Nee Enaku Uyiramma–EPI 11

189613085_863389437581725_4803627891963141566_n-6c39d29f

அத்தியாயம் 11

மகனுக்கு சம்ஃபூ என அழைக்கப்படும் சீன பாரம்பரிய உடையை உடுத்தி விட்டாள் வேணி. மார்க்கேட் வெளியே பல கடைகள் போடப்பட்டு சீனப் பெருநாளுக்கு தேவையான பொருட்கள் விற்கப்பட்டன. அதில் சிவப்பில் இருந்த இந்த உடையை மகனுக்காக வாங்கி இருந்தாள் வேணி. அதோடு மாண்டேரின் ஆரஞ்சுகளையும் நேதனின் வீட்டுக்கு எடுத்துப் போவதற்காக வாங்கி இருந்தாள். இந்த ஆரஞ்சுகளைக் கொடுப்பது மகிழ்ச்சியையும் நல்ல நலத்தையும் கொடுப்பதாக பொருள்படும்.

இவளும் குளித்து விட்டு சிகப்பில் ஒரு சுடிதாரை அணிந்துக் கொண்டாள். சீனர்களுக்கு சிவப்பு வர்ணம் என்பது நெருப்பைக் குறிக்கும். அதாவது மகிழ்ச்சியையும் ஓங் என அழைக்கப்படும் நல்ல அதிர்ஷ்டத்தையும் வழங்கக் கூடியது இந்நிறம் என அன்று எல்லாமே அவர்கள் வீட்டில் சிவப்பு வர்ணத்தில்தான் இருக்கும். அதிர்ஷ்டம் ஓடி விடும் என அன்று வீட்டைக் கூட பெருக்க மாட்டார்கள் இவர்கள்.

நேதனிடம் போன் வந்ததும், வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள் வேணி. அவனும் ஜீன்ஸ் அணிந்து சிவப்பில் ஒரு ஷேர்ட் போட்டிருந்தான். சிவப்பில் வந்த இருவரையும் பார்த்தவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

“ரெண்டு பேரும் அழகா இருக்கீங்க!” மனந்திறந்து பாராட்டினான்.

சிரிப்புடன் அவன் பாராட்டை ஏற்றுக் கொண்டாள் இவளும். சின்னவனின் ஆ ஊ சத்தத்துடன் பயணம் செய்தார்கள் இவர்கள்.

மிஸ்டர் லிம்மின் பங்களா கோலாலம்பூரை விட்டு கொஞ்சமாய் தள்ளி அம்பாங் எனும் இடத்தில் இருந்தது. அந்த ஏரியாவில் பல பணக்காரர்கள் நிலம் வாங்கி தங்களுக்குப் பிடித்த வகையில் வீடு கட்டியிருந்தனர். நேதனின் வீட்டைப் பார்த்தே வாயைப் பிளந்தவள், இந்த வீட்டைப் பார்த்து பேச்சிழந்துப் போனாள்.

“ஏன்டா நேதன், இவ்ளோ வசதியா இருந்துமா கவர்மெண்ட் ஸ்கூலுல படிச்ச?” என கேட்டாள் வேணி.

அவன் வசதியானவன் என தெரிந்திருந்தாலும் இவள் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வசதிகளைக் கொண்டவன் என இப்பொழுதுதான் புரிந்தது.

“அப்பாவோட டிசிஷன் அது! எங்க படிச்சாலும் படிக்கற பிள்ளை நல்லா படிக்கும்னு சொல்வாரு! கவர்மேன்ட் ஸ்கூலுல படிப்பும் தரமானதாத்தான் இருக்குன்றது அவரோட வாதம்”

இவர்களை பாசமாக வரவேற்றனர் நேதனின் குடும்பத்தார்.

“கோங் ஷீ ஃபா ச்சாய்”(பெருநாள் வாழ்த்துக்கள். இங்குள்ள எல்லா இனத்தவருக்கும் இந்த வாழ்த்து தெரியும்) என வாழ்த்தினாள் வேணி.

