சரி © 18
திறப்புவிழாவில் பங்கேற்று, சிறப்புடன் செயல்பட்டு, ராஜசிம்மன் தம்பதியரிடமும் நற்பெயர் பெற்று, நண்பகலுக்கு மேல் தன் அலுவலக வேலைக்கும் சென்று அங்கு கடமையாற்றிவிட்டு, இரவு சற்று தாமதமாகத்தான் அறைக்கு வந்தான் சித்தார்த். அதுவரை யோகியும் வரவில்லை.
உடைமாற்றி, குளித்துவிட்டு, தங்கள் இரவு சமையல் குறித்து யோகியுடன் கலந்துரையாடினான். யோகியும், தனக்கு பசியில்லை என்றும், இரவு உணவே தேவையில்லை என்றும் கூறிவிட்டான்.
தனக்காக மட்டும் என்ன சமைத்தோம் என்று அலுத்துக்கொண்டு, அடுத்ததாக சம்யுக்தாவை அழைத்தான் சித்தார்த்.
“என்ன சம்யு! இன்னக்கி நீ வருவன்னு நா லீவெல்லாம் போட்டுட்டு வந்தேன் தெரியுமா?”, சித்து.
“என்ன செய்யறது சித்து, அவசர மீட்டிங்! செகரட்டேரியத்துல இருந்து ஒரே ப்ரஷர்! டேட்டாஸ் எல்லாம் காலைலதான் கலெக்ட் ஆச்சு! அப்பறம் அத நாங்க கன்சாலிடேட் பண்ணி, மீட்டிங்குக்கு அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு! ஸோ, மார்னிங் ரொம்ப பிஸி! அதான் வரமுடியல சித்து!”, சம்யு.
“யப்பா! சொல்லும்போதே மூச்சு வாங்கும் போலயே! செஞ்சு பாத்தா!”, சித்துவும் சம்யுவின் சிரமத்தை உணர்ந்துகொண்டவனாய் பேசினான்.
“அப்பப்ப, அப்படித்தான் இருக்கும் மச்சான்! நாட் ஒன்லி நௌ, ஃப்யூச்சர்லயும் நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க!”, என்று எதிர்காலத்திற்கும் சேர்த்து சமயோஜிதமாக இப்போதே பேசினாள் சம்யு.
“பண்ணிக்கலாம் பார்ட்னர்!”
“சரி, ஃபங்ஷன் எப்படி இருந்துச்சு?”
“நல்லா கிராண்டா இருந்துச்சு, பொலிட்டீசியன், செலிப்ரிட்டீஸ்னு யோகியோட பாஸ் கலக்கிட்டாரு!”
“யோகியோட பாஸ் மட்டுந்தானா! நீங்களுந்தான் கலக்கோ கலக்குன்னு கலக்கி, ஒரே நாள்ல, யோகி லெவலுக்கு ஈக்வல் ஆயிட்டீங்க போலயே!”, சம்யு பாராட்டினாள் சித்துவை.
“சேச்சே, நா அப்படி என்ன பண்ணிட்டேன்! எனக்கு யோகி பண்ணாத உதவியா நா அவனுக்குச் செய்யிறேன்! ஏன், நம்ம ரெஜிஸ்டர் மேரேஜுக்குக் கூட, அவந்தான லீவு போட்டு மதுரையில இருந்து எல்லா வேலையும் பாத்து வச்சான்!”
“வெயிட், வெயிட்! இப்ப அந்த ஏற்பாடெல்லாம் என்னாச்சு?”, சம்யு.
“ட்ராப்டு! ஊத்தி மூடியாச்சு, ஒய் ஆஸ்கிங்?”, சித்து.
“மூடுனத தொறக்கணும்போலயே! அதான் கேட்டேன்”
“ஏய்! என்ன சொல்ற! அதான் நம்ம வீட்ல, நம்மளவிட, பெத்தவங்க ஃபாஸ்ட்டாத்தான இருக்காங்க?”
“நம்மள விடுங்க! நா சொன்னது வேற ஒருத்தருக்கு அது யூசாகும்போலத் தெரியுது! அதுனால அரேஞ்மென்ட்ட கலச்சுராதீங்க!”
“யாருக்கு?”
“நம்ம ரிதுவுக்குத்தான்!”
“ரிதுவுக்கா! என்ன சொல்ற சம்யு? ஊருக்குள்ள அவங்கப்பா நல்ல ஸ்டேட்டஸ்ல இருக்காரு! அதெல்லாம் நடந்தா நிச்சயம் ஃப்யூச்சர்ல அக்செப்ட் பண்ண மாட்டாரு. அவர கன்வீன்ஸ் பண்றது ரொம்பக் கஷ்டம் சம்யு!”, சித்துவுக்கு சற்று பதற்றமாக இருந்தது.
“என்னாச்சு சித்து ஒங்களுக்கு? பதறாதீங்க. நம்ம மேரேஜுக்கு ஏற்பாடு பண்ண யோகி, அவரோட மேரேஜுக்கு ஏற்பாடு பண்ண மாட்டாரா என்ன?”, சம்யு.
