idhayam – 19

அத்தியாயம் – 19

சக்திக்கு ஓரளவு உண்மை தெரியும் என்பதாலோ என்னவோ அவன் அமைதியாக இருந்தான். எல்லோரிடமும் சம்மதம் வாங்கிய அபூர்வாவின் முகத்தில் சந்தோசத்தைக் கண்டு அவனின் கண்கள் கலங்கியது.

அவன் சின்ன வயதில் இருந்தே எதற்கு எடுத்தாலும் அக்காவை சார்ந்து வாழ பழகிவிட்டான். அவனின் ஒவ்வொரு தேவைக்கு அப்பாவிடமோ, அம்மாவிடமோ சிபாரிசு செய்ய அவள் மட்டும் வேண்டும் சக்திக்கு. அந்த குணத்தை அவனும் மாற்றிக் கொள்ளவில்லை. மற்றவர்களும் அதில் குறைகாண முயற்சிக்கவும் இல்லை.

அபூர்வா அவனின் மனநிலையைத் தெளிவாக உணர்ந்தபோது இப்போது அவள் அங்கே செல்ல வேண்டும் என்று மனம் சொல்லிட ஊருக்கு கிளம்பும் வேளையில் மும்பரமாக ஈடுபட்டாள். இந்த விஷயமறிந்த ராகவ், ரக்சிதா,சஞ்சனா மூவரும் அவளின் மீது கோபமாகவே இருந்தனர்.

தனக்கு தேவையானவற்றை எடுத்து அவள் தன் வேலையை தொடர நால்வரும் சேர்ந்து அவளின் அறைக்குள் நுழைந்தனர். சக்தி எதுவும் பேசாமல் அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்தான்.

“நீங்க கண்டிப்பா கொல்கத்தா போயே ஆகணுமா” அபூர்வாவிடம் கேட்டபடி சஞ்சனா அவளுக்கு உதவி செய்ய, “எனக்கு வேலை கிடைச்சிருக்கு சஞ்சு. நான் கண்டிப்பா போய்தான் ஆகணும்” என்றவளின் பார்வையோ தம்பியின் மீதே நிலைத்தது.

அதைக் கண்ட ராகவ், “எங்களைவிட உங்களுக்கு அந்த வேலை ரொம்ப முக்கியமா அக்கா” என்று அவன் சண்டைக்கு வரவே, “எனக்கு முக்கியமான ஒன்றை தேடிபோறேன் அப்போ அந்த வேலையும் முக்கியம் இல்லையா” அவள் தன்னிலை மறந்தவளாக கூறிவிட மற்றவர்களோ அவளை புரியாத பார்வை பார்த்து வைத்தனர்.

சக்திக்கு மட்டும் அவளின் மனம் புரிந்தது. அவள் இவ்வளவு உறுதியாக போகிறேன் என்று கிளம்பும்போதே அவனுக்கு சந்தேகம் வந்தது.

அவன் கேட்க நினைத்ததை, “என்னக்கா சொல்றீங்க” என்று ரக்சிதா கேட்டுவிட்டாள்.

சக்தி தமக்கையின் பதிலை எதிர்பார்த்து கேள்வியாக புருவம் உயர்த்திட, “உங்களை எல்லாம் விட்டுட்டு வேலைக்கு கொல்கத்தா போக வேண்டும் என்ற தேவையா ரக்சி? நம்மிடம் இல்லாத சொத்தா என்ன? ஆனாலும் அக்கா ஏதாவது சாதிக்கணும் இல்ல. நம்ம செல்வாக்கு சொன்னா கண்டிப்பா யாரும் வேலை கற்று தரமாட்டான். அதன் அங்கே போறேன்னு சொன்னேன்” அவள் தன்னை சமாளித்துக்கொண்டு சூர்கேசில் தன் உடமைகளை அடுக்க தொடங்கினாள்.

அவளின் மழுப்பலான பதிலைக் கண்டுகொண்ட ரக்சிக்கு எங்கோ இடித்தது. ஒரு விஷயத்தை உண்மை தெரியாமல் மற்றவர்களிடம் கூறி அவர்களின் நிம்மதியை கெடுக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தவள் வாயை மூடிக் கொண்டாள்.

