Idhayam – 42

அத்தியாயம் – 42

காலையில் வழக்கம்போல வேலைக்கு கிளம்பிய ஆதிக்கு அனைத்து உதவிகளையும் செய்த அபூர்வாவின் முகம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. கணவன் டைனிங் டேபிளில் வந்து அமர அவனுக்கு பார்த்து பரிமாறியவள், “இன்னைக்கு என்னோட சமையல் சாப்பிட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க” என்றான்.

அவளின் விழிகளில் தெரிந்த ஆர்வத்தை படித்தபடி உணவை வாயில் வைத்தவனின் முகம் அடுத்த நிமிடமே அஷ்டகோணலாக மாறிட, “பிடிக்கல அபூர்வா” இரு பொருள்பட கூறினான்.

அவன் சொன்ன அர்த்தம் புரியாமல்,“எல்லாமே சரியாக போட்டுதான் செஞ்சேன். ஏன் இப்படியாச்சு” என்ற சந்தேகத்துடன் அவனை சாப்பிடவிடாமல் தடுத்தாள்.

அவள் தட்டை எடுக்க, “நான் சாப்பாட்டை சொல்லல அபூர்வா” என்றதும் அவள் புரியாத பாவனையோடு அவனை ஏறிட்டாள்.

“இன்னும் எத்தனை நாளைக்கு கம்பெனிக்கு போகாமல் எனக்கே சேவகம் பண்ண போறதாக உத்தேசம்” என்றதும் உதட்டைக் கடித்துக்கொண்டு மௌனம் சாதித்தாள். அவனிடமிருந்து நிரந்தரமாக விலகியபிறகு தனக்கு பைத்தியம் பிடிப்பது போல இருக்கவே குற்றாலத்தின் நிறுவனத்தை ஆரம்பித்தாள்.

மேனகாவிற்கும் தனக்கும் இடையே பழைய கணக்கு ஒன்று பாக்கி இருந்தது. அவருக்கு ஒரு பாடத்தை புகட்ட எண்ணி அவள் தொடங்கியது தான் அந்த நிறுவனம். ஆனால் ஆதியோடு திருமணம் ஆனதும் அவளால் அதையெல்லாம் செய்ய முடியவில்லை.

கெடுதல் நினைப்பது அவளின் இயல்பான குணம் இல்லை என்ற காரணத்தினால் அவளால் மனமறிந்து மேனகாவை தண்டிக்க முடியாமல் தடுமாறினாள். ஆதியும் அவள் நிறுவனத்திற்கு செல்வாள் என்ற எண்ணத்தோடு இருக்க அந்த எண்ணம் தனக்கில்லை என்பது போல நடந்துகொண்டாள்.

அதனால் நேரடியாக கூறிய கணவனை நிமிர்ந்து பார்த்தவள், “இல்ல ஆதி எனக்கு அதில் இண்டர்ஸ்ட் இல்ல” என்றாள்.

“சரி பரவல்ல இப்போ போய் கிளம்பி வா. நம்ம ஆபீஸ் போலாம்” என்றபிறகும் அவள் அசைவில்லாமல் நிற்பதைக் கண்டு, “அபூர்வா” என்று அதட்டினான்.

எதுவும் பேசாமல் மாடியேறியவள் அடுத்த அரைமணி நேரத்தில் கிளம்பி கீழே வரவே, “தட்ஸ் குட்” என்றவன் அவளை தன்னோடு அழைத்துச் சென்றான். காரில் இருவரின் இடையே மௌனம் நிலவியது.

அடுத்து அவன் காரை நிறுத்திய இடம் அவளின் நிறுவனம்!

தான் வந்திருக்கும் இடத்தைப் பார்த்தும், “ஏன் ஆதி இங்கே கூட்டிட்டு வந்தீங்க” என்றாள் கவலையோடு.

வழக்கம்போல காரை நிறுத்திவிட்டு அவளின் புறம் திரும்பி, “ஒரு விஷயத்தை தெளிவா புரிஞ்சிக்கோ. உன்னோட திறமையை வெளிக்காட்டாமல் நீ வீட்டிற்குள் முடங்கிட்ட அது காதல்னு சொல்லி அமைதியாக இருப்பேன்னு மட்டும் நினைக்காதே. எனக்கு என் மனைவியோட கனவிலும் பங்கு உண்டு” என்று அவன் கூற அவளோ இமைக்க மறந்து அவனையே பார்த்தாள்.

