megathootham11

                  மேகதூதம் 11

 

 “இன்னிக்கு ப்ரோக்ராம் என்ன?”

“சார் இப்போ மணி பதினொன்னு. நீங்க இன்னிக்கு மினிஸ்டர் கூட பன்னிரண்டு மணிக்கு லஞ்ச் சாப்பிட்டு, அப்புறம் ஒரு மணிக்கு பிசினெஸ்  கான்பெரென்ஸ் அட்டென்ட் பண்றீங்க. ஈவினிங் போர்ட் மெம்பர்ஸ் வராங்க. அவங்க கூட உங்களுக்கு டிஸ்கஷன். டின்னெர் அங்கேயே முடிச்சுட்டு நம்ம சேம்பர்க்கு வரோம்.” வழக்கம் போல தொழிலதிபர் பாண்டியனுக்கு அவருடைய காரியதரிசி அஷோக் அன்றைய நிகழ்ச்சிகளை பட்டியலிட்டுக் கொண்டிருந்தான்.

“ஓகே. இன்னிக்கு ஈவினிங் டிஸ்கஷன் முடிஞ்சதும் என்கூட நீ டின்னர் சாபிடற. உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும். ஓகே. நான் முதல்ல போறேன். நீ பின்னாடி வா.” எப்போதும் போல கோட் சூட் அணிந்து கம்பீரமாக அவரின் காரை நோக்கிச் சென்றார்.

அஷோக் அவரை மிகவும் மதிப்பவன். கடந்த ஆறு ஆண்டுகளாக அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருப்பவன்.

பாண்டியனை அவனது ரோல் மாடலாக நினைத்திருப்பவன். அவரைப் போலவே தானும் ஒரு நாள் இப்படி சமூகத்தின் மதிப்பைப் பெற்று வாழவேண்டும் என்று நினைத்துக் கொள்வான்.

வயது ஐம்பதிலும் உடலையும் மனதையும் திடமாக வைத்திருப்பவர். யாரிடமும் வேலையைத் தவிர வேறு எதற்காகவும் நின்று பேசாதவர்.

இதுவரை அவருக்குக் குடும்பம் யார் என்ன என்று அவனுக்குத் தெரியாது. வேலை வேலை..அது மட்டுமே அவரது குறிக்கோள்.

ஒரு பணக்காரரிடம் கணக்கராக பணியாற்றியவர், அவருடைய நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவருக்குப் பின் அவருடைய மொத்த தொழிலையும் இப்போது எடுத்து நடத்தி வருகிறார். கடந்த பத்து வருடத்தில் டெல்லியில் உள்ள முதல் ஐந்து தொழிலதிபர்களில் இவரும் ஒருவர். அரசியல் தலைவர்களும் இவரிடம் நட்புக் கரம் நீட்டினர்.

இவருடைய திறமையால் அந்தப் பணக்காரரின் சொத்து மதிப்பை மூன்று மடங்கு அதிகப் படுத்தி வைத்திருக்கிறார்.

அவருடைய குடும்பத்திற்கு அவரின் பங்கை அளித்துவிட்டு இப்போது தன்னுடைய திறமையால் சேத்த சொத்துக்களையும் தொழிலையும் கவனித்துக் கொண்டிருக்கிறார். தனிக்கட்டை.

முக்கியமாக யாரையும் நம்பாதவர். மிகவும் சாமர்த்தியசாலி. புத்திசாலித்தனம் இவரின் சொத்து என்று கூட சொல்லலாம்.

தினமும் அதிகாலையில் எழுந்து ஜாக்கிங் செய்துவிட்டு யோகா செய்ய அமருவார்.

அந்த நேரம் மட்டும் அவரின் கண்களில் இருந்து கண்ணீர் பெருகுவதை அஷோக் கண்டிருக்கிறான்.

‘இத்தனை பெரிய மனிதர் எதற்காக கண் கலங்க வேண்டும். யாரும் இல்லாத இவருக்கு அப்படி என்ன கஷ்டம் இருந்துவிடப் போகிறது. இவருக்கு ஐம்பது வயது என்று அவரே சொன்னால் தான் தெரியும். இப்போதும் கூட்டத்தில் சென்றால், இவரை கண் இமைக்காமல் பார்க்கும் பெண்களைக் கண்டிருக்கிறான். வேண்டுமென்றால் ஒருத்திய மணம்முடித்துக் கூட வாழ்வை ஆரம்பிக்கலாம்.அப்படியிருக்க இவருக்கு என்ன சோகமோ!’ இது அஷோக்கிடம் ஏற்படும் விடை தெரியா கேள்விகள்.

