EVA20

ELS_Cover3-da64c8ad

20

திருமண ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடக்க, அலுவலகம், ஷாப்பிங் என ஆதன் சஹானா இருவரும் நிற்க நேரமின்றி ஓடிக்கொண்டிருந்தனர். விஹானை பற்றி யோசிக்கக்கூட நேரமின்றி விட்டால் போதுமென்று இரவு அலுப்புடன் ஆதன் உறங்கிவிட, ஈவா மட்டுமே அவ்வப்போது விஹானை கண்காணித்து கொண்டிருந்தது. 

அவர்களுக்கு போட்டியாக நாட்கள் ஓட, ஆதன் சஹானாவின் திருமண நாளும் வெகு வேகமாக வந்தது. 

பெரியோர்கள் நிச்சயித்தபடி அந்த சுபயோக சுபதினத்தில் சஹானா ஆதன் திருமண வைபவம்  இனிதே துவங்கி இருந்தது, 

மணமேடையில் மணமகனாய் அமர்ந்திருந்த ஆதன், ப்ரோஹிதர் சொல்லும் மந்திரத்தைத் திரும்பச் சொன்னபடி பார்வையை தன்னை சுற்றி ஓடவிட்டுக் கொண்டிருந்தான்.  

அந்த பிரசித்தி பெற்ற திருக்கோவிலின் மண்டபம் நிறைந்திருந்தது.

இருதரப்பு குடும்பத்தினரும் விருந்தினர் உபசரிப்பில் இருக்க, ஆங்காங்கே கூடிப் பேசிக்கொண்டிருந்த சிலரைத் தாண்டி ஆதனின் கண்கள் சஹானாவின் வரவுக்காகப் பார்த்திருக்க, நேரெதிரே சஹானாவின் தாத்தா பக்கத்தில் அமர்ந்திருந்த விஹான், ‘என்ன?’ என்று ஜாடையில் கேட்க, ஒன்றுமில்லை என்று கண்சிமிட்டி தலையசைத்தான். 

அவ்வப்போது மணமேடையிலிருந்த மகனைப் பார்த்திருந்த மீனாட்சியின் மனம், மகனின் கம்பீரமான அழகில் பெருமிதம் அடைந்தாலும், அவன் பிடிவாதத்தை மாற்ற முடியாமல் இப்படி எளிதாகத் திருமணத்தை நடத்தவேண்டி இருப்பதை நினைத்துக் கவலை கொண்டிருந்தார். நேரம் செல்லச் செல்லத் திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என மனதார இறைவனைப் பிரார்த்தனை செய்துகொண்டே வேலையைத் தொடர்ந்தார்.   

சஹானாவின் தாய் பூர்ணிமா கூட இன்று வழக்கமான கோவத்தை மறந்து, தன்னையும் மீறிய  மெல்லிய புன்முறுவலுடன் வலம்வந்தார்.  

ப்ரோஹிதர் மணப்பெண்ணை அழைத்துவரச் சொல்ல, ஆதிரா தோழியாய் உடன் நடக்க, பார்கவ் பிரத்தியேகமாக வடிவமைத்துத் தயாரித்துத் தந்த அழகிய அரக்கு நிற பட்டுப்புடவையில் எளிமையான அலங்காரத்துடன், மெல்லிய நாணம் அழகு சேர்க்க ஆதனின் அருகில் வந்து அமர்ந்தாள் மணப்பெண் சஹானா.  

அவன் அவளை ஆர்வத்துடன் பார்க்க அவளோ ஹோம குண்டத்தைப் பார்த்திருந்தாள்.

பொறுமை இழந்தவன் சில நிமிடங்கள் கழித்து ரகசியமாகத் தன் கால் முட்டியால் சஹானாவின் காலை லேசாக இடித்தான். அதில் முதல் முறை நிமிர்ந்து ஆதனின் முகத்தைப் பார்த்தவள் அவன் வசீகர புன்னகைக்குப் பதிலாக வெட்க புன்னகையை சிந்தி பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.  

அந்நாளின் பரவசத்தில், நிறைந்திருந்த மண்டபமும் அனைவரின் பார்வையும் சஹானாவை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை. அவள் எண்ணமெல்லாம் அவன் நிறைந்திருக்க, தன்னவனின் அருகாமையே அவளுக்குத் தைரியத்தைத் தந்திருந்தது.  

உற்றார் உறவினர் வாழ்த்த மங்கள வாத்தியங்கள் முழங்க, சஹானாவின் கழுத்தில் மங்கள நாணை பூட்டினான் ஆதன்.  

திருமணத்திற்கு பிறகான சடங்குகள் சம்பிரதாயங்கள்  என ஒவ்வொன்றாய் நடைபெற இருவரும் தனிமையில் பேசிக்கொள்ள, ஏன் பார்த்துக்கொள்ளக் கூடச் சந்தர்ப்பமின்றி பிசியாக அந்நாள் ஓடியது.  

