Nammula oruthi 4

 

நாட்கள் அதன் போக்கில் வேகமாக நகர, மூன்று மாதங்கள் கடந்தது. ஹாசினியும் பேக்கிங் க்ளாஸ், ஆன்லைன் ஜாப் என பிஸியாக இருந்தாள். வீட்டிலோ அவளுக்கு வெகு மும்முரமாக வரன் தேடி கொண்டிருந்தார்கள். வரும் வரன்களில் எதுவுமே கேசவனுக்கு திருப்தியில்லை. என்னவோ நாட்கள் போக போக…வரும் வரன்களின் சிறப்பும் குறைந்து கொண்டே போவது போல் இருந்தது அவருக்கு. தன் பிள்ளைகளுக்கு திருமணம் தள்ளி போவது, அவருக்கு பெரிய மனவருத்தத்தை அளித்தது.

லட்சுமியின் நிலையோ கேட்கவே வேண்டாம். பிள்ளைகள் பற்றிய கவலைகள் ஒருபுறம் துரத்த, இந்த பக்கம் அவரால் சுற்றத்தார், உறவுகளின் கேள்விகளை சமாளிக்கவே முடியவில்லை. கேள்விகளுக்கு பயந்து குடும்ப விழாக்களுக்கு செல்வதை கூட குறைத்துக் கொண்டார். அவருக்கு மன அழுத்தம் அதிகமாக தொடங்கியது. அது உடல் நிலையிலும் காட்ட ஆரம்பித்தது.

ஹரிஷ் இப்போதெல்லாம் தனக்குள்ளே ஒடுங்கி போனது போல் இருந்தான். அவன் முகத்தில் ஒருவித கவலை, பதற்றம் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது.

இவர்களுடைய வருத்தம் எல்லாம் தெரிந்தாலும், தெரியாதது போல் ஹாசினி நடந்து கொண்டாள். வெளிபார்வைக்கு சோகமாக இருப்பது போல் காட்டி கொண்டாலும், தனக்குள்ளே மகிழ்ந்து கொண்டாள். அதுவும் அவளின் தோழிகள் சில பேர், மாமியார் மாமனார் கொடுமை, கணவரிடம் சின்ன சின்ன விஷயத்திற்கும் அனுமதி பெறுவது, குழந்தை பெற்ற பின் இரவு உறக்கம் போச்சு என்றெல்லாம் இவளிடம் புலம்பும் போது, நல்ல வேளை…நாம மாட்டல என தனக்குள்ளே சந்தோஷம் அடைந்து கொள்வாள்.

திவ்யாவிடம் மட்டும் சுத்தமாக தொடர்பு இல்லை. திவ்யா தன்னுடைய திருமணத்திற்கு கூட இவளை அழைக்கவில்லை. அது ஹாசினியின் தன்மானத்தை சீண்டி விட்டது. திவ்யா வீட்டிலிருந்து பத்திரிக்கை வைத்து அழைத்ததால், கேசவன் மற்றும் லட்சுமி மட்டும் திருமணத்திற்கு சென்று வந்தனர்.

ஹாசினியை அவர்கள் அழைத்த போது, இல்லப்பா வேலை இருக்கு என மறுத்து விட்டாள். லட்சுமியோ மகளும் தன்னைப்போல் கேள்விகளுக்கு பயந்து ஒதுங்குகிறாள்…சீக்கிரம் எல்லாம் சரியாக வேண்டும் என மனதுக்குள் வேண்டி கொண்டார்.

அவரது வேண்டுதல் நிறைவேறும் காலம் வந்து விட்டதோ? என்னவோ?

அன்று ஒரு ஞாயிற்று கிழமை காலை வேளை…ஹாசினி லேட்டாக எழுந்து டைனிங் டேபிளுக்கு வந்தாள். அவளது அம்மா,அப்பா மற்றும் அண்ணா என எல்லாரும் சீரியஸாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். இவளை பார்த்தவுடன் “ஹாசினி வா! டீ குடி..அப்பா உன்கிட்ட கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசனும்” என கேசவன் அழைத்தார்.

