idhayam – 24

அத்தியாயம் – 24

ரேவதி வந்து சென்றபிறகு அபூர்வா ஆதியை நேரில் சந்திக்காமல் ஒதுங்கி செல்ல தொடங்கினாள். முதலில் வேலையில் கவனமாக இருந்த ஆதிக்கு அவளின் இந்த மாற்றத்தை கவனிக்க தவறினான். அவன் இயல்பாக அவளோடு பேசினாலும், ‘ஆமாம், இல்லை’ என்பது மட்டுமே பதிலாக வந்தது.

அவன் பம்பரமாக சுழன்று வேலையைக் கவனிப்பதை கண்ட அபூர்வாவும் அவனை எதற்காகவும் தொந்தரவு செய்யாமல் விலகி செல்ல தொடங்கினாள். அவள் தன்னைவிட்டு விலகி செல்வதை உணராமல் தன் வேளைகளில் கவனமாக இருந்தான் ஆதி.

கிழக்கு வானம் மெல்ல சிவந்து கதிரவனின் வரவை உலகிற்கு பறைசாற்றியது. காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு ஆபீஸ் கிளம்பிய மகனின் எதிரே வந்து நின்றார் மஞ்சுளா.,

“என்னம்மா விஷயம்” என்றான் நேரடியாகவே.

“வீட்டுக்கு கொஞ்சம் பொருட்கள் வாங்கணும் தம்பி. நீ என்னை அழைச்சிட்டு போறீயா” என்று எதிர்ப்பார்ப்புடன் கேட்க அவனும் தான் பி. ஏ.விற்கு அழைத்து விவரம் சொல்லிவிட்டு போனை வைத்தான்.

‘கீன்’ என்ற சத்தம்கேட்டு அவன் செல்போன் திரையில் பார்வையை பதிக்க லீவ் லெட்டர் அனுப்பியிருந்தாள் அபூர்வா.

‘இவ எதுக்கு இன்னைக்கு லீவ் எடுக்கிற’ என்ற சிந்தனையுடன் அவன் தாயை அழைத்துக்கொண்டு உள்ளே நுழையும்போது தூரத்தில் யாரோ ஒரு பெண்ணை துரத்தியபடி ஓடிச்சென்ற அபூர்வாவை பார்த்தும் கேள்வியாக புருவம் உயர்த்தினான்.

பிறகு தாயின் பக்கம் திரும்பி, “அம்மா நீங்க ஷாப்பிங் முடிச்சிட்டு கால் பண்ணுங்க. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு” தாயின் பதிலை எதிர்பார்க்காமல் அவள் சென்ற திசையை நோக்கி நடந்தான்.

அவன் அங்கிருந்த கேக் ஷாப்பின் மீது பார்வையை பதித்தபடி திரும்ப, “இப்போ நீ ஐஸ்கிரீம் கேக் வாங்கற. இல்ல மகளே நீ என்னிடம் நல்லா உதைபடுவ” என்று யாரோ ஒரு பெண்ணை மிரட்டியபடி நின்ற அபூர்வாவை கண்டான்.

இன்னும் குழந்தைத்தனம் மாறாமல் புன்னகையுடன் சிரித்தவளின் நினைவுகளை மனதிற்குள் பொக்கிஷமாக சேகரித்தபடி அவன் சிலையென நின்றிருக்க, “அதெல்லாம் முடியாது பிறந்தநாள் எனக்கு தானே? அப்போ எனக்கு பிடித்ததை தான் வாங்குவேன்” என்று அந்த பெண் வீம்புடன்.

“ஓஹோ அப்படிங்களா மேடம்?! ஆனால் கேக் சாப்பிட போவது நான்” என்று சொல்லி இறுதியாக ஐஸ்கிரீம் கேக்கை ஆர்டர் கொடுத்த அபூர்வாவை முறைத்தபடி அவள் திரும்பி நின்றிருக்க, ‘இது வேண்டாம் சார். சாக்லேட் கேக் பார்சல் பண்ணுங்க’ என்று சைகையில் செய்ய அவரும் வேறொரு கேக்கை பார்சல் செய்தார்.

கடைக்குள் நடப்பதை வெளியே நின்று வேடிக்கைப் பார்த்த ஆதியோ, ‘இன்னும் இந்த பழக்கத்தை இவ விடவே இல்லையா? சரியான கேக் பைத்தியம்’ மனதிற்குள் செல்லமாக அவளை கொஞ்சினான்.

