id-11
id-11
24
லாக்கர் எண்
விந்தியா ஆதித்தியாவை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.
அதே அறையில் இருந்த போதும் விந்தியா அவனின் முகத்தைக் கூடப் பார்க்கவில்லை. ஆதித்தியா தான் பல பெண்களை நிராகரித்ததின் பலனாகவே விந்தியா தனக்கு வாய்த்திருக்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டான்.
விந்தியா ஹோட்டலுக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருக்க ஆதித்தியாவும் எத்தனையோ விதமாய் அவள் கவனத்தைத் திருப்ப முயற்சி செய்தான்.
“ஏய்… நான் உன் கண்ணுக்கு தெரிகிறேனா இல்லையா… ஹாலோமேன் மாதிரி மறைஞ்சிட்டேனோ?” என்று ஆதித்தியா கண்ணாடியை பார்த்து உடையைச் சரி செய்து கொண்டிருந்த விந்தியாவின் பின்னோடு நின்று கேட்டான்.
அவனின் எந்தச் செயலையும் கண்டுகொள்ளாதது போலவே இருந்தாள். விந்தியா தன் தோள் பையை மாட்டிக் கொண்டு அறைக்கு வெளியே செல்ல அவளின் முந்தானை மாட்டிக் கொண்ட உணர்வில் திரும்பி பார்த்தாள்.
இம்முறை அது ஆதித்தியாவின் கையில் சிக்கி கொண்டிருந்தது. அவள் எரிச்சலோடு முந்தானையை இழுக்க அவனின் பிடிப்பு இறுக்கமானது.
“என் மேல உனக்கு கோபமாய் இருந்தால் இரண்டு அடி கூட அடிச்சிடுடி… இப்படியெல்லாம் பண்ணாதே… ஆனா கையாலதான் அடிக்கணும்” என்றான்.
விந்தியா இம்முறையும் அவன் பேச்சை கவனிக்காமல் புடவையை உதறிக் கொண்டு படிக்கெட்டுகளில் இறங்கி வர, ஹாலில் அமர்ந்திருந்த மாதவி, வருண், நந்தினியை பார்த்து சிலையாய் அங்கேயே நின்றுவிட்டாள்.
பின்னோடு வந்த ஆதித்தியாவும் விந்தியாவின் அருகில் வந்து நின்றான். ஆதித்தியாவிற்கு வந்தவர்களைப் பார்த்தவுடன் கண்களில் குறும்புத்தனம் தெரிந்தது.
“என்னோட குட் டைம்… உன்னோட பேட் டைம்” என்று சொல்லி விந்தியாவின் தோள்களை அணைத்தபடி அவளைக் கீழே அழைத்து வந்தான்.
மாதவி புன்னகையோடு பார்த்துக் கொண்டிருக்க அவன் பிடியை விலக்கி விட முடியாமல் தவித்தபடி விந்தியா இறங்கி வந்தாள். அவர்களை நெருங்கியதும் அவன் பிடியிலிருந்து விலகி, மாதவியை அணைத்துக்கொண்டாள்.
சண்முகம் வந்தவர்களுக்குக் காபி கொண்டு வந்தான்.
விந்தியாவின் கடைக்கண் பார்வைக்காக காத்துக் கொண்டிருந்த ஆதியை பார்த்து,
“எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை?“ என்றாள் மாதவி.
“உங்க பொண்ணோட கவனிப்பில் ரொம்ப நல்லா இருக்கேன்” என்றான்
எல்லோரின் முகமும் அவன் பதிலில் மலர்ந்தது விந்தியாவைத் தவிர. எல்லோரும் ஆதியை நலம் விசாரிக்க விந்தியா நந்தினியை பார்த்து,
“என் தம்பி உன்னை நல்லா பாத்துக்கிறானா?” என்றாள்.
“ஏதோ பாத்துக்கிறாரு. ஆனா வார்த்தைக்கு வார்த்தை எது செய்தாலும் அக்கா இப்படி… அக்கா அப்படினு… ஓயாம அக்கா புராணம்தான்” என்றாள் நந்தினி. எல்லோரும் கலகலவென்று சிரித்தனர்.
இவர்கள் பேச்சு இப்படியே நீண்டு கொண்டிருக்க மாதவி திருநள்ளாறு போய்விட்டு வந்ததாகக் கூறி பிரசாதத்தை விந்தியாவிற்குக் கொடுத்து, வைத்துக் கொள்ளச் சொன்னாள்.
“மாப்பிள்ளைக்கும் கொடு” என்றாள் மாதவி.
விந்தியா அவன் முகத்தைப் பார்க்காமல் ஆதித்தியாவிடம் நீட்ட அவன் நெற்றியை காண்பித்தபடி நின்றான்.