“என்னவா இருக்கும்…அடுத்து எதுவும் மாப்பிள்ளை வீடு வருதா…போச்சு! அதை எப்படி நிப்பாட்டுறது” என தன்போக்கில் யோசித்து கொண்டே….அப்பாவின் அருகில் அமர்ந்தாள்.

“சொல்லுங்கப்பா!”

மௌனம் மட்டுமே…

அவரின் மௌனம் இன்னும் இவளை குழப்பியது.

தன் அண்ணாவை பார்த்தாள்…என்னாச்சு என்பது போல்….

அவன் இவளை பார்க்காமல் குனிந்து கொண்டான்.இது இன்னுமே இவளை குழப்பியது.

“அப்பா என்னாச்சு! இப்படி காலங்காத்தால மீட்டிங் போடுறீங்க…என்னைய கூப்பிட்டுட்டு சைலண்ட்டா இருக்கீங்க எல்லாரும்”

மௌனம் கலைத்து “ஹாசினி ! உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்…எங்க எல்லாருக்கும் இது முன்னாடியே தெரியும்…உன்கிட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்துல சொல்லலாம்னு தான் தள்ளி போட்டோம்…ஹரிஷும் உன்கிட்ட இதை மெதுவா சொல்லிக்கலாம்னு பிரியப்பட்டான்…ஆனா! இப்போ உடனே சொல்ற மாதிரியான ஒரு சூழ்நிலை”

புரியாத பாவனையில் அண்ணணை பார்க்க…அவனோ இவளை பார்த்தால் தானே? தலை நிமிரவே இல்லை அவன்…

கேசவனே தொடர்ந்தார்…

“ஹரிஷ், அவன் ஆபிஸ்ல கூட வேலை பார்க்குற பொண்ணை ஒன்றரை வருஷமா லவ் பண்றான்…லவ் பண்ணுறதுக்கு முன்னாடியே எனக்கும், அம்மாக்கும் அந்த பொண்ணு பற்றி எல்லாம் சொன்னான்….நான் பொண்ணையும், அவங்க குடும்பத்தையும் அப்பவே விசாரிச்சேன் சும்மா மேலோட்டமா…எல்லாம் திருப்தியா தான் இருந்துச்சு….இந்த காலத்துல வர காதலை உறுதியா எடுத்துக்க முடியாதுல..அதான் அவன்கிட்ட அப்போவே ணொன்னேன்…தங்கச்சி கல்யாணம் முடிஞ்சு உன் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்கும் போது, நீயும் இந்த பொண்ணும் அந்த நேரத்துலயும் உறுதியா இருந்தா…அந்த பொண்ணு வீட்ல நான் பேசுறேன்…இப்போதைக்கு இதை விடு…அந்த பொண்ணு கூட தனியா எங்கயும் சுத்த வேணாம்னு மட்டும் சொன்னேன்…அவனும் சரிப்பான்னு சொன்னான்…காலேஜ் படிக்கிற தங்கச்சிக்கிட்ட இதை சொல்ல அவனும் விருப்பப்படல…உன் அம்மா ஏன் நானும் கூட விரும்பல..அதான் எங்களுக்குள்ளேயே வச்சுகிட்டோம்”

பேச்சை நிறுத்திவிட்டு…மகள் முகத்தை பார்க்க….அவளோ சிலையென இருந்தாள்…..என்ன !! அண்ணா லவ் பண்றானா? என்ற அந்த ஒரு வார்த்தையிலேயே நின்றுவிட்டாள்….எப்படி இவனால இது முடியும்…அப்போ எனக்கு அப்புறம் தான் கல்யாணம்ன்னு ஊரெல்லாம்

சொல்லிட்டு இருந்தான்…ஊருக்கு முன்னாடியே பொண்ணை பார்த்துட்டு தான் இந்த டையலாக் விட்டானா? இவன் என்னைய ஏமாத்திட்டான்…என தாறுமாறாக யோசித்து கொண்டிருந்தாள். ஆனாலும் வெளியே முகத்தை உணர்ச்சிகளற்றது போல் வைத்து கொண்டாள்….

