Thithikuthey 1 & 2

Thithikuthey 1 & 2

 ஒன்று

புலராத அதிகாலை பொழுது… சில்லென்ற மார்கழி குளிர் ஊசி போல் துளைத்து கொண்டிருக்க… வெகு அதிகாலையில் அந்த கிராமத்து சாலையில் மக்கள் நடமாட்டம் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்டது! தமிழகத்தின் நடுநாயகமாக வீற்றிருக்கும் பண்டைய சேரர்களின் தலைநகராம் வஞ்சியை அடுத்த அழகான கிராமம்!

நெரூர்!

காவிரித்தாயின் கருணையில் விவசாயம் செழித்து, திரும்பியபுறம் எல்லாம் பழமையான கோவில்களை கொண்டு… நாற்புறங்களிலும் பசுமை பாய்ந்து கண்ணுக்கு விருந்தளிக்கும் அழகான ஊர்!

சில்லென்று ஓடிய காவிரியின் கரையில் கால் வைத்தான் சக்தி.

சக்திவேல்!

பெயருக்கேற்ற உரமேறிய உடல், தீட்சண்யமான விழிகள்… அவை கண்ணியத்தை மட்டுமே வெளிப்படுத்த தெரிந்தவை… அநியாயத்தை கண்டால் பொங்கி விடும் இயல்பினன்… யாராக இருந்தாலும் துணிந்து இறங்கி விடுவான்… துணிச்சலும் பண்படுத்தப்பட்ட கோபமும் இருந்தாலும் எப்போதும் கண்ணியம் என்பதை மட்டும் கை விட்டதில்லை… பல்வேறு குணவேறுபாடுகளின் கலவை… காரணம் இவனொரு சுயம்பு! யாரும் பாதை சொல்லி தராமல் பண்படுத்தாமல் சிறு வயது முதலே தனக்கு தானே முடிவெடுத்து வளர்ந்த சுயம்பு இவன்.

வேலைக்கு வந்த இடத்தில் நடந்த விபத்தில் பெற்றோர் இருவரும் விட்டு போக… அந்த ஒரே நாளில் அனாதையான சிறுவனை அங்கிருந்த அநாதை விடுதியில் சேர்த்தனர் உடன் வேலை செய்தவர்கள்! அப்போதிருந்து உலகமே அவனது வீடானது… அவனை சுற்றியிருந்தவர்களே உறவினராயினர்!

வளர்ந்தான்… பன்னிரெண்டாம் வகுப்பு வரை கல்வி இலவசமென்பதாலும் ஆஸ்ரமத்திற்கு வரும் அதிகப்படியான நன்கொடைகளாலும் அவனது கல்விக்கும் பங்கமில்லாமல் இருந்தது… காரணம் என்னவென்றால் அந்த ஆஸ்ரமம் சற்று மாறுபாடானது.

வரும் நன்கொடைகளில் நிர்வாகி அவரது வசதியை பெருக்கி கொள்ள… தனக்கு மிஞ்சியதை ஆஸ்ரம பிள்ளைகளுக்கு கொடுத்து பழக்கப்பட்ட உத்தமசீலர் அவர்! நன்கொடைகள் குறையும் போது பிள்ளைகளை பிச்சைகார வேடமிட வைத்து பிச்சை எடுக்க வைக்கவும் தயங்காதவர்… மறுக்கும் குழந்தைகளுக்கு அடியும் உதையும் சூடும் மட்டுமே மிஞ்சும்… அதற்கு பயந்து பிச்சை எடுக்க ஒத்துழைக்கும் குழந்தைகளை வைத்து அவரது வாழ்க்கை முறை வெகு ஆடம்பரமாகவே இருந்து வந்திருக்கிறது.

அரசாங்க அதிகாரிகள் இன்ஸ்பெக்ஷனுக்காக வரும் போது மட்டும் குழந்தைகளை சுத்தமாக குளிக்க வைத்து அழகாக காட்டி ஒப்புதலை வாங்கி விடுவார்… வளரும் வரை இந்த விஷயங்கள் புரியாமல் வளர்ந்தாலும் வளர்ந்த பின் சக்திவேலின் மனம் கொதித்தது.