அவர்கள் இருவரும் கேக் வாங்கிவிட்டு வெளியே வர, “விஷ் யூ ஹாப்பி பர்த்டே சாருமதி” என்று அபூர்வாவை பார்த்தபடி சாருவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினான்.

அவனை பார்த்ததும் வியப்பில் விழி விரிய, “சார் நீங்க ஆதி கன்ஸ்ட்ரக்ஷன் எம்.டி. ஆதித்யா தானே” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.

அவன் ஒப்புதலாக தலையசைக்க, “உங்களுக்கு எப்படி சார் என்னோட பிறந்தநாள் பற்றி தெரியும்” என்றவளின் கேள்வியில் ஆதியின் பார்வை அபூர்வாவின் மீது படிந்து மீள்வதை கண்டு கொண்ட சாரு, ‘ஒருவேளை இவரைப் பார்க்கத்தான் இவள் இவ்வளவு தூரம் வந்திருப்பாளோ’ அவளின் மனதில் சந்தேகம் எழுந்தது.

‘நீ அன்று என்னிடம் சொன்னது பொய்தானே’ என்ற ரீதியில் அவன் பார்த்த பார்வையில் மனம் வலிக்க தலைகுனிந்தாள். அவன் பேசிய பேச்சுகளை மறக்க தனிமை தேவையானதாக இருக்கவே அங்கிருந்து கிளம்ப வேண்டும்மென்று சாருவின் பெயரை கூறியது தவறென்று இப்போது உணர்ந்தாள்.

இருவரும் தங்களை மறந்து சிலநொடி அமைதியாக நின்றிருக்க, “ம்ஹும்” என்றதும் சிந்தனை கலைந்து நடப்பிற்கு திரும்பினர். சாருவோ எதுவும் அறியாதவள் போல,  “ஸார் நீங்களும் வாங்க பிறந்தநாள் செலிபிரேட் பண்ணலாம்” என்று புன்னகையுடன் அவனை அழைத்தாள்.

“இல்ல கொஞ்சம் வேலையிருக்கு” அவன் தயக்கத்துடன் கூற, “அவருக்கு வேலை அதிகமாக இருக்கும் சாரு. உனக்கு நேரில் வந்து விஷ் பண்ணியதே பெரிய விஷயம் தான்” என்று கூறிய அபூர்வாவின் பார்வை கோபத்துடன் அவனின் மீது படித்தது.

“அதெல்லாம் அப்புறம் போய் பார்க்கலாம். இப்போ எங்களோட வாங்க” என்றவள் முன்னே செல்ல ஆதியை முறைக்க முடியாத கடுப்பில் காலை உதைத்தபடி அவளின் பின்னே சென்றாள் அபூர்வா. அவளின் செயலை ரசித்தபடியே அவர்களை பின் தொடர்ந்தான்.

காபி ஷாப் உள்ளே நுழைந்த மூவரும் அங்கிருந்த டேபிளில் அமரவே கையோடு வாங்கி வந்த கேக்கை நடுவே வைத்தாள். சாரு புன்னகையுடன் கேக்கை கட் பண்ணி அபூர்வாவிற்கு ஊட்டிவிட, “விஷ் யூ ஹாப்பி பர்த்டே சாரு” என்றாள்.

அவன் அதையெல்லாம் வேடிக்கைப் பார்த்தபடி அமைதியாக இருக்க, “சாரு கேக் கட் பண்ணி சாருக்கு கொடு” என்றவள் வேண்டும்மென்று கூறவே அபூர்வாவை முறைத்தவன்,

“இல்ல சிஸ்டர் எனக்கு  ஐஸ்கிரீம் கேக் பிடிக்காது” அவன் மறுத்துவிட,

“இது சாக்லேட் கேக் தான். இந்த பக்கி என்னிடம் விளையாடுவதற்காக ஐஸ்கிரீம் கேக் ஆர்டர் பண்ணி அலம்பல் பண்ணிட்டு இருந்தா” என்ற சாரு உள்ளே நடந்ததை அவனிடம் கூறினாள்.

அபூர்வா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “ஒரு நிமிஷம்” என்றவன் எழுந்து செல்ல, ‘ஹப்பா போயிட்டான்’ என்ற எண்ணத்துடன் பெருமூச்சுடன் நிமிர சாருவின் பார்வை தன்னை துளைத்தேடுப்பதை கண்டு, “என்னடி” என்றாள்

“ஆதி உனக்கு யாரு” என்று கேட்க, “நான் வேலை செய்யும் கம்பெனி ஓனர்” என்றாள் வரவழைக்கப்பட்ட சாதாரணமான குரலில்.

