TholilSaayaVaa8

8

வீட்டிற்குள் நுழைந்த பைரவ் வாணியிடம் முகம் கொடுத்தும் பேசாமல் தன் அறைக்குச் சென்று தாளிட்டு கொண்டான்.

மாயா கேட்ட கேள்விக்கு என்ன பதில் தருவது? அன்னை சம்மதித்ததால், தானும் சம்மதித்ததையா? பவித்ராவின் கண்ணில் தெரிந்த தைரியத்தில் ஈர்க்க பட்டத்தையா?

பவித்ராவோ பணம் இருந்தால் போதுமென்கிறாளே !

தலைவலி மண்டையைப் பிளக்க, உறக்கமும் வர மறுக்கச் செய்வதறியாது ஆத்திரம், இயலாமை, என அவன் மனதில் மாறி மாறி ஆட்கொள்ள உறக்கம் தொலைத்தவன் விடியற்காலையில், சூரியனின் ஒளியில் உலகத்தில் இருள் மறைத்துத் தெளிவதைப்போல் அதுவரை இருந்த சலனம் மறைந்து, எதையோ தன்னுள் முடிவுசெய்த நிம்மதியில் தன்னையறியாது கண்ணயர்ந்தான்.

மதியம் மெதுவாக எழுந்து வந்த பைரவ், வாணி வீட்டில் இல்லாததால், அவரைத் தொலைப்பேசியில் அழைத்தான்.

“வானிமா பிசியா ?”

“கொஞ்சம்”

“சரி ஃபிரீ ஆனதும் கால் பண்ணு”

“எஸ் ! கிட்சன்ல லன்ச் இருக்கு, சாப்பிட்டு ரெஸ்ட் எடு. நான் கான்பிரென்ஸ் முடிச்சுட்டு வர சாயந்திரம் 5 – 6 ஆகிடும்”

“ஓகே வானிமா. லவ் யு மா”

“லவ் யு”

அழைப்பைத் துண்டித்தவன், சமையலறைக்குச் சென்று வேண்டியதைத் தட்டில் பரிமாறிக்கொண்டு அங்கேயே மேடையில் அமர்ந்தான்.

முதல் கவளம் எடுக்கும் பொழுதே மாயாவின் கால் வர,

“சொல்லுடா”

“என்ன பண்றே? ஏன் ஆஃபீஸ் வரலை?”

“கொஞ்சம் தலைவலி”

“இப்போ எப்படி இருக்கு ?”

“இருக்கு சரி ஆகிடும்…”

“குரலே சரி இல்ல”

“அதெல்லாம் இல்ல, இப்போ சாப்பிடப்போறேன் அப்புறம் சரி ஆகிடும்”

“சாப்பிடு, ஆமா என்ன லன்ச்?”

“பருப்பு, எண்ணெய் கத்தரிக்காய் ரோஸ்ட், எதோ ரசம்”

“அடப்பாவி ! என்னைவிட்டு எண்ணெய் கத்திரிக்காய்? அதுவும் ரோஸ்ட்? அடுக்குமா ? எனக்கு பிடிக்கும்னு தெரியும்ல ?” அவள் கடுகடுக்க

“என்னமோ மீதி காய் எதுவுமே பிடிக்காத மாதிரி! உனக்கு சாப்பாட்டுன்னு சொன்னாலே பிடிக்குமே, இதுல என்னமோ பில்டப்” அவன் சிரிக்க

“போடா எவளோ இருந்தாலும் சூடு சாதத்துல நெய் போட்டு அதுந் தலையில பருப்பைப் போட்டு , காரமான கத்தரிக்காய் தொட்டு சாப்டா….அட அட அட சொர்கம்” என்றவள் நாவில் எச்சில் ஊறியதைப் பார்க்காமலே உணர்ந்தான் பைரவ்.

“சரி சரி நான் சாப்பிட்டு உனக்கும் கொண்டு வரேன் கொஞ்ச நேரம் டைம் தா…”

“ஹே வேணாம் இன்னிக்கி எனக்கும் சேர்த்து நீ சாப்பிடு, ஆண்ட்டி கிட்ட சொல்லி எனக்கு ஒருநாள் இதையே சமைச்சு தர சொல்லு போதும்.

