idhayam – 17

அத்தியாயம் – 17

“அபூர்வா உன்னோட கொஞ்சம் பேசணும் காலேஜ் கேண்டின் வரைக்கும் வர முடியுமா” என்று மெல்லிய குரலில் கேட்ட பிரணவ் முகத்தைப் பார்த்தவள், “ம்ம் போலாமே” என்றவள் தோழியிடம் சொல்லிவிட்டு தன் சால்வை துப்பட்டாவை சரியாக போட்டுகொண்டு அவனோடு கிளம்பினாள்.

பிறகு என்ன நினைத்தாலோ, “பிரணவ் நம்ம வெளியே எங்காவது போய் பேசலாமே” என்றதும் அவனுக்கும் அதுவே சரியென்று தோன்றிவிட அவனும் சரியென்று தலையசைக்க இருவரும் அருகில் இருக்கும் காபி ஷாப் சென்றனர்.

அவள் காபி ஷாப் உள்ளே நுழையும்போது பிரணவ்வை பின் தொடர்ந்து சில நபர்கள் காபி ஷாப் உள்ளே நுழைவதைக் கண்டு அவன் கேள்வியாக புருவம் உயர்த்தினான்.

பிரணவ் அவர்களைப் பார்த்தபடி அங்கிருந்த டேபிள் ஒன்றில் அமர அவனின் எதிரே அமர்ந்த அபூர்வா இருவருக்கும் காபியை ஆர்டர் கொடுத்துவிட்டு, “ம்ம் இப்போ சொல்லு பிரணவ் என்ன விஷயம்” என்று அவனை நேருக்கு நேர் அவனைப் பார்த்தாள்.

“அபூர்வா அவங்க உன்னை பின்தொடர்ந்து வந்த மாதிரி இருந்தது” என்றவன் குழப்பத்துடன் பக்கத்தில் டேபிளில் அமர்ந்திருந்தவர்களை கைகாட்டினான்.

அவன் காட்டிய திசையை நோக்கியவளோ, “அப்படியா எனக்கு அவங்கள யாருன்னு தெரியாதுப்பா” என்றவள் ஒரு குறுஞ்சிரிப்புடன், “பிரணவ் கிட்டதட்ட நான் காலேஜ் சேர்ந்த நாளிலிருந்து இந்த வேலையைத்தான் சரியாக செஞ்சிட்டு இருக்காங்க. ஆனா எதுக்குன்னு தான் தெரியல” என்றாள் குறும்புடன் கண்சிமிட்டி.

அவளை சுற்றி பின்னபட்டு இருக்கும் வலையின் ஆரம்பபுள்ளி புரியாமல் தடுமாறிய பிரணவ், “இந்த உண்மை தெரிஞ்சுமா நீ அமைதியாக இருக்கிற? உனக்கு பயமாகவே இல்லையா” என்றவன் கேள்விகளை அடுக்கினான்.

“என்னை ரொம்ப பத்திரமாக பார்த்து கொள்ள யாரோ வைத்த டிடைக்டிவ் ஏஜென்சி ஆளாக கூட இருக்கலாம் இல்லையா” என்று இவளும் தன் பங்கிற்கு அவனை குழப்பிவிட்டாள்.

“எப்பா சாமிகளா முடியல” அவன் தலையில் கைவைத்து புலம்புவதை கண்டு சிரித்தவள், “உனக்கு இன்னைக்கு என்னாச்சு பிரணவ்” என்று சாதாரணமாகவே கேட்டாள்.

என்ன சொல்வதென்று தெரியாமல் அவளிடம் லெட்டரை நீட்டினான் பிரணவ்.

உடனே அவளின் முகம் மாறுவதைக் கண்டு,  “அபூர்வா உனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு. இதை கொடுக்கத்தான் உன்னை வர சொன்னேன்” என்றவனின் கையில் இருந்த கடிதத்தை அவனையும் மாறி மாறி பார்த்துவிட்டு இப்போது அவனை நேரடியாக முறைத்தாள்.

“நிஜமாவே எனக்கு கடிதம் வந்ததா? இல்ல நீ ஏதாவது லவ் லெட்டர் போஸ்ட் பண்ணினியா?” என்று சந்தேகத்துடன் புருவம் உயர்த்தியவளைப் பார்த்து அவனுக்கு கோபம் வந்தது.