சாரு பலமுறை அபூர்வாவிடம் கேட்டு இருக்கிறாள். என்ன காரணத்திற்காக அத்தனை உறவுகளை விட்துவிட்டு வந்து இங்கே கஷ்டப்படுகிறாய் என்று!

அப்போதெல்லாம் ஏதோவொரு காரணத்தை சொல்லி அவளின் வாயடைத்து விடுவாள். அந்த விசயத்தில் அவள் அப்படியே ரோஹித் போல இருந்தாள். யாரிடமும் போய் தன்னை பற்றி  சொல்லி ஆறுதல் தேடவில்லை. அவளுக்கு தெரியும் என்றாவது ஒருநாள் தன் காதல் கை சேருமென்று!

அந்த நாளை எதிர்பார்த்து காத்திருந்த அபூர்வாவிற்கு சாருவின் இந்த  கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவளிடம் சொல்வதென்றால் அனைத்தையும் சொல்ல வேண்டும் என்ற தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.

முன்னைவிட தீர்க்கமாக சாரு அவளை நோக்கிட, ‘இவ நான் சொன்னதை நம்பவே இல்லையா’ நினைத்தாள் தவிப்புடன்.

‘உன்னை நானறிவேன்’ என்ற பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவள் தடுமாறுவதைக் கண்டு, “உனக்கு இருக்கும் சொத்துகள் கணக்குக்கு நீ ஏன் இவ்வளவு தூரம் வந்து கஷ்டப்பட வேண்டும் என்று பலநாள் நானே யோசிச்சு இருக்கேன். இப்போ ஆதியை பார்க்கும்போது தெளிவா ஒரு விஷயம்  புரியுது” என்றவள் பாதியில் நிறுத்திட சட்டென்று நிமிர்ந்து சாருவைப் பார்த்தாள் அபூர்வா.

“காதல்” என்ற ஒரு வார்த்தையில் அவள் மௌனமாகிவிட, “எத்தனை  வருஷமாக அவரை காதலிக்கிற” என்று கேட்க, “நாங்க எப்போ காதலிச்சோம்” என்று அவளிடம் மறுப்பாக பேசும்போது கைநீட்டி தடுத்தாள் சாரு.

அவளுக்கு ஏனோ அபூர்வா மறைப்பதை நினைத்து மனதிற்குள் பாரமாக இருந்தது. இங்கே ஒருத்தன் இவளின் நினைவில் செல்வதையும், இவளோ எல்லாம் தெரியும் மெளனமாக இருப்பதைக்கண்டு அவளுக்கு தலைவலித்தது.

“நீ இங்கே வந்த நாளில் இருந்து பார்க்கிறேன் அபூர்வா. மற்றவங்களை ஏமாற்றுவது போல என்னை நீ ஏமாற்ற முடியாது.” என்றவள், “முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணுக்கு பர்த்டே விஷ் பண்ண ஒரு நிறுவனத்தின் முதலாளி நேரில் வருவதுக்கு சாதாரண விஷயம் இல்ல.” என்றாள்.  

அதற்குள் அங்கே வந்த ஆதி, “இந்தாங்க சாரு ஒரு சின்ன கிப்ட்” என்றான்.

“எதுக்கு சார் இதெல்லாம்” என்று சொல்லியபடி அவள் அதை வாங்கிக்கொள்ள, “அபூர்வா இது உனக்கு” என்றான் கிப்ட்டை அவளிடம் நீட்டிட அவளோ அவனை கோபத்துடன் முறைத்தாள்.

அவளின் பார்வையில் சீற்றத்தை கண்டு, “சாரு இவளிடம் என்னைப்பற்றி விசாரிச்சீங்களா” சாருவின் முகத்தை பார்த்தான்.

“இல்ல சார்” என்றாள் தோழியை முறைத்தபடி.

இருவரும் இயல்பாக இல்லை என்பதை உணர்ந்தவன், “சாரு தப்பா நினைக்காதீங்க நான் இவளிடம் கொஞ்சம் பேசணும்..” என்றதும் அவள் எழுந்து செல்ல நினைக்க, “நீங்க இருங்க” என்று சொல்லிவிட்டு அபூர்வாவின் அருகே சேரை இழுத்துபோட்டு அமர்ந்தான்.