இப்போ தான் சாப்பிட்டேன், இப்போ வினோத் கொண்டுவர பாதாம் பால் என்னை பார்த்து வான்னு கூப்பிடுது. நான் அதை ஏங்க வைக்க முடியாது. நீ சாப்பிடு”

“தீனி பண்டாரம்டா நீ” தோழியைக் கொஞ்சியவன், “ஆழாக்கு …”

“சொல்லுங்க பாஸ்”

“பேசாம ஹோட்டல் வச்சுருக்க பையனைப் பார்ப்போமா? செஃப்(Chef)?” அவன் கிண்டலாகக் கேட்பது புரியாமல்

“சூப்பர் தேடி கண்டுபிடி, பையன் முகத்தை கூட பார்க்காம உடனே கழுத்தை நீட்டறேன். சரி சரி வினோத் வரான், என்ன ஏதுன்னு நோண்டுவான் அப்பறம் பேசறேன்” அழைப்பைத் துண்டித்தாள்

சிரித்தபடி சாப்பிடத் துவங்கினான் பைரவ்.

மாலை வீடு திரும்பிய வாணியிடம்,

“மா, பவித்ரா கிட்ட நேரா பேசப்போறேன். நீயும் வா, அவ வீட்டுக்கே போவோம், ஒரு முடிவு எடுத்துட்டா பெட்டர்”

“என்னப்பா?” அவர் முகம் பயத்தில் இருக

“உனக்காக முயற்சிக்க போறேன். எப்போ போலாம்? நாளைக்கி?”

“சரி நான் அவங்ககிட்ட பேசறேன். ஆனா நீ நிதானமா பேசணும், எனக்காக” வாணி கெஞ்ச, அன்னையைச் சங்கடப்படுத்த மனமின்றி சம்மதம் தெரிவித்தவன்,

மறுநாள் வாணியுடன் பவித்ராவின் வீட்டிற்குச் சென்ற பைரவ் பவித்ராவிடம் பேச முயற்சிக்க, அவளோ அவனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல்,

“உன்கிட்ட பேச எனக்கொண்ணும் இல்லை!”
முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிட்டு தன் அறைக்குச் சென்றுவிட, கோவம் தலைக்கேறிக் கத்த முற்பட்ட மகனை அடக்கிய வாணி, தான் சென்று பவித்ராவிடம் பேசுவதாகச் சொல்லிச் சென்றார்.

கோபத்தைக் கட்டுப்படுத்த நினைத்த பைரவ், பவித்ராவின் வீட்டுத் தோட்டத்தில் உலவச் சென்றான்.

கைப்பேசியில் பலமுறை மாயாவைத் தொடர்புகொள்ள முயன்றான், அவள் லைன் பிஸியாகவே இருக்க, மன இறுக்கத்தைக் குறைக்க வழிதெரியாது, அங்கிருந்த மரத்தில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.

“பைரவ்…” அழைத்தபடி வந்தார் பவித்ராவின் தந்தை கிஷோர்.

“சொல்லுங்க அங்கிள்”

“பவித்ராவ ரொம்ப பாசமா வளர்த்துட்டேன். ஒரே பொண்ணு எந்தக் குறையும் இருக்க கூடாதுன்னு அவ என்ன கேட்டாலும் அவளுக்கு அது கிடைக்கும்படி பாத்துக்கிட்டேன். இப்போ நீங்களும் அவளை அப்படியே பார்த்துக்கணும்னு நினைக்கிறேன். சின்ன பொண்ணு தயவுசெய்து மனசுல எதுவும் வச்சுக்காதீங்க” அவர் வருந்த

“பெரியவங்க ஏன் இப்படிலாம், நான் வேணும்னே ஒன்னும்…ஆனா எங்கம்மா எனக்கு முக்கியமில்லையா ? நீங்களே சொல்லுங்க”

“எனக்குப் புரியுது மாப்பிள்ளை, ஆனா என் பொண்ணு சந்தோஷம் எனக்கு முக்கியம்”

“எனக்கு எங்கம்மா முக்கியம் அங்கிள்! யாருக்…” அவன் துவங்கும் போதே

வாணி அவனை அழைக்கும் குரல் கேட்டுப் பேச்சை அப்படியே நிறுத்தியவன், “இதோ வரேன்” வாணியிடம் விரைந்தான்.

“போடா நான் அவகிட்ட பேசிட்டேன். சின்ன பொண்ணு சொன்னா புரிஞ்சுக்கிட்டா. நீ போய் சமாதானம் பண்ணிட்டு பொறுமையா வா நான் களம்பறேன்” என்றவர் பவித்ராவின் பெற்றோர்களிடத்தில் சொல்லிக்கொண்டு விடைபெற்றார்.

