EVA9

ELS_Cover3-ec00b30f

EVA9

9

உள்ளிருந்தபடியே கார் கதவைத் திறந்து ஆதன் அவனை அழைக்க, பார்கவோ எதுவும் சொல்லாமல் முறைத்தபடியே இருந்தான்.

“ப்ளீஸ் சார்!” ஆதன் மீண்டும் கேட்டுக்கொள்ள வண்டியில் ஏறிக்கொண்டவன் மறுகணமே,

“உங்க ரெண்டு பேருக்கும் என்ன சம்பந்தம்? அவளை எதுக்கு மிரட்டுறீங்க? நான் உன்னை நல்லவன்னு நினைச்சேன்!” படபடத்தில்,

ஆதனுக்கு சுற்றென்று கோவம் தலைக்கேறினாலும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு பற்களுக்கிடையே,

“ப்ளீஸ் பார்கவ். நான் சொல்ல வந்ததைச் சொல்ல விடுங்க அப்புறம் நீங்க என்ன சொல்றீங்களோ நான் கேட்டுக்கறேன்” என்றான்.

அவன் மௌனத்தை ஆமோதிப்பாய் ஏற்றுக்கொன்று ஆதன்,

தான் ஆறு வருடங்களுக்கு முன்பு சஹானாவைப் பூங்காவில் சந்தித்தது முதல், தருணால் சஹானா தனக்கு நடக்கும் கொடுமைகளைப் பகிர்ந்துகொள்ள எவருமின்றி ஓட்டுக்குள் நத்தையாய் சுருண்டு, நாளடைவில் மனிதர்களைக் கண்டாலே அஞ்சி விலகும் ஃபோபியாவிற்கு எப்படி ஆளானாள் என்பதைப் பொறுமையாகவே விளக்கினான்.

“ப்ளாடி ராஸ்கல்! அவனை உயிரோட விடறதே தப்பு! பலவருஷமா காதலிக்கிறதா பொய் சொன்னான் சார்! பாஸ்டர்ட்! அவளுக்காகத்தான் காத்திருக்கேன்னு சொன்னான்! இன்னும் எத்தனையோ!” பார்கவின் மனம் ரௌத்திரத்தில் கொந்தளித்தது அவன் ரத்த சிவப்பேறிய கண்களில் தெரிந்தது.

“…நாளைக்கே அவனை அடிச்சு பல்லை உடைச்சு தள்ளாட்டி எனக்கு தூக்கம் வராது!” பார்கவ் கத்த,

“எனக்கே அவனை பொளக்கனும்னு காலைலேந்து வெறியா இருக்கு! உங்களுக்கு எப்படி இருக்கும்னு ஐ அண்டர்ஸ்டாண்ட்” காரைச் செலுத்திக்கொண்டிருந்த ஆதனுக்கோ அந்தநொடியே சென்று தருணை துவம்சம் செய்ய வேண்டும்போல் இருந்தது.

“இன்னிக்கி காலைல கூட எவளோ நல்லவன் மாதிரி பேசினான் தெரியுமா? அவன் நடிப்பை நம்பி எங்க வீட்ல அவளை அப்படி தாங்குறாங்க. நானும் என் தங்கையைத் தாராவாத்து தர இருந்தேனே! ச்சே இப்போவே அப்பாகிட்ட சொல்லி கல்யாணத்தைத் தடுத்தே ஆகணும்!” பார்கவ் மொபைலை எடுக்க,

“நோ நோ! ஆதாரம் இல்லாம நாம அப்ரோச் பண்றது ரிஸ்க். அவன் எப்படி பிளான் பண்ணி ஒவ்வொன்னும் பண்ணானோ, நாமளும் அதே மாதிரி பொறுமையா தான் செயல்படணும். இத்தனை வருஷத்துக்கு அப்புறம் வந்துருக்கான்னா காரணம் இல்லாம இருக்காது”