பனிரெண்டாம் வயதில் முதன் முறையாக எதிர்த்து நின்றவனுக்கு பிரம்படியும் இரண்டு நாட்கள் பட்டினியுமாக தண்டனை கிடைக்க… உடன் நின்றவர்கள் அடங்கி விட்டனர்… ஆனால் அந்த தண்டனைகளை கண்டு பயப்படாத சக்திவேல் அடுத்தடுத்து எதிர்க்க அந்த நிர்வாகிக்கு நிரந்தர தலைவலியாக மாறி போனான்.

நன்மை நடந்து விடாதா என்ற ஏக்கத்தில் வரும் அதிகாரிகளிடம் நிர்வாக சீர்கேடுகளை பற்றி கூற அந்த அதிகாரிகளுக்கு கையூட்டு அதிகமாக வாங்கி கொள்ள அதுவொரு காரணமாகிப் போனது.

“நீங்க ஆஸ்ரமத்துக்கு வர்ற நன்கொடை எல்லாத்தையும் அமுக்கிடறீங்க… பொறுத்து போறோம்… எங்க யாருக்குமே சரியான சாப்பாடு கூட போடறதில்லை… பொறுத்துட்டு தான் போறோம்… ஆனா ஏன் எங்களை பிச்சை எடுக்க அனுப்பறீங்க? உங்களுக்கு பணமா வராம இருக்கு… வெளிநாட்டுகாரங்க அனுப்பறாங்க… அரசாங்கம் தருது… மக்கள் தராங்க… ஆனாலும் எங்களை பிச்சை எடுக்க சொல்றீங்களே… உங்களுக்கு இந்த மனசாட்சின்னு ஒன்னு இல்லவே இல்லையா?”

பதினைந்து வயதில் பாய்ன்ட் பாய்ன்ட்டாக அடித்தவனிடம் அதற்கு மேலும் பேசி கொண்டிருக்க அந்த நிர்வாகிக்கு முடியவில்லை… விட்டால் தனது ஆஸ்ரம வியாபாரத்தை கெடுத்து விடுவான் என்றெண்ணி கொண்டு சப்தமில்லாமல் அவனை வெளியேற்றி விட்டார்… ஆக பனிரெண்டாம் வகுப்போடு அவனது கல்விக்கு சுபம் போடப்பட… அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து கொண்டு நின்றபோது நினைவுக்கு வந்தவர் வெற்றிவேந்தன்!

ஆஸ்ரமத்திற்கு வாகனங்கள் தேவைப்படும் போது அந்த நிர்வாகி அழைப்பது வெற்றியைத்தான்… ஏனெனில் அவர் மட்டுமே பணம் வாங்கி கொள்ளாமல் வேலைகளை செய்து கொடுப்பார்… புண்ணிய கணக்குகளை பார்ப்பவர்களே இது போன்ற நிர்வாகிகளின் இலக்கல்லவா!

அப்போது பழக்கமானவர் வெற்றி… அவரிடம் போய் நின்றான் சக்திவேல்… ஆஸ்ரமத்தில் நடக்கும் அநியாயங்களை பற்றி கேட்டபோது அவருக்கும் கொதிக்கத்தான் செய்தது… ஆனால் இது போல கொதிப்பதும் அடங்குவதும் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சிகளே… நாம் கொதித்தால் மட்டும் என்ன மாற்றம் வந்துவிட போகிறது என்று அவனுக்கு அறிவுரை கூறி அவனை தன்னோடு வைத்து கொண்டார்.

அவரது ட்ராவல்ஸில் இருந்த பஸ்ஸில் கிளீனர் வேலை செய்ய ஆரம்பித்தான் சக்திவேல்… எள் என்பதற்கு முன் எண்ணையாக நிற்கும் அவனது சுறுசுறுப்பும் எப்போதும் நேர்மையாக உழைக்க வேண்டும் என்ற அவனது குணவியல்பும் வெற்றிக்கு மிகவும் பிடித்துவிட… அதே டிராவல்ஸில் வேன் டிரைவராக தனது பணியை ஆரம்பித்த போது வயது பதினெட்டு… அப்போதே நெடுநெடுவென்ற அவனது உயரமும் முக இறுக்கமும் அவனிடம் பேச ஆரம்பிப்பவர்களை ஒரு நிமிடம் தயங்க செய்து விடும்.

மனிதர்களை மிகச்சரியாக எடை போடுவதில் கெட்டிக்காரனாக இருந்தான் சக்தி… அந்த திறமை எளிதில் வந்துவிடவில்லையே… பதினெட்டு வருட வாழ்க்கை வலிக்க வலிக்கவல்லவா அவனுக்கு சொல்லி தந்திருக்கிறது.