என்ன சொன்னாலும் நம்பாமல் தன்னையே சந்தேகமாக பார்க்கும் அவளுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல், “ஏய் லூசு நான் ஒண்ணும் உன்னை லவ் பண்ணல. நான் மைதிலியைத்தான் லவ் பண்றேன். அதனால் சொல்வதை ஒழுங்கா கேளு. அந்த லெட்டர் உனக்கு தான் வந்துச்சு” என்று அவன் கோபத்துடன் எழுந்து செல்ல நினைக்க அபூர்வா அவனை தடுத்து அமர வைத்தாள்.

நிதானமாக கடிதத்தின் மீது பார்வையிட்டு, ‘தனக்காக வந்த கடிதம்தானா’? என்ற சந்தேகத்தில் விலாசத்தை தேடியவளின் தேடல் பூஜ்யத்தில் முடிந்தது.

பிரணவ் அவளைப் பார்த்தபடி அமர்ந்திருக்க சில நிமிடம் கடிதத்தை கையில் வைத்திருந்த அபூர்வா யாரிடமிருந்து வந்திருக்குமென்று சிந்தித்தபடி கடிதத்தை பிரித்து படித்தவளின் கண்கள் இரண்டும் கலங்கிட அதற்கு நேர் மாறாக அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

“உன் ஆதியும் அந்தமும் நானே என்னை நினைவில்லையா காதல் சகியே..” அவன் தொடங்கியிருந்த முதல் வரியில் அவளின் மனம் முழுவதுமாக அவனிடம் சரணடைய, ‘என் இதயத்தையே எடுத்துட்டு போனவனுக்கு இப்போதான் என் நினைவு வந்துச்சோ’ என்று மனம் சிணுங்கியது.

தன் எதிரே அமர்ந்திருந்த பிரணவ்வை மறந்தவளாக மேலே படிக்க தொடங்கியவளின் செயலைக் கண்டு அவனுக்கு தான் தலை வலித்தது.

உன் கோபத்தை சொல்லுமடி

செங்கொன்றை மலர்கள்..

காலங்கள் கரைந்தாலும்

உன் கல் மனம் கரையாதோ

என் உயிர் காதலியே..

தாகத்தில் தவிக்கும் வேளையில்

ஜீவநீராக வந்தவளே..

என் காத்திருப்புக்கும்

விடை சொல்ல

என்னைத் தேடி வாராயோ

தங்க தாரகை பெண்ணே..” என்றவனின் கவிதையைப் படித்த அபூர்வா, “எங்கடா இருக்கிற” என்ற சிந்தனையுடன் அதன் கீழே இருந்த வரிகளையும் ஆர்வத்துடன் படித்தாள்.

“இந்த கவிதையில் இருந்து நான் இருக்கும் ஊரை தெரிந்துகொள்ள சில குறிப்பு கொடுக்கிறேன்” என்றதும், “சொல்லுடா நீ எங்கே இருக்கிற” என்று தன்னை மறந்து வாய்விட்டு கூறியவளை திகைப்புடன் பார்த்தான் பிரணவ்.

அவனின் பார்வை தன் மீது படிவத்தை உணராதவளோ வேகமாக அவன் கொடுத்த குறிப்புகளை வாசிக்க தொடங்கினாள்.

உன் பெயரில் வரும் ஒரு வகை பூவின் மூன்றாவது எழுத்து..

கடவுளையே உருவாக்க சிற்பிக்கு உதவும் ஒரு பொருளின் இரண்டாவது எழுத்து..

உனக்கு பிடித்த கடவுளின் மற்றொரு பெயரின் முதல் எழுத்து..

இளவேனில் காலத்தில் நான் தவித்த வேளையில் அவளே அருமருந்தாக மாறி போனவள். (இதில் நான் குறிப்பிடாத வார்த்தையின் நான்காம் எழுத்து)

இதை மட்டும் எண்ணவே முடியாது. அதற்கு மற்றொரு பெயரில் முதல் எழுத்து.” என்றதோடு கடிதம் நிறைவுற்று இருந்தது.

இவள் மீண்டும் ஒருமுறை கடிதத்தை படித்துவிட்டு நிமிர அவளின் செல்போன் சிணுங்கிட பிரணவ் பார்வை அவளின் மீது கேள்வியாக படித்தது.