இதற்கிடையில் அவர்கள் திருமணத்திற்காகத் தன் பயணத்தை ஒத்திவைத்திருந்த விஹானும் அன்று மாலையே கிளம்பிவிட, இரவு  புதுமண தம்பதிகள் படுக்கையறையில் பேசத் துவங்கும்பொழுது  நேரம் பன்னிரண்டை தாண்டி இருந்தது. 

ஆதன், தன் முன்னே புடவை தலைப்பைச் சுற்றிக்கொண்டே பதற்றத்துடன் அமர்ந்திருந்த சஹானாவை சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவன், லேசாகத் தொண்டையை செரும, அதில் நிமிர்ந்தவள் அவனைக் கேள்வியாய் பார்க்க, 

அவனோ கிண்டல் புன்னகையுடன், “இன்டெர்வியூவுக்கு வந்தப்போ எப்படி முழிச்சியோ அப்படியே  முழிக்கிற! ஃபர்ஸ்ட் நைட்ல வெட்கப்படலைனா கூட பரவால்ல இப்படி திருட்டு முழி முழிக்காம இருக்கலாமே”னு வம்பிழுக்க, 

“அதுவும் இதுவும் ஒரே மாதிரிதான் இருக்கு எனக்கு…” முணுமுணுத்துக்கொண்டாள். 

“கேக்கல!”நாற்காலியை விட்டு எழுந்த ஆதன் அவளை நெருங்கி அவள் முகத்திற்கருகே குனிந்து, “என்னமோ சொல்றே ஆனா எனக்கு கேக்கல. இப்போ என்ன செஞ்சுட்டாங்க உன்னைன்னு, இவ்ளோ டென்ஷன்?” கிண்டலும் மிரட்டலுமாக அவன் கேட்க, அவன் அருகாமையில் சிலிர்த்திருந்தவள், கன்னங்களில் பாய்ந்த ரத்த பிரவாகத்தின் சுவடுகள் மெல்லிய சிவப்பாய் தோன்ற இமைகளைப் படபடத்தவள், 

“டோன்நோ…பயமா இருக்கு…” திக்கினாள். 

“ரிலேக்ஸ் சஹா” அவள் தலையை மெல்ல வருடிக் கொடுத்தவன், “நான் தானே? ரிலேக்ஸ்!” என்றான் பரிவுடன்.  

“அதான் ட்ரை பண்றேன்…ஆனா…முடியல…” பதற்றத்தில் உதடு துடிக்க, தட்டுத் தடுமாறி, அவனை மீண்டும் நிமிர்ந்து பார்த்தவள், “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க…யூ ஆர் சோ பர்ஃபெக்ட்!” என்று கைகளைப் பிசைந்துகொள்ள, 

அவனோ, “நானா? பர்ஃபெக்ட்டா? சான்ஸே இல்ல!”  தோளைக் குலுக்கினான்.   

வெட்கம் மறைந்து அவனை முறைத்தவள், 

“நீங்க இப்படி பேசுறதுதான் கடுப்பா இருக்கு!  என்ன குறைச்சலாம் உங்களுக்கு? சும்மா சும்மா இப்படியே….யாருக்கு நீங்க எப்படியோ எனக்கு நீங்க ‘தி பெஸ்ட் அண்ட் பர்ஃபெக்ட்!’ தான்” படபடத்தாள்.    

“சரி சரி நான் தான் பெஸ்ட்! போதுமா?” உரக்க சிரித்தவன் அவள் கையைப் பற்றி, “நான் ரொம்ப சாதாரணமான பையன்தான் சஹா. உனக்கு தான் நான் ஏனோ ஸ்பெஷலா தெரியறேன். அம் ஜஸ்ட் என் ஆர்டினரி கய்!’ என்றதில், தன் கையை இழுத்துக்கொண்டவள், 

“பாத்தீங்களா மறுபடி” என்று முறைக்க, 

“உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளம் ஆக்காம விடமாட்ட போலிருக்கே!”

“உண்மையை தான் சொல்றேன்…” 

அவர்கள் செல்ல விவாதம் நீள, கடிகாரம் ஒன்று என்றது.

“சரி சரி சரி…நீ சொல்றதுதான் சரி!” என்று சரணடைந்தவன், “ராத்திரி பூரா இப்படி பேசிக்கிட்டே இருக்கணுமா இல்ல…” என்று உதட்டை விஷமமாகச் சுழித்து இழுக்க, 

அவன் திடீர் குழைவில், உள்ளர்த்ததை உணர்ந்துகொண்டவள், உடல் சட்டென சில்லிட, பனி சிற்பமாய் உறைந்து மௌனமாகிவிட, அதை சம்மதமென ஏற்றவனோ தன்னவளை முதல்முறை மென்மையாக அரவணைத்து, அன்பினால் அவளை மெல்ல மெல்ல இளகவைத்து, ஆட்கொண்டு தன்னுள் இணை உயிராய் இணைத்துக்கொண்டான்.  

