idhayam – 36

அத்தியாயம் – 36

ஆதியை இந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு எந்த சிந்தனையும் அவளுக்கு வரவில்லை. அந்த கேஸில் இருந்து அவனை வெளியே கொண்டு வந்தால் போதும் என்று மட்டுமே தோன்றியது.

“ஸார் இவரால் என் படிப்பிற்கு பிரச்சனை வரும்னு சொல்றீங்க. இதையும் நான் யோசிக்கணும்” என்றவளின் புருவங்கள் சிந்தனையோடு சுருங்குவதை கண்டு பைரவனின் முகம் தெளிவடைந்தது. அதே நேரத்தில் என்ன சொல்ல போகிறாள் என்ற எதிர்பார்ப்புடன் அவளையே பார்த்தான் ஆதி.

பிறகு பெருமூச்சுடன் நிமிர்ந்து தாத்தாவைப் பார்த்துவிட்டு, “ஸார் என் படிப்பு முடிக்கும்வரை இவளை நான் தொந்தரவு செய்ய மாட்டேன்னு அவரிடம் எழுதி வாங்கி கொடுங்க” இந்த விஷயத்தை சொல்லும்போது அபூர்வா மறந்தும் ஆதியின் முகம் பார்க்கவில்லை.

அவளின் பதிலை எதிர்பார்த்து நின்றிருந்த ஆதியின் முகம் இருண்டுபோனது. அவள் ஒருத்திக்காக மட்டுமே என்று தன்னுடைய குணங்களை எல்லாம் மாற்றிக்கொண்டான். தன்னுடைய முடிவுகள் அவளை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாதென்று ஒவ்வொரு முறையும் கவனமாக முடிவெடுத்தை நினைத்தவனுக்கு மனம் வலித்தது.

எத்தனையோ பிரச்சனை வந்தாலும் அவளின் மடியில் தலைசாய்த்து விழி மூடினால் அத்தனை கவலையும் மறந்துபோய்விடுமே என்று அவன் மனம் அவளை தேடும்போதெல்லாம் அவளின் படிப்பை முன் நிறுத்தி தன்னை கட்டுபடுத்திக்கொண்டது அவனின் நினைவில் வந்துபோனது.

அவளின் மீது உயிரே வைத்திருந்த ஆதியின் உயிரை ஒரே நிமிடத்தில் எடுத்துவிட்டாள் அவனின்ன் உயிர் காதலி அபூர்வா.

அவனின் இதயம் சுக்குநூறாக உடைந்து சிதற முகத்தில் இளக்கம் காட்டாமல் கற்சிலைபோல நின்றிருந்தவளை பார்வையிட்டது ஆதியின் விழிகள். அவளின் முகத்தில் மருந்துக்கும் காதல் இல்லை. அவளின் கண்ணாடி முகத்தில் உணர்வுகள் துடைக்கபட்டு இருந்ததை உணர்ந்தவனின் விழிகள் லேசாக கலங்கிட அதில் அவளின் உருவம் மங்கலாக தெரிந்தது.

அபூர்வா சொன்ன மறுநொடியே, “என்னம்மா நீ இப்படி சொல்ற” என்றார் பைரவன் பதட்டத்துடன்.

“நீங்க அதை மட்டும் எழுதி வாங்குங்க ஸார். அதுக்குமேல் அவர் பிரச்சனை கொடுத்தால் நானே வந்து கம்பிளைன்ட் கொடுக்கிறேன்” என்று உறுதியாக கூறியவளின் மனமோ, ‘ஆதி என்னை மன்னிச்சிடு. உன்னைக் காப்பாற்ற எனக்கு வேற வலி தெரியல. நீ எனக்காக தண்டனை அனுபவித்து உன் திறமையை வீணடிக்க நான் விரும்பல” என்று நினைத்தவள் தாத்தாவை மட்டுமே பார்த்தாள்.

பைரவன் தன் கான்ஸ்டபிளை அழைத்து அவள் சொன்னது போலவே எழுதிகொடுக்க சொன்னார். அவரும் வேகமாக எழுதிக் கொண்டுவர, “இந்தா இதில் ஒரு சைன் பண்ணு” என்று அதிகாரமாக கூறிய பைரவனை நிமிர்ந்து பார்க்காமல் கையெழுத்துப் போட குனிய சட்டென்று திரும்பி அவனைப் பார்த்தாள் அபூர்வா.

அவனின் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல் அவள் தன்னை பார்த்தும், ‘என்மேல் நம்பிக்கை இல்லையா?’ என்று கேட்க அவள் பதில் சொல்லாமல் தலைகுனிந்தாள்.

