idhayam – 21

idhayam – 21

அத்தியாயம் – 21

அறையின் கதவுகளை யாரோ திறக்கும் சத்தம்கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள். ஆதி கையில் பார்சலோடு உள்ளே நுழைவதைக் கண்டு பெருமூச்சுவிட்டபடி, “சார் என்னிடம் ஏதோ பேசணும்னு சொன்னீங்களாம்” என்றவள் கேள்வியாக நிறுத்தினாள்.

தான் கொண்டு வந்த பார்சலை பக்கத்து அறையில் வைத்துவிட்டு, “நீங்க வரைந்து கொடுத்த டிசைனில் சில சந்தேகங்கள் இருக்கு அதை கேட்கத்தான் கூப்பிட்டேன்” அவன் அவளை இமைக்காமல் பார்த்தபடி கூறவே,

“என்ன சந்தேகம் வந்தாலும் கேளுங்க சார். நான் விளக்கம் கொடுக்கிறேன். ஒரு வரைபடத்துடன் இந்த வேலை முடிஞ்சிபோச்சுன்னு யாராலும் சொல்ல முடியாது. இதுக்கு அப்புறம் தான் ஆயிரம் வேலைகள் இருக்கு” என்றவள் கவனம் முழுவதும் அவள் வரைந்த சாட்டின் வடிவமைப்புகளின் பக்கம் திரும்பிவிட்டது.

அவனோ, “அபூர்வா சாப்பிடலாம்” என்று சொல்ல அவளால் முதல் தன் காதில் விழுந்தது நிஜமா என்று நம்ப முடியாமல் அவனை திகைப்புடன் ஏறிட்டாள்.

“என்ன பார்வை” அவன் கேள்வியாக புருவம் உயர்த்திட, “இல்ல சார் நான் சாப்பிட்டேன். நீங்க போய் சாப்பிடுங்க” என்றாள் புன்னகை மாறா முகத்துடன்.

அவள் சொல்வதை எல்லாம் காதில் வாங்காமல், “பரவல்ல வாங்க அபூர்வா. புது ஊர் என்பதால் இங்கிருக்கும் உணவுகள் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் இல்ல” என்றான். என்னதான் அவன் சொல்வது உண்மை என்றாலும் கூட அதை ஏற்றுகொள்ளவில்லை அவளின் மனம்.

“இல்ல ஸார் நீங்க போய் சாப்பிடுங்க..”அவள் மீண்டும் மறுக்கவே அவளின் அருகே சென்றவன், “இப்போ நீ வரல. அப்புறம் நான் செய்வேன்னு எனக்கே தெரியாது” என்று அடிக்குரலில் சீறினான்.

அவனிடம் அப்படி ஒரு கடுமையை எதிர்பார்த்திடாத அபூர்வாவிற்கு உள்ளுக்குள் உதறலெடுக்க, ‘ரொம்பத்தான் அக்கறை மாதிரி பேசறான். இன்னும் என்னன்னா சொல்லி மிரட்ட காத்திருக்கானோ’ என்ற எண்ணத்தில் அவனின் பார்வைக்கு கட்டுபட்டு அவனின் பின்னோடு சென்றாள்.

அவன் உணவுகளை எடுத்து வைத்திட அவனோடு டைனிங் ஹாலில் சாப்பிட அமர்ந்தாள் அபூர்வா. அவன் முதலில் அவளுக்கு பரிமாறிவிட்டு, “சாப்பிடு” என்றவன் தனக்கொரு தட்டில் பரிமாறிக்கொண்டு வந்து அவளின் எதிரே அமர்ந்தான்.

அவளுக்கு பசி வயிற்றை கிள்ளிட வேறு எதுவும் பேசாமல் சாப்பாட்டை சாப்பிடுவதில் கவனமாக இருந்தாள்.

அவள் சாப்பிடுவதை ரசித்தபடியே சாப்பிட்ட ஆதி, “அபூர்வா உங்க சொந்த ஊர் எது?” ஒன்றும் தெரியாதது போல கேட்டவனை முறைக்க முடியாமல், “மதுரை” என்றாள் பல்லைக்கடித்தபடி.

“அங்கேயே தான் உங்களோட படிப்பை முடிச்சீங்களா” என்று அடுத்த கேள்வியைக் கேட்டவனை வெட்டும் பார்வை பார்த்துவிட்டு சாப்பிட தொடங்கினாள்.