அவர்களும் இவளை திரும்ப வாழ்த்தினார்கள். அங்கேயும் எல்லோரும் சிவப்பு வர்ண உடையில் இருந்தார்கள். பகலிலேயே நண்பர்கள் மற்றும் சொந்தம் எல்லாம் வந்துப் போயிருக்க, இப்பொழுது இவர்கள் மட்டும் குடும்பமாய் கொண்டாடினார்கள். நேட்டலி வேணியின் கையில் இருந்த கேஷவைத் தூக்க முயன்றாள். அவனோ முகத்தைத் திருப்பியது மட்டுமல்லாது கையை நேதனை நோக்கி நீட்டினான்.

“பார்டா, உன் மகன் என் கிட்ட வரமாட்டறான்! இந்த அத்தையைப் பத்தி நாலு நல்ல வார்த்தை சொல்லி வைடா அண்ணா! அடுத்த முறை வரமாட்டேன்னான், குண்டுக் கட்டா தூக்கிடுவேன்” என சொல்லி சிரித்தாள் அவள்.

வேணியின் முகம் மாறிப் போனதை பதட்டமாகப் பார்த்தான் நேதன். அதை ஜானகியும் கவனித்தார். வேணி இன்னும் சம்மதம் சொல்லவில்லை என இவன் வீட்டில் சொல்லி இருந்தாலும், தன் அண்ணாவை மறுக்க என்ன காரணம் இருந்து விடப் போகிறது என நினைத்து விட்டாள் நேட்டலி. அதனாலேயே எல்லாம் முடிவானதைப் போல பேசி சிரித்தாள்.

“வந்து பத்து நிமிஷமாச்சு! எங்களுக்கு குடிக்க எதாச்சும் எடுத்து வந்தியா நெத்திலி? போ போ, வேலையைப் பாரு” என இவன் விரட்ட அவனுக்கு நாக்கைத் துருத்திக் காட்டிவிட்டுப் போனாள் அவள்.

நேட்டலியின் கணவனும், பிள்ளைகளும் ஹால் சோபாவில் அமர்ந்திருந்தனர். தொலைக்காட்சியில் சீன பாடல் நிகழ்ச்சி எதுவோ போய் கொண்டிருந்தது. மிஸ்டர் லிம்மும் அங்கேத்தான் அமர்ந்திருந்தார். ஜானகி,

“நீ மனசுல ஒன்னும் எடுத்துக்காதே வேணி! இவ இப்படித்தான், அதிகப்பிரசங்கி! நீ ரிலேக்‌ஷா இரு! உன் சம்மதம் இல்லாம எதுவும் நடக்காது, புரியுதா?” என சொல்லி அவளை சோபாவில் அமர்த்தினார்.

கீழே இறக்கிவிட சொல்லி சின்னவன் திமிறிக் கொண்டிருந்ததால், தரையில் இறக்கி விட்டாள் வேணி. அவன் முட்டிப் போட்டு நகர்ந்துப் போய், மிஸ்டர் லிம்மின் காலை சுரண்டினான். அவர் புன்னகையுடன் அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டார். வீட்டில் இருந்த இரண்டு வாண்டுகளும் ரூமுக்கு ஓடிப் போய் அவர்களது விளையாட்டுக் குவியலையே அள்ளி வந்து கேஷவின் முன் கடைப்பரப்பினர். மிஸ்டர் லிம்மின் மடியில் இருந்து இறங்கிக் கொண்டவன், சின்னவர்களுடன் விளையாட ஆரம்பித்தான். நேட்டலியின் கணவனோ தன் மகன்களுக்கு ஊட்டிக் கொண்டிருந்த மேண்டரின் ஆரஞ்சு சுளையை சின்னதாய் பிய்த்து கேஷவுக்கும் ஊட்டினான்.

இதையெல்லாம் பார்த்த வேணிக்கு நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது. இன்னும் உறவாகிப் போகாத முன்பே எப்படி இப்படி அன்பு செலுத்துகிறார்கள் இவர்கள் என மனம் கசிந்துப் போனது. கிச்சனுள்ளே போய் தங்கையிடம் பேசிவிட்டு வந்த நேதன், வேணியின் அருகே வந்து அமர்ந்தான்.

“பலகாரம் சாப்பிடு வேணி! டின்னர் இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிடலாம்” என காபி டேபிளில் அடுக்கி வைத்திருந்த பலகாரங்களைப் காட்டினான்.

அங்கே நம் கை முறுக்கு, மிக்சர், அதிரசம், குக்கி வகைகள், சீன பலகாரங்கள் என அழகழகான கண்ணாடி ஜார்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றிலும் ஒன்றொன்று எடுத்து ட்ரை செய்துப் பார்த்தாள் இவள்.

