Kumizhi-9

Kumizhi-9

மௌனம் – 9

உணவகத்தில் ஒரு வித அலைகளிப்புடனே தான் அமர்ந்திருந்தான் பாண்டியன். கோபமா, சோகமா, படபடப்பா எந்த உணர்ச்சி தன்னை ஆட்கொள்கிறது என்று அவனுக்கு தெரியவில்லை. நாளுக்கு நாள், இந்த படபடப்பும் பரிதவிப்பும் அதிகமாகின்றதே தவிர அதனை குறைக்கும் வழி இன்னதென்று அவனால் கண்டறிய முடியவில்லை.

ஒருவேளை பயம் வந்து தன்னை ஆட்கொண்டு விட்டதா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டும் தெளிந்து விட்டான். “பயமா? அதுவும் உனக்கா? போகாத ஊருக்கு வழி கேக்குற மாதிரி இருக்கு உன்னோட கேள்வி” என அவனுடைய மனசாட்சி அவனை கேலி பேசியது. ஆனால் இவனுடைய பயத்திற்கும் காரணங்கள் வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றதே! அதை எவ்வாறு யாரிடம் சொல்லி தன் மனதை வெளிப்படுத்துவான், அதுவும் தெரியவில்லை.

தாயுடன் மகளும் கோதை இல்லத்தை விட்டு வெளியேறி பத்து நாட்கள் ஆகின்றன. இவனது பரிதவிப்பும் அன்றிலிருந்து தான் தொடங்கியது. எந்த ஒரு வேலையிலும் கவனம் வைக்க முடியாமல் தடுமாறிக் கொண்டே இருப்பதால் பாண்டியன் பக்கத்தில் யாரவது ஒருவர் இருப்பதும், இந்த பத்து நாட்களாய் வாடிக்கையாகிப் போனது.

வேலையில் சிறிது ஓய்வு கிடைக்கும் நேரங்களில் எல்லாம் அவனது மனம் என்னும் குரங்கு தாவித்தாவி அவனின் தவிப்பினை சொல்லிக் கொண்டே இருந்தது.

“கடைசிவரைக்கும் உங்களுக்கும், உங்க பொண்ணுக்கும் பாதுகாப்பா இருப்பேன், எந்த பயமும், கஷ்டமும் இல்லாம, எங்க வீட்டுல இருக்கலாம்னு சத்தியம் பண்ணாத குறையா அத்தைய இங்கே கூட்டிட்டு வந்தேன்டா. இப்படி அவங்கள ஏமாற்றத்தோட அனுப்பி வைச்சிட்டேனே? இனிமே எங்கே, என்ன வேலை செஞ்சு வாழப் பழகிக்க போறாங்கனு தெரியலடா” தன் நண்பன் ரவியிடம் தினந்தோறும் இப்படி தான் ஆரம்பிக்கும் அவன் புலம்பல்கள், முடிவில்லா தொடர் ஓட்டமாய் ஓடிக் கொண்டே இருக்கும்.

“ஆரம்பிச்சிட்டியாடா… கமலா சித்திக்கு, கனி(ரவியின் முறைப்பெண்) வீட்டுக்கு பக்கத்திலேயே இருக்குற அரிசி மில்லுல வேலை கிடைச்சிருச்சுடா, அவங்களும் வேலைக்கு போய் சகஜமா அங்கே இருக்க பழகிட்டாங்க”- ரவியின் ஆறுதல் இது.

“இத்தன வருசத்திலே வீட்டை விட்டு எங்கேயும் போனதில்லடா அவங்க, யாரையும் பார்த்துப் பழகினது கூட இல்ல, இனிமே வெளியாளுங்க கூட பேசி பழகனும்னா ரொம்ப கஷ்டமாச்சேடா” ஆற்றாமையுடன் பாண்டியன் தொடர

“இப்போ சொல்லி என்ன ஆகப் போகுது பாண்டி? நீதானே அவங்கள எங்கேயும் வெளியே அனுப்பாம வீட்டுலயே இருக்க வச்சே! பொம்பளைங்க வீட்டுல தான் இருக்கணும்னு சொல்லியே நீ எல்லா பொண்ணுகளையும் தூரமா ஒதுக்கி வச்சு பழக்கிட்டே… இந்த காலத்துல நீ சொல்ற மாதிரியெல்லாம் இருக்குறது ரொம்ப கஷ்டம்டா… அவங்களா பழகிக்குவாங்க.. இனிமேயாவது யாரையும் இப்படி வீட்டுல அடைச்சு வைக்க நினைக்காதே” இது ரவியின் பேச்சு.

