13
காலை உணவுக்காகச் சஹானாவை அழைக்கப் பார்கவுடன் சென்றான் ஆதன்.
அறையில் ஜன்னலருகே நாற்காலியில் சாய்ந்து வெளியே தெரிந்த காலைநேர வெள்ளை மேகத்தை பார்த்துக்கொண்டிருந்தவள், ஆண்களின் வருகையில் நிமிர்ந்து அமர்ந்தாள்.
பார்கவ் அவளை அழைக்க, பசியில்லை என்று மறுத்தாள் “ஏண்டி கோவத்தை சாப்பாடு மேல காட்டுற?” அவன் முகம் சுருக்கினான்.
“கோவமில்லையே” இயல்பாகக் கட்டிக்கொள்ள நினைத்தவள், புன்னகைக்க,
ஆதன் கோவமாக “உன் வாய் சொல்றது பொய்யின்னு உன் கண்ணு சொல்லுதே. எங்ககிட்டயாவது சொல்லலாமே?” கேட்க,
கண்களில் நீர்சேர, அழகிய மேகங்கள் மூச்சு முட்டவைக்கும் புகை மண்டலமாகத் தோன்றியது.
“எனக்கு வெறுத்துப்போச்சு! அவமானமா இருக்கு…” என்றாள்.
பார்கவ் “நீயேண்டி அவமான படனும்? அந்த பரதேசிதான் அவமான படனும்!”
“அவன் முன்னாடி நான் எப்படி நிப்பேன்? யோசிச்சாலே உடம்பெல்லாம் ஒரு மாதிரி இருக்கு. ச்சீ” கத்தியவள் முகத்தை மூடிக்கொள்ள,
ஆதன் மனம் கலங்கியபோதும் நிதானமாகவே பேசினான். “உனக்கு பிரச்சனை தருண் இல்ல உன் பயம்! யாரும் நம்மளை நம்பலை, நம்ம கஷ்டத்தை கேட்க யாருமில்லைன்ற கோவம்.
ஒன்னு புரிஞ்சுக்கோ உன் சந்தோஷத்துக்குத் தேவையான ஒரேயொரு ஆள், நீ தான். சந்தோஷத்தை வெளியே தேடாத! மனசுல கண்டதையும் போட்டு உழட்டிக்காம இனியாவது வாழ ஆரம்பி சஹானா” என்றவன் அவள் அழுகையைக் கண்டு பொறுமையைக் கைவிட்டான்.
“இதுக்கு மேலயும் மாட்டேன், இப்படியேதான் இருக்கபோறேன்னா தாராளமா இரு. ஒன்னும் மட்டும் மனசுல வச்சுக்கோ, இதுனால வரப் பிரச்சனைக்கெல்லாம் நீ தான் முழு பொறுப்பு!”
அவள் முகத்தை மூடிக்கொண்டு பலமாக அழ, வெளியேற நடந்தவன், திரும்பி, “உனக்கு பத்து நிமிஷம் டைம் அதுக்குள்ள நீ முகத்தை அலம்பிகிட்டு கிழ வரலைனா நான் உண்மை எல்லாத்தையும் சொல்லவேண்டி வரும்!” எச்சரிக்கை செய்ய நிமிர்ந்தவள், கண்கள் விரிய “அப்பா!”என்று உரைத்தாள்.
“ஆமா உங்கப்பா கிட்டதான்” அவன் மறுபடி மிரட்ட,
“என்ன உண்மை?” சந்திரனின் குரலில் ஆதன், பார்கவை பார்க்க அவனோ அவனுக்கு வந்து நின்ற சந்திரனை பேயறைந்தாற்போல் பார்த்திருந்தான்.
மெல்லத் திரும்பி ஆதன் எப்படிச் சமாளிப்பதென்று யோசிக்க, அவரோ
ஆதனிடம், “உன்கிட்ட அப்புறம் பேசிக்கிறேன்!” சற்று கடுமையாகச் சொன்னவர் சஹானாவிடம் மிரட்டலாக,
“நேத்து ராத்திரி நீ தருணை தனியா வரச் சொன்னியா?” கேட்டார்.
“இல்…” சஹானா துவங்க,
“இரு சஹா!” இருவருக்கும் குறுக்கே வந்த ஆதன், “உங்க பெண்ணை இப்படி கேக்குறதுக்கு முன்னாடி உங்களை இந்த கேள்வி கேட்டீங்களா, சஹா அவனை வர சொல்லுவாளான்னு?” கேட்டதில் முகம் சிவந்தவர்,
“நான் உன்கிட்ட பேசல, தள்ளு!” என்றார் ஆவேசமாய்.