“உங்க ஆண்ட்டி செஞ்ச முறுக்க, ஹேம்மர் வச்சி உடைச்சித்தான் சாப்பிடனும்! ஆனாலும் பெரிய மனசு செஞ்சு ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிடுமா! இல்லைனா நாலு நாளைக்கு, என் முறுக்கப் பத்தி இந்தப் பொண்ணு ஒன்னுமே சொல்லாம போய்ட்டான்னு பொலம்பிடுவா” என சிரிப்புடன் சொன்னார் மிஸ்டர் லிம்.

“என்ன சொன்னீங்க?” என கேட்டப்படியே கிச்சனில் இருந்து வந்தார் ஜானகி.

“நீ சுட்ட முறுக்க சாப்பிட்டா கிறுக்குப் பிடிக்கும்னு, ஐ மீன் அந்த சுவை நம்ம கிறுக்குப் பிடிக்க வைக்கும்னு சொன்னேன் டார்லிங்! வேற ஒன்னும் இல்லை! ஆமாத்தானமா?” என வேணியைத் துணைக்கழைத்தார் மிஸ்டர் லிம்.

“ஆண்ட்டி பொய் சொல்றாரு ஆங்கிள். உங்க முறுக்க ஹேம்மர் வச்சித்தான் ஒடைக்கனும்னு கிண்டலடிச்சாரு!” என போட்டுக் கொடுத்தான் மருமகன்.

மிஸ்டர் லிம் அசடு வழிய, ஜீஸ் கிளாசை வேணியிடம் கொடுத்த நேட்டலி,

“எங்கப்பாவையா மாட்டி விடறீங்க!” என கேட்டு,

“பாய்ஸ் அட்டாக்!” என குரல் கொடுத்தாள்.

வாண்டுகள் இரண்டும் பாய்ந்து உருண்டு தன் தகப்பனை ஒரு வழி செய்து விட்டனர். அவர்கள் ஏதோ விளையாட்டுக் காட்டுகிறார்கள் என கேஷவும் கைத்தட்டி சிரித்தான்.      

அவர்களின் அட்டகாசத்தில் இவளுக்கும் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. எவ்வளவு அழகான குடும்பம், தானும் இதில் ஓர் அங்கமாய் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என மனம் ஏங்க ஆரம்பித்தது. மெல்லத் திரும்பி பக்கத்தில் அமர்ந்திருந்தவனைப் பார்த்தாள் வேணி. அவனும் இவளைத்தான் பார்த்திருந்தான். அவள் பார்க்கவும் பார்வையை சட்டென திருப்பிக் கொண்டான் நேதன்.

மெல்ல நேதன் அருகே நகர்ந்து வந்த கேஷவ், அவன் கையில் இருந்த முறுக்கைக் கொடுக்க சொல்லிக் கேட்டான். இவன் வேணியிடம்,

“இதக் குடுக்கலாமா இருவருக்கு? கடிப்பாரா?” என கேட்டான்.

“கேஷவுக்கு எல்லாத்தையும் ட்ரை செஞ்சுப் பார்க்கனும்! குடுக்கற வரைக்கும் விடமாட்டான். இந்த மாதிரி ஃபுட் ஐட்டம்லாம் குடுக்கறதுக்கு அம்மாக்களுக்கே உரிய ஸ்டைல் ஒன்னு இருக்கு”

“என்ன ஸ்டைல்?”

நேதன் கையில் வைத்திருந்த பாதி கடித்த முறுக்கை எடுத்துக் கொண்டவள், அதை தன் வாயில் கடித்து, நொறுக்கி, தூளாக்கி, தன்னை யாரும் கவனிக்கிறார்களா என சுற்றி முற்றிப் பார்த்தாள். பின் தூளாய் போயிருந்த கலவையை தான் வாயில் இருந்து வெளியே எடுத்து மகனின் வாயில் திணித்தாள். அவனும் சப்புக் கொட்டி சாப்பிட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான்.

“எப்புடி!” என இவள் மிதப்பாய் கேட்க, நேதனுக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

மெல்ல அவள் புறம் நகர்ந்து மெல்லிய குரலில்,

“வேணி” என அழைத்தான் இவன்.

“என்ன?”