“யோகியோட மேரேஜா? அதாவது யோகி வெட்ஸ் ரிது!”, சித்து.
“ஆமா! அதான் ஏற்கனவே ஏற்பாடெல்லாம் பண்ணி ரெடியாத்தான இருந்துச்சு! அதையே அப்டியே கன்ட்டினியூ பண்ணுவோம்! பொண்ணு, மாப்ள வேற வேற! அவ்ளோதான?”, சம்யு எல்லாம் சுலபம் என்பதுபோல் பேசினாள்.
“ஓ! கன்ட்டினியூ பண்ணலாம், எனக்குப் புரியுது சம்யு! அதாவது, ரிது யோகிய விரும்புறதுனால, ரிதுவும், யோகியும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணி சேஃபா இருந்துட்டு, அப்பறம் வீட்ல சொல்லி கன்வீன்ஸ் பண்ணிக்கலாம்னு ஐடியா பண்றீங்க! அப்படித்தான?”, சித்து.
“ஆமா சித்து! அவங்க வீட்ல அவங்கம்மா, அவகிட்ட இன்னக்கி ரொம்ப துருவித் துருவி கேள்வி கேட்டு, அவளையே உளற வச்சுட்டாங்களாம்! இவளும் அது இதுன்னு ஔறி சமாளிச்சிருக்கா! ஆனாலும் அவங்கம்மா அவளக் கடைசியா ஒரு பார்வை பாத்துட்டுப் போனாங்களாம்! அதுலயே ரிதுவுக்கு எல்லாம் புரிஞ்சு போச்சு! அனேகமா இன்னிக்கு நைட், அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல, ஆன்ட்டி அங்கிள்ட ரிதுவப்பத்தியும், ரிது யோகிய விரும்பறதப் பத்தியும் சொல்லிடுவாங்கன்னு நெனக்கிறேன். என்ன நடக்குமோ தெரியலைன்னு பயந்து இப்பதான் எனக்கு ஃபோன் பண்ணா!”, சம்யுக்தா சற்று விளக்கமாகவே கூறினாள் சித்துவிடம்.
“சரி… இதெல்லாம் யோகிக்குத் தெரியுமா? யோகிட்ட ரிது தன்னோட லவ்வச் சொல்லியாச்சா?”, சித்து.
“இன்னும் இல்ல! ஆனா அவ ரொம்ப லப் பண்றதா சொல்றா சித்து. நீங்களும் இதுல கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன், ப்ளீஸ்!”
“இதுல நா ஹெல்ப் பண்றதுக்கு ரெடி! ஆனா, மொதல்ல யோகியோட மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்கணும். அப்பறம்தான் நாம ஸ்டெப் எடுக்க முடியும் சம்யு. இன்னொரு விசயத்த நீங்க நல்லாப் புரிஞ்சுக்கங்க! ரிதுவோட அம்மாவும், அப்பாவும் எதையும் எடுத்தோம், கவுத்தோம்னு செய்ய மாட்டாங்க. அதுனால இன்னக்கி நைட்டே எதுவும் நடந்துறாது; அதே சமயத்துல எதுவுமே நடக்காம இருக்கப் போறதும் இல்ல. எது நடந்தாலும், அதுக்கு கொஞ்சம் டைம் இருக்கு. அதுனால நீ ரிதுவுக்கு ஃபோனப் போட்டு, ரிதுவ இன்னிக்கு மட்டும் ரிலாக்ஸா தூங்கச் சொல்லு. யோகி வரட்டும், நா விசயத்த சொல்றேன். இந்தப் பக்கம் ரியாக்ஷன் என்னன்னு பாத்துட்டு அப்பறம் முடிவு பண்ணுவோம். ஓக்கேயா பார்ட்னர்?”, சித்து.
“நீங்க ரிலாக்ஸா இருக்கச் சொல்றீங்க! ஆனா அங்க சொல்லவும் முடியாம, சொல்லாம இருக்கவும் முடியாம, கடைசில நம்மள மீடியேட்டரா ஆக்கிட்டா! நா அந்தப் பக்கம் சொல்றேன். எப்படி ரியாக்ட் பண்றான்னு பாப்போம்”
“ஓக்கே சம்யு! யோகி வந்துட்டான், நா முடிஞ்சா அப்பறம் பேசறேன், பை”, என்று அவசரமாக அலைபேசியை அணைத்தான்.
உள்ளே வந்த யோகி, “ஏன்டா! பேசுறதுன்னா பேசுடா மச்சி, நா ஒன்னும் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்டா”, என்றான்.
“ஆனா நா ஒன்ன இப்ப டிஸ்டப் பண்ணப் போறேனே!”, என்று சித்து விளையாட்டாக பேசுவதுபோல் கூறினான்.
“என்னடா மச்சி சொல்ற? என்ன செய்யனும் சொல்லு!”