விடியல் அழகாய் இதமாய் இருந்தது. தனக்கு போட்டியாக வானம் வெட்கி சிவந்ததைப் போல் உணர்ந்த சஹானா தன் அருகே நின்று கண்ணாடியில் தலைவாரி கொண்டிருந்த ஆதனை பார்க்க, கண்ணாடி வழியே கண்சிமிட்டிப் புன்னகைத்தவன், 

“என்ன காலங்கார்த்தாலேயே சைட் அடிக்கிறே?” வம்பிழுக்க,   

“என் ஆளு நான் சைட் அடிக்கிறேன்!” செல்லத் திமிருடன் சொன்னவள் எம்பி அவன் சிகையைக் கலைத்துவிட, அவளைக் கட்டியணைக்கக் கையை விரித்தவன், ஏனோ, “ஏய் ஈவா!” என்று உரக்க அழைத்தான். 

“குட் மார்னிங் பாஸ்! நான் வந்தது எப்படி தெரியும்?” திரைச்சீலை கீழ் இடுக்கிலிருந்து எட்டிப்பார்த்த ஈவா, சஹானாவை நோக்கி  “ஹாய் இடியட்!” என்றபடி அவர்களை நெருங்க,  

“என்ன இது ஸ்பை வேலை? எதுக்கு ஒளிஞ்சுக்கிட்டு” ஈவாவை கையிலெடுத்தவன் மிரட்ட,  

“நீங்க ரொமான்ஸ் மோட்ல இருக்குறப்போ நான் நேர வந்தா மேனர்ஸ் இல்லையே,  அதான் வரலாமா கூடாதான்னு தெரிஞ்சுட்டு வரலாம்னு பார்த்தேன் அதுக்குள்ள…ஆமா…எப்படி கண்டுபிடிச்சீங்க எஎபாஸ்?”   

“ம்ம் உங்கப்பன் ஆச்சே நான்!” என்றவன் ஈவாவை டொம்மென ட்ரெஸ்ஸிங் டேபிளில் வைத்து, “இனிமே சஹாவை இடியட்டுன்னு சொன்னே…அப்க்ரேட்ன்ற வார்த்தையை நீ மறந்திடவேண்டி இருக்கும். அம் வார்னிங் யூ!” என்றான் ஏனோ கோவமாய். 

“நோ நோ! ஏற்கனவே அழகு, இதுல பிளாக் மெயில் வேற பண்றீங்க… அப்க்ரேட்ல கைவைக்காதீங்க! கண்டிப்பா இனிமே அப்படி கூப்பிடல” 

“குட்!” என்றவன், பார்வை சஹானாவை நோக்கித் திரும்பும்போது சட்டென இளகி, “நான் அப்பா கிட்ட கொஞ்சம் பேசணும், நீ ஈவா கூட சாப்பிட போ. சரியா” என்று சென்றுவிட,  

அதுவரை காத்திருந்த ஈவா, “ஹேய் எனக்கு ப்ராமிஸ் பண்ண டௌரி எங்க?” என்று அதிகாரமாகக் கேட்க, 

“மறக்கலை யுவர் ஹைனஸ்!” என்று சிரித்தவள், “கீழ கேரேஜ்ல பெட் கேரியர்ல இருக்கு போய் பாரு” என்று தான் ஈவா கேட்டபடி எடுத்து வந்திருந்த உண்மை எலியின் இருப்பிடத்தைச் சொன்னாள். 

“கூல்! நீ சாப்பிட போ நான் என் பிரெண்டுக்கு ஹாய் சொல்லிட்டு வரேன்!” என்று ஈவா அடுத்த நொடியே ஓடியது. 

சிரித்து கொண்டவள் கீழ்த்தளத்திற்கு சென்றாள். 

***

திருமணம் முடிந்த மூன்று நாட்களில் சஹானாவின் பெற்றோரும், பார்கவும் திருமணத்தில் கலந்துகொள்ளாத தூரத்து உறவினர்களுடன் தம்பதிகளை பார்த்துவிட்டு, விருந்திற்கு அழைக்கவும் வந்திருந்தனர். 

சஹானாவின் பெற்றோருடன் ஆதன் பேசிக்கொண்டிருக்க, சஹானா, ஆதிரா, பார்கவ் மூவரும் ஆதிராவின் படிப்பைப் பற்றி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். மீனாக்ஷி பூர்ணிமாவுடன் கிச்சனில் பேசியபடி வந்தவர்களுக்கு சமையல்காரர் தயாள் செய்திருந்த பலகாரத்தை எடுத்து வைத்துக்கொண்டிருந்தார்.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்ற மனநிலையில் தான் மீனாட்சி பூர்ணிமா உறவு இருந்தது. ஏனோ ஒருவரை ஒருவர் உள்ளூர வெறுத்தபோது, மனக்கசப்பை மறைத்தபடி கடமைக்கு பேசிக்கொண்டிருந்தனர். 

