YALOVIYAM 13.1

YALOVIYAM 13.1


யாழோவியம்


அத்தியாயம் – 13

ராஜா வீடு

புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருந்தவன் கண்கள் கலங்கின. கவியுடன் பேசிய நினைவுகள் எத்தனையோ இருந்தாலும், ‘நான் உங்ககூட நிக்கிறேனே’ என கடைசியாக அவள் பேசியது, நெஞ்சத்தை நிந்தித்துக் கொண்டிருந்தது.

‘கவி’ என்று உதடுகள் முணுமுணுத்ததும், கண்ணீர் வடிய ஆரம்பித்தது.

அப்படியே அசையாமல் இருந்தவனுக்கு, அந்த விபத்துச் சம்பவம் கண்முன்னே வந்ததும், பெற்றவரை நினைத்தான்.

‘மினிஸ்டர் ஆகிறதுதான் உங்க கனவு. அது நிறைவேறதுக்கு முன்னாடி இப்படி ஆயிட்டே’ என்று வருந்தினான்.  மேலும், ‘அப்பா இப்படி-ன்னு தெரியாதா-ம்மா?’ என்று கேள்வியும் கேட்டுக் கொண்டான்.

மீண்டும் சிலபல நிமிடங்கள் அப்படியே இருந்தவன், வளர்த்தவரிடம் நடந்து கொள்ளும் முறையை நினைத்தான்.

‘தெரிஞ்சே உங்களைக் கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கேன்! இதுக்கு மன்னிப்பே கிடையாது. ஆனா எனக்கு வேற வழி தெரியலை’ என்று கவலைப்பட்டான்.

இப்படித் தனியே உட்கார்ந்து புலம்பிக் கொண்டிருந்தான். இன்று மட்டுமல்ல, அந்த விபத்திற்குப் பின்னான அவன் தனிமைப் பொழுதுகள் இப்படித்தான் கழிகின்றன.

அடுத்தநாள்

யாழ்மாறன் பேச்சின் எதிரொலியாக தமிழ்நாட்டின் சிற்சில இடங்களில், ‘நுழைவுத் தேர்வு முறைகேடு குற்றவாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என மாணவர்கள் போராட்டம் செய்தனர்.

அவர்களுக்கு ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆதரவாக இருந்தனர். இது இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்தது.

ஆறு நாட்களுக்குப் பின்

‘முறைகேட்டில் தொடர்புடையவர்கள் என்று விசாரணை ஆணையம் வெளியிட்டிருந்த பல்கலைக்கழக அலுவலர்கள் அனைவரும் பதவிநீக்கம் செயப்படுகிறார்கள்’ என்ற அறிவிப்பை பல்கலைக்கழக துணைவேந்தர் வெயிட்டியிருந்தார்.

இதற்குமேலும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் பல்கலைக்கழகம் மீது மாணவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை போய்விடும் என்ற காரணத்தினால், அவர் இந்த முடிவை எடுத்திருந்தார்.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து

‘குற்றவாளிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்பும், நடவடிக்கை எடுக்க ஏன் காலதாமதம்? ஏன் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை?’ என்று தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம்  

அன்றைய அலுவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அப்படியே இருக்கையின் பின்புறமாகச் சாய்ந்து கொண்டான்.

அன்று அந்த நிருபர் கேட்ட கேள்விகள்… அதற்கடுத்த நடந்த விவாதங்கள்… மாணவர்களின் போராட்டங்கள்… பல்கலைக்கழகத்தின் முடிவுகள்… இன்று நீதிமன்றத்தின் கேள்விகள்… என எல்லாம் வரிசையாக ஓட்டிப் பார்த்தான்.

ஆரம்பத்திலிருந்து இந்த முறைகேடு சம்பந்தமாக நடந்த அனைத்தையும் நினைவிற்குக் கொண்டு வந்தான். அது அவனுக்கு யாரோ தன்னிடம் உதவி கேட்டது போல்… யாரோ தன்னை முன்னிறுத்தியது போல்… யாரோ தனக்கு உதவி செய்வது போல்… தோற்றம் தந்தது.

சற்று யோசித்தவன், அலுவலக உதவியாளரை அழைத்து சில விடயங்கள் கூறி, “எனக்கு இந்த டீடெயில்ஸ் வேணும்” என கேட்டு அனுப்பினான்.