யார் என்ன சொல்லியும் அவள் தன் முடிவை மாறிக்கொள்ளாமல் இருப்பதைக் கண்ட சக்தியும் அதே பிடிவாதத்தை கடைபிடிக்க, “இங்கே பாருங்க. நான் வேலைக்காக தான் கொல்கத்தா போறேன். நான் திரும்ப வரும்போது நீங்க எல்லாம் படிப்பை முடிச்சிட்டு ரெடியாக இருங்க. நல்ல எல்லோரும் சேர்ந்து புதுசாக பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணலாம்” என்றாள் புன்னகையுடன்.

அவன் அமைதியாக இருப்பதை உணர்ந்தவளோ, “சக்தி எனக்கு அடுத்து வீட்டுக்கு பெரியவன் நீதான். இவங்க மூவரையும் பொறுப்பாக பார்த்துகோடா” என்று கூற அவனோ தமக்கையை கனல் பார்வை பார்த்து வைத்தான்.

அடுத்துடுத்து வந்த நாட்களும் இப்படியே சென்று மறைய வார இறுதியில் பெரியவர்களிடமிருந்து விடைபெற்று கொல்கத்தாவை நோக்கி புறப்பட்டாள் அபூர்வா.

அவளை வழியனுப்ப அவளின் குடும்பம் மொத்தமும் மதுரை ஏர்போர்ட் வரை வந்தது. சின்னவர்கள் நாலு பேருக்கும் அவனை அனுப்ப மனமில்லை என்றபோதும் அவள் வேலைக்கு தானே செல்கிறாள் என்ற எண்ணத்துடன் அமைதியாக இருந்தனர்.

மற்றவர்களிடம் விடைபெற்று கிளம்பும் முன்னர் தம்பியின் அருகே வந்தவள், “அம்மாவிடம் தினமும் காபி கேட்டு தொல்லை பண்ணாதே” அவனின் தலையை செல்லமாக கலைத்துவிட்டாள்.

அவன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருக்க, “இன்னும் அக்காமேல் கோபம் போகலையா?” கலக்கத்துடன் ஒலித்தது அவளின் குரல்.

அவனின் மனம் கலங்கிவிடவே, “நீ பத்திரமா போயிட்டு வா அக்கா” என்றவன் அவளை புன்னகையுடன் வழியனுப்ப நிம்மதியுடன் அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் உள்ளே சென்று சிலநொடிகளில் அவளின் செல்போன் சிணுங்கியது. திரையில் தெரிந்த நம்பரைக் கண்டதும் அவள் பட்டென்று எடுத்து, “சொல்லு சக்தி” என்றாள்.

“அக்கா நீ ஊரில் இருந்து திரும்ப வரும்போது ஆதி மாமாவுடன் வா” என்று சொல்லிவிட்டு அவன் போனை வைத்துவிட இவளோ திகைப்புடன் சிலையென நின்றுவிட்டாள்.

அதெல்லாம் சில நொடிகள் மட்டுமே. தன்னை ஓரளவு சமாளித்துக்கொண்ட அபூர்வா தனக்குள் புன்னகைத்தபடி சென்று செக்கிங் எல்லாம் முடித்து சென்னை பிளைட் ஏறினாள். அங்கிருந்து நேராக கொல்கத்தாவிற்கு நேரடி பிளைட்.

அவளின் மனம் அவனை நினைத்து அலைபாய்ந்திட சில மணிநேரங்களில் கொல்கத்தா மண்ணில் கால்பதித்தாள் பெண்ணவள். புது இடம், புது மனிதர்கள் என்று அவளுக்கு அந்த பயணம் புத்துயிர் கொடுத்தது. இளந்தென்றல் இதமாக வீசி அவள் கூந்தலை கலைத்திட முகத்தை மறைத்த கற்றை கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டு ஏர்போர்ட் விட்டு வெளியே வந்தாள்.

தன் கையில் இருந்த லேடிஸ் ஹாஸ்டல் பெயரைச் சொல்லி அந்த இடத்தில் சென்று இறங்கியபோது பொழுது போயிருந்தது. அவள் சென்று அட்மிஷன் போட்டுவிட்டு அவளுக்கு ஒதுக்கபட்ட அறைக்குள் நுழைய அங்கிருந்த பெண்ணொருத்தி இவளைப் பார்த்தும் சிநேகமாக புன்னகைத்தாள்.