“இவ்ளோ பெரிய வீட்ல ஒரே ஒரு சமையல்காரனும் வேலையாளும் எப்படி போதும்? மீதி வேலையெல்லாம் யார் பாக்குறது?” பூர்ணிமா சமைலயறையில் இருந்த ப்ரேக்பாஸ்ட் டேபிளில் அமர்ந்தபடி கேட்க, 

ட்ரேயில் கிண்ணங்களை வைத்துக்கொண்டிருந்த மீனாக்ஷி,  “நான் வீட்ல தானே இருக்கேன், ஆதன் ஹெல்ப் பண்ணுவான் இன்னும் தேவைன்னா ஒத்தாசைக்கு ஒண்ணுத்துக்கு எனக்கு ரெண்டு பொண்ணு இப்ப…”

“உங்க வீட்டுல வீட்டு வேலை செய்றதுக்கு தான் எங்க பொண்ண பெத்து வச்சுருக்கோமா?” பூர்ணிமாவின் கேள்வியில் அதிர்ந்து திரும்பியவர், 

“இது அவ வீடுதானே பா? நம்ம வீட்டு வேலைகளை நாம செய்றதுல என்ன தப்பு?” கோவத்தை கட்டுபடடுத்திக்கொண்டு கேட்க, 

“எங்க வீட்ல எல்லாம் தேவைக்கு மேலயே ஆளு போட்டிருக்கோம். நீங்களும் அந்தஸ்துக்கு குறையாதவங்கன்னு தானே எங்க பொண்ணை கொடுத்தோம்?”

‘நீங்க பெண்ணை பாத்துட்டுக்கிட்ட லக்ஷணம் தான் நாங்க பார்த்தோமே’ என்று சொல்ல வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கியவர், சமாதானம் சொல்லும் முன்னே, 

பார்கவ் சமையலறைக்குள் நுழைந்து, “அம்மா அப்பா கூப்படறார்” அழைக்க, பூர்ணிமா சென்றதில் தற்காலிகமாக ஆசுவாசமடைந்த மீனாக்ஷி, ‘அவ்ளோ சாதுவான பொண்ணுக்கு இப்படியொரு அம்மா!’ முணுமுணுப்புடன் பலகாரங்களுடன் ஹாலிற்கு சென்றார். 

விருந்துக்கு அழைப்பதைப் பற்றிய பேச்சு துவங்க, பூர்ணிமா வீலென்று எதையோ கண்டு அலற, அனைவரும் பதறி அவ்வழி பார்க்க, 

“எலி! எலி!” பூர்ணிமா காலை சோபாவின் மேல் இழுத்துவைத்து, கத்த, 

“எலியா?” என்று திரும்பிய ரகுநாத், “அது ஈவா. ரோ…” அவரைக் குறுக்கிட்ட மீனாட்சி, “அது பொம்மை எலி” என்று சமாளிக்க, 

ஆதனோ வேகமாக எழுந்து பார்க்க, ஈவா திருதிருவென விழித்தபடி சஹானாவிற்கும் ஆதிராவிற்கும் நடுவே அவர்கள் காதருகே சோஃபாவின் விளிம்பில் நின்றிருந்தது. 

ஈவாவை கீழே வரக்கூடாதென்று சொல்லச்சொல்லி ஆதிராவிடம் ஆதன் சொல்லியிருந்ததை அவள் சஹானாவிடம் சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றுவிட, சஹானா பார்கவ் கால் வந்ததில் அதைமறந்து கீழே ஓடிவந்திருந்தாள். 

ஆதன் ஆதிராவை முறைக்க அவளோ சஹானாவை முறைத்தாள். 

அதற்குள் பூர்ணிமா, “என்ன சொல்றீங்க சார் பொம்மையா?” சந்திரன் கேட்க, அனைவரையும் முந்திக்கொண்ட பார்கவ், 

“அது பொம்மை தான் பா. நம்ம ஆதன் தான் செஞ்சது அப்படியே தத்ரூபமா எலி மாதிரியே இருக்குல்ல? அது வெறும் பொம்மை தான் பா பொம்மை…என்ன ஆதன்?” என்று அவனைப் பார்க்க, 

பெருமூச்சுவிட்டவன் கோவத்தை கட்டுப்படுத்திக்கொண்டு, “ம்ம்…” என்றான். 

