idhayam – 20

அத்தியாயம் – 20

அபூர்வாவிடம் இருந்த துருதுருப்பு அவளுக்கு பிடித்துப்போனது. எந்தவிதமான சோகமும் இல்லாமல் துள்ளலோடு சென்றவளை மனதிற்குள் நினைத்தபடியே மாடியிலிருந்து இறங்கினாள்.

“ஏய் முதல்நாள் வேலைக்கு போகும்போது எல்லோருக்கும் இந்த எக்ஸ்சைட்மென்ட் இருக்கத்தான் செய்யும். அப்புறம் தான் தெரியும் ஏன்டா வேலைக்கு வந்தோம்னு” அவள் கிண்டலடிப்பதைக் கண்டுகொள்ளாமல் சென்றவளை புரியாத பார்வை பார்த்து வைத்தாள் சாரு.

“இவளை புரிஞ்சிக்கவே முடியல” என்று புலம்பியபடி கீழே சென்றவளை எதிர்பார்த்தபடி நின்றிருந்தவளைக் கண்டு, “எதுக்குடி இவ்வளவு வேகமாக  ஓடிவந்த?” என்று கலவரத்துடன் கேட்டாள்.

அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “இப்போ நீ எனக்கு கம்பெனியை காட்டுகிறாயா? இல்ல நானே கண்டிபிடிச்சு போகட்டுமா சாரு” என்றாள் கோபத்துடன்

மார்பின் குறுக்கே கரங்களைக் கட்டிக்கொண்டு, “யாரிடம் கேட்டு போவ” என்றவள் கேள்வியாக புருவம் உயர்த்திட தன் கையில் இருந்த மொபைலை காட்டி, “இருக்கவே இருக்காரு நம்ம கூகிள் ஆண்டவர். அவரிடம் கேட்ட உடனே சொல்லிடுவாரு..” என்றவள் தோழியைக் கண்களால் அருகே அழைத்தார்.

அவள் ஏதோ சீரியஸாக சொல்ல போகிறாள் என்ற எண்ணத்துடன், “என்ன” என்றாள்.

“சரியான லோட லோட வாய்ன்னு சொல்வாங்க கேள்விபட்டு இருக்கிறாயா?” என்றதும் அவள் காரணமே புரியாமல் தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.

“அது வேற யாருமே இல்ல நம்ம கூகுள் ஆண்டவர் தான். சரியாக கேட்டா கொல்கத்தாவில் இருக்கிற ஆதி கன்ஸ்ட்ரக்ஷன் என்ன அமெரிக்காவில் இருக்கிற அவரோட பிரான்சுக்கு கூட சரியாக வழி சொல்லிருவாரு. உன்னைவிட ரொம்ப ரொம்ப பிர்லியண்ட்” என்றவள் குறும்புடன் கண்சிமிட்டினாள் அபூர்வா.

தன்னை அவள் முட்டாள் என்று மறைமுகமாக கிண்டலடித்தைக் கூட உணராத சாரு, “ஓஹோ அப்படியா” என்றதும், “ஆமா அப்படித்தான்” என்றவள் வயிற்றைப் பிடித்துகொண்டு சிரிக்க அப்போது தான் அவள் சொல்ல வாக்கியத்திற்கு அர்த்தத்தை சரியாக புரிந்துகொண்டாள்.

“அடிப்பாவி என்னை அறிவில்லாத முட்டாள்ன்னு சொல்லி கிண்டல் பண்ற” என்று தோழியை துரத்திச் சென்றாள். அவர்கள் இருவரும் பேசியபடியே பஸில் ஏறி இரண்டு ஸ்டாப்பிங் கடந்ததும், “அடுத்த ஸ்டாப் நீ இறங்கணும் அபூர்வா. அங்கே இறங்கி கொஞ்சதூரம்..” என்று கிளாஸ் எடுத்தாள் சாரு.

“அடியேய் போதும்டி என்னால முடியல நான் போய்கிறேன். நீ கவலைபடாமல் உன் வேலையைப் பாரு” என்று சாதாரணமாக கூறியவளிடம் வேறு என்ன சொல்ல முடியும். அவள் சரி என்பதோடு அமைதியாவிட அடுத்த ஸ்டாப் வந்தும் அவளிடமிருந்து விடைபெற்று பஸில் இருந்து இறங்கி நடந்தாள்.

