id-12

id-12

26

பிரம்மாஸ்திரம்

விடிந்தவுடன் விந்தியா புறப்பட தயாராகிக் கொண்டிருக்க ஆதித்தியா அவளைப் போக வேண்டாம் என தடுத்தான். முடிந்த வரை சீக்கிரம் வந்துவிடுவதாகச் சொல்ல அப்படியும் ஆதித்தியா சமாதனமாவதாகத் தெரியவில்லை. கடைசியில் ஆதித்தியா விந்தியாவின் பிடிவாதத்திற்கு ஒத்துப்போக வேண்டியே இருந்தது.

விந்தியா அன்று ஹோட்டலுக்கு வந்தது சிவா கேட்ட ஆதாரத்தை வேறு யாரின் கையிலும் கிடைக்காமல் தானே அவனிடம் கொடுக்க வேண்டுமே என்ற அவசியத்தால்.

நேராக அவள் தன் அறைக்குள் நுழைந்தவுடன் மேனேஜர் ரமேஷை அழைத்தாள்.

ரமேஷ் உள்ளே நுழைந்தவுடன், “ஆதித்தியா சார் எப்படி இருக்காரு?” என்று நலம் விசாரித்தான்.

ஹி இஸ் பைஃன்… நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடுவார். அப்புறம் ரமேஷ் நான் பழைய சிசிடிவி ரெக்காடிங்ஸை பேக்அப் எடுக்கச் சொன்னனே… அந்த ரெக்காடிங்ஸ் வந்துருச்சா?”

எஸ் மேடம்” என்று சொல்லிவிட்டு ரமேஷ் ஒரு சீ. டி யை அவளிடம் தயக்கத்தோடு கொடுத்தான்.

தேங்க்ஸ் ரமேஷ்!” என்று சொல்லிவிட்டு சீ. டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

மேடம்… ஒரு நிமிஷம்… அந்தச் சீ. டி எதுக்குனு நான் தெரிஞ்சிக்கலாமா?”

விந்தியா அவன் ஏன் கேட்கிறான் எனப புரியாதவளாய், நம் ஹோட்டலில் நடந்த டெத் பத்தின விசாரணைக்காக போலிஸ் கிட்ட கொடுக்கணும்

ரமேஷுக்கு முகமெல்லாம் வியர்த்துப் போனது.

அந்த ஆக்ஸிடென்ட் நடந்த போதே போலீஸ் கேட்ட எல்லா ஆதாரத்தையும் கொடுத்தாச்சு

அத பத்தி எனக்குத் தெரியல ரமேஷ்… அப்போ கொடுத்த ஆதாரத்தில் தப்பு இருக்குனு இன்ஸ்பெக்டர் சிவா பீஃல் பண்றாரு… அதை நாமதானே தெளிவுபடுத்தனும்” என்று சொன்னாள்.

ரமேஷின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்டவளாய், “நீங்க ஏன் இத்தனை கேள்வி கேட்கீறீங்கஇந்த ஆதாரத்தினால் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள் விந்தியா.

இல்ல மேடம்… அது உங்களுக்குத்தான் பிரச்சனை” என்றான்.

எனக்கு பிரச்சனையா?” என்று குழப்பமாகக் கேட்டாள்.

நீங்களே அந்த சீ.டியை போட்டு பாருங்க” என்றான்.

அப்படி என்ன இருந்துவிட போகிறதென ஆவலுடன் அந்த சீ. டியை தன்னுடைய லேப் டாப்பில் போட்டு பார்த்தாள். அவள் சொன்ன குறிப்பிட்ட தேதியில் ஹோட்டல் முழுக்க உள்ள கேமராக்களின் பதிவுகள் அடங்கியிருந்தன.

ரமேஷ் சொன்னபடி கேமரா நம்பர் 61 பதிவை திறந்து பார்த்தாள். அறை எண் 603 கதவு பளிச்சென்று தெரிந்தது.

இரவு வெகு நேரம் கழித்துக் கேத்ரீன் தள்ளாடிக் கொணடு நுழைய அவள் போன சில நொடிகளில் ஆதித்தியாவும் பின்னோடு நுழைந்தான். அதைப் பார்த்த கணத்தில் விந்தியா அப்படியே உறைந்து போனாள்.

என்ன நடந்தது என்று யூகிக்க முடியாமல் தலை மேல் பெரும் பாரம் இறங்கியது. இவைகளுக்கான விளக்கம் என்ன என்பது போல் கேள்வி குறியோடு ரமேஷை பார்க்க அவன் நடந்ததைத் தெளிவாக உரைத்தான்.