“எனக்கு ரொம்பப் பசிக்குது மச்சி! உங்கிட்ட பேசிட்டு அப்பறம் சம்யுட்ட பேச ஆரம்பிச்சேனா, நேரம் போறதே தெரியாம பேசிகிட்டு இருந்துட்டேன். ஒன்னும் சமைக்கல, பசியும் தெரியல. ஆனா, ஃபோன கட் பண்ணாவுட்டுத்தான் ரொம்பப் பசிக்குது மச்சி!”, சித்து வயிற்றைத் தடவிக்கொண்டே சொன்னான்.
“என்ன மச்சி! இப்படிப் பண்ணிட்டியே! இப்பவே லேட் நைட் ஆயிருச்சு! இரு வறேன்”, என்று வந்த வேகத்தில் வெளியில் கிளம்பினான் யோகி.
“டேய் மச்சி, வெளில ஒன்னும் வேண்டாம்டா, வா பாத்துக்கலாம்!”, சித்து.
“…”, யோகி.
“ரிலாக்ஸாவது பண்ணிட்டுப் போடா!”, சித்து.
“நா ரிலாக்ஸ் பண்ணா, நீ அதுக்குள்ள எதையாவது பண்ண ஆரம்பிச்சுருவ, இன்னக்கி ஒரு நாளைக்கு வெளில சாப்பிட்டுக்கோ. வெயிட் பண்ணு வந்துறேன்”, யோகியின் குரல் வெளியிலிருந்து சன்னமாக ஒலித்தது.
அவன் போய் வருவதற்குள், ரிதுவந்திகாவின் காதலைப் பற்றி பேச, தன்னை தயார்படுத்திக்கொண்டான் சித்தார்த்.
©©|©©
“பேசாம இழுத்துப் போத்திகிட்டு தூங்கு! எதா இருந்தாலும் கொஞ்சம் ஆறப்போடுன்னு, என்னோட ஆளு சொல்லிட்டாரு! அதுனால அதுக்குமேல அப்பீலே இல்ல!” சம்யுக்தா மன்றாடிக்கொண்டிருந்தாள் ரிதுவந்திகாவிடம்.
“என்னடீ சொல்ற! எனக்கு இன்னிக்கு தூக்கமே வராதே!”, ரிது அடம்பிடித்தாள்.
“நீ இன்னும் யோகிட்டயே ஒன்னும் சொல்லல! அப்பறம் எப்படி ஒடனே, எடுத்த எடுப்புலயே ரெஜிஸ்டர் மேரேஜ் வரைக்கும் யோசிக்கிற!”, சரியாகத்தான் கேட்டாள் சம்யு.
“எல்லாம் ஒன்னால கெடச்ச எக்ஸ்பீரியன்ஸ்தான்டீ. ஆனா எவ்ளோதான் ஜாடமாடையாச் சொன்னாலும், யோகிட்ட ஒரு ரெஸ்பான்சும் இல்லயேடி!”
“இப்ப, இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுடும்! ஆனா இதுக்குமேல நா முழிச்சிருக்க முடியாது. இப்பவே, எங்கம்மா ரெண்டு தடவ வந்து பாத்துட்டு போய்டாங்க. உங்கிட்ட பேசிகிட்டு இருக்கறதுனால ஒன்னும் சொல்லல. அதுனால, இதுக்கு மேல என்னால சித்துவோட பேச முடியாது. நா தூங்கப் போறேன்! நீயும் தூங்கு! குட் நைட்”, சம்யு தாலாட்டுப் போல் ரிதுவிடம் பேசி முடித்தாள்.
“சரிடீ, போடீ. குட்நைட் டீ!”, ரிது.
©©|©©
நண்பன் பசியில் இருப்பதை அறிந்த யோகி, சில நிமிடங்களில், அறையின் அருகில் இருந்த ஒரு நல்ல உணவகத்தில் சித்துவுக்காக இரவு சாப்பாடு வாங்கி வந்து கொடுத்தான்.
“நீயும் ரெஃப்ரெஷ் ஆயிட்டு வந்துரு மச்சி! சாப்பிடுவோம்!”, என்றான் சித்து.
“எனக்கு வயிறு ஃபுல் மச்சி! வெளில சாப்டேன்டா”, யோகி மறுத்தான்.
“இவ்ளோ என்னால சாப்பிட முடியாதுடா. வா வெயிட் பண்றேன்”, சித்து விடவில்லை.
“சொன்னாக் கேக்க மாட்ட! நீ ஸ்டார்ட் பண்ணு நா வறேன்”, என்று உடைமாற்றி, குளியலறைக்குள் சென்றான் யோகி.
வெளியில் வருவதற்குள் பசியில் பாதி உணவை முடித்திருந்த சித்து, “என்ன மச்சி! இன்னக்கி சந்தோசமா இருக்க மாதிரி தெரியுது! வெளில வேற சாப்பிட்டேன்ற!”, என்றான்.
“எஸ், ஐம் ஃபுல் ஆஃப் ஜாய் மச்சி! ஐ திங்க் யூ டூ…! சம்யுட்ட பேசிட்டிருந்தியே?”, யோகி.
பேசிக்கொண்டே மிகவும் சொற்பமான உணவை வாயில் போட்டுக்கொண்டான். போதும் என்பதுபோல் சைகை செய்தான் யோகி.