பவித்ராவின் அறைக்குச் சென்றவனைக் கண்ட பவித்ரா,

“இப்போதான் உங்கம்மா அட்வைஸ் பண்ணி டார்ச்சர் செஞ்சாங்க நீ என்ன சொல்லபோறே ?” பவித்ரா அவனை முறைக்க

அன்னையின் வேண்டுகோளால் பொறுமை காக்க நினைத்தவன்,

“உன் மனசுல என்ன இருக்கு? நான் என்ன செஞ்சா நீ சந்தோஷ படுவே சொல்லு செய்றேன். நம்மளால நம்மளை பெத்தவங்க சங்கட படக் கூடாது”

“வெரி குட் ! எனக்கு ரெண்டு கண்டிஷன் இருக்கு அதுக்கு ஓகேன்னா கல்யாணம் இல்லைன்னா நீ எனக்குத் தேவயான்னு நான் யோசிக்கணும்!”
அவள் திமிராகச் சொல்ல , அவ்வார்த்தைகள் அவன் சுயத்தை சீண்டியபோதும், வாணியின் முகத்திற்காகப் பொறுமையாகத் தரையைப் பார்த்தபடி அமைதியாக இருந்தான்.

அவன் அமைதியைச் சரணாகதி என்று தவறாகப் புரிந்துகொண்ட பவித்ரா,

“மொதல்ல உங்க கம்பெனில எனக்கு ஈகுவல் ஷேர் வேணும்” என்றவள் அவன் முகத்தைப் பார்க்க,
அவனோ நிமிராமல், “ம்ம்” என்று மட்டும் சொல்ல

“நெக்ஸ்ட் எங்கயான தூரமா ஒரு வீட ரெடி பண்ணி, உங்கம்மாவை அங்க கொண்டுபோய் விட்டுடு. வேணும்னா வேலைக்கு ஆள் வெச்சுடு, அவங்க கூடவே என்னால இருக்க முடியாது. எல்லாத்துக்கும் அம்மா அம்மான்னு நீ சொல்றது எனக்கு எரிச்சலா இருக்கு.

என்ன சரிதானே? உன்னால எப்படியும் என்னை விட்டு இருக்க முடியாதுன்றது, அம்மாவும் பையனும் என்னைத்தேடி வந்ததிலேயே தெரியுது ! ”
ஏளனமாகச் சொன்னவள் குரலில் திமிரும் கட்டளையும் அப்பட்டமாகத் தெரிய

பொறுமையாக. பைரவ், “ஓகே! அப்படியே செய்வோம். பேசாம உன் டேஸ்ட்க்கு ஒரு வீட்டைப் பாரு”

“அவங்க எங்க இருந்தா எனக்கென்ன? நான் ஏன் மெனக்கெட்டு வீட்டைத் தேடணும்?” அவள் குழப்பமாய் அவனைப் பார்க்க

“நீ வாழப்போற வீடு நீ பார்க்காம எப்படி?” அவன் புன்னகைக்க

சிரித்த பவித்ரா, “உனக்கு நான் சொன்னது புரியலைன்னு…”

அவளைக் கைகாட்டி நிறுத்தினான், “புரிஞ்சுதான் சொல்றேன் பவித்ரா! இப்போ எங்கம்மா… வருங்காலத்துல நம்ம பசங்க உன்னையும் அங்க தானே கொண்டுபோய் தள்ளப் போறாங்க, அதான் உனக்குப் பிடிச்சமாதிரி பார்க்கச் சொன்னேன்” என்றவன் கண்ணில் வெறுப்பு

“வாட் ? ”

“பின்ன இவ்ளோ பாசமான என் அம்மாக்கே இந்த கதின்னா, உன்ன மாதிரி திமிர்பிடிச்ச பொண்ணுக்கு வீடே பெரிசு, என் காலத்துக்குப் பிறகு நீ நடுதெருக்கு வந்துடக்கூடாதேன்னு அக்கரைல சொன்னேன்”

அவள் கண்ணில் அனல் பறக்க “ஹொவ் டேர் ? அம்மா பைத்தியமான உனக்கு நான் எதுக்கு? பெரிய அம்மா, என்னமோ அவங்களுக்கு பெரிய இவ…”

“ஷட் அப் ! ஒருவார்த்தை எக்ஸ்ட்ரா பேசின!”அவள் முடிக்கும் அவளை அறையக் கையை உயர்த்தி இருந்தான் பைரவ்!

“ச்சே உன்னைத் தொட்டு அடிச்சாலே அசிங்கம்! எங்கம்மா எனக்கு எவளோ முக்கியம்னு உனக்குப் புரியவைக்க எனக்கு எந்த உத்தேசமும் இல்ல.” கையிலிருந்த நிச்சயதார்த்த மோதிரத்தை கழற்றி அருகிலிருந்த மேஜையின் மீது விட்டெறிந்தவன்,

“இட்ஸ் ஓவர் ! உன்னைப்பத்தி இந்தக் கொஞ்ச நாள் மனசுல நினைச்சதை நெனச்சா, எனக்கே அருவருப்பா இருக்கு.”