சந்திரகாந்த் சார் வெளிநாட்டுக்கு ஒரு ஆர்டர் விஷயமா போயிருந்த சமயத்தில் ஆதித்தியா சார்கிட்டதான் பொறுப்பை கொடுத்துட்டு போனாரு. அந்த இன்சிடன்ட் நடந்த நைட் மிஸ். கேத்ரீன் குடிச்சிட்டு வந்து ஆதித்தியா சாரை மீட் பண்ணனும் என்று ரொம்பக் கலாட்டா பண்ணாங்க… பட் நான் அலோவ் பண்ணல.

அப்புறம் கேத்ரீன் போன பிறகு நான் அவங்க கொடுத்த விசிட்டிங் கார்ட்டை கொடுத்தேன். அப்புறம் கேத்ரீன் அதிகப்படியான போதையில் வந்தது பற்றியும் சொன்னேன்.

 உடனே ஆதித்தியா சார் என்கிட்ட எதுவும் சொல்லாம வேகமா போயிட்டாரு… அந்த நேரத்தில்தான் ரூம் நம்பர் 603 ல் இருந்து ஒரு பெண் தவறி விழுந்துட்டதா நீயூஸ் வந்துச்சு.

அந்த நேரம் பார்த்து ஆதி சார் எங்க போனாருனு தெரியல. நான் உடனே சமுத்திரன் சாருக்கு போன் பண்ணேன். அவர் வந்த பிறகுதான் இறந்தது கேத்ரீன் என எனக்குத் தெரிய வந்தது மேடம்” என்று அன்று நடந்த சம்பவத்தைச் சொல்லி முடித்தான்.

ஓகே… அந்த சீசிடிவி ரெக்காட்டிங்க்ஸை மாத்தினது யாரு?”

சமுத்திரன் சார்கிட்ட கேத்ரீன் ஆதித்தியாவை மீட் பண்ண வந்ததைப் பத்தி நான்தான் சொன்னேன். அப்புறம் சமுத்திரன் சார்தான் இந்தப் பிராப்ளத்தை சால்வ் பண்ணறதுக்காக…” என்று சொல்லி முடிக்கும் போதே விந்தியா கோபமானாள்.

அந்த சமுத்திரன் கிரிமனல் லாயரா இல்ல கிரிமனலா?” என்றாள்.

இல்ல மேடம்… ஆதித்தியா சாரை காப்பாற்றத்தான்

ஸ்டாப் ட் ரமேஷ்… தானா நீந்தி கரையேறுபவனை காப்பாத்துறேனு தண்ணில அமுக்கி கொல்ற மாதிரி இருக்கு… நீங்க சொல்ற கதை

ரமேஷ் அப்படியே மெளனமாய் நின்றான். விந்தியா தீவரமாய் யோசித்து விட்டு சொன்னாள்.

வேற வழியே இல்லை… இந்த சீடியை போலீஸ்கிட்ட கொடுத்துதான் ஆகணும்” என்றாள்.

மேடம் ஆதித்தியா சார்…

பொய் எதுக்கும் தீர்வில்லை ரமேஷ். உண்மையை மறைப்பது நமக்கு மேலும் மேலும் சிக்கலைத்தான் அதிகமாக்கும்” என்று விந்தியா சொல்லிவிட்டு சோர்வுடன் தலையில் கை வைத்து கொண்டாள். ரமேஷ் அவளை தனிமையில் விட்டுவிட்டு அங்கிருந்து அகன்றான்.

இங்கே விந்தியா கவலையோடு வீழ்ந்து கிடக்கஅங்கே தித்தியா தவிப்புடன் காத்துக் கிடந்தான்.

ஆதித்தியாவிற்கு விந்தியா இல்லாத நொடி பொழுதும் யுகங்களாய் தோன்றியது. சந்திரகாந்தும் சமுத்திரனும் ஆதித்தியாவை பார்க்க வந்த போது அங்கே விந்தியா இல்லாதது அவர்களுக்கே அதிர்ச்சியா இருந்தது. கடைசியில் அன்று இரவு சமுத்திரனே ஆதித்தியாவோடு தங்கினான்.

விந்தியாவிற்கு அப்படி என்ன முக்கியமான வேலை வந்திருக்கும்… அதுவும் உன்னைக் கூட கவனிச்சிக்க முடியாத அளவுக்குஎன்று ஆதியை தூண்டி விட்டான் சமுத்திரன்.

இங்க அவ வராமல் இருக்கானா… அதுக்கு ஏதாவது முக்கியமான ரீஸன் இருக்கும்” என்றான் ஆதித்தியா. அதற்கு மேல் விந்தியாவைப் பற்றி எதுவும் பேசாமல் சமுத்திரன் அமைதியானான்.

அன்று இரவு கோவாவிலிருந்து சிவாவும் வேணுவும் சென்னை வந்து இறங்கினர்.