ஆதி கன்ஸ்ட்ரக்ஷன் உள்ளே நுழைந்தவள் ரிசப்ஷனிஸ்டிடம் தன் விவரத்தை கூறியதும் தன் போனை எடுத்து மறுப்பக்கம் வேறு யாருடனோ பேசிவிட்டு, “மேடம் சார் உங்களை அவங்க கேபினுக்கு வர சொன்னார்”என்றாள் புன்னகையுடன்.

“இந்தப்பக்கம் போய் ரைட் சைடு முதல் கேபின் சாரோடது தான்” என்றவளுக்கு நன்றி சொல்லிவிட்டு வேகமாக சென்றவள் கதவை தட்டி அனுமதி வாங்கிக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.   

அங்கே எம்.டி. ஸீட்டில் அமர்ந்திருந்தவனைக் கண்டதும் அதிர்ச்சியில் சிலையென உறைந்தாள் பெண்ணவள். அதே நேரத்தில் அவளைக் கண்ட ஆதியும் இன்ப அதிர்ச்சியுடன் அவளை இமைக்காமல் பார்த்தான்.

அவனைக் கண்டதும் அதிர்ச்சியில் சிலையென உறைந்துபோன அபூர்வாவிற்கு மூச்சு விடுவதுகூட அவ்வளவு சிரமமாக இருந்தது. தன் விழிகளை நம்ப முடியாமல் நின்றவளின் பார்வையோ அவனின் மீதே நிலைத்தது.

தன் ஸீட்டில் சாய்ந்திருந்தவனின் இடது கரத்தில் பைல் இருக்க, மற்றொரு கரத்தில் பேனாவை வைத்துகொண்டு நிமிர்ந்து பார்த்தவனின் பார்வையில் அவளின் மனம் தடுமாறியது. இடைப்பட்ட காலத்தில் அவளிடம் பல மாற்றங்கள் வந்திருந்தது.

அவன் பேசும் பொழுது சிரிக்கும் அவன் கண்களில் கடுமை குடியேறி இருந்தது. அவனின் முகத்தில் பழைய துள்ளல் மறைந்து போய் ஒருவிதமான இறுக்கம் வந்திருப்பதைக் கண்டாள்.

எப்போதும் டீ சர்ட், சீன்ஸ் உடைகளில் வலம் வருபவன் இப்போது மடிப்பு கலையாத உடைகளை மற்றவர்கள் மதிக்கும் வண்ணம் நேர்த்தியாக உடுத்தி இருந்தான். அவன் இருக்கும் இடத்திற்கு தகுந்தமாதிரி அவனின் தோற்றத்திலும் பல மாற்றங்கள் வந்திருப்பதை மனதில் குறித்துக் கொண்டாள் அபூர்வா.

அவனைப் பிரிந்து முழுவதுமாக ஐந்து வருடம் கடந்துவிட்ட நிலையில் வேலைக்கு வந்த நிறுவனத்தின் எம்.டி.யாக அவனிருப்பான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.  ஆதி கன்ஸ்ட்ரக்ஷன் என்றதும் அவளின் மனதில் எழுந்த சந்தேகத்திற்கு விடை கிடைத்துவிட்டபோதும் மனம் ஏனோ ஏமாற்றமாக உணர்ந்தது.

தன் எதிரே நின்ற அபூர்வாவை அவன் சத்தியமாக அந்த நேரத்தில் அங்கே எதிர்பார்க்கவில்லை. இந்த எதிர்பாராத சந்திப்பில் அவனின் மனமும் தடுமாறவே செய்தது. இந்த ஐந்து வருடத்தில் அவளிடம் நிறைய மாற்றங்கள் வந்திருந்ததைக் கண்டு அவனின் மனம் மகிழவே செய்தது.

‘நான் இருக்கும் ஊரை மட்டும் தானே இவளுக்கு தெரியபடுத்தினேன். இவ என்ன என்னைத் தேடி வந்து நிற்கிறா’ என்ற எண்ணம் அவனின் மனதில் தோன்றி மறைந்தது. இருவருக்குமே இந்த சந்திப்பு எதிர்பாராத விதமாக அமைந்துவிட அதில் சந்தோஷபட்டவன் ஆதி மட்டுமே! 

