Megathootham 8

         மேகதூதம்      8

 

“ரிஷி ஒரு நிமிஷம்..” வாசல் வரை சென்ற அவனைத் தடுத்து அவன் முன் சென்று நின்றாள்.

வேகமாக வந்ததில் அவனுடைய சுவாசத்தை அவள் சுவாசிக்கும் அளவிற்கு நெருக்கமாக நின்றாள். பின்னால் கதவு என்பதால் அவளால் விலக முடியவில்லை. அவனும் பின்னால் செல்லும் எண்ணமில்லாமல் மிகவும் நெருக்கத்தில் நின்றான்.

அவனது பெர்பியூம் வாசனை இன்றும் அவளை ஏதோ செய்தது.

முன்பை விட இப்போது இன்னும் செழுமையாக இருக்கும் அவளை ரசிக்காமல் அவனாலும் இருக்க முடியவில்லை.

இருவரும் ஒரு நிமிடம் தங்களை மறந்து நின்றனர். அஞ்சலியின் கண்சிமிட்டலில் உயிர் பெற்றவன்,

“என்ன வேணும்? எதுக்கு இப்போ வந்து இடிச்சுட்டு இருக்க?” அவனது கோபம் கண்களில் வெளிப்பட்டது.

அவளிடம் தான் இன்னும் மயங்குவதை அவள் அறிந்துவிடக் கூடாது என்பதால் ஏற்பட்ட கோபம்.

உடனே அவள் சுதாரித்து விலகி, “எனக்கு ஒரு உண்மை தெரியனும்? நான் உங்கள எப்போ வேண்டான்னு சொன்னேன்?” அழுதுவிடும் நிலையில் இருந்தாள்.

“ஏன் எல்லாம் மறந்து போச்சா?” ஏகத்தாளமாக புருவத்தை உயர்த்தி நின்றான்.

“நீங்க தான நாம கடைசியா பார்த்த அன்னிக்கு ..” அவள் கூறும் முன்பே இடைவெட்டி,

“ஓ! எஸ் எஸ்.. நான் தான் என்னை மறந்துட சொன்னேன். நீ எந்தத் தப்பும் பண்ணல..ஆனா உன் மனச அடுத்த ஆறே மாசத்துல மாத்திகிட்டு அடுத்தவன் கூட கல்யாணத்துக்கு ரெடி ஆவன்னு நெனச்சுக் கூட பாக்கல.” கண்ணை மூடி ஏதோ நினைத்தவன்,

“பழச எல்லாம் ஞாபகப் படுத்தாத… நீயும் இப்போ சந்தோஷமா இருக்க, நானும் ரொம்ப… ரொம்ப சந்தோஷமா இருக்கேன். சோ நோ மோர் பாஸ்ட் ஆர்கியூமென்ட்ஸ். வழி விடு”

“நான் நம்ப மாட்டேன்.உங்களால எப்படி..” கண்ணில் நீர் திரண்டு நின்றது.

“நீ நம்பலன்னா இன்னிக்கு நைட் ஹாலோ பப் க்கு வா. நான் சந்தோஷமா இருக்கறத பாத்துட்டு போ. இப்போ நகரு.” அவளை தாண்டிச் செல்ல நினைக்க,

“முடியாது. எனக்கு பதில் சொல்லிட்டு போங்க ரிஷி.” அவனைத் தடுக்கும் அவசரத்தில் அவன் மார்பில் கைவைத்து விட,

‘உனக்குக் கல்யாணம் ஆனதைக் கூட மறந்து என் மேல் கை வைக்கற அளவு உன் பொறாமை உன்னைக் கொண்டு வந்திருக்கு..’ மனதில் நினைத்ததைக் கூறாமல் ,

“பதில் தான.. பாஸ்ட் இஸ் பாஸ்ட்…” அதற்கு மேல் அங்கு நிற்காமல் சென்றுவிட்டான்.