அவரின் அன்றைய பொழுது பரபரப்பாக முடிய, அஷோக்கை டின்னரில் சந்தித்தார்.

“சார் டின்னர் ரெடி” வேலையாள் வந்து சொல்ல, இருவரும் சென்றனர்.

தனியாக ஒரு அறையில் ஒரு நீண்ட டேபிள் போடப்பட்டு அதில் பலவிதமான நாடுகளின் பிரசித்தி பெற்ற உணவுகள் தயாரிக்கப் பட்டு அழகிய கிண்ணங்களில் வைக்கப் பட்டிருந்தது.

அஷோக் அவரின் எதிரே உள்ள சேரில் அமர்ந்து கொள்ள, வேலையாள் வந்து இருவருக்கும் தட்டில் பரிமாரிவிட்டுச் சென்றான்.

“சாப்பிடு அஷோக்” சிறு தலையசைப்புடன் கூற,

அஷோக்கும் அமோதித்து அந்த சில்வர் ஸ்பூனை கையில் எடுத்து உணவை சுவைக்க ஆரம்பித்தான்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், ஒரு முடிவுடன் பேச ஆரம்பித்தார்.

“அஷோக். உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.அதுக்குத் தான் வர சொன்னேன்.”

“சொல்லுங்க சார்” சாப்பிடுவதை நிறுத்திவிட்டுக் கேட்டான் அஷோக்.

“சாப்டு. சாப்பிட்டுகிட்டே பேசலாம். நீ என் பையன் மாதிரி.சாப்பாட்டை பாதிலேயே நிறுத்தாத.” இத்தனை நாளில் இப்படி ஒரு வார்த்தையை பாண்டியன் கூறியதே இல்லை.

‘பையனா!’ அவனுக்கு அவர் என்ன கூறப் போகிறார் என ஒன்றும் பிடிபடவில்லை.

சிறு தலையசைப்புடன் சாப்பிட்டுக் கொண்டே அவரைப் பார்த்தான்.

“என்ன விஷயம் சார்.?” மெதுவாகக் கேட்க,

“நான் என்னோட வாழ்க்கைல கிடச்ச சந்தோஷத்த தொலைச்சவன். சில பேருக்கு மிகப் பெரிய துரோகம் செஞ்சுட்டேன். அதை இப்போ சரி செய்யணும்னு நெனைக்கறேன். இப்போ கூட நான் அதை பண்ணலைனா நான் வாழற வாழ்க்கையே ப்ரோயோஜனம் இல்லை. அதுனால என்னோட வேலைகளை கொஞ்ச நாளைக்கு  தான் கவனிச்சுக்கணும்.” அலட்டிக் கொள்ளாமல் தந்தூரி சிக்கனை ருசித்துக் கொண்டே சொன்னார்.

அஷோக்கிற்கு அவர் கூறியதைக் கேட்டதும் மேற்கொண்டு எதுவும் உள்ளே செல்ல மறுத்தது.

“சார், நீங்களா? எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நீங்க யாருக்கும் கெடுதல் செஞ்சு நான் பார்க்கல.அப்படி இருக்கறப்ப நீங்க ஒருத்தருக்கு துரோகம்…! சும்மா விளையாடாதீங்க சார். என் திறமைய டெஸ்ட் பண்ண இப்படி ஒரு ப்ளானா” சற்று சகஜமாகவே அஷோக் கேட்க,

“இல்ல அஷோக். என்னை ஒரு ஆறு வருஷமா தான் உனக்குத் தெரியும். அதுக்கு முன்னாடி என்னோட லைஃப் பத்தி உனக்குத் தெரியாது.

நான் இந்த டெல்லிக்கு வந்து பதினாறு வருஷம் ஆகுது. என்னோட குடும்பத்தை கஷ்டப் படுத்தி நான் பிரிஞ்சு வந்துட்டேன். அவங்க இப்போ என்ன நிலைமைல இருக்காங்கன்னு கூட எனக்குத் தெரியாது. அந்த வயசுல பணம் சம்பாதிக்கணும்னு ஒரு வெறி. என்னோட முன்னேற்றத்துக்கு குடும்பம் ஒரு தடையா இருந்திடக் கூடாதுன்னு முட்டாள்தனமா யோசிச்சேன்.

