idhayam – 26

அத்தியாயம் – 26

அவர்கள் அனைவரும் மனமில்லாமல் அங்கிருந்து சென்றதும் ராகவ்வின் அறைக்கு சென்று பார்த்தாள் அபூர்வா. கை கால்களில் கட்டுடன் இருந்த தம்பியின் தலையை கோதிவிட்டாள். அவளின் விரல் ஸ்பரிசத்தில் கண்விழித்தான்.

அவளை பார்த்த மறுநிமிடமே, “அக்கா நீங்க எப்படி வந்தீங்க” என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

“ஏன்டா அக்கா வரமாட்டேன்னு நீயே முடிவு பண்ணிட்டியா” தம்பியிடம் வம்பு வளர்த்தாள் பெரியவள்.

“இல்ல அவ்வளவு தூரத்திலிருந்து இங்கே வருவேன்னு நினைக்கல அக்கா” தயக்கத்துடன் இழுத்தான். கொல்கத்தாவில் இருந்து அவ்வளவு சீக்கிரம் வரமாட்டாள் என்ற எண்ணம் அவனுக்குள் இருந்ததால் அவளிடம் சந்தேகத்தைக் கேட்டான்.

“எனக்கு என் குடும்பம் தான் முக்கியம். அதுக்கு பிறகுதான் மற்றவர்கள் எல்லாமே” என்று சிரித்தபடி கூறிய அபூர்வா, ‘எந்த நேரமும் சிரித்த முகமாக இருக்கும் நீயாடா இங்கே வந்து படுத்து இருக்கிற’ என்று நினைத்தவளுக்கு மனம் வலித்தது.

“என் செல்லக்கா” என்று கொஞ்சிய ராகவின் பேச்சு அவளின் மனதிற்கு இதமாக இருந்தது. சிறிதுநேரம் அவனோடு  பேசிவிட்டு வெளியே வந்தாள். அதே நேரத்தில் இப்போது வரை கண்விழிக்காமல் இருக்கும் ரக்சியை நினைத்து மனம் கனத்துப் போனது அபூர்வாவிற்கு!

இந்த வயதில் இதெல்லாம் அனுபவிக்கும் நிலை ஏன் வந்தது என்று நினைத்தவளின் கண்களில் கண்ணீர் பெருகியது.

அவள் அறையைவிட்டு வெளியே வந்து சேரில் அமர மகளின் அருகே வந்தமர்ந்த ரோஹித், “அபூர்வா” என்றழைத்தார்.

“அப்பா” என்று நிமிர்ந்தவளின் கண்கள் கலங்கி சிவந்திருக்க, “ஏன்மா அழுகிற? எல்லாமே சரியாக போய்விடும்” என்ற வாக்கியம் மனதை என்னவோ செய்தது.

“கொல்கத்தா வாழ்க்கை எல்லாம் எப்படி போகுது? உனக்கு ஊர் எல்லாம் பிடிச்சிருக்கா” அவளின் வருத்தத்தை போக்க நினைத்து பேச்சை மாற்றினார் ரோஹித்.

அவர் பேச்சை திசை திருப்புவது புரிய, “ம்ம் நல்ல போகுதுப்பா” ஏதோ நினைத்தபடி சலிப்புடன் கூறினாள்.

“என்ன இவ்வளவு சோர்வாக சொல்ற? ஆதியை பார்த்தியா? இப்போ எங்கே இருக்காருன்னு ஏதாவது தகவல் தெரிந்ததா?” என்று மெல்ல மகளிடம் விசாரிக்க அவளோ மௌனம் சாதித்தாள்.

சிலநிமிடங்கள் அமைதியில் கழிய, “நான் ஆதியை பார்க்கலப்பா. என்னால அவரைக் கண்டுபிடிக்க முடியல” அவள் வேண்டுமென்றே சலிப்புடன் கூறிவதுபோல உண்மையை மறைக்க நினைக்கும்போது சக்தி அங்கே வந்தான்.

அபூர்வாவிடம் இப்படியொரு பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை. ஆதியின் நிறுவனத்தில் தான் அக்கா வேலை செய்கிறாள் என்ற உண்மை அவனுக்கு தெரியும். இப்போது அவள் சொன்ன பொய்யில் அவனின் மனம் குழம்பியது.

“சரிம்மா நீ சீக்கிரமே அவரை தேடி கண்டுபிடி” என்றவர் டாக்டரை சந்திக்க எழுந்து சென்றவுடன் அபூர்வாவின் செல்போன் சிணுங்கியது. ‘பிரைவேட் நம்பர்’ என்று வரவும் அவளின் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது.