“பொண்ணுக்கு கல்யாணம் பண்ணணுமே அதுக்கு என்ன பண்ணுவாங்க? எப்படி மாப்பிள்ளை தேடுவாங்க?” – பாண்டியன்

“அதுக்கெல்லாம் இன்னும் வருஷம் இருக்குடா, தானா எல்லாம் நல்லபடியா நடக்கும், நீ கொஞ்ச நேரம் சும்மா இரு” நண்பனை அடக்கினான் ரவி.

இது போன்ற அச்ச உணர்வுகள் அவன் மூளையை குழப்பி வண்டாக குடைய வைத்தது. தாயும் மகளும் வீட்டை விட்டு கிளம்பும் போது எப்பொழுதும் தன்னுடைய ஆதரவும், பாதுகாப்பும் அவர்களுக்கு உண்டு என சொல்லி வைத்திருந்தான் தான். ஆனால் சொல்லி என்ன பயன்? அவர்கள் இவனை திரும்பியும் பார்க்காமல், சொல்பேச்சிற்கு தலையை கூட அசைக்காமல் சென்றதை நினைத்தால் இன்றும் மனம் வேதனையில் துடிக்கத் தான் செய்கிறது பாண்டியனுக்கு.

மூளையானது தாயை நினைத்து கவலைப்பட, மனமோ மகளை நினைத்து அவனை நிலைகுலைய வைத்தது. அதிலும் வீட்டை விட்டு வெளியேறும் போது அவள் இருந்த நிலையை நினைத்தால் இப்போதும் அவன் உடலும் சேர்ந்தல்லவா நடுங்குகிறது.

மனஉளைச்சல், உடல் அலைச்சல், அடுக்கடுக்காய் ஏற்பட்ட அதிர்ச்சிகள் எல்லாம் சேர்ந்து சிவனியாவின் உருவத்தை முற்றிலும் உருக்குலைத்து வைத்திருந்தது. அதிலும் அவளது உடலின் காயமும் வலியும் சற்றும் குறையாமல் மேலும் அதிகரித்திருக்க, அதுவே அவளது நடையினை பலவீனமாக்கி ஒரு வித தள்ளாட்டத்துடன் நடக்க வைத்தது. அந்த சமயம் தன் மீதே தனக்கு வெறுப்பு தோன்றிட, முதன் முறையாக தன்னை தானே வெறுத்துக் கொண்டான் பாண்டியன்.

“கருமம் பிடிச்ச என்னோட கோபம் ஒரு சின்ன பொண்ண பழி வாங்கிருச்சேடா… இதுக்கெல்லாம் எனக்கு என்ன தண்டனை குடுத்தாலும் பத்தாது” பாண்டியன் கூறியதைக் கேட்டு ரவிக்கு ஆயாசம் தான்.

“இவ்வளவு நேரம் அம்மாவ நினைச்சு புலம்பிட்டு, இப்போ பொண்ண நினைச்சு கவலப்பட ஆரம்பிச்சுட்டானா? இப்போதைக்கு நிறுத்த மாட்டானே? இன்னைக்கு வேலை முடிஞ்ச மாதிரி தான் எனக்கு” மனதிற்குள் பேசிக்கொண்டே அவன் சொல்வதை கேட்க ஆரம்பித்தான்.