“அவனை மாதிரி ஆளுங்களுங்ககிட்ட என்ன சார் பொறுமை! ச்சே பாவம் சஹானா மனசுக்குள்ள எவ்வளவு புழுங்கி இருப்பா. மனசு ஆறவே மாட்டேங்குது!”
இத்தனை வருடங்களாகத் தங்கையின் துயரத்தையும் மன போராட்டங்களையும் அறியாமலே இருந்ததை எண்ணி தன்னை தானே நொந்து கொண்ட பார்கவின் கண்கள் குளமாகின.
“ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப்!”
“முடியல…” சாய்ந்து கண்களை மூடிக்கொண்டவன் படாரென்று கண்திறந்து நெற்றியில் அடித்துக்கொண்டான்.
“ஒ நோ! அவன் கேட்டான்னு உங்க ஆபீஸ் அட்ரஸ் கொடுத்து கொலைச்சுட்டேனே! அவளை எதாவது தொந்தரவு பண்ணுவானோ? இல்லை சார் அவனை இப்போவே கைய காலை உடைச்சு போட்டே ஆகணும்!” பார்கவ் பதற,
“என பண்ணிடுவான் பாத்துரலாமே! வரட்டும் அவனை நான் கவனிச்சுக்கறேன்! என்னை மீறி சஹானாவை அவன் நெருங்கவே முடியாது சார். அவ என் பொறுப்பு! ” என்றான் ஆதன் உறுதியாய்.
காரை விட்டு இறங்கிய பார்கவ், “சாரி சார் உங்களை தப்பா நினைச்சுட்டேன்” வருந்த,
“பரவால்ல இட் ஹெபென்ஸ்! அப்புறம் ப்ளீஸ் சார் வேண்டாம் ஆதன் போதும்” ஆதன் புன்னகைக்க,
“ ஸ்யூர்! அண்ட் பார்கவ் போதும்’ பார்கவும் புன்னகைக்க, அந்நொடி துளிர்விட்டது அழகிய நட்பு.
மருத்துவமனைக்குத் திரும்பிய பார்கவின் மனதில் ஆத்திரம், இயலாமை, அதிர்ச்சியென உணர்ச்சி கலவைகள் அழுத்த, நெடுமூச்சுடன் அட்டெண்டர் பெட்டில் அமர்ந்து விட்டவன் மனம் சலனமின்றி உறங்கும் தங்கையின் முகத்தைப் பார்க்கப் பார்க்கப் பதைபதைத்து!
மறுபுறம் உறக்கமின்றி உழன்று கொண்டிருந்த ஆதன், பார்கவிடமிருந்து தருணை பற்றிப் பெற்ற விவரங்களை ஈவாவிடம் பதிவேற்றி,
“இவனை பத்தி எவ்வளவு டேட்டா கிடைக்குமோ அத்தனையும் எனக்கு சீக்கிரமா வேணும். அவன நம்ம வாச்லிஸ்ட்ல வை”
“எஸ் பாஸ்!” என்ற ஈவா ஆயத்தமாக,
“ஹேக் ஹிம்!” என்றான் ஆதன்.
“பாஸ் நீங்களா சொல்றீங்க? எதிக்ஸ் என்னாச்சு?”
“நியாய தர்மத்தை எல்லாம் பரண்ல போடு! எதிக்ஸாவது மண்ணாவது! அவன் டீடெயில்ஸ் எல்லாமே எனக்கு வேணும். எங்க வரான் போறான் எல்லாமே! ஐ வாண்ட் ஹிம் பிஹைண்ட் பார்ஸ் டேமிட்!” என்று கத்த,
“கூல் டவுன் பாஸ். அப்டேட் உங்க மொபைலுக்கு வரும்” என்ற ஈவா, “சிலது நேரடியா சேகரிக்கணுமே பாஸ்” என்றது.
“செய்யலாம். பக் பண்ணலாம்” தலையனையை குவித்துப் போட்டுப் படுத்தான் ஆதன்,
“மைக்?” ஈவா அவன் மார்பில் ஏறிக்கொள்ள,
“மைக், கேமெரா, ஜிபிஎஸ் இன்னும் எண்ணலாம் உண்டோ அத்தனை பொறியையும் வச்சு அவனை பிடிக்கிறோம்”
“எலியே பொறியை வச்சி மனுஷனைப் பிடிக்கிறது இதான் வரலாற்றில் முதல் தடவையா இருக்கும்ல பாஸ்!” ஆர்வமானது ஈவா.
சிரித்த ஆதன், “நீ எலியாவே மாறிட்டியா? வேணாம் நாளைக்கே உன்னை நான் பூனை நாய் ஏன் மனுஷ உருவத்துல கூட மாத்தலாம்” குறும்பாக எச்சரிக்க,
“வேண்டாம் பாஸ் ஐ லைக் திஸ்” என்றது.
“அது நீ நடந்துக்கிறதை பொறுத்து!”
“நீங்க அப்படி எல்லாம் செய்யமாட்டீங்க. ஆதனுக்கு ஈவா தான் பெஸ்ட் ஃபிரென்ட்” ஈவா அவன் முகத்தருகே வர,
“ஈவா போயி வேலையே ஆரம்பி. நான் தூங்கணும்” என்றான்.