“என்ன கர்மமோ! எங்க மாப்பிள்ளை பெரிய கம்ப்யுட்டர் கம்பெனிய நிர்வகிக்கிறார்ன்னு ஊரெல்லாம் சொன்னேன்…பையன் என்னடான்னா சின்னப் பசங்க பொம்மை விக்கிறவனா?” பூர்ணிமா மீனாக்ஷியை பார்த்துக்கொண்டே நக்கலாகப் பேச, ஆதன் கோவத்தில் எழுந்துவிட, 

பார்கவ், “அம்மா இது சாதாரண பொம்மையில்ல மா.  இது பேசும். பாரேன்” பெருமையாகச் சொல்லி சஹானாவை நோக்கி அர்த்தமாகக் கையை நீட்ட, 

“நோ! சஹானா நோ!” கிசுகிசுப்பாய் கெஞ்சிய ஈவாவின் கெஞ்சலையோ, வேண்டாமென்று பயத்துடன் தலையாட்டி எச்சரித்த ஆதிராவின் ஜாடையையோ கவனிக்காத சஹானா, ஆதனின் பெருமையைப் பேச எண்ணி, 

“உன் பாஸோட மானத்தை காப்பாத்த நீ பேசித்தான் ஆகணும்” என்று கிசுகிசுத்து அதை பார்கவின் கையில் தர,  

பார்கவ், “ஹாய் ஈவா” என்றான். 

ஈவா ஆதனின் பார்வையைப் புரிந்துகொண்டு எகிறிக் குதித்தோட, அதை பிடிப்பதைப்போல் பாவனை செய்து ஆதன் பின்னால் ஓட, இளித்து சமாளித்த சஹானாவும் அவன் பின்னாலே உதவுவதைப் போல ஓட, 

“ரொம்ப நல்லது! பாருங்க உங்க மகளும் மருமகனும் செய்றத! கம்பெனியோட எதிர்கால முதலாளின்னு சொன்னாங்க ஆனா எலிபிடிச்சுட்டு இருக்கான், இதுல நீங்க பெத்ததும்லா கூடவே எலிபிடிக்க போகுது! கர்மம்!” சற்று உரக்கவே சந்திரனின் காதில் கிசுகிசுக்க, பதில் தர வேண்டாம் என்று மனைவியின் கையைப் பிடித்து அழுத்தினார் ரகுநாத். 

அதற்குள் ஆதன் ஈவாவை தன் அறையில் வைத்துவிட்டு, தன் பின்னாலே உள்ளே நுழைந்த சஹானாவை முறைத்துவிட்டு வேகமாக மீண்டும் ஹாலிற்கு செல்ல, சற்று தயங்கியவள் பின் சென்றாள். 

சஹானாவின் குடும்பத்தினர் செல்லும்வரை மௌனமாகப் புன்னகையுடன் பொறுத்திருந்த ஆதன், கார் கேட்டைத் தாண்டிய மறுநொடியே மனைவியையும் தங்கையையும் திட்டத் துவங்கினான். 

“இவளுக்குத்தான் அறிவில்லை உனக்கெங்கடி போச்சு! உனக்கு தெரியாது ஈவா பத்தி யாருக்கும் தெரியக்கூடாதுன்னு?” ஆதிராவை முறைத்தவன், சஹானாவிடம், 

“என்ன சிரிப்பு? உங்க அண்ணன் என்ன லூசா அவன்ட்ட சொன்னேன் தானே யாருக்கும் சொல்லாதேன்னு? இதுல உங்க அம்மா என்ன பேச்சு பேசறாங்க?” சிரிப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்த சஹானா, 

“சார்…சாரி…”என்று ஏனோ சிரிக்க, 

“என்ன சிரிப்பு?” ஆதன் குரலில் கடுமை கூட, 

“அந்த ஆண்ட்டி என் மருமகன் எலிபிடிக்கிறவனா ன்னு சொன்னாங்க அதுல தான்…ஹாஹா டேய் எலி பிடிக்கிறவன்னு தெரியாம போச்சே!” திரா சொல்ல சஹானா கட்டுப்பாட்டை இழந்து உரக்க சிரிக்க, 

“ஏன்டி உன் புருஷன உங்கம்மா என்ன சொன்னாலும் இப்படித்தான் சிரிப்பியா?” சஹானாவின் மீது அவன் பாய, 

“நீங்க கோவப்படும்போது ரொம்ப க்யூட்டா இருக்கீங்க…” என்று குனிந்துகொள்ள, 

“வா ரூம்க்கு, நான் இன்னும் எவ்ளோ கியூட்ன்னு காட்றேன்!” பல்லைக் கடித்தவன் முறைக்க, 

“டேய் அவங்க பேசுறதுக்கு அவளை ஏன்டா கடிக்கிற? நீ போமா” மகனை அடக்கி சஹானாவை அறைக்குச் செல்லச் சொன்னார் ரகுநாத். 