“முடியாது! என் கேள்விக்குப் பதில் சொல்லாம நான் உங்களை விடமாட்டேன். உங்க பெண்ணை பத்தி யார் என்ன சொன்னாலும் நம்பறீங்களே ஒரு தடவையாவது என் பொண்ணு இப்படி செய்வாளான்னு யோசிச்சு இருக்கீங்களா?” அவரைக் கண்ணோடு கண் பார்க்க,
“நம்பினேன் அவ எவன் கூடவே திரியறவரை. உன்கிட்ட இதெல்லாம் நான் ஏன் சொல்லணும், நீ இந்த வீட்டுக்கு விருந்தாளி அந்த எல்லைல இரு” மிரட்டியவர், “சொல்லு உன்னைத்தான் கேக்கறேன் கூப்பிட்டியா?” சஹானாவை முறைக்க,
அவளைத் தடுத்தவன் “நியாயத்தை யார் வேணும்னாலும் கேட்கலாம்.
நீங்க யோசிச்சாலே பாதி விஷயம் புரிஞ்சுக்குமே.
பலவருஷமா ஒருத்தனை காதலிக்கிறவ எப்படி தருணையும் விரும்பி தனியா வர சொல்லுவா?”
ஆத்திரத்தில் சந்திரன் யோசிக்கத் துவங்கியது அவர் நெற்றி சுருக்கத்தில் தெரிய, ஆதன் நம்பிக்கையுடன் தொடர்ந்தான்.
“அவன் ஸ்கூல் படிக்கும்போது சஹானா யாரையோ காதலிக்கிறதா சொன்னது நிஜமா, இல்ல இப்போ தன்னை காதலிக்கிறான்னு சொல்லுறது நிஜமா?
ஒரு நிமிஷம் யோசிச்சிருந்தா, ‘ஏன்டா பொய் சொன்னே’ன்னு அவன் சொக்காயை பிடிச்சு உலுக்கி இருப்பீங்க” என்றதில் எதையோ உணர்ந்தவர்
“உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” என்று புருவம் சுருக்க, அவனோ
“இன்னுமும் தெரியும்!” என்றான்.
“எப்படி? யார் நீ?” அவர் ஆவேசமாக,
“ஆறுவருஷத்துக்கு முன்னாடி சஹானா கூட பார்த்ததா தருண் சொன்ன அந்த பையன்… நான் தான்! சஹானாவோட முன்னாள் இந்நாள் எதிர்கால காதலன்!”
சந்திரன், “என்ன? என்ன?” பார்கவிடம், “என்னடா சொல்றான் இவன்?” என்று மூச்சுவாங்க,
உறைந்திருந்தவளோ “ஆதன்! ஏன்?” வேகமாக எழுந்து, “அப்பா ப்ளீஸ்…” என்று துவங்க,
அவளைத் தடுத்த பார்கவ், “ஆமா பா எனக்கும் தெரியும். இவ ஆதனை காதலிக்கிறது உண்மைதான்!” என்றான்.
“இல்ல பொய்!” கத்தியவர், “என் பொண்ணு…இருக்காது! இவன் பொய்தானேமா சொல்றான்? இதெல்லாம் உண்மையில்லைல?” குரல் நடுங்க அவர் மகளைக் கேட்க,
கண்களை மூடிக்கொண்டவள், ஒரு ஆழ்ந்த மூச்சுக்குப் பிறகு,
“ஆமா பா. நான் ஆதனை விரும்பறேன்!” என்றாள்.
இதை எதிர்பாராத சந்திரன் அருகிலிருந்த நாற்காலியில் தோய்ந்து அமர்ந்துவிட்டார்.
‘ஏன் நான் அப்படி சொன்னேன்?’ என்று ஆதனோ,
‘ஏன் அதை ஆதரித்தேன்’ என்று பார்கவோ யோசிக்க மறந்து சஹானா ‘ஏன் அப்படி சொன்னாள்?’ என்று குழம்பினர்.
உரத்த மௌனம் அறையை ஆட்கொண்டது.
மெல்ல எழுந்த சந்திரன் பொதுவாக, “சாப்பிட வாங்க… உங்க அம்மாவுக்கு இதெல்லாம் தெரிய வேணாம்” சொன்னவர் ஆதனிடம், “அப்புறம் ரூம்க்கு வா பா. பேசணும்” என்றுவிட்டுச் சென்றார்.
கோபப்படுவார், வீடே இரண்டுபடுமென்று நினைத்து உறைந்திருந்தவளுக்குத் தந்தையின் இந்த மௌனம் புதிது.
குழப்பத்துடன் திரும்பியவள், “ஏன்?” என்றதில் ஆண்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
அவர்கள் மௌனம் மண்டையை குடைய ஆதனிடம் “கேக்கறேன்ல இவளோ பெரிய விஷயத்தைக் காரணமில்லாம சொல்லி இருக்க மாட்டீங்க. ஏன் அப்படி சொன்னீங்க?” கேட்க,
“கோவத்துல…” என்றவனோ தரையைப் பார்க்க, சஹானாவின் மனம் பாரமானது.