அதை பார்த்தபடி சக்தி அவளின் அருகே வரவே, “ஹலோ” என்றாள்.

“என்ன அபூர்வா எப்படி இருக்கிற” என்று மறுபக்கமிருந்து கேட்டது ஒரு பெண்ணின் குரல். அந்த குரலை கேட்டவுடன் ஷாக் அடித்ததுபோல நிமிர்ந்தாள் பெண்ணவள். அவளின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளை படிக்க முடியாமல் தடுமாறினான் சக்தி.

நிமிடத்தில் தன்னை சமாளித்துக்கொண்டு, “நீங்க இன்னும் திருந்தவே இல்லையா?” அவளின் கேலி சிரிப்பில் மறுப்பக்கம் அமைதி நிலவியது.

“என்ன அமைதியாகிட்டீங்க? இப்போ நான் ஆதி கன்ஸ்ட்ரக்ஷன்ல வேலை செய்கிற விஷயம் தெரிஞ்சதும் என் தம்பியையும், மாமன் மகளையும் அடிச்சு ஹாஸ்பிட்டலில் படுக்க வெச்சிட்டேன்னு சொல்ல போன் பண்ணீங்களா?” என்றாள் குரலில் கிண்டலோடு.

அவளின் பேச்சில் இருந்தே தன்னுடைய லீலையை கண்டு கொண்டாள் என்று உணர்ந்த பெண்ணோ, “ம்ம் பரவல்ல நீ புத்திசாலிதான். சரியாக கண்டுபிடிச்சிட்ட..” என்று பாராட்டியது அந்த குரல்.

“தேங்க்ஸ்.. உங்களை மாதிரி சிலரின் கழுகு பார்வையில் நான் சிக்கி இருக்கிறேன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோசமாக இருக்கு” என்று சொல்லி மேலும் கோபத்தை தூண்டிவிட்டாள். யாரிடமோ தமக்கை பேசுவது புரிந்தாலும் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்று புரியாமல் நின்றிருந்தான் சக்தி.

“ம்ம் ஆதியை உன்னிடமிருந்து பிரித்தபிறகும் நீ இன்னும் தைரியமாகத்தான் இருக்கிற” என்று குரல்கேட்டு தன்னை மீறி சிரித்தாள் அபூர்வா.

“நீங்க திட்டம் போட்டது உண்மைதான். என்னை ஆதி பிரிந்து சென்றதும் உண்மைதான். இதுக்கு இடையில் ஐந்து வருட பிரிவில் எல்லாமே மாறிவிடும் என்று நீங்க கணக்குபோட்டது ரொம்ப தப்பு. உங்க வீட்டுக்கு மருமகளாக நான் வரக்கூடாதுன்னு நீங்க எல்லாமே பண்ணினீங்க. ஆனால் நான்தான் ஆதிக்கு மனைவியாக வருவேன்னு ஆதி ஜாதகம் சொல்லுதே” என்றவள் எந்த இடத்திலும் மகன் என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை.

ஆதி என்றதும் சக்திக்கு எதோ புரிவதுபோல இருக்க அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று உன்னிப்பாக கவனிக்க தொடங்கினான்.

“நான் உன்னை ஆதியிடம் இருந்து பிரிப்பேன்” கர்வத்துடன் ஒலித்தது அந்த குரல்.

“அதெல்லாம் முடியாது மேனகா அத்தை. நான் இன்னைக்கு மட்டும் இல்ல என்னைக்குமே உண்மையை சொல்ல மாட்டேன். ஆனால் ஆதி அமைதியாக இருப்பாருன்னு நினைக்காதீங்க. அவருக்கு உண்மை தெரிஞ்சால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. உங்களுக்கு தான் அத்தை ஆபத்து..” சிரித்தபடியே மிரட்டியவள் தொடர்ந்து,

“ஆதியை அன்பால் மட்டும்தான் கட்டிபோட முடியும். அவரை நானும் அன்பென்ற கயிறால் கட்டி வெச்சிருக்கேன். என் கழுத்தில் மூன்று முடிச்சு விழுகாமல் போனால் அந்த அன்பு முடிச்சை அவிழ்க்க முடியும்னு தப்பா கணக்கு போடாதீங்க. அவரோட மனதை யாராலும் மற்ற முடியாது” என்ற அபூர்வாவின் குரல் கர்வத்துடன் ஒழிக்க சக்தியோ திருதிருவென்று விழித்தான்.

