Uyirodu Vilaiyadu – 8

download-bac74687

(2017 ஆம் ஆண்டில் 32,500 க்கும் மேற்பட்ட கற்பழிப்பு வழக்குகள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஒரு நாளைக்கு சுமார் 90, அரசாங்கத்தின் சமீபத்திய தகவல்களின்படி.

இந்திய நீதிமன்றங்கள் அந்த ஆண்டு கற்பழிப்பு தொடர்பான சுமார் 18,300 வழக்குகளை மட்டுமே தீர்த்து வைத்தன, 127,800 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.  

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதற்காகத் தமிழக காவல் துறையால் அமைக்கப்பட்ட இந்தச் சிறப்புப் பிரிவு, lockdown  காலத்தில் பெண்களிடமிருந்து 5,740 அழைப்புகளைப் பெற்றுள்ளது. இவற்றில், தம்பதியினருக்கு ஆலோசனை வழங்கப்பட்ட 5,702 வழக்குகளை அலகு தீர்த்து வைத்துள்ளது.

21,605 சிறுவர் பாலியல் பலாத்காரங்கள் 2018 இல் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் 21,401 சிறுமிகள், 204 வழக்குகள் சிறுவர்கள் என்கிறது என்.சி.ஆர்.பி தரவு அறிக்கை.)

அத்தியாயம் -8

‘வானத்தை வெறுமையாய் வெறித்துப்

பார்த்துக் கொண்டிருக்கும், 

அந்தப் பசி நிறைந்த கண்களைப் பாருங்கள். 

உங்க நெஞ்சம் பதறவில்லையா?…

நம்பிக்கை தீபம் மெல்ல மங்கி,  

சாக்குடன் நடக்கும் அந்தப் பிஞ்சு மலரின் 

 இந்தச் சிறிய தோள்களில் 

அதிக சுமை வாழ்கிறது…

அதைச் சுமக்க உங்களுக்கு

மனம் வரவில்லையா?… 

இந்தக் கந்தல்களுக்குள் ,

உணவோ  புத்தகமோ  இல்லை, 

கடைப்பிடிக்க வேண்டிய,

பெரிய பொறுப்புகள் மலையாகக் குவிந்து உள்ளது. 

அதைப் பகிர்ந்து கொள்ள 

உங்கள் மனிதம் முன்வரவில்லையா?…

இந்த அழுக்கு முகத்தின் பின்னால், 

பசியால் சுருங்கிய தேகத்தின் பின்னால், 

துர்நாற்றம் வீசும் ஆடைகளுக்குப் பின்னால், 

வெறுமை நிறைந்த அந்தக் குரலுக்குப் பின்னால், 

ஒரு மென்மையான சிறிய இதயத்தின் துடிப்பு, தவிப்பு  

அது உங்கள் காதுகளுக்குக்

கேட்கவே இல்லையா ?

காப்பு காய்த்த கைகள், அழுக்கேறிய தேகம்  

 தீங்கிலிருந்து எவ்வித பாதுகாப்பும் இல்லாத 

வாழ்வாகி போன நரகம்… 

அந்த நரகத்திலிருந்து இவர்களை மீட்க, 

நீங்கள் ஒன்றுமே செய்யப் போவதில்லையா ?

கட்டுமான தளங்களில், சாலையோரத்தில்,

 ரசாயன தொழிற்சாலைகளுக்குள் 

இந்தப் பூக்கள், நாளுக்கு நாள் கருகுகின்றன… 

அதனைத் தக்க சமயத்தில் காக்க,

உங்கள் கரங்கள் நீளப் போவதில்லையா? 

மலர்கள், பூக்களாக இருக்க வேண்டும். 

இல்லையென்றால் அவர்களின் கோபம்

நாகரீகத்தின் சாபம்.

அந்தச் சாபம் உங்களைப் பொசுக்கும் முன் 

உங்கள் மனிதம் உயிர்க்கவில்லையா?…’  என்று எங்கோ படித்த கவிதை வரிகள் நினைவிற்கு வர, சம்யுக்தாவிடமிருந்து பெருமூச்சு வந்தது.