சித்ரா அளித்திருப்பதை கண்டதும் அவள் போனை எடுக்க “ஏய் அபூர்வா சீக்கிரம் வாடி ரிகசல் பண்ணனும்” என்று கத்தியவளிடம்  “இன்னைக்கு ரிகசலுக்கு நான் வரலடி” என்று சாதாரணமாக கூறிவிட்டு போனை வைத்தவளை அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தான் பிரணவ்.

அவனின் பக்கம்  திரும்பியவளோ, “நீ எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணிருக்கிற தெரியுமா? என்மேல் என்ன கோபம் இருந்தாலும் அதையெல்லாம் வெளியே காட்டாமல் என்னோட வாழ்க்கையை என் கையில் கொண்டு வந்து கொடுத்திருக்கிற தேங்க்ஸ் பிரணவ்” என்றவளை அவன் இமைக்காமல் பார்த்தான்.

அபூர்வா எப்போதும் சிரித்தபடி இருந்தாலும் அந்த சிரிப்பு அவளின் கண்களை எட்டியதில்லை. இன்று அவளின் முகத்தில் இனம் புரியாத ஒருவகை சந்தோஷம். இத்தனை நாளாக தேடிய ஒரு பொருள் கிடைத்துவிட்ட நிம்மதி அவளின் முகத்தில் தெரிந்தது.

அதற்குள் காபி வந்துவிட, “பிரணவ் பேனா இருக்கிறதா” என்றாள்.

அவன் எதுவும் பேசாமல் அவளிடம் பேனாவை நீட்டிட ஒரு கையில் காபியைப் பருகியபடியே கடிதத்தில் பார்வையை ஓட்டினாள். அந்த கடித்ததில் இருந்த குறிப்புகளை வைத்து அவன் இருக்கும் ஊரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினாள்.

“என் பெயரில் வரும் பூ வகை – செங்கொன்றை – கொ” என்று எழுதியவள் அடுத்த குறிப்பை படித்தாள்.

“கடவுளை உருவாக்க சிற்பிக்கு உதவுவது கல் மற்றும் உளி” என்று கூறியவள் சிறிதுநேர சிந்தனைக்கு பிறகு,  கல் என்ற சொல்லில் இருந்து  இரண்டாவது எழுத்து – ல் என்று எழுதினாள்.

“எனக்கு  பிடிச்ச கடவுள் கிருஷ்ணா தான். அவருக்கு பத்து பேருக்கு மேல் இருக்கே..” என்று குறிப்பை படித்துவிட்டு புலம்பியவள்,

“ராமன், நரசிம்மன், கிருஷ்ணா, கண்ணன், பெருமாள்..” என்று ஒவ்வொரு பெயராக கூறி அதன் முதல் எழுத்தை எழுதி பார்த்தவளுக்கு, ‘கண்ணன் – க’ என்ற பெயரின் முதல் எழுத்து மட்டுமே சரியாக அமைந்தது போல தோன்றியது.

அவன் அடுத்து சொன்ன விஷயத்தை யோசித்தபடி கவிதையில் பார்வை பதித்தவள், “தாகம் என்ற வார்த்தையை சொல்லாமல் விட்டிருக்கிறார். அப்போ கடிதத்தில் அந்த வார்த்தை இருக்கே” என்றவள் அதிலிருந்து ‘த்’ என்ற எழுத்தைக் குறித்துக் கொண்டாள்.

“நட்சத்திரத்தை எண்ணவே முடியாது. அதுக்கு இன்னொரு வார்த்தை தாரகை” என்று கூறியவள் அந்த வார்த்தையிலிருந்து ‘தா’ என்று குறித்துக்கொண்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள்.

“கொ..ல்..க..த்..தா..” என்று எழுதியவளுக்கு ஊரின் பெயர் சரியாக கிடைத்துவிட, “ஹுரே” என்று கத்தினாள். அங்கே இருந்த சிலர் அவளைத்  திரும்பிப் பார்த்துக்கொண்டே செல்ல பிரணவ் சிந்தனையுடன் அவளையே பார்த்தான்.

“என்ன பிரணவ் கொல்கத்தாவில் இருந்து உன் முகவரிக்கு கடிதத்தை அனுப்பியவன் உனக்கு போன் பண்ணியும் சொல்லியிருப்பானே? இந்த கடிதம் எங்கிருந்து வந்தது என்று அவளிடம் நீ சொல்லக்கூடாதுன்னு கண்டிசன் போட்டு இருப்பானே” என்றதும் ஆச்சிரியத்தில் விழிவிரிய அவளையே பார்த்தான்.