“அவ்வளவு சந்தோசமெல்லாம் இல்ல மச்சி! இன்னிக்கு டாப்பிக்கே ஒன்னப் பத்திதான் ஓடுச்சு. கொஞ்சம் சீரியஸா!”, சித்து.
“என்னப் பத்தி சீரியஸாவா! என்னடா சொல்ற?”, யோகி.
“நாந்தான் ஏற்கனவே சொன்னேன்ல, ரிதுகிட்ட லவ் சிக்னல் தெரியுதுன்னு! நீந்தான் கண்டுக்கல!”
“எனக்கும் தெரியாமலா மச்சி! அதெல்லாம் ஒத்துவராதுன்னு அன்னக்கே பேசி முடிவு பண்ணிட்டோமே! நீந்தானடா க்ளியரா புரிய வச்ச, ‘முன்சீட்டு’, ‘பின்சீட்டு’ன்னு!”
“அதெல்லாம் சரிதான் மச்சி! இப்ப அந்தப் பக்கம் இருந்து சம்யு மூலமா தூது வந்திருக்கு. அது மட்டும் இல்ல இன்னிக்கு ரிதுவோட அம்மா, ஒங்க பாஸ்கிட்ட இதப் பத்தி சொல்லப் போறாங்களோன்னு டவுட்டுல, புள்ள தூக்கம் வராம பொலம்பிட்டிருக்கு!”, சித்து கூற வந்ததை கூறி முடித்தான்.
“இட்ஸ் டூ லேட் மச்சி!”
“எதச் சொல்ற மச்சி!”
“தூது”
“அப்ப, அல்ரெடி நீ எங்கேஜ்டா மச்சி? அந்த மாமா பொண்ணு வைஜெயந்தியா?”, சந்தேகமாகக் கேட்டான் சித்து.
“இல்ல மச்சி, சொல்றேன். ஆனா… சார்கிட்ட திலோ மேடம் எதாவது சொல்லி, அது என்னோட ஃப்யூச்சர பாதிக்குமோனு கொஞ்சம் கலக்குது மச்சி”, யோகி எதிர்காலத்தை எண்ணிச் சற்று கலங்கினான்.
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது மச்சி! நீ அந்தளவுக்கு யோசிக்காத! ஒன்னோட ஆளு யாரு மச்சி?”
“நாளைக்கு கஃபே வா காமிக்கிறேன்”
“காமிக்கிறியா? அப்ப ஒன்னோட ஃபிகரும் இந்த ஊருதானா? சூப்பர்டா மச்சி! டேய் நம்ம ரெண்டு பேரும் ஒன்னா மேரேஜ் பண்ணிட்டு, இங்கயே செட்டில் ஆகிடலாம்டா!”, திடீர் சந்தோசத்தில் திளைத்தான் சித்து.
“…”, ஏதும் சொல்லாமல் லேசான புன்னகையுடன், சித்துவையே பார்த்துக்கொண்டிருந்தான் யோகி. அவன் கண்ணில் பயமும் தெரிந்தது.
“என்ன மச்சி, ஏதும் பிரச்சனையா?”, சித்து.
“இப்போதைக்கு இல்ல மச்சி. ஆனா திலோ மேடம், சார்கிட்ட ஏதும் சொன்னா, அத சார் எப்படி டீல் பண்ணுவார்னு தெரியலயேடா! அதான் யோசிக்கிறேன்”, என்று சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தான் யோகி.
இரவு மணி பதினொன்றைத் தொட்டுக்கொண்டிருந்தது. ரிதுவை அழைபேசியில் அழைத்து, விசயத்தை விளக்கி புரிய வைக்கலாம் என்று நினைத்த யோகி, ஒரு பெண்ணிடம் இந்த நேரத்தில் பேசுவது நன்றாக இருக்காது என்று தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்.
“நா சம்யுகிட்ட சொல்லிறவாடா?”, சித்து.
“எத?”, யோகி.
“நீ அல்ரெடி எங்கேஜுடுன்னு”
“இப்ப வேணாம்டா மச்சி! நல்லாருக்காது! ரிதுட்ட நானே சொல்லிக்கிறேன். கொஞ்சம் புரிய வைக்கணும்லடா! நேர்ல பேசுனா நல்லாருக்கும்னு நெனக்கிறேன். நீ என்ன நெனக்கிற மச்சி?”
“ஆமா மச்சி! சில விசயங்கள ஃபேஸ் டு ஃபேஸ் சொல்றதுதான் நல்லது. எப்ப, எங்க சொல்லப் போற?”
“நாளைக்கே க்ளியர் பண்ணிறலாம்னு இருக்கேன் மச்சி! அப்பத்தான் எனக்கும் சேஃப்”, யோகி.
கலக்கத்துடன், ஒரு தீர்க்கமான முடிவுடனும் உறங்கச் சென்றனர் இருவரும்.