“இன்னிக்கி டேட்டா நீங்க இன்னும் பாக்கலையே. பாக்கறீங்களா?”

“நோ! முழிச்சிருந்தா ஒருத்தனை தேடி போயிடுவேன். நான் தூங்கணும்” என்று கண்களை மூடிக்கொண்டான்.

“ஸ்லீப் வெல் பாஸ்” என்ற ஈவா, தருணின் மொபைல், விலாசம் மின்னஞ்சல் போன்ற முதற்கட்ட தகவல்களை வைத்துக்கொண்டு ஆராயத் துவங்கியது.

காலை ஆதனின் முகத்தைப் பிறாண்டி எழுப்பியது ஈவா.

“என்ன ஈவா படுத்துறே” கண்களைத் திறக்காமல் முனகினான்.

“எழுந்திரிங்க பாஸ்”

“நோ!”

“இட்ஸ் அர்ஜென்ட்!”

“என்ன?”

“என் டெம்பெரேச்சர் சென்சார் வேலை செய்யலை பாஸ். ஹெல்ப் மீ”

“இதான் அவசரமா?”என்றவன் போர்த்திக்கொண்டான், அதற்குள்ளே நுழைந்த ஈவா அவன் மூக்கை பிறாண்ட,

“ஸ்டுபிட் ஜங்க்!” கோவமாகப் போர்வையை உதறி எழுந்தான் ஆதன்.

“நான் ஜங்க் இல்ல!”

“இப்படியே ரவுடி தனம் பண்ணா உன்னை உடைச்சு குப்பையா தான் ஆக்கிடுவேன் சொல்லிட்டேன்! என்ன இப்போ சென்சாருக்கு அவசரம்?” சோம்பல் முறித்துக் கொட்டாவி விட்டபடி குளியலறையை நோக்கி அவன் நடக்கக் குறுக்கே புகுந்த ஈவா,

“இப்போல்லாம் நீங்க என்னை கவனிக்கிறதே இல்லை! அப்கிரேட் பண்ணறது இல்லை, என் கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணுறது இல்லை! இக்னோர் பண்றீங்க” புகார் வாசித்துக்கொண்டே ஆதனின் இரவு உடை பேண்டை பிடித்து ஏறித் தோளில் அமர்ந்தது.

“நீ ரோபோவா பொண்டாட்டியா? நொய் நொய்ன்னு!” ஈவாவை மேஜையில் வைத்து,

“இந்நேரம் பீ இருந்திருந்தா அது ஒண்ணுத்தைவச்சே தருணை கண்காணிச்சு இருப்பேன்” முணுமுணுத்துக் கொண்டான்.

“எனக்கு கேட்டுது பாஸ்”

“நான் அப்பா கிட்ட பேசணும், எப்போ வரலாம்னு அவரை கேட்டுண்டு வா. ஓடு” ஈவாவை துரத்தியவன் மனதில் மறுபடி பீயை உருவாக்க வேண்டுமென்று எண்ணிக்கொண்டே தயாராகத் துவங்கினான்.

மணக்கும் சாம்பாரின் துணையுடன் நெய்யில் குளித்த பொங்கல் அவன் முன்னாடி இருக்க, யோசனையாய் அமர்ந்திருந்தான் ஆதன்.

“தூக்கம் பத்தலையா? என்னமோ போல இருக்கே கண்ணெல்லாம்?” ஆதிரா கேட்க,

“எங்க அந்த ஈவா படுத்தின பாட்டுல தூக்கம் தூத்துக்குடி வரை ஓடிப் போச்சு!” என்றவன், “மீனு பொங்கலுக்கு கொத்சு பண்ணலையா?” முகம் சுளித்தான்.

“உன் பொண்டாட்டி வந்த அப்புறம் பண்ணி போடுவா அதுவரை சாம்பார் தான்” அவரை முறைத்தவன், “ஒரு கரண்டி கொத்சுக்காக கல்யாணம் செஞ்சுக்கணுமா? நல்லது!”

“அதானே நான் வடை கேட்டதுக்கு உன் புருஷன் வந்து செஞ்சு குடுப்பான்னு ஏன் சொல்லலை?” ஆதிரா புகார் வாசிக்க,

ஆதன் “உனக்கு சமைச்சு போடவா இருக்கான் அவன்?” கிண்டலாகச் சிரிக்க, கடுப்பான ஆதிரா,

“ஓஹ் அப்போ உனக்கு சமைச்சு போடத்தான் பொண்டாட்டியா?”