“அக்கா… மாமா எத்தனை நேரம் குனிஞ்சிட்டு இருப்பாரு… அவர் நெற்றியில் வைத்து விடு” என்றான் வருண்.
விந்தியா வேறுவழியின்றி அவன் முகத்தைப் பார்த்து நெற்றியில் விபூதி இட்டு விட
“பார்த்தியா… கடவுள் கூட என் பக்கம்தான் இருக்காரு” என்றான் ஆதி.
விந்தியா எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்த முடியாமல் திரும்பிக்கொண்டாள்.
மாதவி புறப்படுவதாகச் சொல்லவும், “அதெல்லாம் முடியாது… உங்க பொண்ணு கையால நீங்க சாப்பிட்டிட்டுதான் போகணும்”என்றான் ஆதி.
“அய்யோ மாமா… இவ்வளவு பெரிய தண்டனை வேண்டாம்… அக்காவுக்கு சுட்டுப் போட்டாலும் சமையல் வராது” என்றான்.
“இப்ப நீ இதை கண்டிப்பா சொல்லியே ஆகணுமா?” என்றாள் விந்தியா கோபமாக.
ஆதி சிரித்துக் கொண்டே,
“உங்க அக்காவுக்குச் சமைக்கத்தானே தெரியாது… நல்லா பரிமாறத் தெரியும்ல”
“அப்படின்னா ஓகே” என்றான் வருண்.
மாதவி, “அக்காவை கேலி செய்யாதே” என்று வருணை அதட்டினாள்.
எல்லோரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க விந்தியா பரிமாறினாள்.
ஆதியின் சீண்டலையும் விந்தியாவின் ஊடலையும் நந்தினி ஆரம்பத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருந்தாள். நந்தினி அது பற்றி விசாரிக்க விந்தியா எதுவுமில்லை என்று சிரித்து சமாளித்துவிட்டாள்.
மாதவி விந்தியாவிடம் கிளம்புவதாகச் சொல்லிவிட்டு ஆதித்தியாவிடம் கண் கலங்கியபடி,
“விந்தியாவைப் பாத்துக்கோங்க” என்றாள்.
ஆதித்தியா புன்னகையோடு
“என்ன அத்தை சொல்றீங்க? உங்க பொண்ணை யாராவது பாத்துக்கணுமா? அவளுக்கு தன்னைத் தானே பாத்துக்கிற தைரியம் நிறைய இருக்கு… என்னைதான் உங்க பொண்ணு கண்கலங்காம பாத்துக்கணும்” என்றதும் எல்லோரும் வயிறு குலுங்க சிரிக்க விந்தியா மட்டும் வெறித்துப் பார்த்து கொண்டிருந்தாள்.
“ரொம்பக் கரெக்ட்” என்றாள் நந்தினி. அவர்களை வழி அனுப்பிவிட்டு விந்தியா கோபத்துடன் திரும்பினாள். ஆதித்தியா தயாராக, “திட்டணும்னு தோணல… கம்மான் திட்டு விந்தியா!” என்றான்.
அவள் திட்டப்போவதை கூட ரசிக்கக் காத்துக் கொண்டிருப்பவனிடம் என்ன பேசுவது என்று புரியாமல் விந்தியா தன் பேக்கை மாட்டிக் கொண்டு ஹோட்டலுக்கு புறப்பட்டாள்.
சமுத்திரன் தன்னுடைய வீட்டினுள் அமைக்கப்பட்ட அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்க சுபா அவனுக்குக் குடிக்கப் பால் எடுத்து வந்தாள். அங்கே சமுத்திரனின் செல்ஃபோன் ஒயாமல் அடித்துக் கொண்டிருக்க சுபா அதை எடுத்து அவனருகில் வைத்தாள்.
“ஃபோன் அடிச்சிட்டே இருக்கே…” என்றாள்.
“எனக்கென்ன காது கேட்காதா? நீ போ நான் பேசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஃபோனை கையில் எடுத்தான்.
அதில் வி. டி என்று குறியிட்டிருக்க சமுத்திரனின் முகத்தில் பயம் தோன்றியது. விருப்பமில்லாமல் மிரட்சியோடு அழைப்பை ஏற்றான்.
“என்ன சமுத்திரா… ஃபோனை எடுக்க நேரமில்லையா இல்ல விருப்பமில்லையா?”
“இல்ல சார்… எடுக்கக் கூடாதுன்னு இல்ல”
“எடுத்தா என் கேள்விக்குப் பதில் சொல்லணுமே… அதானே?” இதற்குச் சமுத்திரன் எந்தப் பதிலும் உரைக்கவில்லை.
“என்ன நடந்தது? நேற்றிலிருந்து மனோஜோட முகமே சரியில்லையே…”
“இல்ல சார்… எதுவும் நடக்கலையே” என்று சமுத்திரன் சொல்லும் போது அவன் நெற்றியில் வியர்வை துளிர்த்தது.