மூன்று நாட்கள் கழித்து…

ஏற்கனவே இந்த நுழைவுத் தேர்வு முறைகேடு வழக்கில் ராக்கெட் லீடரும், சில இடைத்தரகர்களும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மற்ற இடைத்தரகர்களைத் தேடிப் பிடித்து கைது செய்ய ஆரம்பித்தனர்.

மேலும், இந்த வழக்கை விசாரணை செய்ய முயற்சித்த ஆய்வாளர்கள் மற்றும் துணை ஆய்வாளர்களின் சாலை விபத்திற்குக் காரணமான 9 பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அன்றைய ஊடக விவாதங்கள், ‘இந்த கைது நடவடிக்கை தொடருமா?’, ‘அதிகாரத்தில் இருப்பவர்களை விட்டுவிட்டு, அடிமட்டத்தில் இருப்பவர்களை கைது செய்கிறார்களா?’ என்ற பொருள்களில் இருந்தன.

ஜெகதீஷின் விபத்து வழக்கு

முறைகேட்டிற்கும் ஜெகதீஷிற்கும் தொடர்பு இருப்பதால், அவரது விபத்து வழக்கு விசாரணை முக்கியமடைந்திருந்தது.

மேலும் ஒன்றரை வருடங்கள் பிறகு விசாரணையில் முன்னேற்றம் இருந்தது. விபத்து ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்த டேங்கர் லாரியின் ஓட்டுநர் பிடிபட்டிருந்தான். அவனிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தியாகுவின் விபத்து வழக்கு…

விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனருக்கு ஓரளவு காயங்கள் சரியானதால், அவனிடம் காவல்துறையினர் விசாரித்திருந்தனர். மேலும், அவன் கைகாட்டிய ஆட்களையெல்லாம் விசாரித்து வருகின்றனர்.

இரண்டு நாட்கள் கடந்திருந்த நிலையில்…

முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த பல்கலைக்கழக அலுவலர்கள் ‘ஸ்பெஷல் டாஸ்க் போர்ஸ்’ காவலர்களால் கைது செய்யப்பட்டனர்.  இன்னும் இரண்டொரு நாளில் முறைகேட்டிற்குக் காரணமான அமைச்சர்கள் கைது செயப்படுவார்கள் என்றொரு செய்தி உலாவியது.

இதற்குப்பின் என்ன நடக்கும்? சிபிஐ விசாரணை இருக்குமா? வழக்கின் தீர்ப்பு என்னவாக இருக்கும்? எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை இருக்கும்? என்ற தலைப்புகள் ஊடங்களின் பேசுபொருளாக இருந்தன.

மக்கள், மாணாக்கர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என அனைவர்க்கும் ஒரு திருப்தி வந்தது.

ஜெகதீஷின் விபத்து வழக்கு

டேங்கர் லாரி ஓட்டுனரைக் காவல்துறையினர் விசாரித்ததில் முன்னாள் அமைச்சர் லிங்கம் சொன்னதன் பேரிலே விபத்து நடந்திருக்கிறது என்று தெரிய வந்திருந்தது.

அவன் அப்பருவராக மாறி வாக்குமூலம் அளித்திருந்தாலும், மேலும் சில கைப்பேசி ஆதாரங்கள் கிடைத்தாலும் இந்த வழக்கு தொடர்பாக லிங்கத்தின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, அவரிடமும் விசாரணை நடைபெறும் என காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

தியாகுவின் விபத்து வழக்கு…

கார் ஓட்டுனர் கைகாட்டிய ஆட்களிடம் விசாரித்ததில், லிங்கம் மற்றும் ராகினி சொன்னதாலே தியாகு விபத்து நடந்திருக்கிறது என தெரிந்தது. மேலும் சில வலுவான ஆதாரங்கள் கிடைத்ததும், வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

அடுத்த ஐந்தாவது நாளில்

செங்கல்பட்டு ஆட்சியர் பங்களா

கைப்பேசியில் கவனத்தை வைத்துக் கொண்டிருந்த மகனிடம், “மாறன்! பிரேக்பாஸ்ட்-க்கு டைம் ஆகுது” என்று திலோ மெதுவாக அழைத்தார்.

“இதோ” என வந்து அமர்ந்தவனிடம், “கிளம்பலையா? ஃபோன்-ல என்ன பார்த்துகிட்டு இருக்க?” என்று கேட்டார்.