அதன் பிறகு அவனுடைய பிஏ விற்கு போன் செய்து அவன் வீட்டிற்குச் செல்வதாக கூறி வைத்தான்.

அஞ்சலியோ, தான் என்ன செய்தோம், ரிஷி இப்படி மாறும் அளவிற்கு தங்களுக்குள் என்ன நடந்தது என ஒன்றும் புரியாமல் தன் அறையில் புகுந்து கொண்டு கதறினாள்.

வீட்டிற்கு வந்தவன் மனதை அழுத்தும் அந்த நினைவுகளை மீண்டும் நினைத்துப் பார்த்தான்.

அன்று, அஞ்சலியிடம் பிரியாவிடை பெற்று டெல்லிக்குச் சென்ற பிறகு, தந்தையுடைய சிநேகிதன் மகன் சந்தோஷை சந்தித்தான். தங்கள் குடும்பத்திற்கு ஏற்பட்டிருக்கும் சோதனையை சொல்லி புதிதாக ஒரு பிசினெஸ் ஆரம்பிக்க உதவி கேட்டான்.

“நீங்க புதுசா எந்த தொழிலும் ஆரம்பிக்க வேண்டாம் ரிஷி. உங்க குடும்பத் தொழிலையே நீங்க செய்யலாம். ஆனா லோக்கல்ல இல்ல. வெளிநாட்டுல இப்போ இந்தியர்கள் பெருகிட்டாங்க. அவங்க அங்கேயே இருந்தாலும்  அவங்களோட சாப்பாட்டு முறை இன்னும் நம்ம நாட்டு பாணில தான் இருக்கு. அதுனால, இங்கிருந்து வெளிநாட்டுக்கு நீங்க காய்கறி சப்பளை பண்ணுங்க.. ரெண்டு மூணு மாசத்துல பிக்அப் ஆயிடும் நான் இங்க இருக்கற என்னோட சில கிளைன்ட்ஸ் கிட்ட உங்க பிசினெஸ்க்கு இனிஷியல் அமௌன்ட் வாங்கித் தரேன். பணத்த பத்தி கவலை படாதீங்க.

உங்க அப்பாவோட பழைய டீலர்ஸ் கிட்ட பேசிப் பாருங்க, அவங்க சம்மதிச்சா நீங்க அவங்க கிட்டயே மொத்தமா வாங்கி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யலாம்.அப்படி அவங்க சம்மதிக்கலன்னா நான் அதுக்கும் அரேஞ் பண்ணித் தரேன்.” நம்பிக்கை கொடுத்தான் நண்பன் சந்தோஷ்.

“இல்ல. அப்பாவோட கிளைன்ட்ஸ் சில பேர எனக்கு நல்லா தெரியும் . நான் அவங்க கிட்டல்லாம் முதல்ல பேசிப் பார்க்கறேன்.அப்புறம் நான் உங்க கிட்ட வரேன். ரொம்ப தேங்க்ஸ். இத நான் மறக்கவே மாட்டேன் சந்தோஷ்.” ஒரு புது தெம்பு கிடைத்தது போல் இருந்தது.

அந்த முயற்சியில்விடாமல் ஈடுபட்டான். தினமும் நண்பனுடன் சென்று பணத்திற்கு ஏற்பாடு செய்தான். அதே நேரம் தந்தையின் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு , தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறி அவர்களிடம் புதிதாக தான் செய்யவிருக்கும் தொழிலுக்கும் காய்கறி சப்பளை செய்யச் சொல்ல,

அவர்களும் வெளிநாட்டு தொடர்பு என்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்று அவன் கூறியதை ஒப்புக் கொண்டு, ரிஷிக்கு உதவ ஒத்துக் கொண்டனர்,

இரண்டு மாதம் டெல்லியிலேயே இருந்து வெளிநாட்டுக் கடைகளுக்குத் தொடர்பு கொண்டு மற்றவர்களை விட கம்மியான கொட்டேஷன் தொகைக்கு டெண்டர் ரெடி செய்து அனுப்பினான்.