சிவா வீட்டை அடைந்த போது அங்கே விந்தியாவை எதிர்பார்க்கவில்லை. அவள் சோபாவில் அமர்ந்து கொண்டு சிந்துவோடு விளையாடிக் கொண்டிருந்தாள். சிவா வந்ததும் தன் பொருட்களை எடுத்து வைத்து விட்டு உடை மாற்றிக் கொண்டு வந்தான்.

அதற்குள் சிந்து விந்தியாவின் கைகளிலேயே உறங்கிப் போகவனிதா அவளைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் சென்றுவிட்டாள்.

விந்தியாவும் சிவாவும் வெகு நேரம் மௌனமாகவே இருக்க முதலில் சிவா அவன் மனதில் தோன்றியதை கேட்டான்.

ஏதோ கேட்கணும்னு வந்துட்டு இப்படியே அமைதியா இருந்தா என்ன அர்த்தம் விந்து?”

பேக்கில் இருந்த சீடியை அவனிடம் நீட்டினாள்.

கேட்க வரல… கொடுக்க வந்திருக்கேன். இது என் கையில் இருந்தா தேவையில்லாத டென்ஷன்… பிடி… நான் கிளம்பணூம்

நீ டென்ஷனாகிற அளவுக்கு அப்போ இந்த சீடில ஏதோ இருக்கு… நீ தேடி கண்டுபிடிச்சி கட்டிக்கிட்டியே அந்த நல்லவன் சம்பந்தப்பட்ட ஆதாரமா?”

சிவா அந்த ஆதாரத்தைப் பார்க்காமலே சரியாக யூகித்தான்.

இதான் டைம்னு குத்திக் காட்டுறியா?” என்றாள் விந்தியா.

அதெல்லாம் இல்ல… இந்த ஆதாரம் என் கைக்கு வந்துட்டா அப்புறம் நடக்கப் போகிற எதையும் என்னாலயும் தடுத்து நிறுத்த முடியாது

கோ ஹெட்… ஆதித்தியா தப்பு செய்யலனா இந்த ஆதாரத்தால் அவரை ஒண்ணும் செய்ய முடியாது” என்று சொல்லியபடி விந்தியா சீடியை அவன் அருகில் வைத்து விட்டு புறப்பட்டாள்.

ரொம்ப லேட்டாயிடுச்சு… நானும் துணைக்கு வர்றேன்

இல்ல… வேண்டாம்… காரிலதான் வந்தேன். இனிமே நீ எனக்கு துணைக்கு வர முடியாது… உன் வழியும் என்னோட வழியும் வேற வேறாயிடுச்சு” என்று சொல்லிவிட்டு விந்தியா புறப்பட அவள் சென்ற வழித்தடத்தைப் பார்த்தபடி நின்றிருந்தான்.

விந்தியா வீட்டை அடைந்ததும் சந்திரகாந்த் வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார்.

என்னம்மா இவ்வளவு லேட்டாயிடுச்சு…” என்றார்.

நான் அத்தை வீட்டுக்கு போயிட்டு வந்தேன்

ஒ அப்படியா! சரி பரவாயில்ல… நாளைக்குக் காலையில் ஆதிக்கு டிஸ்சார்ஜ்… நீயும் வர இல்ல

இல்ல மாமா… நீங்க போயிட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு மாடியிலிருந்த தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

சந்திரகாந்திற்கு அவளின் போக்கே விளங்கவில்லை.

விந்தியாவிற்கு அந்த அறையின் வாசனையும் ஆதித்தியாவை நினைவுப்படுத்தியது. அன்றைய நீண்ட இரவும்தனிமையும் விந்தியாவிற்குப் பெரும் வலியாக இருந்தது.

ஆதித்தியா விழித்திருக்கும் அந்த இரவு விளக்குகளோடு அவனும் விந்தியாவைப் பற்றி நினைத்தபடி விழித்திருந்தான்.

பொழுது விடிந்து விட்ட போதும் விந்தியாவை சூழ்ந்திருந்த குழப்பங்கள் இருளாய் படர்ந்திருந்தன. வாசலில் கார் நின்ற சத்தம் கேட்க ஆதித்தியாவின் வருகை விந்தியாவை மேலும் கலவரப்படுத்தியது.

அவனிடம் எதற்கான விளக்கத்தைக் கேட்பது… நடக்கும் பிரச்சனையை எப்படி விவரிப்பது என்று புரியாமல் திணறினாள்.

சிவா தன்னிடமிருந்த அந்த ஆதாரத்தை வேணு மகாதேவனிடம் காண்பித்தான்.

வெல் டன் சிவா… கிரேட்…” என்று ஆரவாரித்தார்.

சிவாவின் மனிதில் துளி கூட சந்தோஷம் ஏற்படவில்லை.