“என்ன அபூர்வா கேட்கிறேன் இல்ல சொல்லுங்க” அவன் வேண்டுமென்றே வம்பிற்கு இழுக்க, “இப்போ உங்களுக்கு என்ன சார் தெரியணும்” நேரடியாக சண்டைக்கு வந்தாள்

“இல்ல ஊருக்குள் அத்தனை நிறுவனம் இருக்கும்போது நீங்க கொல்கத்தா வரை வர காரணம் என்னன்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன்” என்று மெல்ல தூண்டில் போட்டு பார்த்தான்.

அவளின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, ‘எல்லாம் என் நேரம்டா’ என்று மனாசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.

அவனின் விழிகளை நேருக்கு நேராக நோக்கியவள், “எனக்கு வட இந்திய கட்டிடக்கலை பற்றி தெரிந்து கொள்ள ரொம்ப ஆர்வமாக இருந்தது. அதன் கொல்கத்தாவிற்கு வந்தேன்” என்றாள் கழுவிற மீனில் நழுவும் மீனாக.

தன் கேள்விக்கு தயக்கம் இல்லாமல் பதில் சொன்னவளை இமைக்காமல் பார்த்தான். அபூர்வாவிடம் எப்படியும் உண்மையை வாங்கிவிட நினைத்தவனால் அது முடியாமல் போய்விட அவனின் பார்வை அவளின் மீதே நிலைத்தது.

“ஸார் சாப்பாட்டில் வண்டு கிடப்பதை தெரியாமல் சாப்பிடுறீங்க” தட்டில் கவனத்தை வைத்தபடியே கூறவே திடுக்கிட்டு அவன் சாப்பாட்டை வேகமாக ஆராய கலகலவென்று சிரித்தாள்.

‘என்னிடம் விளையாடுற’ அவன் அவளை முறைக்க, “என் முகத்தில் என்ன படமா ஓடுது? அப்படியே விழுங்குவதை போல பார்க்கிறீங்க. அதன் சாப்பாட்டில் வண்டு கிடக்குதுன்னு பொய் சொன்னேன்” என்றவள் கைகழுவ எழுந்து சென்றாள்.

“நீ அதில் மட்டுமா பொய் சொல்லி இருக்கிற? நீ சொல்வது எல்லாமே பொய்தானே” என்றவன் தொடர்ந்து, “உன்னோட பல பொய்களை நம்பி ஏமாந்த ஆதி இப்போ இல்ல. உன் நிஜ முகத்தை நேரில் கண்ட அன்றைக்கு செத்து போயிட்டான். இப்போ  இருக்கிற ஆதிக்குள் ஆயிரம் ரணம் இருக்கு” அவன் ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து கூறினான்.

அவனின் குரலில் இருந்த ஏதோவொன்று அவளின் மனதை பாதித்தது.

அடிப்பட்ட பார்வை பார்த்தபடி, “எனக்கு தெரியும் நான் உண்மை பேசறேன்னு. உங்களுக்கு விளக்கம் கொடுக்கும் அளவுக்கு நீங்க ஒன்றும் என் மனசுக்கு நெருக்கமானவர் இல்ல” வீம்புடன் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றாள்.

அவள் மீண்டும் வரும்வரை அந்த இடத்தில் அமர்ந்திடிருந்தவனைக் கண்டு, “சாரி சார் எனக்கு வாய் துடுக்கு கொஞ்சம் ஜாஸ்தி. இனிமேல் என்னிடம் பேசும்போது கொஞ்சம் கவனமாக பேசுங்க” என்று எச்சரித்துவிட்டு, “தேங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு நில்லாமல் சென்றுவிட்டாள்.

மாலை வேலை முடிந்தும் ஹாஸ்டலுக்கு செல்ல நினைத்து மெதுவாக நடந்தவளின் விழிகளில் விழுந்தது செங்கொன்றை மரம். என்னதான் எதுவும் நடவாததுபோல அவனின் முன்னே காட்டிக்கொண்டாலும் அவளால் இயல்பாக இருக்க முடியாமல் தடுமாறினாள்.

அவள் எதையோ நினைத்து கலங்கியபடி மெல்ல நடக்க பின்னாடி கார் வரும் சத்தம்கேட்டு விலகி நடந்தவளின் முன்னே சென்று காரை நிறுத்துவிட்டு கீழிறங்கி வந்தான் ஆதி.