©©|©©
ரிதுவின் வீட்டில், காலை சிற்றுண்டிக்காக வழக்கத்திற்கு மாறாக விரைவாகவே சாப்பாட்டு மேசைக்கு வந்து அமர்ந்துவிட்டாள் ரிது. இரவு சரியான தூக்கம் இல்லாதது அவள் முகத்தில் நன்கு தெரிந்தது.
அவளுக்கு முன்பாக அங்கிருந்த, தாய் திலோத்தமை அவளின் அசௌகரியமான உணர்வையும், களையிழந்த முகத்தையும் பார்த்து சற்று வருத்தப்பட்டார்.
“நைட் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு! யார்கிட்ட பேசிகிட்டிருந்தடீ?”, சாதாரணமாகத்தான் கேட்டார் திலோ.
“சம்யுட்டதாம்மா!”, வேகமாக பதிலளித்தாள் ரிது.
“அந்நேரம் வரைக்கும், தூங்காம அப்படி என்ன பேச்சு? பாரு, மொகமெல்லாம் பாக்கவே சகிக்கல!”
“மேரேஜப் பத்திதான் டிஸ்கஸ் பண்ணிட்டிருந்தோம்மா!” ரிது.
‘ரெஜிஸ்டர் மேரேஜ்!’, ரிது மனதிற்குள் சொல்லிக்கொண்டாள்.
“நீங்க எதுக்குடீ அதப் பத்தியெல்லாம் யோசிக்கிறீங்க? அதெல்லாம் பெரியவங்க பாத்துக்குவாங்க! நீ ஒழுங்கா படிக்கற வேலையப் பாரு! அவள, அவ ஆஃபீஸ் வேலையப் பாக்கவிடு! நீ வீட்ல இருக்க, ஆனா அவ கிளம்பி காலைல ஆஃபீஸ் போக வேண்டாமா?”, திலோ.
“சரிம்மா, இனிமே லேட் நைட் யாரோடையும் பேசல. ஓக்கேயா?”, ரிது உடனே சொன்ன பேச்சைக் கேட்டாள்.
வழக்கமாக தன்னிடம் எதிர்த்து பேசும் மகள் ஏதும் பேசாதது, தாய்க்கு சற்று வருத்தத்தை தந்தது. ஆனால், வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அதே வேளையில், ரிதுவின் தந்தை ராஜசிம்மன் சாப்பிட வந்தமர்ந்தார்.
“ஹாய் ரிது, என்ன ஒரு மாதிரி இருக்க?”, என்று ராஜசிம்மனும் சகஜமாகத்தான் அன்றைய பொழுதை ஆரம்பித்தார்.
சாப்பாட்டின் இடை இடையே மகளுடனும், மனைவியுடனும் வழக்கம்போல் பேசிவிட்டு, ராஜசிம்மன் தன் தொழில் சார்ந்த வேலைகளுக்கு வெளியில் கிளம்பிவிட்டார். சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் ரிதுவின் அலைபேசி மாடியில் இருந்து அழைத்தது.
உடனே கைகழுவ எழுந்தாள் ரிது. ஆனால் திலோ, “முழுசா முடிச்சிட்டுப் போடீ”, என்றார்.
“நோ வே”, ரிது.
“என்ன நோ வே! எப்படி இருந்தாலும் நீ போறதுக்குள்ள அது கட்டாயிரும். நீதான போய் கால் பண்ணனும்? அதுக்கு ஒழுங்கா சாப்பிட்டு, நிதானமா போனாத்தான் என்ன?”, திலோ சற்று அதட்டித்தான் சொன்னார்.
ஆனால், ரிது எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லை. மாடிக்குச் சென்று அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்தது போலவே யோகியிடமிருந்துதான் அழைப்பு வந்திருந்தது. தவறிய அழைப்பிலிருந்து உயிர்ப்பித்தாள் யோகியை.
“ஹாய் யோகி, குட் மார்னிங்!”, என்றாள் அதுவரை இல்லாத புத்துணர்வுடன்.
“மார்னிங் ரிது! ஹவ் ஆர் யூ?”, யோகி.
‘ஐ லவ் யூன்னு எதிர்பபார்த்தா, ஹவ் ஆர் யூவா?’
“யா, நைஸ்”, என்றாள் சுரத்தேயில்லாமல்.
“ஆர் யூ ஃப்ரீ டுடே?”
“யா, ஸ்யூர்! சொல்லுங்க யோகி”
“ஃபோன்ல சொல்ல முடியாது! நேர்ல சொன்னா நல்லாருக்கும்னு நெனக்கிறேன். ஒங்களப் பாக்கனும், பேசனும் ரிது?”, யோகி சற்று தயங்கிப் பேசினான்.
“எங்க? எப்ப?”
“நீங்க எப்ப வேணா வாங்க. நா அந்த நேரத்துல என்ன ஃப்ரீ பண்ணிக்கிறேன். ஒரு டென் மினிட்ஸ், ப்ளீஸ்!”.
“ட்ரைப் பண்றேன் யோகி. அம்மாட்ட என்ன சொல்லிட்டு வர? ஏற்கனவே, இப்பெல்லாம் அம்மா ரொம்ப கேள்வி கேக்கறாங்க! சமாளிக்க முடியல!”