“நீ கடிச்சு அவங்களுக்குக் குடுத்தது சுகாதாரம் இல்லாத செயல் இல்லையா!”

“அதெல்லாம் ரொம்ப நெருங்கனவங்களுக்குள்ள ஷேர் செஞ்சிக்கலாம்! தப்பில்ல”

“அப்போ நான் உனக்கு ரொம்ப நெருக்கமா வேணி?”

“அப்படின்னு நான் எப்ப சொன்னேன்?”

“இல்ல, நான் பாதி கடிச்சு சாப்பிட்ட முறுக்க நீ உரிமையா எடுத்து சாப்பிட்டிட்டியே! அதான் கேட்டேன். என் கூட பகிர்ந்து சாப்பிட தயக்கம் காட்டாத நீ வாழ்க்கையைப் பகிர்ந்துக்க மட்டும் ஏன் இவ்வளவு யோசிக்கற?” என மகனுக்குக் கடித்துக் கொடுத்து மீதியை தானே சாப்பிட்டு முடித்திருந்தவளைப் பார்த்து கேட்டான் நேதன்.

“உணவும் உணர்வும் ஒரே தராசின் கீழ் வராதுடா” என்றவளின் குரல் கம்மியிருந்தது.

மிக மெல்லியக் குரலில் போய் கொண்டிருந்த இவர்களின் சம்பாஷணையை,

“வாங்க, பட்டாசு வெடிக்கலாம்!” எனும் குரல் கலைத்தது.

12 அடி நீளம் கொண்ட சிவப்பு வர்ண பாட்டாசு வெளியே பாம்பு போல வளைந்து நெளிந்து படுத்திருந்தது. இவர்களின் பெருநாளின் போது பட்டாசு வெடிப்பது எதற்கென்றால், கெட்ட ஆத்மாக்கள் சுற்றி இருந்தால் அதை விரட்டத்தான். வீட்டுத் தலைவரான மிஸ்டர் லிம் பட்டாசைக் கொளுத்தப் போக, மற்ற எல்லோரும் கொஞ்சம் தள்ளி நின்றுக் கொண்டார்கள். வேணியிடம் கேஷவை தூக்க சொன்ன நேதன், அவன் குட்டிக் காதுகளை இறுக்கப் பொத்திக் கொண்டான். மிஸ்டர் லிம் பட்டாசைக் கொளுத்த இடைவிடாது பத்து நிமிடம் படபடபடவென வெடித்து அந்த இடமே புகைமண்டலமானது.

பாதி பட்டாசிலேயே பயத்தில் கேஷவ் கத்திக் கதற ஆரம்பித்துவிட்டான். வேணி அவனை உள்ளே தூக்கிப் போக, நேதனும் அவளைப் பின் தொடந்தான். இருவரும் மாற்றி மாற்றி தூக்கி சமாதானம் செய்தும் அழுகை ஓயவில்லை. பட்டாசு வெடித்து விட்டு உள்ளே வந்தவர்களும், அவனை சமாதானப் படுத்த முயல அழுகை கூடியதே தவிர குறையவில்லை. வேணியின் முடியைப் பிடித்து இழுத்தான், கன்னத்தில் அடித்தான், குட்டிப் பல்லை வைத்துக் கடித்தான். வேணி பட்டப்பாட்டில் கேஷவை தூக்கிக் கொண்டான் நேதன். அவனுக்குத்தான் முடியில்லையே பிடித்து இழுக்க.

“என் ரூம்ல வச்சிருக்கேன் கொஞ்ச நேரம்!” என இங்கே வந்தால் அவன் தங்கிக் கொள்ளும் ரூமுக்கு தூக்கிப் போய்விட்டான் கேஷவை.

“அவன் சமாதானப்படுத்திடுவான்! நீ வாம்மா” என வேணியை கிச்சனுக்கு அழைத்துக் கொண்டார் ஜானகி.

பெண்கள் மூவரும் பேசியபடியே, சமைத்த ஐட்டங்களை மேசையில் அழகாய் அடுக்கி வைத்தனர். வீட்டு ஆண்கள் மேசையை செட் செய்ய உதவினார்கள். வாண்டுகள் இரண்டும் கூட டேபிள் மேட் வைத்து தட்டை அழகாய் வைத்தனர்.