பார்கவோ “ஆதன் பிளான் இல்லாம சொல்லி இருக்க மாட்டான்னு தான்” என்றதும் ஆதன் கண்களை மூடிக்கொள்ள, சஹானாவிற்குப் பற்றிக்கொண்டு வந்தது.
கைதட்டிச் சிரித்தவள்,
“வெரி குட்! ஆகமொத்தம் இதெல்லாம் பிளான்லேயே இல்ல. வாயில வந்ததை குருட்டாம்போக்குல அடிச்சு விட்ருக்கீங்க” பல்லைக்கடித்தவள், “அதெப்படிடா பிளான் இருக்குற மாதிரியே படம் காட்டினீங்க?” ஏளனமாகக் கேக்க,
ஆதன் “சரி நாங்க சொன்னது தப்புன்னு வச்சுக்கோ, நீ ஏன் என்னை உண்மையாவே காதலிக்கிற மாதிரியே சொன்ன? அதான் உண்மையோன்னு ஒருநிமிஷம் ஆடி போயிட்டேன் தெரியுமா?” கிண்டலாகவே சொல்ல,
“என்ன பண்ணறது? நீங்க சொன்னதுக்கு அவன் ஆமாஞ்சாமி போட்ட அப்புறம் நான் இல்லைன்னு சொன்ன உங்க ரெண்டுபேர் கதி என்ன ஆயிருக்கும்னு யோசிச்சீங்களா?
டின்கட்டியிருப்பார் எங்கப்பா டின்னு! பாவம் ரெண்டு கொழந்த பசங்க பொழச்சுபோகட்டும்னு சொன்னா, என்னமோ என்னையே கேள்வி கேக்குறீங்க?” கிண்டலாகச் சொன்னவள் முகம் மின்னல் வேகத்தில் வாடிச் சுதாரித்ததை பார்கவ் கவனித்துவிட்டான்.
யோசனையிலிருந்த ஆதன், “சரி விடு இதையும் யூஸ் பண்ணிக்கலாம்”
“என்னது?” சஹானா விழிக்க,
பிறகு பேசிக்கொள்ளலாம் என்று பார்கவ் ஆதனை அழைக்க, யாரும் அறியாமல் பீ யை எடுத்திருந்த ஆதன் வந்துவிடுவதாகச் சொல்லி நழுவினான்.
பார்கவ் தங்கையின் தலையை மென்மையாக வருட,
“என்ன?” தண்ணீர் நிரப்பப் பாட்டிலை எடுத்துக்கொண்டாள்.
“உனக்கு ஆதன பிடிக்கும், அவனுக்கு…” மேற்கொண்டு சொல்ல முடியாமல் தயங்க,
அவன் கன்னத்தைத் தட்டி மூக்கை பிடித்து ஆட்டி, “அட கேடி!” என்று கொஞ்சியவள், “அவருக்கு என் மேல அப்படியொரு எண்ணமே இல்லைனும் எனக்கு தெரியும்” என்றதில் பார்கவ் முகம் இறுக, சஹானா
“அய்யய்ய விடுடா. மொக்க வாங்குறது எனக்குப் பழகிப் போச்சு!” என்று புன்னகைக்க,
“நான் ஆதன் கிட்ட பேசறேன் கவலைப்படாதே” என்றான் ஆறுதலாக,
“நோ! தயவுசெய்து அதமட்டும் செஞ்சுடாத. காதலிக்கிற உனக்கு தெரியாதா, இரக்கத்துலயும் சிபாரிசிலையும் காதல் வராதுன்னு?” அவள் அதை விரும்பவில்லை.
“நீயாவது சொல்லேன்” அவன் வேண்ட, மறுத்தவள் நேரமாவதாகச் சொல்லி அவனை அழைத்துச்சென்றாள்.
தருண் இல்லாதது சஹானாவிற்கு நிம்மதியாக இருந்தது.
சமையல் காரர் உணவைப் பரிமாற, பூர்ணிமா, இளையவர்களிடம் மறுநாள் தருண் வீட்டினர் நிச்சயம் செய்ய வருவதாகச் சொல்ல, சஹானாவின் இதயம் இறுகியது.
அவரோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார், ஆதனயும் மேலும் இரண்டு நாட்கள் தங்கும்படி அவர் கேட்டுக்கொள்ள அவனால் மறுக்க இயலவில்லை. பூர்ணிமா சமையற்காரரிடம் மறுநாளுக்கான சமையல் பட்டியலைத் தரத்துவங்கிய சமயம், பார்கவ் ஆதனிடம் ‘பாத்துக்கலாம்’ ஜாடை செய்தான்.