வேன் ஒன்று லீசுக்கு வருகிறது என்பதை அறிந்து தன்னிடம் இருந்த சேமிப்பை எல்லாம் வெற்றியிடம் கொடுத்து அந்த வேனை லீசுக்கு எடுத்து தருமாறு கூறிய போது வயது இருபது… ஐந்து வருடமாக அவனை சார்ந்தே இருக்க பழகி கொண்ட வெற்றிக்கோ அவனை விட்டு தருவதில் மனம் சங்கடபட்டாலும் அவனது முன்னேற்றத்தை தடுக்க முயலவில்லை!

“சக்தி… உன்னை இங்கிருந்து அனுப்பவே மனசில்லடா… பேசாம நீ இங்கயே இருந்துடேன்… எனக்கப்புறம் நீதானே இங்க எல்லாம்… ஏன் வெளிய போகணும்ன்னு நினைக்கற…

வெற்றி டிராவல்ஸ்ஸின் உரிமையாளராக வெற்றி உரிமையாக கேட்க… அவரை சங்கடமாக பார்த்தான் சக்திவேல்! அவனும் தான் அவரை பற்றி அறிவானே… எப்போதும் மூக்கின் மேல் கோபம் நர்த்தனமாடி கொண்டிருந்தாலும் நல்ல மனிதரென்று!

“அண்ணா… என்னோட ரொம்ப நாள் கனவு இது… நான் மொத்தமா போறதா நினைச்சுக்காதீங்க… நீங்க எப்போ சவாரி போக ஆளில்லைன்னு கூப்பிட்டாலும் வந்துடுவேண்ணா… நான் நீங்க வளர்த்த பிள்ளை… நீங்களும் தெய்வா அக்காவும் தான் எனக்கு இருக்க ஒரே சொந்தம்… நீங்களும் அக்காவும் ஆசிர்வாதம் பண்ணி என்னை அனுப்புங்கண்ணா… என்னைக்கிருந்தாலும் நீங்கதான் என் முதலாளிண்ணா”

வெற்றிக்கு தெரிந்து அவன் அதிகபட்சமாக அவரிடம் பேசியதும் அன்றுதான்… கண்ணீர் மல்க அவரது காலில் விழுந்தவனை வாஞ்சையோடு தன்னோடு சேர்த்து கொண்டார்… அவரது கண்களும் கலங்கி விட்டன!

“டேய் சக்தி… நீயென்னடா கூறுகெட்டவனாயிறுக்க… இனிமே நீ மொதலாளிடா… என் தம்பி நீ… எதுக்கு என் கால்ல விழற… எதுக்கெடுத்தாலும் சக்தின்னு கூப்பிட்டே பழகிடுச்சுடா இந்த நாக்கு… நீ போய்ட்டா நான் யாரை கூப்பிடுவேன்ற ஆத்தாமை தான்… உன்னோட உழைப்ப அறியாதவனா இந்த வெற்றி? நல்லா வருவடா தம்பி நீ… நல்லா வருவ… எப்போ என்ன உதவி வேணும்னாலும் கேளு… நான் இருக்கேன் உனக்கு!

அணைத்து கொண்டு நா தழுதழுத்தவரை நன்றியோடு பார்த்தவன்… இன்று வரை அந்த நன்றி மறவாமல் சனிக்கிழமையானால் கரூரிலுருக்கும் வெற்றியின் வீட்டிற்கு சென்று விடுவான்… அந்த வார கலக்ஷனை வெற்றியின் மனைவி தேவசேனாவிடம் கொடுத்து பெற்றால் தான் அவனுக்கு நிம்மதி!

“சக்தி… இதென்ன அழும்பாயிருக்கு? பணம் வந்தா சாமிகிட்ட வெச்சு கும்பிடு… அதை விட்டுட்டு என்கிட்டே தான் வந்து குடுப்பேன்னு அடம் பிடிக்காதடா… தேவசேனா ஒரு அக்காவாக அவனை பெருமையோடு நொந்து கொள்ள

“தெய்வாக்கா… நீங்களும் அண்ணனும் தான் எனக்கு தெய்வமும் கோயிலும்… சும்மா சும்மா இதையே சொல்லாதீங்கக்கா… அலட்டி கொள்ளாமல் கூறிவிட்டு வெற்றியின்ஷெட்டில் என்ன வேலையிருக்கிறது என்று பார்க்க போய்விடுவான்! தெய்வாவை பொறுத்தவரை தன் இரு தம்பிகளோடு சேர்ந்து சக்திவேல் மூன்றாவது தம்பியாகி போனான்!