இந்தக் கேஸோட பெரிய முடிச்சு அவிழ்ந்திடுச்சு. நம்ம கையில சிக்கியிருக்கிறது பிரம்மாஸ்திரம் சிவா… சரியா உபயோகப்படுத்தணும். இனி ஆதித்தியாவோட பிடி நம்ம கையில” என்றான் வேணு அதீத உற்சாகத்தோடு.

இந்த ஆதாரத்தை மட்டும் வைச்சு நாம ஆதியை குற்றவாளினு சொல்ல முடியாது” என்றான் சிவா

அது நமக்கு தேவையில்லாத விஷயம்… ஆதித்தியா குற்றவாளியா இல்லையா என்பதை கோர்ட் முடிவு பண்ணிக்கும்… நான் கமிஷனரை பார்த்துட்டு வர்றேன்… கெட் ரெடி சிவா… நாம ஆதித்தியா வீட்டுக்கு போகணும்” என்றார்.

விந்தியாவின் முன்னிலையில் ஆதித்தியாவை கைது செய்யப் போகும் தருணத்தை நினைத்தாலே சிவாவிற்கு நிலை தடுமாறியது.

ஆதித்தியா ரொம்பவும் பொறுமையாக தன் அறைக்குள் நுழைந்தான். அவனுடைய வலது காலில் லேசான வலியிருந்தது. உள்ளே நுழைந்ததும் அவன் பார்வை விந்தியாவைத் தேடியது.

அவள் சோபாவில் கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு தலையைச் சாய்த்தடி துவண்டு இருந்ததைப் பார்த்து அவனுக்கும் இனம் புரியாத சோகம் தொற்றிக் கொண்டது.

மெல்ல நடந்து வந்து அவள் நெற்றியில் கை வைத்தான். அவன் தொடுகையை உணர்ந்தவுடன் விந்தியா எழுந்து விலகி நின்று கொண்டாள்.

என்னாச்சு… உடம்பு சரியில்லையா?” என்று ஆதி கேட்கவும், ‘இல்லை என்பது போல் முகத்தைப் பார்க்காமல் தலையாட்டினாள் விந்தியா.

அப்புறம் ஏன் நீ இவ்வளவு டல்லா இருக்கே?”

நான் நல்லாதான் இருக்கேன் ஆதி

எனக்கு அப்படித் தோணல

என்னைப் பத்தி விடுங்க… உங்களுக்கு காலில் வலி குறைஞ்சிருக்கா?”

அந்த வலியை விட மனசில ஏற்பட்ட வலிதான் அதிகமாயிருக்கு… காலையிலிருந்து இப்ப வரைக்கும் நீ எனக்கு விஷ் பண்ணுவேன்னு வெயிட் பண்ணிட்டிருக்கேன்… தெரியுமா?”

விந்தியா ஏதோ நினைவுக்கு வந்தவளாய், ஓ சாரி… இன்னைக்குதான் உங்களோட பிறந்த நாளா?”

தெரியாத மாதிரி கேட்கிற? அன்னைக்கே சொன்னேன், மறந்துட்டியா? இட்ஸ் ஓகே… ஒண்ணும் பிரச்சனை இல்லைஎன்றான்.

விந்தியாவிற்குத் துக்கம் தொண்டையை அடைத்தது. ஆதித்தியா அவளின் உணர்வுகளைக் கவனிக்கால் அவன் இடது கையிலிருந்த பூங்கொத்தை நீட்டினான்.

திஸ் இஸ் பாஃர் மை டார்லிங்… என் வாழ்க்கையை மாற்றிய தேவதைக்காக…” என்று சொல்லியபடி ஆதி அழகான அந்தப் பூங்கொத்தை விந்தியாவிடம் நீட்டினான்.

அழகான சிவப்பு நிற ரோஜாக்கள் கொண்ட பூங்கொத்தோடு ஆதித்தியா நிற்க அந்தத் தருணத்தின் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் விந்தியா தவித்தாள்.

27

நட்பும் காதலும்

ஆதித்தியா பூங்கொத்தை நீட்டி கொண்டிருக்க விந்தியா நடக்கப் போவதை எண்ணி பயம் கொண்டவளாய் நின்றாள். அவளின் கவலை புரியாமல் விந்தியாவின் செயல் குறித்து அவனே அர்த்தம் கற்பித்துக் கொண்டான்.

இதை வாங்கிட்டா நான் உன்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துப்பேனோன்னு பயப்படுறியா? உன்னோட அனுமதி இல்லாம என் விரல் நகம் கூட உன் மேல படாது… பிராமிஸ்” என்றான்.

நான் அப்படியெல்லாம் யோசிக்கல ஆதி” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சண்முகம் வந்து கதவை தட்டினார்.