மகளிடம் பதிலில்லாமல் இருக்க… கேசவனே பேச்சை தொடர்ந்தார்

“உனக்கும் வரன் பார்த்துட்டு இருந்தோம்…பொண்ணு பார்க்க வரேன்னு சொல்றாங்க…ஆனா வரதுல்ல…ஏன்னே தெரியல…” மறைக்க முயன்றும் அவரது குரலில் வருத்தம் வெளிப்பட்டது. தொண்டையை செருமிக் கொண்டு தொடர்ந்தார்…

“அதுக்கப்புறம் வந்த வரன் எதுலயும் எனக்கு திருப்தியில்லை…இப்ப வெளியூரா இருந்தாலும் பரவாயில்லைனு ப்ரோக்கர்க்கிட்ட சொல்லியிருக்கேன்..ஆனா அண்ணாக்கு இப்போ ஒரு பிரச்சனை…அவன் காதலிக்கிற பொண்ணு வீட்ல இப்ப உடனேயே கல்யாணம் வைக்கனும்னு சொல்றாங்கலாம்…ஹரிஷ் உனக்காக தள்ளிப்போட்டான்…ஆனா அந்த பொண்ணுக்கும் வயசு ஏறிட்டே போதுன்னு அவங்க வீட்லயும் வற்புறுத்துறாங்க போல…இல்லனா வேற வரன் பார்க்கலாம்னு அந்த பொண்ணு வீட்ல பேசுறாங்க…அதான் அண்ணா என்ன செய்யறதுனு தெரியாம இருக்கான்…அவன் உனக்கு முன்னாடி கல்யாணம் பண்ணவும் விரும்பல…அந்த பொண்ணை விடவும் விரும்பல..அதனால தான் அவன் கொஞ்ச நாளா டென்ஷன்ல இருக்கான்…இப்போ என்கிட்டயும், அம்மாகிட்டயும் என்ன செய்யறதுனு கேட்கான்..?”

ஹாசினி கண்சிமிட்டாமல் அமர்ந்து இருந்தாள். கலங்க முயன்ற கண்களை முயன்று கட்டுக்குள் கொண்டு வந்தாள். மேலே சொல்லுங்கள் என்பது போல அப்பாவை பார்க்க…

“அப்பா என்ன முடிவு எடுத்து இருக்கேன்னு இப்போ எல்லாருக்கும் சொல்றேன்…ஹரிஷ்காக உனக்கு அவசரம் அவசரமா வரன் பார்க்க முடியாது…அவன் அவசரத்துக்காக உனக்கு பொருந்தாத வரனை என்னால உனக்கு பார்க்க முடியாது…அதே மாதிரி உனக்கு நல்ல வரன் அமையுற வரை இனி அவன் கல்யாணத்தை தள்ளி போடவும் முடியாது…உன் அண்ணன் உனக்காக எவ்வளவு நாள் வேணா வெயிட் பண்ணலாம்..ஆனால் அவன் லவ் செய்ற பொண்ணு வீட்ல வெயிட் பண்ண மாட்டாங்க…அதனால அண்ணாக்கு முதல்ல கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்…இப்போ நிச்சயத்தார்த்தம் வச்சு, ஒரு நாலு மாதம் கழித்து கல்யாணம் வச்சுக்கலாம்னு இருக்கேன்…அதற்கிடையில் உனக்கும் நல்ல வரனா வந்தா…சேர்ந்தே கல்யாணம் பண்ணலாம்..இல்லனா அண்ணி வீட்டுக்கு வந்த அப்புறம் தான் உன் கல்யாணம் நடக்கனும்னு விதியில இருந்தா அப்படியே நடக்கட்டும்”

இது தான் முடிவு என்பது போல பேசி முடித்தார்.