சஹானா செய்ய வேண்டியதைப் பூர்ணிமா சொல்ல அவளோ முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் போகவே, “என்னடி நான் சொல்றது கேட்டுதா?” பூர்ணிமா குரலுயர்த்த, அவளோ சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட்டாள்.
ஆவேசமானவர், “நீ தலைகீழா நின்னாலும் இந்த கல்யாணாம் நடக்கும்!” கத்தினார்.
அதே கோவத்தில் “இந்த தருண் பய வேற எங்கயோ விழுந்து வாரி வச்சிருக்கான்!” பூர்ணிமாவும் எழுந்து சென்றார்.
பார்கவ், “ராத்திரி நடந்தது அம்மாவுக்கு தெரியாது, கொஞ்சம் ஹெல்த் ப்ராபளம். தருண் அவங்க வழி சொந்தம்வேற” சமாதானம் சொன்னான்.
முறைப்புடன் அமர்ந்திருந்த ஆதனுக்கோ சஹானாவின் மௌனம் எரிமலையின் அமைதியாய் தோன்றியது. மனம் தாங்காமல் அன்று மதியம் அவள் அறைக்குச் சென்றான்.
அதே ஜன்னலோர நாற்காலியில் முட்டியில் முகம் புதைத்து அமர்ந்திருந்தவளின் வலி தன்னுள்ளும் பரவ, அவள் தோளை மென்மையாகத் தொட்டான்.
“நீ எதுவும் கவலை படாத சஹா. நம்ம காதல் ஆழமானது அது இதுன்னு டைலாக்விட்டு, வேணும்னா மானே தேனே எல்லாம் போட்டு எப்படியான இந்த சம்மந்தத்தை நிறுத்திடலாம்” புன்னகைத்தவனைக் கண் இமைக்காமல் பார்த்தவள்,
“அப்புறம்?” என்றாள் வெறுமையாக.
“அப்புறமென்ன?”
“கல்யாணத்தை நிறுத்திட்டு, நம்ம விஷயத்தை மறந்துடுவாங்களா?”
“மறக்க வேண்டாமே. நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்” என்றான் புன்னகையுடன்.
“சரிவராது! வேண்டாம்!” என்றாள்.
ஆதன் அதிர்ந்தாலும் தனக்கே உண்டான குறும்புடன், “உனக்கு வேண்டாம்ன்னு நீ என்னை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நான் மட்டும் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்” தோளைக் குலுக்கினான்.
“எதாவது லாஜிக் இருக்கா இதுல?” அவள் முகத்திலிருந்த உணர்வில் சிரிப்பதை நிறுத்தி,
“அதெல்லாம் எனக்கு தெரியாது! நான் உன்னை கல்யாணம் செஞ்சுகிறதா முடிவு பண்ணிட்டேன். நீ இந்த நரகத்துல இருக்கிறதை என்னால இனிமே அனுமதிக்க முடியாது!” என்றான் தீர்மானமாக.
“யார் பெர்மிஷன் கொடுத்தா?” அவள் முறைக்க,
“யார் தரணும்?” அவனும் ஒற்றைப்புருவம் உயர்த்த,
“நான் தரணும்!” என்றாள் கிண்டலாக.
சிரித்துவிட்டவன், “விளையாடாத சஹா நான் சீரியஸா சொல்றேன். பார்க்கவுக்கு வாக்கு கொடுத்திருக்கேன்”
“என்னனு?”
“உன்னை அழைச்சுட்டு போகணும்னா கல்யாணம் செஞ்சுகிட்டு மனைவியா தான் கூட்டிகிட்டு போகணும்னு சொன்னான். அண்ணனா அவன் பார்வை சரிதானே. அதான் யோசிச்சு பார்த்து உன்னை நானே கல்யாணம் செஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதை வச்சுதான் உங்கப்பா கிட்ட காதலன்னு சொன்னேன்”
பொறுமையாக அனைத்தையும் கேட்டவள், “ஒரே ஒரு அரை விட்டதுக்கு வாழ்நாள் பூரா பிராயச்சித்தம் செய்யலாம்னு நினைக்கிறது கொஞ்சம் அதிகப்படியா இல்லையா?!”
மேஜையிலிருந்த எதோ புத்தகத்தை எடுத்துப் புரட்டிவிட்டு வைத்தவன், “பிராயச்சித்தம் இல்ல சஹா. யோசிச்சுதான் சொல்றேன்”
“நீங்க சொல்ற காரணம் சரி இல்ல ஆதன்!”
“அது மட்டும் காரணம் இல்ல சஹா. உண்மையை சொன்னா எனக்கு…” பார்கவின் வருகையில் பேச்சை நிறுத்தினான்.