பவித்ராவோ பேய் அறைந்தாற்போல் நின்றுவிட, அவள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வெளியேறிய பைரவ், பவித்ராவின் பெற்றோரைப் பார்த்து,
“உங்கப்பொண்ணு இழுக்குற இழுப்புக்கு ஆட என்னால முடியாது. இந்த கல்யாணம் நடக்காது! என்னை மன்னிச்சுடுங்க”

தன் அறையைவிட்டு வெளியே வந்த பவித்ரா, “என்ன டா நெனச்சுக்கிட்டு இருக்க? நீ யார்டா என்னை வேணாம்னு சொல்ல?”

அவளை ஏறெடுத்து கூடப் பார்க்காத பைரவ், “உங்க பொண்ணுகிட்ட இனி பேச எனக்கு எதுவும் இல்லை. ஒண்ணே ஒன்னு சொல்றேன் தப்பா எடுத்துக்காதீங்க, பெத்தவங்களா நீங்க தோற்று போயிட்டிங்க!” புயலெனக் கிளம்பியவன் வீட்டிற்குச் செல்ல மனமின்றி அலுவலகத்திற்குச் சென்றுவிட்டான்.

தன் அறைக்குச் செல்லும் வழியில், மாயாவின் நாற்காலியைப் பார்த்தவன் அவள் அங்கு இல்லாததைக் கண்டு, வினோத்திடம் மாயா எங்கே என்று கேட்க

அவள் பேன்ட்ரி போயிருப்பதாக அவன் சொல்ல, அவளைத்தேடி பேன்ட்ரி அறைக்குச் சென்றான்,

முகம் வாடி எதோ யோசனையில், வெறும் கோப்பையை ஸ்பூனால் கலக்கியபடி நின்றிருந்தாள் மாயா.

“ஆழாக்கு பாத்து கப்பை ஒடைச்சுடாதே!” அவன் சிரிக்க

“ஹேய் எப்போ வந்தீங்க பாஸ் ?” அதுவரை வாடியிருந்த அவள் முகம், தொளசண்ட் வாட்ஸ் பல்பைபோல் பிரகாசமாக

“இப்போதான்”

“கொடுத்துவச்சவர் பாஸ் நீங்க ! எப்பொவேனா வரலாம்…எப்போவேனா போகலாம், யாரும் கேக்க மாட்டாங்க” போலியாக அலுத்துக்கொண்டாள்

“என்னபுள்ள நீ ? ஒருநாள் தாமதமா வந்தா என்னைபாத்து நாக்குமேல பல்ல போட்டுப் பேசிபுட்டே”

“உங்களுக்கும் கலக்கவா?” அவள் கேட்க

“என்னத்த வெறும் டம்பளரையா?” அவன் கேட்டபின்னே தான் தன் கோப்பையைக் கவனித்தாள். தலையில் அடித்துக்கொண்டவள்,

“சாரி பாஸ் ஒரே தலைவலி அதான்”

“ஏண்டா?”

“ஒண்ணுமே கேட்காதீங்க பாஸ். பைத்தியம் புடிக்குது. இங்க வேண்டாம் அப்புறம் பேசும்போது சொல்றேனே” அவனுக்கும் சேர்த்து பாணத்தைக் கலக்கிக் கொடுத்தாள்.

“சரி அப்புறம் பேசலாம். தேங்க்ஸ்! சாக்லேட் மில்க்கு” என்றவன் அதைப் பருகியபடியே சென்றுவிட, மாயா தன் இருக்கைக்கு வந்து சேர்ந்தாள்.

“மாயா டெட்லைன் வருது, ரெடி பண்ணிடியா?” வெங்கட் தன் கணினியிலிருந்து பார்வையை விலகாமல் குரல்கொடுக்க

“சாரி, இன்னும் முடிக்கல, ஒரு வாரம்…”

“மாயா! இன்னும் மூணுநாள் கூட முழுசா இல்ல. வர வெள்ளிக்கிழமை டெமோ கொடுக்கணும்னு தெரியும்ல?” கத்த துவங்கினான்.

“தெரியும் ஆனா யோசனை வரலை”

“மனசெல்லாம் எங்கயோ இருந்தா, கற்பனை எப்படி வரும்? எப்போவும் விளையாட்டா இருந்தாலும் வேலைல ஒழுங்கா இருக்கேன்னு கண்டுக்காம விட்டேன். உன்னால டீமுக்கு பிரச்சனை வந்தா அப்புறம் நான் என்ன செய்வேன்னு தெரியாது.”

