idhayam – 16

அத்தியாயம் – 16

“நீ நம்ப மாட்டியே” அவனின் பார்வையை உணர்ந்து அவள் கூற, “நீ நம்பற மாதிரி சொன்னால் நம்பலாம். எங்க அண்ணனே ஒரு சிடுமூஞ்சி. அவன் வந்து உனக்கு விஷ் பண்ணான் அதுவும் கோவில் முன்னாடி” என்று கோபத்துடன் முகம் திருப்பினான் ராகவ்.

ரக்சிதா தன் கையில் இருந்த கிப்ட்டை அவன் முன் நீட்டி, “கடை தெருவில் கிப்ட் எப்படி கிடைக்கும்” என்று கேட்க அப்போது தான் அவள் சொல்வதை உண்மை என்று நம்பினான்.

‘நான் வண்டியை நிறுத்த போன கேப்பில் என்ன நடந்திருக்கும்’ என்றவன் தீவிரமாக யோசிக்க, “சீக்கிரம் வாடா உன்னை பிள்ளையாருக்கு சிஷியனாக உட்கார வைக்கணும்” என்று முன்னே நடந்தவளை தன்னால் முடிந்தவரை முறைத்தான் ராகவ்.

“அவன் விஷ் பண்ணல என்று கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி புலம்பியவள் இப்போ என்னையே கேலி பண்ணிட்டு போறாளே. பிள்ளையாரப்பா நீ இதைக் கேட்க மாட்டியா” என்று வானத்தை பார்த்து புலம்பியபடி கோவிலுக்குள் நுழைந்தான்.

“வா ராகவ் சாமி கும்பிட” என்று ரக்சிதா அவனை அழைக்க, “இங்கே பொங்கல் எங்கே போடுறாங்க என்று கொஞ்சம் பாரு” என்றவனை முறைப்பது இப்போது அவளின் முறையானது.

“இப்போ எதுக்கு முறைக்கிற” என்றவன் புரியாமல் கேட்க,

“நீ எதுக்கு கோவிலுக்கு வந்த” என்றாள் அவள் கோபத்துடன்.

“வேற எதுக்கு வர போறேன் பொங்கல் சாப்பிடத்தான் வந்தேன்” என்றவன் அங்கிருந்து நகர்ந்துவிட, “ஆண்டவா ஒருத்தன் பேசியே உயிரை வாங்கறான். இன்னொருத்தன் பேசாமல் உயிரை வாங்கறான்” என்று கத்தியபடி சாமி கும்பிட சென்றவளைக் கண்டு தனக்குள் சிரித்துகொண்டு கியூவில் பொங்கல் வாங்க நின்றான் ராகவ்.

அவள் சாமி கும்பிட்டுவிட்டு வருவதற்குள் பொங்கலை வாங்கி வந்து அமர்ந்த ராகவ், “இந்தா ரக்சிதா” அவளிடம் ஒரு இலையை நீட்டிட, “பொங்கலுக்கு பிறந்த பிசாசே” என்று அவள்  திட்டிட, “சாம்பாருக்கு பிறந்த சகுனி” என்று தன் பங்கிற்கு அவளை வாரினான் அவன்.

அதை சொன்ன பிறகு இருவரும் சிரிப்பு வந்துவிட, “சக்தி என்னை தேடி வருவான்னு நான் நினைக்கவே இல்ல ராகவ்” என்றாள் பொங்கலை சாப்பிடபடி.

“இது தான் காதலோட முதல் ஸ்டேஜ்” என்றவனை அவள் புரியாமல் பார்த்து வைக்க அவனோ பொங்கலை சாப்பிடுவதில் கவனமாக இருந்தான்.

“எனக்கு புரியல ராகவ்” என்றவள் சொல்ல,

“நீ கொஞ்சம் முகம் வாடினாலும் சக்தி அண்ணாவால் பொறுத்துக் கொள்ள முடியல. இது காதல் இல்லம்மா வேற என்ன?” என்று கேள்வியாக புருவம் உயர்த்தியவனை வியப்புடன் விழிவிரிய பார்த்தாள் ரக்சிதா.

“நிஜமா சக்தி என்னை காதலிக்கிறானா” என்றவள் நம்பாமல் கேட்க,

“காதலிக்கிறான் என்று சொல்ல முடியாது. ஆனால் காதலிக்க தொடங்கிட்டான். அதன் இவ்வளவு தூரம் வந்து உனக்கு விஷ் பண்ணிட்டு போயிருக்கான்” என்று கூறியவனை அவள் திகைப்புடன் நோக்கினாள்.