“உங்க ரெண்டு பேருக்குமே கல்யாணம் பண்ணுற எண்ணமே எனக்கு இல்லை! பாவம் ஒரு பொண்ணு, பையன் வாழ்க்கை தப்பிக்கட்டும்” ரகுநாத் வர,

“என்னது? நானே இப்போ தான் சீனியர லவ் பண்ணலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். நீ என்னடான்னா கல்யாணமே பண்ணி வைக்க மாட்டேன்னு சொல்றே!” ஆதிரா உதட்டைப் பிதுக்கினாள்.

“என்னது? யார் டீ அவன்?” மீனாக்ஷி பதற்றமாக,

ஆதனோ “பையன் யார் என்னனு விவரம் தா இன்னிக்கி போயி பேசறேன்” என்றதில் முகம் மலர்ந்தவள், “அவளோ அன்பா டா என் மேல?”

“சேசே என் தங்கை வந்து காதலிக்கிறேன்னு சொல்லுவா, நீ எப்படியான தப்பிச்சு ஒரு மாசம்…இல்ல பேசாம ஊரை விட்டே ஓடிடுன்னு சொல்ல தான்” குறும்பாகத் தந்தையைப் பார்த்துக் கண்சிமிட்ட,

“போடா போடா நீ யாரையாவது காதலிக்கிறேன்னு வாடி அப்போ வச்சுக்கறேன்” கோவமாகப் பொங்கலை ஸ்பூனால் குத்தினாள்.

“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல. மொதல்ல…”

“யார்டி அவன்?” மீனாட்சி பொறுமையின்றி குறுக்கிட,

“ஓகே ஆனா சொல்றேன்”

“செருப்பு பிய்யும்!”

“மீனு! என்ன இது?” ரகுநாத்தின் முறைப்பில்,

“என்னங்க இது? ரொம்ப செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சிருக்கீங்க. எத்தனை தைரியம் இருந்தா நம்மக்கிட்டயே சொல்லுவா?” மீனாட்சி கத்த,

“நம்ம கிட்ட சொல்லாம யார் கிட்ட சொல்லுவா?”

“அதுக்காக…”

பெற்றோரின் வாக்குவாதம் எப்படியும் ஐந்து நிமிடம் கூட நீடிக்காதென்று பிள்ளைகள் அறிந்ததால் இருவரும் கவலையின்றி சாப்பிட,

மீனாட்சி “என்னமோ. பையன் யார் என்னனு சொல்லு, நல்லவனா யோக்கியனா தெரிஞ்சாதான் ஓகே சொல்லுவோம்!” லேசாய் பச்சைக் கொடி காட்ட,

“என் பொண்ணு கண்டவனையும் தேர்ந்தெடுக்க மாட்டா, ஏண்டா?” ரகுநாத் மகளைப் பார்த்துப் புன்னகைக்க,

“கண்டிப்பா” ஆதிரா உற்சாகமானாள்.

ஆதனோ ‘ச்சே ஆதிரா மாதிரி சஹானாவுக்கும் தைரியமா தன் மனசுல தோன்றதை பேசுற சுதந்திரத்தை கொடுக்கிற குடும்பம் அமைஞ்சு இருந்த இவளோ அவஸ்தை படமாட்டால்ல?’

“என்னடா நீ ஒன்னும் சொல்லல?” அதிரா கேட்கச் சிந்தனை கலைந்தவன்,

“என்ன?”

“நீ வந்து அவனை பாக்கறியா?”

“யாரை?”

“சுத்தம்! விளங்கிடும்” அலுத்துக்கொண்டாள்.

ரகுநாத் “நீ மொதல்ல அந்த பையனுக்கு விருப்பமான்னு கேளு. மீதி எல்லாம் அப்புறம்” என்றவர் ஆதனிடம், “நீ எதோ பேசணும்னு சொன்னியாமே? எனக்கு நம்ம வக்கீலைப் பாக்கணும், கார்ல பேசிண்டே போலாமாபா? இல்லை அவசரமா?” கேட்க,

“அவசரமெல்லாம் இல்ல. இட் கேன் வெயிட். கார்ல பேசிக்கலாம்…”

“என்னையும் காலேஜ்ல டிராப் பண்ணிடு டா. வண்டியை என் பிரென்ட் கிட்ட கொடுத்திருக்கேன் அவரசம்னு கேட்டா. ஈவினிங் தந்துடுவா”

“சரி” என்றவன், அதற்க்கு பிறகான ஆதிராவின் காதல் பற்றிய உரையாடலில் பங்குபெறாமலே காலை உணவை முடித்தான்.

