EVA8

ELS_Cover3-7f89a7a3

8

ஏழுமணிக்கே அலுவலகம் சென்று ஆதன் காத்திருக்க, அதே பரிதவிப்பில் சில நிமிடங்களில் வந்து சேர்ந்தாள் சஹானா.

பையை வேகமாகத் தன் நாற்காலியில் வீசியவள் ஆதனின் அறைக்குள் அரக்கபறக்க நுழைய, அவனும் அதற்கு முன்னே கதவை நோக்கி வந்து கொண்டிருக்க, எதிர் எதிரில் கிட்டத்தட்ட முட்டிக்கொண்டு நின்றனர்.

“கொஞ்சம் வேலை அதான் சீக்கிரமா…” ஆதன் துவங்க,

“ஆமா ஆமா அந்த ஈமெயில் அனுப்பிடலாம்னு” சஹானா முடித்தாள்.

அசடு வழிய வெவ்வேறு திசையில் பார்வையை திரும்பியவர்கள், ஒன்றுசேர கேட்ட, “காபி?” இருவர் முகத்திலும் புன்முறுவலை வீசிச் சென்றது.

கண்ணாடி சுவரின் அருகே பொன்னிற ஒளியில் தன்னை பார்த்து புன்னகையுடன் காஃபி குடித்தபடி அமர்ந்தவன் நீல ஜீன்ஸும் கருஞ்சிவப்பு டிஷர்ட்டும் அணிந்த கந்தர்வன் போல தோன்றிட, வேகமாக எண்ணத்தை கலைத்தவள்,

“பாஸ்…”

“ம்ம்?”

“நேத்து நீங்க கேட்டதுக்கு… சாரி பதில் சொல்ல முடியல, ஷாக்ல எதுவும்…” அவள் தயங்க,

“இட்ஸ் ஓகே! புரிஞ்சுது” என்றவன், “நிஜமா என்னால இல்லையா?” நேற்றுமுதல் தன்னை வதைத்துக் கொண்டிருந்த புதிய கேள்வியைத் தாங்கமாட்டாமல் கேட்டுவிட, அவள் ‘இல்லை’ என்றதை ஏற்க மறுத்தவன் விடாமல் வாதிட அவனிடம் சொல்வதா வேண்டாமா என்று தவித்தவள்,

“சரி சரி சொல்றேன்” சலிப்பு பார்வையுடன் துவங்கினாள்.

“அன்னிக்கி வீட்டுக்கு போனதுமே பயத்துல ஜுரம், ஸ்கூல் போக முடியல.

பார்கவ் அன்னிக்கி பிசின்னு பஸ்ல போக நின்னப்போ தான் நீங்க வந்துருக்கீங்க போல இருக்கு, எங்கேயிருந்தோ வந்த கார்ல திடீர்னு கதவைத் திறந்து, ‘ஏறு’ ன்னு மிரட்டல்! பாத்தா நான் அன்னிக்கி சொன்னேன்ல பெரியப்பா பொண்ணு, என் அக்கா? அவங்களோட மாமனாரும் அத்தையும்.

ஸ்கூலுக்கு பதிலா நேரா அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க.

வீட்ல நுழைஞ்சதுமே என்னை ரூம்ல போட்டு பூட்டிட்டாங்க. பயத்துல கத்தி கத்தி எனெர்ஜி தீர்ந்து மயங்கிட்டேன்.

சாயங்காலம் தான் கதவை திறந்தாங்க, அப்பா, அம்மா, பார்கவ், பாட்டி, தாத்தா, அந்த அத்தை, மாமான்னு ஒரு கூட்டமே நிக்குது என் முன்னாடி!

‘இதுக்கா உன்னை பெத்தேன்னு?’ அம்மா அடிக்கிறாங்க, ‘மானத்தை வாங்கிட்டியேன்னு!’ அப்பா அடிக்க வரார்.

பார்கவ் அப்பாவை தடுக்குறான், தாத்தாவும் பாட்டியும் நடுவுல பாஞ்சு என்னை பொத்தி வச்சுக்கிறாங்க.

எல்லாரும் அர்த்தமே புரியாத வார்த்தைகளால திட்டினாங்க.

படிப்பை நிறுத்தறேன்னு அவங்க மிரட்ட, எதுக்கு திட்டு வாங்குறேன்னு புரியாவே இல்ல.

