idhayam – 27

அத்தியாயம் – 27

அதே நேரத்தில் தன் மகனின் திருமண விஷயத்தை கணவன் அவருடைய இரண்டாவது மனைவியிடம் பேசுவதைக் கேட்டதும் மஞ்சுளாவின் மனம் குழம்பியது. இத்தனை நாள் தன் கணவனின் மீது அவருக்கு வராத சந்தேகம் இன்று அவரின் மீது எழுந்தது.

அப்பாவின் இரண்டாவது மனைவிக்கும் எனக்கும் என்ன தொடர்பு? இவர் எதற்க்காக என்னோட திருமணத்தைப் பற்றி அவரிடம் பேச வேண்டும். அவர் பேசுவதை வைத்து பார்க்கும்போது அது ஏன் அபூர்வாவாக இருக்க கூடாது என்ற எண்ணம் அவனின் மனதில் எழுத்து.

“என்ன ஆதி நடக்குது இங்கே? நீ நான் பெற்ற மகன்தானே? அப்புறம் எதுக்கு உங்க அப்பா காரணமே இல்லாமல் இந்த விஷயத்தை மேனகாவிடம் பேசுகிறார்” என்று புரியாமல் குழப்பத்துடன் கணவனை கேள்வியாக நோக்கினார்.

ஆதி ஹாலில் அமர்ந்திருப்பதைக் கவனித்த ஜெகனின் முகத்தில் அதிர்ச்சி, திகைப்பு என்று பலவகையான உணர்வுகளை பிரதிபலித்தது. அவரின் முகம் நொடிக்குநொடி மாறுவதை வைத்தே ஆதிக்கு ஏதோ புரிவதுபோல இருந்தது.

அதே நேரத்தில் மகனின் பார்வை தன் மீது படிவத்தை உணர்ந்த ஜெகன், ‘இவனோட சந்தோஷம் நமக்கு முக்கியம்னு நினைச்சா இந்த மேனகாவிற்கு அவளின் சுயநலம் முக்கியமாக தெரியுது. அவளுக்கு நல்லவனாகவும் இருக்க முடியல. பெத்த பிள்ளைக்கு எதிரியாக இருக்கவும் முடியல’ என்று தனக்குள் புலம்பியபடி அவரின் அறைக்குள் சென்று மறைந்தார்.

அவரின் நடவடிக்கைகள் வித்தியாசமாக தெரியவே மஞ்சுளாவின் பார்வை கணவரைப் பின்தொடர்ந்தது. தன்னருகே சிந்தனையோடு அமர்ந்திருந்த மகனை கேள்வியுடன் நோக்கிய மஞ்சுளாவின் மனமோ படபடவென்று அடித்துக்கொண்டது.

“ஆதி..” ஆழ்ந்த குரலில் அழைக்க சட்டென்று நிமிர்ந்து தாயின் முகத்தைக் கேள்வியாக ஏறிட்டான் மகன்.

“உங்க அப்பா என் வாழ்க்கையில் விளையாடியதோடு நிற்காமல் உன் வாழ்க்கையையும் சேர்த்து அழிக்க நினைக்கிறார். உனக்கும் அபூர்வாவிற்கும் இடையே வந்த பிரிவுக்கு பின்னாடி உங்கப்பா இருப்பாரோன்னு தோணுது. நீ முதலில் இருந்து யோசி எங்கோ தவறு நடந்திருக்கு ஆதி” என்று கூறிவிட்டு எழுந்து சென்றார்.

அவனுக்கும் அந்த சந்தேகம் வரவே, ‘இந்த விஷயம் அபூர்வாவிற்கு தெரியாமல் இருக்காது. எதுவாக இருந்தாலும் அவ வந்தபிறகு அவளிடம் ஒரு முறை கேட்டு பார்க்கலாம். அவ உண்மையை சொல்லாமல் இருந்தா அடுத்து என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்.’ என்ற முடிவிற்கு வந்தான்.

அந்த முடிவு எடுத்தபிறகு அவனின் மனம் லேசாக இருப்பதுபோல தோன்றவே மற்ற வேலைகளில் தன் கவனத்தை திருப்பிவிட்டான். நாட்கள் அதன் போக்கில் சென்று மறைய அபூர்வா வரும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தான் ஆதி.

அபூர்வா தன் வேலைகளை முழுவதுமாக முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். ரோஹித் – மதுமிதா இருவரும் மகளின் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டே இருந்தனர். ராகவ் – ரக்சிதா இருவரும் குணமடைந்து பழையபடி கல்லூரிக்கு செல்ல துவங்கினர்.