மறுப்பக்கம் பலத்த அமைதி நிலவிட, “உங்களால் முடிந்ததை பாருங்கள். அப்புறம் ஒரு விஷயம் என்னோட விளையாடுவதாக நினைச்சு என் குடும்பத்தின் மீது கைவைக்க நினைக்காதீங்க அது உங்களுக்கு நல்லது இல்ல. நீங்க பார்த்த அபூர்வா வேற இப்போ இருக்கிற அபூர்வா வேற” என்று திருப்தியுடன் பேசிவிட்டு போனை வைத்தாள்.

அதுவரை அவள் பேசிய விஷயங்களைப் பொறுமையாக கேட்ட சக்தி அவளின் எதிரே வந்து நின்றான். தான் முன்னே நிழலாட கண்டு அவள் சட்டென்று நிமிர்ந்த அபூர்வா அவனை கேள்வியுடன் நோக்கினாள்.

 “அக்கா இந்நேரம் வரை யாரிடம் பேசிட்டு இருந்த?” என்று சிந்தனையோடு கேட்ட தம்பியை முறைத்தாள் பெரியவள்.

“என்னை எதுக்கு அக்கா முறைக்கிற?” அவன் எரிந்து விழுக, “பின்ன காதல் என்று பின்னாடியே சுத்திய பெண்ணை கொண்டுவந்து ஹாஸ்பிட்டலில் படுக்க வெச்சிருக்கும் உன்னை என்ன செய்யலாம்” சாமர்த்தியமாக ரக்சிதாவை இடையில் இழுக்க சக்தி கேட்க வந்ததை  மறந்துவிட்டு தலைக்குனிந்து நின்றான்.

அவனின் கலங்கிய தோற்றமே தம்பியின் மனதை அவளுக்கு படம்பிடித்து காட்டிவிடவே, “சக்தி இங்கே வா” என்று அவனை அருகே இருந்த இருக்கையை காட்டிட அவனும் அமைதியாக அமர்ந்தான். அவனின் தவிப்பை உணர்ந்து அவனின் கரங்களைப் பிடித்து அழுத்தம் கொடுத்தாள் அபூர்வா.

“ஒருத்தங்க நம்மள சுத்தி சுத்தி வராங்கன்னா அது பஸ்ஸ்டாப் காதல் இல்லடா. அதுவும் நம்ம ரக்சிதா அப்படிட்ட பொண்ணு இல்ல. உண்மையான காதலுக்கு இலக்கணமே வேறு தெரியுமா?” இதமான குரலில் எடுத்துக் கூறிய அபூர்வாவின் முகம் கனிந்திருந்தது.

அவளின் குரலில் இருந்த மாற்றத்தை உணர்ந்த சக்தி அவளை நிமிர்ந்து பார்க்க, “ரக்சிதாவை உனக்கு சின்னதில் இருந்து தெரியும் இல்ல. அவளோட சின்ன சின்ன தேவையை கூட தெளிவாக தெரிந்து வைத்திருக்கும் நீ ஏன் அவளோட மனசை புரிஞ்சிக்க முயற்சி பண்ணல?” அவனின் மீது பார்வை பதித்தபடி பொறுமையாக கேட்டாள்.

அவன் மௌனம் சாதிக்கவே அவளின் பொறுமை காற்றில் பறந்துவிட, “பார்க்கின்ற பொண்ணுங்கள் மீதெல்லாம் காதல் வராது சக்தி. சில பெண்கள் நம்மள சுத்தி சுத்தி வந்தாலும் பசங்க மனசு அவளை ஒதுக்கும். நூற்றில் ஒன்றோ இரண்டிக்கு மட்டும் தூரத்தி துரத்தி காதலிக்கும் காதலில் வெற்றி கிடைக்கும். நேசிப்பதை விட நேசிக்கபடுவது தனி சுகம்” என்று ஆழ்ந்த குரலில் கூறிய அபூர்வாவை இமைக்காமல் நோக்கினான் சக்தி.

அதற்குள் அறையிலிருந்து வெளியே வந்த நர்ஸ் ரக்சிதா கண்விழித்து விட்டதாக சொல்லவே, “நீ முதலில் போய் அவளை பார்த்துட்டு வா” என்று தம்பியை அனுப்பி வைத்தாள்.

அவன் தயக்கத்துடன் தமக்கையை பார்த்தபடி அந்த அறைக்குள் நுழைந்தான் சக்தி. எப்போதும் புன்னகை வாடாத மலராக வலம்வரும் பெண்ணோ இன்று அறுத்துபோட்ட கொடிபோல கிடப்பதைக் கண்டு அவனுக்கு மனம் வலித்தது.