“எப்போவும் என்கிட்டே சொல்லாம, என்னை கேக்காம போக மாட்டாளேடா, நான் தானே அவள எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போவேன். இப்போ அவ இருக்குற இடம் கூட எனக்கு தெரியல… என்னென்ன சமாதனம் பேசியும், பதிலுக்கு தலைய கூட அசைக்காம போயிட்டா, என்னை நாலு அரை விட்டு அவ கோபத்தை காட்டிருந்தா கூட கவலப்பட மாட்டேன், இப்படி ஒரு வார்த்தையும் பேசாம போயிட்டாளேடா!” அவன் புலம்பித் தள்ள, ரவிக்கோ “இப்பொழுது இவனை நான் அறைந்தால் என்ன?” என்று தான் தோன்றியது. தான் நினைத்தை செயல்படுத்தினால் தனது நிலைமை என்னவாவது என்ற எண்ணம் வர உடனடியாய் தள்ளி வைத்தான்.

கல்லூரி விடுதியில் இருக்கும் காலங்களில் கூட இரண்டு நாளுக்கொரு முறை பேசுவது, வாரத்திற்கு ஒரு முறை செங்கமலத்தை கூட்டிக்கொண்டு பார்க்க செல்வது என்று அவளை எப்பொழுதும் தொடர்ந்து கொண்டே தான் இருந்தான். அதையெல்லாம் நினைத்து மனம் மீண்டும் மீண்டும் அவளையே சுற்றிக் கொண்டிருந்தது.

இரவில் தூக்கத்திலும் தன்னை அறியாமல் புலம்ப, இதனை அறிந்த கோதைநாயகி அவனை தனியாய் விடவில்லை. அவனை அதட்டியே நேரத்திற்கு வரவைத்து தன்னுடன் கோதை இல்லத்திலேயே இருத்திக் கொண்டார். அதன் விளைவு அவனது ஜாகை சிவனியா இருந்த அறையில் என்றானது. மற்ற அறைகளில் சமையலுக்கு தேவையான பொருட்களும், பாத்திரங்களும் இடம் பெற்றிருக்க வேறு வழியின்றி தற்காலிகமாக இருக்கட்டும் என்றே அந்த அறையை அவனுக்கு ஒதுக்கித் தந்தார். அந்த அறையோ அவனது புலம்பலுக்கு மேலும் தூபம் போட்டு, அவனது தூக்கத்தை காவு வாங்கியது.

வெளியே முரடனாய், கோபக்காரனாய் தெரிந்தவன் உள்ளுக்குள்ளே தன் பொறுப்பற்ற கோபத்தினால், இரு பெண்களின் நிம்மதியை அழித்த குற்ற உணர்வில் தினம் தினம் செத்துக் கொண்டிருந்தான்.

நாளுக்கு நாள் தன் மீதான குற்ற உணர்வில், அவன் தவித்த தவிப்பில், சிவனியாவின் மீதான பாசமும் நேசமும் வெளிப்பட்டு, மற்றவர்க்கும் தெளிவாய் அவனின் நிலையை புரிய வைத்தது.

இவனது தவிப்பினை கண்ட ராமலிங்கமும், ரவியும் அவனை நிதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

“பாண்டியா!! நடந்தத மறக்க பாரு. இப்டி புலம்பிட்டே இருந்தா நல்லா இல்லாடா, நீ இப்டி பேசிட்டே இருக்குற ஆள் கிடையாது. அவங்கள சமாதானப்படுத்தி கூட்டிட்டு வருவோம், எப்படியாவது பேசி உனக்கும், சிவாக்கும் கல்யாணம் முடிச்சு வைக்குறோம். நீ எங்ககூட வந்தா மட்டும் போதும்டா. உன் மனசுல உனக்கே தெரியாம அவ மேல பாசத்தையும், நேசத்தையும் கொட்டி வச்சுட்டு இருக்கே, இல்லன்னு அடம் பிடிக்காதே” ரவியும் வற்புறுத்தி அவனை அழைத்துக் கொண்டிருந்தான்.