எல்லோரும் வீட்டின் தோட்டத்தில் அமர்ந்து பேசுவதை கவனித்த அபூர்வா, “அம்மா” என்று பின்னலிருந்து தாயின் கழுத்தைக் கட்டிக்கொள்ள, “என்ன இன்னைக்கு கொஞ்சல் எல்லாமே பலமாக இருக்கு” என்று மகளைக் கிண்டலடித்தார்.

“என்னம்மா பாசமாக வந்து பேசினால் இப்படி சொல்றீங்க” என்று சிணுங்கிய அபூர்வா தந்தையின் அருகே அமர்ந்தவள் முகத்தை தூக்கி வைத்து கொண்டாள்.

அதை பார்த்து மற்றவர்கள் சிரிக்க, “நாளைக்கு கொல்கத்தா போறேன் அம்மா” என்றாள் மகள் மெல்லிய குரலில்.

“என்ன திடீரென்று கிளம்பற” என்று ரஞ்சித் எதுவும் அறியாதவர்போல கேட்க, “எடுத்த லீவ் முடிஞ்சிது மாமா. அதன் கிளம்பறேன்” என்றாள் சாதாரணமாக.

தங்கள் முன்னே இருக்கும் அபூர்வா எங்கே என்ன செய்கிறாள் என்ற அணைத்து விஷயமும் அறிந்த பெரியவர்கள் தங்களுக்குள் பார்வையை பரிமாறிக்கொண்டனர்.

“அபூர்வா ஒரு விஷயம் தெளிவாக தெரிஞ்சுக்கோ..” என்ற ஜீவாவை அவள் கேள்வியாக நோக்கிட, “நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைம்மா. இது உன்னோட வாழ்க்கை” என்று அவர் எச்சரிக்கை கூறினார்.

அவர் சொல்ல வரும் விஷயம் புரிந்துகொண்ட மகளோ மெளனமாக புன்னகை சிந்த, “நீ நேர்மையான வழியில் போம்மா. தவறாக இருந்தால் தட்டி கேளு தவறில்லை. எங்கே போனாலும் வெற்றியுடன் வரணும் அதை மட்டும் மனசில் வைத்துக்கொள்” என்று ரோஹித் தன் பங்கிற்கு கூற அவளும் தலையசைத்தாள்.

“உனக்கு பின்னாடி உன் குடும்பம் நாங்க இருக்கோம்” என்று ரஞ்சித் கூற அவளின் கண்கள் கலங்கிட, “ஷ் கண்ணா என்ன இது குழந்தைமாதிரி” என்று மகளை கடிந்துகொண்டு கலங்கிய கண்களை துடைத்துவிட்டாள் மதுமிதா.

மறுநாள் தன் குடும்பத்திடம் இருந்து விடைபெற்று கொல்கத்தா வந்து சேர்ந்தாள்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு பிறகு அபூர்வாவைப் பார்த்தும் சாருவிற்கு கோபம் தலைக்கு ஏறிவிட, “எந்த விசயமும் சொல்லாமல் கிளம்பி போன ஏதோ அவசரம் சரி. ஆனால் போன் பண்ணினா அதை கூட எடுக்க முடியாதா?” என்று எரிந்து விழவே அவளின் பேச்சில் இருந்த உண்மை அபூர்வாவை சுட்டது.

அவளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று மனம் ஏங்கினாலும் அதை சொல்ல முடியாத சூழ்நிலையில் நான் இருக்கிறாய் என்று தன்னை சுதாரித்து கொண்டாள் பெண்ணவள்.

“என்னடி நான் கேட்கிறேன் நீ அமைதியாக இருக்கிற” சாரு அவளிடம் எரிந்து விழுகவே, “இல்லடி போன் எடுக்க முடியாத சூழல்” என்பதோடு பேச்சுக்கு முற்றிபுள்ளி வைத்துவிட்டு வேலைக்கு கிளம்பிவிட்டாள்.

ஆதி கம்பெனி உள்ளே நுழையும்போது அபூர்வாவின் பேச்சுக்குரல் வாசல் வரை கேட்கவே, ‘ஊரிலிருந்து வந்துவிட்டாளா’ என்ற கேள்வியுடன் அவன் பார்வையை சுழற்றிட அவளின் விழிகளில் விழுந்தாள்.