“அப்பா கூப்படறார் வரியா? என்ன ஏதாவது பிரச்சனையா?” பார்கவ் இருவரையும் பார்க்க,
ஆதன், “இல்ல சும்மா பேசிகிட்டு …சரி வா”, சஹானாவிடம் “எதையும் குழப்பிக்காம நிம்மதியா இரு ப்ளீஸ். வந்து உனக்கு புரியவைக்கிறேன்” கிளம்பிச் சென்றான்.
‘காதல் கூட எதிர்பார்க்கல. அட்லீஸ்ட் உன்னை எனக்கு பிடிக்கும் அதுக்காக நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லி இருந்தா கூட சந்தோஷ படுவேன். ஆனா இந்த காரணத்தை என்னால ஒத்துக்குவே முடியல. இதுக்கு மேல என்னால பொறுத்துக்க முடியாது’ தீர்மானித்துக்கொண்டாள்.
ஆதன் சந்திரனிடம் தருண் அவர்களைப் பார்த்த ஒவ்வொரு நிகழ்வின் போதும் உண்மையாக நடந்தது என்னவென்று எடுத்துச்சொன்னான்.
“அப்போ நான் யாரோ அவ யாரோ. கோவத்துல தான் உங்ககிட்ட நாங்க பல வருஷம் காதலிக்கிறதா சொன்னேன்.
நான் அவளை இப்போ விரும்பறேன் அவளும் என்னை விரும்பறா. பெரியவங்க நீங்க புரிஞ்சுப்பீங்கனு நம்பித்தான் நான் எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்றேன். பார்கவ்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன். நான் கண்டிப்பா அவளை நல்லபடியா வச்சுப்பேன் அங்கிள்”
அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட சந்திரன் அமைதியாக நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடிக்கொள்ள, மெல்லிய ஏசி சத்தத்தில் அறையின் அமைதி அசாதாரணமாய் தோன்றியது.
சந்திரன் திடீரென்று துவங்கினார் “அவளுக்குத் தருண் சரியானவனா இருப்பான்னு நினைச்சேன் நேத்து ராத்திரி வரை.
இப்போ எனக்கு எதுவும் புரியல. நீ சொல்றது உண்மைனே வச்சுக்கலாம், தருண் ஏன் பொய் சொல்லணும் அவனுக்கு என்ன லாபம்?” நிமிர்ந்து அமர்ந்து தொடர்ந்தார்.
“இப்போ அவனுக்கு தப்பான நோக்கம்னு சொல்ற சரி. ஆனா பல வருஷம் முன்னாடி அவ பள்ளிக்கூடம் படிக்கும்போது ஏன் பொய் சொல்லிருக்கணும்?”
“அங்கிள்…அவன் அவளை ரொம்பவே…வதைச்சிருக்கான்” ஆதன் முகம் சுருக்க,
“அப்படி அவ சொன்னதே இல்லையே!” அவர் வாதாட,
“நாம சொல்ல விடலையே பா! “ குறுக்கிட்டான் பார்கவ், “அவ சொல்ல முயற்சி பண்ண போதும் கேட்டுக்கவே இல்லையே!
சிலதெல்லாம் ஆம்பளைங்க கிட்ட சொல்ல முடியாது. அம்மா அவகிட்டயும் பாசமா இருந்திருந்தா கண்டிப்பா சொல்லி இருப்பா.
எனக்கு ஒண்ணுதான் புரியுது, பகிர்ந்துக்க ஆளில்லாம அந்த சின்ன மனசு தன்னைக்குள்ள சுருங்கி, மன அழுத்தமே தீவிரமான ஃபோபியாவானதுக்கு முதல் காரணம் தருண், அடுத்தது நாம!
நல்லவேளை ஆதன் மேல இருந்த காதல் அவன் கிட்ட தன் வலிய சொல்ல வச்சுருக்கு. எனக்கே ஆதன் சொல்லித்தான்…”
ஆதன் காதில் மீதி எதுவும் விழவில்லை, ‘சஹா என்னை விரும்பறாளா! அதான் அப்படி சொன்னாளா?’ யோசனையில் ஆழ்ந்திருந்தது.