ராத்திரியெல்லாம் அழுதுட்டே இருந்தேன்.

பாட்டி, தாத்தா கெஞ்சி கேட்டதுல ஒருவழியா அந்த மாமா வீட்டிலேயே இருந்து பப்ளிக் எக்ஸாம் முடிச்சுட்டு காஞ்சிபுரம் திரும்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டு ரெண்டு, மூணு நாள்ல கிளம்பிட்டாங்க.

பரீட்சை வரை நான் ஸ்கூல் போகவே இல்ல. அவங்க செல்வாக்கை வச்சு பேசி பெர்மிஷன் வாங்கினாங்க போலாயிருக்கு.

இதெல்லாம் என்னை ஏற்கனவே பலகீனமா ஆக்கி வச்சப்போ தான் ஆட்டத்தை ஆரம்பிச்சான் தருண்!” வேகமாக ஆறிப்போன காஃபியை குடித்தவள் உதட்டைத் துடைத்துக்கொண்டாள்.

“யாரு தருண்?” ஆதன் முன்னாடி அவளை நோக்கிச் சாய்ந்து கேட்க,

“அவங்க பையன், அக்காவோட மச்சினன். காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்தான் அப்போ” காலி கோப்பையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டவள்,

“சும்மா கிடந்த ஆட்டை பாதுகாக்க ஓநாய்கிட்ட அனுப்பிவைச்ச கதையா போச்சு என் நிலமை! கொஞ்ச நாள் ரொம்பவே பிரெண்டா பழகினான். ஆறுதலா பேசினான். படிக்க உதவி பண்ணான்.

சின்ன சின்ன சீண்டல், தொடுகைனு ஸ்டார்ட் பண்ணான், பரிவுன்னு நினைச்சேன், அந்த கர்மம் என்னனு உணர அப்போ அறிவு இல்ல…

தப்பான நோக்கம்னு புரிஞ்சப்போ, இதெல்லாம் வச்சுக்காதே பெரியவங்க கிட்ட சொல்லிடுவேன்னு எச்சரிச்சேன். அவனோ,

‘சும்மா நடிக்காத! உன் பாய் பிரெண்டை அடிக்கடி ஸ்கூல் முடிச்சு பார்த்து கொஞ்சுறவ தானே நீ? பப்ளிக் பார்க்குல எத்தனை உரிமையா உன்னை அறைஞ்சான்! வந்து அன்னிக்கே ரெண்டு விட்ருப்பேன் விட்டு புடிக்கலாம்னு பாத்தேன்! அசராம உன் ஸ்கூல் வாசலிலேயே தினமும் உனக்காக கத்துக்கிட்டு இருக்கான்?

நான் மட்டும் வீட்ல உன்னை பத்தி சொல்லாட்டி என்னன்ன பண்ணி இருப்பியோ? இப்போ என்கிட்ட மட்டும் நல்லபொண்ணு மாதிரி பேசற?’ன்னு அவன் பார்த்த கேவலமான பார்வை!” கண்களை இருக்க மூடிகொண்டவள்,

“நாளுக்கு நாள் அவன் தொல்லை ஜாஸ்தியாச்சு. ஒருநாள் தனியா இருக்கும்பொழுது அவன் பைக் சத்தம் கேட்டு பின் கதவு வழியா, பக்கத்துக்கு கோவிலுக்கு போயி உக்காந்துகிட்டு இருந்தேன்.

ராத்திரி தான் வீட்டுக்கு போனேன்.
வாசல்லயே ஒரே ரகளை,
‘ஓடிப் போகவே தைரியம் வந்துருச்சான்னு?’ன்னு,

என்னத்துக்கு வெளில வந்தேன்னு காரணத்தையும் சொல்ல முடியல, மறுபடி திட்டு, பூட்டின ரூம்ன்னு தண்டனை, தனிமை!

பயத்திலேயே நாட்களை ஓட்டினேன். ஒருவழியா பரீட்சை முடிஞ்சு, தப்பிச்சா போதும்னு ஊருக்குக் கிளம்ப ரெடியாய்க்கிட்டு இருந்தேன், தருண் வந்து நின்னான்.

‘இவ்ளோ நாள் உன்ன பாய் பிரென்ட் தொடாமலா…! கேவலமான பேச்சோட கிட்ட வந்து…’ சஹானா தொடரமுடியாமல் தடுமாற, ஆதன் காபி கப்பை உடைத்துவிடுவதை போல கையை இறுக்கினான்.