அவன் நினைத்தது போலவே இரண்டு மூன்று நாடுகளில் அவனுக்கு காண்ட்ராக்ட் கொடுப்பதாக முடிவானது.

மேலும் சில தினங்கள் அங்கிருந்து ஏற்றுமதி செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்தான். அவ்வப்போது தனது தாய்க்கு தொடர்பு கொண்டு தந்தையின் நிலை பற்றி அறிந்தான். அதே நேரம் தன் குடும்பத்திற்கு துரோகம் செய்த அந்தப் பாவியைப் பிடிக்க சில ஏற்பாடுகளையும் செய்தான்.

தனக்குத் தெரிந்த நண்பன் ஒருவனின் மூலம், ஒரு டிடெக்டிவ் ஏஜென்சியைத் தொடர்பு கொண்டான். அவர்களிடம் அந்தகக் கயவனின் முழு விவரத்தையும் கூறி, ஏதேனும் அவன் வாய் வழியாக கூறுவதை படம்பிடித்துக் கொடுக்கச் சொன்னான். அவனுடைய வக்கீல் அவற்றுக்கு துணையாய் இருந்தார்.

ரிஷி நினைத்தது போலவே ஒரு நாள் அவன் சக்ரவர்த்தியின் தொழிலை அபகரித்துக் கொண்டதை குடி போதையில் ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருக்க, அந்த டிடக்டிவ் ஏஜென்சி அதை படம் பிடித்துக் கொண்டது.

உடனே வக்கீல் ரிஷிக்கு தொடர்பு கொண்டு விஷயத்தைக் கூற, ரிஷி அப்போது தான் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.

“இருந்தாலும் தம்பி..” வக்கீல் சொல்லமுடியாமல் தவிக்க,

“அவன் உண்மைய சொல்லிட்டாலும், இப்போ நாம அவன் கிட்ட இருந்து எந்த சொத்தையும் திரும்ப வாங்க முடியாது. எல்லாத்தையும் அவன் ரேஸ்லயும், மத்த விஷயத்துலயும் விட்டுட்டான். நமக்கு மிஞ்சினது நாம மேற்கொண்டு எதையும் இழக்காமல் இருக்கறது தான்.” சற்று வருத்தத்துடன் சொன்னார்.

“வக்கீல் சார். அந்த நாய் கிட்டேந்து எதுவும் எனக்கு வேண்டாம். எங்க அப்பா யாரையும் ஏமாத்தல அது எல்லாருக்கும் தெரிஞ்சா போதும். நானே எங்க அப்பாவோட கடனையும் அடைக்க வழி தெரிஞ்சுக்கிட்டேன். நான் ஜெயிலுக்குப் போகாம தப்பிச்சதே நிம்மதியா இருக்கு. இன்னும் ஒரே வருஷத்துல எப்படி வரேன்னு பாருங்க” என்று பெருமையாகக் கூறினான்.

அவனது பிசினெஸ் இப்போது நல்லவிதமாகத் தொடங்கியது. இப்போது இவர்கள் மேல் தவறில்லை என்று தெரிந்ததும் அனைவரும் ரிஷியிடம் வியாபாரம் செய்ய முன்வந்தனர்,

டெல்லியில் இருந்தே தொழிலைத் தொடங்கினான். அனைத்தும் சுமுகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது அவனுக்கு சற்று நிம்மதி பிறந்தது. அஞ்சலியின் நினைவும் அவ்வப்போது வந்தாலும், அவன் இதிலிருந்து தப்பித்த பின்னரே அவளைத் தொடர்பு கொள்ள வேண்டுமென நினைத்திருந்தான்.

அதே போல முதல் மாதம் லாபம் அத்தனை சிறப்பாக இல்லாவிடினும் ஓரளவு தாக்குப் பிடிக்கும் அளவு இருந்தது. இதையே தொடர்ந்தால், நிச்சயம் வெற்றி என்று அவனுக்கே உறுதியாயிற்று.