அவளின் மனம் உணர்ந்து, “ரக்சிதா எந்த இடத்திலும் நம்பிக்கை இழக்காமல் இரு. எல்லாமே நல்லதாக நடக்கும்” என்று அவளின் கரங்களைப் பிடித்து அழுத்தம் கொடுத்தான்.

அவளுக்குமே இந்த ஆறுதல் தேவையானதாக இருக்க, “பார்க்கலாம் ராகவ் என்ன நடக்குதுன்னு” என்றாள். ஆக மொத்தத்தில் அவளின் பிறந்தநாள் அவளுக்கு சந்தோசமாகவே முடிந்தது.

அதே நேரத்தில் தன் மனதைப் புரிந்துகொள்ள முடியாமல் மனதிற்குள் தடுமாறியபடி வகுப்பறையில் அமர்ந்திருந்தான் சக்தி. அவன் இன்று ஏன் அப்படி செய்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் ரக்சிதாவின் முகம் வாடியதை அவனால் ஏற்றுகொள்ள முடியவில்லை என்ற உண்மையை அவன் மனம் உணர்ந்தே இருந்தது.

 அவளுக்காக கிப்ட் வாங்கிக்கொண்டு போய் அவளிடம் கொடுக்கும் வரையில் அவனின் மனம் பதறியது அவனுக்கு மட்டுமே தெரியும். ரக்சிதாவிடம் இருந்து விலக நினைத்தாலும் ஏதோ ஒன்று அவனை விலகவிடாமல் தடுத்தது. அது என்னவென்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தான் சக்தி.

இதற்கிடையில்..

ஆதி வந்துவிட்டதாக மெசேஜ் வந்ததும் முயன்று வரவழைக்கப்ட்ட புன்னகையுடன் அவனைக் காண கீழே சென்றாள். அவளைக் கண்டவுடன் உணர்ச்சி துடைத்த முகத்துடன் கதவை திறந்துவிட்டவனைப் பார்த்து, ‘சரியான ரோபோ. இவனை கட்டிக்கிட்டு எவ சீப்பட காத்திருக்களோ’ என்று நினைத்தவள் காரில் ஏறியமர்ந்தாள்.

“நான் உன்னை ரொம்ப தொந்தரவு பண்ணுகிறேனா?” என்று இனிய தேன் குரலில் கேட்டாள்.

அவனோ மறுப்பாக தலையசைத்துவிட்டு, “அதெல்லாம் இல்ல ரேவதி” என்றவன் இதழை பிரிக்காமல் அவன் புன்னகைக்க அப்போது அவளின் மனம் அவனிடமே சென்றது.

‘ஒரு குட்டி சிரிப்பில் மனசை அள்ளிவிடுகிறான் படுபாவி. எங்கிருந்து தான் கற்றுக் கொண்டானோ’ என்று அவளின் மனம் சிணுங்கியது. அவளின் மனநிலை உணராமல் காரை ஓட்டுவதில் கவனமாக இருந்தான் ஆதி.

இவளோ வெளியே வேடிக்கைப் பார்த்தபடி மெளனமாக அமர்ந்திருந்தாள். அவன் ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முன்னே காரை நிறுத்திவிட்டு அவளின் புறம் திரும்பி,

“நீ போய் வாங்கிட்டு எனக்கு போன் பண்ணு. நான் வரும்போது உன்னை வந்து கூட்டிட்டு போறேன்” என்று அவளின் முகம் பார்க்காமல் கூறியதும் சரியென்று தலையசைத்துவிட்டு சென்றுவிட்டாள் ரேவதி.

அவன் சைட்டுக்கு சென்று வேலைகள் அனைத்தும் சரியாக நடக்கிறதா என்று மேற்ப்பார்வை பார்த்து முடித்துவிட்டு மீண்டும் நிறுவனம் நோக்கி கிளம்பும் போது ரேவதிக்கு அழைக்க, “நான் அப்போதே ஹாஸ்டல் வந்துட்டேன் ஆதி” என்றவள் அவனின் பதிலை எதிர்ப்பாராமல் போனை வைத்துவிட்டாள்.

அவளின் இந்த செயல் அவனுக்கு சந்தேகத்தை கொடுத்தது. அவளுக்கு ஏதாவது ஆனால் அதற்கான பழி தன் மீது  விழும் என்ற எண்ணத்துடன் சிந்துவிற்கு அழைத்தான்.

மறுப்பக்கம் போனை எடுத்ததும், “ஹலோ சிந்து நான் ஆதி பேசறேன்” என்றான்.

“சொல்லுங்க அண்ணா” என்றாள்.