“என்னப் பாக்கத்தான் வறேன்னு சொல்லிட்டு வாங்களேன்!”
“நோ ச்சான்ஸ்! விடவே மாட்டாங்க!”
“நா வேணா பேசவா?”
“நீங்களா? அம்மாட்டையா? என்ன சொல்லப் போறீங்க!”, சிரித்தாள் ரிது.
“உண்மையச் சொல்றேன்!”
‘பெரிய பாஷா பட ரஜினின்னு நெனப்பு’ “அத எங்கிட்டல்ல சொல்லணும்!”, தன் காதலை ஏற்று பேசப் போகிறான், என தப்புக் கணக்குப் போட்டு, மகிழ்மனதுடன் பேசிக்கொண்டிருந்தாள் ரிது.
“நீங்க பயப்படுறமாதிரித் தெரியிது ரிது! கொஞ்சம் மேடத்திட்ட ஃபோனக் குடுங்களேன். அப்பறம் உங்கள ஃப்ரியா உடுவாங்க”, யோகி உறுதியாகக் கூறினான்.
“கொஞ்சம் லைன்லயே இருங்க” என்று அலைபேசியுடன் கீழே வந்தாள் ரிது.
அதுவரை இவள் பேசுவதை கீழே இருந்தே, கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த தாய், மகள் அவளை நோக்கி வருவதை ஆச்சரியமாகப் பார்த்தார்.
“அம்மா, யோகி லைன்ல இருக்காரு. ஒங்கட்ட ஏதோ பேசனுமாம்”, ரிது.
“எங்கிட்டயா!”, ஆச்சரியத்துடன் அலைபேசியை வாங்கி காதில் வைத்தாள். “ஹலோ, சொல்லுங்க யோகி”, திலோ.
“குட் மார்னிங் மேடம்!”
“மார்னிங்! என்ன விசயம்?”
“மேடம் ஒரு முக்கியமான விசயம் பேசனும்! ஆர் யூ ஃப்ரீ நௌ?”, யோகி தயங்கினான்.
“சும்மா சொல்லுங்க, நா ஃப்ரீதான்”, திலோ.
“வந்து மேடம்… ரிதுவுக்கு எம்மேல அஃபைர் இருக்கறதா ஃப்ரண்டு மூலமா தெரியவந்துச்சு மேடம். பட் இதுவரைக்கும் பேசும்போதுகூட நானோ, இல்ல ரிதுவோ கொஞ்சம்கூட எல்லை மீறல. ஆனா இப்பதான் எனக்கு தெரியவந்துச்சு! இப்ப இருக்கிற ரிதுவோட மனநிலைல நீங்க எதுவும் சொன்னீங்கன்னா அது கண்டிக்கிற மாதிரி இருக்கும். அது இந்த வயசுல ரிவர்ஸ்ல நெனக்கக்கூட தோனும்! அதுனாலே நானே ரிதுட்டப் பேசி, இந்த விசயத்தை க்ளீயர் பண்ணிறேன் மேடம். ஏன்னா, தப்புக்கு நானும் ஒரு காரணமோன்னு, எனக்கும் லேசா குற்ற உணர்ச்சியா இருக்கு!”
“சரி, இப்ப நா என்ன செய்யணும்!”, சுருக்கமாக கேட்டார் திலோ.
“ஒன்னுமில்ல மேடம். ரிதுக்கு ஃப்ரீ டைம் இருந்தா, கஃபே வரைக்கும் ஒரு பத்து நிமிஷம் வந்துட்டுப் போனா, நா பேசிப் புரிய வச்சிருவேன் மேடம்!”
“சரி, நா பேசிட்டு சொல்றேன். எனித்திங் எல்ஸ்?”
“நத்திங் மேடம்! நா ஃபோனக் கட் பண்ணிறவா?”
“ஓக்கே நைஸ் யோகி! பை”, என்று திலோ அலைபேசியை அணைத்தார்.
இவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாததால், அன்னை என்ன சொல்லப் போகிறாரோ என்று அவரையே பார்த்துக்கொண்டிருந்தாள் ரிது.
“நீ கஃபே வரைக்கும் போய்ட்டு வந்துரு?”, என்று கூறிய திலோ அலைபேசியை அவளிடம் கொடுத்தார்.
‘வாட் எ மிராக்ல்! மாயம் என்ன செய்தாய் மன்னவா! மம்மியே போயிட்டுவான்றாங்க!’, ரிது.
அங்கிருந்து அவசரமாக அறைக்குள் சென்ற திலோத்தமை, உடனடியாக தன் கணவர் ராஜசிம்மனை தொடர்புகொண்டு, மெல்லி குரலில், பதற்றம் இல்லாமல் பேசினார்.
“என்னங்க நீங்க இன்னக்கி கஃபே போக வேண்டாம், ப்ளீஸ்!”, திலோ.
“என்னம்மா நைட்டு அவ்ளோ சொன்ன! அதப் பத்தி என்ன, ஏதுன்னு தெரிஞ்சுக்க வேணாமா?”, ராஜு.