“டேய் அவங்க மேல பாசம் இருக்குறது உண்மை தான், ஆனா நீ சொல்ற நேசம், காதல் எல்லாம் ஒண்ணும் கிடையாது. என்னை நம்பி வந்தவங்க, மனக்கஷ்டத்தோட சொல்லாம, கோபமா போயிட்டாங்கன்னு தான் கவலைப்படறேன், வேற எந்த நினைப்பும் இல்ல, இனிமே இந்த மாதிரி பேசி எனக்கு கோபத்தை வர வைக்காதே…” – பாண்டியன்

“கோபம் வரட்டுமே!! அப்படியே என்னையும் ரெண்டு அடி அடிச்சிருடா… நானும் எங்கேயாவது போயிரேன், உன்னை இப்படி பாக்க முடியல என்னால… நீ தப்புகணக்கு போடறே பாண்டியா!! நீ சிவா பொண்ண காதலிக்குறேன்னு நான் அடிச்சு சொல்வேன்டா, காதல் வந்தா தாண்டா இப்படி எல்லாம் ஒரு மனுசனை புலம்ப வைக்கும், இது உனக்கு தெரியாம இருந்ததுக்கு காரணம், நீ உன்னை பத்தி இது வரைக்கும் யோசிக்காம இருந்துருக்கே… அதான்டா உண்மை. உன்னை பத்தி நீயே நினைச்சு பாக்கும் போது தான் உனக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காதுன்னு தெரிய வருது. அவளை நினைக்காம இது வரைக்கும் ஒரு நாளாவாது இருந்திருக்கியா? இப்போ ஒரு நிமிஷமாவது உன்னால அவள மறக்க முடியுதா? இல்ல மறக்கத்தான் தோணுதா? முடியல தானே? இவ்ளோ ஏன் அவ கூட பேசுற பேச்ச வேற எந்த பொண்ணு கூடவாவது பேசி இருக்கியாடா? சாதாரணமா ஒரு பொண்ணை கைய பிடிச்சு போறவனாடா நீ? நான் கனி கைய பிடிச்சு பேசினாலே முறைச்சு பார்த்து வைப்ப… அப்படிப்பட்ட நீ அன்னைக்கு அத்தன பேர் பாக்குறப்போ இழுத்துப் பிடிச்சு கூட்டிட்டு வர்றே? எல்லாம் கேமராவுல பார்த்தாச்சு. அப்படி இழுத்துட்டு போற? இதுக்கு என்ன பதில் சொல்ற?” ரவி தன் ஆதங்கத்தை எல்லாம் கோபமாய் கொட்டி அவனுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தான்.

“அடி வாங்கப்போற ரவி… எங்க வீட்டுல வளர்ந்த பொண்ணு மேல நான் பாசம் வைக்குறதும், கண்டிக்கிறதும் குத்தமாடா? அதை காதல் கண்றாவின்னு சொல்லி வைப்பியா? இனிமே இத பத்தி பேசுறதா இருந்தா என் கூட பேசாதே… போதும் நம்ம பழக்கத்த இதோட நிப்பாட்டிருவோம்” பாண்டியன் அவனையும் விரோதித்து பேசி வைத்தான்.

“அடப்பாவி உனக்கு நல்லது சொன்னா என்னையே தள்ளி வைக்க பாக்குறியா நீ? உனக்கு இது பத்தாது, இன்னும் நிறைய வாங்குவே!! இருடி மாப்ளே! அவளுக்கு, உன்ன கூஜா தூக்க வைக்கல நான் உன் நண்பன் இல்லடா” என மனதோடு ரோஷமாய் சபதம் எடுத்தவன்

“எனக்கு தோணுனத தான் நான் சொன்னேன் பாண்டியா!! காதல்ல அனுபவப்பட்டவன் நான், அதான் எடுத்து சொன்னேன். கேக்குறதும் கேக்காததும் உன் இஷ்டம், அப்புறம் உனக்கு இஷ்டம்னா பழக்கத்த முறிச்சுக்கோ, எனக்கு அப்படி எல்லாம் செஞ்சு பழக்கம் கிடையாது, நீதான் எல்லோரையும் சண்டை போட்டு, அடிச்சே விரட்டி விட்றவன் ஆச்சே… எனக்கும் அப்படி நடக்காதுன்னு என்ன நிச்சயம்?” என குத்திக்காட்டியே பேச, ஒரு வழியாய் அடங்கிப் போய்

“நீ இந்த பேச்ச பேசினதால தான்டா அப்படி சொல்ல வேண்டியதப் போச்சு… விடு மனசுல வச்சுக்காதே” பாண்டியன் சமாதானப் படுத்தி வைத்தான்.