“இந்த கனவை அடைய நீ அனுபவித்த கஷ்டம் என்னன்னு எனக்கு தெரியும். சோ இனிமேல் நீதான் உன் நிறுவனத்தை திறமையோடு நடத்தனும். எதிரி யாராக இருந்தாலும் நேர்மையாக நின்று ஜெயிக்கப் பழகு. நீ நீயாக இருப்பது மட்டும் தான் எனக்கு பிடிச்சிருக்கு அபூர்வா”  அவளின் நெற்றியில் இதழ் பதித்தான்.

அவள் காரிலிருந்து இறங்கியதும், “பாய் அபூர்வா நான் கிளம்பறேன்” என்றவன் காரில் ஏறி சென்றுவிடவே வேறு வழியில்லாமல் வேண்டாவெறுப்பாக நிறுவனத்தின் உள்ளே நுழைந்தாள் அபூர்வா.

அவளின் கவனம் முழுவதும் வேலையில் திரும்பிட இடையிடையே அவளுக்கு போன் செய்து விசாரித்தான். காலையில் வரும்போது இருந்த சோர்வு இப்போது அவளுக்கில்லை. ஏனோ மனம் லேசான மாதிரி தோன்றியது.

அன்று மாலை அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தவன், “இன்னைக்கு எப்படி போச்சு வொர்க்” என்றான் காரை ஓட்டியபடி.

“ம்ம் நிஜமாவே வேலை அதிகம் ஆதி. பட் சோர்வு கொஞ்சம்கூட தெரியல” என்றாள் சிரித்தபடி.

அவளின் கரங்களை எடுத்து இதழ்பதித்து, “இப்போ எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கு அபூர்வா. எங்கே நீயும் சாதாரண பெண்களைப் போல வீட்டோடு முடங்கி விடுவாயோன்னு பயந்தே போனேன்” என்றான் காதலோடு.

அவனின் வார்த்தைகள் அவளுக்கொரு புதிய தெம்பை கொடுத்தது. அவனின் ஒவ்வொரு செயலும் அவளை உயிர்பித்தது. அடுத்தடுத்து வந்த நாட்களில் அவர்கள் இருவரும் சேர்ந்தே கம்பெனிக்கு சென்று வீடு திரும்பினர்.

மஞ்சுளா அடிக்கடி போன் செய்து மகனையும், மருமகளையும் விசாரித்துக் கொண்டார். அதேபோல சக்தி, ரக்சிதா, ராகவ், சஞ்சனா நாலுபேரும் வாரத்தில் இரண்டு முறை போன் செய்து பேசுவார்கள்.

வீட்டிற்கு வெளியே கம்பீரமாக வலம் வரும் ஆதி வீட்டிற்குள் அவளின் முந்தானையை பிடித்துகொண்டு குழந்தைபோல சுற்றினான். அவனின் நிஜமான அன்பில் அவளை மூழ்கடித்தான். அவளின் முகம் பார்த்த அவளின் விருப்பங்களை நிறைவேற்றினான்.

இரவு உணவை தயார் செய்து கொண்டிருந்த மனைவியின் பின்னோடு வந்து அணைத்ததும், “என்னங்க வேலை செய்யவிடாமல் இது என்ன விளையாட்டு” கடிந்தபடி அவனின் கரங்களை இடையிலிருந்து பிரித்தெடுக்க நினைக்க மட்டுமே முடிந்தது.

அவளை தன்புறமாக திரும்பிய ஆதி, “ஏண்டி மனுஷனோட ஃபீலிங்ஸ் புரிந்தும் புரியாத மாதிரி நடிக்கிற” தாபத்தோடு அவளின் இதழ்தேடி குனிந்தான்.

அவனின் மனநிலை அறிந்து அவனின் முத்தத்திற்கு ஒத்துழைத்தாள் அபூர்வா. அவன் மீண்டும் நிமிர்ந்து அவளை பார்க்கும்போது அவளின் கன்னங்களில் ரோஜா பூக்கள் எட்டிப்பார்த்தது. கன்னங்களை வருடிய ஆதித்யாவின் செயலில் அவளின் உடல் சிலிர்த்து அடங்கியது.

“அபூர்வா” என்றதும் அவள் பட்டென்று விழிதிறந்து அவனை கேள்வியாக நோக்கினாள்.