“நான் ரேவதியை காதலிக்கல. அவ ஏதோ உளறினால் நீயும் அதை உண்மைன்னு நம்பிவீயா” என்றான் ஆழ்ந்த குரலில்.

அவனின் பேச்சில் அவளின் கோபம் தலைக்கு ஏற, “நான் உங்களிடம் விளக்கமே கேட்கல ஸார். நீங்களா வந்தீங்க என் தோழிக்கு விஷ் பண்ணீங்க. எங்களோட பார்ட்டியை செலிபிரேட் பண்ணீங்க அப்படியே கிளம்ப வேண்டியதுதானே” என்று சீற்றத்தை உள்ளடக்கிய குரலில் மெல்லிய குரலில் அழுத்தமாக கூறியவளை என்ன செய்வதென்று தெரியாமல் பைத்தியம் பிடிப்பதுபோல இருந்தது ஆதிக்கு.

சாரு இருவருக்கும் தனிமை கொடுத்து விலகிசெல்ல, “அபூர்வா நான் சொன்ன கேட்கக்கூடாதுன்னு முடிவு பண்ணி இருக்கிறாயா” அவன் குரலை உயர்த்த சட்டென்று நிமிர்ந்தாள்.

“இந்த குரலை உயர்த்தின மட்டும் பொய் உண்மைன்னு யாரும் சொல்ல போவதில்லை. சோ நீங்க கிளம்பலாம்” என்ற அபூர்வா தன் கைப்பை எடுத்துகொண்டு அவன் கொடுத்த கிப்ட்டை அவனின் பக்கம் நகர்த்தியவள்,

“உங்களோட கவிதைகள், காதல் பார்வைகள், சின்ன சின்ன பரிசு பொருட்களுக்கு மயங்கிய அந்த அபூர்வா இப்போது இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு அவள் அங்கிருந்து வேகமாக் சென்றுவிட்டாள். அவளின் வேகமான நடையே சொன்னது அவனின் கேட்க அவளுக்கு மனமில்லை என்று!

அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்த ஆதியின் அருகே சென்ற சாருமதி, “என்ன அண்ணா அண்ணி கோபத்துடன் போறாங்க” என்று வருத்ததுடன் கேட்ட தங்கையை நிமிர்ந்து பார்த்தான்.

“விடு சாரு. அவளோட தவிப்பு அவளுக்குதானே தெரியும்” தங்கையை தோளோடு சேர்த்து அணைத்துக்கொள்ள, “என்ன அண்ணா அக்கா மட்டும் தான் உன்னோட தோளில் சாயணுமா? நான் சாய கூடாதா?” என்ற குரல் வந்த திசையை திரும்பி பார்க்க அங்கே புன்னகையுடன் வந்தாள் சிந்துஜா.    

“வா சிந்து” என்று சாரு புன்னகைக்க, “விஷ் யூ ஹாப்பி பர்த்டே அக்கா” என்று பூங்கொத்தை அவளின் கரங்களில் கொடுத்தவள், “என்னன்னா அண்ணி செம கோபத்தில் போறாங்க போல” என்று கிண்டலோடு தமையனை ஏறிட்டாள் சின்னவள்.

“நீ வந்ததும் உன் வேலையைத் தொடங்கிவிட்டாயா” அவளின் தலையில் செல்லமாக தட்டினான் ஆதி.

அவனின் மறுப்பக்க தோளில் சாய்ந்த சிந்து, “அம்மா, அப்பா இருவரும் இருந்தும்கூட அவங்க எங்களை ஒழுங்கா வளர்க்க நினைக்கல. நீ மட்டும் ஏன் அண்ணா எங்களை இவ்வளவு பாத்திரமாக பார்த்துக்கிற” என்று கேட்டாள் சின்ன தங்கை.

“நம்மள பெத்தவருக்கு நம்ம மேல் அக்கறை இல்ல சிந்து. நான் ஆண் பிள்ளை எங்கே எப்படி போனாலும் யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க. ஆனா நீங்க இருவரும் பெண் பிள்ளைகள் இல்லையா? உங்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளாமல் பணத்தின் பின்னாடி சுத்தும் அவரை நினைக்கும்போது” என்றவன் பல்லைக் கடித்தான்.

ஜெகன்நாதன் – மேனகாவின் திருமண வாழ்க்கைக்கு பரிசாக சாருவும், சிந்துவும் பிறந்தனர். அவர்களை கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டிய பெற்றவர்கள் பணத்தின் பின்னாடி போனதன் பலனாக பெரியவள் சாருமதி மைசூரில் படிப்பை முடித்தாள்.