சஹானா சென்றவுடன் மகனை பேச தனியாக அழைத்துச் சென்றவர் கதவைத் தாழிட்டுக்கொள்ள, கோவமாக அமர்ந்திருந்த மீனாட்சியோ ஆதிராவிடம் பூர்ணிமாவை பற்றி புலம்ப துவங்கினார். 

ஆதனின் அறையில் ஈவாவுடன் அமர்ந்திருந்த சஹானா அதை வருடியபடி, “எங்கம்மாக்கு அறிவே இல்ல என்ன பேசுறதுன்னே தெரியாம கண்டதையும் பேசி இப்போ அவர் கோச்சுக்கிட்டார், ஆண்டி முகம் எவ்ளோ வாடிப்போச்சு தெரியுமா! ச்சே!” என்று புலம்ப, 

“என்ன செய்றது சஹா உங்கம்மா உன்னைமாதிரி தான் இருப்பாங்க? அவங்க மட்டும் புத்திசாலியா இருக்கணும்னா எப்படி?” ஈவா நக்கலாக சொன்னதில், அருகிலிருந்த காலி ஸ்டீல் வாட்டர் பாட்டிலைக் கொண்டு அதை அடிக்க, பாட்டில் சொட்டை விழுந்து இளிக்க,   

“எதை கொண்டு அடிச்சா தான் உனக்கு அடிபடும்?” வெறுப்பானாள்.

“இதுக்கு தான் சொன்னேன் நீ முட்டாள்னு. பாரு இன்னிக்கி கன்பார்ம்ஒரு விஷயம்” ஈவா அவள் மடியிலிருந்து எழுந்தபடி சொல்ல, 

“என்ன விஷயம்?” அவள் ஆர்வமாக, 

“ம்ம்…முட்டாள்தனம் உங்க பரம்பரை வியாதின்னு தான்! இட் ரான்ஸ் இன் யுவர் ப்ளட்!” ஆதன் பல்லைக்கடித்தபடி நுழைந்தான். 

“அது இப்போ தான் தெரிஞ்சதா? உனக்கும் உன் பாசுக்கும்? நான் முட்டாளுன்னு தெரிஞ்சு தானே கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க!” கடுகடுத்தவள் எழுந்து செல்ல, அவளைக் கண்டுகொள்ளாதவன், 

“வா ஈவா, நாம செய்ய வேண்டிது ஆயிரம் இருக்கு!” சஹானாவை ஓரக் கண்ணால் முறைத்தபடி ஈவாவுடன் லேபிற்கு சென்றான். 

இரவு உணவுக்குக் கூட வெளியே வராமல் அவன் கோவத்தை வெளிப்படுத்த, சஹானாவும் சாப்பிடாமல் படுத்திருந்தாள். ஆதிரா அழைத்தும் பலன் இல்லாமல் போகவே அடுத்து மீனாக்ஷியே அவளைத் தேடி வந்துவிட்டார். 

“அவன் வரலைனா என்ன நீ சாப்பிட வாயேன்” அவர் சஹானாவை அழைக்க, 

“இல்ல ஆன்டி பசியில்லை…”

“அவன் கோவத்துல எதாவது சொல்லி இருந்தா பதிலுக்கு நீயும் கோவப்படு. ஆனா அதை சாப்பாட்டுல காட்டாதமா. உங்கம்மா பேசினது எங்களுக்கும் வருத்தம்தான், எனக்கு ரொம்ப கோவமும் கூட. ஆனா அதுக்காக நாம ஒருத்தருக்கு ஒருத்தர் கடிஞ்சுகிட்டா சரி வருமா? வா வந்து சாப்பிடு, தெம்பா சண்டை போடு, நல்ல பொண்ணுல?” ஆதிராவுடன் அவளை அனுப்பிவைத்தவர் மகனை சமாதானம் செய்ய லேபிற்கு சென்றார். 

நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு ஆதன் டைனிங் டேபிளிலும் சஹானா சமையலறையிலும் அமர்ந்தபடி உணவைக் கொறித்தனர். 

இரவு வெகுநேரம் கழித்தே ஆதன் அறைக்குத் திரும்ப சஹானா உறங்கியிருந்தாள். 

பூர்ணிமாவின் பேச்சுக்கும் ஆதிராவின் தவறுக்கும் சம்பந்தம் இல்லாமல் இவளைக் கடிந்துகொண்டோமே என்று மனம் உறுத்த, அவளை லேசாகத் தொட்டு எழுப்ப முயற்சிதான். அவளோ ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். 

மறுபடி எழுப்ப மனமின்றி வேண்டா வெறுப்பாகக் குற்ற உணர்வுடன் இருந்தவன் உறங்கமுடியாமல் மீண்டும் லேபிற்கு திரும்பினான். நேரம் நள்ளிரவு இரண்டை தாண்டிச் சென்றுகொண்டிருக்க, கீழ் தளத்திலிருந்து கேட்ட பலத்த கூச்சலில் ஆதன் ஈவாவுடன் ஓடினான். 