“நான் பலசாலியா, இல்ல அவன் சொங்கியான்னு தான் தெரியல, எப்படியோ தப்பிச்சு என்னை காப்பாத்திக்கிட்டேன்” பெருமூச்சு விட்டவள்,

“ஊருக்கு போன பின்னாடி தான் மெல்ல விஷயம் புரியுது. பார்க், பஸ் ஸ்டாப்புன்னு உங்களை என் கூட பார்த்து தருண் காதல் சாயம் பூசி வீட்ல பாத்தவச்சதால தான் எல்லா ரகளையுமே!

துணைக்கு வரேன்னு வந்த தருண் மறைஞ்சு மறைஞ்சு கொடுத்த தொல்லை, என்னை நம்பாம பேரெண்ட்ஸ் பண்ண டார்ச்சர். இன்னும் இன்னும் என்னை எனக்குள்ளவே ஒடுங்க வச்சுடுச்சு.

மனுஷங்களை பார்த்தாலே உடம்பெல்லாம் உறைஞ்சுபோகும், யாரையும் கிட்டவிடவே பயம், எல்லாத்துக்குமே பயம் பயம்! யார் கூடவும் பேசுறதையே நிறுத்தி…”

“சஹா!” அவள் நிமிரும் முன்பே அவளைப் பாதுகாப்பாய் அணைத்துக்கொண்டான் ஆதன்!

“ஆ…தன்!” அவள் திணற, வேகமாக விலகியவன், “சாரி… சாரி…” அவன் நிலைகொள்ளாது தவிக்க,

“இட்ஸ்… ஓகே” என்றவள், “எனிவெ… இப்போ புரிஞ்சுதா நீங்க காரணமில்லைன்னு?” அவனை இயல்பாக்க முயன்றாள்.

“என் ஒரு நிமிஷ கோவம் உன்னை மொத்தமா இப்படி… என்ன செஞ்சு இந்த கொடுமையை சரி பண்ணுவேன். எனக்கெல்லாம் மன்னிப்பே இல்லமா” நொறுங்கி அமர்ந்துவிட்டான்.

“கடவுளே! எல்லாத்தையும் உங்க தலையில ஏன் போட்டுக்கறீங்க? காரணம்னு பார்த்தா… என்கிட்ட கேவலமா நடந்துகிட்ட அந்த லூசும், என் பேரெண்ட்சும், உறவுக்காரங்களும் தான்!

இதுக்கா யார்கிட்டயும் சொல்லாத எல்லாத்தையும் உங்க கிட்ட கொட்டினேன்? என்னை சொல்லணும்! உங்க கிட்ட சொல்ல சொல்ல ஆறுதலா இருந்துது, ச்சே எல்லாத்தையும் சொன்னது என் தப்பு!” நொந்துகொண்டாள்.

“இல்ல! ஆரம்பம் என்னால தான…”

“ஒரு மண்ணாங்கட்டியும் இல்ல!” கத்திவிட்டவள், கெஞ்சுதலாக,

“ப்ளீஸ்! இனி வாழ்க்கைல இதை பத்தி நான் யோசிக்கவே விரும்பல” வேகமாக எழுந்து, “நான் டெஸ்குக்கு போறேன்” என்று கதவை நோக்கி நடந்தவள் மனதை, வாடிய ஆதன் முகம் வதைக்க, அவனிடம் திரும்பியவள்,

“ஒன்னு கேக்க மறந்துட்டேன் அந்த மாப்பிள்ளைக்கு ஓகே சொல்லிடவா?” அவசர புன்னகையுடன் கேட்டாள்.

முகம் பிரகாசமாக எழுந்தவன், “வாவ்! பிடிச்சிருந்தா ஓகே சொல்லிட வேண்டியது தானே? என்னை ஏன் கேக்கறே மா?” என்றான்.

“மாஜி லவ்வராச்சேன்னு கேட்டேன்!” என்றவளின் விஷம சிரிப்பில்,

“ஏய்!” செல்லமாக அடிக்க நெருங்கினான். தப்பித்துக் கொண்டாள்.

“ஓகே சொல்லிடவா அப்போ?” மீண்டும் கேட்டாள்.

“சொல்லு மா!”