இவர்கள் பேச்சை கேட்டுகொண்டே இருந்த பெரியவர் ராமலிங்கமும் “உனக்கு நிம்மதி வேணும்னா என் பேத்திக்கு ஒரு நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணிவை பாண்டியா!, அவ சந்தோசமா இருக்குறத பார்த்தாலே உன்னோட கவலை எல்லாம் தூரமா போயிரும், உனக்கும் நிம்மதி கிடைக்கும், உனக்கு செய்ய பிடிக்கலன்னா கூட, என்னோட கடைசி ஆசையா நினைச்சு இந்த ஒரு நல்ல காரியத்த செஞ்சு முடிச்சிரு… என் பேத்தி கல்யாணத்த பார்த்துட்டு நான் கண்ண மூடுறேன்”

“என்ன பெரியப்பா! இப்படி எல்லாம் சொல்லி என்னை அந்நியப்படுத்துறீங்க? செய்டான்னு சொன்னா செஞ்சு முடிக்க போறேன்… நீங்க சொல்றதும் நல்ல விஷயம் தான், இனிமே அந்த வேலையில இறங்குறேன்” இதை தன் அன்னையிடம் கூறுவதற்காய் பாண்டியன் செல்ல, இங்கே ரவியோ

“என்ன பெரியவரே? இப்படி கவுத்திட்டீங்களே! இவனை எப்படியாவது வழிக்கு கொண்டு வந்து ஒரு நல்லது செய்ய நினைச்சேன், இப்படி எல்லாத்தையும் மாத்திட்டீங்களே?”

“இவன் மாப்பிள்ளைய தேடி, அது இவனுக்கு பிடிக்கணுமே ரவி? அதுக்கு பிறகு தானே மத்தது எல்லாம், நான் ஏதாவது சாக்கு சொல்லி சிவா ஜாதகம் வாங்கிட்டு வர்றேன், அவனும் வேலைய ஆரம்பிக்கட்டும், எல்லாம் நல்லதாவே நடக்கும்ங்குற நம்பிக்கையில இந்த வேலைய ஆரம்பிப்போம். பயலுக்கு நாலு அடிபட்டு தான் கல்யாண மாலை கழுத்துல ஏறும்ன்னா அதை மாத்தவா முடியும்?” என முற்றுப்புள்ளி வைத்து பாண்டியனின் எண்ணத்தை திசை திருப்பி விட்டார்.

மாப்பிள்ளை பார்க்கும் படலம் வெகுஜோராய் நடந்தது. தரகரையும் வரவைத்து, விளக்கங்கள் எல்லாம் சொல்லி தன்னுடைய எதிர்பார்ப்புகளையும் சொல்லி வைத்தான்.

“தம்பி பொண்ணு ஜாதகத்தோட போட்டோவும் வேணும், அப்போதான் நானும் பொருத்தம் பார்த்து பிள்ளை போட்டோ கொண்டு வர முடியும். அதோட எங்களுக்கு ஆயிரம் ரூபாயும் வச்சு குடுக்கணும்” என தரகர் கூற

“தரகரே! பொண்ணு போட்டோ எல்லாம் குடுக்க முடியாது, மொத நீங்க பையன் ஜாதகம், போட்டோ எல்லாம் கொண்டு வாங்க, எங்களுக்கு பிடிச்சிருந்தா மேற்கொண்டு பொண்ணு போட்டோவ, நான் அவங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு வேனும்னா பொண்ணு போட்டோ பார்த்துகோங்க, அத மனசுல வச்சு பையன் போட்டோ கொண்டு வாங்க” என்றவன் தன் கைபேசியில் இருந்த சிவனியாவின் போட்டோவை காட்டி உள்ளே வைத்தான்.

“இது என்னடா? போட்டோவ கொஞ்சம் உத்து பாக்குறதுக்குள்ள போம்மா மின்னல் கணக்கா ஃபோன் உள்ளே போயிருச்சு,  எப்படி நான் வரன் கொண்டு வர்றது?” என மனதுக்குள் நினைத்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், “அப்புறம் அந்த தட்சனை ஆயிரம் ரூபாய் குடுத்தா வேலைய ஆரம்பிச்சுருவேன் தம்பி”

“ஜாதகமும் போட்டோவும் குடுக்கும் போது தானே பணம் குடுக்கணும், நாங்க எதிர் பாக்கிற வரன் நீங்க கொண்டு வாங்க, உங்களுக்கு தானா வரவு வரும்” என விரட்டி அடித்தான் ரவி.