எதிர்புறத்தில் சிரிப்புச் சத்தம் கேட்டது.
“என்ன நடந்ததுனு தெரிஞ்சிக்க எனக்கு நிறைய வழி இருக்கு… இருந்தும் நான் உன்னைக் கேட்கிறேனா அது நான் உன் மேல வைச்சிருக்கிற நம்பிக்கை” என்று அந்தக் கம்பீரமான குரல் சொல்ல அதற்கு மேல் எதையும் மறைக்காமல் சமுத்திரன் நடந்ததை உரைத்தான்.
அவன் சொல்லி முடித்த போது எதிர்புறத்தில் அமைதி நிலவியது. அந்த மெளனம் அவனுக்குள் பயத்தை ஏற்படுத்தியது.
மீண்டும் அந்தக் குரல், “இந்த விஷயத்தை இப்போதைக்கு மனோஜை ஒத்திப்போட சொல்… எலக்ஷன் வர நேரம்” என்று அந்தக் குரல் சொன்னதும் சமுத்திரன் நிம்மதி அடைந்தவனாய் “சரி” என்றான்.
ஆனால் மனோஜ் இவன் சொல்வதை எடுத்துக்கொள்வானா என்பது சந்தேகம்தான். அவன் அத்தனை வெறியோடும் கோபத்தோடும் இருக்கிறான்.
விந்தியாவின் இந்தச் செயலால் ஆதித்தியாவிற்கு ஏதோ ஒரு ஆபத்து நேரிடப் போகிறதோ என சமுத்திரன் யூகித்திருந்தான்.
சிவாவும் வேணுவும் ஒரு சீ ஷோர் ரெஸ்டிரான்டில் அமர்ந்திருக்க, அவர்களைப் பார்த்தபடி ஒரு பெண் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
அவள் உடையும் நிறமும் நெற்றியின் வகுட்டில் நீட்டமான குங்குமம் வட நாட்டுக் கலாசாரத்தைப் பிரதிபலித்தது. மகிளாவிற்கு ஹிந்தி, ஆங்கிலம் மட்டுமே தெரிந்திருந்ததினால் சிவா அவளை ஆங்கிலத்திலேயே விசாரணையை நடத்தினான்.
கேத்ரீனின் இறப்புக்கு முன்னர் வரையிலும் எங்கள் நட்பு நெருக்கத்தோடு இருந்ததாகக் கூறினாள். கேத்ரீனோடு மாதத்திற்கு இருமுறையாவது தங்குவேன் என்றாள்.
அவளின் லாக்கர் நம்பர் பற்றிக் கேட்டபோது தன்னிடம் இதுவரையிலும் அது பற்றிச் சொன்னதில்லை என்றாள். நிச்சயம் அந்த ரகசிய எண் ஏதோ ஒரு மறக்க முடியாத தேதியை குறிப்பது என்பதை மட்டும் கேத்ரீன் ஒருமுறை தெரிவித்ததாகக் கூறினாள்.
சிவா ஏற்கனவே அந்த விஷயத்தை யூகித்து அவள் வாழ்கையின் முக்கியமான தேதிகளை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
இதுவரையிலான விசாரணையில் அவர்களுக்கு புதிதான தகவல் கிடைக்கவில்லை.
கடைசியாகக் கேத்ரீனின் வாழ்கையில் காதல் என்ற உறவை பற்றிக் கேட்க மகிளா ரொம்ப நேரம் யோசித்த பின் அவள் சில வருடங்களுக்கு முன்பு ஆதித்தியா என்பவனை காதலித்ததாகவும் கூறினாள்
. இத்தனை நேரம் தடுமாற்றமே இன்றிக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்த சிவா லேசாகத் தயங்கியவனாய், “யார் அந்த ஆதித்தியா?” என்றான். அவளோடு கல்லூரியில் படித்தவன் என்றும்… அது கிட்டதட்ட கேத்ரீனின் ஒரு தலை காதல் என்றும் சொன்னாள்.
அவர்கள் இருவருக்கும் இடையில் தீர்க்க முடியாத சண்டை ஏற்பட்டதால் இருவரும் சந்தித்துக் கொள்வதை நிறுத்திவிட்டதாக சொன்னாள்.
தான் ஆதித்தியாவை ஒரே ஒரு முறைதான் பார்த்ததாகவும் இப்பொழுது அவன் முகம் தனக்கு நினைவில்லை என்றாள். ஆனால் ஆதித்தியாவிற்கும் இந்தக் கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை என்று அவள் இறுதியாகச் சொன்னபோது,வேணு குறுக்கிட்டு அது எங்கள் விசாரணையில் தெரியவரும் என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.
சிவா கேத்ரீனோடு கல்லூரியில் படித்தவர்களின் பட்டியல் ஒன்று அவனிடம் இருந்தது. அதை வேகமாய் புரட்டிப் பார்த்தான்.