அவன் அங்கே சென்ற பொது மீனாட்சியும் ஆதிராவும் சமையல் அறை வாசலில் சிரித்துக்கொண்டிருக்க, 

“என்ன? என்ன சத்தம்?” என்றபடி அவர்களைத் தாண்டி எட்டிப்பார்த்த ஆதன், கண்களை மூடி சிரித்தபடி உள்ளே நுழைந்தான். 

அங்கே சஹானா கையில் தோசை கரண்டியுடன் மேடைமீது முட்டியை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அவள் உடையிலிருந்து வழிந்த தோசை மாவு நீர் வீழ்ச்சிபோல் மேடை கடந்து தரையில் வழிந்தோட, சிரித்தபடி அவளை நெருங்கியவன் அவன் முகத்தில் தெரிந்த மெல்லிய நடுக்கத்தில், 

“ஹே” என்று அவளை அணைத்துக்கொண்டு முதுகை வருட, அதுவரை சிலைபோல் இருந்தவள், அவனை அணைத்துக்கொண்டு, 

“ஈவா ஈவான்னு நினைச்சு…” என்று நடுங்க, 

“நான் என்ன செஞ்சேன்” ஈவா அவளை நெருங்காமல் தூர நின்றபடி கேட்டது. 

“ஆனா அது நிஜ எலி ஆதன்” அவனை இருக்க கட்டிக்கொண்டாள். 

என்ன நடந்திருக்கும் என்று உணர்ந்தவன், “இட்ஸ் ஓகே ஓகே! ரிலேக்ஸ்” அவளை அலேக்காகத் தூக்கிக்கொண்டு கெஸ்ட் பாத்ரூமில் கொண்டு விட்டவன், வெளியே வந்தபோது, 

“அம்மா நம்ம வீட்ல எலி இருக்கா என்ன?” என்றான் சமையலறையை ஆராய்ந்தபடி, 

“அதெல்லாம் இல்லையே டா” மீனாட்சியும் தேட, 

“இருக்கே” என்றது ஈவா. 

“என்னது?” ஆதன் புருவம் சுருக்க, 

சஹானா சீதனமாகத் தனக்கென்று எலியொன்றைக் கொண்டுவந்ததைச் சொன்ன ஈவா, “ஒருவேளை நான் பெட் கேரியர் கதவை மூட மறந்திருப்பேன்…” என்று இழுக்க, கீழே இருந்த தோசை மாவு பாத்திரத்தை எட்டிஉதைத்த ஆதன், “ஸ்ஸ்ஸ்” என்று வழியில் காலை உதறியபடி, 

“எனக்குன்னு வந்து சேர்றதெல்லாம் முட்டா பீசுங்களா இருக்குங்க! ஃபூல்ஸ்!” விந்தியபடி கத்திக்கொண்டே செல்ல, 

சிரித்துக்கொண்டு ஆதிரா மீனாட்சியிடம், “நீ போ மா நான் க்ளீன் பண்ணிக்கிறேன்”  சிந்தியவற்றைத் துடைக்கத் துவங்க, 

“நான் கிளீன் பண்றேன்” இரவு உடையை மேலாகக் கழுவிக்கொண்டு வந்திருந்தாள் சஹானா.

அவள் இன்னும் மெல்லிய நடுக்கத்தில் தான் இருந்தாள், நீரின் குளிரா பயத்தில் மிச்சமா தெரியாமல் விழித்த ஆதிரா  சுத்தம் செய்ய சஹானாவிற்கு உதவினாள்.  

அடுத்த இரண்டு நாள் இவர்களின் கண்ணாமூச்சி தொடர, ஆதன் ஏன் தன்னிடம் முகங்கொடுத்துக் கூட பேசுவதில்லை என்ற எண்ணம் சஹானாவை வாட்டியது.  

திருமணத்திற்காக அவர்கள் எடுத்திருந்த ஐந்துநாள் விடுமுறை முடிய அலுவலகத்திற்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த ஆதன் சஹானாவைத் தேட, 

ஓடிவந்த ஈவா, “பாஸ் சஹா தனியா வந்துக்குறேன்னு இன்னிக்கி சொல்ல சொன்னாங்க, எதோ கொஞ்சம் வேலை இருக்காம் உங்கம்மா கூட” என்றது. 

“அப்படி என்ன வேலை? என் வைஃப் ஆகிட்டதால லேட்டா வர சலுகையெல்லாம் கிடையாதுன்னு சொல்லிவை. இனிமே இதை அலோ பண்ணமாட்டேன். எங்கம்மா கிட்டயும் சொல்லிடு என்றவன், புறப்பட்டான். 