ஹாசினியின் மனதிலோ, அண்ணா எப்படி லவ் பண்ணலாம்…எப்படி எனக்கு முன்னாடி மேரேஜ் பண்ணலாம்..நான் தானே இந்த வீட்டுக்கு செல்லம் எல்லாமே…இன்னொரு பொண்ணு எப்படி இங்க வரலாம்…இல்ல இது முடியாது…அப்பாவும், அம்மாவும் எப்படி இதுக்கு சம்மதிக்கலாம்….யாரோ ஒரு பொண்ணோட அவசரத்துக்காக, எனக்கு முன்னாடி எப்படி கல்யாணம் பண்ணலாம்..? அப்போ நான் பார்த்து ஓகே சொல்லாம  இவங்களா பொண்ணை முடிவு பண்றாங்க.. அப்ப அந்த பொண்ணு எப்படி என்னை மதிப்பா நாளைக்கு…இல்ல இதை நடக்க விடக்கூடாது…எப்படியாச்சு தள்ளி போடனும்…இல்லனா நிப்பாட்டனும்”

மனம் தாறுமாறாக யோசிக்க வெளியிலோ உணர்ச்சிகள் காட்டாமல் முகத்தை வைத்து கொண்டாள். அவள் மறைக்க முயன்றும், முடியாமல் கண்ணீர் வெளிவர ஹரிஷ் தனக்குள்ளே புழுங்கிக்கொண்டான். அவனுக்கு தங்கையை பார்க்கவே தர்ம சங்கடமாக இருக்க, பார்வையை திருப்பி கொண்டான்.

அண்ணாவின் இந்த செய்கையை ஹாசினி தப்பாக எடுத்து கொண்டால்…”பாரு, ஒரு வார்த்தை பேசுறானா…கல்யாணத்துக்கு முன்னாடியே என்கிட்ட இருந்து என் அண்ணாவை பிரிச்சுட்டா…சும்மா விட மாட்டேன் அவளை” மனதுக்குள் சூழுரைத்துக் கொண்டாள்.

ஆனாலும் கண்ணீர் நிற்காமல் வர, ரூமுக்குள் ஓடிவிட்டாள். அவள் செய்கைகளை பார்த்த குடும்பத்தினருக்கு தர்ம சங்கடமாகவும், கஷ்டமாகவும் இருந்தது. ரூம் கதவை தட்ட போன லட்சுமியிடம் கேசவன், “ஹரிஷ் போய் பேசட்டும்…ஹாசினி புரிஞ்சிப்பா..” என்று சொல்லிவிட்டார்.

ரூம் கதவை ஹரிஷ் தட்ட , பதிலேயில்லை. அய்யோ! தங்கையை கஷ்டப்படுத்துகிறனோ என அவனுக்கு பலவித எண்ணங்கள் ஓட…விடாமல் தட்டி கொண்டிருந்தான்.

உள்ளே ஹாசினிக்கோ திவ்யாவின் வார்த்தைகள் ஓடியது..

“நாளைக்கே உன் அண்ணி வந்தா நிறைய மாற்றங்கள் வரலாம் ஹாசினி”…..

“ஷிட்! திவ்யா வாய் வச்ச மாறியே எல்லாம் நடக்குது”

கண்ணாடி முன் உட்கார்ந்து கொண்டு நகத்தை கடிக்க ஆரம்பித்தாள்…

மனதுக்குள்…“ சே…இப்படி அழுதுட்டு உள்ளே வந்தா தப்பால நினைப்பாங்க…இல்ல ! இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பார்ப்போம்…இந்த வீட்டில கல்யாணம் நடந்தா பர்ஸ்ட் எனக்கு தான் நடக்கனும்….நான் தான் இங்க எல்லாம்…இன்னொரு பொண்ணு இங்க வந்து அதிகாரம் பண்ணுறதை நான் அனுமதிக்க மாட்டேன்…நான் பார்த்து ஓகே சொன்ன பொண்ணைதான் இவன் கல்யாணம் பண்ணணும்”  உறுதியெடுத்துக் கொண்டாள்.