ஆண்களின் வரிசையில் முதலிடத்திலேயே ஆதித்தியா என்ற பெயர் இருந்தது. அதற்குக் கீழே சன் ஆஃப் சந்திரகாந்த் என்று இருந்தது.
வேணு ஆனந்த களிப்போடு, “கேத்ரீன் ஹோட்டல் ஆதித்தியாவில் தங்குவதற்கான காரணமா?” என்று கேட்க சிவா பதில் சொல்லும் நிலைமையில் இல்லை. இந்த கேஸ் அவனின் நட்புக்கும் கடமைக்கும் இடையில் சிக்க வைக்கப் போகிறதோ என்ற பயம் தொற்றிக் கொண்டது.
சிவா அன்றிரவு கலக்கத்தோடு விந்தியாவிற்கு தொடர்பு கொண்டான். அவனின் நம்பரை பார்த்ததும் விந்தியா ஆர்வத்துடன் எடுத்து பேசினாள்.
“என்ன சிவா… எப்படிப் போயிட்டிருக்கு உன்னோட இன்வெஸ்டிகேஷன்?”
“ம்… போயிட்டிருக்கு… நான் உன் கிட்ட சொன்ன வேலையை முடிச்சிட்டியா?”
“செய்யாம இருப்பேனா… இட் இஸ் ஆல்மோஸ்ட் டன்” என்றாள்.
“அப்போ அந்த எவிடன்ஸ்?”
“நீ வரும் போது அது உன் கையில இருக்கும்”
சிவா சந்தோஷப்பட முடியாமல் அந்த ஆதாரத்தில் இருக்கப் போவது அவளின் வாழ்வுக்கு எதிரானதாக இருக்குமோ என்ற பதட்டமும், அதை தான் அவள் கையாலேயே பெறப் போகிறோம் என்ற துக்கமும் தொண்டையை அடைக்க சிவா சிறிது நேரம் மெளனமானான்.
அதே சமயத்தில் ஆதித்தியா அறைக்குள் நுழைய விந்தியா ஃபோனை காதில் வைத்துக் கொண்டு,
“சிவா… சிவா… பேசுடா… ஏதாவது சிக்னல் பிராப்ளமா?” என்று கேட்டு கொண்டிருந்தாள்.
ஆதித்தியாவிற்கு அவள் அழைத்துக் கொண்டிருந்த பெயர் எரிச்சல் மூட்டிய போதும் விந்தியாவிடம் ஏதோ பேச நினைத்து அவள் அருகில் வந்து நின்றான்.
விந்தியா முகத்தைத் திருப்பிக் கொள்ள, “நான் சொல்றதை நீ கேட்க மாட்டனு தெரியும். பட் ஐ நீட் டு டெல் யூ… கம்மிங் மன்டே என்னோட பர்த்டே. அன்னைக்கு உனக்காக ஸ்பெஷல் சர்ப்ரைஸ் வைச்சிருக்கேன்… அதைக் கேட்டதும் நிச்சயமா நீ சமாதானமாயிடுவ” என்று சொல்லிவிட்டு ஆதித்தியா அவளிடமிருந்து எந்தவொரு பதிலையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்து அகன்றான்.
சிவா ஃபோனில் ஆதியின் குரல் கேட்க அவன் சிந்தனையிலிருந்து மீண்டவனாய் கேட்டான்.
“அது ஆதித்தியா குரல்தானே… அவன் இப்ப என்ன சொன்னான்?”
“நத்திங்… கம்மிங் மன்டே அவரோட பர்த்டேவாம்… மிஞ்சிப் போனால் பார்ட்டி செலிபிரேட் பண்ணுவாங்க… வேற என்ன செய்யப் போறாங்க…” என்று விந்தியா பேசிக் கொண்டிருக்க சிவாவிற்கு லாக்கர் எண் பற்றிய நினைவு வந்தது.
ஆதித்தியாவின் பிறந்த நாள்.
25
காதல் பறவைகள்
சிவா ஆதித்தியாவின் பிறந்த நாள் பற்றி கேட்டவுடன் லாக்கரின் ரகசிய எண்ணை பற்றி நினைவுக்கு வந்தது. விந்தாயாவிடம் ஏதோ காரணம் சொல்லி தொடர்பை துண்டித்து விட்டு, வேணுவிடம் இது பற்றி கூறினான்.
அடுத்த நாள் காலையில் லாயர் ஜானுடன் கேத்ரீனின் வீட்டுக்கு சென்றனர்.
இந்த முயற்சியும் தோல்வியுற்றால் பின் லாக்கரை திறக்க வேறு முறையைத்தான் பின்பற்ற வேண்டுமென்று பேசிக் கொண்டிருந்தனர்.