“அபூர்வா நீ ஏன் நடந்து போகணும்? வா நம்ம காரில் போலாம்” என்று அழைக்க அவளோ நில்லாமல் நடந்தாள். அவள் தலைகுனிந்து நடந்ததால் அவளின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளை ஆதியால் படிக்க முடியவில்லை

அவன் என்ன சொல்லியும் கேளாமல் நடப்பவளின் கரங்களை பிடித்து நிறுத்தி, “உன் மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கிற?” எரிச்சலோடு வினாவினான். அவனின் கரங்களில் சிக்கிக்கொண்ட கரத்தை உருவிக்கொண்டு மீண்டும் நடந்தாள்.

அவளின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமல், “ஏய் நில்லுடி” அவளைப் பின்தொடர்ந்து சென்று மீண்டும் அவளின் வழியை மறித்தான்.  அவள் தலைநிமிராமல் நின்றிருக்க ஒரு விரலால் முகத்தை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தான்.

அவளின் கண்கள் கலங்கி சிவந்திருக்க, “ஏய் அபூர்வா அழுதியா?” என்று கேட்க பளிச்சென்று புன்னகைத்தவள், “நான் ஏன் அழுகணும்?” என்றபோது அவளின் குரல் மீண்டும் உடைந்தது.

இருவரும் நடுரோட்டில் நின்றிருப்பதை உணராமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். முதலில் தன்னை சுதாரித்துக் கொண்ட அபூர்வா, “ஆதி ப்ளீஸ் நான் ஹாஸ்டல் போகணும். என்னை விடுங்க”  வேகமாக அவனிடமிருந்து விலகிய ஸ்டாப்பிங் நோக்கிச் சென்றவள் தான் போக வேண்டிய பஸில் ஏறி சென்றுவிட்டாள்.

கண்களில் கண்ணீர் வழிய அவள் தன்னை நோக்கியது அவனின் மனதை பிசைந்தது. அவள் சிரித்துக்கொண்டே இருப்பதால் அவள் சந்தோசமாக இருப்பதாக எல்லோரும் நினைக்கின்றனர். அது அவள் பொய்யாக அணிந்திருக்கும் ஒரு முகமூடி  என்று அறிந்தவனுகோ நிம்மதி தொலைந்தது.

வழக்கத்திற்கு மாறாக மாலை சீக்கிரமே வீடு வந்த மகனைக் கண்டு ஆச்சரியமடைந்த மஞ்சுளா, “என்னப்பா இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்திருக்கிற?” என்று விசாரித்தவர் அவனுக்கு காபி போட்டு எடுத்து வர சென்றார்.

சோபாவில் அமர்ந்த ஆதி உடனே போனை எடுத்து  யாருக்கோ அழைத்தான். மறுபுறம் ரிங் போய்கொண்டே இருந்தது ஆனால் யாரும்  எடுக்கவில்லை.

அவன் மீண்டும் அழைக்க, “ஹலோ” என்றான் சக்தி.

“சக்தி நீ அபூர்வா தம்பியா?” என்று விசாரிக்க, “என்ன மாம்ஸ் இப்போதான் உண்மை தெரிஞ்சுதா?” என்று கிண்டலோடு கேட்டபடி தான் பைக் மீது எரியமர்ந்தான்.

“நேற்று நைட் நீ பேசும்போது கூட நான் சத்தியமா எதிர்பார்க்கல. நீ அவளோட போட்டோ அனுப்பும்போதே சுதாரிச்சிருக்கணும். மிஸ் பண்ணிட்டேன்” ஆதி புன்னகைக்க மஞ்சுளா காபியைக் கொண்டுவந்து கொடுத்தார்.

“நீங்க கண்டுபிடிப்பீங்க என்று நான் ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனா நீங்க கண்டே பிடிக்கல” என்ற சக்தி, “அக்கா கோபமாக இருந்தாளா?” என்று மெல்லியகுரலில் தமக்கையை பற்றி விசாரித்தான்.

“அவ சரியான கோபத்தில் இருக்கிறா சக்தி” என்றான் ஆதி வேகமாக.

“உங்களுக்கும் அக்காவிற்கும் இடையே என்னவோ பிரச்சனை இருக்கு. அதை நீங்களே பேசி தீர்த்துகோங்க. மதுரைவரும்போது நீங்களும் அக்காவும் சேர்ந்து தான் வரணும் மாமா. எனக்கு எங்க அக்கா சந்தோசம் தான் முக்கியம்” என்றவன் சிலநிமிடங்கள் பேசிவிட்டு போனை வைத்தான். ஆதி அபூர்வா பற்றிய சிந்தனையுடன் அமர்ந்திருக்க மஞ்சுளா மெல்ல கோவிலுக்கு கிளம்பினார்.