அழுத முகத்தை துடைத்து கதவை திறக்க, கவலையோடு ஹரிஷ்…”சாரி ஹாசினி..அண்ணா உன்னைய ஏதும் கஷ்டப்படுத்திட்டேண்ணா…அண்ணாக்கு சூழ்நிலை அந்த மாதிரி” மேலும் ஏதோ சொல்ல போக ஹாசினி நிறுத்தினாள்..

“நீ எதுக்குண்ணா சாரி கேட்க….நான் தான் கேட்கனும்…சாரிண்ணா! நல்ல விஷயம் பேசும் போது லுசு மாதிரி அழுதுட்டேன்..சாரி…அப்புறம் கங்க்ராட்ஸ் அண்ணா…அண்ணி பெயர் என்னது? எப்போ இண்ட்ரோ கொடுப்ப” முகத்தை இயல்பாக வைத்து கொண்டு கேட்டாள்.

எப்போதும் போல் அவளை பற்றி யோசிக்காமல்…அண்ணாவாகிய தனக்காக யோசிக்கும் தங்கையை பார்க்க…அவனுக்கு மனம் குளிரிந்தது…இவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு அழகாக புரிந்து கொண்டாள் என தங்கையை மனதுக்குள் மெச்சிக் கொண்டான்….இவள் நல்ல மனதுக்கு எல்லாம் நல்லபடியா நடக்கனும் என்று இறைவனிடம் வேண்டி கொண்டு…

“அண்ணி பேர் சிந்து, என் ஆபிஸ்லத்தான் வேலை பார்க்குறா…இன்னிக்கு ஈவ்னிங்கே போய் அவளை பார்க்கலாம்னு அப்பா சொல்றாங்க…சிந்துவும் உன்னைய பார்க்கனும்னு அடிக்கடி சொல்வா…உனக்கு கண்டிப்பா அவளை பிடிக்கும் பாரு…உனக்கு அண்ணியா,பெஸ்ட் பரெண்ட்டா அவள் கண்டிப்பா இருப்பாள்…”

‘ஓ! எல்லாம் முடிவு எடுத்தாச்சா…பார்ப்போம்’ மனதுக்குள் சொல்லி கொண்டு…”ஹைய் சூப்பர்ண்ணா…ஈவ்னிங் அண்ணியை பார்க்க போறேன்னா சூப்பர்…பர்ஸ்ட் டைம் அண்ணியை பார்க்க போறேன்.. நான் என்ன டிரெஸ் போடுறதுன்னு அம்மாட்ட கேட்க போறேன்” சொல்லிவிட்டு கிட்சனை நோக்கி ஓடினாள் பெண்.

ஓடும் தங்கையை மென்னகையுடன் பார்த்த ஹரிஷ், அப்பாவிடமும், அம்மாவிடமும் தங்கை புரிந்து கொண்டதை நிம்மதியோடு பகிர்ந்து கொண்டான். அவர்களும் அப்போது தான் அமைதியடைந்தார்கள். பின்னே! ஹாசினி அழுது ரூமுக்குள் ஓடிய போது, பெற்ற அந்த உள்ளங்கள் பதறிவிட்டன…இப்போது தான் அவர்களுக்கும் நிம்மதி….

பின் சிந்து வீட்டிற்கு செல்வதற்கு தேவையான ஸ்வீட்ஸ் வாங்க ஹரிஷ் வெளியே சென்றான்.

கிச்சனுக்குள் நுழைந்த ஹாசினியோ அம்மாவை தேடி அவர் அங்கு இல்லாமல் போக…”அம்மா” என சத்தமாக அழைத்தாள்.