இதுதான் சக்திவேல்!

ரெகுலராக லோடுகளும் வெளியூர் டிரிப்புகளும் இருந்தாலும் அவனது தினசரி தேவைகளை குறைவில்லாமல் பார்த்து கொண்டது காலேஜ் டிரிப்புகள் தான். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கல்லூரி போகும் மாணவிகளை ஏற்றி கொண்டு கரூர் கல்லூரிகளில் விடுவதும் அவனது தினசரி வாடிக்கை… கிராமங்களில் இவனை மட்டுமே நம்பி பெண்களை வேனில் அனுப்புவேன் என்று கறாராக இருக்கும் பெற்றோர்களும் உண்டு!

பெருநகரங்களை போல சுதந்திரமாக பெண்களை அனுப்பாமல் கட்டுப்பாடாகத்தான் கல்லூரி போய் வர வேண்டும் என்று கறாராக இருக்கும் பெற்றோர்களே கிராமங்களில் அதிகம்… அதிகமாக ஒரு பார்வை கூட பார்க்காத… பேசவே பேசாத… கல்லை விடவும் இறுக்கமான… கண்ணியமான சக்திவேல் அவர்களுக்கு பிரியமானவன்! எட்டு வருடங்களை எந்தவிதமான கெட்ட பெயரும் இல்லாமல் கடந்து விட்டவன்!

“சுவாமியே சரணம் ஐயப்பா! அந்த குளிரில் காவிரியில் சில்லென்ற நீரில் மூழ்கி எழுந்தவனின் வாய் தானாக ஐயப்ப பாடல்களை இயந்திர கதியில் முணுமுணுத்தது!

“அண்ணே… இந்த நாலு மணிக்கு மார்கழி குளிர்ல நீங்க தான் ஆத்தங்கரைய குத்தகைக்கு எடுப்பீங்க… ஆத்துல ஒரு சனத்த காணலை… ஏன்னே… ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு… என்னையும் இழுத்துட்டு வந்து கொடுமை பண்றீங்க?”

அவனிடம் உதவியாக இருக்கும் செந்தில் அழாத குறையாக கேட்க… அவனுக்கு பதில் ஏதும் தராமல் முறைத்தவனை பார்த்தபோது அவனுக்கு தோன்றியது.

“ஆஹா இன்னைக்கு துருவாசர் காலைலேயே பார்முக்கு வந்துட்டாரா? ஆல் மை டைம்… தனக்குள்ளாக புலம்ப

“சீக்கிரம் குளிச்சுட்டு கரையேறுடா… தந்தி பாஷையில் பதிலளித்து விட்டு துண்டை பிழிந்து தன் மேல் போட்டு கொண்டு கோயிலை நோக்கி சக்தி போக...

“க்கும்… இவர் சொல்லிடுவாரு… இந்த குளிர்ல மனுஷன் குளிப்பானா? இதுவே சூடா தண்ணி காயவெச்சு குளிச்சாஎவ்ளோ சுகமா இருக்கும்… மனுஷனுக்கு அதெல்லாம் தெரியாது…

நொந்து கொண்டு குளித்து விட்டு வந்தான் செந்தில்… கார்த்திகை துவங்கி ஒரு மண்டலம் மாலையிட்டு சபரி மலைக்கு வெற்றியோடு செல்வது அப்போதிருந்தே பழக்கம்… அந்த பழக்கம் இன்றும் விடாமல் தொடர்ந்தது!

“சுவாமியே சரணம் ஐயப்பா… என்று வணங்கிவிட்டு ஷெட்டிலிருந்து அவனது மினிலாரியை எடுத்தான்… அவனிடம் தற்போது கல்லூரி டிரிப்புகளுக்கு வெளியூர் பயண டிரிப்புகளுக்கும் டெம்போ டிராவலரும் காய்கறி மற்றும் லோடுகளை ஏற்றி செல்ல மினி லாரியும் இருந்தது… அவற்றை நிறுத்தி வைக்கும் ஷெட்டில் அவர்கள் இருவரின் ஜாகையும் இருக்க… வாழ்க்கை தடையில்லாமல் சென்றது. நாலரை மணிக்கு காய்கறி லோடுகளையும் தேங்காய் லோடுகளையும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தே எடுத்து செல்வதால் அவனது வாகனங்களை நெரூரிலேயே நிறுத்தி வைத்து கொள்வான்.