“இல்ல வெங்கட், நான்…” அவளிடம் சொல்லச் சமாதானம் ஏதும் இல்லை

“எனக்கு வியாழக்கிழமை ராத்திரிக்குள்ள டெமோ தயாரா இருக்கணும். இல்லைனா வெள்ளிக்கிழமை வேலையை நீயே ரிசைன் பண்ணிட்டு போயிடு. நீ தான் வேணும்னு யாரும் அழலை!” பொறித்துத்தள்ளியவன் எழுந்து சென்றுவிட்டான்.

அந்த அறையிலிருந்தது பத்மாவும் வினோத்தும் மட்டுமே என்றாலும், மிகவும் அவமானமாக உணர்ந்தவள், தலைகவிழ்ந்து தன் கைகளையே வெறித்து மௌனமாகவே இருக்க,

பத்மாவும் வினோத்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, எதோ பாவனையாக வினோத் தலையசைக்க, எதோ புரிந்தாற்போல் பத்மா வெங்கட்டைச் சமாதானம் செய்யச் சென்றாள்.

மாயாவின் அருகே தன் நாற்காலியோடு நகர்ந்து சென்ற வினோத்,

“ஹோய் வாட் ஹேப்பண்ட் யா? வொய் திஸ் சோக லுக்? யு நோ கரை. யு பெரிய டிராயர் ஐ நோ!” என்றான் சீரியராக

அவன் சொன்னது ஒன்றும் விளங்காமல், “என்னடா சொல்றே…. ட்ராயர்?” மாயா ங்கே என்று விழிக்க

“என்னாச்சு? ஏன் சோகமா கீரே? அழுவாத, நீ பெரிய…. ஐயோ தமிழ்ல என்ன சொல்லணும்னு தெரியலையே…டிராயர் தெரியாது? பெரிய அதான் ஓவியர்!”

“டேய் உன் கொடுமைக்கு அவனே பரவல்லடா” அவனைப் பாவமாகப் பார்த்தவள்,

“நானே ஐடியா வராம மண்டை காயறேன்”

“என்ன ஐடியா வேணும் அய்யாகிட்ட கொட்டி கெடக்கு ரெண்டு பக்கெட் அள்ளிக்கிட்டு போ”

“அந்த பக்கெட்டை உன்தலையிலேயே போட்டுக்கோ.”

“நீ கோவமா இருக்க, ஒரு சமோசா சாப்டா கூலாயிடுவே, வா”

“அசையா தான் இருக்கு…வேணாம். வெங்கட் வந்தா கொன்னே போட்டுடுவான். எப்படியான வேலையை முடிக்காம வாயில தண்ணி கூட படாது…” சூளுரைத்தாள்.

10 நிமிடங்கள் கழித்து…

“வினோத் என்னடா சமோசாக்கு சாஸ் கொடுத்துருக்கான்? இதெல்லாம் வேண்டாம் பச்சை கார சட்டினி கேளுடா, அப்படியே ஒரு பிளேட் பானிபூரி சொல்லிடு…இல்ல ரெண்டா சொல்லிடு…” வாயில் குலாப் ஜாமூனை போட்டுக்கொண்டே அவள் ஏவ,

மாயா உற்சாகமானால் போதுமென்று இருந்த வினோத், அனைத்தையும் எடுத்துக்கொண்டு வந்து அவள் முன் வைத்து,

“என் கை காசைப் போட்டு முதல் தடவையா சாப்பாடு வாங்கி கொடுத்திருக்கேன், உன் டிசைன் அப்ரூவ் ஆச்சுன்னா, நான் செஞ்சதை மறந்துடாதே” முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு சொல்ல

“டாகுமெண்ட்லேயே இந்த கற்பனைக்குக் காரணமே வினோத் போட்ட சோறுதான்…இல்ல சமோசாதான்னு போட்டுடறேன். சரி தானே?”

“பானிபூரிய விட்டுட்டே?” அவன் சொல்ல, இருவருமே சிரித்துவிட்டனர்.