சஹானா அலுவலகத்திற்கு வருவதற்கு மணி ஒன்பதரை ஆகி இருந்தது. அவளை அறைக்கு அழைத்தவன், 

“நீ எதுக்கு லேட்டா வந்தன்ற காரணமெல்லாம் எனக்கு வேண்டாம். ஆனா நீயும் என்னை மாதிரி ஜஸ்ட் ஒரு எம்பிளாய், எதாவது ஓவர் உரிமைல, இஷ்டத்துக்கு சலுகைகளை நீயா எடுத்துக்க கூடாது! புரிஞ்சுதா? நீயும் நானும் வீட்ல மட்டும்தான் ஹபாண்ட் வைஃப், இங்க பாஸ் செக்ரெட்டரி தான்” 

தன்னை ஏற்றெடுத்து பாராமல் எதையோ நோட்பேடில் எழுதியபடி அவன் எச்சரிக்க, கோவம் பொத்திக்கொண்டு வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டவள், 

“எஸ் பாஸ்!” என்று ஈவா போல் சொல்லிவிட்டு, ‘இவர் சொல்லலைனா மட்டும் டூயட்டா பாடிட போறாங்க! சிடுமூஞ்சி! என்ன பெரிய சலுகை எடுத்துகிட்டேனாம் சலுகை! ஒரு அரை மணிநேரம் லேட்டா வந்ததுக்கு இவ்ளோ சீன போட்டுக்கிட்டு’ முணுமுணுப்புடன் கோபினுக்குத் திரும்பினாள். 

சற்று நேரத்தில் மீட்டீங்கிர்க்காக ஆதன் செல்ல, அவன் சற்று தொலைவிலிருந்து பேன்ட்ரியை கடக்கும்போது, வழக்கம்போல அங்குக் கூடியிருந்த அட்மின் டிபார்ட்மென்ட் பெண்கள் தங்களுக்கும் சிரித்துக்கொள்ள,  

‘இதுக்கு தான் கல்யாணமானதை யார்ட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொன்னியா! அட கிராதகா’ மனதிற்குள் தொலைவில் செல்பவனை திட்டிக்கொண்டவள், அர்த்தமாகத் தலையசைத்துக்கொண்டாள்.   

மதிய உணவு வேளையில் வழக்கமாக வரும் உணவு வராமல் போகவே,  சஹானாவை அவன் விசாரிக்கச் சொல்ல, அதற்காகவே காத்திருந்தவள் போலப் பெரிய கேரியருடன் அவன் அறைக்குள் சென்றாள். 

அவளையும் அதையும் மாறி மாறி பார்த்தவன், ஒரு நொடி புருவத்தைச் சுருக்கி, விஷயத்தை யூகித்துக்கொண்டு வெளிக்காட்டா புன்னகையுடன் சாப்பிட அமர்ந்தான். 

அனைத்தையும் ஆசையாக இருவருக்கும் பரிமாறியவள், அவன் முகத்தையே பார்க்க, 

ஒரு வாய் சாப்பிட்டவன் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் வாராமல் போகவே, 

“இதெல்லாம் நான் தான் சமைச்சேன்” என்றாள் சற்று ஏமாற்றமடைந்த குரலில். 

“ஓஹ்” என்றவன், அவளை நிமிர்ந்து பார்த்து, “அதுக்கெதுக்கு அழுதுண்டே மன்னிப்பு கேட்கற? பரவால்ல நான் அட்ஜஸ்ட் பண்ணி சாப்பிட்டுக்கறேன் மா” என்றதில் பல்லைக் கடித்தவள், “கண்ல விரல் பட்டு தண்ணி வருது!” கடுகடுக்க, 

“ஓ” என்றவன் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டு முடிக்க, பொத்துக்கொண்டு வந்த கோவத்தை அடக்கிக்கொண்டவள். மாலை வீடு திரும்பியதும் மீனாட்சியிடம் புலம்பித் தள்ளினாள். 

“எவ்ளோ ஆசையா பரிமாறினேன். என்னை பார்த்து சமைச்சதுக்கு மன்னிப்பு கேட்கறியான்னு கேக்கறார் ஆன்டி!” அவள், மெத்தையிலிருந்த தலையணையை அடிக்க, துணிகளை அலமாரியில் அடுக்கிக் கொண்டிருந்தவரோ, 

“இவனுக்கெல்லாம் நல்ல புத்தி வந்து கல்யாணம் செஞ்சுவைன்னு சொல்றானேன்னு பார்த்தேன். விடு விடு அப்பாவை போலத்தான் பிள்ளை இருக்கான். நான் சொல்றபடி நீ செய்” அவர் பேசப் பேச மனதுக்குள் குறிப்பெடுத்துக் கொண்டாள்.