பாரபட்சமே இல்லாம என்னோட ரெண்டு குழந்தைங்களையும் என் மனைவியையும் நிற்கதியா விட்டுட்டு எதுவும் சொல்லாம பிரிஞ்சு வந்துட்டேன்.

இப்போ கொஞ்ச நாளா மறுபடியும் ஏதோ நல்ல புத்தி வந்திருக்கு. அப்போ நான் எடுத்த  முடிவை நினச்சா எனக்கே ரொம்ப அசிங்கமா இருக்கு. இவ்வளவு பணம் பேர் சம்பாதிச்சு என்ன ஆகப் போகுது? அந்த சந்தோஷத்தை பகிர்ந்துக்க சொந்தமில்ல. நிம்மதி இல்ல. இனி என்னோட கடைசி காலத்துல யார்கிட்ட என்னோட சுக துக்கத்தை நான் ஷேர் பண்றது.

அதான் என்னோட குடும்பத்துகிட்ட மன்னிப்புக் கேட்டு, அவங்க மறுபடியும் என்னை ஏத்துப்பாங்களான்னு போய் கேட்கப் போறேன்.

என் குழந்தைங்களோட சின்ன வயச கண்டிப்பா நான் மிஸ் பண்றேன். என் மனைவி தைரியனமானவ தான்.அவங்க இப்போ கண்டிப்பா பெரியாளாகி ஒரு நல்ல நிலைமைல தான் இருப்பாங்க. ஆனா இதுக்கு அப்பறமும் அவங்கள நான் இழக்க விரும்பல.

அதுனால நான் அங்க எல்லாம் சரி செஞ்சு திரும்பற வரைக்கும்  இங்க நீ தான் எல்லாத்தையும் பார்த்துக்கணும். எனக்காக நீ இத செய்வியா?” பாண்டியனின் விளக்கம் அஷோக்கை சற்றே அசைத்துப் பார்த்தது.

இப்படி ஒரு பின்புலத்தை அவன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.

 

“சார் என்ன நீங்க என்கிட்ட இப்படி கேட்கலாமா? ஆர்டர் பண்ணுங்க சார் நான் பாத்துகறேன். நீங்க சம்பாதிக்க உங்க குடும்பத்தை பிரிஞ்சு வந்திருந்தாலும், நீங்க எந்த ஒரு….” சற்று சொல்லத் தயங்கினான்.

“எந்த பொண்ணையும் பார்க்கலன்னு சொல்லவரியா..” சிரித்துக் கொண்டே கேட்டார்.

“சாரி சார். அதைத் தான் சொல்ல நினச்சேன். இப்போ கூட நீங்க ரொம்ப ஹேண்ட்ஸம்மா இருக்கீங்க. அப்படி இருந்தும் நீங்க எந்தத் தப்பும் செய்யாம உங்க மனைவிக்கு துரோகம் செய்யல. அதுனால கண்டிப்பா அவங்க உங்கள புரிஞ்சுப்பாங்க.நீங்க தைரியமா போங்க சார். அவங்கள பத்தின டீடைல் கலக்ட் பண்ணவா சார்” அவனுடைய அக்கறை வெளிப்பட்டது.

“ம்ம்.. அதைத் தான் சொல்ல வந்தேன். சீக்கிரம் தெரியும். உனக்கு இன்னொன்னும் சொல்றேன் அஷோக். வேற ஒரு பெண்ணை பார்க்கறது ஒரு மனைவிக்கு செய்யற துரோகம் தான். ஆனா அவள பிள்ளைகளோட தனியா விடறதும் அதை விட பெரிய துரோகம். அதுக்கான பிராயச்சித்தம் கண்டிப்பா நான் செய்யணும்.” வெற்றுப் புன்னகை வெளிவந்தது. அவருடைய மனதை அழுத்தும் விஷயத்தை இன்று சற்று வெளியே சொன்னதில் பாரம் குறைந்தது.

“ஆமா சார். ஆனா நீங்க கவலைப் படாதீங்க. ஆன்ட்டி உங்களைப் பார்த்ததும் கண்டிப்பா ஏத்துப்பாங்க.” பாண்டியனுடைய தோரனையை வைத்து அவன் கூற,

பண்டியன்னுகும் அதில் சிரிப்பு வந்தது.

“இதுல இன்னொரு விஷயமும் இருக்கு.” ஸ்டைலாக உணவை உண்டு கொண்டே பாண்டியன் சொன்னார்.

“என்ன சார்?”