“மாயா…”

“சொல்லுடா”

“வெங்கட்கு வேலைமேல எவளோ ஈடுபாடு இருக்குனு உனக்குத் தெரியும்தானே? கொஞ்சம் பொறுமையா நிதானமா கண்ணைமூடி யோசி, ஐடியா வரும். இன்னிக்கி அவன் பேசினது மனசுல வச்சுக்காதே”

“அதெல்லாம் இல்ல, அப்போவே மறந்துட்டேன்” புன்னகைத்தாள்

“அடிப்பாவி! சோகமா இருக்கேனு தானே தீனி வாங்கி கொடுத்தேன். வேணாம்ன்னு சொல்லிட்டு நீ என்னை இழுத்துகிட்டு இங்க வரும்போதே நான் சுதாரிச்சுருக்கணும்! ” போலியாக அலுத்துக்கொண்டான்

“யாரான சோறு போட்றேன்னு சொன்னா, மறுக்கக் கூடாதுடா வினோதா”
அவள் சொல்லவும், வினோத்தின் கண்ணில் தெரிந்த கொலைவெறியில் அவனை ஏறெடுத்து பார்க்காமல் தின்று முடித்தவள்,

“சரி சரி டெமோ நல்லபடியா முடிஞ்சா உனக்கு நான் லன்ச் வாங்கித்தரேன்”

“நம்பறேன்”

இருவரும் இருக்கைக்குத் திரும்பியபொழுது, முகத்தில் கோவம் கொஞ்சமும் குறையாமல் வெங்கட் உர்ர் என்று இருக்க, பத்மாவின் கண்களோ அழுது சிவந்திருந்தது.

“ஹே என்னாச்சு? எதாவது சொன்னானா?”

“…”மறுப்பாகத் தலையசைத்தவள், “ஒண்ணுமில்ல விடுடா” வேலையே தொடர்ந்தாள்

‘மவனே வெங்கட்! என்னை பொறிச்சது இல்லாம பத்மாவையும் திட்டிருக்கியா இரு உன் மூக்கை ஓடைகிறேன்’ கருவியபடி வேலையைத் துவங்கினாள் மாயா.

மாலை அனைவரும் கிளம்பிவிட, மும்முரமாக வேலையிலிருந்தவள் யாரோ நெருங்குவதை உணர்ந்து, நிமிர்ந்து பார்க்க, பைரவ் நின்றிருந்தான்.

“வீட்டுக்கு போகல?”

“இல்ல பாஸ். டெமோ இருக்கு நான் ஒன்னும் ரெடி பண்ணலை அதான்…”

“ஏன்? டைம் இருந்திருக்குமே?”

“இருந்துது ஆனா வேற வேலையும் இருந்தது, அதுல நேரம் போச்சு, அப்புறம்…”

அவள் மேஜையில் நுனியில் அமர்ந்துகொண்ட பைரவ், “சொல்லு என்ன?”

“பாஸ்! லவ் வந்தா எப்படி தெரியும்?”

அதிர்ந்தவன், “என்ன?”

“ஒருத்தருக்கு லவ் வந்தா எப்படி தெரியும்?” பேனாவால் டேப்லெட்டில் வரைந்தபடியே அவள் கேட்க

“எனக்கென்ன தெரியும்? ஆமா யாரை?”

“என்ன?”

“யாரடி லவ் பண்ற?”

அவன் கேட்கப் பதில் தராமல், வரைந்து கொண்டிருந்தவள் பேனாவைப் பிடுங்கியவன், “நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு”

“பேனாவை கொடுங்க பாஸ்!”

“முடியாது, யாரை லவ் பண்றே? மொதல்ல யாருனு நான் பாக்கறேன், நல்லவனா கெட்டவனா பார்த்து நான் சொன்னபிறகு இது காதலா இல்லையானு ஆராய்ச்சி செஞ்சுக்கலாம்” அவன் முறைக்க

“லவ் பண்ணக்கூட சார் பெர்மிஷன் வேணுமா? உன் ஹெல்ப் வேணாம், களம்பு காத்து வரட்டும்” அவள் அவன் கையிலிருந்த பேனாவைப் பிடுங்கி வேலையைத் தொடர,
“மாயா டோன்ட் பிளே வித் மீ ! யார் அவன்?” அவர் குரலிலிருந்த சீற்றத்தில், அதிர்ந்தவள்.

“ஓவரா யோசிக்காதே. நான் யாரையும் லவ்பன்ல, என் அண்ணன் காரன் தான் பண்றான் போல இருக்கு, ஒரு மார்க்கமா சுத்துறான். கேட்டா தெரியலைனு சொல்றான்.” அவள் சொல்லவும் அப்பொழுதுதான் பைரவ் கொஞ்சம் அமைதியானான்.

“இதை முன்னாடியே சொல்லித் தொலைக்காம, ஏண்டா டென்சன் பண்ற?”