“என்ன ஹாசினி” என்றபடியே வந்த அம்மாவின் முகத்தை ஆராய..அவளுக்கு அவர் சந்தோஷமாக இருப்பது போலவும் தெரியவில்லை…வருத்தமாக இருப்பது போலவும் தெரியவில்லை…

“என்ன ஹாசினி! கூப்பிட்டுட்டு அமைதியா இருக்க”

“மா! ஈவ்னிங் அண்ணியை பார்க்க, நான் என்ன டிரெஸ் போடலாம்…ஐடியா தாங்க”

சிரித்தபடியே “உன் இஷ்டம் தான் ஹாசினி…அந்த லாவண்டர் சுடிதார் வேணா போட்டுக்கோ”

“மா! அண்ணா லவ் பண்றேன்னு சொன்னப்போ உனக்கு கோவம் வரலியா…நம்ம வீட்டுக்கு வர மருமகளை நீ தானே முடிவு பண்ணணும்…உனக்கு அந்த மாதிரில்லாம் எதுவும் தோணலியா… ஐடி ஆபிஸ் வேலைக்கு போற பொண்ணுங்கலாம் ரொம்ப மார்டன்னா இருப்பாங்க…அண்ணி எப்படின்னு தெரியலியே”

மென்னகையுடன், “ என் மருமகள் அப்படின்னு வர உறவை விட அவன் மனைவிங்கிற அந்த பந்தம் தானே முக்கியம் ஹாசினி…அதனால அவனுக்கு பிடிச்ச பொண்ணு அவனே சொல்லும் போது எதுக்கு எனக்கு கோவம் வரனும்…அதோட அவன் அந்த பொண்ணுட்ட லவ் சொல்றதுக்கு முன்னாடியே அப்பாக்கிட்ட சொல்லிட்டான்…அப்பா விஷாரிச்சு நல்ல இடம் தான்னு என்கிட்டயும் சொன்னார் ஹாசினி…அதனால இதுல என்ன கோவம்…

உனக்கு வரன் பார்க்குறதுக்கு முன்னாடி அப்பா உன்கிட்டயும் கேட்டாங்க தானே…” கேள்வியோடு நிப்பாட்டினார்.

“ஆமாம்மா…அண்ணா செலக்‌ஷன் தப்பாகாது..என்ன அண்ணி வேலைக்கு போறாங்க…சோ! கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி நம்ம கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுவாங்க”

பதிலில்லாமல் போக…’ஓரேடியா சொன்னா வேலைக்காகாது…கொஞ்சம் கொஞ்சமாக செய்யலாம்” முடிவெடுத்தப்படி நகர்ந்தாள்.

மாலை சிந்துவின் வீட்டிற்கு ஓலா கார் புக் செய்து, இவர்கள் நால்வர் மட்டும் குடும்பமாக செல்ல, அங்கேயும் கூட்டம் இல்லை. சிந்து,அவள் தங்கை யமுனா, அவளது அப்பா நரசிம்மன், அம்மா தேவகி  என நால்வர் தான்.

வீட்டின் ஒவ்வொருவரையும் எடை போட்டப்படி இருந்தாள் ஹாசினி. ஹரிஷ்க்கு சிந்துவின் குடும்பம் நல்ல பரிச்சயம் போல..எல்லாரிடமும் இயல்பாக பேசி கொண்டிருந்தான். யமுனா காலேஜ் படிக்கின்றாள் போல.. ஹரிஷுடன் அவள் வார்த்தைக்கு வார்த்தை மாமா என்று பேச ஹாசினிக்கு அதையெல்லாம் தாங்க முடியவில்லை. என் அண்ணா! நீங்கள் எல்லாம் உரிமை கொண்டாடுறீங்க என மனதுக்குள்ளே சொல்லி கொண்டாள்.

