார்த்த வரன்…பையன் ஜீவா வங்கியில் பணிபுரிகிறான் நல்ல இடம்… பெண் பார்க்கவந்து கடைசியில் தங்கை மஹாவை பிடித்திருக்கிறது என்று கூற…சின்னத்தம்பி மறுக்க மறுக்க எழில் நடத்திவைத்த திருமணம்…அப்பொழுது தான் மகா கல்லூரி படிப்பின் கடைசி செமெஸ்டரில் இருந்தாள்…இந்த திருமணம் ஆரம்பித்தில் இருந்தே சின்னத்தம்பிக்கு ஒரு நெருடல் தான்…ஜீவா எழிலை நிஜமாகவே பெண்பார்க்க வரவில்லையோ…மஹாவுக்கும் ஜீவாக்கும் இடையில்ஏதோ காதல் கதை இருக்கிறது…அதை தெரிந்துகொண்ட எழில் தான் இந்த திருமணத்தை நடத்திருப்பாள் என்று… அவருக்கு மனதில் ஒரு சந்தேகம்…ஆனால் இதுவரை அதை வாய்விட்டு அவர் கேட்டதில்லை…
உங்ககிட்ட மட்டும் சொல்லறேன் சின்னு அப்பாட்ட சொல்லிறாதீங்க… ஜீவா வேலை பார்த்த வங்கிக்கு மகா அக்கௌன்ட் ஓபன் பண்ணபோக…அங்கே அவங்க மானேஜரை பாருங்கன்னு சொல்ல…பார்க்க போய்…பார்த்துகிட்டே இருந்ததுனால வந்த வினை தான் காதல்…பொண்ணு பார்க்க வர சீன் நிஜமாவே அவங்க நினைக்கல…ஜீவாவோட அம்மா கட்டாயத்துனால எழிலை பொண்ணு
பார்க்கவர…ஏற்கனவே இவங்க காதல் விஷயம் எழிலுக்கு அரசல் புரசலா தெரிஞ்சுருக்க…மகா ஜீவா கல்யாணத்தை சுபமா முடிச்சுவைச்சுட்டா எழில்…