கிட்டதட்ட இரண்டு மாதங்கள் இடைவெளிக்கு பிறகு காதலியை சந்தித்த சந்தோஷத்தில் ஆதி அவளிடம் பேச வரவே அவளோ பேசாமல் ஒதுங்கிப் போனாள். அவளின் நடவடிக்கையில் வித்தியாசமாக இருக்கவே அவன் பெருமூச்சுடன் தன் கேபினுக்குள் சென்று மறைந்தான். அன்று மட்டும் இல்லாமல் ஒவ்வொரு நாளும் அவனை தவிர்ப்பதை தன் முக்கியமான வேலையாக வைத்திருந்தாள் அபூர்வா.

அவள் தன்னோடு பேசாத கோபத்தில் இருந்த ஆதியும், ‘எனக்கும் ஒரு நேரம் வரும் அப்போ இருக்கு’ என்று நினைத்துக் கொண்டான். ஆனால் அந்த வாய்ப்பு அவனுக்கு மறுநாளே கிடைக்குமென்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

அபூர்வா அவன் கேட்டது போல பல டிசைனில் வீடுகளை வரைந்து வந்து அவனிடம் கொடுத்தாள்.

அதில் அவள் ஒரு தவறு செய்ததைக் கண்டுபிடித்த ஆதி, “இங்கே பாருங்க அபூர்வா நீங்க டைம் வேஸ்ட் பண்ண நான் உங்களுக்கு வேலை கொடுக்கல. ஐந்து வருஷம் படிச்சிட்டுதானே வேலைக்கு வந்திருக்கீங்க. அதை ஒழுங்கா செய்தால் என்னவாம்” என்ற ஆதி அவள் வரைந்த பேப்பரை அவளின் மூஞ்சியில் தூக்கி எறிந்துவிட்டு முக்கியமான மீட்டிங் கிளம்பிச் சென்றுவிட்டான்.

இத்தனை நாளாக பேசாமல் இருந்ததற்கு தண்டனை என்று அவளும் உணர்ந்தாள். ஆனால் அவன் கூறிய வார்த்தைகளை அவளின் மூளை ஏற்றுகொள்ள மறுக்கவே வேலையில் கவனத்தை திருப்பினாள்.

அவன் மீண்டும் வரும்போது இரவு எட்டுமணியைத தாண்டி இருக்க அலுவலகமே காலியாக இருந்தது. அபூர்வா மட்டும் கேபினில் அமர்ந்து வேளையில் மும்பரமாக இருப்பதைப் பார்த்தும், ‘இவ இந்நேரம் கிளம்பி இருக்கணுமே. இன்னும் போகாமல் இங்கே என்ன பண்ற?’ மனதில் எழுந்த கேள்வியுடன் அவளின் கேபினுக்கு சென்றான்.

அவன் கொடுத்த குறிப்புகளை வைத்து ஒரு அழகான வீட்டின் வடிவமைப்பை முடித்துவிட்டு நிமிர்ந்தவளின் எதிரே நின்றிருந்தான் ஆதி கோபத்துடன்.

“ஆதி இந்த டிசைன் ஓகேவா” என்றாள் புன்னகையுடன்.

“இன்னும் நீ ஹாஸ்டல் கிளம்பாமல் இங்கே என்ன பண்ற” என்று எரிந்து விழுந்தவனின் முகபாவனைகள் சொல்லாமல் சொன்னது அவனின் கோபத்தைப் பற்றி.

“நான் எல்லாம் படிச்சிட்டு தான் வந்தேனா என்ற சந்தேகம் உனக்கு வந்துச்சு இல்ல. அதன் என்னோட வேலையை முடிச்சு கொடுத்துட்டு போலாம்னு அமைதியாக இருந்தேன்” என்றவள் அனைத்து வேலையும் முடித்துவிட்டு தான் ஹென்பேக்கை கையில் எடுக்கும்போது கால் இரண்டிலும் வலி அதிகரித்தது.

அவள் வலியைப் பல்லைக்கடித்து பொறுத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியேறினாள். அவள் மெல்ல நடப்பதைக் கண்டு கேள்வியாக புருவம் உயர்த்திய ஆதி, ‘ஏன் இவளோட முகம் களையிழந்து போயிருக்கு’ என்ற சிந்தனையுடன் அவளை பின்தொடர்ந்தான்.

அவர்கள் இருவரும் வெளியே வரவும் ஆபீஸ் பூட்டியதும் மெல்ல நடந்து மெயின் ரோட்டிற்கு வந்தாள். அவள் எவ்வளவோ சமாளித்தும் முடியாமல் போக கண்கள் கலங்கிட அங்கிருந்த ஒரு வீட்டின் முன்னே இருந்த படியில் அமர்ந்தாள்.