“மாப்பிள்ளை அதே தருண்ணு சொன்னாலுமா?” அவள் சொன்ன நொடியே, கண்கள் சிவக்க, “வாட் நான்சென்ஸ்?” என்று ஆதன் கத்திவிட,

“அதே தான்! அறிவே இல்லாத முட்டாப் பீசுங்களை வச்சுக்கிட்டு நான் படுற பாடு” அலுத்துகொண்டவள்,

” இப்போ சொல்லுங்க பாஸ் நான் ஓடித்தானே போகணும்? என்ன… கூட ஓடத்தான் யாரும் இல்ல… ஆமா நீங்க ஓடுவீங்களா?” கண்சிமிட்டினாள்.

வாய்விட்டுச் சிரித்துவிட்டவன், நொடியில் முகம் இறுகி, “அவனை நான் பார்க்கணும்!” என்றான்.

“யார?”

“அந்த ஓநாயை!”

அலுப்புடன் நெற்றியில் தட்டிக்கொண்டவள், “அவனெல்லாம் ஒரு ஜந்துன்னு அவனை பாத்துகிட்டு… பேசாம ஈவாவை அவன் மேல ஏவி விடுங்க அவனை முடிச்சுடும்!” என்றவள் கிண்டலை ரசிக்க முடியாதவனோ,

“சஹா எனக்கு அவனை பாக்கணும்!” கடுமையாக உத்தரவிட்டான்.

“முடியாது! கூடாது! தேவையில்லை! செய்யமாட்டேன்! அவளோதான்! இன்னும் பத்து நிமிஷத்துல மீட்டிங்” என்றவள் ஓட்டமும் நடையுமாகத் தன் இருக்கைக்குத் திரும்பினாள்.

‘நீ சொன்னா நான் கேட்டுடுவேனா? இல்ல, அவனை தான் விட்டுடுவேனா?’ கண்கள் சிவக்க ஆதன் கறுவி கொண்டதை சஹானா அறியவில்லை. தெரிந்திருந்தால் தருண் பற்றின விஷயங்களை ஆதனிடமிருந்து முற்றிலும் மறைத்திருப்பாள்.

***

மதியம் போல சஹானாவின் தந்தை, “சனிக்கிழமை வீட்டுக்கு வந்துரு ஒரு வாரம் லீவ் சொல்லிடு” என்று மெசேஜ் அனுப்பியிருந்தார். எதற்கென்று கேட்கும் தைரியமின்றி அவள் பார்கவைநோக்கி கேள்வியை அனுப்ப,

தருண் அவளைப் பார்க்க விரும்புவதாகவும், அதனால் அவன் குடும்பத்தினர் அவர்களை விருந்திற்கு அழைப்பதாகவும் பார்கவ் சொல்ல, கைகளைப் பிசைந்துகொண்டவள் கனவிலும் தருணை காண விரும்பவில்லை.

அண்ணனுக்கும் அப்பாவிற்கும் பதில் அனுப்பாமல் மௌனமாகவே நாட்களைக் கடத்தினாள்.

அன்று நேராக அவளிற்குக் கால் செய்த அவள் தந்தை அன்றிரவே அவளைக் கிளம்பும்படி வற்புறுத்த,

“இந்த வாரம் நிறைய வேல, லீவ் கிடைக்காது ப்ளீஸ்” என்று அவள் கெஞ்ச, தொலைப்பேசியைப் பிடுங்கி,

“பரவால்ல நாம சென்னைல மீட் பண்ணலாம்” என்ற தருணின் குரலில் ஆணி அடித்ததைப் போல் அமர்ந்தவள் உடம்பெல்லாம் நடுங்கப் பதில் தராமல் மயக்கமானாள்.

மயக்கம் தெளிந்து கண்விழித்தபோது அவள் மருத்துவமனையில் இருக்க, எதிரே நாற்காலியில் தலைக்கு முட்டுக்கொடுத்து அமர்ந்திருந்தான் ஆதன்.

“ஆதன்…” பலமற்ற அவள் அழைப்பில் நிமிர்ந்தவன் வேகமாகவே அவளை நெருங்கினான்.

“என்னாச்சு சஹா? பயந்துட்டேன்” அவளை நோக்கிக் குனிந்து, “என்னமா ஏதாவது பிரச்சனையா?” என்றான் கவலையாக.

“அதெல்லாம் இல்ல” கண்களை மூடி ஆழ்ந்து சுவாசித்தவள், இவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்று தயங்க, அவள் மொபைல் ஒலிக்க, அழைப்பை ஏற்ற ஆதன், “ஆமா அந்த ரூம் தான் வாங்க” என்றான்.