தந்தையும் மகனும் என்னவோ பேசிக்கொண்டிருக்க அவனோ கைகளைக் கோர்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
சந்திரனின் அழைப்பில் நிமிர்ந்தவன், அவரைக் குழப்பமாகப் பார்க்க,
“நீ சொல்றபடியே நீயும் என் பொண்ணும் ஆசைப்படறீங்கன்னு வச்சுப்போம். ஆனா நாளைக்கு சொந்தகாரங்க வராங்களே. இப்ப என்னனு சொல்லி இதை தட்டி கழிக்கிறது? வாக்கு தவறிட்டேன்னு நினைப்பாங்களே, குடும்ப மானம் என்ன ஆகும்? இவங்க அம்மா துடிச்சு போவாளே. அவ பலநாள் ஆசை இது! என்ன செய்யட்டும், நீங்களே சொல்லுங்கபா!” அவர் வலியுடன் கேட்க,
ஆழமாகச் சுவாசித்தவன், “நீங்க சொல்றதெல்லாம் நியாயம்தான். பெரியவங்களுக்காகக் குடும்பத்துக்காகக் காதலை தியாகம் செய்றோம்னே வச்சுக்கலாம் ஆனா அதுக்கு அவன் தகுதியில்லாதவன்…” தயத்துடன் பார்கவை பார்த்துவிட்டுத் தொடர்ந்தான்.
“நேத்து ராத்திரி நடந்தது ரெண்டாவது முயற்சி அங்கிள். ஆறு வருஷம் முன்னாடியும் தருண் சஹா கிட்ட…” சொல்லமுடியாமல் உதட்டைக் கடித்துக்கொள்ள, அதிர்ந்து அவர் மகனைப் பார்க்க, அவன் ஆமாம் என்றான்.
எத்தனை கொடுமைகளைத் தன் மகள் அனுபவித்தாள் யோசிக்கத் தெம்பின்றி துடித்துப்போனார். தள்ளாமையிலும் ஆத்திரமாக, “அந்த நாயை வீட்டுக்குள்ள சேர்த்ததற்கு…” அவர் எழ,
அவரைத் தடுத்த ஆதன், அவரைப் பொறுமையாக இருக்கும்படி வேண்டி, சில காகிதங்களை அவரிடம் தந்து, “உங்க கம்பெனிலதான் தருண் அண்ணா முன்னாடி வேலை பார்த்தாராமே…” என்று நிறுத்த,
தருணின் அண்ணன் அவர்களிடம் சில மாதங்கள் வேலைசெய்தபோது கையாடல் செய்ததையும் அதைக் கண்டுபிடித்துப் பார்கவ் சொன்னபோது பூர்ணிமா அதை மறைக்கும்படி கெஞ்சியதையும் சொல்லி, “தவணை முறைல அவன் மாசாமாசம் பணம் அனுப்புறான்” என்றான்.
ஒரே நாளில் சந்திரனால் இத்தனை ரகசியங்களைத் தாங்கமுடியவில்லை, தன்னை எதிர்த்துப் பேசாத மனைவியா, உறவினரின் துரோகத்தை மறைத்தாள்? நெஞ்சைத் தேய்த்துக்கொண்டு காகிதங்களை மேஜையில் வைத்தவர்,
“போதும் பா. இன்னும் வேற எதாவது இருந்தா என்கிட்டே சொல்லாதீங்க! பழைய சந்திரனா இருந்தா இப்போ நடக்கிறதே வேற, உங்களை மாதிரி எல்லாத்துக்கும் என்னால கையை நீட்ட முடியாது.
வயசாயிடுச்சு. உங்க தாத்தாக்கு இருக்கிற தெம்புகூட எனக்கு இல்ல. எவ்வளவோ யோசிக்க வேண்டி இருக்கு. எல்லாத்தையும் கட்டுப்பாடா வச்சுருக்கேன்னு நினைச்சேனே” அவர் குரலே அவர் உடைந்ததைக் காட்ட, அவர் கையை ஆதரவாக ஆதனும் பார்க்கவும் பற்றிக்கொண்டனர்.
ஆதனிடம் அவகாசம் கேட்டவர், “இத்தனை வருஷம் கட்டிக்காத்த கவுரவம். அவ்வளவு சுலபமா மாற முடியாதுப்பா இப்படியே பழகிட்டேன்” வலியுடன் சொல்ல, தலையசைத்தவன் அவர் கௌரவத்திற்கு பங்கம் வராதவண்ணம் இதைக் கையாளுவேன் என்று வாக்களித்தான்.
பார்க்கவும் “நாங்க பாத்துக்கறோம். ஆனா அம்மா…”
“அவளைப் பத்தி இப்போ பேசாத!” கடுகடுத்தவர், தன் அருகே மண்டியிட்டுப் பாசமாகக் கண்ணோடு காண்பது தைரியமாகப் பேசும் ஆதனை எப்படி தருண் தப்பானவன் என்றான்?
தருண் வந்த முதல் நாள் தன் அறைக்கு வந்தவன், “நான் விசாரிச்சேன் மாமா. அந்த ஆதன் அமெரிக்கால படிச்சவனாம்! நிறைய பொம்பளை சகவாசம். சூதாடுவானாம் அவனே சொன்னான். அப்பன் காசு கொடுக்க மாட்டேன்னு முரடு பிடிக்கிறார் போல.