அவளை பின்தொடர்ந்து மெல்ல காரில் வந்த ஆதிக்கு அவளின் செயல்கள் அனைத்தும் சந்தேகத்தை கொடுக்க சட்டென்று செல்லை எடுத்து தேதியைப் பார்த்தான். அவள் எதனால் இப்படி அமர்ந்திருக்கிறாள் என்ற உண்மை நொடியில் விளங்கியது.

காரை  ஓரமாக நிறுத்திவிட்டு அவளின் அருகே வந்தவன், “அபூர்வா என்னோட வா நான் ஹாஸ்டலில் டிராப் பண்றேன்” என்றான்.

அவள் அமைதியாக அமர்ந்திருக்க, “அபூர்வா உனக்கு நான் சொல்ல வருவது புரியுதா? நேரம் ஆகா ஆகா பெயின் அதிகமாகும்டி” பல்லைக் கடித்துக்கொண்டு கூறினான்.

அபூர்வா வலியுடன் நிமிர்ந்து அவனைப் பார்க்க, “நம்ம சண்டையை இதில் கொண்டு வராதே. நீ முதலில் வா”அவளின் கையைப்பிடித்து எழுப்பிய ஆதி காரின் முன் கதவைத்திறந்து அவளை அமர வைத்துவிட்டு மறுப்பக்கம் வந்து காரை எடுத்தான்.

அபூர்வா மெளனமாக வரவே, “ரொம்ப பெயினா இருக்கா?” என்று மெல்லியகுரலில் கேட்டு அவளின் கரங்களைப்பற்றி அழுத்தம் கொடுத்தான்.

அவளின் விரல் ஸ்பரிசத்தில் நிமிர்ந்து அவனைப் பார்த்தவளோ, ‘இன்னும் நீ இதை மறக்கவே இல்லையா’ என்று பார்வையால் அவனிடம் பேசினாள்.

அவனோ, ‘உன்னோட சின்ன கண்ணசைவில் தெரியும் உன் தேவை. எனக்கு தெரியாதா உன்னைப் பற்றி?’ என்றவன் காரை நிறுத்திவிட்டு மெடிக்கல் சென்று அவளுக்கு தேவையானதை வாங்கிட்டு வந்து கொடுத்தான்.

அபூர்வாவிற்கு அது பீரியஸ்ட் டைம். என்னதான் வேகமாக வேலை என்று சொல்லி ஊரைவிட்டு ஊர் வந்தாலும் இருபத்தி எட்டு நாட்களுக்கு ஒரு முறை பெண்கள் அனுபவிக்கும் இந்த வலியை ஆண்கள் பலர் உணர்வதில்லை.

அந்த நேரத்தில் தேவையே இல்லாமல் கோபம் வரும். தன் மனதில் இருக்கும் எரிச்சலை மறைக்க முடியாமல் மற்றவர்களிடம் வேண்டும் என்றே எரிந்து விழுவார்கள். அதுவும் அபூர்வா மாதிரி பெண்களுக்கு சில மாதங்களுக்கு ஒரு முறை வலி கொஞ்சம் அதிகமாக இருக்கும்.

அதெல்லாம் சமாளித்துக்கொண்டு வேலைக்கு சென்ற இடத்தில் வலியுடன் சேர்த்து வேலைகளில் ஏற்படும் கவனக்குறைவால் தவறு செய்துவிட்டு மேலதிகாரியிடம் திட்டு வாங்கும்போது மனதிற்குள் வரும் ஒரு எரிச்சல் இன்னதென்று சொல்ல முடியாது.

‘இனிமேல் வாழ்ந்து எதை சாதிக்க போகிறோம்’ என்ற கேள்வி எழுந்து கண்களில் கண்ணீர் தேங்கும் நேரம் வலி உச்சக்கட்டத்தில் இருக்கும். அவர்களின் உடல் ஓய்விற்கு ஏங்கினாலும் லீவ் இல்லாமல் தடுமாறியபடியே அந்த நாட்களை கடத்துவது தான் பெண்களின் பெரிய வலியே!

“நீ எடுத்துட்டு வந்தீயா என்று தெரியலடி” என்று சொல்லி அவன் அவளிடம் கொடுத்தான். தன்னுடைய பார்வையில் இருந்த வலியை கண்டு செயல்படும் அவனின் மீது கோபத்தைக் காட்ட முடியாமல் அவளின் கண்கள் கலங்கியது.