உணவு வகையும் கலவையாகத்தான் இருந்தன. இடியப்பம், கோழி குழம்பு, சாதம், சிக்கன் சூப், சீனர்களின் காய்கறியான பக் சோய், ஸ்டீம் செய்து சாய் சாஸ் ஊற்றிய மீன் இப்படி பல வகை உணவுகள் மேசையை நிறைத்திருந்தன. உணவு ரெடியாக இருக்க, ரூமுக்குப் போன இருவரையும் இன்னும் காணவில்லை.

“வேணி நீ போய் எதாச்சும் தேவையான்னு பார்த்துட்டு, சாப்பிட அழைச்சிட்டு வாம்மா” என சொன்ன ஜானகி சின்னவர்களில் ஒருவனை ரூம் காட்ட அவளோடு அனுப்பி வைத்தார். மாடியில் இருந்த ரூமைக் காட்டிவிட்டு ஓடிவிட்டான் அந்த குட்டி.

இவள் மெல்ல தட்டிவிட்டு கதவைத் திறந்தாள். அங்கே தூரமாய் கட்டிலில் நேதன் சாய்ந்துப் படுத்திருக்க, அவன் நெஞ்சில் கண்ணீர் கன்னங்களுடன் உறங்கிக் கொண்டிருந்தான் கேஷவ். எங்கே தான் அசைந்தால் விழித்து விடுவானோ என ஆடாமல் அசையாமல் படுத்திருந்தான் நேதன். அந்தக் காட்சி இவள் நெஞ்சில் அழியா ஓவியமாய் பதிந்துப் போனது. சின்னவனின் ஏறி இறங்கும் முதுகைப் பார்த்தப்படியே படுத்திருந்தவன் கண்களில் அவ்வளவு அன்பு. அந்த அன்பு இவள் நெஞ்சை ஆழமாய் அசைத்தது.

மெல்ல இருவரையும் நோக்கி நடந்தாள் வேணி. அப்பொழுதுதான் அவளை கவனித்தவன் கண்களில் மின்னல் வெட்டியது. உதட்டில் விரலை வைத்துப் பேசாதே என்பது போல சைகை காட்டியவன், பக்கத்தில் இருந்த நாற்காலியைக் காட்டினான் அமர சொல்லி. ஒன்றும் பேசாமல் அமைதியாய் அமர்ந்தாள் இவள். தனியறையில் தூங்கிக் கொண்டிருக்கும் மகனுடன், ஓர் ஆண்மகனோடு தனித்திருப்பது ரொம்பவுமே இண்டிமெட்டான உணர்வைத் தோற்றுவித்தது இவளுக்கு. அவனைப் பார்க்காமல், ரூமை சுற்றி கண்களை சுழற்றினாள். அவன் பார்வையோ வேணியின் முகத்திலேயே நிலைத்திருந்தது. இவள் திரும்பிப் பார்க்கும் போது வேறு புறம் திரும்பிக் கொண்டான் அவன். இதுவே தொடர, இவளுக்கு ஒரு வித கூச்சத்தில் முகமெல்லாம் சூடாகி சிவந்தது.

சட்டென எழுந்துக் கொண்டவள்,

“நான் போறேன்” என முனகி விட்டு ரூமை விட்டு வேகமாய் வெளியேறினாள்.

அவள் கீழே இறங்கிய பத்து நிமிடங்களில் விழித்திருந்த கேஷவுடன் டைனிங் ஹால் வந்தான் நேதன். அவர்களுக்காக காத்திருந்தவர்கள் இரவு உணவை ஒன்றாக சாப்பிட ஆரம்பித்தார்கள். கேஷவை முன்பு இந்த வீட்டு வாண்டுகள் பயன்படுத்திய ஹை செரில் அமர்த்தி, அவன் சாப்பிடக் கூடிய உணவு வகைகளை பெரிய ப்ளாஸ்டிக் தட்டில் போட்டுத் தந்தார் ஜானகி.

“அவரே கீழ மேல சிந்தி சாப்பிடட்டும்! அப்போத்தான் வயிறு நிறையும்” என்றார்.    

வேணியின் அருகே அமர்ந்திருந்த நேதன்,

“இது சாப்பிட்டுப் பாரு! இந்த வெஜி நல்லா இருக்கும்! இது அப்பா செஞ்ச ஸ்பெஷல் மீன் டிஷ்” என அவள் தட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து வைத்தான்.