“நான் யாரையாவது லவ் பன்றேன்னு சொன்னா, நீ என்ன செய்வேன்னு இப்போ புரிஞ்சுக்கிட்டேன் சாமி. இருந்தாலும்…” அலுத்துக்கொண்டே, அவனை முறைத்தவள்,

“நீ மட்டும் என்கிட்டே பெர்மிஷன் கேட்டா பவித்ராவை ஓகே பண்ண? நல்ல நியாயம் டா” குற்றம் சாட்ட

சடாரென்று எழுந்து நின்றவன், “இனி அதைப் பத்தி பேசவேண்டாம்” எங்கோ பார்த்துக்கொண்டு கோவமாகச் சொல்ல

“ஏனாம்?”

“ஏன்னா? ஐ ப்ரோக் தி எங்கேஜ்மென்ட்!”

இதை எதிர்பார்க்காத மாயா, அதிர்ந்து, “என்ன பாஸ் சொல்றே? விளையாடாதே”

“இல்ல நெஜமாத்தான், இப்போ எதுவும் கேட்காதே ப்ளீஸ். சரி நீ வீட்டுக்கு போ! நான் டெமோவ தள்ளி வைக்கிறேன்”

என்ன ஏதென்று விளங்காமல் விழித்தவள், “இல்ல பாஸ். நீங்க கிளம்புங்க நான் வேலைய முடிச்சுட்டு கிளம்பறேன்”

“இல்ல, அப்புறம் ராத்திரி நீ எப்போ கிளம்பறேன்னு யோசிச்சே எனக்கு பைத்தியம் பிடிக்கும். நீ கிளம்பு, நான் வேற அம்மாகிட்ட எதுவுமே சொல்லலை” செல்போனில் நேரத்தைப் பார்த்தவன், “கிளம்பு” அவள் கணினியை அணைக்க முற்பட்டவனைத் தடுத்தவள்

“மொதல்ல நீ கிளம்பு! ஆண்டி கிட்ட போய்ச் சொல்லு. நான் மாதவனை வர சொல்லிப்பேன்” அவள் அவனை வற்புறுத்தி அனுப்பி வைத்தாள்.

பைரவ் வீட்டிற்குள் நுழைந்த நேரம், வாணி சோர்வாகச் சோபாவில் சாய்ந்து கண்மூடிக் கொண்டிருந்தார்.

“வாணிமா …” பைரவ் குரல் கொடுத்ததும், கண்விழித்தவர்

“ஏண்டா?” அவர் குரலில் வெளிப்பட்ட வேதனை, பைரவிற்கு விஷயத்தைப் புரியவைத்தது

“மா ப்ளீஸ்!”

“எல்லாத்தையும் அவ அப்பா சொல்லித்தான் தெரிஞ்சுக்கணும்ல? நீ ஒரு ஃபோன் செஞ்சு சொன்னியா?” கோவமாகச் சமையலறைக்குச் சென்றார், அவரைப் பின் தொடர்ந்த பைரவ்,

“அம்மா… இங்கபாறேன்…பாருன்னு சொல்றேன்ல ?” அவர் தோளைப் பற்றி இழுத்தவன், “மா… அவ என்ன பேச்சு பேசறா தெரியுமா? உன்னை எங்கயோ விட சொல்றா” கண்களை மூடித் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவன்,

“அவ மனசுல நான் இல்லைம்மா, நம்ம கம்பெனி, பணம் இதெல்லாம் தான் இருக்கு. என்னை ஒரு ப்ராண்டா(brand) பாக்கறா…” அவன் குரலில் தெரிந்த வலி, வாணியையும் வாட்டியது

“உன்னை இழந்தாதான் எனக்கு கல்யாணம்னா, அப்படியொரு கல்யாணமே எனக்கு வேண்டாம். நான் இப்படியே இருந்துடறேன். எனக்கு நீ இருக்கே, உனக்கு நான் இருக்கேன் வாணிமா”

“ஏண்டா இப்படி பேசற? தப்பெல்லாம் என்னோடது தான். அவங்க கேட்டா, எனக்கு அறிவெங்க போச்சு? உடனே ஓகே சொல்லி நிச்சயம்வரை போனேன். அந்த பொண்ணுகிட்ட பேசிகூட பார்கல.