“யாரு?” அவள் பதற,

“பார்கவ், ஆன் தி வே” என்றான் அவள் மொபைலை மேஜையில் வைத்தபடி.

“ஐயோ அவனுக்கேன் சொன்னீங்க? கடவுளே ஒரு மயக்கத்துக்கு இவ்ளோ அக்கப்போரா?” அவள் கோவித்துக்கொள்ள,

“ஏன் சொல்ல மாட்டே? பாதி நாளுக்கு மேல மயக்கமா கிடக்க, வீட்டுக்கு சொல்லாம எப்படி? உன் பேரெண்ட்ஸ் விட அண்ணன் பெஸ்ட்னு தோணவே அவனுக்கு சொன்னேன்”

வாதிட வாயைத் திறந்தவள் இதழில் ஒற்றை விரலை வைத்து அழுத்தியவன், “ஃப்ரியா விடு” என்னும் பொழுதே, கதவைத் திறந்துகொண்டு பரிதவிப்புடன் வந்தான் பார்கவ்.

தங்கையை நெருங்கியவன் வேகமாக அவளை ஆராய,

“ஒன்னும்மில்ல சும்மா மயக்கம்” ஆதனை முறைத்தபடி சஹானா சொல்ல, சமாதானம் ஆகாமல் கவலையைக் கொட்டித்தீர்த்தான் பார்கவ்.

“ரிலேக்ஸ்” என்று ஆதன் அவன் தோளைத்தொடும் வரை தன்னையும் தங்கையையும் தவிர வேறொருவன் அறையில் இருப்பதை மறந்திருந்தான்.

“ரொம்ப நன்றி சார்!” ஆதனின் கையைப் பற்றிக்கொண்டு பார்கவ் உணர்ச்சிவசப்பட, சம்பிரதாய பேச்சுக்களில் ஆண்கள் இருவரும் இருக்க, சஹானாவோ தருண் பற்றி நினைவு வந்ததுமே தன்னையும் மீறி அலறிவிட,

“என்ன பண்ணுது?” பார்கவிற்கு முன்னே பாய்ந்தான் ஆதன்.

“என்னடி ஆச்சு? எதையாவது இல்ல யாரையாவது பார்த்து பயந்திட்டியா?” பார்கவ் கவலையானான்.

“பார்க்கலாம் இல்ல… குரலை கேட்டு தான்” என்றவள் சோர்வாகச் சாய்ந்துகொள்ள,

“முத்திப்போச்சா! என்னடி இது? இதுக்கு ஒரு தீர்வே இல்லையா?” பார்கவ் அவள் கையைப் பற்றிக்கொண்டான்.

“இதுக்குத்தான் அடிக்கடி அடிச்சுக்கிட்டேன் டாக்டரை பாருன்னு, ஏதாவது சாக்கு சொல்லி என் வாயை மூடிடுவா” ஆதனும் துவங்க, அவர்களின் விடாத நச்சரிப்பில்,

‘இருக்க பிரச்னையில இதுங்க வேற!’ விட்டத்தை கோவமாகப் பார்த்தபடி படுத்துவிட்டாள் சஹானா.

சிறிது நேரத்தில் அறையை விட்டு ஆதன் வெளியேற, பார்கவ் யோசனையாய் ஜன்னலுக்கு வெளியே பார்த்திருந்தான்.

“பார்கவா!” அவள் அழைப்பில் அருகில் வந்து நின்றான் பார்கவ்.

“ஏன்டா ஒண்ணுமே பேசமாட்டேங்கற?” ஏக்கமாகக் கேட்டவள் தலையை மென்மையாக வருடியவன்,

“என்னாச்சுன்னு கேட்டா, எப்போவும் போல எதுவும் சொல்ல போறது இல்ல.

எனக்கும் கேட்டு கேட்டு வெறுப்பா இருக்கு. என் தங்கைக்கு என்னன்னு கூட எனக்கு தெரியல. நானல்லாம் என்ன அண்ணனோன்னு இருக்கு!”