அவளுக்கு புன்னகையைப் பதிலாக கொடுத்த அபூர்வா அங்கிருந்த படுக்கையில் தன் சூர்கேசை வைத்துவிட்டு நிமிர, “இங்கே நம்ம இருவரும் தான் தங்க போகிறோம். அதனால் தயங்காமல் அந்த கட்டிலை நீங்க யூஸ் பண்ணிகொங்க” என்று தானே முன் வந்து கூறினாள் அவள்.

“தேங்க்ஸ்” என்றவள் தொடர்ந்து, “உங்க பெயர்” என்று கேட்க, “சாருமதி” என்றவள் புன்னகைக்க, “ஐ எம் அபூர்வா” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.

“அழகான பெயர்” என்ற சாரு அபூர்வாவிற்கு உதவிட சீக்கிரமே தன் உடைமைகளை எடுத்து வைத்தவள், “நீங்க எந்த ஊர் சாரு” என்று கேட்டாள்.

“நான் மைசூர்” என்ற சாருமதி, “நீங்க” என்றாள்.

“மதுரை” என்றதும், “இந்த தமன்னா ஒரு படத்தில் சொல்வாங்களே தேனிக்கார பொண்ணு சீவிடுவேன் சீவி அதுமாதிரி மதுரைக்கு ஒரு பஞ்ச் சொல்லப் போறீங்களா அபூர்வா” அவளை வம்பிற்கு இழுக்க வாய்விட்டு சிரித்தாள்.

“சாரு நான் அந்த மாதிரி எல்லாம் பஞ்ச் சொன்னா படிக்கிறவங்க எல்லோரும் எழுந்து ஓடிருவாங்க தாயே ஆளைவிடு” என்று கையெடுத்துக் கும்பிட சாரு தன்னை மறந்து சிரிக்க தொடங்கினாள். இருவரின் இடையே நட்பு என்ற விதை விழுந்தது முதல் நாளே.

அபூர்வா சீக்கிரமே அனைவரிடமும் நட்பாக பழகிவிடும் குணம் உடையவள் என்பதால் சாருவிடம் பழகிட அவளுக்கு அதிகநேரம் தேவைப்படவில்லை. எந்தவிதமான அதட்டல் உருட்டல் இல்லாமல், தன்னோடு சகஜமாக பேசும் அபூர்வாவை உடனே பிடித்து போனது சாருவிற்கு!

அவள் கொல்கத்தா வந்து சேர்ந்த விஷயத்தை தன் தாய் தந்தைக்கு தெரியபடுத்திய அபூர்வா அன்று இரவு உணவை முடித்துக்கொண்டு படுக்கையில் விழ சுகமான நித்திரை அவளின் விழிகளை தழுவியது.

அதே நேரத்தில்

இரவு உணவை முடித்துக்கொண்டு தன் அறையின் ஜன்னலோரம் அமர்ந்து போனை எடுத்த ரேவதி வாட்ஸ் ஆப் ஓபன் செய்த மறுநொடியே அவனிடம் இருந்து நூறு மெசேஜ் வந்திருப்பதைக் கண்டு, ‘என்னது இவ்வளவு அனுப்பி இருக்காரு’ என்று தனக்குள் நினைத்தபடி ஒவ்வொரு மெசேஜாக படிக்க தொடங்கியவளின் முகம் வெக்கத்தில் சிவந்தது.

ஜன்னலின் வழியாக வந்த காற்று அவளின் கூந்தலை கலைத்து செல்ல முகத்தை மறைத்த கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டு, “என்னங்க என்னிடம் பேச உங்களுக்கு இவ்வளவு இருக்கா” என்று அவள் வெக்கத்துடன் அனுப்ப சிலநொடியில் பதில் வந்தது

“உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்ல முடியும்”

“அது சரி. இப்போவே நீங்க க்ளின் போல்ட் ஆவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல”

“உன்னை பார்த்தாலே பைத்தியம் பிடிக்குதுடி” என்று இரண்டு ஹார்ட்டில் அம்பு விட்ட ஸ்டிக்கை அனுப்பினான்.

“அந்தளவுக்கு சாருக்கு முத்திடுச்சு” என்று அவள்  கிண்டலாக அனுப்பினாள்.