அவனுக்கு இந்த வரன் பார்க்கும் வேலை சுத்தமாய் பிடிக்கவில்லை. எதையாவது செய்து விட்டு போகட்டும் என்றும் அவனால் இருக்க முடியவில்லை. நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

மதியம் ஒய்வு நேரத்தில், தரகர் கொண்டு வந்திருந்த வரன்களை பார்க்க ஆரம்பித்தான் பாண்டியன். பக்கத்தில் ரவியும், சேகரும் இருந்தனர்.

“பையன் குள்ளமா இருக்காண்டா வேணாம்” முதல் போட்டோ பார்த்து பாண்டியன் கூறியது.

“ஏண்டா ஐஞ்சேமுக்கால் அடி உனக்கு குள்ளமாடா?” – ரவி

“பாப்பா என் தோளுக்கு வருவாடா… அதுவே குறைன்னு நினைச்சு அரைஅடி ஸ்டூல போட்டுட்டு சுத்துனா… ஞாபகம் இருக்கா? அத்த கூட இனிமே உன்ன அடிக்க கம்பு தேவையில்ல, இதுவே போதும்ன்னு அவள திட்டி பேசினத மறந்திட்டியாடா?” பாண்டியன்

“நான் சொன்னேல்ல… இப்போ என்ன சொல்றே சேகரன்னே?” ரவி.

பாண்டியனின் தவிப்பை சேகரிடம் சொல்லி வைத்திருந்தான் ரவி. சேகருக்கோ நம்பிக்கை இல்லை. எந்நேரமும் கம்பீரமாய் எல்லோருக்கும் பயம் காட்டுபவன், இப்படி ஒரு பாசவலையில் சிக்கித் தவிப்பான் என்று கனவிலும் நினைக்கவில்லை.

“ஆமா ரவி, நீ சொன்னது உண்மை தான்” சேகர், பாண்டியனின் தவிப்பை இப்பொழுது கண்டு கொண்டான்.

“என்னடா சொன்ன நீ?” பாண்டியன்

“ஒண்ணுமில்லடா இது எங்க விஷயம்… நீ போட்டோ பாரு” ரவி

“இவனுக்கு இப்போவே அரை ஏக்கர் தலையில் இருக்கு, கொஞ்ச நாள் போன பிளாட் போட்டுருவான்… வேணாம்டா” இது இரண்டாவது போட்டோக்கு பாண்டியன் பேசியது.

“அடப்பாவி நெத்தி கொஞ்சம் பெருசா இருந்தா இப்படி தான் சொல்லி வைப்பியா” இது சேகரின் முணுமுணுப்பு, ரவியின் காதில் மட்டும்.

“இன்னும் என்னென்ன சொல்லுவான்னு பாப்போம்” ரவி சேகரின் காதில்

“இவன் காது பெருசுடா… சிவனி பக்கத்துல நின்னா அரக்கன் பக்கத்துல பூச்சி மாதிரி இருப்பா வேணாம்டா இவன்” மூன்றாவது வரன் பாண்டியனின் பார்வையில்.

“அண்ணே!! இப்படியெல்லாம் நீ உன் பொண்ணு கல்யாணத்துக்கு பார்த்து வைக்கணும், நம்ம பாண்டி கிட்ட கத்துக்கோ” ரவி

“என்னை இதுல இழுக்காதே ரவி, நானே ஒரு மார்க்கமா தான் கேட்டும் பார்த்தும் வைக்கிறேன்” – சேகர்,

“டேய் ரவி இந்த பையன் கண்ணு கொஞ்சம் உள்ளே போன மாதிரி இல்ல” – நான்காவது நபருக்கு பாண்டியனின் வர்ணனை.