கேத்ரீனின் அறைக்குள் நுழைந்ததும் சிவா சாவியைத் திறந்து அந்த நான்கு வரிசை எண்ணை சுழற்சியில் நேராக நிறுத்தியதும் லாக்கர் திறந்து கொண்டது.
சிவா எதிர்பார்த்தது போல் லாக்கரின் உள்ளே முக்கியமான டாகுமென்ட் என்று எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆனால் அதிலிருந்த ஒரு பத்திரம் மட்டும் எல்லோருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
நான்கு வருடங்களுக்கு முன்னர்க் கேத்ரீன் தன்னுடைய கம்பெனியின் சரிசமமான பங்குகளை ஆதித்தியாவின் பெயரில் மாற்றியிருக்கிறாள். அதில் அவளுடைய கையெழுத்து மட்டும் இருந்தது. அந்தப் பத்திரத்தை அவள் பதிவும் செய்யவில்லை.
இந்த விடை தெரியாத புதிரோடு கோவாவில் இருந்து புறப்பட சிவாவும், வேணுவும் ஆயுத்தமாகினர். கேத்ரீனின் மரணம் முதற்கொண்டு தொடர்ச்சியாய் உள்ள எல்லா கேள்விகளுக்கும் ஆதித்தியா மட்டுமே பதில் சொல்ல முடியும்.
ஹோட்டல் ஆதித்தியா!
விந்தியா தன் அறையில் கவனம் சிதறாமல் கூர்மையாய் யோசித்தபடி வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, கதவை கூடத் தட்டாமல் மேனஜர் ரமேஷ் உள்ளே நுழைந்தான்.
அவரின் முகத்தில் பதட்டம் நிரம்பியிருக்க,
“மேடம்… ஆதித்தியா சாருக்கு ஆக்ஸிடன்ட். சந்திரகாந்த் சாருக்கு இப்பதான் ஃபோன் வந்துச்சு” என்றார்.
விந்தியா என்ன செய்வதென்றே புரியாமல் அதிர்ச்சியானாள்.
சந்திரகாந்தும் விந்தியாவும் காரில் புறப்பட இருவருமே பேசிக் கொள்ள வார்த்தைகள் இல்லாத மனநிலையில் அமர்ந்திருந்தனர். மருத்துவமனையின் உள்ளே நுழைந்ததும் சமுத்திரன் ஆதித்தியாவிற்கு சிகச்சை செய்யும் அறை வாசல்முன் நின்றிருந்தான்.
சந்திரகாந்த் நேராகச் சமுத்திரனிடம் என்ன நடந்தது என்று விசாரிக்கத் தொடங்கினார். விந்தியா பின்னோடு அமைதியாய் நின்றாள்.
விந்தியாவின் மனம் ஆதித்தியாவின் நினைவுகளில் திளைக்க நேற்று அவன் தன்னிடம் பேச வந்த போது அவனை நிராகரித்ததை எண்ணி அவள் நெஞ்சம் வேதனையுற்றது.
சமுத்திரன் ஆதித்தியா பைக் ரேஸில் கலந்து கொண்டதினால் ஏற்பட்ட விபத்து என சந்திரகாந்திடம் சொன்னதும் அவருக்கு அடங்கா கோபம் ஏற்பட்டது.
அதே நேரத்தில் ஆதிக்குச் சிகிச்சை செய்த டாக்டர் வெளியே வந்தார்.
“நத்திங்… உடம்பில சின்னச் சின்ன ஸ்கராட்ச்… ரைட் லெக்கில் ஒரு ஹேர் லைன் ஃப்ராக்சர்… இரண்டு நாளில் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” என்று சொல்லிவிட்டு டாக்டர் நர்ஸிடம் பேசியபடி மளமளவென நடந்து போய்விட்டார்.
விந்தியாவும் சந்திரகாந்த்தும் உள்ளே நுழைய சமுத்திரனும் பின்னோடு வந்தான். சந்திரகாந்த் ஆதித்தியாவிடம் அளவில்லா கோபத்தை வெளிப்படுத்தினார்.
“உனக்கெல்லாம் பொறுப்பே வராதே. இப்படியே உறுப்புடாமத்தான் சுத்திட்டிருக்கப் போறியா? உன்னைப் பத்தியும் யோசிக்க மாட்டிற… உன்னை நம்பி வந்த பொண்ணைப் பத்தியும் யோசிக்க மாட்டிற…
நீ செய்யுற முட்டாள்தனத்தினால் ஏற்படப் போகும் பாதிப்பை பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா?” என்று சந்திரகாந்த் நிறுத்தாமல் வசை பாட விந்தியா எப்படியோ இடைமறித்து அவர் பேச்சை நிறுத்தினாள்.
சந்திரகாந்த் அறைக்கு வெளியே கோபமாய் சென்று விட அவரைச் சமாதானப் படுத்த சமுத்திரன் பின்னோடு ஓடினான்.