“ரேவதி ரூமிற்கு வந்துவிட்டாளா?” என்று கேட்க, “அவ இன்னும் வரல அண்ணா” என்றவளின் குரல் பதட்டத்துடன் ஒலித்தது.

“என்னன்னா ஏதாவது பிரச்சனையா?”

“என்னிடம் ஹாஸ்டல் போயிட்டேன்னு சொன்னால் அதன் கேட்டேன்” என்றவன் போனை கட் பண்ண நினைக்கும்போது,

“அண்ணா நான் உங்களோட பேசணும்” சிந்து அவசரமாக பேச, “சொல்லும்மா” என்றான் குரலில் கனிவுடன்.

அவனிடம் அன்று நடந்த அனைத்தையும் ஒப்பித்துவிட்டு, “அண்ணா நான் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன். ரேவதி குணமே சரியில்ல. எதிலும் நிலையாக நிற்காமல் மாத்தி மாத்தி யோசிக்கிறா. அவளோட பழக்க வழக்கங்களும் மாறிட்டே இருக்கு. கொஞ்சம் கவனமாக இருங்க” என்று எச்சரித்தாள்.

அவளின் அக்கறை மனதை தொட்ட பொழுதும் மறுபுறம் சிந்துவை நினைத்து ஆதிக்கு சிரிப்புதான் வந்தது.

அவன் சிரிக்கும் சத்தம் கேட்டதும், “என்ன அண்ணா  சிரிக்கிறீங்க” என்று சிணுங்கினாள்.

“அவளோட அலைபாயும் மனசு பற்றி எனக்கு நல்லாவே தெரியும் சிந்து. அது மட்டும் இல்லாமல் அவதான் என்னை லவ் பண்ணுவதாக ஊர் முழுக்க சொல்லிட்டு இருக்கிறா எனக்கு அந்த ஐடியா கூட இல்ல. சோ அவ என்ன பண்ணினாலும் எனக்கு அதைபற்றி கவலை இல்ல.” என்று அவளிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு போனை வைத்தான் ஆதி.

ஆனால் சிந்து சொன்னதை பற்றி சிந்தித்தபடி அவன் ஆபீசிற்கு செல்ல அவனை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டது வேலைகள். ரேவதியை பற்றிய சிந்தனையை ஒதுக்கிவிட்டு வேலையை தொடர்ந்தான். மீண்டும் இரவு வீடு திரும்பும்போது ஆதியின் மனதில் தானாகவே சிந்து சொன்ன விஷயத்தை அசைபோட துவங்கியது.

அவன் வீடு வந்து சேர்ந்தும் குளித்துவிட்டு வந்து சோபாவில் அமரும்போது அவனின் செல்போன் சிணுங்கியது. அதன் மறுபக்கம் சொன்ன செய்தியைக் கேட்டு அவனின் புருவங்கள் சுருங்கியது. ஆதி கொஞ்சநேரம் அவர்களோடு பேசிவிட்டு போனை வைத்தான்.

‘என்னை தவிர மற்ற யாராலும் உன் மனசில் இடம் பிடிக்கவே முடியாதுடி. உன்னோட மனதில் முதலில் இடம் பிடித்தவன் நானாகத்தான் இருப்பேன்..’ என்று நினைத்தவன் சோபாவில் அமர்ந்து சிந்தித்து ஒரு முடிவிற்கு வந்தான்.

அவனின் காத்திருப்பு நாட்கள் முடிவிற்கு வந்துவிட்டது என்று உணர்ந்தவன், ‘இனிமேல் உன்னைவிட்டு விலகி இருக்க என்னால் முடியாது பெண்ணே. ஒன்று நீ என்னை தேடி வரணும். இல்லன்னா நான் உன்னை வர வைப்பேன்’ என்ற எண்ணத்துடன் தன் லேப்டாப்பில் எதையோ டைப் செய்து அதை உடனே பிரிண்டிங் கொடுத்தான்.

தான் டைப் செய்ததெல்லாம் சரியா என்று ஒருமுறைக்கு இருமுறை கவனமாக படித்தவனின் உதட்டில் புன்னகை அரும்பியது. அதை அனுப்புவதற்கு சரியான நாள் எதுவென்று குறித்து வைத்துவிட்டு படுக்கையில் சரிந்தவனின் விழிகள் தாமாக மூடிக்கொள்ள நித்திராதேவி அவனுக்கு உறக்கத்தைக் கொடுத்தாள்.

நாட்கள் யாருக்காகவும் காத்திருக்காமல் ரெக்கைக்கட்டிக்கொண்டு பறந்தது.