“எல்லாமே தெரிஞ்சுதான் சொல்றேன்! முடிஞ்சா சீக்கிரமா வீட்டுக்கு வாங்க. நீங்களும் எல்லாமே விளக்கமா தெரிஞ்சுக்கலாம்”, திலோ.
“ஓக்கேமா, நீ சொன்னா அப்பீல் ஏது! சீக்கிரமா வறேன். எனித்திங் சீரியஸ்?”, ராஜு.
“நத்திங் சீரியஸ்!”
“நம்ம பொண்ணு எதுவும் சொல்லுச்சா?”, ராஜு.
“இல்ல யோகியே சொல்லிட்டாரு! பட் ஃபோன்ல எல்லாத்தையும் எக்ஸ்ப்ளைன்டா பேச முடியாது. ரிதுவ ரெடிபண்ணணும்”, திலோ.
“என்ன சொல்ற திலோ! எதுக்கு ரிதுவ ரெடி பண்ணணும்? யோகி வீட்ல இருந்து பொண்ணு பாக்க வராங்களா என்ன? சித்து வீட்ல செஞ்ச மாதிரி!”, ராஜு விடுவதாக இல்லை.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல! நீங்க முடிஞ்சா சீக்கிரமா லஞ்சுக்கு வரீங்களா?”, திலோ.
“வரேன்”, என்று ஒற்றை வார்த்தையுடன் முடித்து அலைபேசியை அணைத்த சப்தம் எதிர் முனையில் கேட்டதும் திலோவும் தன் அலைபேசியை அணைத்துவிட்டு தன் மகள் ரிதுவைத் தேடிப் போனாள்.
அதற்குள் ரிது கிளம்பியிருந்தாள். அவளை அருகில் அழைத்து மிகவும் மென்மையாக, யோகி என்ன சொன்னாலும், தன்னிடம் எதையும் மறைக்காமல் கூற வேண்டும், உணர்ச்சிவசப்பட்டு அங்கு எதுவும் பேசிவிட வேண்டாம் என்றும் அவளுக்கு அறிவுரைபோல் கூறி அனுப்பினார்.
‘அதெல்லாம் அம்மாட்ட போய் எப்படி சொல்லுவாங்க!’, யோசனையுடன் ரிது தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
©©|©©
ரிதுவந்திகா வருவதை கஃபேயின் கண்ணாடி வழியே பார்த்துவிட்ட யோகிதாஸ், நின்றுகொண்டிருந்த இடத்தில் இருந்து தன் அலுவலக அறைக்குச் சென்று அமர்ந்துகொண்டான். முந்தைய நாள் ராஜசிம்மன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த அதே இருக்கை! அவளிடம் பேச வேண்டிய விசயங்களைப் பற்றி மறுபடியும் மனதுள் ஒரு முறை ஓடவிட்டுக்கொண்டான்.
“ஹாய் யோகி!”, என்று உற்சாகத்துடன் உள்ளே நுழைந்தாள் ரிது.
“ஹாய் ரிது! கம்மின், என்ன சாப்பிடுறீங்க?”, யோகி.
“ப்ரேக்ஃபாஸ்ட் இப்பத்தான் முடிச்சேன். அதனால ஒன்னும் வேணாம். உங்களுக்கு எதுவும் வேணும்னா சொல்லிக்கோங்க. ஐ ஹேவ் நோ அப்ஜெக்சன்!”, ரிது.
“ஐம் ஆல்ஸோ ஃபுல்லி லோடட்! ஸோ நோ வே! ஆர் யூ ஃபீல் கம்ஃபர்டபுல் ரிது?”
“யா, அஃப்கோர்ஸ்! சொல்லுங்க யோகி, ஏன் இவ்ளோ ஃபார்மலா பேசுறீங்க!”
“நேத்து உங்க விசயம் கேள்விப்பட்டதுல இருந்து நா அப்நார்மலா இருக்கேன்! அதான் கேட்டேன்”
யோகிதாஸ் ‘உங்க விசயம்’ என்று கூறியதில் இருந்தே ரிதுவந்திகாவுக்கு சற்று புரிந்தது. இனி வரும் வார்த்தைகள் தன் எண்ணத்திற்கு மாறானதாக இருக்கலாம் என்று நினைக்க ஆரம்பித்தாள்.
“என்ன கேள்விப்பட்டீங்க?”
“உங்களுக்கு எம்மேல அஃபையர் இருக்கறதா சித்து சொன்னான். அவனுக்கு சம்யு சொன்னாங்களாம். மொதல்ல ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு அப்பறம், பேரன்ட்ஸ்கிட்ட சொல்லிக்கலாம்னு சொன்னீங்களாம்”, யோகி தயங்கித் தயங்கி விசயத்தை ஆரம்பித்தான்.
“ஆமா, சொன்னேன்!”, என்றாள் ரிது முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு.