ஆதித்தியா ரொம்ப இயல்பாக, “மழை அடிச்சு ஒய்ந்த மாதிரி இருக்கு” என்றான்.
“யாருடைய உணர்ச்சிகள் பத்தியும் கொஞ்சமும் கவலை இல்லையா உங்களுக்கு?” என்று விந்தியா மனவேதனையோடு கேட்க…
“கவலைப்படற மனுஷன்தான் இப்படி கத்திட்டு போவாரா?” என்றான் ஆதி.
“அவரோட கோபத்திலிருக்கிற பாசத்தைப் பத்தி புரிஞ்சிக்கவே மாட்டீங்களா?” என்றாள்.
“அத பத்தி எல்லாம் நீ பேசாதே… நீ என்னைக்காவது என்னைப் புரிஞ்சிக்கிட்டியா?”
“நல்லாவே புரியுது… இதுதான் நீங்க தர ஸர்ப்ரைஸா?”
“சத்தியமா இல்லை… நான் வேறெதோ நினைக்க அது வேறேதோ நடந்துடுச்சு”
“அப்படி என்ன நினைச்சீங்க?”
“இதுவரைக்கும் நான் நிறையப் பைக் ரேஸை ஓட்டிருக்கேன்… பட் அதெல்லாம் வெறும் எக்ஸைட்மென்டுக்கு. ஆனா திஸ் டைம்… என்னோட இன்வெஸ்மென்டுக்காக. வின் பண்ண பிறகு பைக்கோட ஸ்பீட குறைக்க முடியமா விழுந்துட்டேன்… சின்ன அடிதான். சைட்டுக்கான பணத்தை ரெடி பண்ணத்தான் இவ்வளவு ரிஸ்க்கும்” என்று ஆதித்தியா சொன்னது விந்தியாவிற்கு நெகழ்ச்சியாய் இருந்தது.
கண்களில் கண்ணீர் நிரம்பியிருக்க வனிதாவும் வருணும் உள்ளே வந்தனர். விந்தியா மாதவியிடம் சொல்ல வேண்டாம் என்ற காரணத்தால் மாதவியுடன் நந்தினியை துணைக்கு விட்டுவிட்டு அவர்கள் இருவரும் ஆதித்தியாவை பார்க்க வந்தனர்.
“இப்பதானே பார்த்தோம்… அதுக்குள்ள உங்களுக்கு இப்படி எல்லாம் நடந்து போச்சு” என்று வருண் சொல்லிக் கொண்டிருக்க வனிதா அக்காவின் கண்களில் நிரம்பிய நீரை கவனித்தாள்.
“நீங்க ஏன் மாமா இப்படி இருக்கீங்க? உங்களுக்கு அக்காவை கஷ்டப்படுத்தி பார்க்கிறதுல அப்படி என்ன சந்தோஷம்? அக்கா எவ்வளவு தைரியமா இருப்பா தெரியுமா? அவளை இப்படி வேதனைப்படுத்திப் பார்க்கிறீங்களே… நியாயமா?” என்று வனிதா ஆக்ரோஷமாய் பேச வருணும் விந்தியாவும் திகைத்து போய் நின்றனர்.
விந்தியா வனிதாவை வெளியே அழைத்துச் சென்று சமாதானப்படுத்த உள்ளே வருண் ஆதித்தியாவிடம் மன்னிப்பு கேட்டான்.
“இட்ஸ் ஒகே வருண்… நான் தப்பா எடுத்துக்கல.. நமக்காகச சண்டை போடவும், நம்ம கூட சண்டை போடவும் இந்த மாதிரி கூடப் பிறந்தவங்க யாராவது இருக்கணும்” என்றான் பொறாமை தொனியில்.
சிறிது நேரம் வருண் நடந்ததைப் பற்றி ஆதித்தியாவிடம் விசாரித்து விட்டு வனிதாவை அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.
விந்தியா அவர்களை வழியனுப்ப செல்ல, சந்திரகாந்த் ஆதித்தியாவுடன் இரவு விந்தியாவை துணைக்கு இருக்க சொல்வதைப் பற்றி சமுத்திரனிடம் சொல்லவும் அவன் தானே துணைக்கு இருப்பதாகச் சொன்னான்.
“முதலுக்கே மோசமா போச்சு…” என்று ஆதி புலம்பிவிட்டு சமுத்திரனை அருகில் அழைத்தான்.
“நீ எல்லாம் ஃபிரண்டாடா? அந்த மனுஷனே எனக்கு நல்லது செஞ்சா கூட நீ குறுக்காலப் படுத்து தடுக்கிற” என்று ஆதி விந்தியாவை தங்க விடாமல் சமுத்திரன் தடுத்ததை ஏக்கத்தோடு வெளிப்படுத்தினான்.