“டேய் ஏன்டா…”

“பின்ன என்ன? ஆதன் உன்னைப்பத்தி அத்தனை விவரம் கேக்கறான், பதில் சொல்ல தெரியாம அவமானமா இருக்குடி! என்கிட்டே கூட சொல்ல முடியாதபடி அப்படி என்னதான்டி உனக்கு பிரச்சனை?” கோவமும் ஆதங்கமுமாகக் கேட்டுக்கொண்டிருந்தவன் நர்ஸின் வருகையால் பேச்சை நிறுத்தி விலகி நின்றான்.

அவர் வெளியேறும் வரை அமைதியாக இருந்த சஹானா, “சொல்றேன். இப்போ அவசரமா எனக்கு ஒரு ஹெல்ப் ப்ளீஸ்” அண்ணனைக் கெஞ்சுதலாகப் பார்க்க,

“என்ன மா?”

“எனக்கு தருணை பார்க்க விருப்பம் இல்ல, கல்யாணத்துலயும்… உன்னால ஏதாவது செய்ய முடியுமா?”

“என்னடி பண்ண முடியும்? அடுத்த வாரம் தட்டு மாத்திக்கலாமான்னு கேக்கறாங்க மாமா வீட்ல. உனக்கு கல்யாணம் பண்ணாம எனக்கு பண்ண கூடாதுன்னு அந்த கருணா பெரிப்பா கிளப்பிவிட்டு இப்போ இங்க வந்து நிக்குது!”

“அவங்களைலாம் யாருடா கூப்பிட்டா இப்போ?” கோவமாக எழுந்து அமர்ந்தாள்.

“யார் கூப்படணும்? நம்ம வீட்ல என்ன நடந்தாலும் அதான் திருவிழா கூட்டம் மாதிரி வந்து நிக்குறாங்களே?” பார்கவ் எங்கோ பார்த்துப் பல்லைக் கடிக்க,

“உப்ப் ஊர் உலகத்துல தாத்தா பாட்டிவரை தலையிடுவாங்க பரவால்லை! நம்ம வீட்ல மட்டும்தான் நாம எது பண்ணணும்னாலும் இந்த மொத்த கோஷ்டியே சம்மதிக்கணும். நீயும் நானும் பொது சொத்து!”

“என்ன சொத்து?” புன்னகையுடன் நுழைந்த ஆதன், “சாரி காதுல விழுந்தது. டாக்டர் ஒரு நாள் இருக்கிறதுன்னா இருக்கலாம்னு சொன்னார் வேண்டாம்னா டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு சொன்னார். எப்படி இருக்கு உனக்கு?” பார்கவ் மீது பார்வையைத் திருப்பி, “நீங்க என்ன சொல்றீங்க சார்?” என்றான்.

ஆண்கள் தங்களுக்குள் பேசி அவளை மறுநாள் வரை அங்கேயே இருக்கவைக்க முடிவெடுக்க, சஹானாவின் எதிர்ப்புகள் எடுபடவில்லை.

“நீங்களே முடிவு பண்ணிக்க என்னை எதுக்கு கேக்கணும்?” என்றவள் புலம்பல்,

டிவியில் கிரிக்கெட் பார்த்தபடி, ஆதனின், “என்னடா பேட்டிங்ன்னு பிட்சை பெருக்கிகிட்டு இருக்கீங்க?”யிலும்,

பார்கவின் “நான் இந்த சட்டை போட்டாலே இவனுங்க மொக்க வாங்குவாங்க சார்” றிலும் வலுவற்றுப்போனது.

‘நான் ஒருத்தி படுத்துட்டு கிடக்கேன் இதுங்க என்னடான்னா கிரிக்கெட்! அதுவும் இந்தியா கூட விளையாடல!’ கோவமாகச் சுவரின் பக்கம் திரும்பிக்கொண்டாள்.

மதியம் பார்கவ் மூவருக்குமாக உணவு வாங்கிவருதாக வெளியே சென்ற இடைப்பட்ட நேரத்தில் சஹானாவை எழுப்பினான் ஆதன்.

“பார்கவா…தூங்க விடுடா” கண்களை திறக்காமல் ஆதனின் கையை தட்டிவிட்டாள்.

“ஹே சஹா, எழுத்துரு அப்பறம் பார்கவ் வந்துடுவான்” மீண்டும் அவன் எழுப்ப, கொஞ்சமாக திறந்த கண்களால் அவனை பார்த்தவள், “சாரி அண்ணான்னு” கண்களை கசக்கியபடி கண்திறந்தாள்.