விந்தியா சென்று கதவை திறக்க ஆதித்தியா பூங்கொத்தை படுக்கை மீது வைத்தான்.

ஆதி ஐயாவை பெரிய ஐயா கூப்பிட்டாரு” என்றான் சண்முகம்.

எதுக்கு?” என்று ஆதி கேட்டுக் கொண்டே சண்முகத்தை நெருங்கி வந்தான்.

கீழே போலீஸ் வந்திருக்காங்க… ஏதோ கேஸ் விஷயமா உங்களை பார்க்கணுமாம்” என்றான்.

என்னை பார்க்கணுமா?” என்று அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டே ஆதித்தியா கீழே சென்றான்.

விந்தியாவிற்கு கீழே போகவே தயக்கமாய் இருந்தது. நடக்கப் போவதை தடுக்க முடியாது எனும் பொழுது ஆதியின் நிலைமையைப் பார்க்கவும் சிவாவின் சங்கடத்தை எதிர்கொள்ளவும் முடியாமல் விந்தியா அறையின் உள்ளேயே தங்கி விட்டாள்.

வேணு மகாதேவன் வெளியில் காத்திருக்க சிவா மட்டும் உள்ளே நுழைந்தான். விந்தியா ஆதித்தியாவை திருமணம் செய்து கொண்டதினால் அந்த வீட்டிற்குள் வர விருப்பமில்லாமலிருந்த சிவாவிற்கு இப்படி ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

சிவா சந்திரகாந்திடம் நடந்தவற்றை விளக்கமாகக் கூற அதை நம்ப முடியாமல் அதிர்ச்சியானார். ஆதித்தியா இப்படிப்பட்ட செயலை செய்யக் கூடியவன் அல்ல என்ற உறுதியான நம்பிக்கை இருந்த போதும் மனம் கலக்கமுற்றது.

ஆதித்தியா நேராக இறங்கி வந்து சிவாவை எதிர்கொண்டு நின்றான்.

என்ன விஷயம்?” என்றான் ஆதி.

கேத்ரீனோட கேஸில் நீங்கதான் குற்றவாளினு சந்தேகமா இருக்கு… உங்களுக்கு எதிரா பலமான ஆதாரங்கள் இருக்கு மிஸ்டர். ஆதி. சோ… பிரச்சனை பண்ணாம நீங்களே வந்துட்டா நல்லா இருக்கும்” என்றான் சிவா

சந்திரகாந்த் ஆதிக்காக சிவாவிடம் பரிந்து பேசி கொண்டிருக்க ஆதித்தியா நடப்பவை எல்லாம் என்னவென்று புரியாமல் சிலையாக நின்றிருந்தான்.

சாரி… என்கிட்ட நீங்க பேசுறது வேஸ்ட். நீங்க யாராவது ஒரு லாயர கன்ஸல்ட் பண்ணுங்க. இப்ப நாங்க ஆதியை அழைச்சிட்டு போறோம். போலாமா மிஸ்டர். ஆதி” என்று சிவா அழைத்ததும் ஆதித்தியா மெளனமாக நடந்தான்.

ஒரு புறம் விந்தியாவிடம் இந்த விஷயத்தை எப்படி புரிய வைப்பது என்பது பற்றிய கவலையும் கேத்ரீனின் இறப்பு பற்றிய குழப்பமும் அவனை வேதனைக்குள்ளாக்கியது.

சந்திரகாந்த் உடனே சமுத்திரனை தொடர்பு கொண்டு நடந்த அனைத்தையும் விளக்கமாகக் கூறினார். விந்தியா மாடியிலிருந்து இறங்கி வராமல் இருந்தது சந்திரகாந்த்திற்கு புரியாத புதிராய் இருந்தது. அவளுக்கு ஆதித்தியாவை கைது செய்யப் போவது பற்றி முன்னாடியே தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் தோன்றியது.

விந்தியா தன் சோகத்தை மறைத்தே பழகியவள். இம்முறையும் அவள் மனதில் உள்ள வேதனையை வெளிக்காட்டாமல் புழுங்கி கொண்டிருந்தாள் என்பது யாரும் அறிந்திருக்க வாயப்பில்லை.

வேணு மகாதேவன் எதிரே ஆதித்தியா அமர்ந்திருக்க அவர் மனதில் தோன்றிய கேள்வியை அடுக்கடுக்காகக் கேட்க தொடங்கினார். ஆதித்தியா அமர்ந்திருந்த தோரணையில் பயமும் கலக்குமும் இல்லை. ரொம்பவும் இயல்பாகவே வீற்றிருந்தான்.

பணக்கார பசங்கன்னா தலையில இரண்டு கொம்பு முளைச்சிருக்கா என்ன?”என்று கேட்டார் வேணு.