“இங்க விந்தியா இருந்து என்ன செய்யப் போறா?” என்றான் சமுத்திரன்.
நண்பனாய் இருந்த போதும் தன்னுடைய தவிப்பு புரியவில்லையே என்று ஆதித்தியா பொருமிக் கொண்டிருக்க விந்தியா அறைக்குள் நுழைந்தாள்.
“ஆதியோட யாராவது ஒருத்தர்தான் ஸ்டே பண்ணனும் விந்தியா… சமுத்திரன் இருக்கிறானாம்… நாம போயிட்டு காலையில் வருவோம்” என்றார் சந்திரகாந்த்.
விந்தியா புருவத்தைச் சுருக்கி திமிராக சமுத்தினைப் பார்த்து, “நான் இருக்கும் போது நீங்க ஏன் ஸ்டே பண்ணனும்? நான் பாத்துக்கிறேன்… நீங்க கிளம்புங்க சமுத்திரன்” என்றாள்.
விந்தியா யாரிடமும் அனுமதி கேட்காமல் தன் முடிவை சொல்லவும் சமுத்திரன், சந்திரகாந்த் இருவருக்கும் பேசவதற்கு ஒன்றுமில்லை. சந்திரகாந்த்துடன் பேசிக் கொண்டே கார்வரை வழியனுப்பிவிட்டு வர, சமுத்திரன் விந்தியாவை எதிர்பார்த்தபடி நின்றிருந்தான்.
“நீங்களும் கிளம்புங்க சமுத்திரன்” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல முயற்சிக்க அவன் வழிவிடாமல் நின்று கொண்டிருந்தான்.
“வழி விடுங்க…” என்றாள் விந்தியா அவனைப் பார்க்க விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு.
“நீ முதல வழி விட்டு ஆதியோட வாழ்கையிலிருந்து விலகி நில்… உன்னாலதான் அவனுக்கு இவ்வளவு பிரச்சனையும்” என்றான் சமுத்திரன்.
விந்தியா தன் கோபத்தை வெளியே காட்டாமல் லேசான புன்னகையோடு, “நிச்சயமா விலகிடுறேன்… ஆனா அதை நீ சொல்ல கூடாது… ஆதித்தியா சொல்லட்டும்” என்று சொல்லி விட்டு அவள் பார்த்த கோபமான பார்வையில் சமுத்திரனே அறை வாசலில் இருந்து நகர்ந்தான்.
விந்தியா உள்ளே செல்ல ஆதித்தியா ஒரு நர்ஸோடு ஆர்வமாய்ப் பேசிக் கொண்டிருந்தான். அந்த நர்ஸும் அவனோடு ரொம்ப பழகியதை போல் பேசி கொண்டிருந்தாள்.
விந்தியா தன் பொறுமை இழந்தவளாய், “சிஸ்டர்… நீங்க கவனிச்சிக்க இந்த ஒரு பேஷன்ட் மட்டும்தான் இருக்காரா?” என்று கேட்கவும், அந்த நர்ஸ் விந்தியாவின் வார்த்தை புரிந்தவளாய் வெளியே சென்றாள்.
“மத்தவங்க வேலையைக் கெடுப்பதுதான் உங்களோட ஓரே வேலையா?” என்று விந்தியா கேட்க,
“நீயும் என்கிட்ட சிரிச்சு பேசமாட்ட… மத்தவங்களையும் சிரிச்சு பேசவிட மாட்ட… சரியான லேடி ஹிட்லர்டி நீ” என்றான்.
“நான் இருக்கிறது பிடிக்கலன்னா நான் கிளம்புறேன்… வீட்டுக்குப் போய் சண்முகம் அண்ணாவை அனுப்பிவைக்கிறேன்” என்று புறப்படச் சென்றவளின் கைகளை எட்டிப்பிடித்துக் கொண்டான்.
“நில்லுடி… உன் பின்னாடி ஒடி வர நிலைமையிலயா நான் இருக்கேன்… கட்டுப்போட சொன்னா அந்த டாக்டர் பெரிய காம்பவுண்டே கட்டி வைச்சிருக்காரு… புரிஞ்சுக்கோடி” என்றான்.
விந்தியா அவன் பேசியதை கேட்டு அவளை அறியாமல் கலீர் என சிரித்து விட்டு அவன் புறம் திரும்பினாள். ஆதியின் பிடி அத்தனை அழுத்தமாகவும் இல்லை. இம்முறை விந்தியா அவன் பிடியை உதறிக் கொள்ளவும் இல்லை.
“என் மேல காட்ட வெறுப்பையும் கோபத்தையும் தவிர வேறெதுவும் தோணலியா உனக்கு” என்றான் ஆதித்தியா.