“என்ன ஆச்சு கார்த்தாலே நல்லாதானே இருந்த? பார்கவ் நீ என்னனு சொல்லலைனு வருத்தப்பட்டார், என்கிட்டயாவது சொல்லு சீக்கிரம் என்ன ஆச்சு?” அவசர படுத்தினான்.

தூக்க கலக்கத்தில் இருந்தவளோ, சில நொடிகள் குழப்பமாக தலையை கலைத்தபடி யோசித்தாள். தருணின் நினைவு வர சில்லென்றன உடல் நடுங்க,

“அது அப்பா ஃபோன் பண்ணிருந்தப்ப… அவன் பேசினான்…”

“யாரு தருணா ?” ஆதன் குறுக்கிட, ஆமென்று தலையசைத்தாள்.

எதுவும் பேசாது முகம் இறுகி பேண்ட் பேக்கெட்டில் கைவிட்டுக்கொண்டு இங்கும் அங்கும் நடந்தவன், கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி கொண்டிருந்தான்.

“என்னாச்சு?”

சஹானாவை ஒரு முறை பார்த்தவன், “பார்கவுக்கு இதெல்லாம் தெரியுமா?” யோசனையாய் கேட்க, அவள் மறுப்பாக தலையசைத்தாள்.

மொபைலை எடுத்து ஒரு முறை பார்த்தவன், “ஏன் பார்கவ் கிட்ட சொல்லல? சொல்லியிருந்தா அவராவது ஏதாவது செய்வார்ல? உங்கண்ணா தானே?” முறைக்க,

“இதெல்லாம் எப்படி அண்ணாகிட்ட சொல்ல முடியும்?”

“ஏன் முடியாது? உனக்குன்னு உன் வயசுல இருக்குறது பார்கவ் தானே?” அவன் புருவம் சுருக்க,

“அதுக்காக அவன் கிட்ட சொல்ல முடியுமா?” கிண்டலாகவே கேட்டாள்.

“கண்டிப்பா! சொல்லி இருக்கணும் நீ!”

“சங்கடமா இருக்காதா? மோரோவர் ஏற்கனவே அவனுக்கு எங்க வீட்ல நிம்மதி இல்ல. இதுல இதெல்லாம் சொல்லி அவனை கஷ்டப்படுத்த புடிக்கலை” மனம் பாரமாக அதில் இமை தாழ்த்தினாள்.

“என் கிட்ட சொன்ன?” முறைக்க,

“என்ன பண்ணி தொலைகிறது? நீங்க தான் எல்லாத்துக்கும் காரணம்னு தலைல போட்டுக்கிட்டு கவலை படுறீங்களேன்னு சொன்னேன்” அவளும் முறைத்தாள்.

“நீ என்ன சொன்னாலும் எனக்கு சமாதானம் ஆகல! என் தங்கைக்கு ஒரு பிரச்சனைனா அவ என் கிட்ட மொதல்ல சொல்லணும்னு தான் நான் நினைப்பேன். பார்கவுக்கும் அப்படி தானே இருக்கும்?”

“இப்ப என்ன செய்யணும்? அவன் கிட்ட போயி அண்ணா அண்ணா ஒருத்தன் என்னை பலவருஷத்துக்கு முன்னாடி ரேப் பண்ண வந்தான் அவனையே வீட்ல மாப்பிள்ளையா பிக்ஸ் பண்ணிருக்காங்கன்னு சொல்லவா?” பழிப்புக்காட்டியபடி சொன்னவள், “என்னால முடியாது!” என்று முகத்தை திருப்பிக்கொள்ள,

மொபைலை பார்த்தவன், “ஊப்ஸ்!” என்று கையால் வாயை பொத்திக்கொண்டு, திரையை திருப்பி அவளிடம் கட்டியவன், பார்கவ் அழைப்பை துண்டித்தான்!

“ஆதன்!” கோவமாக எழ முயற்சித்தவளை அவனை நெருங்க விடாமல் ட்ரிப்ஸ் வொயர் தடுத்தது.

தோளை குலுக்கி கண்சிமிட்டியவன், “குடும்பத்துக்குள்ள இதெல்லாம் மறைகிறது தப்பு! அட்லீஸ்ட் கூட பிறந்தவங்க கிட்டயாவது மனசு விட்டு பேசணும்!”

“உங்களை யாரு முந்திரிகொட்டை வேலை பண்ண சொன்னது?” கையில் குத்தியிருந்த ஊசியின் வலியில், இயலாமையுடன் முகம் வாடினாள்.