மாலை காலேஜ் முடிந்ததும் சக்தி வீட்டிற்கு வரும் வழியில் ராகவ் மற்றும் ரக்சிதா இருவரும் பேசியபடியே நடந்து செல்வதை கவனித்தவன், “ராகவ் இன்னைக்கு என்ன இருவரும் நடந்து போறீங்க” என்று பைக்கை நிறுத்தி விசாரித்தான்.

அவனைப் பார்த்தும் ரக்சிதாவின் புன்னகை உதட்டுடன் உறைந்துபோக, “இன்னைக்கு காலையில் கிளம்பும்போது பைக் நல்லா இருந்தது அண்ணா. என்னன்னு தெரியல திடீர்ன்னு பெட்ரோல் லீக் ஆச்சு. அதன் மெக்கானிக் ஷாப்பில் விட்டுட்டு இருவரும் காலேஜ் போயிட்டோம்” என்று அவன் விளக்கம் கொடுத்தான்.

“சரி வாங்க இருவரும் பைக்கில் போலாம்” என்றழைக்க, “நான் வரல ராகவ். நீயும் அவரும் பைக்ல போங்க. பக்கத்தில் தானே வீடு நான் நடந்தே வரேன்” என்று சொன்னவள் நில்லாமல் சென்றுவிட்டாள்.

சக்தி அவளை புரியாத பார்வை பார்க்க, “நானும் ரக்சிதா கூடவே வரேன் அண்ணா. நீங்க  போங்க” என்று சொல்லிவிட்டு, “ஏய் நில்லுடி லூசு” என்று அவளின் பின்னோடு சென்றான் ராகவ்.

அவளின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த சக்தி, ‘ரக்சிதா இப்படி இருப்பது தான் நமக்கு நல்லது’ என்றபடி பைக்கை ஸ்டார்ட் செய்து வீட்டிற்கு கிளம்பிவிட்டான். அவன் வீட்டிற்கு செல்லும்போது ராகவ் – ரக்சிதா இருவரும் சிரித்தபடி வீட்டிற்குள் நுழைவதைப பார்த்ததும் அவனின் முகம் நொடியில் மாறிப்போனது.

அபூர்வா சென்ற நாளில் இருந்து ரக்சிதா வீட்டிற்கு வருவதில்லை. ராகவுடன் பேசுவது சிரிப்பது என்று அவளின் பொழுதுகள்  நன்றாக கழிந்தது. அவளிடம் வந்திருந்த மாற்றத்தைக் கண்டு அவன்தான் உள்ளுக்குள் புகைந்தான்.

அதே நேரத்தில் சஞ்சனா கல்லூரி முடிந்து வீட்டிற்குள் நுழைய, “இதோ வந்துட்டாலே நம்ம அஞ்சனா” என்று கிண்டலடித்த ராகவ் வேண்டும் என்றே அவளின் கையில் இருந்த  பேப்பரை பறித்துவிட்டு ஓட்டம் பிடித்தான்.

எப்போதும் அவனோடு சண்டைபோட்டபடி துரத்தி வரும் சஞ்சனா அன்று மெளனமாக தான் வீட்டை நோக்கி சென்றாள். தங்கையின் முகம் வாடி இருப்பதைக் கண்டு, “என்னாச்சு இவளுக்கு” என்ற கேள்வியுடன் ரக்சிதா அவளை பின் தொடர்ந்தாள்.

அதற்குள் அவளிடம் இருந்து பறித்த பேப்பரை ராகவ் படிக்க படிக்க அவனின் முகம் கோபத்தில் சிவந்தது. வீட்டிற்கு குட்டி பெண் என்பதால் சஞ்சனாவை எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். அவளுடன் என்னதான் ஆயிரம் சண்டை போட்டாலும் ராகவிற்கு அவள் எப்போதும் ஸ்பெஷல் தான்.

அப்படி இருக்க அவளைப்பற்றி ஒருத்தன் இப்படி எழுதி இருப்பதைக் கண்டு அவனின் ரெத்தம் கொதித்தது. தன் அறைக்கு சென்ற சஞ்சனா பேக்கை தூக்கி எறிந்துவிட்டு கட்டிலில் விழுந்து அழுதாள்.

அவளின் அழுகை சத்தம்கேட்டு அவளின் அறைக்குள் நுழைந்த ரக்சிதா, “சஞ்சு என்னடா ஆச்சு? ஏன் அழுகிற” என்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லாமல், “அக்கா” என்று இடையை கட்டிக்கொண்டு தன் அழுகையைத் தொடர்ந்தாள் சின்னவள்.