அவளின் பார்வையில் தெரிந்த வித்தியாசம் கண்டு தடுமாறிய இதயத்தை சமன்படுத்தி, “சாருவுக்கு நான் மாப்பிள்ளை பார்த்து இருக்கேன்” என்று குண்டைத்தூக்கி போட்டான் ஆதி.

அவள் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்க்க, “நிஜமாகவே நான் சொல்றது உண்மை” என்றான்.

“என்ன திடீர்ன்னு தங்கச்சிமேல் பாசம்? அம்மா பேச்சுக்கு மறுபேச்சு பேசாதவள் நீங்க கைகாட்டும் மாப்பிள்ளையை கட்டிக்குவாளா?” மனதின் வேதனையை மறைத்தபடி கூறவே, அவளின் கேள்வியிலிருந்த நியாயம் அவனுக்கும் புரியவே செய்தது.

“அதுக்காக அவளுக்கு நான் செய்யக்கூடாதுன்னு சொல்றீயா அபூர்வா” என்றவன் அவளை ஆழம்பார்க்க, “இல்ல ஆதி உன் தங்கைகளுக்கு நீ என்ன வேண்டும் என்றாலும் செய் நான் தப்புன்னு சொல்ல மாட்டேன். அதற்காக நீ அவங்க முன்னாடி அடிபணிந்து போகாதே” என்று பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு திரும்பி தன் வேலையைத் தொடர்ந்தாள்.

அவளை சிந்தனையோடு பார்த்த ஆதி அதன்பிறகு அந்த விஷயத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவளிடம் சொல்லவில்லை. நாட்கள் அதன்போக்கில் செல்ல சாருவின் திருமண வேளைகளில் மும்பரமாக இறங்கினார் மேனகா.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.

விமலா தூக்கம் கலந்து எழுந்து வரும் முன்னே சமையலறையில் காபி போட்டு முடித்த ரேவதி, “இன்னைக்கு என்ன செய்யலாம்” என்ற சிந்தனையோடு சமையல் வீடிவோவை பார்த்து கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் மகளை சமையலறையில் எதிர்க்காத விமலா, “ஏய் இங்கே என்னடி பண்ணிட்டு இருக்கிற” என்றார் அதிர்ச்சியுடன்.

காலையிலேயே குளித்து முடித்து மங்களகரமாக தன் முன்னே புடவையோடு நின்றிருந்த மகளின் கழுத்தில் கிடந்த மாங்கல்யம் அவளுக்கு தனியொரு அழகை கொடுத்து இருப்பதை உணர்ந்தார்.

அவரின் பார்வையிலிருந்த மாற்றத்தை உணராத ரேவதியோ, “அம்மா கார்த்திக்கு நல்லா சமையல் பண்ணும் பொண்ணுதான் பிடிக்குமாம். பாவம் அவருக்கு அம்மா, அப்பா இல்ல. இனிமேல் நான்தான் அவரை ரொம்ப கவனமாக பார்த்துக்கணும். தன் முதல் வேலையாக சமையல் பண்ண கத்துகிட்டு இருக்கேன்” என்றாள் மகள் தெளிந்த முகத்துடன்.

அவளின் இந்த பேச்சு அவருக்கு ஆச்சரியத்தை கொடுத்தபோதும், “ம்ம் இந்த அளவுக்கு அக்கறையோடு இருக்கிறாயே அதுவே பெரிய விஷயம் தான்” என்றவர், “நகரு நான் காபி போடணும்” என்றார்

“அம்மா நான் ஆல்ரெடி எல்லாமே தயார் பண்ணிட்டேன் குடிச்சு பாருங்க” என்று அவரை அலற வைத்தாள் ரேவதி.

“நீ காபி போட்டியா சுத்தம் இன்னைக்கு என்னவெல்லாம் நடக்க போகுதோ” என்று புலம்பிய தாயை முறைத்தவள், “என்னம்மா கிண்டலா? நான் எப்படி காபி போட்டு இருக்கேன்னு நீயே குடிச்சு பாரு” என்றாள் ரோஷத்துடன்.

அவரும் எதுவும் யோசிக்காமல் அவளிடம் காபியை வாங்கி பருகியவர் அதன் ருசியில் தன்னை மறந்தார். அவர் எதுவும் பேசாமல் குடிப்பதை வைத்தே காபி நன்றாக போட்டு இருக்கிறோம் என்று நினைத்தாள் ரேவதி.