எண்ணில் அடங்காச் செல்வங்களின் வலி, வேதனை கண்டும் காணாமல் போகும் மனிதர்களுக்கு, அந்தப் பிஞ்சுகளின் கோபம், சமுதாயத்திற்கு சாபக்கேடாய் தான் மாறிக் கொண்டிருக்கிறது.

‘யாருக்கோ!…’ என்று நாம், இன்று கடந்து போவது ஒரு நாள் நம் தலையில் விடிவதற்கு நேரம் ஆகாது தான்.

இன்று நீளும் ஒரு கை, ஒரு அணை உடைந்து, ஊரே வெள்ளத்தில் முழுகுவதற்கு முன் காப்பாற்றும் என்பது தான் உண்மை. 

செல்வம் போன்ற காற்றாற்று வெள்ளத்தை அன்பு என்னும் அணை கொண்டு தடுக்க ஈஸ்வர் இருந்தான். மற்ற செல்வங்களின் அணை உடைந்தால்…?

செல்வத்தின் கதையே மனசை பதற வைத்திருந்தாலும், செல்வம் தடம் மாறிப் போகாமல் தடுத்து நிறுத்தப்பட்டு,   ஈஸ்வர் என்ற ஒருவனால் இன்று செல்வம் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறான் என்ற எண்ணமே சம்யுவை பெருமை கொள்ள செய்தது.

அந்தப் பெருமையுடன், “அப்போ எமி?…” என்றாள் சம்யு.

“செல்வம் என் கூட ஸ்கூல் படிக்கச் ஆரம்பிச்சு ஒரு  வருஷம் ஆகியிருந்தது. அப்போ ஸ்கூல்ல, எங்களை ஊட்டிக்கு டூர் கூட்டிட்டு போனாங்க.

அங்கே  நாங்க தங்கிய ஹாஸ்டல் பின்புறம் சுடுகாடு இருந்துச்சு. பசங்க என்னையும், செல்வத்தையும், ‘சுடுகாடு என்றால் பேய் இருக்கும்… நீங்க ரெண்டு பேரும் தைரியசாலி என்றால், அங்கே போய் இரவு முழுவதும் தங்கிட்டு வாங்க.’ என்று உசுப்பேத்தி விட்டாங்க.

செல்வம் எப்பவுமே கோபக்காரர். இப்படி சொன்னதும் என்னையும், அங்கே நடுராத்திரி என்று கூடப் பார்க்காமல் கூட்டிட்டு போய்ட்டார்.   கையில் சின்ன டார்ச் அவ்வளவு தான். 

சப்பா!… இப்போ நினைச்சாலும் உடலே நடுங்குது. ஊட்டிப் பனி, குளிர், நள்ளிரவு என்று அமானுஷயம் கலந்த, அடிவயிறு கலங்க வைக்கும் திகில் எபெக்ட். 

இவர் போய் ஒரு கல்லறை பக்கம் உட்கார்ந்துட்டார். அவர் கையைப் பிடிச்சிக்கிட்டு, கண்ணை மூடி நானும் உட்கார்ந்துட்டேன். எங்களை அங்கே யாராவது பார்த்து இருந்தாங்க, ‘குட்டி சாத்தான் ரெண்டு  உட்கார்ந்து இருக்குன்னு’  ஹார்ட் அட்டாக் வந்து போய்ச் சேர்ந்திருப்பாங்க.

அப்போ தான் அந்தச் சூழ்நிலைக்கு, ‘dts எபெக்ட்’ கொடுப்பது போல் ஒரு அழுகை கேட்டுச்சு. செல்வம் தான் குரல் வந்த திசையை நோக்கிப் போனார். 

முதலில் பசங்க தான் ஏதோ, prank செய்யறாங்க, எங்களைப் பயமுறுத்த ட்ரை செய்யறாங்க என்று செல்வம் அசையவேயில்லை.  என்ன தோணிச்சோ, சத்தம் வந்த திசையை நோக்கி ஓட ஆரம்பித்தார்.  