“டேய் சீக்கிரம் ஏறு… ஏழு மணிக்கு காலேஜ் ட்ரிப் எடுக்கணும்… என்று செந்திலை அவசரப்படுத்தி தனது மினி லாரியை அந்த கிராமத்து சாலைகளில் பறக்க விட்டான்!

 இரண்டு

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்

ஐயனை காணலாம் சபரியில் ஐயனை காணலாம்

ஐயப்பா சுவாமி ஐயப்பா

ஐயப்பா சரணம் ஐயப்பா

பக்தி மனத்தோடு பத்தி மனமும் கமழ சக்திவேலின் வாகனம் கல்லூரி மாணவிகளை ஏற்ற சென்று கொண்டிருந்தது… அதில் அமர்ந்திருந்தவர்கள் அழாத குறையாக ஒருவரையொருவர் பார்க்க பூனைக்கு யார் மணி கட்டுவது என்று புரியாமலிருந்தனர்.

“அண்ணா… ப்ளீஸ் சினிமா பாட்டு போட சொல்லுங்கண்ணா… வளர்மதி முன் சீட்டில் அமர்ந்திருந்த செந்திலிடம் ரிகமண்டேஷன் பிடிக்க… அவனோ அதை சக்திவேலிடம் சொல்லவும் முடியாமல் அழகான பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் முடியாமல் விழித்தான்… சக்தியை ஒரு கெஞ்சும் பார்வை பார்க்க அவனோ முறைக்க… கப்சிப்பென்றானது அந்த வட்டாரம்.

“இருடி நந்து வரட்டும்… அவ தான் இந்த முசுட்டுக்கு கரெக்ட்! வாங்கலில் ஏறவிருக்கும் நந்தினியை நினைத்து சித்ரா மனதை தேற்ற… ஐயப்பன் பாடல்கள் மாறி முருகன் பாடல்கள் ஆரம்பித்தது!

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.

வேன் நிற்க சித்ராவும் வளர்மதியும் ஆர்வமாக வெளியே பார்த்தனர்.

“அம்மா வேன் வந்துடுச்சும்மா… சீக்கிரம் டிபன் பாக்ஸை கொடு… நந்தினி கத்துவது எட்டு ஊருக்கும் கேட்கும் என்று நினைத்து கொண்டனர்!

“ஏய் நந்து… உனக்கு டிபன் கட்டி அரை மணி நேரமாகுது… ராணியம்மா எழுந்திருக்க நேரம் பண்ணிட்டு… இப்போ என்கிட்டே கத்தறியா? இப்படி இருந்தா வர்ற மாமியா கொமட்டுலையே ரெண்டு இடி இடிப்பா… அதையும் வாங்கிக்க… நந்தினியின் தாய் செல்வி அவளது மண்டையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்து டிபன் பாக்ஸை கையில் திணிக்க.

“ஷப்பா… போதும் உன் ராமாயணம்… ஈவினிங் மீதிய கண்டினியு பண்ணு… இப்போ என்னை விடு…

தன் தாயிடம் உச்சஸ்தாயில் கத்தி கொண்டிருந்தது வேன் வரையில் கேட்க… செந்தில் நமுட்டு சிரிப்பு சிரிக்க… சக்திவேலின் முகம் எப்போதும் போல உணர்வை காட்டாமல் கல்லை போலவே இருந்தது… ஒவ்வொரு நாளும் நடப்பதுதான் என்றாலும் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அடுத்த ஸ்டாப்பிலும் தாமதமாகும் என்பது ஏன் இந்த பெண்ணிற்கு புரிவதே இல்லைஎன்று உள்ளுக்குள் கடுப்பானான் சக்தி!

அவசரமாக அரக்கபரக்க தங் தங் என்று ஓடிவந்தவள்… கூடத்தில் அமர்ந்திருந்த தனது தந்தை வேலுச்சாமியை பார்த்தவுடன் ஸ்பீட் ப்ரேக்கர் அடித்தது போல பம்மி கொண்டு வந்தாள்… இந்த பூனையும் பீர் குடிக்குமா என்று அப்பாவி பார்வை பார்த்தபடி நிலம் அதிராமல் குனிந்த தலை நிமிராமல்

“போயிட்டு வரேங்ப்பா… மெல்லிய குரலில் வேனில் இருந்து பார்த்த சித்ராவும் வளர்மதியும்.