“என் செல்ல பிசாசு. என்னோட சேர்ந்து உனக்கும் பைத்தியம் முடித்திடுச்சு. போய் தூங்குடி லேட் ஆகுது..” என்றான் அவன் செல்ல கொஞ்சலோடு.

“ஆன ஆகட்டும். இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே” என்று அவள் அடுத்து அனுப்பினாள்.

“நீ என்னிடம் அடிதான் வாங்க போற. போடி லூசு” என்று சொல்லிவிட்டு அவன் ஆப் லைன் சென்றுவிட இவளோ தனக்குள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

பால்கனியில் அமர்ந்திருந்த ஆதியும் வாட்ஸ் ஆப்பில் வந்த மெசேஜ் படித்துவிட்டு தனக்குள் நினைத்தபடி தனக்குள் சிரித்துக் கொண்டான்.

அடுத்த சில நொடிகளில் மீண்டும் மெசேஜ் வந்ததும், “நீ இன்னும் தூங்க போகல” என்று அனுப்பினான்.

“இல்ல மாமா” என்றதும் அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“என்ன மாமான்னு கூப்பிடுற காலையில் காலேஜ் இருக்கு இல்ல”

“சோ வாட்” என்றதும் ஆதி திகைத்தான்.

“நீ என்னிடம் நல்ல உதய் வாங்க போற..” இவன் மிரட்டினான்.

“உங்களுக்கு பயந்த காலம் எல்லாம் மலையேறிவிட்டது” மறுப்பக்கம் இருந்து பதில் வந்தது.

“ஓ எனக்கெல்லாம் பயப்பட மாட்டீங்க இல்ல”

“ஆமா உங்களை கண்டு நான் ஏன் பயப்படணும்”

“நீ ஏன் இன்னைக்கு இப்படி பேசற”

“என்னன்னு சொல்ல மாட்டேன். நீங்க நாளைக்கு ஆபீஸ் போய் பாருங்க புரியும்” என்ற சிலநொடியில் ஒரு போட்டோ மட்டும் வந்தது. அந்த போட்டோவை கண்டதும் அவனின் முகம் பிரகாசமானது.

அவளின் பளிங்கு முகத்தை விரலால் மெல்ல வருடியவன் சட்டென்று செல்லின் திரையில் இதழ் பதித்தான். பிறகு தன்னுடைய செயலை எண்ணி சிரித்தபடி படுக்கையில் விழுந்தவனை அரவணைத்து கொண்டாள் நித்திராதேவி.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.

தூக்கம் கலைந்து எழுந்த அபூர்வா முதலில் தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் சில வினாடிகள் திரு திருவென்று விழிப்பதை கண்டு, “என்னம்மா எங்கே இருக்கிறோம்னு ரொம்ப தீவிரமாக யோசிக்கிற போல” கிண்டலோடு கேட்டபடி குளியலறைக்குள் இருந்து வெளியே வந்தாள் சாரு.

அவளைக் கண்டவுடன் அனைத்தும் நினைவிற்கு வந்துவிட, “நான் தூக்கம் கலைந்து எழுத்தும் நிஜமாகவே இடத்தைப் பார்த்து பயந்துட்டேன். வீட்டில் இருந்தே பழகியதால் வந்த பிரச்சனை” என்று தோழியிடம் கூறிவிட்டு தனக்கு தேவையான உடைகளை எடுத்துகொண்டு குளியலறைக்குள் புகுந்தாள்.

அவள் குளித்துவிட்டு வருவதற்குள் வேலைக்கு தயாராகி நின்ற சாருவைக் கண்டு, “என்னம்மா புயல் வேகத்தில் கிளம்பற. நம்மளால் இவ்வளவு வேகம் முடியாதும்மா” என்றவள் சிரித்தபடியே தயாரவதைக் கண்டவளோ படிக்கையில் அமர்ந்தாள்.

“ஆமா அபூர்வா என்ன விசயமாக இங்கே வந்த” என்றாள்.

தன் நெற்றியில் பொட்டு வைக்க போனவளின் கரங்கள் அந்தரத்தில் நின்றுவிட்டது. சில நொடியில் தன்னை மீட்டுக்கொண்டு, “ஏன் சாரு கேட்கிற” என்று புன்னகையுடன் கேட்டவள் ஒப்பனைகளை முடித்துக்கொண்டு அவளின் புறம் திரும்பினாள்.