அவனின் கூர்மையான பார்வை தன்னை துளைத்தெடுப்பதை உணர்ந்து, “ஸார் ஐ எம் அபூர்வா ஆர்கிடெக்ட். இன்று வேலையில் சேர சொல்லி வேலைக்கு அப்பாயின்மென்ட் வந்திருந்தது” அவனிடம் தன்னை அறிமுகபடுத்திக் கொண்டு தன் கையில் இருந்த அப்பாயின்மென்ட் ஆர்டரை அவனிடம் ஒப்படைத்தாள்.

அவனை நேரில் கண்டதும் தன்னால் தடுமாற்றம் இல்லாமல் பேச முடியுமா என்ற சந்தேகம் அவளுக்கு பல வருடங்களாக இருந்தது. ஆனால் இன்று அவனிடம் தைரியமாக பேசியதை நினைத்து மனதிற்குள் மகிழ்ந்தாள்.

அவனுக்கு தன்னை நினைவு இல்லையோ என்ற பயம், பதட்டம் எதுவும் அவளுக்கு வரவில்லை. அவனை பொறுத்தவரை நம்ம ஒரு வேலையாள் மட்டுமே. அவன் கொடுக்கும் வேலையை சரியாக செய்து கொடுப்பதற்காக மட்டுமே தன்னை இவ்வளவு தூரம் தேடி வர வைத்திருக்கிறான் என்றே நினைத்தாள்.

அவள் நினைப்பது போலவே அவனும் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமரும்படி எதிரே இருந்த சீட்டை கைகாட்டிவிட்டு, “வேல்கம் அவர் கன்ஸ்ட்ரக்ஷன் அபூர்வா. உங்களுக்கு இங்கே வேலை செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லையே” என்றவன் இரண்டு கரங்களிலும் பேனாவை பிடித்தபடி அவளையே பார்த்தான்.

அவளுக்கு சுள்ளேன்று கோபம் வந்துவிட, “வேலைக்கென்று வெளியூர் வந்தபிறகு என்ன பிரச்சனை வந்தாலும் சமாளிச்சுதானே ஸார் ஆகணும்” என்றவள் சாரில் அழுத்தம்கொடுத்து கூற அவளை பார்வையால் அதட்டினான் ஆதி.

“சார் நீங்க என்னோட வொர்க் அண்ட் கேபின் இரண்டும் சொன்னீங்க என்றால் நான் போய் என் வேலையைப் பார்ப்பேன்” அவள் பயம் துளியும் இல்லாமல் பேசுவதைக் கண்டு வழக்கம்போல அவன் தான் அவளிடம் தோற்று போக வேண்டியிருந்தது.

“நீங்க சில டிசைன் போட்டு எடுத்துட்டு வாங்க” என்று அவளின் வேலைக்கு தகுந்த குறிப்புகளை கொடுத்துவிட்டு போனை எடுத்து தன் பி.ஏ.விற்கு அழைத்து அவளின் கேபினைக் காட்ட சொன்னான்.

அவன் வந்து அபூர்வாவை அழைத்து செல்ல அவள் அவனை சட்டை செய்யாமல் செல்வதைக் கண்டு மனதிற்குள் ஏதேதோ எண்ணங்கள் வலம் வர தொடங்கியது.

அவள் எப்படி இங்கே வந்தாள் என்ற சந்தேகத்துடன் தான் அனுப்பிய அப்பாயின்மென்ட் ஆர்டரை செக் பண்ணி பார்த்தவனுக்கு அந்த கல்லூரியில் இரண்டு மூன்று அபூர்வா ஒரே பேஜில் படித்து தேர்வாகி இருந்தனர்.

இரண்டு பேருக்கு சென்னை பிரான்சில் வேலையும், ஒருத்தருக்கு கொல்கத்தாவில் வேலையும் அப்பாயின்மென்ட் ஆர்டர் அனுப்ப பட்ட விஷயம் தெரிய வந்தது.

 “சுத்தம் இவளிடம் நான்தான் வலண்டராக போய் மாட்டி இருக்கேனா? அட்ரஸ் கூட செக் பண்ணாமல் அனுப்பி இவகிட்ட வசமாக மாட்டிகிட்டேன்” என்று புலம்பியவனுக்கு சட்டென்று சிரிப்பு வந்தது.

அவள் தன்னிடம் பேசிய சில வார்த்தைகளை மனதிற்குள் நினைத்தவன், ‘மேடம் செம கோபத்தில் இருக்கிறாங்க போலவே. ஆதி இனிமேல் அவளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும் டா. இல்ல உன்னை துவச்சு தோரணமாக தொங்கவிட்டாலும் விட்டிருவா’ என்றான் எச்சரிக்கையாகவே.