அஞ்சலியின் எண்ணிற்கு அழைத்தான்.

அவனது புதிய எண் அவளுக்குத் தெரிந்திருக்க வில்லை. அதே நேரம் ரிஷியினால் ஏற்பட்ட துன்பதால் பித்து பிடித்தார் போல சில நேரம் தனிமையில் ஒதுங்கிவிடுவாள்.

அப்படி ஒரு நேரத்தில் தான் ரிஷி அழைத்திருந்தான்.

போனை அவள் கண்டுகொள்ளவே இல்லை. அவள் எடுத்துப் பார்த்த போதோ தெரியாத எண் என்பதால், தேவையென்றால் அவர்களே அழைக்கட்டும் என்று விட்டுவிட்டாள்.

இப்படி இருக்க, ஒரு வேளை அவள் ஊருக்குச் சென்ற பிறகு நம்பரை மாற்றிவிட்டாளோ என்ற சந்தேகம் வந்தது ரிஷிக்கு. எப்படியும் அவள் தன்னுடையவள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில், அவன்  தனது தொழிலை கவனிக்கச் சென்றான்.

இரண்டு நாள் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ள, போன் அணைக்கட்டு உள்ளது என தெரிவிக்க, அவள் எண்ணை மாற்றி விட்டாள் என்று முடிவு கட்டிவிட்டான்.

இந்நிலையில் அவனுக்கு பிசினெஸ் தொடர்பாக தான் ஏற்றுமதி செய்யும் நாட்டிற்குப் பயணப் பட வேண்டும் என்றானது. ரிஷிக்கு அஞ்சலியை அப்படியே விட்டுச் செல்ல முடியவில்லை.

அவன் கிளம்பிச் சென்று முன்பு அவனிடம் கொடுத்த அவளது வீட்டு விலாசத்திற்குச் சென்றான்.

அங்கே தான் அவனுக்கு முதல் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த வீட்டை அவர்கள் காலி செய்துவிட்டதாகத் தெரிவித்தனர்,

“அவங்க இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியுமா?” அங்கிருப்பவர்களிடம் கேட்க,

“தெரியலங்க. அவங்க பொண்ணுக்குக் கல்யாணத்துக்குப் பாத்துட்டு இருந்தாங்க. அதுனால தான் வீடு மாத்துனாங்க அந்த அம்மா.” அவர்கள் கூறியது அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அங்கிருந்து கிளம்பி நேரே தனது வீட்டிற்குச் சென்றான்.

அம்பிகா அவனைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்தார்.

“வா ரிஷி. உன்னை நினைச்சா எனக்குப் பெருமையா இருக்கு. நம்ம குடும்ப கவுரவத்த நீ காப்பாத்திட்ட. எனக்கு அதுவே போதும். அப்பாவும் சீக்கிரம் சரி ஆயிடுவங்கன்னு டாக்டர் சொல்லிருக்கார்.” அவர் பேசிக் கொண்டே போக, ரிஷியின் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் இருந்தான்.

“என்ன விஷயம் ரிஷி. நான் பேசிட்டே இருக்கேன். நீ பதிலே சொல்லாம இருக்க, என்ன ஆச்சு பா?” அவனது அருகில் அமர்ந்து கேட்க,

“அம்மா. உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நான் பெங்களூர்ல இருந்தப்ப அங்கிள் வீட்டு மாடில சில பேர் பேயிங் கெஸ்ட்டா தங்கியிருந்தாங்க. அஞ்சலின்னு ஒரு பொண்ணு.

அவளும் நானும் …” அவன் கூறும் முன்பே.

“என்ன லவ்வா..?” சற்று எரிச்சலாகவே வந்தது அம்பிகாவின் வார்த்தைகள்.