“உனக்கும் என்னோட இடத்துக்கு வரணும்னு ஆசை இருக்குன்னு எனக்குத் தெரியும். சோ இது நீ தனியா எல்லாத்தையும் கத்துக்க ஒரு நல்ல வாய்பு. அம் ஐ ரைட்?” நேராக அவனைப் பார்த்து கிடுக்குப்பிடி போட்டார்.

“சார்….” ஸ்தம்பித்து விட்டான் அஷோக்.

“டோன்ட் வொரி… இந்த வயசுல இந்தத் துடிப்பு இல்லனா எப்படி! கத்துக்கோ.. அண்ட் நான் கூடவே இருக்கேன். எப்போ என்ன ஹெல்ப் வேணாலும் கேளு.” எழுந்துகொண்டார்.

பாண்டியனை அவரது வீட்டில் விட்டு அவனும் கிளம்பினான்.

மறுநாள் முழுவதும் அவனுக்கு பாண்டியனின் குடும்பத்தை சல்லடை போட்டு கண்டுபிடிக்கும் வேலை தான். அங்ககே ஆட்களை ஏற்பாடு செய்து அன்று இரவே அனைத்தையும் சேகரித்தான்.

காமாட்சியும் பிரபுவும் சென்னையிலும் அஞ்சலி கனடாவிலும் இருப்பதாக பாண்டியனுக்கு மறுநாளே ரிப்போர்ட் கொடுத்தான்.

அவர்களின் இப்போதைய போட்டோ முதற்கொண்டு. உபயம் பிரபுவின் இன்ஸ்டாகிராம்.

பாண்டியனுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு தன்னுடைய குடும்பத்தைக் கண்டத்தில் கண்ணில் நீர் திரையிட்டது.

இதற்காகத் தான் இத்தனை நாளும் அவர்களைப் பற்றித் தேடும் பலம் இருந்தும் அதைச் செய்யாமல் இருந்தார்.

ஒரு முறை கண்டாலும் மனம் ஏங்கும் என உணர்ந்திருந்தார். ஆனால் இம்முறை அந்த ஆசையை அடக்கி வைக்கும் அவசியமில்லை.

அடுத்த இரண்டு நாட்களில் சென்னையில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கியிருந்தார்.

***

“அஞ்சு… கெட் ரெடி… இன்னிக்கு எனக்கு வேலை இருக்கு. ரெண்டு பெரும் சேர்ந்தே கிளம்பலாம்.” குளித்துக் கொண்டிருந்த அஞ்சலியை வேண்டுமென்றே துரிதப் படுத்தினான்.

அவளோ அவன் மற்றொரு அறையில் இருந்து கிளம்பி வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு அவசரமாக பதில் தந்தாள்.

“ஹே ரிஷி. நீ அதுக்குள்ள கிளம்பிட்டியா..? பைவ் மினிட்ஸ்…இப்போ தான் குளிக்கறேன்” உள்ளிருந்தே குரல் கொடுத்தாள்.

ஐ அம் ரெடி.. சீக்கிரம். ப்ரெட் டோஸ்ட் பண்ணி வைக்கறேன் வா.” சொல்லிவிட்டு அவள் மெத்தையில் படுத்துத் தூங்க ஆரம்பித்தான்.

அஞ்சலி அவன் வீட்டில் தங்க சம்மத்திதாலும் தனித் தனி அறையில் தான் இருக்க வேண்டும் என ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டிருந்தாள்.

இரவு தூங்கும் வரை அவளோடு பேசிக் கொண்டே இருப்பவன், அவளை படுக்க வைத்துவிட்டுத் தான் தன் அறைக்குச் செல்வான்.

அவள் வந்ததிலிருந்து இரண்டு நாட்கள் ஆகியும் அவளையும் போகவிடாமல் தானும் ஆபிசுக்குப் போகாமல் அவளோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான்.

இன்று தான் இருவரும் பேசி ஒன்றாகக் கிளம்பலாம் என்று முடிவெடுத்திருக்க, அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க எண்ணி இருந்தான்.

அவள் அவசரமாக வெளியே வர, ரிஷி விசிலடித்தபடி அவளை வரவேற்றான். முழங்கால் வரையுள்ள நைட் கவுன் போட்டுக்கொண்டு நின்றவள், ரிஷி இன்னும் பல் கூட விளக்காத கோலத்தில் கண்டதும் சற்று கடுப்பானாள்.