பிரணவ் எவ்வளவு முயன்றும் அபூர்வாவை காதலிக்க வைக்க முடியாமல் திணறினான். அவளைக் காதலிக்க வைக்காமல் அந்த காலேஜ் விட்டு செல்வதில்லை என்ற முடிவுடன் அவன் மேல் படிப்பை தொடர்ந்தான்.

மாலை கல்லூரி முடிந்தும் வீடு திரும்பிய பிரணவ் தன் அறைக்கு சென்று ரிப்ரெஷ் ஆகிவிட்டு கீழே ஹாலில் வந்து அமரவும் சரஸ்வதி மணக்க மணக்க ஏலக்காய் டீ போட்டு எடுத்து வரவும் நேரம் சரியாக இருந்தது.

அவனின் கையில் டீயை கொடுத்துவிட்டு பக்கத்தில் இருந்த சோபாவில் அமர்ந்தவர், “தம்பி உன்னோட பெயருக்கு ஒரு போஸ்ட் வந்துச்சு” என்று சொல்லி அவனிடம் ரிஜிஸ்டர் போஸ்ட் ஒன்றைக் கொடுத்தார்.

“எனக்கு யாரும்மா அனுப்பி இருக்க போறா” என்ற கேள்வியுடன் தபால் போஸ்ட் பிரித்த பிரணவ் மேலோட்டமாக கடிதத்தை வாசித்ததில், “அம்மா நான் சொல்வேன் இல்ல கொல்கத்தாவில் இருக்கும் ஆதித்யா கன்ஸ்ட்ரக்ஷனில் வேலை பார்க்கணும் என்று! அந்த நிறுவனத்தின் சென்னை பிரான்சில் என்னை வந்து சேர சொல்லி லெட்டர் வந்திருக்கு அம்மா”என்றான் சந்தோஷமாக.

“அப்படியா தம்பி. இத்தனை நாள் படிப்பு படிப்பு என்று ஓடியதற்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைப்பது குதிரை கொம்புதான். இந்த நிறுவனம் வேற நல்ல நிறுவனம் என்று சொல்ற. ரொம்ப சந்தோசமாக இருக்கு” என்றவர் கணவனுக்கு தகவல் சொல்ல எழுந்து சென்றார்.

பிரணவ் வறுமை நிறைந்த நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். அவன் ஆசைபட்டு படித்தது இந்த படிப்பு மட்டுமே. அதற்காக அவன் அப்பா பெயரில் இருந்த நிலங்களை எல்லாம் விற்றுத்தான் இவனை நன்றாக படிக்க வைத்தனர். அதற்கு ஏற்றார்போல அவனும் நன்றாக படிக்க அவன் படிப்புக்கு தகுந்த இடத்தில் வேலை கிடைத்தது மனதிற்கு நிறைவாக இருந்தது.

அப்போது அவனின் செல்போன் நம்பருக்கு புதிய இலக்கத்தில் இருந்து கால் வரவே, “ஹலோ” என்றான் சிந்தனையுடன்.

“ஹாய் பிரணவ் ஐ எம் ஆதித்யா கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி.” என்று கம்பீரமான குரலில் பிரணவ் தன் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்து நின்றான்.

“ஸார் நீங்களா” திகைப்பு மாறாத குரலில் கேட்க, “யெஸ் எனி வே கன்கிராட்ஸ். நீங்க சொன்ன தேதிக்கு மறக்காமல் சென்னையில் இருக்கும் பிரான்சில் போய் வேலைக்கு சேருங்க” என்றதும் அவனுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது.

பிரணவ் கனவில் கூட நினைக்க முடியாத உயரத்தில் இருப்பவன் தன்னோடு பேசுவதை நினைத்து அவனுக்கு குழப்பமாக இருக்கவே, “ஸார் இதெல்லாம் நீங்க உங்க பி.ஏ.கிட்ட சொல்லி செய்ய சொல்லியிருக்கலாமே. நீங்க எதுக்கு எனக்கு நேரடியாக கூப்பிட்டு பேசறீங்க” என்றவனின் குரல் சந்தேகத்துடன் ஒலித்தது.

இவ்வளவு பெரிய இடத்தில் இருப்பவர் தனக்கு ஏன் போன் செய்ய வேண்டும் என்ற விஷயம் அவனின் மனதிற்கு தவறாக தோன்றிவிட உடனே பட்டென்று கேட்டுவிட்டான்.

“நான் உங்களுக்கு அனுப்பிய லெட்டரில் இன்னொரு லெட்டரும் அனுப்பி இருக்கேன்” என்றபோது தான் அவன் மற்றொரு கடிதத்தைப் பார்த்தான்.