“எங்க வீட்டில் கேமரா ஏதாவது வெச்சிருக்கியா அபூர்வா. அப்படியா நான் போனில் பேசிய விஷயத்தை வரிக்கு வரி மாறாமல் சொல்ற” என்றவன் திகைப்புடன் கேட்க அவளால் சிரிப்பைக் கட்டுபடுத்த முடியாமல் வாய்விட்டு சிரித்தாள்.

“எனக்கு புரியல அபூர்வா. கொல்கத்தாவில் இருக்கிறேன் என்ற விஷயத்தை நேரடியாக உனக்கே போன் சொல்லியிருக்கலாம். இல்ல உன் வீட்டுக்கு வந்து காரணத்தை சொல்லி இருக்கலாம். இது என்ன என்னை வைத்து நீங்க இருவரும் கேம் விளையாடுறீங்க” என்றவன் காரணம்தெரியாமல் புலம்பினான்.

“ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது பற்றி கேள்வி பட்டிருக்கிறாயா?” என்றதும் அவன் ஒப்புதலாக தலையசைக்க, “நீ என்னை காதலிக்க வைக்க முயற்சி பண்ற விசயம் தோல்வியில் என்று சிம்பாளிக்கா அவனோட ஸ்டைலில் சொல்லி இருக்கான். அப்புறம் அவன் இருக்கிற இடம் எனக்கு தெரிய வைக்கத்தால் தானே என் படிப்பு முடிஞ்சதும் அவனை தேடிப்போக வசதியாக இருக்கும்” குறும்புடன் கண்சிமிட்டுவிட்டு அவனிடமிருந்து விடைபெற்று கிளம்பினாள்.

அவனைவிட்டு விலகி இரண்டடி எடுத்து வைத்த அபூர்வா, “என்னை உன்னால ஒண்ணுமே செய்ய முடியாதுன்னு சொன்னதன் அர்த்தம் இப்போது புரிஞ்சிதா பிரணவ்” என்றவளின் பார்வை அவனின் மீது நிலைத்தது.

“உங்க இருவருக்கும் இடையே என்ன இருக்குன்னு கண்டுபிடிக்க முடியல. ஆனால் ஏதோவொன்று இருக்கு”  என்றான் எந்தவிதமான கல்மிசமும் இல்லாமல்.

“என்னை புரிஞ்சிகிட்டதுக்கு தேங்க்ஸ்” என்ற அபூர்வா சந்தோஷத்தில் துள்ளி குதித்தபடி ஓடியவளை அவன் பிரம்மிப்புடன் பார்த்தான் பிரணவ். அந்த வாரத்தின் இறுதியில் கல்சுரல்ஸ் வெகு விமர்சியாக நடந்தது. அதில் கலந்து கொண்டவர்கள் எல்லோருமே தங்களின் திறமையைக் கட்டினார்கள் என்று சொல்லலாம். 

பேஸ் பெயிண்டிங், சோலோ டேன்ஸ், குரூப் டேன்ஸ், என்று ஆடிடோரியத்தில் மாணவ, மாணவிகளின் ஆட்டம்பாட்டம் எல்லாம் அதன் போக்கில் கோலாகலமாக சென்றது.

சோலோ சாங்கில் அபூர்வா கலந்து கொண்ட விஷயமறிந்த பிரணவ் அவள் பாடுவதற்காக காத்திருந்தான். அவள் பாடிய பாடலைக் கேட்டதும் மனம் தாளாமல் அதை வீடியோ எடுத்து ஆதிக்கு அனுப்பி வைத்தான்.

காலையில் அலுவலகத்தில் இருந்த மீட்டிங்கை முடித்துவிட்டு ஸ்டாப்களிடம் வேலையைப் பிரித்து கொடுத்தவன் தன் கேபினுக்குள் நுழைந்தான். நடுவே மரத்தின் வேலைபாடுகளோடு இருந்த டேபிளில் பைல்ஸ் மற்றும் லேப்டாப் எல்லாம் இருக்க இடதுபுறம் முக்கியமான பைல்கள் கொண்ட அலைமாரி இரண்டடிக்கில் இருந்தது.