சாப்பாட்டு நேரம் கலகலப்பாய் போனது. உணவு முடித்து, பிள்ளைகள் அனைவருக்கும் சிகப்பு குட்டி பாக்கேட்டில் பணம் வைத்துக் கொடுத்தார் மிஸ்டர் லிம். அதை அங் பாவ் என சொல்வார்கள் சீனர்கள். மலேசியாவில் சீனர்களை ஃபோல்லோ செய்து மற்ற இனத்தவரும் தங்களின் பெருநாள் அன்று அங் பாவ் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். மலாய்க்காரர்களின் அங் பாவ் பாக்கேட் பச்சை வர்ணத்திலும், இந்தியர்களின் பாக்கேட் ஊதா வர்ணத்திலும் இருக்கும். கேஷவுக்கும் கிடைத்தது சிவப்பு பாக்கேட். அதை வாங்கியதும் வாயில் வைத்துக் கடிக்க, வேணி பிடுங்கி வைத்துக் கொண்டாள்.

நேரம் போய் கொண்டிருந்ததால், இவர்கள் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு மீண்டும் வருவதாக கிளம்பினான் நேதன். வேணியும் எல்லோரிடமும் விடைப் பெற வந்தாள். அவள் கையில் ஒரு அழகான பேக்கைக் கொடுத்த ஜானகி,

“உள்ள சேலை வச்சிருக்கேன்! வீட்டுக்கு வந்த புள்ளைய வெறுங் கையோட அனுப்பக் கூடாது இல்லையா” என புன்னகைத்தவர் அவளை மெல்ல அணைத்துக் கொண்டார்.

“எங்க நாதன் ரொம்ப நாளைக்குப் பிறகு ரொம்ப கலகலன்னு இருக்கான்! முகமே மலர்ந்துக் கிடக்கு! இதெல்லாம் உன்னாலயும் உன் மகனாலயும்தான். ரொம்ப நன்றிமா” என மெல்லிய குரலில் தொண்டையடைக்க சொன்னார் ஜானகி.

இவளுக்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. தலையை மட்டும் ஆட்டி விடைப்பெற்றுக் கொண்டாள்.

காரில் எப்பொழுதும் போல வேணியின் நெஞ்சில் தலை வைத்துக் கொண்டு பேசியபடி வந்தான் கேஷவ். பாதி வழியில் அவன் தூங்கி இருக்க, காலையில் இருந்து கபேவில் உழைத்தக் களைப்பில் வேணியும் உறங்கி இருந்தாள். தன்னருகில் எவ்வளவு பாதுகாப்பாய் உணர்ந்திருந்தால் இப்படி உறங்கி இருப்பார்கள் இருவரும் எனும் எண்ணமே இவன் முகத்தில் புன்னகையைக் கொண்டு வந்தது.

வீடு நெருங்கி இருக்க, காரை பார்க் செய்தான் நேதன். காரிலிருந்த கடிகாரம் மணி அதிகாலை ஒன்று என காட்டியது. உறக்கத்தில் இருக்கும் தாயையும் மகனையும் சற்று நேரம் ஆசையாய் பார்த்திருந்தான் இவன்.

“வேணி” மிக மென்மையாக அழைத்தான்.

“ஹ்ம்ம்” எனும் சத்தம் மட்டும் வந்தது. ஆள் அசையவில்லை.

“வேணி!”

இந்த முறை ஹ்ம்ம் கூட வரவில்லை.

அருகில் நெருங்கியவன் தோளில் கை வைத்து வேணி என அழைத்தான். அவன் கையில் முகத்தை சாய்த்துக் கொண்டவள், சுகமாய் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.

மெல்லிய புன்சிரிப்பு முகத்தில் பரவ, இன்னொரு கை கொண்டு லேசாக அசைத்தான் அவளை. மெல்ல கண் திறந்தவள்,

“என்னடா?” என தூக்கக் கலக்கக் குரலில் கேட்டாள்.

“வீடு வந்திருச்சு, எழுந்துக்கோ”

“ஓ” என்றவள் மெல்ல நிமிர்ந்து அமர்ந்து மகனை நன்றாக தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டாள்.

“வேணி”

“ஹ்ம்ம்”

“உன் கிட்ட ஒன்னு சொல்லனும்”

காரில் தெரிந்த மெல்லிய வெளிச்சத்தில் அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள் இவள்.