மெல்ல அவளின் அருகே சென்று, “ரக்சிதா” என்ற குரல் அவளின் இதயத்தின் அடி ஆழம் வரை ஊடுருவிச் சென்றது. அவள் இமை சிப்பி திறந்துகொள்ள எதிரே நின்றவனைக் கண்டு சிரமத்துடன் புன்னகைக்க முயன்றாள்.

அவளின் தலையை வருடிய சக்தி, “ஏண்டி கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம் இல்ல” என்றான் வருத்தத்துடன்.

“உங்களை விட்டுட்டு அவ்வளவு சீக்கிரம் போக மாட்டேன் மாமா” வலியையோடு கண்களில் நீர் கோர்க்க சொன்னவளின் கரத்தைபிடித்து நெஞ்சோடு வைத்துக் கொண்டவன், “நீயே இனிமேல் போகணும்னு நினைச்சாலும் நான் உன்னை போக விடமாட்டேன் ரக்சி. உன்னோடு வாழ்ந்து பார்க்கணும்” என்று கூறியவனின் காதல் கை சேர்ந்துவிட்ட சந்தோசத்தில் இறைவனுக்கு நன்றி கூறினாள்.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்திட எல்லோரும் ரக்சிதா கண்விழித்த சந்தோஷத்தில் இருந்தனர். அபூர்வா வந்ததில் இருந்து ஹாஸ்பிட்டலில் இருப்பதைக் கவனித்த ரஞ்சித், “நீ வீட்டிற்கு போய் ரெஸ்ட் எடும்மா” என்று அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்கு வந்த அபூர்வா குளித்துவிட்டு பால்கனியில் சென்று அமர்ந்தாள். கொல்கத்தாவிற்கு சென்றபிறகு நடந்த விசயங்களை எண்ணி பார்த்தபடி சிந்தனையோடு அமர்ந்திருந்தவளுக்கு ஆதியின் மனம் புரிந்ததாலும் தான் வாய்திறந்து சொல்ல முடியாத நிலையில் இருப்பதை நினைத்து  பார்த்தாள்.

கடைசியாக சாரு பிறந்தநாளை நினைத்ததும், ‘சித்தி பொண்ணுக்கு வந்து விஷ் பண்றான். அடுத்து சிந்துவும் அங்கே பக்கத்தில் தான் இருக்கிற. இதற்கு பிறகும் நம்ம சொல்ல வருவதை ஆதி புரிஞ்சிக்குவாரா?’ என்ற எண்ணத்துடன் இருள் சூழ்ந்த வானத்தையே பார்த்தாள்.

மேனகா இருந்த இடத்தில் இருந்தபடி ஆதியின் அப்பா மற்றும் இரண்டு மகள்கள் எல்லோரையும் ஒன்றிணைத்ததை நினைக்கும்போது மனம் துவண்டுபோனது. அவளை எதிர்த்து தன்னால் எதுவும் பண்ண முடியவில்லையே என்ற எண்ணமே அவளை நிம்மதியிழக்க செய்தது.

அது மட்டும் இல்லாமல் ரேவதியின் காதல் வேறு அவளின் மனதை குழப்பிவிட, ‘நானாக வாய்திறந்து இது நடந்தது என்று சொல்ல மாட்டேன். என்னோட காதல் உண்மைன்னா ஆதிதான் என்னை புரிஞ்சிக்கணும்’ என்று முடிவெடுத்தாள்.

அதன்பிறகு தன் லேப்டாப் எடுத்து வந்த அபூர்வா வேகமாக திட்டமிட்ட செயல்களை நிறைவேற்ற தொடங்கினாள். முதல் கட்டமாக தன்னோட சீனியர் பிரணவ்விற்கு அழைத்து பேசிவிட்டு ஒரு முடிவை எடுத்தாள்.

மற்றவர்கள் ராகவ் – ரக்சிதா குணமாகும் வரை அங்கேயே இருப்பது என்று முடிவெடுத்த அபூர்வா தன் லீவ் லெட்டரை நிறுவனத்திற்கு அனுப்பிவிட்டு கிடைத்த நேரத்தில் கன்ஸ்ட்ரக்ஷன் தொடங்கும்  வேலையில் மும்பரமாக இறங்கினாள்.

அவளின் இந்த வேகத்தைக் கண்ட மதுமிதா, “என்ன திடீரென்று இதெல்லாம் பண்ணிட்டு இருக்கிற” என்று கேட்டதற்கு, “சில நேரத்தில் மனம் குழம்பாமல் இருக்க நம்மள பிசியாக வெச்சுக்கணும் அம்மா” புதிர் போட்ட மகளை சந்தேகமாக பார்த்து வைத்தார்.