“எனக்கு சரியா தெரியல பாண்டி”- ரவி

“நல்லா பாருடா… உள்ளே போய் மூட்டை பூச்சிய நசுக்கின மாதிரி இருக்கு, சரி வராது” – பாண்டியன்

“அப்படி ஒண்ணும் சின்னதா தெரியல பாண்டி, இவ்ளோ கூர்ந்து எல்லாம் யாரும் கவனிக்க மாட்டாங்க” – சேகர்

“அதுக்கு இல்லண்ணே… அவ கண்ணுக்கு இவன் கண்ணு மேட்ச் ஆகாது, கலர் கூட கொஞ்சம் கம்மி தான்” – பாண்டியன்

“செத்தாண்டா சேகரு…” தனக்குள் தானே புலம்பிக் கொண்டான் சேகர்.

“என் கஷ்டம் இப்போவாவது புரியுதான்னே” – ரவி

“நல்லா புரியுது ரவி, இனிமே என்னை இவன்கூட கோர்த்து விடாதே… ஒரு மணி நேரம் அதிகமா கூட வேலை பாக்குறேன் இவன் அக்கர்போர என்னால தாங்க முடியல” சேகர் அண்ணன் விழுந்தடித்து ஓடி விட்டான்.

உருவப் பொருத்தம் சரியாய் வந்தால், வேலை பார்க்கும் இடத்தை குறை கூற ஆரம்பித்தான்.

“வெளிநாடு, நார்த் சைடு எல்லாம் வேண்டாம் தரகரே! எங்க அத்தை அடிக்கடி போய் பாக்க முடியாது,” – பாண்டியன்

“உள்ளுர்ல பாக்கனும்னா நல்ல வேலையில எதிர்பார்க்க முடியாது. சுயதொழில் பாக்கலாமா தம்பி?” தரகர்

“இல்ல.. இல்ல.. வியாபாரத்துல நஷ்டம் ஏதும் வந்தா அதுக்கும் மருமகள தான் குத்தம் சொல்வாங்க… மாச சம்பளமா அதுவும் கவர்மென்ட் உத்தியோகமா கொண்டு வாங்க” – பாண்டியன்

“அப்படின்னா சீர் வரிசை நிறைய செய்யணும் தம்பி, கொஞ்சம் வயசு ஏறின ஜாதகம் தான் வரும், சரியா?” –தரகர்

“சீர் செனத்தி எவ்வளவு கேட்டாலும் செய்ய ரெடியா இருக்கேன், சின்ன வயசா பார்த்து, பொருத்தமான ஜாதகமா கொண்டு வாங்க” – பாண்டியன்

“பொண்ணு எங்கே வேலை பாக்குது தம்பி? அதையும் சொல்லனும், அந்த பொண்ணுக்கும் உங்களுக்கும் ஏதோ பிரச்சனைன்னு கேள்வி பட்டேன் உண்மையா அது?” காற்றுவாக்கில் தான் கேள்விப்பட்ட சேதியை கேட்டு வைத்தார் தரகர்.

“எவன் சொன்னான் அப்படி? பிரச்சனை இருந்தா கல்யாணம் பண்ணி வைக்க நினைப்பேனா? நீங்க உங்க வேலைய மட்டும் ஒழுங்கா பாருங்க, யார் என்ன சொன்னாலும் அவன என்கிட்டே கூட்டிட்டு வாங்க” என தரகரின் வாயை அடைத்து அனுப்பி வைத்தான்.

இங்கே இவன் சிவனியாவிற்கு பார்க்க, கோதைநாயகி தன் மகனுக்கு பார்க்க தொடங்கி இருந்தார். அங்கேயும் இழுபறி நிலை தான். எந்த எதிர்பார்ப்பும் வேண்டாம் என கூறியும் அவனுக்கு பெண்ணின் ஜாதகம் வந்தபாடில்லை. மகனிடம் இதை கூறினால் அதற்கும் எகிறிக் குதித்தான் பாண்டியன்.