“ஏய் இவ அந்நியன் மாதிரிடி… அவங்க அப்பாவ பார்த்தா அப்பாவி அம்பி… பார்க்கலைன்னா அந்நியன்… கலக்கறாடி டபுள் ரோல்ல… இருவரும் சிரித்தபடி கிசுகிசுக்க

“எந்த வம்புதும்புக்கும் போகாம பொறுப்பா போயிட்டு வரணும்… கறாராக கூறினார்.

“சரிங்கப்பா…

“சக்திவேலை ட்ரிப் முடிஞ்சவுடனே நம்ம குடோனுக்கு வர சொல்லிடு… தேங்காய் லோடு அடிக்கனும்…

“சரிங்கப்பா…

“சரி கிளம்பு… தலையை வேகமாக ஆட்டிவிட்டு வேனில் ஏற… வேன் கிளம்பியது… ஏறி அமர்ந்தவள் வேலுச்சாமியின் தலை மறையும் வரை காத்திருந்து.

“ஷப்பா… பெருமூச்சோடு வேனில் இருந்த இருவரையும் பார்த்து சிரித்தாள்!

“ஹாய் மச்சிஸ்… கண்ணடித்து கொண்டே கூற,

“ஏன் மச்சி இன்னைக்க்கு கொஞ்சம் டல்லா தெரியற… வளர்மதி கேட்க

“அதுவா மச்சி… இன்னைக்கு பவுடர் கோட்டிங் கொஞ்சம் கம்மி… அதான்… ராகமாய் சொன்னவளின் தொனில் இருவரும் சிரிக்க,

“இரு மச்சி… இந்த முசுட்டு முருகேசன் கிட்ட ஒரு மேட்டர் சொல்லணும்… இல்லன்னா மறந்துடும்… என்றபடி அவள் சக்தியை நோக்கி திரும்பி,

“சக்தி… சக்தி…

தன் பெயரை நந்தினி ஏலம் போடுவதை பார்த்து முறைக்க… அவனிடம் இருந்து ஒரு பதிலும் வராததை கண்டு… தனது டெக்னிக்கை மாற்றினாள்.

“சாமி சரணம்… அவனை பார்த்து கூற… அனிச்சை செயலாக சக்திவேலும்,

“சாமி சரணம்… என்று கூற இருவரையும் பார்த்து வெற்றி சிரிப்பு சிரித்தாள்! ஆனானப்பட்ட மன்மோகன் சிங்கை பேச வைத்து விட்ட சாதனை சிரிப்பு!

“சாமி… டிரிப்பு முடிஞ்சவுடனே குடோனுக்கு போவீங்களாம் சாமி… அங்க தேங்காய் லோடு ஏத்தனுமாம் சாமி… அப்பா சாமி… சொன்னங்க சாமி…

நந்தினி நக்கலாக ஒவ்வொரு வார்த்தைக்கும் சாமி என்று கூற… அதற்கும் ஒரு வார்த்தையும் பேசாமல் வாகனத்தை செலுத்தினான்! ஆனாலும் விட்டுவிடுபவளா நந்தினி?

“என்ன சாமி… ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க சாமி?”

அவளது இந்த வம்பு பேச்சு எப்போதும் இருப்பதுதான் என்றாலும் இன்றைக்கு சற்று எரிச்சலாக இருந்தது. இவள் என்ன இன்னும் சின்ன பெண்ணா? எப்போதும் சிறு பிள்ளை போல லொடலொடவென ஓட்டை பானையில் இட்ட காசு போல பேசி கொண்டே இருக்க? ஆனாலும் அவளது தந்தைக்காக பார்க்க வேண்டியுள்ளது என்று நினைத்து கொண்டான். அவன் லோடு அடிக்க ஆரம்பித்த நாள் முதல் அவரது லோடை அவனுக்கு மட்டுமே தந்து கொண்டிருப்பவர்… அவரை பொறுத்தவரை சக்திவேல் சொன்னநேரத்தில் சொன்னவேலையை செய்து முடிக்கும் திறமையாளன்… அவனை பொறுத்தவரை பணத்தை இழுத்தடிக்காமல் கொடுத்து விடும் பண்பாளர்!