அப்படியா தெரியுது?”என்று வேடிக்கையுடன் தலையைத் தொட்டுப் பார்த்தான்.

யார் முன்னாடி உட்காந்திடிருக்கனு தெரியுதா?”

சொல்லுங்க… தெரிஞ்சிக்கிறேன்” என்றான் ஆதி தயக்கமின்றி.

இதுவரைக்கும் நான் எடுத்த கேஸில தோல்வியே கிடையாது… தப்பு செஞ்சவன் எப்பேர்பட்டவனாய் இருந்தாலும் தண்டனை வாங்கித் தராமல் விடமாட்டேன்“ என்று வேணு சொன்னதும் ஆதித்தியா முகத்தில் புன்னகை மலர்ந்தது.

வேணுவின் பின்னாடி விறைப்பாக நின்றிருந்த சிவா ஆதியின் தெளிவான நடவடிக்கையைப் பார்த்து ஆச்சரியம் கொண்டான்.

கேத்ரீனை உனக்கு எப்படித் தெரியும்?”

நாங்க ரெண்டு பேரும் பேங்களூரில் பிஸ்னஸ் மேனஜ்மென்ட் படிச்சோம். அப்படித்தான் எனக்குக் கேத்ரீனை தெரியும்… ஷி இஸ் மை குட் பிரண்ட்

“ஃபிரண்டுனா உங்க அகராதியில் என்ன அர்த்தம்

எல்லா அகராதியிலும் என்ன அர்த்தமோ… அதேதான் எனக்கும்

வெறும் பிரண்டுன்னா… கேத்ரீன் எதுக்கு முக்கியமான லாக்கரோட பின் நம்பரா உன்னோட பிறந்த நாள் தேதியை வைச்சிருக்கா? ஃபிரண்டுன்னு நினைச்சாஅவ கம்பெனியோட பாதி ஷேரை உன் பேரில எதுக்கு எழுதி வைச்சிருக்கா?”

கேத்ரீன் என்னை விரும்பினா… ஆனா நான் அவளைப் பிரண்டாதான் நினைச்சேன்

சரி அப்படியே இருக்கட்டும்… நீங்க இரண்டு பேரும் பேசிக்க முடியாத அளவுக்கு உங்களுக்குள்ள அப்படி என்ன பிரச்சனை?”

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல ஆதித்தியா கொஞ்ச நேரம் யோசித்தான். அதற்குள் வேணு கோபமடைந்தவராய், என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்கிறியா? கேட்ட கேள்விக்கு கரெக்டா பதில் சொல்லு

ஆதித்தியா நடந்தவற்றை சொல்ல தொடங்கினான்.

நாலு வருஷத்துக்கு முன்னே… படிப்பை எல்லாம் முடிச்ச பிறகு கேத்ரீனும் நானும் புது பிஸ்னஸ் ஆரம்பிக்க நிறைய ஐடியா யோசிச்சு வைச்சிருந்தோம். ஆனா சூழ்நிலை சந்தர்ப்பத்தால் கேத்ரீன் அப்பா அமரேஷ் உடல் நிலை சரியில்லாம இறந்து போனாரு. அமரேஷ் பேஃக்டரியை நிர்வகிக்க வேண்டிய நிர்பந்தம் கேத்ரீனுக்கு ஏற்பட்டது.

கம்பெனி ஷேர்ஸ் எல்லாம் கம்பிளீட்டா டவுனாயிடுச்சு… அந்த நேரத்தில் நானும் கேத்ரீனும் கிட்டதட்ட ஆறு மாதம் பாடாய்பட்டு அமரேஷ் பேஃக்டரியோட வீழ்ச்சியைத் தூக்கி நிறுத்தினோம்.

 அப்ப என் வாழ்க்கையில் இன்னைக்கு மாதிரி அன்னைக்கும் ஒரு மோசமான பிறந்த நாள் வந்துச்சு… எனக்காக அவளுடைய வீட்டில் பார்ட்டி ஏற்பாடு செஞ்சிருந்தா… நிறையப் பிரண்ட்ஸ் வந்திருந்தாங்க… நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

 கேத்ரீன் என்னைக் காதலிப்பதாகவும் அவங்க கம்பெனியோட ஐம்பது சதவீத லீகல் ஷேர் ஹோல்டராக ஆக்குறாதாவும்சொன்னாள். நான் இரண்டையும் நிராகரிச்சிட்டேன்.

கேத்ரீனால் அந்த ஏமாற்றத்தை தாங்க முடியல. ஷீ இஸ் வெரி சென்சிட்டிவ்… போதை தலைக்கு ஏறும் அளவுக்கு குடிச்சிட்டு நிலை தடுமாறி இருந்தவளை அவளோட ரூமில் படுக்க வைச்சிட்டுக் கிளம்பிட்டேன்.