சஹானாவை வளைச்சுப்போட்டா உங்க கடை, நிறைய நகை கிடைக்கும் இன்னும் ஷோக்கா வாழாலாம்னு கணக்குப் போட்டுத்தான் சஹானாவை வளைச்சுப்போட பாக்குறான். கோடீஸ்வரனா இருத்தலும் உங்க அளவுக்கு இருக்காது போல இருக்கு” என்றானே சண்டாளன்!
சந்தேகப்பட்டு விசாரிக்க ஆதனை தேடி அவன் அறைக்குச் சென்றபோது தானே சஹானாவின் அறையில் குரல்களைக் கேட்டு அவர் நுழைந்ததே.
சிலநொடி அவனைப் பார்த்தவர், ஆதனிடம் “என் பொண்ண பத்திரமா பாத்துப்பியா? இனிமேலாவது அவ சந்தோஷமா இருக்கணும். நான் ஒரு அப்பாவா என் கடமையை செய்யலை. கேப்பார் பேச்சைக் கேட்டு நானே அவளை இப்படி…” குரல் உடைந்து கண்கலங்க,
“நான் அவளை உயிரா பாத்துப்பேன் அங்கிள்! அவ முகம் வாடினா கூட என்னால தாங்க முடியாது. யாருன்னு தெரியாமலே அவளுக்காக ஆறுவருஷம் யோசிச்சவன், என் வாழ்க்கைல சரிபாதியா ஆனவளை கண்டிப்பா பாசமா பார்த்துப்பேன்.
நீங்க மனசார என்னை நம்பி சஹாவை கல்யாணம் செஞ்சு கொடுத்தா போதும்”
அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தவர், “ம்ம் உங்க வீட்ல பேசு, நான் என் அப்பா அம்மாகிட்ட பேசறேன். கொஞ்சம் மனசெல்லாம் பாரமா இருக்கு” என்றவர் “பார்கவ் இப்போதைக்கு உங்க அம்மாகிட்ட…”
“பாத்துக்கறேன் பா. இப்போதைக்கு அவங்க கிட்ட சொல்ற பிளான் இல்லை”
“தேங்க்ஸ் அங்கிள்” என்ற ஆதன் “நான் சஹானா கிட்ட நாளைக்கே சொல்லிக்கறேன். சில காரணத்துக்காக அவளுக்கு இன்னிக்கி இதை சொல்லாம இருந்தா நல்லது”
சரியென்று தலையசைத்தவர் எழுந்து செல்ல.
மறுநொடியே சந்தோஷம் பொங்க ஆதனை ஆரத்தழுவிக்கொண்டான் பார்கவ்.
ஆதன் மனதிலும் சொல்லத்தெரியாத நிம்மதி பரவியது. ஆனால் இதை எதையுமே அறியாத சஹானா?
“பார்கவ் ரூம்க்கு வா சிலதெல்லாம் ரெடி பண்ணி இருக்கேன் நீ சரி பார்க்கணும்” ஆதன் அழைக்க இருவரும் அந்த வேலையைத் துவங்கினர்.
பூர்ணிமா மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று தருணை உபசரிப்பது எரிச்சலூட்டிய போதும் ‘ஒரே நாள்’ பல்லைக் கடித்துக்கொண்டனர் பார்க்கவும் ஆதனும்.
இரவு சாப்பிட அமர்ந்த ஆதன், “சஹானா சாப்பிட்டாளா ஆன்டி?” என்று கேட்க,
பூர்ணிமா, “கூப்டு பார்த்துட்டேன் போன் கூட எடுக்க மாட்டேன்னு பிடிவாதம்” அக்கறையின்றி எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.
சாப்பிட மனமின்றி அவன் அவளுக்கு உணவு எடுத்துச்செல்வதாய் சொல்ல,
“பட்டினி கிடந்து சாதிச்சுக்க நினைக்கிறா. அதுக்கு மசியிர ஆள் நான் இல்ல”வேண்டா வெறுப்பாகப் பரிமாறித் தட்டை அவனிடம் தந்தார்.
“நான் வந்துடறேன் பார்கவ் நீ சாப்பிடு” ஆதன் சஹானாவின் அறைக்குச் சென்றான். வாசலில் நின்று, “ப்ளீஸ் சஹா கதவை திற. சண்டைபோடவோ அழவோ கூடத் தெம்பு வேணும்ல?”
பதில் இல்லாமல் போகவே, “நான் உள்ள வரேன்” கதவைக் கொஞ்சமாகத் திறந்தான்.
அறையில் அவள் இல்லை! தட்டை மேஜையில் வைத்துவிட்டு குளியலறை கதவைத் தள்ளிப் பார்த்தான். ம்ம்ஹும்.