‘பேய் அழுவறதை எல்லாம் வேடிக்கை பார்க்கப் இப்படித் ஓடிப் போறாரே!…’ என்ற பயத்துடன் தான், நானும் பின்னால்  போனேன்…

 அது தெளிவான குரல் கூடயில்லை சம்யு. ‘ஈனசுவரம்’ என்று தமிழில் ஒரு வார்த்தை கேள்விபட்டு இருக்கியா?… உயிர் போகும் அந்தக் கடைசி நொடியில், உயிர் போக விரும்பாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலை.

அப்படியொரு குரல் அது. இன்னமும் அந்த ஒலி என் காதில் ஒளிச்சிட்டு தான் இருக்கு.” என்றவனின் குரல் தேய்ந்து போக, எதையோ நினைவிலிருந்து அழிக்க விரும்புவனாய், தலையைக் குலுக்கி கொண்டான் ஈஸ்வர்.

சம்யுவின் இதயம் ஒரு நொடி தன் இதய துடிப்பை நிறுத்திப் பின் துடிக்க ஆரம்பித்தது. மிடறு விழுங்கியவள், ஈஸ்வர் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள். மருத்துவரான அவளுக்கு ஈஸ்வர் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிந்து விட்டது.

இது போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை அளித்து, அந்த வலியும், வேதனையும் கண்டு மனம் புழுங்காத நாளே இல்லை சம்யுவும், ஹேமாவும்.  

எத்தனையோ நாள் உணவோ, உறக்கமோ வந்ததில்லை டிரீட்மென்ட் கொடுத்து விட்டு வரும் நாட்களில்.  அங்குச் சேதப்படுத்தப்படுவது உடல் மட்டுமல்ல, பாதிக்கப்பட்டவரின் மனமும், உயிரும் கூடத் தான்.

புனிதமான தாயின் கருவறைகளிலிருந்து தான், இன்னொரு உயிரை வதைக்கும் மனித மிருகங்கள் பிறந்து இருக்கிறது என்பதையே நம்ப முடிவதில்லை.

ஆனால் நடப்பது அது தானே!.. ஒரு பெண்ணின் மணிவயிற்றில் பிறந்து, இன்னொரு பெண்மையை சிதைப்பது… வார்த்தைகளால் குதறி எடுப்பது… காமத்தை தீர்க்கும் பொருளாக மட்டும் பார்ப்பது. மனிதம் மரிக்கும் தருணங்கள் இவை.’ என்று எண்ணிய சம்யுவின் மனதில் பாரம் அதிகமானது.

எங்கோ யாருக்கோ என்னும் போதே கதறும் சம்யு, தனக்கு தெரிந்த பெண்ணிற்கே என்று தெரியும்போது அந்த வலி இன்னும் அதிகமானது போல் ஒரு உணர்வு தோன்ற, பெருமூச்சை எடுத்து ஈஸ்வர் சொல்லப் போவதை கேட்கத் தன்னை தயார் படுத்தி கொண்டாள்.    

ஆனால் இவையெல்லாம் எப்படி தயார் செய்து கொண்டாலும், இதயத்தை உலுக்கி செல்லும் சம்பவங்கள்.  

ஈஸ்வர்  கண்கள் கண்ணீரில் நிரம்ப, அவன் கையை ஆறுதலாய் பற்றிக் கொள்ள, சம்யுவை இழுத்து அணைத்தான் ஈஸ்வர்.

அந்த அணைப்பில் காமம் இல்லை.  ஆறுதலை தேடும் மனிதன் ஒருவனின் தவிப்பு மட்டும் தான் தெரிந்தது.

அங்குக் குற்றம் புரிந்தவனும் அந்தப் பெண்மைக்கு தெரியாதவன் தான்.  இன்று இப்படி ஆகிவிட்டதே என்று துடிப்பவனும் அந்தப் பெண்ணிற்கு எவ்வித சம்பந்தமும் இல்லாதவன் தான்.  சில சமயம் நெருங்கிய உறவுகள்  கைகளில் சிக்கிய பல உயிர்கள், நெறுக்கப்படுவதும் உண்டு.