சின்னவள் சென்னையில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு மேல் படிப்பில் சேர்ந்த ஒரு வருடத்தில் சாருவிற்கு கொல்கத்தாவின் வேலை கிடைக்க தமக்கையுடன் கொல்கத்தா வந்துவிட்டாள்.சிந்து அங்கிருந்த  ஹாஸ்டலில் தாங்கி கல்லூரி படிப்பை தொடர, சாரு லேடிஸ் ஹாஸ்டலில் தங்கி தான் வேலைக்கு செல்ல தொடங்கினாள்.

பெற்றவர்கள் அவர்களை சரியாக வளர்க்காதபோது தங்களுக்குள் கட்டுப்பாட்டை விதித்துக்கொண்டு அதன் வழியாக சமுதாயத்தில் பயணிக்க தொடங்கினர். ஒரு முறை சிந்துவிற்கு அடிபட்டபோது உடனிருந்து பார்த்துக் கொண்ட ஆதி மருத்துவமனை பில் கட்டும்போது தான் அடிபட்டு படுத்திருப்பவள் தன் தங்கை என்ற உண்மையே அவனுக்கு தெரிய வந்தது.

சிந்துவின் மூலமாக சாருவின் அறிமுகமும் ஆதிக்கு கிடைக்க இருவரும் தன்னுடைய தங்கைகள் என்று உணர்ந்தான். இதுநாள் வரை தனியாக வளர்ந்த ஆதிக்கு உடன்பிறப்பு என்று சொல்ல ஆள் இல்லாதபோதும் இருவரும் தன்னைவிட மோசமான நிலையில் தாய் தந்தையின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்ததையும் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டவன் அன்றிலிருந்து அவர்களை தன் தங்கையாக நினைக்க தொடங்கினான்.

அதேநேரத்தில் சின்னத்தில் இருந்து பாசத்தையே கண்டு அறிந்திடாத சாரு, சிந்து இருவருக்கும் ஆதியின் வருகை சந்தோசத்தை கொடுத்தது. ஆதிக்கு தந்தையின் மீது கடலளவு கோபம் இருந்தாலும் தங்கைகளிடம் அதை வெளிகாட்டாமல் நடந்து கொண்டான். அந்த பாசம் தான் அவர்களை ஒரு கூட்டு பறவைகளாக மாற்றியது.

அந்த சமயத்தில் தான் ஆதியும், அபூர்வாவும் அன்று ஜவுளி கடையில் எடுத்த புகைப்படத்தை பார்த்த சாரு, “இவங்க யாரு அண்ணா” என்று கேட்டாள்.

“உன்னோட அண்ணி” என்று சொல்லவும், “வாவ் எவ்வளவு அழகாக இருக்காங்க இல்ல” என்றாள் சிந்து போட்டோவை பார்த்தபடி.   அன்றிலிருந்து ரேவதியை கண்டாலே சிந்துவிற்கு பிடிக்காமல் போனது.    

அந்த நேரத்தில் தான் அபூர்வா கொல்கத்தா வந்து சேர சாரு தங்கி வேலையும் செய்யும் ஹாஸ்டலில் வந்து சேர்ந்தாள். இந்த உண்மை அண்ணனுக்கு தெரியுமோ என்னவோ என்ற சந்தேகத்தில் இருந்த சாருவோ நேரடி சந்திப்பு நிகழ்ந்தால் நல்லதே என்று நினைத்து அபூர்வாவை சந்தித்த விஷயத்தை அண்ணனிடம் மறைத்தாள்.

ஆதி அவளை சந்தித்தபிறகு தங்கை தங்கியிருக்கும் அதே ஹாஸ்டல் என்றவுடன், ‘சாரு நீயும் கவனமாக இரு. அவளையும் கொஞ்சம் பார்த்துக்கோ’ என்று தங்கையின் கரங்களில் பொறுப்பை ஒப்படைத்தான்.

இவர்கள் மூவரும் தங்களை யாரிடமும் வெளிபடுத்தி கொள்ளாமல் இருக்க ஒரே காரணம் ஜெகன் மட்டுமே. தான் செய்த தவறை அவர் உணர்ந்தால் மட்டுமே தங்களின் ஒற்றுமையை வெளிபடுத்துவது என்ற எண்ணத்தில் இருந்தனர்.

மூவரின் மனமும் எங்கெங்கோ சுற்றி வர செல்போன் சிணுங்கி அவர்களின் கவனத்தை ஈர்த்தது.