“ஆமா சார் வந்திருக்கு”  என்றான்

“எனக்கு ஒரு ஹெல்ப் வேண்டும். அதையும் நீங்க தான் செய்யணும் மிஸ்டர் பிரணவ்” ஒருவிதமான அழுத்தத்துடன் சொல்ல இவனுக்கு தலை சுற்றியது.

“ஸார் உங்களுக்கு.. நான்..” கோர்வையாக பேச முடியாமல் அவன் தடுமாற அமைதி நிலவியது. அந்த அமைதியை முதலில் கலைத்தவன் ஆதித்யா தான்.

“உங்க காலேஜில் ஆர்ச் படிக்கும் அபூர்வாவிடம் இந்த கடிதத்தை கொடுக்க முடியுமா”என்றவன் நேரடியாக கேட்க, ‘அபூர்வாகிட்ட நான் இந்த கடிதத்தைக் கொடுக்கணுமா? சும்மா கொடுத்தாலே பக்கி கொளுத்தி போடும். இந்த லட்சணத்தில் நான் கொண்டுபோய் கொடுத்தா இதை படிப்பாளா’ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது.

“என்ன பிரணவ் அமைதியாக இருக்கீங்க” அமைதிக்கான காரணத்தை புரிந்தும் புரியாதது போல கேட்டவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான்.

“இல்ல ஸார் அபூர்வாவிற்கு என்னை கடிதம் கொடுக்க சொல்றீங்க” என்றவன் திக்கியபடி திணறியபடி.

“நீங்க அதை தினமும் செய்பவர் தானே பிரணவ். இன்னைக்கு மட்டும் என்ன புதுசாக தயக்கம் எல்லாம் வருது” என்று கிடுக்கிபிடி போட்டவனுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் நின்றான் பிரணவ்.

“இந்த கடிதத்தை நீங்களே கொண்டுபோய் கொடுக்கலாமே” என்று கோபத்துடன் வார்த்தைகளை விட்டான்.

மறுப்பக்கம் அவனோ உரைக்க சிரித்தபடி, “அவ வீட்டுக்கு போய் பேச எனக்கு இரண்டு செகேண்டு ஆகாது. ஆனா நான் அதெல்லாம் செய்ய மாட்டேன். நீ நேரடியாக அவகிட்ட இந்த கடிதத்தை கொடு..” என்றதும் பிரணவின் புருவங்கள் சிந்தனையுடன் சுருங்கியது.

அவன் தன்னைபற்றி என்ன நினைக்கிறான் என்று இருந்த இடத்தில் இருந்து சில நொடியில் யூகித்துவிட்ட ஆதி, “அவளுக்கு போஸ்ட் மேன் வேலை பார்க்க உனக்கு வேலை கொடுக்கல பிரணவ். நான் அந்த நிலையிலிருந்து கஷ்டபட்டுதான் இந்த நிலைக்கு வந்திருக்கேன். சோ அது உன் படிப்புக்கும் திறமைக்கும் தகுந்த வேலைதான் என்னை தவறாக புரிஞ்சிட்டு வேலையில் சேராமல் இருக்காதே” நொடியில் பக்கா பிஸ்னஸ்மேனாக பேசினான் ஆதி.

அவன் ஒரு முறை மட்டுமே அபூர்வா என்ற பெயரை உச்சரித்து இருப்பான். ஆனால் அதில் வெளிப்பட்ட உரிமை என்னவென்று பிரணவ்வால் உணரவே முடியவில்லை.

அபூர்வாவிற்கு அந்த வருடத்துடன் படிப்பு முடிப்பதால் ப்ராஜெக்ட் வொர்க்கில் பிசியாக இருந்தாள். காலேஜ் கல்சுரலில் குரூப் டேன்ஸ் அண்ட் சோலோ சாங் இரண்டு போட்டியில் கலந்திருந்தாள். அபூர்வா ரிகசல் பார்க்கும் வேளையில் மும்பரமாக இருந்தாள்.

பிரணவ் அவள் ஆடுவதை பார்த்தபடி ஸ்டேஜ் அருகே வந்தவன் தன் கையில் இருந்த கடிதத்தையும் அபூர்வாவையும் மாறி மாறிப் பார்த்தான். அவனால் அந்த லெட்டர் யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முடிந்தாலும், அபூர்வாவிற்கு வர காரணம் என்னவென்று புரியாமல் குழப்பத்துடன் அவளை சந்திக்க சென்றான் பிரணவ்.