அதை முழுவதுமாக குடித்து முடித்த விமலா, “மகளே இது காபி இல்ல டீ. ஆனாலும் உன்னை தப்பு சொல்ல முடியாதும்மா. இன்னைக்கு வரைக்கும் சமையலறை பக்கமே வராத பொண்ணு இவ்வளவு நன்றாக டீ போட்டு கொடுத்ததுக்கு உன்னை பாரட்டத்தான் வேணும்” முகம் மலர மகளின் கன்னத்தை கிள்ளி பாராட்டினார்.

அவளின் முகம் பூவாக மலர, “தேங்க்ஸ் அம்மா. காபி தூள் என்று நினைச்சேன்” என்று அவள் அசடு வழிந்தாள்.

“பரவால்ல ரேவதி. நீ உனக்கு தெரிஞ்சமாதிரி செய்ம்மா. ஏதாவது மாற்றம் செய்யணுனா நானே உனக்கு சொல்லித்தரேன்” என்றதும், “அம்மா ஓரளவு சமையல் செய்ய கத்துக்கிட்டேன். என்ன இந்த காபி தூள், டீத்தூள், கள்ளபருப்பு, துவரம்பருப்பில் மட்டும் அடிக்கடி சந்தேகம் வருது” என்றாள் சிரித்தபடி.

அவளின் கன்னத்தை மெல்ல வருடியவர், “எல்லாம் போக போக நீயே தெளிவாக கத்துக்குவ என்ற நம்பிக்கை வந்துச்சு ரேவதி. நீ என்ன சமையல் செய்கிறாயோ செய். நான் சாப்பிட மட்டும் வரேன்” என்றவர் வெளியே செல்ல கார்த்திக் தன் மாமனாரோடு இணைந்து நாட்டு நடப்புகளை விலாவரியாக பேசிக் கொண்டிருந்தான்.

ரேவதிக்கு திருமணம் முடிந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியிருந்தது. தன் கணவனுக்கு வேலை  கொல்கத்தாவில் என்பதால் திருமணம் முடிந்த கையோடு கொல்கத்தா சென்றவள் இப்போதுதான் பிறந்த வீட்டிற்கு மறுவீடு வந்து இருக்கிறாள்.

மருமகனுக்கும், கணவனுக்கும் டீயை கொடுத்துவிட்டு சமையலறைக்கு சென்றவர் மகள் வேலை செய்யும் அழகை ரசித்தபடி அவளுக்கு சில உதவிகள் செய்தார்.

தன் கணவனைப் பற்றி பேசியபடியே சமைத்த  மகளிடம் தெரிந்த இந்த மாற்றத்தை கண்டதும் சில மாதங்களுக்கு முன்னாள் நடந்த விஷயத்தை நினைத்துப் பார்த்தார்.

கார்த்திக் பெண் பார்த்து சென்ற பிறகு ஆதியை சந்தித்துவிட்டு சோகமாக சென்னை வந்தவள் தாய் தந்தையிடம் உண்மையை போட்டு உடைத்தாள்.

இந்த விஷயமறிந்து பெற்றோர்கள் அவளை கண்டிக்க, “அவன் என்னை ஏமாற்றிட்டான்” என்று கதறியவளை எப்படி சமாதனம் செய்வதென்று தெரியாமல் அவர்கள் இருவரும் புலம்பினர்.

அப்போது அவளை தேடிவந்த சிவாதான் ஆதியின் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் சொல்லி அவளுக்கு புரிய வைத்தான். இறுதியில் அவளும் கார்த்திக்கை திருமணம் செய்ய சம்மதிக்க குறிப்பிட்ட தேதியில் இருவருக்கும் திருமணம் ஜாம் ஜாம் என்று நடந்தது.

அன்றிலிருந்து கார்த்திக்கிற்காக தன்னிடம் இருக்கும் சில குணங்களை மாற்றிக் கொண்டாள். அதுக்கு காரணம் அபூர்வா என்று சொன்னால் அது மிகையில்லை. அவள் ஆதிக்காக செய்த விஷயங்கள், அவனை பிரிந்து அவள்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் ரேவதியின் மனதில் ஆழமாக பதிந்துபோனது.