‘ஒரு வேலை ஈவா கிட்ட?’ தன் அறைக்குச் சென்றான் அங்கும் இல்லை. தாத்தா பாட்டி அறை, பால்கனி, மொட்டைமாடி என்று எங்குமே அவளைக் காணவில்லை.
“பார்கவ் சஹா ரூம்ல இல்ல தோட்டத்துல இருக்காளா பாக்குறேன் நீ மத்த ரூம்ல பாரேன்” மெசேஜ் அனுப்பி வைக்க, பார்க்கவும் யாரும் அறியாமல் தேடினான்.
அவள் மொபைலுக்கு முயற்சித்தான். பதிலில்லை.
ஈவாவிடம் “சஹானா மொபைல் ட்ரேஸ் பண்ணு!” அவசரப்படுத்தினான், அதுவும் தேடி “வீட்ல தான் இருக்கு பாஸ்” என்றது. அவள் அறையில் மேசை டிராயரில் இருந்தது.
பார்கவிடம் விஷயத்தைச் சொல்ல, “ஒரு வேளை நிஜமாவே ஓடிப் போயிட்டாளா?” நெற்றியைப் பிடித்துக்கொண்டான்.
ஆதன் “ச்சே இருக்காது. அதுவும் இருட்டுல…வாய்ப்பே இல்ல” தனக்கும் சேர்த்தே சமாதானம் சொல்லிக்கொண்டான்.
“கோவத்துல எப்படி பயம் காணாம போச்சோ அதே மாதிரி விரக்தில போயிருக்கலாம்ல?”
சிசிடிவியை ஆராய்ந்தனர், மாலை முதல் ரீவைண்ட் செய்துபார்க்க, அதில் சஹானா வேகமாக வெளியேறுவதைக் கண்டு, பார்கவ் தலையைப் பிடித்துக்கொண்டான்!
“நிஜமாவே கிளம்பிட்டா பா! பார் வாட்ச்மேன் சாப்பிட போறதை கவனிச்சு கிளம்பி இருக்கா! கடவுளே ரெண்டு மணிநேரமாச்சே! வீட்லேந்து ஒரு பொண்ணு வெளில போனதுகூட தெரியாம இத்தனை பேர், இத்தனை வேலைகாரங்க!”
ஆதனோ எதுவும் பேசாமல் நின்றிருந்தான். நொடியினில் அவன் உலகமே உறைந்துவிட்டதே! பார்கவ் தோளைப் பிடித்து உலுக்க, நினைவிற்கு வந்தவன்,
“வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம், வா தேடுவோம்!” என்றான் கார் சாவியை எடுத்தபடி,
“தெரியாம எப்படி?” பார்க்கவும் தயாரானான்.
“ஆமா இவளோ நேரம் தெரியலையாம் இனிமே தான் தெரிய போகுது! எதாவது சொல்லிட போறேன். வா சமாளிக்கலாம்”
ஈவாவை அழைத்துக் கட்டளைகளைப் பிறப்பித்தான், ஆதன் காரிலும் பார்கவ் தன் பைக்கிலும் கிளம்பினர்.
நகர்ப்புறத்திலிருந்து சற்று ஒதுக்கமாக இருந்த இவர்கள் வீடிருந்த பகுதி, எட்டு மணிக்கெல்லாம் பரபரப்பை மூட்டைகட்டிவிட்டு அடர்ந்த இருளையும் அமைதியையும் போர்த்திகொள்ளுமிடம், இன்றோ ஞாயிறு கேட்கவே தேவையில்லை.
ஆதன், பார்கவ், ஈவா துணையுடன் பீ என்று திசைக்கொரு புறம் தேடல் துவங்கியது.
காரை ஓட்டியபடி சாலையை அலசிக்கொண்டிருந்த ஆதன் மனம் அமைதியின்றி துடித்தது.
எவ்வளவு தூரம் சென்றிருப்பாள்? அவசரத்திற்கு மொபைல் கூட எடுத்துச் செல்லவில்லை. “ஐயோ சஹானா! நீ இப்படி பண்ணுவேனா நான் உன்கிட்ட உங்கப்பா சம்மதித்ததைச் சொல்லி இருப்பேனே. பைத்தியம்! தலைப்பாடா அடிச்சுகிட்டேனே என்னை நம்புடின்னு”
அவ்வப்போது ஈவா பீயை வைத்து ஓவொரு இடமாகத் தேடித் தேடி அறிக்கை தர ஆதனுக்கு பயம் அதிகரித்துக் கொண்டே போனது.
தருண் கைவரிசையோ என்றால் வாய்ப்பில்லை, அன்றைய நிகழ்வுகள் எதுவும் அவனுக்குத் தெரியாது.
“எங்கடி போய்த் தொலைஞ்சே! சஹா!”