“ யூ சீட்டர்..ஏன் இப்படி பொய் சொன்னீங்க. இன்னும் கொஞ்ச நேரம் நிம்மதியா குளிச்சுட்டு வந்திருப்பேன்ல” என முகத்தைத் தூக்க,

“ம்ம்ம்…உன்கிட்ட பெட் கிஸ் வாங்கலான்னு வந்தேன் பேப். அதுக்குள்ள நீ குளிக்க போய்ட்ட..”அவளது அருகில் வந்து ஈரக் கூந்தலில் முகம் புரட்டி அவளைக் கூச்ச மூட்டினான்.

“போதும்..நீங்க போய் கிளம்புங்க…”அவனை விலக்க நினைத்து மார்பில் கைவைத்துத் தள்ள,

“நீ தரலனா என்ன நான் தரேன்..” அவளது கழுத்துவளைவில் முத்தம் வைத்தே விலகினான்.

“டென் மினிட்ஸ்.” என அங்கிருந்து ஓடினான்.

அவன் சென்றதும் சிரித்துக் கொண்டே உடை மாற்றச் சென்றாள். அவளது மெத்தையில் அவளுக்கென அவன் வாங்கி வைத்திருந்த புதிய பீச்(peach) நிற பென்சில் ஸ்கர்ட்டும் அதற்குரிய டாப்சும் இருந்தது.

“முதல் பரிசு” என அதன் அட்டையில் எழுதி வைத்திருந்தான்.

ஆசையோடு அதைக் கையில் எடுத்துப் பார்த்தாள். ‘இதுக்குத் தான் அவசரப் படுத்தி வரவெச்சானா’.

 

அதை அணிந்து கொண்டு அதற்கு ஏற்ற ப்ரேஸ்லெட் மற்றும் காதனியோடு, தலையை அழகாக கர்ல் செய்துகொண்டாள். எளிமையான மேக்கப் போட்டு  மெழுகுச் சிலை போல வெளியே வந்தாள்.

அவளைக் கண்டு வாவ்” என்று , இதழில் இரு விரலை வைத்து  முத்தமொன்றை பறக்கவிட்டான்.

“முதல் பரிசுக்கு நன்றி” அஞ்சலி கூற,

“உன் நன்று எனக்கு வேணாம். காலைலேந்து நீ இன்னும் என்னை கிஸ் பண்ணல. சோ அதுக்கும் சேர்த்து வட்டியோட எனக்கு இன்னிக்கு நைட் வேணும்” வழக்கம் போல காபியை அவள் கையில் கொடுத்து தானும் எடுத்துக் கொண்டான்.

“என்னது வட்டியா..அதுக்கு நான் கிஸ் குடுக்கறேன்.” அவள் அவசரமாக அவனது கன்னத்தில் முத்தமிட,

“ச்சி. இதென்ன சின்ன புள்ள மாதிரி கன்னத்துல குடுக்கற..எனக்கு இதெல்லாம் பத்தாது டி பொண்டாட்டி.” முத்தமிட்ட அவள் முகத்தைப் பிடித்து அவளது லிப்ஸ்டிக்கை ருசித்து அதில் சிறிதளவு அவனுடைய இதழில் ஏற்றிக் கொண்ட பிறகே விடுவித்தான்.

“நீங்க ரொம்ப மோசம் ரிஷி.. பொண்டாட்டியா சொன்னீங்க.. அதுக்கு முன்னாடி உங்க அம்மா கிட்ட பேசணும்னு நான் சொன்னேன். இன்னிக்கு நைட் அந்த வேலைய பார்ப்போம்.” மீண்டும் தன் லிப்ஸ்டிக்கை பூசிக் கொண்ட பிறகே அவனுடன் கிளம்பினாள்.

**

“டேய் பிரபு..சண்டே டா இன்னிக்கு. போய் முடிய வெட்டிட்டு வா. எப்படி வளத்து வெச்சிருக்க பாரு.” காமாட்சி பிரபுவை விரட்டிக் கொண்டே அவனுக்குப் பிடித்த உணவை சமைத்துக் கொண்டிருக்க,

அந்த நேரம் காலிங் பெல் ஓசை கேட்டது.

“பிரபு..கதவ திற டா…” மீண்டும் காமுவின் குரல் உச்சத்தானியில் ஒலிக்க,

“அடாடாடா…சண்டே யாருப்பா வீட்டுக்கு வர்றது..” அலுத்துக் கொண்டே கதவைத் திறந்தான்.

“…அ….பா” கிட்டத் தட்ட அடையாளம் தெரிந்துகொண்டான்.

“யாருடா…” காமு பின்னால் வர…

“காமு” பாண்டியன் குரல் பல வருடங்களுக்குப் பிறகு கேட்டது.