‘என்னை எதுக்குடா உன்னோட கூட்டு சேர்க்கிற. எதுவாக இருந்தாலும் நீயே அவளிடம் மொத்து வாங்கு. நான் ஏன் வாங்கணும்’ என்று நியாயமாக கேள்விகேட்ட மனதை அடக்கிவிட்டு தன் வேலையில் கவனத்தை திருப்பிவிட்டான் ஆதி.

தன் கேபினுக்கு சென்ற அபூர்வா அங்கிருந்த தன் சீட்டில் அமர்ந்து ஆதியைப் பற்றி யோசிக்க அவன் தன்னை திட்டமிட்டு வரவழைத்ததாக நினைத்துக் கொண்டாள்.

‘அவசரபடாதே மனமே. அவன் எந்த காரணத்திற்காக தன்னை வரவழைத்தான் என்ற உண்மை தெரியாமல் நீ உன்னை வெளிபடுத்த வேண்டாம்’ என்று மனதிற்கு கடிவாளம் இட்டுவிட்டு தன் வேலையை தொடங்கினாள்.

அவளுக்கு சின்னத்தில் இருந்தே கட்டிட வடிவமைப்பில் ஆர்வம் அதிகம். எந்தவொரு நிறுவனத்தின் கட்டட வேலை நடக்கும்போதும் அதில் இருக்கும் சின்ன நுணுக்கங்களையும் தெளிவாக ஆராய்ந்து அதில் இருக்கும் புதிய விஷயங்களை கண்டு அதை மற்றவர்களுக்கும் பகிர்வாள்.

தன் எண்ணங்களைக் கொண்டு அழகான வடிவமைப்புகளை அறிமுகபடுத்த வேண்டும் என்பதே அவளின் ஆசை. சின்ன வயதில் இருந்து அவளின் திறமையையும் தேடலையும் உணர்ந்த ரோஹித் மது இருவரும் மகள் வளர்ந்தபின்னர் அவளுக்கு இந்த துறையை பற்றிய விவரங்களை கூறிவே அவளுக்கும் அதில் ஆர்வம் அதிகம் இருந்ததால் அந்த படிப்பை படித்து முடித்தாள்.

இதோ இன்று இங்கே அவள் வேலைக்கு சேர்ந்ததை நினைத்தபடி அவன் கூறிய விஷயங்களை மனதிற்குள் ஓடவிட்டு அதற்கு எப்படி ஒரு வடிவமைப்பை கொடுக்கலாம் என்று அங்கிருந்த போர்டில் வரைய தொடங்கினாள்.

வித விதமான வடிவங்களில் கட்டிடங்களை வடிவமைத்த அபூர்வா ஒரு முறைக்கு இரண்டு முறை அதை தன் செல்லில் போட்டோ எடுத்துவிட்டு மீண்டும் புதிதாக வரைய தொடங்கிவிட்டாள். கிட்டதட்ட ஐந்து கட்டிட வடிவமைப்புகளை அவன் கொடுத்த குறிப்புகளுக்கு தகுந்த மாதிரி வரைந்து முடித்துவிட்டு அவனை காண கேபினுக்கு சென்றாள்.

அவனின் அறை கதவை தட்டி அனுமதி பெற்றுகொண்டு அவனின் கேபினுக்குள் நுழைந்தவளிடம், “நீங்க கொண்டு வந்ததை அங்கே வெச்சிட்டு போய் வேற வேலையைப் பாருங்க அபூர்வா. நான் மற்ற வேலைகளை முடித்துவிட்டு உங்களோட வரைபடங்களைப் பார்த்தபிறகு மற்ற விஷயங்களைப் பற்றி பேசலாம்” என்று பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டான்.

அவன் வேலையில் கவனமாக இருப்பதைக் கண்டு, ‘என்னவோ பண்ணு. எனக்கு என்ன வந்தது’ என்ற எண்ணத்துடன் அவனின் முன்னாடி வைத்துவிட்டு தன் கேபினுக்கு சென்றுவிட்டாள் அபூர்வா.