அவனைத் தவிர அந்த அறைக்குள் யாரையும் அவன் அனுமதிப்பதில்லை. அவனின் பி.ஏ.ரகுவரன் மட்டும் அடிக்கடி வருவான். அவனைப்பற்றி நன்றாக அறிந்து வைத்திருந்தான் ஆதி. ஒரு புறம் சுவற்றில் பாதி வரையப்பட்ட ஓவியம் முழுமையடையாமல் இருப்பதை சிலநொடி நின்று ரசித்தான்.

அதன் ரகசியம் தெரிந்து அவனின் கண்களில் மின்னல் வந்துபோனது. அவன் அமரும் இடத்திற்கு நேர் பின்னாடி பெரிய கண்ணாடி விண்டோ இருந்தது. அது மட்டும் இல்லாமல் அங்கிருந்து கொல்கத்தாவின் வியூவை தெளிவாக காண முடியும்.

அதன்பிறகு நிற்ககூட நேரம் இல்லாமல் போனது ஆதிக்கு. புதிய ப்ராஜெக்ட்  வேலையில் மும்பரமாக இறங்கியவனுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆபீஸில் இருந்த அனைவருமே திண்டாடிக் கொண்டிருந்தான். ஆதி ஒரு வேலையைக் கையில் எடுத்தால் அதை முடிக்காமல் அவன் ஓயாவே மாட்டான் என்று சொல்லும் அளவிற்கு ஆபீஸில் இருந்த அனைவரையும் பம்பரமாக சுழலவிட்டான்.

அந்த அளவிற்கு முழு கவனத்துடன் வேலை செய்தவனின் கவனத்தை ஈர்த்தது வாட்ஸ் ஆப் மெசேஜ். அவனுக்கு இதுவரை யாரும் மெசேஜ் செய்ததில்லை என்ற காரணத்தினால், ‘யாராக இருக்கும்’ என்ற சிந்தனையுடன் போனை எடுத்து பார்த்தான்.

புதிய எண்ணில் இருந்து வீடியோ வந்திருப்பதைக் கண்டு நெற்றியை வருடியவனுக்கு திடீரென்று பிரணவ் ஞாபகம் வரவே, ‘இவன் எதுக்கு எனக்கு வீடியோ அனுப்பி இருக்கான்’ என்ற சந்தேகத்துடன் வேலையை முடித்துவிட்டு நிதானமாக சீட்டில் சாய்ந்து அமர்ந்தவன் அவன் அனுப்பிய வீடியோவை பார்க்க தொடங்கினான்.

அதில் மேடை ஏறிய பெண்ணைக் கண்டவுடன் அவனின் கண்கள் ஆர்வத்துடன் அவளை அளவிட்டது. லாவண்டர் கலர் அனார்கலி சுடிதாரில் இருந்தவளிடம் தெரிந்த மாற்றங்களைக் கண்டு, “படிக்கின்ற படிப்பின் தெளிவு முகத்தில் பிரதிபலிக்குது” என்று வாய்விட்டு கூறினான்.

கையில் மைக்கை வாங்கி அவள் நிமிர்ந்து பார்த்தும் அவளின் உருவத்தை அப்படியே இதயத்தின் சுவற்றில் வடித்துவிட்டான் ஆதி.

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சம் சொல்கின்றது..

பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது..

மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே.

நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்

அட நான் பிறக்கும்போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ..

 

மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்கு பிடிக்காது முரடா உனை ரசித்தேன்..

தொட்டதும் விழுந்து விடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்..

முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ..

என் உயிர் திறக்கும் முத்தம் அது என்ன வித்தையோ..

உன்னைப் போலே ஆணில்லையே நீயும் போனால் நானில்லையே..

நீரடிப்பதாலே நீ நழுவதில்லையே ஆம் நமக்குள் ஊடலில்லை.. [உன்னோடு]

 

நீ ஒரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாயிரு..

நீ ஒரு முள்ளேன்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாயிரு..

நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது..

நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது..

உன்னை மொத்தம் நேசிக்கிறேன்..  உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்..

நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை காதலோடு பேதமில்லை[உன்னோடு]

அவள் பாடி முடிக்கும் வரையில் அவனின் விழிகள் செல்போனின் திரையைவிட்டு அங்கும் இங்கும் நகரவில்லை.