“ஸ்கூல் டைம்ல உன் கிட்ட அடிக்கடி வம்பு வளர்த்தாலும், உன்னை அப்போவே ரொம்ப பிடிக்கும் வேணி! காதல்ங்கற கேட்டகரில வர பிடித்தம் இல்ல அது! அட்மையர், ரெஸ்பேக்ட்ங்கற கேட்டகரில வர பிடித்தம். பயம் இல்லாம நீ செய்யற சேட்டைகள், க்ரவுண்ட்ல மின்னல் மாதிரி நீ ஓடுற ஓட்டம், தப்பு செஞ்சாலும் கெத்தா நிக்கிற உன் திமிர் இதெல்லாம் ரொம்ப பிடிக்கும். ஸ்கூலே என்னைத் தலையில தூக்கி வச்சு ஆடனாலும், போடா டேய்னு நீ பார்க்கற அலட்சியப் பார்வைப் பிடிக்கும். உன்னை வம்பிழுத்து மாட்டிவிடலன்னா என்னமோ எனக்கு பொழுதே போகாத மாதிரி இருக்கும். பள்ளி முடிஞ்சு எல்லோரும் பிரிஞ்சுட்டாலும், எதாவது ஒரு இன்சிடெண்ட்ல உன் நினைவு வரத்தான் செய்யும். இந்த ராங்கி இப்போ எப்படி இருப்பான்னு நெனைச்சிப்பேன். அதனாலத்தான் மீண்டும் உன்னைப் பார்த்ததும் அவ்ளோ மகிழ்ச்சியா, இதமா இருந்தது. உன் கூட சண்டைப் போடாம நல்லபடி பழகிப் பார்க்கனும்னு தோணுச்சு!” என்றவன் அவள் முகத்தையேப் பார்த்திருந்தான்.

பின் அவன் பார்வை கேஷவைத் தொட்டுத் தழுவியது. கை நீட்டி அவன் கன்னம் வருடியவன்,

“கேஷவ் மேல ஏன் ஒட்டுதல் வந்துச்சுன்னே தெரியல வேணி. அப்பா இல்லாத பையன்றதுனால இருக்கலாம், இல்ல என் ப்ரேண்ட் வேணியோட பையன்றதுனால இருக்கலாம், இல்ல அவர் எனக்கு கொடுக்கற அட்டேன்ஷன் ரொம்ப பிடிச்சுப் போச்சுதுன்றதுனால கூட இருக்கலாம். என்னமோ அவர இந்த நேதனுக்கு ரொம்பப் பிடிக்குது! கள்ளம் கபடம் இல்லாத குழந்தைகள் மேல பிடித்தம் வர காரணம் வேணுமா என்ன! உங்க ரெண்டுப் பேரையும் விட்டு என்னால இனி இருக்க முடியும்னு தோணல வேணி! மரத்துப் போன என் உணர்வுகளும், உணர்ச்சிகளும் உன் கூட பழக பழக உயிர் பெற்று நிக்கிது வேணி! ஐ நீட் யூ அண்ட் கேஷவ் இன் மை லோன்லி லைப்! இதுக்கும் மேல எப்படி சொல்லன்னு தெரியல” என பெருமூச்சுடன் முடித்தான் நேதன்.

இவள் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாய் காரில் இருந்து இறங்கினாள். இவனும் இறங்கிக் கொண்டான். கேஷவை கையில் வாங்கியவன், அவளுடனே மேலே வந்தான்.

வேணியின் வீட்டுக் கதவு திறந்திருந்தது. இவள் யோசனையுடன் உள்ளே நுழைய அவள் பின்னே நேதனும் நுழைந்தான்.

“நான் சொன்னப்போ என்னை கன்னம் கன்னமா அறைஞ்சீங்கல்ல! இப்போ உங்க கண்ணாலேயே பாருங்க! எங்கண்ணன் கரேக்டா தான் சொல்லிருக்கான், உங்க அக்கா எவனோ ஒரு பணக்கார சீனனுக்கு கீப்பா இருக்கான்னு! நல்லா கண்ணைத் தொறந்து ஆசையாப் பாருங்க இவ லட்சணத்த” என கத்தினாள் பெரிய தம்பியின் மனைவி.  