சாப்பிட ஆரம்பித்தவன், “சுடருக்கு கால் பண்றேன், அட்டன் பண்ணவே மாட்டிக்கிறா!? இடையிலே கொஞ்ச நாள் ஃபோன் பேசாம இருந்தேன்” என்று அப்பாவின் மறைவிற்குப் பின்னரான நாட்களைச் சொன்னவன், “பட் அதை அவ புரிஞ்சிப்பா. இப்போ ஏன் எடுக்க மாட்டிக்கிறான்னு தெரியலை” என்று சொல்லும் பொழுதே, “சார்” என்ற காசியின் குரல் முன்னறையில் கேட்டது.

உடனே, “இருங்கம்மா. காசிதான். பார்த்திட்டு வர்றேன்” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் எழுந்து வெளியே சென்றான்.

அவன் சென்றதும், ‘இன்னும் அந்தப் பொண்ண இவன் மறக்கலையா?’ என்று நினைத்த திலோ, மாறனின் கைப்பேசியிலிருந்து சுடரின் எண்ணை எடுத்துக் கொண்டார்.

இதே நேரத்தில் முன்னறைக்கு வந்தவன், “என்ன காசி?” என்று கேட்டதும், “சார்! இன்னைக்கு மினிஸ்டர்ஸ் அரெஸ்ட் இருக்கும்னு சொல்லி, உங்களுக்கு எக்ஸ்ட்ரா செக்யூரிட்டி அரேஞ் பண்ணியிருக்காங்க” என்றார்.

எட்டி வெளியே பார்த்தவன், “சரி வெயிட் பண்ணுங்க. வர்றேன்” என்று மீண்டும் உள்ளே வந்தவனிடம், “சாப்பிடு. காஃபி எடுத்திட்டு வர்றேன்” என திலோ எழுந்து சென்றார்.

அலுவல் பார்ப்பது, அம்மாவிடம் பேசுவது என்று இருந்தாலும், சுடருடன் பேச உள்ளுக்குள் தவித்தான். ‘ஒருதடவை ஃபோன் அட்டன் பண்ணு சுடர். எனக்கு உன்கூட பேசணும்” என வாய்க்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

கைப்பேசியை எடுத்து மீண்டும் ஒருமுறை அழைத்துப் பார்த்தான். இந்த முறையும் அழைப்பு ஏற்கப்படவில்லை. ‘ஏன்? என்னாச்சு சுடர்? என்ன நினைக்கிற?’ என்ற கேள்விகளுக்குளே குழம்பி நின்றான்.

நடக்கும் நிகழ்வுகளை நினைத்துப் பார்த்தவனுக்கு… இனிமேல் அவளிடம் பேச முடியாமலே போய்விடுமோ என்ற பயம் வந்தது.

‘அப்படி நடக்காது. பேசிடலாம். பேசிடலாம். எப்படியாவது பேசிடலாம்’ என்று உரு போட்டுக் கொண்டே இருந்ததால், ஏற்கனவே இதே போல் பயத்தை அனுபவித்த நாளை உள்ளம் நினைத்துப் பார்த்தது.

காதல் ஓவியம் அத்தியாயம் – 12

கல்லூரியில் செமஸ்டர் தேர்வுகள் நடந்து கொண்டிருந்தன.

அன்று மாறனுக்கு கடைசித் தேர்வு. இன்று சுடரிடம் பேசப் போகிறேன் என்ற எண்ணம் காலையில் இருந்தே அவன் நாழிகைகளை நாட்டியமாட வைத்துக் கொண்டிருந்தது.

தேர்வு முடிந்ததும் சுடரைத் தேடி, அவள் வகுப்பறை இருக்கும் கட்டிடத்திற்கு ஓடினான். சில மாணாக்கர்கள் நின்றனர். மாறன் கண்கள் சுடர் முகத்தை தேடின. அவள் அங்கில்லை என்பதைச் சற்று நேரத்தில் தெரிந்து கொண்டன.

உடனே, ‘எங்கே போனாள்?’ என தவித்து நின்றான். பின், ‘தேர்வு முடிந்ததும் விடுதிக்குச் சென்றிருப்பாளோ?’ என்ற கேள்வி வந்ததும், விடுதி நோக்கி ஓடினான்.

முதலில் தயங்கி… பின் அங்கிருந்தவரிடம், ‘சுடர் ஃபர்ஸ்ட் இயர் ஜர்னலிசம். அவங்களைப் பார்க்கணும்’ என்று சொல்லிவிட்டான். சில நொடிகளில் அந்த ஒருவர் வந்து, ‘அப்படி யாரும் ஹாஸ்டல்-ல இல்லை’ என சொல்லிச் சென்றார்.