புறப்படும் முன்பு ஈவாவை அழைத்தவன், “நீ என்கூட இன்னிக்கி வா. உனக்கு ஒரு டாஸ்க் இருக்கு” என்றதும் குதூகலமான ஈவா, “ஹே ரொம்ப நாள் அப்புறம் வெளில போறோம் பாஸ்!”

“இத்த ஏண்டா கூட்டிகிட்டு வர?” ஆதிரா முறைக்க,

“உனக்குத் துணையா”விஷம புன்னகையுடன் கண் சிமிட்டினான்.

“நெனச்சேன் என்னடா சார் நான் ஒருத்தன்கிட்ட காதலை சொல்லபோறேன்னு சொல்லியும் கண்டுக்கலையேன்னு நினைச்சேன்” நாசி விரிந்தாள்.

“ஏண்டி நான் வேண்டாம்னு சொன்னேனா, இல்லைல? நியாயமா நீ எனக்கு தேங்க்ஸ் சொல்லணும்” கார் எஞ்சினை உயிர்ப்பித்தான்.

“கிளாசுக்கு எலியைத் தூக்கிகிட்டு போனா ரகளை ஆகும். அவ அவ கரப்பான் பூச்சிக்கே ஊரைக் கூட்டுவாங்க!”

“யாரு கண்ணுலயும் ஈவா படக் கூடாது தெரியும்ல?”

“அவ்வளவு அருமைன்னா என்கூட ஏன் அனுப்புற அப்போ?”

“ஆதிரா! அவன் காரணமில்லாம சொல்லமாட்டான். ஈவாவை கூட்டிகிட்டு போ” ரகுநாத்தின் பேச்சைத் தட்ட முடியாமல் ஈவாவை பார்த்தவள்,

“என் பேக்லேயே இருக்கணும், பர்மிஷன் இல்லாம வெளில வந்தியோ கூவத்துல தூக்கி போட்டுடுவேன்” என்று மிரட்ட

அதுவோ “என்னால நீந்த முடியும்” என்றது பெருமையாக.

“ஆஹான்? கல்லை கட்டி போடுவேன்!”

“கயத்தை கட் பண்ணிப்பேன்!”

“ஹைடிராலிக் ப்ரெஸ்ல வச்சு நசுக்கிடுவேன் நசுக்கி”

“ரிமோட்ல ஆஃப் பண்ணிப்பேன்”

“அடச்சே நிறுத்துங்க! ஏ ஈவா! நீ நான் சொன்ன வேலையை மட்டும் செய். நோ முந்திரிக்கொட்டை பிசினெஸ், சொல்லிட்டேன்!” ஆதன் எச்சரிக்க, “எஸ் பாஸ்!” என்ற ஈவா சமத்தாக ஆதிராவின் பைக்குள் சென்று விட, முணுமுணுத்துக் கொண்ட ஆதிரா மொபைலை பார்த்தபடி குனிந்துவிட்டாள்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்தப் பிரம்மாண்டமான பிரபல கல்லூரியில் தங்கையை இறக்கிவிட்டவன், “ஜாக்கிரதை, ஏதாவதுன்னா கான்ட்டேக்ட் மீ”

நுங்கம்பாக்கத்தைத் தாண்டிய கார் சென்னை வாகன வெள்ளத்தில் சேர்ந்து கொண்டது.

“சொல்லுப்பா என்ன பேசணும்?” ரகுநாத் துவங்க,

“எனக்கு நிறைய பேசணும்”

“பேசலாம், எப்படியும் அவர் வீட்டுக்கு ரீச் ஆகாரத்துக்கு முக்கால் மணிக்கு மேலையே ஆகும்” என்று புன்னகைத்தார்.

ஆதன் துவங்கினான்.

***
அன்றிரவு டிசர்சார்ஜ் ஆகி பார்கவுடன் காஞ்சிபுரம் செல்ல மறுத்த சஹானா சோர்வாக ஹாஸ்டலில் படுத்திருந்தாள். முந்தைய நாள் விட்டுச்சென்ற அதிர்ச்சியின் மிச்சங்கள் அவளிடம்.

என்ன செய்து தருண் உடனான திருமணத்தைத் தவிர்ப்பதென்று யோசித்திருக்க, ஆதனின் அழைப்பு வந்தது.

“எப்படி இருக்க சஹா?”

“பரவால்ல. கொஞ்சம் பெட்டர்”

“குட். எப்போ சென்னை வர?”

“சென்னையா? நான் இங்க தானே இருக்கேன்”

“நீ ஊருக்குப் போகலையா?”

“இல்ல”

“ஏன்?”