“ஆமாம்மா. உங்களுக்கும் அவளை ரொம்பப் பிடிக்கும். ரொம்ப நல்ல பொண்ணும்மா. இந்தப் பிரச்சனயால இனிமே என்ன ஆகும்னு தெரியாம கொஞ்சம் என்னை விட்டு போ ன்னு சொல்லாம சொல்லிட்டேன்.

இப்போ அவங்க வீடு வேற மாத்திட்டாங்க. எங்க இருக்கான்னு தெரியல. அவள கண்டு பிடிக்கறது ஒன்னும் பெரிய வேலை இல்லை.

நம்ம டிடக்டிவ் கிட்ட சொன்னா உடனே கண்டுபிடிச்சு சொல்லிடுவாங்க. ஆனா, இப்போ நான் உடனடியா வெளிநாடு போகணும். அதான் அவளை எப்படி பாத்து சமாதானப் படுத்தறதுன்னு தெரியல. அதைப் பத்தித் தான் யோசிச்சுட்டு இருந்தேன்.” தன் தாய் மேல் இருக்கும் நம்பிக்கையில் அனைத்தையும் அவரிடம் சொன்னான்.

அவளைக் கண்டு பிடிக்க டிடக்டிவ் வரை செயல்வது உட்பட.

இங்கே தான் அம்பிகாவின் மூளை வெகு வேகமாக வேலை செய்தது.

உடனே எரிச்சலை மாற்றிக் கொண்டு,

“என்ன ரிஷி. இவ்ளோ தான. இதுக்கா வருத்தப் படற. அம்மா இங்க தான இருக்கப் போறேன். அவளை நானே போய் பார்த்து , அவங்க வீட்ல சம்மந்தம் பேசி உனக்குக் கல்யாணத்துக்கு நாளும் பார்த்து சொல்றேன். நீ வெளிநாட்டுலேந்து வர அன்னிக்கு உனக்கும், அந்தப் பொண்ணு… யாரு.. ஆங் அஞ்சலி, அவளுக்கும் கல்யாணம். ஓகே வா!?” ரிஷியை தனது ஜால வார்த்தைகளால் உற்சாகப் படுத்தினாள்.

“வாவ்… தேங்க்ஸ் மா . அவளைப் பாத்தீங்கன்னா உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் மா.” அவளைப் பற்றி சொல்ல ஆரம்பிக்க, அது அம்பிகாவிற்கு ஏனோ இன்னும் எரிச்சலைக் கிளப்பியது.

“போதும் போதும். என் மருமகள நான் பார்க்கறப்ப எல்லாத்தையும் தெரிஞ்சிக்கறேன். நீ இப்போ தான் வந்திருக்க, ஊருக்கு போக எல்லாத்தையும் ரெடி பண்ணு. மத்த வேலையெல்லாம் நான் பார்த்துக்கறேன்.” அவனை அங்கிருந்து கிளப்பினார்.

அஞ்சலியை பார்க்கும் முன்னரே ஏனோ அவளை ஏற்க மனமில்லை அம்பிகாவிற்கு.

அடுத்த இரண்டு நாளில் ரிஷி ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்ற நிலையில், அடுத்த நாளே , அந்த டிடெக்டிவை வீட்டிற்கு வர வைத்து அஞ்சலியைப் பற்றி கூறினான்.

அம்பிகாவும் அவனுக்கு எதிரே ஆர்வமாக இருப்பதைப் போலக் காட்டிக்கொண்டு நடித்தார்.

“டோன்ட் வொர்ரி ரிஷி, அவங்க எங்க இருக்காங்க எப்படி இருக்காங்கன்னு ரெண்டே நாள்ல உங்களுக்கு அப்டேட் வரும்.” அவன் சென்றுவிட்டான்.

மறுநாள் , ரிஷியும் கிளம்பினான்.

அம்பிகா அவனை மகிழ்ச்சியாக வழியனுப்பிவிட்டு, இங்கே அவரது வேலையைத் தொடர்ந்தார்.