“யாரை கேட்டு இப்போ பொண்ணு பாக்குறீங்கம்மா? என்னோட தொழிலுக்கு கல்யாணம் எல்லாம் செட் ஆகாது, எனக்கு நீங்க எல்லாம் இருக்கீங்க அதுவே போதும்… பசங்களும் நிறைய பேர் இருக்காங்க, அவங்கள பார்த்து பிரிச்சு விடவே எனக்கு பொழுது போயிருது. இதுல எனக்கு பொஞ்சாதி வந்து அவளுக்குன்னு என்னால நேரத்தை ஒதுக்க முடியாது. ஒரு தடவை அனுபவப்பட்டது போதும்.”

“அப்படி என்ன நடந்து போச்சுன்னு கல்யாணமே வேண்டாம்னு சொல்றே வருணா? ஒரு பொண்ணு தனக்கு பார்த்த பையன் கூட பார்த்து பேசணும்னு நினைக்கிறது தப்பா?” கோதைநாயகி.

“அது தப்பில்ல, ஆனா சாதாரணமா நாங்க பேசுறத கூட தப்பா நினைச்சது தான் தப்பு. இப்போ சொல்றேன் நல்ல கேட்டுக்கோங்கம்மா… நான் இருக்குற வரைக்கும் அத்தையும், சிவனியும் என்னோட பொறுப்பு தான். இத நான் அவங்ககிட்டே முன்னாடியே சொல்லியிருக்கேன், இதுல எந்த மாற்றமும் இல்ல. அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சாலும், அவளுக்கு ஒண்ணுன்னா நான் போய் நிப்பேன். இதையெல்லாம் எந்த பொண்ணும் விரும்பமாட்டா, அதுக்கு தான் கல்யாணமே வேண்டாம்னு சொல்றேன்” மகனின் விளக்கத்தை கேட்ட கோதை அம்மாவிற்கு தலையில் அடித்து கொள்ளாலாம் போல் இருந்தது.

“தெய்வமே இவன் பித்து எப்போ தெளிய? இவனுக்கு எப்போ நான் கல்யாணத்தை பண்ண?” என முணுமுணுக்க,

“இதுக்கு தான் சிவா பொண்ண கட்டிக்கோன்னு சொல்றேன்ம்மா கேக்குறானா இந்த பய? இருக்குறவங்கள எல்லாம் பைத்தியம் பிடிக்க வச்சு, இவன் என்னோமோ நல்லவன் மாதிரியே சுத்திட்டு இருக்கான். முத்தி போறதுக்குள்ள வேப்பிலை அடிச்சு கட்டிப் போடுங்க, அதுக்கு என்ன செய்யணும்னு யோசிங்க… அவ்ளோ தான் சொல்வேன்” ரவி கோதையம்மாளிடம் ஓதி விட்டு ஒதுங்கி விட்டான்.

விடாமுயற்சியாய் அலசி பார்த்து ஒரு வரன் பிடித்துப் போக, அந்த விவரத்தை செங்கமலத்திடம் சொல்ல வேண்டும் என்று  ராமலிங்கத்தை அங்கே போக சொல்ல, அவர் மறுத்து விட்டார்.

“பாண்டியரே! என் பேத்திக்கு பிடிச்ச பிறகு தான், நான் அவ அம்மாகிட்ட போய் சொல்லி, பொண்ணுக்கும் பிடிச்சு போச்சுன்னு அடிச்சு பேச சரியா இருக்கும். கனி பொண்ணு கிட்ட என் பேத்தி எங்கே தங்கி இருக்கான்னு கேட்டு, அவகிட்ட பையன் விவரத்த எல்லாம் சொல்லி, அவ சம்மதத்த கேட்டுட்டு வாங்க. அவ சம்மதத்த எனக்கு ஃபோன்ல சொல்லட்டும், அடுத்து எவ்ளோ வேகமா வேலை நடக்குதுன்னு பாருங்க” என வேண்டுமென்றே அவனை தள்ளி விடாத குறையாய் சிவனியாவை பார்க்க அனுப்பி வைத்தார்.

 

யாரும் யாரையும் அடக்காத போது அன்பானது அமைதியாய் இருக்கிறது. அடக்கப்பட்டு, மறுக்கப்பட்ட அன்பு அலறுகிறது, அழுகையோடு வாழ்கிறது. தன் அன்பினை வெளிப்படுத்தத் தந்திரங்களை கையாளுகிறது.

******************

error: Content is protected !!