அடுத்தநொடியே மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு கையெழுத்துப் பைரவனிடம் நீட்டினான். அபூர்வாவின் தாத்தா ஆதியின் மேல் போட்டிருந்த கேஸை வாபஸ் வாங்க அவனை வெளியே செல்ல அனுமதித்தனர். அவனிடம் எழுதி வாங்கிய பேப்பரை கையில் பிடித்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் விட்டு வெளியே வந்தாள் அபூர்வா அவனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

அவளின் பின்னோடு வெளியே வந்த ஆதி அவளை கடந்து செல்ல, “ஆதி” என்றவளை திரும்பிப் பார்க்காமல் நடக்க தொடங்கினான். அவள் ஓடிச்சென்று அவனின் வழியை மறித்து நின்று, “ஆதி நான் சொல்வதை ஒரு நிமிஷம் கேளு” என்றாள் கண்களில் கெஞ்சலோடு.

அவளை கோபமாக முறைத்த ஆதி, “நீ சொல்வதை இன்னும் என்னடி கேட்கணும்? அதுதான் போலீஸ் ஸ்டேஷன் உள்ளேயே என்னை உயிரோடு புதைச்சிட்டியே இன்னும் என்னோட பேச உனக்கு என்ன இருக்கு” என்றவனின் கண்களில் தெரிந்த வலி அவளின் மனதை பாதித்தது.

“ஆதி..” என்றவளை கரம்நீட்டி தடுத்தவன், “நான் பேசி முடித்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு தொடர்ந்தான்.

“இந்த கேஸ் மூலமாக மூணு வருஷம் என்னை உள்ளே தூக்கி வைத்திருந்தாலும் நான் சந்தோஷமாக தண்டனை அனுபவிச்சு இருப்பேன். காரணம் எல்லாம் இழந்தபிறகு உன் காதல் மட்டும் நிலையானது உன் காதல் நிறம் மாறாதது என்று நினைச்சு நாட்களை கடத்தி இருப்பேன். ஆனால் நீ எனக்கு நம்பிக்கை துரோகம் தானே பண்ணி இருக்கிற..” நிறுத்திவிட்டு அவளையே இமைக்காமல் பார்த்தான்.

அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவள் தலைகுனிய, “இத்தனை நாள் என்னை காதலித்தும் நீ என்னைபற்றி புரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா?” என்று அவனின் கேள்விக்கு அவளிடமிருந்த போதும் அதைச் சொல்ல இது சரியான இடமில்லை என்று மௌனம் சாதித்தாள்.

அவளின் அமைதி அவனின் மனதை கூறுபோட, “உன் படிப்பை நான் கெடுப்பேன்னு மனசாட்சியே இல்லாமல் எழுதி வாங்கிய பொழுதே நான் செத்துட்டேன். என்மேல் நம்பிக்கை இல்லாத நீ எப்படி என்னை உயிராக நேசிச்சிருப்பேன்னு இப்போ நினைச்சு பார்த்தா எனக்கே அருவருப்பா இருக்குடி” அவன் பேசி பேச்சுகளைக் கேட்டு சிவரத்தினம் அவர்களின் அருகே வந்தார்.

அபூர்வா அவரின் கரம்பிடித்து அழுத்தம்கொடுத்து, ‘வேண்டாம்’ மறுப்பாக தலையசைத்தாள். அவர் புரிந்துக்கொண்டு அமைதியாகிவிட கண்கள் இரண்டையும் அழுந்த துடைத்துவிட்டு நிமிர்ந்த ஆதியின் முகம் தெளிவாக இருந்தது.  

“நீ நம்பிக்கை துரோகி. என்னை நம்ப வைத்து கழுத்தை அறுத்துட்ட இல்ல” என்ற ஆதி ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்தான்.

“உனக்கு உன் படிப்புதானே முக்கியம். இனி நீ படிப்பு முடிக்கும்வரை உன் கண்ணில் நான் படவே மாட்டேன். அப்படியே எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தாலும் உன்னை பார்க்க மாட்டேன்.” என்று உறுதியாக கூறியவனின் வார்த்தைகள் அவளின் மனதை கூறுபோட வலியோடு அவனை ஏறிட்டவளின் கண்கள் கலங்கியது.