“ஷ்.. அபூர்வா” என்று அவளை தோளோடு சேர்த்து அணைத்தவன்,

“இரண்டு நாள் லீவ் போட்டு ரெஸ்ட் எடுத்துக்கோ. நான் மற்ற வேலைகளை கவனித்துக் கொள்கிறேன் சரியா? காலையில் நான் திட்டும்போது ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே” அவளின் மனநிலை உணர்ந்து காரை எடுத்தான்.

அவனின் தோளில் சாய்ந்தவள் சத்தமில்லாமல் கண்ணீர் வடிக்க, “ரொம்ப வலிக்குதா?” என்று அக்கறையுடன் கேட்டவனிடம் உண்மையை மறைக்க முடியாமல் வலியுடன் தலையசைத்தாள்.

காரை சாலையின் ஓரம் நிறுத்தியவன், “என்னம்மா இவ்வளவு முடியாதபோது எதுக்கு வேலைக்கு வந்த? லீவ் சொல்லிட்டு ஹாஸ்டலில் இருந்திருக்கலாம் இல்ல” என்று மனம் தாளாமல் கேட்டுவிட்டான்.

“நான் வேலைக்கு வந்தவள் தானே? அப்புறம் எப்படி லீவ் எடுக்க முடியும்” மனதில் நினைத்தை யோசிக்காமல் அவள் நொடியில் பேசிவிட, “நீ என்னை என்ன நினைச்சிட்டு இருக்கிற” என்று கோபத்துடன் அவளிடம் காட்ட வாய்திறந்தவன் ஸ்டேரிங்கை குத்திவிட்டு வெளியே திரும்பிக்கொண்டான்.

அவனின் குரலில் தவிப்பை உணர்ந்தபோதும், “என்னை வேண்டும் என்றுதானே வேலைக்கு கொல்கத்தா வரையில் வரவெச்ச?” என்று கோபத்துடன் அவள் கேட்டுவிட்டான்.

“போதும் இதுக்குமேல் எதுவும் பேசாதே. அப்புறம் வர கோபத்துக்கு வண்டியிலிருந்து இறக்கி விட்டுட்டு இப்படியே போயிருவேன்” என்றவன் சொல்லிவிட்டு அவளை விலகிவிட்டு காரை எடுத்தான்.

அவள் தன்னை தவறாக நினைத்திருப்பதை நினைத்த மறுகணம் மனம் வலிக்க, “ஏண்டி என்மேல் உனக்கு நம்பிக்கையே வராதா? ஏண்டி தெரிஞ்சே என்னை நோகடிக்கிற?” என்று கோபத்தை அடக்கிய குரலில் கேட்டபடி ஹாஸ்டலின் முன்னாடி காரை நிறுத்த அவள் இறங்கிச் சென்றாள்.

அதன்பிறகு வந்த நாட்களில் அபூர்வாவிடம் இயல்பாக பேசுவதை கூட தவிர்த்துவிட்டான் ஆதி. அவள்தான் முக்கியமென்று போகும் ஒவ்வொரு நொடியும் தன்னை தவிர்ப்பது உணர்ந்து விலகி நின்றுவிட்டான்.

அவனின் பக்கமிருக்கும் நியாயம் உணர்ந்து அவளும் பொறுமையாக இருந்தாள். ஆனால் அவனை விலகிசெல்ல வேண்டிய நேரத்தை எதிர்பார்த்தாள். அவள் அங்கே தொடங்கிய விஷயம் அனைத்தும் அப்படியே நின்றிருந்தது.

அது மட்டும் இல்லாமல் ஆதி ரேவதிக்கு என்ன பதில் கொடுக்க போகிறான் என்ற கேள்வி அவளின் நிம்மதியை ஒவ்வொரு நாளும் கெடுத்தது. இடைபட்ட காலத்தில் அவனுக்கு உறுதுணையாக இருந்த ரேவதியை அவன் உதறிவிட மாட்டான் என்று அவளுக்கு புரிந்தாலும் கூட மனம் அந்த விஷயத்தை ஏற்க மறுத்தது.

அவனின் காதல் தனக்கு மட்டுமே வேண்டும் என்று நினைத்த அபூர்வா, ‘ஆதியை ரேவதியும் காதலிக்கிறாள். அவளுக்கு அவன் ஒரு முடிவை சொல்லட்டும். அப்புறம் அவனை தேடி கொல்கத்தா வந்த விஷயத்தை சொல்லலாம்.’ என்ற முடிவிற்கு வந்தாள்.

ஆனால் அது நாளையே வரும் என்ற விஷயமும், அவனைவிட்டு விலகி செல்ல போகிறோம் என்ற உண்மையறியாத பேதைமனம் மற்ற வேலைகளைக் கவனிக்க சென்றது.