கிட்டதட்ட ஒரு  மாதம் அவள் இந்த வேலையில் தீவிரமாக இருக்க இன்னொருபுறம் ஆதிக்கு அபூர்வா இல்லாமல் பைத்தியம் பிடிப்பது போலவே இருந்தது. அவளுக்கு அவன் அடிக்கடி அழைத்துப் பார்த்தான். ஆனால் அவள் போனை எடுக்கவில்லை. சக்தியிடம் கேட்கலாம் என்றாலும் அவனும் போனை எடுக்காமல் இருந்தான்.

நாட்கள் தான் வேகமாக சென்றதே தவிர மதுரையில் என்ன நடக்கிறதென்று யாருக்குமே புரியவில்லை. ரக்சிதா பிழைத்துவிட்ட சந்தோசத்தில் சக்தி தமக்கையின் நடவடிக்கைகளை கவனிக்க மறந்தான். அபூர்வா ஆதியின் அழைப்புகளை மட்டும் எடுக்கவில்லை என்ற எண்ணத்தில் அவனிருக்க சாருவின் அழைப்பையும் தவிர்த்தாள்.

ஆரம்பமும் புரியாமல் அதற்கான முடிவும் தெரியாமல் குழப்பத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தவனின் முகம் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்ட மஞ்சுளா அவனின் அருகே வந்து அமர்ந்தார்.

“என்ன ஆதி ரொம்ப டென்ஷனாக இருக்கிற மாதிரி இருக்கு” அவனின் தலையை வருடியபடி மகனை பாசத்துடன் பார்த்தார்.

“ம்ம் கொஞ்சநாளாக சில விஷயங்கள் புரியலம்மா” என்ற மகனை அவர் கேள்வியாக நோக்கிட, “உனக்கு என்னடா குழப்பம்” என்று கேட்டார்.

தந்தை வீட்டில் இல்லை என்பதால் தாயிடம் பேசுவது தவறில்லை என்ற எண்ணத்தில் அவனும் அபூர்வாவை சந்தித்த நாளில் இருந்து நடந்த அனைத்தையும் தாயிடம் கூறிவிட்டு, “இப்போ ஐந்து வருடம் படிப்பு முடிஞ்சி என்னை  தேடி இங்கே வரை வந்து நிற்கிற அம்மா. அவளோட காதல் பொய் இல்ல. அப்புறம் எதுக்காக அன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல அப்படி எழுதி வாங்கினா?” என்று அவரிடம் கேட்டான்.

அவரிடம் பேசிய பிறகு அவனின் மனம் லேசாக இருக்க மகன் சொன்னதைகேட்டு திகைப்புடன் ஏறிட்ட மஞ்சுளா, “இத்தனை விஷயம் எனக்கு தெரியாமல் நடந்திருக்கு?” என்று கோபப்பட்ட தாயிக்கு மகனின் நிலை புரிந்தது.

“நீயும் அவளும் உயிருக்கு உயிராக நேசித்து இருக்கும்போது அவ ஏன் அப்படி பண்ணினா? அதுவும் இல்லாமல் தவறே இல்லாத உன்மேல் அவங்க தாத்தா ஏன் உன்மேல் கேஸ் கொடுக்கணும்?” என்று அவரும் குழம்பினார்.

நிஜமாகவே தாய் கேட்ட ஒரு கேள்விக்கு விடையை அவள் நேரில் வந்து நிரூபித்து காட்டிவிட்டதால் அன்றைய கேஸ் பற்றிய விஷயம் அவனின் மனதை உறுத்தியது. நம் மனதில் ஒரு விஷயம் உறுத்தினால் அதுக்கான தீர்வை சீக்கிரமே கண்டிபிடிக்க வேண்டும்.

அதை தகுந்த நேரத்தில் செய்யாமல் விட்டுவிட்டால் பல பிரிவுகளை சந்திக்க நேரிடம். அந்த உண்மையை உணர்ந்த ஆதியும் இடையில் யார் என்ன செய்திருப்பார்கள் என்று சிந்திக்க தொடங்கிவிட்டான்.

அப்போது வீட்டிற்குள் நுழைந்த ஜெகன்நாதன், “நீ அமைதியாக இரு மேனகா. ஆதியின் திருமணம் உன் விருப்பப்படிதான் நடக்கும். கண்டிப்பாக அந்த பொண்ணு உனக்கு மருமகளாக வரமாட்டாள்.” என்றதும் ஆதி சட்டென்று நிமிர்ந்தான்.