சட்டென்று நிமிர்ந்து அவனின் பார்வை அவளின் விழிகளில் வழியாக உயிருக்குள் ஊடுருவிச் செல்ல, “என் வாழ்க்கை உன் வாழ்க்கை என்று நான் இதுவரை பிரித்து பார்த்தது இல்ல. என்மேல் நம்பிக்கை இல்லாமல் தானே இப்படி எழுதி வாங்கின. என்மேல் என்னைக்கு உனக்கு நம்பிக்கை வருதோ அன்னைக்கு நீதான் என்னை தேடி வரணும். நான் உன்னை தேடி வருவேன்னு நினைக்காதே நான் வரமாட்டேன்.” என்று தன் முடிவை தெளிவாக உறுதியாக கூறியவனை அவள் அமைதியாக பார்த்தாள்.

“உன்னால் சாகடிக்கபட்ட நம் காதலை உன் செயலால் மட்டுமே உயிர்பிக்க முடியும். உன் காதல் உண்மையானதா? என்ற சந்தேகம் இப்போ என் மனதில் வந்திருக்கு. அது உண்மைன்னு நீ நிருபிக்கணும். அதுவரை நம்ம பிரிவு தொடரும்” என்றான் முடிவாக.

அவனின் மனம் தன்னிடம் காதலை மட்டுமே இப்போதும் எதிர்பார்க்கிறான் என்று அவளுக்கு புரியவே அவனின் பார்வை அவளின் கழுத்தில் கிடந்த தாலி கயிற்றை தொட்டு மீளவே இப்போது அவனின் பார்வையை தைரியமாக எதிர்கொண்டாள்.

அவன் அவளைவிட்டு விலகி செய்ய ஓரடி எடுத்து வைக்க, “ஆதி ஒரு நிமிஷம்” என்று அவனை தடுத்தாள் அபூர்வா.

அவன் அவளை கேள்வியாக நோக்கிட, “நீயும் நானும் பிரிவைப்பற்றி பேசியபோது நீ சொன்னதை நான் இன்னைக்கு செஞ்சேன். அந்த செயலால் நான் உன் கண்ணுக்கு நம்பிக்கை துரோகியாக தெரிந்தால் அதுக்கு நான் பொறுப்பு இல்ல. எனக்கு உன்னைவிட எதுவும் முக்கியம் இல்லன்னு நீ தெளிவா புரிஞ்சுக்கோ” வழக்கத்திற்கு மாறாக அவனின் பார்வையை துணிச்சலோடு எதிர்கொண்டாள்.

தன் கழுத்தில் இருந்த தாலியை பார்வையால் சுட்டிகாட்டி, “என் காதலை நிருபிக்க மட்டும் உன்னை தேடி வருவேன். மற்றபடி நீ கட்டிய இந்த தாலிக்கு அங்கீகாரம் கொடுன்னுகேட்டு ஒருநாளும் உன் முன்னாடி வந்து நிற்க மாட்டேன், இந்த திருமணம் பற்றி நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்” தீர்க்கமாக கூறியவள் தொடர்ந்து,

“இந்த தாலியை நான்தான் கட்டினேன். இவதான் என் மனைவின்னு நீயாக அங்கீகாரம் கொடுக்கும் வரை நாம் காதலர்கள் தான். நான் வரமாட்டேன்னு நினைச்சு நீ யாரையாவது காதலிச்சு திருமணம் பண்ண நினைச்ச” என்று நிறுத்திய அபூர்வா அவனை பார்த்து’கொன்றுவிடுவேன்’ என்று எச்சரித்துவிட்டு அவனைவிட்டு விலகி நடந்தாள்.

அவன் அவளையே அதிர்ச்சியோடு பார்த்து கொண்டிருக்க ஏதோ நினைத்தபடி மீண்டும் அவனின் அருகே வந்தவள், “என் உணர்வுகள் செத்துபோச்சு. மற்றவங்க கண்ணுக்கு நான் பெண்ணாக தெரிந்தாலும் நான் உயிர் இல்லாத வெறும் மரக்கட்டையாக மட்டும்தான் இருப்பேன். என் உணர்வுகளை உயிர்ப்பிக்கும் உரிமையை உனக்கு மட்டும் கொடுத்து இருக்கேன். அதை ஞாபகத்தில் வெச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு அவனின் பதிலை எதிர்பார்க்காமல் விலகி நடந்தவளின் பேச்சில் அவனின் மனம் வலித்தது.

அவள் செய்த செயல் அவனை கொன்றுவிட்டது என்று நினைத்தான். ஆனால் அவளின் பேச்சு அவனின் மனதில் இருந்த காதலை கண்ணீராக வெளிகாட்டுவதை கண்டு சிவரத்தினம் மனம் வலித்தது. ஒருவருக்கொருவர் உயிரையே வைத்திருந்தும் இந்த பிரிவு முக்கியமா என்று சிந்தனையோடு பேத்தியை பின் தொடர்ந்தார்.