“பார்கவோட காலை அட்டென்ட் பண்ணாம கட் தான் பண்ணேன், இனியாவது பேசு வந்ததும்” என்றான்.

***

ஆதன் உணவிற்கு பிறகு கம்பெனிக்கு சென்றுவிட, பார்கவுடன் தனியே மருத்துவமனை அறையில் இருந்தவள் மருந்தின் வீரியத்தில் உறங்கிவிட்டாள்.

இரவு சிலநிமிடங்கள் பொதுவாக பேசிக்கொண்டிருந்தவள், எப்படி துவங்குவதென்று யோசித்திருக்கயில்,

“பேசிட்டியா?” ஆதனின் வாட்ஸ்சப் வர,

“இல்ல” என்று அனுப்பினாள்.

“உனக்கு முப்பது நிமிஷம் தரேன் எல்ஸ் நான் பேச வேண்டி வரும்!” எச்சரித்தான்.

‘இவனோட தலைவலியா போச்சு! எல்லாம் உன்னாலதான்னு சொல்லி இருக்கனும்!’ நொந்துகொண்டவள், “ம்ம்” என்று பதில் அனுப்பினாள்.

பெற்றோருடன் பேசிவிட்டு அவள் அருகில் வந்து அமர்ந்த பார்கவ்.

“கொஞ்சம் தாம் தூம்னு குதிக்கிறாங்க. ஒன்னும் இல்ல நாளைக்கு டிஸ்சார்ஜ்ன்னு சொல்லிருக்கேன்”

“என்னவாம்?”

“விஷயம் தெரிஞ்சா அப்பாவி பையன் தலைல மனநோய்… அது… அவங்க தலைல கட்ட பாக்குறீங்கன்னு கேப்பாங்களாம்!” என்றவன்,

“அவங்க கேக்கறாங்களோ இல்லையோ இவர் போதும்!” கோவமாக மொபைலை மேஜையில் எறிந்தான்.

பார்கவிடம் சொல்லாமல், விஷயத்தை ஒத்தி போடுவது நல்லதென்று எதுவும் சொல்லாது அமைதியாக உறங்கி விட்டாள்.

சரியாக அரைமணிநேரம் கழித்து ஆதனின்,

“பார்கவ் கிட்ட உண்மையை சொல்லிட்டியா? இல்லைனா நான் சொல்ல வேண்டி வரும்!” என்ற மெசேஜை பார்த்த பார்கவ், ‘தன் தங்கையை வேறொருவன் மிரட்டுவதா?’ கோவமாக அவனை அழைத்தான்.

“ஹே சஹா எல்லாத்தையும் சொல்லிட்டியா?” ஆதன் பரபரக்க,

“பார்கவ் பேசறேன்!” என்றான் அடிக்குரலில்.

‘ஷிட்!’ நெற்றியில் தட்டிக்கொண்ட ஆதன், “ஹாய்! அது… அது…” தயங்க,

“எனக்கு என்னாமோ கற்பனை ஓடுது, என்னனு நீங்களா சொல்லிடீங்கன்னா நல்லது சார்!” பார்கவ் எச்சரிக்க,

“ப்ளீஸ் டோன்ட் மிஸ்டேக் மீ!” வேகமாக சொன்னவன், “பக்கத்துல சஹானா இருக்காளா?” ரகசியமாக கேட்டான்.

“தூங்கறா! எதுக்கு? எதை மறைக்க?” என்று குரல் உயர்த்த,

“ஸ்ஸ்ஸ் ப்ளீஸ் பார்கவ்! ஃபோன்ல சொல்ற விஷயம் இல்ல இது. நான் அங்க வரேன் நீங்க சத்தம் போடாம ஹாஸ்பிடல் வாசலுக்கு சரியா ஒரு இருவது நிமிஷத்துல வாங்க”

“ம்ம்” என்றவன், பொறுமையின்றி நர்ஸிடம் கொஞ்சநேரத்தில் வந்துவிடுவதாக சொல்லிவிட்டு உடனே ஹாஸ்பிடல் வாசலில் ஆதனுக்காக காத்திருக்க துவங்கினான்.

சொன்னதுக்கு முன்பாகவே பார்கவின் முன்பு வேகமாக வந்து நின்றது ஆதனின் கார்!

***