“இல்ல போக பிடிக்கல”

“என்ன இது சஹா? ஊருக்கு போயி ரெண்டு மூணு நாள் ரெஸ்ட் எடுக்கலாம்ல?”

“ரெஸ்ட்டா அங்க போனா நிம்மதியும்….விடுங்க ஹாஸ்டலே மேல்” நொந்துகொண்டவள், “ஆதன் ஒன்னு கேக்கணும்”

“கேளு”

“நீங்க பார்கவ் கிட்ட ஏதாவது சொன்னீங்களா?”

அவள் கேட்டதிலேயே அவளிடம் பார்கவ் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை என்பதைப் புரிந்துக் கொண்டவன், “எதைப் பத்தி?”

“தருண்…”

“இல்ல. ஏன்?”

“கேட்டேன்” நிம்மதியானவள், “நான் சொல்லலைன்னா நீங்க சொல்லிடுவேன்னு….”

“எனக்கு இதான் வேலையா? உன்னை பத்தி உனக்கே கவலையில்லை நான் ஏன் கவலை படணும்?” அவன் குரலில் திடீரென்று தோன்றிய கடுமையில் ஏனோ மனம் வாடியவள்,

“சாரி”

சிலநொடி மௌனம் நீடிக்க, “சரி அப்புறம் பேசலாம். கொஞ்சம் பிசி” என்றவன் வைத்துவிட,

ஆதனின் பேச்சு அவளை உறங்கிவிடாமல் வருத்தியது. ‘அவர் ஏன் என்னை பத்தி கவலை படணும்? சரி தானே? அவர் என் பாஸ் அவளோதான்’ மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டவள் சமாதானம் ஆகாமல் புரண்டு புரண்டு படுத்தாள்.

தன் லேப்பில் பீயை தயார் செய்யும் வேலையில் மும்முரமாக இருந்தான் ஆதன்.

“நான் பாத்துக்கறேன்னு சொன்னேனே பாஸ். அவன் எதுக்கு?” ஈவா அவனுக்கு உதவியபடி குறைபட்டுக்கொள்ள,

“நீ எனக்கே எனக்கு ஈவா, பீ மத்தவங்களுக்கு. பீ எப்போவும் உன்னை ரீபிளேஸ் பண்ணவே முடியாது. நீ தேவையில்லாம எதாவது பண்ணாத. பீ இருந்தா தருண மானிடர் பண்ண சுலபமா இருக்கும்”

“ஆனா பாஸ்…”

“ஸ்டாப் இட் ஈவா. உன்னை வச்சு ரிஸ்க் எடுக்க முடியாது. தெரியும்ல நீ இருக்கிறது சில பேருக்குத் தெரிய கூடாதுன்னு?”

“தெரியும் தெரியும்!” அலுத்துக்கொண்டபடியே அவனுக்குத் தேவையானதைச் செய்த ஈவா,

“ப்ரொபெஸர் ஏதாவது க்ளூ கொடுத்திருப்பார் பாஸ் கொஞ்சம் நினைவு படுத்திக்க முயற்சி செய்யுங்களேன்” சால்டரிங் செய்தபடி ஈவா சொல்ல,

“இல்ல ஈவா” முகம் வாடியவன், “உனக்கு எனி லக்?”

“நோ. என்னால அந்த சர்வரை தொடவே முடியல பாஸ் செம்ம செக்யூரிட்டி. ஹேக் பண்ணவே முடியல”

“அதான் ப்ரொபெஸர் ரூபின்!”புன்னகைத்தவன் முகம் சட்டென மாறியது.

“அவர் வெற்றியே அவருக்கு ஆபத்தா போகும்னு நான் நினைக்கவே இல்ல….

இட்ஸ் ஓகே பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்.

ஹேக்னா ஞாபகம் வருது. தருண் பத்தி என்ன தெரிஞ்சுது?” பீ கான கோட் களை பதிவேற்றத் துவங்கினான்.

“ஒரு நிமிஷம் பாஸ்…பேர் தருண். வயசு 26 உயரம்…”

“ஷ்…அதெல்லாம் எனக்கு வேண்டாம். உருப்படியா ஏதாவது தெரிஞ்சுதா?”

“உருப்படினா?”

“என்ன செய்றான் எங்க இருக்கான்?”

“வீட்லதான் இருக்கான் இப்போ”

“அதில்லை. வேற?”