அந்த டிடெக்டிவ் மறுநாள் வீட்டிற்கு வந்து அஞ்சலியின், வீட்டு முகவரி, ஆபிஸ் முகவரி, தொலைபேசி எண் என அனைத்தையும் கொடுத்தான்.

“குடும்பம் எப்படி?” ஒற்றை வரியில் அம்பிகா கேட்க,

“அப்பா கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அவங்கள தனியா விட்டுட்டு எங்கயோ போய்ட்டாரு மேடம். அம்மா வேலைக்குப் போய் தான் பிள்ளைங்கள கொண்டு வந்திருக்காங்க.

அஞ்சலி அப்பறம் அவங்க தம்பி பிரபு. பிரபு இப்போ காலேஜ்ல படிக்கறான்.” அவன் சொல்லிக் கொண்டே போக,

“சொத்து?

“அப்படி எதுவும் இது வரை அவங்களுக்கு இல்ல மேடம்.”

“சரி இனிமே நான் பாத்துக்கறேன். நீங்க ரிஷி கிட்ட தனியா எதுவும் சொல்லவேண்டாம். அவன் ஊருக்குப் போயிட்டான். நானே எல்லாம் சொல்லிகறேன். இந்தாங்க உங்க வேலைக்குப் பணம்.” கட்டு நோட்டை அவனிடம் நீட்ட.

இது ரிஷியிடம் தான் வாய் திறக்காமல் இருக்கக் கூலி என்பதை நன்றாகப் புரிந்து கொண்டான்.

அவன் சென்ற பிறகு, இது அஞ்சலியின் நம்பர் என ரிஷி கொடுத்த எண்ணும் இவன் கொடுத்த எண்ணும் ஒன்றாக இருப்பதை கண்டு, முதலில் அஞ்சலியை அந்த எண்ணை மாற்ற வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

“சொத்தும் இல்ல, ஓடிப்போன அப்பன், குடும்ப லட்சணமா இது. இப்படி ஒரு பொண்ணை இவன் காதலிச்சா நான் ஒத்துக்கனுமா? நிச்சயமா இது நம்ம குடும்ப கவுரவத்த பாதிக்கும் ரிஷி. சாரி மை சன். நீ அவள மறந்து தான் ஆகணும். உனக்கு என்னோட ப்ரென்ட் , பெரிய பிசினெஸ் மேன் மோகன் ஓட பொண்ண தான் கல்யாணம் பண்ணி வைக்கப் போறேன்.

நீ திரும்பி வரும் போது கண்டிப்பா நம்ம வியாபாரம் பெரிய லெவல்ல கொண்டு வருவ, அப்போ அவன் கிட்ட நான் பொண்ணு கேட்பேன்.

அவ தான் நம்ம குடும்பத்துக்கு ஏத்தவளா இருப்பா. எங்கிருந்தோ வர கழிசடைய நான்… அதுவும் குடும்ப கவுரம் பெருசா நெனைக்கற நான்.. எப்படி ஒத்துப்பேன்னு நீ நெனச்ச ரிஷி?

அதுவும் நல்லது தான். உன் நம்பிக்கை தான் இப்போ நான் நடத்தப் போற இந்த நாடகத்துல உன்னையும் அந்த அஞ்சலியையும் பிரிக்கப் போகுது.”

தன்னிடம் வேலை செய்யும் ஆட்களில் சில பேரிடம் அஞ்சலியின் நம்பரைக் கொடுத்து விடாமல் ராங் கால் செய்யும் படி சொன்னாள் அம்பிகா.

ஊருக்குச் சென்ற ரிஷி, அம்பிகாவிற்கு போன் செய்தான்.

“ரிஷி, நல்லபடியா போய் சேந்துட்டியா. அங்க எல்லாம் வசதியா இருக்கா?