அவன் மனம் கடந்தகாலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு வந்தது.

அவன் சொன்னதைக்கேட்டு, “ஏய் உனக்கு அபூர்வாவிற்கு இடையே இவ்வளவு நடந்தபிறகும் நீ அவளை நம்பிக்கை துரோகின்னு சொல்ற பார்த்தியா அதைதான் என்னால ஏத்துக்கவே முடியல. ஒரு காதலியாக அவ உன்னை காப்பாற்ற நினைத்ததில் என்ன தப்பு கண்டுபிடிச்ச” என்று நண்பனை சரம்வாரியாக திட்ட தொடங்கினான் சிவா.

ஆதி அமைதியாக இருக்க, “நிஜமா சொல்லு உன்னை உயிராக நேசித்த அவ உனக்கு நம்பிக்கை துரோகம் பண்ணிருப்பான்னு உன் மனசு சொல்லுதா? அப்படி நம்பிக்கை துரோகம் பண்ணினவதான் உன்னை தேடி கொல்கத்தா வரை வந்தாளா?” என்று அவன் கேள்விகளை அடுக்கினான். அபூர்வாவின் உண்மையாக காதலை உணராமல் போனானே என்ற கோபத்தில் வார்த்தையை சிதரவிட்டான்.  

“அவ நம்பிக்கை துரோகி இல்ல என்ற விஷயம் எனக்கு தெரியும். அவ படிப்பை கெடுத்துவிடுவேன்னு சொல்லி அவள் எழுதி வாங்கியதை தான் என்னால ஏத்துக்கவே முடியல சிவா. அதே நேரத்தில் அவ இப்போகூட உண்மையை என்னிடமிருந்து மறைக்கிற. அதை வாங்க நானும் எவ்வளவோ போராடுறேன் வாயை திறக்க மாட்டேன்னு மௌனம் சாதிக்கிறவள என்ன பண்ண சொல்ற ” என்றான் ஆதி எரிச்சலோடு.

“சரி உன் கோபம் நியமானது என்று வெச்சுக்கலாம். ஆனால் நீ போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்போது பைரவனுக்கு போன் பண்ணி பேசியது அபூர்வாவின் தாத்தாதானா?” என்று கேட்க தலையசைத்து மறுத்தான் ஆதி.

சிவா அவனை கொலைவெறியுடன் பார்க்க, “இந்த உண்மை எனக்கு அதுக்கு பிறகுதான் தெரியும். இப்போ அபூர்வா சொன்னாலே தாத்தா பேச்சை கேட்டுட்டு தான் அப்படி பண்ணேன்னு அவ பொய் சொல்லிட்டு போறா..” என்றவனை புரியாத பார்வை பார்த்தான்.

அபூர்வாவின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாடியும் ஒரு காரணம் இருக்கிறதென்று தெளிவாக புரிந்து வைத்திருக்கும் இவனா அவளை பிரிந்து செல்ல ஒத்துகொண்டான் என்று சிவாவின் மனதில் ஒரு எண்ணம் தோன்றி மறைய குழப்பத்தில் நின்றிருந்தான்.

“நீ என்னடா சொல்ற? எனக்கு ஒண்ணுமே புரியல. அபூர்வா தாத்தா தப்பு செய்யல. அபூர்வாவும் தப்பான பொண்ணு இல்ல அப்புறம் என்னதான் நடந்ததுன்னு தெரியாமல் நீ என்னதான் பண்ணிட்டு இருக்கிற?” என்று எரிந்து விழுந்தான்  சிவா

“நான் குற்றாலத்தில் இருந்து வந்தபிறகு ஒருநாள் எதிர்பாராத விதமாக அபூர்வாவின் தாத்தாவையும் பாட்டியையும் பார்த்தேன். அவர்தான் கடைசி நிமிடம் வரை தன்னிடம் கேஸை வாபஸ் வாங்க சொல்லி என்னை கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷன் வந்தான்னு சொன்னாரு” என்றதும் சிவாவிற்கு ஏதோ புரிவதுபோல இருந்தது.

“கடைசியா அவங்கள அப்படி செய்ய சொன்னது யாருன்னு சொன்னாரா?” எதிர்பார்ப்புடன் சிவா நண்பனை பார்க்க, “இல்ல அவர் உண்மையை முழுசாக சொல்லல. நான் வற்புறுத்தி கேட்டபோது கூட அபூர்வா உன்னைத் தேடி வருவான்னு மட்டும்தான் சொன்னாரு. நான் காரணம் கேட்டதுக்கு அவ காதல் உண்மையானதுன்னு சொல்லிட்டு கிளம்பி போயிட்டார்” என்றவன் அதன்பிறகு அவர் இறந்த விஷயத்தை கூறினான்.