அவள் அவனின் கேபின் விட்டு வெளியே வந்த அரைமணி நேரத்தில் லஞ்ச்  டைம் ஆகிவிட, ‘இனிமேல் கேண்டின் சாப்பாடு தான் சாப்பிடணுமா?’ என்று நினைத்தவளுக்கு ஏனோ அன்னையின் நினைவு வரவே தன் மொபைலை எடுத்து அவருக்கு அழைத்தபடி கன்ஸ்ட்ரக்ஷன் கேண்டின் நோக்கி சென்றாள் அபூர்வா.

மகளின் அழைப்பைக் கண்டவுடன், “அபூர்வா இன்னைக்கு வேலையில் சேர்ந்துவிட்டாயா? உனக்கு அங்கே எல்லாம் ஓகே தானே” என்று அக்கறையுடன் விசாரித்தார்.

“எனக்கு இங்கே எல்லாமே ஓகே அம்மா. என்ன உங்க கையில் சாப்பிட்டே பழகிய எனக்கு இப்போ கேண்டின் சாப்பாடு பற்றி நினைச்சாதான் வயிற்றுக்குள் பயபந்து உருளுது” என்ற மகளின் குரல் ஏக்கத்துடன் ஒலிப்பதைக் கண்டு மதுவிற்கு வருத்தமாக இருந்ததது.

அதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல், “அப்போ இனிமேல் நீதான் சமையல் பண்ணி சாப்பிடணும்” என்றார்.

“ம்ம் பார்க்கலாம். கேண்டின் சாப்பாடு ஒத்து வந்தால் ஓகே. இல்லன்னா ஹாஸ்டலை காலி பண்ணிட்டு தனியாக வீடெடுத்து தங்கிதான் ஆகணும்” என்றாள்.

“சரிடா நீ போய் முதலில் சாப்பிடு. அம்மா வேலையை முடிச்சிட்டு ஈவினிங் உனக்கு கால் பண்றேன்” என்றவர் போனை வைத்துவிட கேண்டினுக்கு சென்று உணவை வாங்கிகொண்டு ஓரிடத்தில் வந்து அமர்ந்தாள். அவள் மூலைக்கு அதிகம் வேலை கொடுத்ததால் பசி அவளை பாடாக படுத்தியது.

அவள் உணவை ஒரு கவளம் அள்ளி வாயில் வைக்க அதன் சுவை பிடிக்காமல் முகம் சுளித்தாள். அவளுக்கு பசி அதிகமாக இருந்தபோதும் பிடிக்காத சாப்பாட்டை சாப்பிட பிடிக்காமல் அமர்ந்தவளுக்கு ஏனோ முகம் களைப்பில் வாடிப்போனது.

தன் வேலையை முடித்துவிட்டு நிமிர்ந்த ஆதி அப்போது தான் கடிகாரத்தைக் கவனித்தான். லஞ்ச் டைம் ஆகிவிட்டதை உணர்ந்து சாப்பிட வெளியே கிளம்பியவன் கேபினைவிட்டு வெளியே வரும்போது அபூர்வா சாப்பிட பிடிக்காமல் அமர்ந்திருப்பதைக் கண்டான்.

அங்கே வந்த ஒரு ஸ்டாப்பிடம், “அபூர்வாவிடம் ஒரு முக்கியமான விஷயம் பற்றி டிஸ்கஸ் பண்ணனும். அவங்களை கேபினில் வந்து வெயிட் பண்ண சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு கார் சாவியை எடுத்துகொண்டு வெளியே சென்றான்.

அவன் சொன்னதை அபூர்வாவிடம் கூறவே அடுத்த நிமிடமே சாப்பாட்டை தூக்கி குப்பை தொட்டியில் போட்ட போது அவளுக்கு மனம் ஏனோ பாரமாக இருந்தது. ஒரு அரிசிக்கு விவசாயிகள் வெயிலில் படும்பாடுகளை நினைத்து மனம் வருந்தியவள் தண்ணீரை குடித்துவிட்டு அவனின் அறைக்கு சென்றாள்.

அவன் இல்லாததைக் கண்ட அபூர்வாவின் பார்வை அந்த அறையை சுற்றி வந்தது. அங்கே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படம் அவளை வெகுவாக கவர்ந்திட அதன் அருகே சென்று பார்த்தாள். அது ஒரு முடிவுறாத பெயிண்டிங் என்பதை கண்டு கொண்டவளுக்கு அதை எங்கோ பார்த்த ஞாபகம் வரவே சிந்தனையுடன் அதைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.