“ஆனா, அந்த மாதிரி நடந்தா ஒங்க பேரன்ட்ஸ் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க. அது மட்டுமில்ல, இந்த ஊர்ல உங்கப்பாவோட ஸ்டேட்டஸ் ரொம்ப டேமேஜ் ஆயிடும். உங்களோட கம்ப்பேர் பண்ணா நா ஈக்வலா இருக்க மாட்டேன். அதுக்காக என்ன நா இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸோட இருக்கறதா நெனச்சுக்காதீங்க. எனக்கு எம்மேல ஃபுல் கான்பிடென்ட்ஸ் இருக்கு!”
“ஆனா பேசுறதப் பாத்தா அப்படித் தெரியலயே யோகி!”
“சரியா யோசிங்க ரிது! முழுசா சொல்லி முடிச்சிறேன்”
“சரி, சொல்லுங்க”
“என்னால எங்க போனாலும் சைன் பண்ண முடியும். ஃப்யூச்சர்ல, என்னோட ஃபேமிலி, எங்கம்மா எல்லாத்தையும் சந்தோசமா பாத்துக்க முடியும். ஆனா, ஒங்க பேரன்ட்ஸ கொஞ்சம் நெனச்சுப்பாருங்க! என்னோட நீங்க வந்துட்டா, இதுவரைக்கும் அவங்க எதுக்காக வாழ்ந்தாங்களோ, அத நாம கெடுத்தமாதிரி ஆயிடும். எக்காரணத்தக்கொண்டும் அவங்களோட சாபத்துல நம்மோட வாழ்க்கை ஆரம்பம் ஆகக் கூடாது”, என்று யோகி தான் நினைத்ததில் ஓரளவுதான் கூறியிருந்தான். மேலும் ஏதோ கூற வந்தான்.
ஆனால், அனைத்தையும் கேட்கும் மன நிலையில் ரிதுவந்திகா இல்லை. அவளின் எண்ணங்கள், கனவுகள், கொஞ்சம் கொஞ்சமாக தவிடுபொடியாவதாக உணர்ந்தாள். அதனால் யோகிதாஸின் பேச்சை முழுவதும் கேட்காமல், இடைமறித்து வெதும்பினாள்.
“போதும் யோகி! இப்ப என்ன, எங்கப்பாவோட ஸ்டேட்டஸ், நா ஒங்களுக்கு ஈக்வலா இருக்க மாட்டேன், பேரன்ட்ஸ் சாபம் இருக்கக் கூடாது! இதத்தான சுத்திசுத்திச் சொல்ல வறீங்க? எல்லாத்தையும் சரி பண்ணிட்டா, எங்கப்பா வாயாலயே சொல்ல வச்சுட்டா, மேரேஜுக்கு ஒத்துக்குவீங்களா?”, ரிது.
“இதெல்லாம் ஃபோர்ஸ் பண்ணி வரக்கூடாது ரிது”
“ஃபோர்ஸ் பண்ண மாட்டேன்! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!”, என்று கூறியவள், யோகியின் பதிலையோ, மேற்கொண்டு அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதையோ கேட்காமல், கோபத்துடன், அறைவிட்டு வெளியேறினாள்.
அவள் வெளியேறிய பின், சற்று இடைவெளி விட்டு, யோகிதாஸ் வெளியில் வந்து பார்த்தான். ஆனால் அதற்குள் ரிதுவந்திகா வண்டியை எடுத்து, முதுகைக் காட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள்.
ரிதுவந்திகாவின் மனதில், தான் கிளம்பும்போது தாய் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. இதைக் கணித்துதான், எதுவானாலும் தன்னிடம் மறைக்காமல் கூறச் சொன்னார்களா? தனக்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே ஆறுதல் தாய்தான், என வண்டியை வேகமாக ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு விரைந்தாள்.
ஆனால், வீட்டிற்கு அருகில் வந்துகொண்டிருக்கும்போதே, அவளைப் போலவே, அவள் வாகனத்திலும் மனக்குமுறல் (இன்ஜினில் ஏதோ சத்தம்) ஏற்பட்டு நின்றுபோனது. அதை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, தனக்கு பழக்கமான பழுது நீக்கும், பணிமனையைத் தொடர்புகொண்டாள்.
பொறிமுறையாளர் (மெக்கானிக்) தான் வந்து வண்டியை எடுத்துக்கொள்வதாகவும், வண்டியை மட்டும் அங்கேயே நிறுத்திவிட்டு, சாவியை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் செல்லுமாறும் கூறினான். பிறகு தான் வீட்டிற்கு வந்து சாவியை வாங்கிக்கொண்டு, அங்கிருந்து வண்டியை எடுத்து சரிசெய்து கொடுப்பதாகக் கூறினான்.
வாகனமும் சதி செய்வதாக சபித்துவிட்டு, அதை அருகில் தனக்குத் தெரிந்த ஒரு கடையில் நிறுத்திவிட்டு, நடந்தே தன் இல்லம் நோக்கி வந்தாள் ரிதுவந்திகா.
அவளுக்காகவே எங்கிருந்தோ ஒலித்துக்கொண்டிருந்தது அந்த இனிய மெல்லிசை!
இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கணமே
பனியில் மூடிபோன பாதை மீது வெய்யில் வீசுமா
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா
அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய் (2)
©©|©©