“அதைவிடு இப்போ அபூர்வா தேடி வந்ததால் மட்டும் அவ காதல் உண்மைன்னு உனக்கு புரிஞ்சுகிட்ட. ஒரு வேலை அவளாக உன்னை தேடி வராமல் இருந்திருந்தா?” என்ற கேள்விக்கு அவனிடமிருந்து பட்டென்று பதில் வந்தது, “நான் அவளைத்தேடி போயிருப்பேன்” என்றான்

இந்த பதிலை அவனிடமிருந்து எதிர்ப்பார்க்காத சிவாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. அவள் மீது அவன் வைத்திருந்த கண்மூடித்தனமாக காதல் இறந்துவிட்டது என்று சொன்னவன் இப்போது இப்படி சொல்வதை அவனால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

நண்பனின் பார்வை தன் மீது கேள்வியாக படிவத்தை உணர்ந்த ஆதி, “உனக்கு தெரியாது சிவா நான் எவ்வளவு தூரம் அவளை விரும்பறேன்னு. அவளை பார்த்த நாளில் இருந்தே அபூர்வா கூட மனசுக்குள் அழகான காதல் வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன். கற்பனை என்றாலும் அவளோடு இருக்கின்ற நேரத்தை மனசில் பொக்கிஷமாக சேமித்து வெச்சிருக்கேன்” என்று தன் காதலை கூறியவனை இமைக்க மறந்து பார்த்தான்.

“நான் இன்னைக்கு இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு முன்னேற ஒரே காரணம்  அவ மட்டும்தான். என் அபூர்வா எந்த காரணத்திற்காகவும் கஷ்டப்பட கூடாதுன்னு நான் கஷ்டப்பட்டு முன்னேறி இன்னைக்கு இந்த நிலையில் இருக்கேன். இந்த  ஐந்து வருடத்தில் ஒரு நாள்கூட அவளை நினைக்காமல் தூங்கியதும் இல்லை” என்ற ஆதி ஏதோ நினைவில் தன் போனை எடுத்து கேலரியில் சில போட்டோவை காட்டினான்.

“இந்தா இதை பாரு..” என்று சொல்ல வேண்டா வெறுப்பாக அதை வாங்கிப் பார்த்த சிவா இன்ப அதிர்ச்சியில் உறைந்தான். அபூர்வாவை பிரிந்தநாளில் இருந்து இன்றுவரை அவளோட போட்டோ அனைத்தும் அவனின் அறையை அலங்கரித்தது.

“அவ என்னை தேடி வரலன்னா நானே அவளைத்தேடி போயிருப்பேன். அவளைவிட முக்கியம்னு சொல்ல எனக்கு யாரும் இல்ல. ஊரையே அழைத்து அவ கழுத்தில் நான் கட்டிய தாலிக்கான அங்கீகாரத்தை கொடுத்து இருப்பேன்” என்றவனுக்கு திடீரென்று அந்த சந்தேகம் வந்தது.

“சிவா நான் அவளுக்கு எப்படி என் நிறுவனத்தில் இருந்து அப்பாயின்மென்ட் ஆர்டர் போயிருக்கும்” வாய்விட்டு கூறிய ஆதியின் மனதில் திடீரென்று மின்னல் வெட்டியது.

அவன் சந்தேகத்தை உறுதிசெய்ய நினைத்து தன் பி.ஏ.வை அழைத்து சில விவரத்தை கேட்க, “ஸார் நான் அந்த அப்பாயின்மென்ட் ஆர்டர் அனுப்பல” என்றவன் சிறிதுநேரம் சிந்தனைக்குப் பிறகு தன்னை டைபிஸ்ட் மேரியை பற்றி விவரம் சொல்ல அவனின் சந்தேகம் உறுதியானது.

அதை உறுதிபடுத்தும் விதமாக சிவாவின் கையிலிருந்த ஆதியின் செல்போன் அடிக்க, “உங்க அம்மாதான்” என்றான் சிவா.

அவன் போனை எடுத்து, “ஹலோ” என்றதும், “நீ உடனே கிளம்பி வீட்டிற்கு வா ஆதி” என்ற மறுநொடியே அழைப்பு துண்டிப்படவே, “என்ன விசயமாக இருக்கும்” என்ற சிந்தனையோடு ஆதி சிவாவை அழைத்துக்கொண்டு வீட்டை நோக்கி சென்றான்.