மணப்பெண் சிந்துவை ஆராய மாநிறத்தில் களையாக இருந்தாள். சுடிதார் அணிந்து இருந்தாள். கையில் அழகான வாட்ச், காதில் ஒரு ஸ்டெட், கழுத்தில் மெல்லிய செயின் என அவளது இயல்பான தோற்றத்தில் கூட நேர்ததியாகவும், நிமிர்வாகவும் தெரிந்தாள். தனது அத்தை, மாமாவுடன் எந்த பதற்றமும் இல்லாமல் இயல்பாக பேசிக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் பார்த்த ஹாசினி “அதுசரி, என் அண்ணாவை வளைச்சு போட்டாச்சு…கல்யாணம் எப்படியும் உறுதினு பயமே இல்லாமல் இருக்கா பாரேன்” என தனக்குள்ளே புழுங்கி கொண்டிருந்தாள்.

ஹாசினிக்கு, தனக்கு அந்த வீட்டில் முக்கியத்துவம் தராதது போல இருந்தது. அவள் மனதில் குறை இருந்ததால்..பார்க்கும் எல்லா இயல்பான விஷயமும் அவளுக்கு தவறாகவே தோன்றியது. ஒவ்வொரு குறையாக தேடி கொண்டிருந்தாள். இதற்கிடையில்  அவ்வப்போது சிந்துவின் பார்வை இவளை தழுவி சென்றது. அந்த பார்வையின் அர்த்தம் இவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்னும் இவளும் சிந்துவும் நேரடியாக பேசிக் கொள்ளவில்லை. சிந்து தான் முதலில் பேச வேண்டும் என இவள் அமைதியாக இருந்தாள். அதை யாரும் கவனித்தது போல் கூட இல்லை. இதெல்லாம் சேர்த்து ஹாசினிக்கு இன்னும் கடுப்பேற்றியது.

சிந்துவின் பார்வையை கவனித்த ஹரிஷ் தான் நியாபகம் வந்தவனாக

“சிந்து…இது என் தங்கச்சி ஹாசினி…நீ அவளை மீட் பண்ணணும்ணு ஓரே சொல்லுவ தானே…இன்னிக்கி அவளும் உன்னைய பார்க்கனும்னு ஆசைப்பட்டா…ஃபைனலி நீங்க மீட் பண்ணிட்டீங்க”

‘இந்த அண்ணா…அவள் கிட்டத்தான் பேசுறான்…ஏன்! என்கிட்ட இதான் சிந்துனு சொல்ல வேண்டியது தானே’ மனதுக்குள் முறைத்தாலும் வெளியே சிரித்தப்படி

“நைஸ் மீட்டிங் யூ” என்றாள்.

சிந்து அவளை அமைதியாக பார்த்து பின், “ஹாய் ஹாசினி, நீங்க என்னைய இப்பத்தான் பர்ஸ்ட் டைம் பார்க்கிறீங்க… பட் நான் உங்களை பார்க்கிறது இது செகண்ட் டைம்” சிரித்தாள்.

“அப்படியா சிந்து, ஹாசினியை எங்க பார்த்த…அவள் வெளியே போகவே அவ்ளோ இஷ்டப்பட மாட்டா” என்றான் ஹரிஷ்.

குழம்பிய ஹாசினியும் “என்னைய பர்ஸ்ட் எங்க பார்த்தீங்க சிந்து அண்ணி”

“ஹ்ம்ம்…கொஞ்ச நாள் முன்னாடி பீனிக்ஸ் மால்ல ஒரு காபி ஷாப்ல பார்த்தேன்…ஒரு பொண்ணுக்கிட்ட ரொம்ப சீரியஸா பேசிட்டு இருந்தீங்க தானே…அப்போ தான்…” நிறுத்தி ஹாசினியின் முகத்தை ஏறிட… அது பயத்தில் வெளிறியது.

தன்னையும் அறியாமல் “வாட்?” என்று சத்தமாக கேட்க, அத்தனை பேரும் அவளை நோக்கினர்.