அங்கே வீட்டின் ஹாலில் இரண்டு தம்பிகளின் குடும்பமும் நின்றிருந்தது. தன் அக்காவா இப்படி என இரண்டு தம்பிகளும் அவளைப் பார்க்க, இவளுக்காக பேச முன் வந்த நேதனைத் தடுத்தாள் வேணி.

“வாங்கடா! என்ன அக்காவ வேவு பார்க்க வந்தீங்களா? ரொம்ப சந்தோஷம்டா தம்பிகளா! ஒருத்தனுக்கு கீப்பா இருக்கனும்னு நெனைச்சிருந்தா இப்படி முதுகு ஒடிய வேலை செஞ்சிட்டு இருக்கமாட்டேன்டா நான்! நேர்மையா, மானத்தோடத்தான் சம்பாதிச்சு உங்களயும் கரையேத்துனேன். அது உங்க பொண்டாட்டிங்களுக்குத் தெரியலைனாலும் கண்டிப்பா உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இன்னும் நல்லா வண்ண வண்ணமா கேக்கற முன்னே ரெண்டு பேரும் பொண்டாட்டி புள்ளைங்கள கூட்டிட்டு ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிடுங்க! உங்க ரெண்டு பேருக்கும் அம்மாவா இருந்து இந்த நிலைமைக்கு கொண்டு வர நாயா பேயா உழைச்சிருக்கேன் நான்! என் வாயால சாபம் வாங்கிக்காதீங்க! பொண்டாட்டி பேச்சைக் கேட்டு என்னையே வேவு பார்க்க வந்த எவனும் இனி எனக்குத் தேவையில்ல! போங்கடா” என கத்தினாள் வேணி.

“அப்படிலாம் ஒன்னும் இல்லக்கா! என்ன நடக்குதுன்னு பார்க்கத்தான் வந்தோம். யாராச்சும் உன்னை ஏமாத்தப் பார்க்கறாங்களான்னு தெரிஞ்சுக்கத்தான் வந்தோம். இப்படிலாம் பேசாதக்கா”

அவளை சமாதானப் படுத்த நெருங்கிய தம்பிகளை கை நீட்டி அங்கேயே நில் என்பதைப் போல சைகை செய்தாள். இவள் கத்தலில் விழித்து சிணுங்கத் தொடங்கி இருந்த கேஷவை சமாதானப் படுத்திக் கொண்டிருக்கும் நேதனை நெருங்கியவள்,

“இவர் பேரு நேதன். இவர் தான் இனி உங்க மாமா, என்னோட புருஷன்! இப்போ தயவு செஞ்சு கிளம்புங்க” என்றவளின் கண்கள் கலங்கிப் போய் கிடந்தது.

தம்பிகள் இருவரும் தயங்க,

“எதா இருந்தாலும் நாளைக்குப் பேசிக்கலாம்! உங்க அக்கா ரொம்ப அப்செட்டா இருக்கா! இப்போ போங்க” என்றான் நேதன்.

பெரியவனின் மனைவிக்கு மட்டும் என் புருஷன் என சொன்னதில் பெரிய அதிர்ச்சி! வீட்டுக்குப் போனதும் அபாண்டமாய் பழி போட்டதுக்கு கணவன் வெளுத்து விடுவானே எனும் அச்சம் வேறு கிளர்ந்தெழுந்தது. பயத்துடனே கிளம்பினாள்.

அவர்கள் வெளியேறியதும் கதவைத் தாள் போட்டு வந்தவள், நேதனைக் கட்டிக் கொண்டாள். ஒரு பக்கம் கேஷவ் சிணுங்க ஒரு பக்கம் இவள் கட்டிக் கொண்டு அழ, இருவரையும் இறுக அணைத்துக் கொண்டான் நேதன்.    

 

(நேத்து சின்ன எபின்னு ரொம்ப கவலைப்பட்டவங்களுக்காக இன்னிக்கு சர்ப்ரைஸ் எபி தரேன். இன்னும் நாலு எபில கதை முடிஞ்சுடும். சோ உங்க ப்ரென்ஸ் யாராச்சும் படிக்கலைனா படிக்க ஆரம்பிக்க சொல்லுங்க டியர்ஸ். போன எபிக்கு லைக் கமேண்ட் போட்ட அனைவருக்குன் நன்றி..லவ் யூ ஆல்)