“உங்க மேல அன்பையும் பாசத்தையும் காட்ட லீனா முதல் இன்னைக்குப் பார்த்த நர்ஸ் வரைக்கும் ஏராளமானவங்க இருக்கும் போது, நான் எதுக்கு ஆதி பத்தோட பதினொன்றா?” என்றாள்.
“முதல் நாள் இரவில் நீ என்கிட்ட ஒண்ணு சொன்ன ஞாபகம் இருக்கா விந்தியா!… நான் என்ன உங்க வாழ்கையோட முதலும் கடைசியுமான பெண்ணானு. நான் இப்ப சொல்றேன்… இந்த நிமஷத்தில் இருந்து நீ மட்டும்தான் என் வாழ்கையோட முதலும் கடைசியுமான பெண்… நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும்” என்றான்.
அவன் பிடியில் அவள் கை இருக்க ஆதியின் இந்த வார்த்தைகளுக்கு என்ன பதில் சொல்வாள். அவளின் அமைதி அவனுக்குச் சாதகமாய் இருக்க அவன் மேலும் தொடர்ந்தான்.
“ஒரே பெண்ணோட வாழும் வாழ்க்கை மோசமானதா இருக்கும்னு நினைச்சு காதல், கல்யாணம் இதை எல்லாம் வெறுத்திருக்கேன். ஆனா இப்போ சொல்றேன்… நீ ஒருத்தி என் வாழ்கையில் வராமல் இருந்திருந்தால் நான் எதுவுமே தெரியாதவனாய் அற்ப சந்தோஷங்களோடவே செத்திருப்பேன்” என்றான் உணர்வுகள் பொங்க.
விந்தியாவிற்கு அதற்கு மேல் உணர்ச்சிகளைக் கட்டுபடுத்த முடியவில்லை. அவன் பிடியிலிருந்து தன் கைகளை விலக்கியபடி நகர்ந்து நின்றாள்.
“போதும் ஆதி… இதுக்கு மேல ஒண்ணும் பேச வேண்டாமே” என்றாள்.
“ஏன் விந்தியா… எனக்கு உன்கிட்ட நிறைய பேசணும்… நிறைய காதலிக்கணும்”
“ஆதி… ப்ளீஸ்… நீங்க என்னை ரொம்ப இமோஷனலாக்கிறீங்க” என்றாள்.
“நீ மறைச்சு வைச்சிருக்கிற காதல் வெளிப்பட்டு விடுமோனு பயமா இருக்கோ?”
“நோ… உங்களைக் காயப்படுதிடுவேனோன்னு பயமா இருக்கு… உங்களவுக்கு நான் உங்களை நேசிக்க முடியுமானு சந்தேகமா இருக்கு…
எங்க அப்பாவோட மரணத்திற்குப் பிறகு நான் நிறையப் பொறுப்புகளைச் சுமக்க என்னை நானே இறுக்கமானவளாய் மாத்திக்கிட்டேன்…
இந்த வெறுப்பு, கோபம், திமிரு… எல்லாம் யாரும் என்னை நெருங்காம இருக்க எனக்கு நானே போட்டுகிட்ட கவசம். உங்க மனசில் இருப்பதை வெளிப்படையா நீங்க சொல்லிட்டீங்க… பட் என்னை ஏதோ தடுக்குது…
நீங்க எனக்காக உங்கள மாத்திக்கிட்ட மாதிரி சட்டுனு என்னை மாத்திக்க முடியுமானு தெரியல… எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க… ப்ளீஸ் ஆதி” என்று விந்தியா தன் மனஇறுக்கத்தை ஆதியிடம் வெளிப்படுத்தினாள்.
ஆதித்தியா சிரித்தபடி, “நீ எனக்கு மனைவியா.. காதலியா எல்லாம் இருக்க வேண்டாம். நீ எப்பவும் அந்தத் திமிரு பிடிச்ச விந்தியாவாக இரு…
உன்னோட அந்த கேரக்டரைத்தான் நான் ரொம்ப அதிகமா நேசிக்கிறேன்… அந்த தலைவணங்காத விந்தியாவைத்தான் நான் காதலிக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் காலில் வலியை உணர்ந்தவன் போல முகத்தைச் சுளித்தான்.
“என்னாச்சு ஆதி?” என்று பதறிக் கொண்டு அருகில் வந்தவளின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டு குறும்புத்தனத்தோடு கண்ணடித்தான்.
“நீ எவ்வளவு வேண்டுமானாலும் டைம் எடுத்துக்கோ… என்னை விட்டு தள்ளி மட்டும் போகாதே” என்றான் ஆதித்தியா.
அழகான அந்தக் காதல் பறவைகள் எதிர்காலக் கனவுகளோடு கட்டிய அந்தக் கூடு, வேரோடு பெயர்ந்து விழப் போகும் அந்த மரத்தில் எப்படி ஜனித்திருக்குமோ?