அடுத்த நாள் கேத்ரீன் ரொம்பக் கோபத்தோடு என்கிட்ட சண்டை போட்டா… ஏன் எதுக்குனு ஒண்ணுமே புரியல. கடைசியாகத்தான் எனக்குப் புரிஞ்சுது… யாரோ அவ கிட்ட அன்னைக்கு நைட் தப்பா நடந்துக்கிட்டு இருக்காங்க

தட் மீன்ஸ் சுயநினைவு இல்லாத போது அவளை ரேப் பண்ணிருக்காங்க அப்படித்தானே” என்று கேட்டார் வேணு

ம்… போதையில் இருந்ததால் அவளுக்கு யாருனு தெரியல… அவ்வளவு பெரிய பழியை என் மேல தூக்கி போட்டா. இப்படி ஒரு கேவமான பழியை என்னால தாங்க முடியல… நானும் பதிலுக்கு அவகிட்ட சண்டை போட்டேன். சண்டை முற்றி வாக்குவாதம் பெரிசாகி இரண்டு பேரும் மொத்தமா பிரிஞ்சிட்டோம்

அதுக்கப்புறம் நீ அவளைப் பார்க்கவே இல்லையா?”

அவளோட இறப்புக்கு முன்னாடி நாள் ஹோட்டலில் அவ கிளைன்ட்ஸோட மீட்டிங்கில் இருந்த போது பார்த்தேன். அவளும் என்கிட்ட பேச வரல… நானும் அதைப் பெரிசா எடுத்துக்கல. பட், அந்த ஆக்ஸிடன்ட் நடந்த நைட் கேத்ரீன் என்னை மீட் பண்ண வந்ததாக மேனேஜர் ரமேஷ் சொன்னாரு.

போதாக் குறைக்கு அளவுக்கு அதிகமா குடிச்சிருந்ததாகவும் சொன்னாரு. அவ லிக்கர் சாப்பிட்டா ரொம்ப அப்நார்மலா மாறிடுவா… என் மனசு கேட்கல… அவளோட ரூமுக்கு பத்திரமா போகணுமேன்ற அக்கறையிலதான் அவ பின்னாடி போனேன்…என்று சொல்லிவிட்டுக் கண்களில் நிரம்பிய நீரை துடைத்துக் கொண்டான்.

மீண்டும் ஆதித்தியா சுதாரித்துக் கொண்டு எழுந்தான்.

ஜஸ்ட் ஒன் மினிட் முன்னாடி போயிருந்தாலும் காப்பாத்திருப்பேன். என்னோட பேட் லக்… அவ தவறி விழுந்ததை மட்டும்தான் என்னால பார்க்க முடிஞ்சுது

ஆதித்தியா சொன்ன விஷயங்களை கேட்டபின் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்ட வேணு,

அவ போதையில் இருந்தபோது நீ அவளைக் கெடுத்துட்டனு பழி போட்டதா சொன்ன… அப்படி இருக்கும் போது திரும்பியும் அவ போதையில் இருக்கும் போது அவ பின்னாடி நீ போயிருக்கன்னா… இந்த சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணிக்கவா? அவகிட்ட நீ தப்பா நடந்துக்க முயற்சி பண்ணி அவ உன்னைத் தடுக்கப் போய்த் தவறுதலா கீழே விழிந்திருக்கலாமே

இத்தனை நேரம் இயல்பாக இருந்த ஆதித்தியா அந்த வார்த்தைகளைக் கேட்டு நொறுங்கி போனான். கோபம் அவன் கண்களில் அனலாய் பறந்தது.

நான் நல்ல எண்ணத்தோடுதான் அவ பின்னாடி போனேன்

சரி… நல்ல எண்ணம்னே வைச்சுப்போம்… நீ அவ ரூமுக்கு போன வீடியோ ஆதாரத்தை எதுக்கு நீ எடிட் பண்ணனும்

இதற்கு ஆதித்தியாவிடம் எந்தப் பதிலும் இல்லை. என்ன சொல்வதென்று புரியாமல் மெளனமாய் இருந்தான்.

உன்கிட்ட பதில் இல்லைன்னா… உன் கிட்ட தப்பு இருக்கு மிஸ்டர் ஆதி

நான் எனக்குத் தெரிந்து உண்மை எல்லாம் சொல்லிட்டேன்… நான் அவ ரூமுக்குப் போனதும் உண்மை… அதே போல அவ தானா தவறி விழுந்ததும் உண்மை

உடனே வேணு கோபமடைந்தவராய், “கான்ஸ்டபில் அந்த லத்தியை எடுத்துட்டு வாங்க… அடிச்சா உண்மை எது … பொய் எதுன்னு தானா தெரியும்” என்றார்.