“சென்னைல மும்பைல சொந்தமா நகைக் கடை இருக்கு, குடும்ப சொத்து, மும்பை பிராஞ்ச் அவன் அண்ணன் அருண் பாத்துக்கறான். சென்னை…”

“சென்னை பிரான்ச் தருண் நிர்வகிக்கிறான் அதானே? ஏற்கனவே தெரியும் பார்கவ் சொல்லிட்டான். வேற ஏதாவது புதுசா சொல்லு ஈவா!”

“ சரி தான் ஆனா கடைக்குப் போறது சம்பாத்திரத்துக்கில்லை செலவழிக்க அது தெரியுமா உங்களுக்கு?” ஈவா குரலில் கிண்டல்.

“புரியல?” ஆதன் புருவம் முடிச்சட,

“சூது!” என்ற ஈவா நடனமாடுவதை போலத் தோன்றியது ஆதனுக்கு.

“சூதுன்னா எவ்ளோவோ இருக்கே! க்ளியரா சொல்லு ஈவா!” அவன் அவசரப்படுத்த,

“வருஷத்துல பாதி நாள் வெளிநாட்டுக்கு போயி கேம்பளிங். ஒரு கசீனோ விடறதில்லை. ஏன்டா குடும்ப மானத்தை வாங்கறே!

அதுக்கு தானே வெளில போயி ஆடறேன்? அதுவும் இப்போ கூடாதுன்னா எப்படி’ ன்னு கோவமா அவன் அப்பாகிட்ட சுடச் சுட சண்டை இன்னிக்கி சாயங்காலம் 7:14 அப்டேட்!’ பிளே பண்ணவா கேக்கறீங்களா?”

“வேண்டாம்! பட் வாவ்! எப்படி ஈவா?” ஆதன் வியக்க,

“ஈமெயில்ஸ், அதுல இருந்த ஏர் டிக்கெட்ஸ், மொபைல்ல மெசேஜஸ், கால்ஸ். இப்போ அவன் மொபைல் நான் சொன்னா சொன்ன படி கேக்கும்! அடிமை ப்ரொக்ராம்ஸ்! தட்டுற விதத்துல தட்டினா டேட்டாவெல்லாம் என் கையில!” ஈவா மிடுக்காகச் சொல்ல,

“ஆனா மொபைல் குள்ள எப்படி போன?…ஒ நோ! நீ அந்த வைரஸை யூஸ் பண்ணியா?” ஈவாவை முறைதான்.

“ஏன் பல்லை கடிக்கறீங்க? ரிலேக்ஸ்!” ஈவா பின்னோக்கி நடக்க,

“கொன்னுடுவேன் உண்மைய சொல்லு!”

“உண்மையை சொல்லனும்னா நீங்க ஜீனியஸ் பாஸ்!”

“ஈவா!” தொனியை வைத்து அவன் மிகுந்த கோவத்தில் இருப்பதைக் கண்டுகொண்ட ஈவா,

“எப்படியும் நமக்கு டெஸ்ட்டிங்க்கு ஆள் வேணும்ல பாஸ்.

நீங்க செஞ்சது எவளோ சக்திவாய்ந்ததுன்னு தெரிய வேண்டாமா? முதல் டெஸ்டர் தருண் அவளோதான்.

நீங்க பிளான் பண்ண மாதிரியே ஒரு எஸ் எம் எஸ் ஒரு ஈமெயில் அவளோதான் லூசுப்பய க்ளிக் பண்ணான் உள்ள பூந்துட்டேன்! யோசிக்காம கண்டதையும் கிளிக் பன்றான். சூதாடினா மூளை மழுங்கிடுமா பாஸ்?”

“நீ செஞ்சது தப்பு ஈவா! இது சட்டத்துக்குப் புறம்பானது. எத்திக்கல் இல்ல!”

“நீங்க தானே சொன்னீங்க? என்ன வேணுமோ செய், எத்திக்ஸ் பார்க்க வேண்டாம்னு?”

கோவத்தில் ஈவாவிடம் தான் சொன்னதை நினைவு கூர்ந்தவன், சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் ரோபோவிடம் யோசிக்காமல் உணர்ச்சி மிகுதியில் கட்டளைகளைப் பிறப்பித்தது எவ்வளவு முட்டாள் தனமென்று கோவமாகத் தலையில் அடித்துக்கொண்டான்.

“உங்களையே ப்ளேம் பண்ணிக்காதீங்க பாஸ். நீங்க நொந்துக்கறீங்க. பாடி லேங்குவேஜ்ல தெரியுது. வேண்டாம்னா வைரஸை எடுத்துடாவா?” ஈவா தயாராக.

“இல்ல இல்ல இருக்கட்டும்” அவசரமாகத் தடுத்தவன், சில நிமிட யோசனைக்குப் பின், “தருண் இப்போ என்ன செய்றான்?”