“இல்ல வந்த மறுநாளே வேலைக்கு ரெடியாகிற மாதிரி தெரியுது..” வாக்கியத்தை முடிக்காமல் பாதியில் நிறுத்தவே, “எனக்கு ஆல்ரெடி வேலை கிடைத்துவிட்டது சாரு” என்றாள் புன்னகையுடன்.

அவள் சொல்வதைக் கேட்டதும் சாருவின் முகம் பூவாக மலர, “எந்த கம்பெனி” என்றாள் ஆர்வமாக.

“இன்னும் நான் கம்பெனி பெயரே பார்க்கல” என்று கூறியவளை முறைத்த சாருவைக் கண்டு அபூர்வாவிற்கு சிரிப்பு வந்தபோதும் சிரிக்காமல் எந்த நிறுவனம் என்று அப்பாயின்மென்ட் ஆர்டரை கையில் எடுத்துப் பார்த்தவளின் முகம் குழப்பத்தை தத்தெடுத்தது.

ஆதி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரைக் கண்டதும் அவளின் புன்னகை உதட்டோடு உறைந்துவிட இதயம் படபடவென்று வேகமாக துடிக்க தொடங்கியது.

‘ஒரு வேலை அவரோட நிறுவனமாக இருக்குமா?’ என்ற எண்ணம் அவளை ஆட்டிவைக்க நின்ற இடத்தில் சிலையென உறைந்தாள் பெண்ணவள்.

தன் தோழி சிந்தனையுடன் நிற்பதைக் கண்டு, “என்னடி படிக்க தெரியாமல் நிற்கிறாயா? இல்ல வேணும்னு என்னை டென்ஷனைக் கிளப்ப நினைச்சு நிற்கிறாயா?” என்ற கேள்வியுடன் அவளை நெருங்கிய சாரு அவளின் கையில் இருந்த அப்பாயின்மென்ட் ஆர்டரை கையில் வாங்கினாள்.

அதிலிருந்த முகவரியை படித்தவளின் முகம் பூவாக மலர, “வாவ் கொல்கத்தாவில் நம்பர் ஒன் கம்பெனி தான் ஆதி கன்ஸ்ட்ரக்ஷன். இங்கே வேலை கிடைப்பது எல்லோருக்கும் குதிரை கொம்பாச்சே. உனக்கு எப்படி இந்த நிறுவனத்தில் வேலை கிடைத்தது” என்று தன் தோழியை சந்தேகமாக பார்க்க அவளின் கையிலிருந்து லெட்டரை வாங்கியவள் பத்திரமாக எடுத்து வைத்தாள்.

“நான் ஆர்கிடெக்ட் தான் விரும்பி படிச்சேன் சாரு” என்று சாதாரணமாக கூறியவளின் உடையை அப்போது தான் கவனமாக அளவிட்டது சாருவின் விழிகள்.

வெள்ளை நிற அனார்கலி சுடிதாரில் அளவான ஒப்பனையில் நின்றவளின் முகத்தில் தெளிவாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் அவள் அணிந்திருந்த உடை மேல்த்தட்டு மக்கள் அணியும் உடை என்று பார்ப்பவர்கள் உடனே உணரும் வகையில் இருந்தாலும் மற்றவர்களுக்கு உருத்தக்கூடாது என்று அவள் உடையை தேர்வு செய்திருந்த விதம் அவளின் மனத்தைக் கவர்ந்தது.

“ஓஹோ சரி வா. நான் அந்தப்பக்கம் தான் போறேன். உன்னோட கம்பெனியைக் காட்டுகிறேன்” என்று  அபூர்வாவை உடன் அழைக்க அவளும் சரியென்று கிளம்பினாள். தற்காலிகமாக ஆதியை பற்றிய சிந்தனை நிறுத்திவிட்டு அவளோடு இணைந்து நடந்தவளின் காதுகளில் தெளிவாகக் கேட்டது அந்த பாடல் வரிகள்.

“பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்

புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்” என்ற பாடல் வரிகளை கேட்டு ரசித்தபடி படுவேகமாக படியில் இறங்கிய அபூர்வா சாருவைக் கடந்து செல்வதைக் கண்டாள்.