அவள் ஆதரவாக அவளின் கூந்தலை வருடிவிட்டபடி அருகே அமர்ந்திருந்தாள். அப்போது புயல் வேகத்தில் அறைக்குள் நுழைந்த ராகவ், “ஏய் சஞ்சனா யாருடி இதை கொடுத்தது” என்று கேட்டதற்கு அவள் அழுகையுடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

அவனிடம் இதுவரை இப்படியொரு கோபத்தை ரக்சிதா பார்த்ததில்லை. அவனின் முகம் செந்தணல் போல சிவந்திருக்க, “ஏன்டா இவ்வளவு கோபப்படர” என்று அவள் புரியாமல் பார்த்தாள்.

“எங்க கிளாஸ் ரமேஷ் தான் ராகவ். என்னை பற்றி இப்படி எல்லாம் அசிங்க..” என்றவளால் அதற்குமேலும் அழுகையை கட்டுபடுத்த முடியாமல் போனது.

அவனுக்கு கோபம் அடங்க மறுக்கவே, “நீ அவளைப் பார்த்துக்கோ நான் இப்போ வரேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே வந்தவன் அண்ணனின் பைக்கைப் பார்த்தான். அது சாவியுடன் இருப்பதைக் கண்டவுடன் வேறு எதைபற்றியும் யோசிக்காமல் பைக்கை எடுத்து சென்றுவிட்டான்.

ஒரு முக்கியமான வேலையாக வெளியே நினைத்த சக்தி பைக் இல்லை என்றதும், ‘இதை யாரு எடுத்துட்டு போனா’ என்ற சிந்தனையுடன் அங்கேயே நின்றிருந்தான்.

கொஞ்சநேரத்தில் பைக்குடன் வந்த ராகவ் கரங்களில் ரத்தத்தைப் பார்த்தும், “ஏய் என்னடா பண்ணிட்டு வந்த” பதட்டத்துடன் ஒலித்தது சக்தியின் குரல்.

“சஞ்சனாவை தப்பா வர்ணிச்சு ஒருத்தன் லெட்டர் எழுதியிருந்தான் அண்ணா. அதன் அவனை அடிச்சிட்டு வந்தேன். ரமேஷை அடிக்கும்போது ஒருத்தன் கண்ணாடி பாட்டலை எடுத்து கையில் போட்டுட்டுதான்” என்றவனின் குரல் வலியுடன் வந்தபோதும், அவனின் முகத்தில் நிம்மதி பரவியிருந்தது.

“ஏன்டா இதை என்னிடம் சொல்லியிருக்க வேண்டியது தானே?” என்று சக்தி அவனை கடிந்தபடி அவனை அழைத்துச்சென்று கையில் இருந்த கண்ணாடிகளை நீக்கி கட்டுபோட, “எனக்கு சஞ்சனாவை ரொம்ப பிடிக்கும் அண்ணா. அவளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் என்னால அமைதியா இருக்க முடியாது..” என்றான் வரவளைக்கபட்ட சாதாரணமான குரலில்.

அவனின் பேச்சில் இருந்த மாற்றத்தை உணர்ந்த சக்தி, “ராகவ்” என்று அழைக்க, “சாரி அண்ணா. நான் சொல்லாமல் போனது தப்புதான். ஆனால் சஞ்சனா என்னோட லவர். அவளுக்கு எப்போதும் உறுதுணையாக கூடவே நான் இருப்பேன். அவளை ஒருத்தன் அப்படி எழுதி இருக்கும்போது என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும்” என்றான்.

அவனின் பக்கமிருந்த நியாயம் புரிய சஞ்சனாவை சென்று பார்த்த சக்தி நடந்ததை கூறி சின்னவளை ஓரளவுக்கு தேற்றிவிட்டு வெளியே சென்றான். அவன் சென்றபோது ராகவ் அடியில் ரமேஷ் ஓரளவு காயத்துடன் இருந்தாலும் எந்தவிதமான ஆபத்தும் இல்லைஎன்ற பின்னரே நிம்மதியடைந்தான்.

அது மட்டும் இல்லாமல் ரமேஷை மிரட்டிவிட்டு வீடு வந்த சக்தியின் மனமோ ரக்சிதாவை சுற்றி வந்தது. அதே நேரத்தில் தனக்காக போய் சண்டைபோட்டுவிட்டு வந்த ராகவை நினைத்து சந்தோசப்பட்டாள் சஞ்சனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!