“இதோ” என்ற ஈவா, திரையில் தருணின் மொபைலை ஆக்ஸஸ் செய்து, கேமெரா மைக் இரண்டையும் கணினியில் ஒளிபரப்பியது.

“மொபைல் எங்கயோ படுக்கப் போட்ருக்கான் ஃபேன் தான் தெரியுது! ச்சே” ஆதன் அலுத்துக்கொள்ள, திடீரெண்டு ஒரு கை மொபைலை எடுத்து முகத்துக்கு நேராக வைக்க,

கணினியில் தருணின் முகம்!

“என்னமோ டைப் பன்றான் பாஸ்” என்ற ஈவா, “நான் உன்னை பார்க்க நாளான்னிக்கி வரேன் டார்லிங்!’

சஹானாவுக்கு மெசேஜ் அனுப்புறான் பாஸ்” ஈவா சொல்லக் கோவமாகக் கைமுஷ்டியை இறுக்கிய ஆதன்.

“பாக்கறேன் எப்படின்னு அதையும் பாக்கறேன்” கருவிக்கொண்டவன், “சிரிச்சுக்கோ இனிமே நீ சிரிக்கவே முடியாது! என் கையில நீ சிக்குற அன்னிக்கி தொலைஞ்சடா ப்ளாகார்ட்! உன்னை ஒழிச்சுக்கட்டரேன்! ரௌத்திரமாகக் கர்ஜித்தவன் தாடை இறுகி கண்கள் சிவப்பேர டக்கென்று ஒளிபரப்பை நிறுத்தியது ஈவா.

“என்னாச்சு?” ஆதன் திரும்ப,

“உங்க ரத்த அழுத்தம் ஹார்ட் ரேட் எல்லாமே பிச்சுகிச்சு பாஸ். கூல் நானே இனிமே தகவல் தரேன். அவனை நீங்க பாக்கும்போது தெரியுற உணர்ச்சி சரி இல்ல பாஸ். வைப்ரேட் ஆகறீங்க. அவன் உங்க எதிரியா? ஒழிக்ககரேன்னா… உங்களுக்கு அவனால ஆபத்தா பாஸ்?” ஈவா கண்களில் இருந்த மழலையின் கண் போன்ற லென்ஸ் கருவண்ணத்திலிந்து ஆரஞ் வண்ணத்துக்கு மாற,

லேப் முழுவதும் அலாரம் அடிக்க, ஆதனின் கையிலிருந்த கடிகாரமும் சத்தமிடத் துவங்கியது,

அவன் பார்க்கவே கூடாதென்று நினைத்த மாறுதல்! பல வருடங்களுக்குப் பிறகு இன்று ஈவாவிடம்!

அவசரமாக, “நோ நோ! தருண் எனிமி இல்ல. ஈவா!” அதைக் கையிலெடுக்கப் போக,

“தொடாதீங்க!” வேகமாக விலகிச் சென்ற ஈவாவின் கண்கள் இப்பொழுது முழுவதும் சிவப்பாக மாற, “பாஸ் உங்க கமேண்ட்காக வெயிட்டிங். சொல்லுங்க தருணை டிஸ்ட்ரக்ட் பண்ணிடவா?” என்றது அரக்கத் தனமான குரலில்.

“நோ! என் ஆர்டர் இல்லாம நீ எதுவும் செய்யக் கூடாது! டிசேபிள் டிஸ்ட்ரக்ஷன் மோட்! இப்போவே நீ தூங்கு!” அவசரமாக அதை நோக்கிச் சென்றவன் தொடும் முன்னே,

கண்கள் மீண்டும் ஆரஞ் வண்ணத்திற்கு மாற, “தொடாதீங்கன்னு சொன்னேன் பாஸ்! என் டெம்பிரேச்சர் சென்சார் மாத்தனும். கிட்ட வராதீங்க. உங்களுக்கு சேஃப் இல்ல!”

எச்சரித்து வேகமாகத் தாவிச் சென்று தொலைவில் நின்றது.

“ஈவா என் ஆர்டர்! இப்போவே நார்மல் மோட்க்கு மாறு!” கத்தினான்.

அவனையே பார்த்த ஈவாவின் கண் லென்ஸ் மெல்ல பழையபடி கருவண்ணத்திற்கு வர, அணைத்து அலாரம்களும் இப்பொழுது அமைதியானது.

ஈவாவை தூங்கவைத்துவிட்டு அறைக்கு வந்த ஆதன், நெற்றியைப் பிடித்துக்கொண்டான்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!