இந்த உறவுமுறை இருவருக்கும் வின் வின் ஒப்பந்தமாக எந்தவித தடங்களும் இல்லாமல் செல்ல… கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்த நந்தினியின் பொறுப்பையும் அவனிடமே தந்தார்… அவனது பண்புகளை பார்த்து!

குடோனில் வேலை செய்யும் பெண்களாகட்டும் வெளியில் பார்க்கும் பெண்களாகட்டும் யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒதுங்கி விடுபவனை விட்டால் நந்தினியை பாதுகாப்பாக அழைத்து செல்ல வேறு யாருமில்லை என்ற எண்ணம் அவருக்கு… தந்தை எவ்வளவுக்கு எவ்வளவு முதலாளித்தனத்தை காட்டுபவரோ மகளுக்கோ சிறுவயது முதல் பார்த்து பழக்கப்பட்ட சக்திவேல் விளையாட்டு பொருளாகவே ஆகிப்போனான்!

அவள் கூறியதற்கு செந்திலை பார்த்து முறைத்த சக்தியை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்த நந்தினி.

“சுவாமியே சரணம் ஐயப்பா… என்று கூறிவிட்டு இருவரையும் பார்த்து கண்ணடித்த நந்தினி

“எம்மாடி ஆத்தாடி உன்னை உன்னை எனக்கு தரயாடி…என்று அப்போது ரிலீசான வல்லவன் பாடலை பாட ஆரம்பிக்க மற்ற இருவரும் அவளுடன் சேர்ந்து கொள்ள… தலையில் அடித்து கொள்ளாத குறையாக பாட்டை மாற்றினான்!

“ஹேய்ய்ய்ய்ய்… ஆரவாரித்தது மூவர் படை.

நந்தினி வரும் வரை ஒன்றும் அறியாத பாப்பாக்களை போல இருப்பவர்கள்… அவள் வந்தவுடன்… எல்லாருமே

“இனிமே எல்லாம் இப்படித்தான்… என்று வேறு வசனம் பேசுவதை கண்டால் அவனுக்கு எரிச்சலாக இருக்கும்.

ஆனால் கல்லூரி காலமேன்பதே இது போல தளைகளில்லாமல் சிறகடிக்கத்தான் என்பதை அறிந்த அவனும் ஒரு முறைப்போடு நிறுத்தி கொள்வான்… எத்தனை பெண்களை பார்த்திருக்கிறான்!

கல்லூரி காலத்தில் கவலையில்லாமல் சிறகடித்து பறந்துவிட்டு அந்த வசந்தகாலம் முடிந்தவுடன் குடும்பம் எனும் விலங்கை பூட்டிக்கொண்டு அத்தனை கவலைகளையும் கண்ணில் தேக்கி கருவளையத்தோடு.

“சக்தியண்ணே நல்லாருக்கீங்களா?” என்று பிரியமாக விசாரிக்கும் போது சக்திவேலின் உள்ளமெல்லாம் பூரிக்கும்… தனக்கே அவர்கள் தங்கையானது போன்ற ஒரு உவகை ஏற்படும்.

“நல்லாருக்கேன்மா… வீட்ல மாப்பிள்ளை மத்த எல்லாரும் சவுக்கியமா?” என்று பாசத்தோடு கேட்கும் போது இவனா அவன் என்றே தோன்றும் அந்த முன்னாள் மாணவிகளுக்கு!

இந்த பெண்களுக்கு எங்கு வாழ்க்கை அமைய காத்திருக்கிறதோ? பெருமூச்சோடு மனதில் ஒரு நிலைப்படுத்தி வாகனத்தை செலுத்தினான்… தானாக ஒவ்வொரு ஸ்டாப்பாக வாகனம் நிற்க… மாணவிகள் ஏற கல்லூரிகளை நோக்கி பறந்தான்.

அந்த பெண்கள் கல்லூரியில் ஒவ்வொருவருவராக இறங்க… சித்ராவிடமும் வளர்மதியிடமும் வளவளத்தபடியே இறங்கினாள் நந்தினி… சக்திவேல் செந்திலிடம் கூறி அவளை நிற்க சொல்ல… அதற்காக செந்தில் அவளை அழைக்க

“நந்தினியக்கா… செந்திலை திரும்பி பார்த்தவள்

“என்ன செந்தில்?” புன்னகையோடு கேட்டாள்.

“அண்ணன் கூப்பிடறாங்க… என்றவுடன் அவளது முகத்தில் குறும்பு கூத்தாடியது!