என்னை மன்னிச்சுடுடா, உங்கப்பா இருந்திருந்தா இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு செஞ்சுருக்க மாட்டார். தீர விசாரிச்சுருப்பார்” தன்னை நொந்துகொண்டார்

“நீ ஒன்னும் பண்ணலை, நானும் தான் எதுவும் விசாரிக்கல, நம்பி…விடு ப்ளீஸ் இனி அதைப் பத்தி பேசவேண்டாம்”

“டேய்! என் காலத்துக்கு அப்புறம் நீ தனியா? நான் எவ்ளோ நாள் இருப்பேனோ”

“எல்லாம் இருப்பே! இப்போ எனக்கு பசிக்குது, மாயா வேற ஆபீஸ்ல இருக்கா, அதுக்கு பசி பொறுக்காது. ஏதாவது சமைச்சுதா, அவளுக்கும் எடுத்துக்கிட்டு போறேன்”

மகனை ஏனோ சில நொடிகள் பார்த்துக்கொண்டே இருந்தவர், “நானும் வரேன், அவளையும் கூட்டிகிட்டு சாப்பிடப்போகலாம், அந்த வாலு கூட பேசினா மனசுக்கு சேஞ்சா இருக்கும்னு தோணுது” வாணி சொல்லவும் இருவரும் அலுவலகம் நோக்கிப் புறப்பட்டனர்.

வாணியை உணவகத்தில் இறக்கிவிட்டவன், “வாணிமா மாயாக்கு ஃபோன் பண்ணி கீழ வரசொல்லிடு. நான் கூப்பிட்டா பிகு பண்ணுவா. நான் மாதவனுக்கு ஃபோன் பண்ணி இன்ஃபார்ம் பண்ணிட்றேன்”

வாணி அழைத்ததால் மாயா வாதாடாமல், கீழே இறங்கிக் காத்திருந்தாள், பைரவின் காரைப் பார்த்ததும் வந்து ஏறி அமர்ந்தவள்,

“ஃபிராடு! ஆண்டியை விட்டுக் கூப்பிட்டா நோ சொல்ல முடியாதுனு தானே இந்த வேலை பாக்குறே? நான் வேலையை முடிக்காட்டி வேலையை ரிசைன் பண்ண சொல்றான் தெரியுமா?” மாயா கடுகடுக்க

“மொதல்ல சாப்பிடுவோம், நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன் ஜம்முன்னு முடிச்சிடலாம் புரியுதா?”

“என்னவோ பண்ணு, முடிவு பண்ணிட்டே, நான் சொன்னா கேட்கவா போற?”

புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தான்.

உணவகத்தில் காரை நிறுத்திட, இறங்கியவள் “என்ன பைரவ் இங்கேயா சாப்பிட போறோம்?” என்றாள் நம்ப முடியாமல்,
அவனோ சிரித்தபடி, “ட்ரை பண்ணிட்டு சொல்லு. வா”, அவளை அழைத்துக்கொண்டு அந்த மூலிகை ரெஸ்டாரன்டின் உள்ளே நுழைந்தான்.

வாணியை பார்த்தவள், “ஹாய் ஆண்டி எப்படி இருக்கீங்க?”
ஆசையாக அவர் அருகில் அமர்ந்து கொண்டவள், லொடலொடவெனப் பேச, அதுவரை தனக்குள் இருந்த இறுக்கம் மறந்து வாணியும் அவளுடன் பேசத்துவங்கினார்.

தன்னை தவிர தன் தாய் மனம்விட்டு பேசும் ஒரே நபர் மாயாதான் என்பதை நன்கறிந்த பைரவ் அவர்களுக்கிடையில் நுழையாமல் விட்டுவிட்டான். உணவை முடித்துக்கொண்டு மாயாவின் இல்லம் நோக்கிப் புறப்பட்டனர்.

“ப்ளீஸ் என்னை ஆபீஸ்ல விட்டு, வேலை இருக்கு…”

“ராத்ரிலாம் ஆஃபீஸ்ல தனியா… தேவையே இல்ல! நான் வீட்டுக்குப் போயிட்டு ரிமோட்ல வர்றேன், உனக்கு ஹெல்ப் பண்றேன். இப்போ வாய மூடிக்கிட்டு வா”

“இல்ல…”

“மூச்! வாய மூடிட்டுவா!” பைரவ் மிரட்ட

“எப்படி இவன் கூட இருக்கீங்க, நல்லவனாச்சேன்னு பாக்குறேன் இல்ல பாஞ்சு கடிச்சு கொதறிடுவேன்” மறைமுகமாகப் பைரவை மிரட்ட

“அவ கடிக்கிறவரை சும்மா இருப்பேனா? நான் இன்னும் ஜோரா கடிச்சு வைப்பேன்னு சொல்லிவைமா” அவனும் மிரட்ட

“ஆண்டி உங்க பையன் கிட்ட சொல்லுங்க, அப்படியே…”
மாயா வீடு வரும்வரை இருவரின் வீர வசனங்கள் ஓய்ந்த பாடில்லை.