‘சுடர் ஹாஸ்டல் கிடையாதா?’ என்று முணுமுணுத்தவன், அவள் வகுப்பருகே நின்றவர்களிடம் கேட்கலாம் என நினைத்து வகுப்பு நோக்கி ஓடினான்.

அங்கே இக்கணத்தில் யாரும் நிற்கவில்லை. ‘கிளம்பியிருப்பாங்களோ?’ என்ற கேள்வி வந்ததும், வாகன நிறுத்துமிடம் நோக்கிப் போகையில், “மாறன்! எங்க போற?” என்று ஆஷிக்கின் குரல் கேட்டது.

கேள்விக்குப் பதிலளிக்காமல் நின்றவன் அருகில் வந்து, “உன் அம்மா-அப்பா வந்திருக்காங்க” என ஆஷிக் சொன்னதும், “சொல்லவேயில்லை” என்று ஆச்சரியங்கள் அடங்கிய குரலில் சொன்னான்.

“சர்பிரைஸ்-ன்னு சொன்னாங்க. வாடா” என்றதும், வேறுவழியில்லாமல் பெற்றோர்கள் இருக்கும் இடத்திற்கு மாறன் வந்தான்.

மகனைப் பார்த்ததும், “மாறன்” என்று சந்தோஷமாக அழைத்தபடியே திலோ அவன் அருகில் வந்து நின்று கொண்டார்.

“எக்ஸாம் எப்படி எழுதியிருக்க?” என்று தியாகு கேட்டதும், “இதெல்லாம் கேட்கணுமா தியாகு?” என மகனின் கல்வித் தகுதியைத் தெரிந்த திலோ பெருமைப் பட்டுக்கொண்டார்.

புன்னகைத்தபடியே, “என்ன திடிர்னு வந்திருக்கீங்க?” என்று கேட்டான்.

“உன்னைக் கூட்டிட்டுப் போகத்தான். அன்ட் டெல்லி-ல ஒரு கோச்சிங் இன்ஸ்டிடியூட் பத்தி என் பிரண்ட் சொன்னான். ஸோ ஃபர்ஸ்ட் அங்கே போய் பார்க்கிறோம். அதுக்கப்புறம் ஜார்கண்ட் போகலாம்” என்றார்.

இதைச் சற்றும் எதிர்பாராதவன், சுடரிடம் பேச வேண்டுமென்ற தவிப்பில், “ஒரு ஒன் ஆர் டூ டேய்ஸ்-க்கு அப்புறமா போகலாமே-ப்பா?” என்று கேட்டுப் பார்த்தான்.

“ஏன்? ப்ரண்ட்ஸ் ஏதாவது பிளான் பண்ணியிருந்தீங்களா?” என ஆஷிக்கிடம் கேட்டதற்கு, “அப்படி எதுவும் இல்லையே அங்கிள்” என்று சொல்லி, ஆஷிக் மாறனைப் பார்த்தான்.

அவன் கல்லாய் நிற்பதைப் பார்த்த தியாகு, “இப்படி நிக்கிற மாறன்? போய் பிரண்ட்ஸ்-கிட்ட சொல்லிட்டு வா” என்றதும், “வா-டா” என ஆஷிக் அழைத்துச் சென்றான்.

விடுதிக்கு வரும் பொழுதில்… லக்கேஜ் எடுத்துக் கொள்ளும் பொழுதில்… நண்பர்களிடம் விடைபெறும் பொழுதில்… என ஒவ்வொரு நொடியும் சுடரை நினைத்துக் கொண்டே இருந்தான்.

அன்றே பேசியிருக்கலாமோ? என்று தோன்றியது. தொடர்பு கொள்ள கைப்பேசி எண்ணும் இல்லையே!? இனி எப்பொழுது பேச முடியும்? என்ற ஏக்கம் வந்தது. பேசவே முடியாமல் போய்விடுமோ? என்ற பயம் வந்தது.

கடைசியில் இன்று எதுவும் செய்ய முடியாது என்று புரிந்தது. வேறு வழியில் முயற்சிக்க வேண்டும் என்று மனமேயில்லாமல் பெற்றோருடன் கிளம்பிச் சென்றான்.

யாழோவியம் அத்தியாயம் – 13 தொடர்கிறது…

காஃபி கொண்டு வந்த திலோ, “என்ன மாறன் சாப்பிடலையா?” என்று கேட்டதும், நினைவிலிருந்து மீண்டவன், “இதோ-ம்மா” என ஏதோ கொஞ்சம் சாப்பிட்டு, காஃபியை குடித்துவிட்டுக் கிளம்பினான்.

போகின்ற மகனையே யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!