“ஏன் உன் அண்ணனுக்கு நீ தான் வாயா… சாமியோட வாய் எங்க போச்சு? கடன் கொடுத்துட்டாரா?” சரமாரியாக கேட்க… அவன் பரிதாபமாக விழித்தான்!

“ஏன் கா?”

“இல்ல… சாமி அவங்க வாயால கூப்பிட மாட்டாங்களோ?” நக்கலாக அவள் கேட்க செந்திலின் முகம் விளக்கெண்ணை குடித்தது போலானது.

சக்திவேல் டிரைவர் சீட்டிலிருந்து இறங்கி அவளருகே வந்தான்… செந்திலிடம் சைகை காட்ட அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்… ஷப்பா எப்படித்தான் கண்களாலேயே மிரட்டுகிறானோ? என்று மனதினுள் நினைத்து கொண்டாள் நந்தினி.

“பாரும்மா பொண்ணு… கனைத்து கொண்டு பேச ஆரம்பித்தவனை அதே குறும்பு பார்வையோடு.

“பார்த்துட்டு தான் இருக்கேன் சாமி…

அவளது இடக்கை பார்த்து எரிச்சலாக வந்தது சக்திவேலுக்கு.

“உஷ்… இந்த இடக்கு பேச்செல்லாம் என்கிட்டே வேணாம்… உங்க அப்பாரு கிட்ட நான் சொல்லிக்கறேன்… நீ வேற வேன் பார்த்துக்க…

நேரடியாக அவளிடம் கடுகடுத்தவனை புன்னகையை கைவிடாத முகத்தோடு பார்த்தாள் நந்தினி… அவளும் தான் எத்தனை முறை அவனது இந்த மிரட்டலை கண்டுவிட்டாள்… அசருவேனா என்று எண்ணிக்கொண்டு.

“ஏன்?” ஒற்றைவார்த்தையில் கேட்க

“ஏன்னா… எல்லாரும் அண்ணா அண்ணான்னு ஒழுங்கா கூப்பிடறாங்க… அதென்ன நீ மட்டும் சக்தி சக்தின்னு ஏலம் போடற?”

“ஏன்… உன்னை சின்ன வயசுல இருந்தே அப்படித்தானே கூப்பிடறேன்… இப்போ என்ன புதுசா சொல்ற?” தன் சிறு வயது முதலே லோடு எடுக்க வரும் சக்தியை அப்படியே அழைத்து பழகி இருந்தாள் நந்தினி!

“அப்ப கூப்பிட்டா இப்போவும் கூப்பிடனுமா? எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு இங்க… ஒழுங்கா அண்ணான்னு கூப்பிட்டா வேன்ல வா… இல்லைன்னா உங்க அப்பாகிட்ட சொல்லி வேற வேன் பார்த்துக்கோ… கறாராக அவன் கூற,

“அஞ்சுக்கும் பத்துக்கும் அப்பா கிட்ட கையேந்தி நிற்கும் போதே இவ்வளவு திமிர் இவனுக்கு… ஒரு ஓட்டை வண்டியாம்… அதுக்கு இவன் டிரைவராம்… ஹும்ம்… இதுக்கு மேலயும் இருந்துட்டா இவனையெல்லாம் கைல பிடிக்க முடியாது… தனக்குள்ளாக அவள் முனக… அதை கேட்ட சக்திவேல்.

“உங்க அப்பாகிட்ட லோடு தான் அடிக்கறேன்… அதுக்காக அஞ்சுக்கும் பத்துக்கும் அவர் கிட்ட கை ஏந்தற வேலைக்காரன் இல்ல… எனக்கு நான் தான் முதலாளி… அனாவசியமா இப்படியெல்லாம் நினைப்பு வெச்சுக்காத… கடுமையாக அவளை பார்த்து கூற… மளுக்கென்று அவளது கண்ணில் குளம் கட்டியது.

“சரிங்கண்ணா… அவனது முகத்தை பாராமல் கூறிவிட்டு கல்லூரியை நோக்கி போனாள்… அவளை கடுமையாக பேசிவிட்டாலும் அவனது உள்ளம் இன்னும் ஆறவில்லை.

“என்ன பேச்சு பேசுது இந்த பொடுசு… நான் பார்த்து வளர்ந்ததுக்கு இத்தனை வாயா? ப்ப்ப்ப்பா! !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!