ஆதித்தியா பதட்டமடையாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

த்தியை கையில் வாங்கிய வேணு திரும்பி சிவாவை பார்த்தார். அத்தனை நேரம் ஆதியுடன் நடந்த விசாரணையை தன்னுடைய கைப்பேசியில் பதிவு செய்து கொண்டிருந்த சிவாவிடம் நீட்டினார்.

நீங்க அடிச்சி விசாரிங்க சிவா… அப்படியாவது முழுசா உண்மை பேசுறானானு பார்க்கலாம்

சிவா அந்த லத்தியை கைகளில் வாங்க கூடத் தயாராக இல்லை.

வேணு சிரித்து விட்டு, “என்ன சிவா… உங்க மனைவியோட அக்கா புருஷன்னு யோசிக்கிறீங்களா? நம்ப முடியலியே… அவ்வளவு சென்டிமன்ட் இருந்தா ஆதிக்கு எதிரான ஸ்டிராங்கான ஆதாரத்தைக் கொடுக்கும் போது யோசிக்காம இப்ப மட்டும் என்ன… கம்மான் சிவா” என்று வற்புறுத்தி அந்த லத்தியை கைகளில் கொடுத்து விட்டு வெளியே போனார்.

ஆதித்தியா கலகலவென சிரித்தான்.

நீ எதிர்பார்த்த சான்ஸ் கிடைச்சிடுச்சுல்ல… ஏன் யோசிக்கிற? கம்மான் டு இட்

சிவா சினம் கொண்டவனாய், உன்னை அடிக்க ஒரு செகண்டு கூட ஆகாது… நான் யோசிக்கிறது விந்தியாவைப் பத்தி மட்டும் தான்

நீ அவளைப் பத்தி கவலைப்பட்டிருந்தா… இந்தப் பொய்யான பழியை என் மேல திட்டம் போட்டு சுமத்தி இருப்பியா?”

உன்னை கல்யாணம் பண்ண வேண்டாம்னு நான் எவ்வளவோ சொல்லியும் கேட்காம செஞ்சிக்கிட்டாளே… அவளுக்கு இதெல்லாம் தேவைதான்

என்னை அவ கல்யாணம் பண்ணிக்கிட்டது உனக்கு சுத்தமா பிடிக்கல இல்ல… நீ அவளுக்கு நண்பன்னு சொல்ற… ஆனா உன் மனசில அந்த மாதிரியான எண்ணம் இருக்கிற மாதிரி தெரியலயே

எங்க நட்பை புரிஞ்சிக்க ஒரு தகுதி வேணும்… அது உன் கிட்ட இல்ல” என்று சொல்லி ஆதித்தியாவை இளக்காரமாய் பார்த்தான்.

உன் நட்பை ஒண்ணுமில்லாம பண்றேன்… அப்போ தெரியும் என் தகுதி என்னனு

சிவாவுக்கு சிரிப்பு வந்தது.

அத்தைக்கு உடம்பு சரியில்லாத போது உங்க அப்பா அவளுக்கு உதவி செய்யலன்னா… நீ எல்லாம் அவ வாழ்கையில் வந்திருக்கவே மாட்ட. ஒன்னா பிறந்து வளர்ந்து படிச்சி எத்தனையோ தடங்கல்களைக் கடந்தும் சேர்ந்தே இருக்கிற எங்களோட நட்புக்கு முன்னாடி நீ கால் தூசி பெறமாட்ட ஆதி

வார்த்தைய அளந்து பேசு சிவா… இந்த இடமும் சூழ்நிலையும்தான் உன்னை இப்போ காப்பாத்திட்டிருக்கு

சிவா கலகலவென்று சிரித்தான்.

நான் மட்டும் நினைச்சேனா உன்னை இங்கயே நார் நாராய் கிழிச்சு தொங்க விட்டிடுவேன்…

அதான் லத்தி இருக்கு இல்ல… ஏன் யோசிக்கிற… அடி

இருவருமே உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை வாளாக வீசினர். பனி விலகி நேருக்கு நேரான போர் அவர்களுக்குள் மூண்டது. ஆதித்தியாவின் மீது கை வைத்தால் விந்தியாவின் முகத்தை எப்படி பார்ப்பது என்று சிவா மனதிற்குள் பயந்தான்.

சரியான சமயத்தில் கான்ஸ்டபிள் வந்ததால் அவர்கள் அமைதியாகினர். ஆதித்தியாவிற்கு ஜாமீன் வந்ததாகச் சொல்லி கான்ஸ்டபிள் அவனை அழைத்து சென்றார்.

இவர்களின் நட்பும் காதலும் மோதிக் கொண்டதில் சம்பந்தமில்லாமல் காயப்படப் போவது விந்தியாதான். 

error: Content is protected !!