“இப்போ கிளைன்ட் ஒரு ஹோட்டல் அர்றேஞ் பண்ணிருக்காங்க. சீக்கிரம் ஒரு வீடு பாத்து போய்டுவேன் மா. கவலைப் படாதீங்க. அஞ்சலி பத்தி எதாவது தெரிஞ்சுதா மா?” அவன் அதில் தான் குறியாக இருப்பான் என் அம்பிகா நன்கு அறிந்திருந்தாள்.

“ஆமா ரிஷி. நீ சொன்னது சரி தான். அவ நம்பர் மாத்திட்டா. வேற நம்பர் குடுத்திருக்காங்க. ஆனா, எல்லாம் நானே பேசிட்டு அவ நம்ம வீட்டுக்கு வந்த பிறகு உனக்கு அவ நம்பரை தர சொல்றேன். அதுவரை கொஞ்சம் பொறுமையா இரு. அவங்க வீட்டு அட்றஸ் கெடச்சிருக்கு. நானே ஒரு நல்ல நாள் பாத்து அங்க போய் பேசறேன்.நீ உடம்ப பாத்துக்கோ ரிஷி. டியூட்டி பர்ஸ்ட்.” சிரித்துக் கொண்டே போனை வைத்தார்.

தாய் கூறுவதும் சரியே. முதலில் தொழிலை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என அதில் மூழ்கினான், தாயின் பேரில் இருந்த அபார நம்பிக்கையில்.

அம்பிகாவின் கொடுத்த ஐடியா நன்றாக வேலை செய்தது. மாறி மாறி அஞ்சலிக்கு ராங்கால் பறந்து கொண்டிருக்க அவள் இரண்டே நாளில் நம்பரை மாற்றும் எண்ணத்திற்கு வந்தாள்.

அப்படியே செய்தாள்.

முதல் வெற்றிப் படியில் ஏறினாள் அம்பிகா.

அடுத்து தன்னிடம் வேலை செய்யும் ஒரு பெண்ணை அஞ்சலியை ஒரு வாரம் நன்றாக வேவு பார்க்க அனுப்பினாள். அப்பெண் குரலை ப மாற்றிப் பேசும் திறமையுடையவள்.

அஞ்சலியைப் போல பேசவேண்டும் என்பது தான் அவளுக்கு அம்பிகா கொடுத்த வேலை.

அவளும் அஞ்சலியைப் போலப் பேசக் கற்றுக் கொண்டு வந்தாள்.

உடனே ரிஷிக்கு அழைத்தாள் அம்பிகா.

“ரிஷி..” குரல் சுரத்தே இல்லாமல் ஒலித்தது,

“அம்மா… என்ன ஆச்சு. உடம்பு சரியில்லையா?” அக்கறையுடன் ரிஷி விசாரிக்க, அவனை ஏமாற்றுகிறோம் என்ற சிறு உறுத்தல் தாயுள்ளத்தில் ஏற்ப்பட்டாலும், குல கவுரவமே முன்னாள் வந்து நின்றது.

“இல்ல ரிஷி, நான் அஞ்சலியைப் பார்க்கப் போன நேரம் சரி இல்லபா.. அவளுக்கு அவங்க வீட்டுல வேற மாப்பிளை பார்த்துட்டாங்க. அவங்க வீட்டை மீறி எதுவும் செய்ய முடியாதுன்னு …” முடிக்காமல் நிறுத்த,

“இல்ல மா. கண்டிப்பா அஞ்சலி இதுக்கு ஒத்துக்க மாட்டா.. நீங்க அவ கிட்ட பேசுனீங்களா? அவங்க அம்மா கிட்ட நீங்களே பேசுங்கம்மா..” பதறிப் போய் பேசினான்.

“அஞ்சலி இங்க தான் இருக்கா. நீயே அவகிட்ட பேசு.”

“ஹலோ…ரிஷி…” அஞ்சலியின் குரல் ரிஷியின் காதுகளை எட்டியது.