ஒருவரை கட்டாயபடுத்தி எந்த காரியத்தையும் சாதிக்கலாம், ஆனால் காதலை கட்டாயம் என்ற விலையைக் கொடுத்து வாங்க முடியாது. காதல் இதற்கெல்லாம் அப்பார்ப்பட்ட ஒரு விஷயம் என்ற உண்மை உணர்ந்து தன்னையே அவனுக்காக மாற்றிக் கொண்டாள்.

இதற்கிடையில்  ஆதி – அபூர்வாவின் திருமணம் விஷயம் கேள்விபட்ட ரேவதியால் சில காரணங்களால் அவனின் திருமணத்திற்கு ரேவதியால் போக முடியவில்லை. சிவாவும் ஒரு பிஸ்னஸ் மீட்டிங் சென்றதால் அவனும் உயிர் நண்பனின் திருமணத்திற்கு செல்ல வாய்ப்பு இல்லாமல் போனது.

அவன் வீடு கட்டும் பணியில் இருந்த தீவிரம், இன்னொரு புறம் கொல்கத்தாவில் இருந்த தொழிலை மதுரைக்கு மாற்றிவிட்டு குற்றாலத்தில் இருந்தபடியே தொழிலை கவனித்தால் ரேவதி திருமணத்திற்கு சம்மதம் சொன்ன விஷயம் மட்டுமே அவனுக்கு தெரிந்தது.

அவனின் கவனம் முழுவதும் அபூர்வாவின் மீதே இருந்ததால் அவன் ரேவதி பற்றி யோசிக்கவில்லை. அதனால் அவளுக்கு திருமணம் ஆனா விஷயமே இதுநாள்வரை ஆதிக்கு தெரியாமல் போனது. சிவாவும் தங்கை திருமண வேலைகளில் கவனமாக இருந்ததால் அவனும் ஆதியிடம் சொல்ல மறந்துவிட்டான்.

அதற்காக அவன் வருத்தப்பட, “விடு அண்ணா அடுத்து நம்ம சாரு ரிஷப்ஷன் போய் அவங்களை நேரில் பார்க்கலாம்” என்று தமையனுக்கு ஆறுதல் சொன்னாள்.

அந்தளவுக்கு கார்த்தியின் அன்பு அவளின் குணத்தை மாற்றியமைக்க காரணமானது. அதன்பிறகு சின்ன சின்ன விஷயங்களில் கார்த்திக்காக விட்டுகொடுக்க அதில் கிடைத்த திருப்தியை உணர்ந்து வாழ்க்கையை ரசிக்க தொடங்கினாள். அதில் ஒன்றுதான் இந்த சமையல் விஷயமும்.

இந்த இடைபட்ட நாட்களில் ரேவதியிடம் நிறைய மாற்றங்கள் வந்து இருப்பதை நினைத்த விமலாவின் மனம் பூரித்தது.

காலையில் சமையலை முடித்துவிட்டு பரிமாறிய மகளை பெருமையுடன் பார்த்த ரகுபதி,  “ம்ம் என் மகள் இவ்வளவு சீக்கிரம் இதெல்லாம்  கத்துகிட்டாளே” என்று சந்தோசப்பட்டார்.

“எல்லாமே என் டிரைனிங் மாமா” என்று மனைவியைப் பார்த்து குறும்புடன் கண்ணடித்தான் கார்த்திக்.

“ஆமா ஆமா” என்றவள் யாரும் அறியாத நேரத்தில் பட்டென்று அவனை கிள்ளிவிட்டு, “சும்மா” என்று சொல்லிவிட்டு நகர இருவரும் சின்ன குழந்தைகள் போல சண்டை போடுவதைப் பார்த்து அவரின் மனம் திருப்தியடைந்தது.

அந்த வார இறுதியில் சாருவின் திருமணம் அடுத்த இரண்டு நாட்களில் ரிசப்ஷன் என்று சிந்துஜா ரேவதிக்கு அழைத்து விவரம் சொல்ல, “ரொம்ப சந்தோசம். நான் அக்காவோட திருமணத்திற்கு கண்டிப்பாக வரேன்” என்றாள்

எல்லோரும் ஏதோவொரு காரணத்திற்காக சாருவின் திருமண நாளை ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆதித்யா மட்டும் சாந்தசொரூபமாக வலம்வருவதை கண்டு துணுக்குற்றாள் அபூர்வா.