 ஈஸ்வரின் அந்த அணைப்பில் சம்யுவிற்கு மூச்சு முட்டியது என்னவோ உண்மை. ஆனால், அசையாமல் ஆறுதலாய் ஈஸ்வர் முதுகை வருடிக் கொடுத்தாள்.

தன்னை தேற்றி கொண்ட ஈஸ்வர், “பார்க்கக் கூடாத நிலையில் எமியை பார்த்தோம் சம்யு. உடல் முழுக்க காயம், ரத்தம் என்று… பதிமூன்று வயசு கூட இருக்காது அப்போ அவளுக்கு. உயிர் ஊசலாடிக் கொண்டு இருந்தது அவ்வளவு தான். 

குழந்தை என்று கூடப் பார்க்காமல்…. சிதைத்து,  அந்தச் சுடுகாட்டிற்கு அருகே இருந்த சாக்கடையில் தூக்கி வீசி இருந்தார்கள். 

எனக்கு என்ன, ஏதுன்னு அந்தளவிற்கு சரியாய் நியாபகம் இல்லை. ஆனால் செல்வம் அண்ணாவிற்கு புரிந்து விட்டது போலிருந்தது. அவ்வளவு ரத்தத்தை பார்த்து நான் உறைந்து போய் நின்றேன்.ஏதோ அந்தப் பெண்ணிற்கு ஆபத்து என்று புரிந்ததே ஒழிய, என்ன ஏது என்று அப்போ எனக்குத் தெரிலை.ஏதோ அடிபட்டு இருக்கு என்று நினைத்துப் பயத்துடன் நின்றிருந்தேன்.   

செல்வம் அண்ணாவிற்கு என்ன செய்யணும் என்று  தெரிந்து இருந்தது. என்னை உதவிக்கு ஆட்களை அழைத்து வரச் சொன்னார்.

‘போ ஈஸ்வர்!… பெரியவங்க யாரையாவது கூட்டி வா…பயப்படாதே!… இந்தப் பெண்ணைக் காப்பாத்த வேண்டும் என்றால், நீ அழைத்து வரும் உதவியைப் பொறுத்து தான் இருக்கு….போ தயங்காதே….போ…’ என்று என்னை அனுப்பி வைத்தார்.   

எப்படி அந்த நள்ளிரவில், அந்த இருட்டில் பயமில்லாமல் ஓடினேன் என்று கூடத் தெரியாது. செல்வம் சொன்ன உயிர் என்றால், என்னவென்று கூடப் புரியவில்லை.ஆனால் அந்தப் பெண்ணிற்கு அந்தளவு ரத்தம் வருகிறது என்றால் ஏதோ கெட்டது என்று மட்டும் புரிந்து ஓடினேன்.    

நான் ஆட்களைக் கூட்டி வரும் வரை எமி கூடவே இருந்தது அவர் தான். எமி எல்லோரையும் பார்த்து அலற ஆரம்பிக்க, செல்வம் தான் அவளைத் தூக்கி கொண்டு ஹாஸ்பிடல் வரை வந்தார்.எமி கத்தியது ஏனோ பயமாய் இருந்தாலும் அவள் கையைப் பிடித்துக் கொண்டேன். என் கையை அவளும் விடவில்லை.   

உயிரைக் காப்பாற்றுவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. ஏறக்குறைய ஐந்து வருடம் அவளின் அலறல் நின்றது இல்லை. நானோ, செல்வமோ இல்லையென்றால் அவளைக் கட்டுப்படுத்தவே முடியாது. 

ஐந்து நிமிடங்களில் கொடூரத்தை புரிந்து விட முடிந்த மிருகங்கள் செய்த செயலுக்கு  இன்றுவரை எமியோடு கூட இருக்கும் நாங்களும் துடித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.

என்னையும் செல்வத்தையும் தவிர வேறு யாரையும் அவள் நம்புவதும் இல்லை. அருகே சேர்ப்பதும் இல்லை.

எத்தனையோ கவுன்செல்லிங் , மனதைரியத்தை வளர்க்கும் வகுப்புகள், இதில் உன் குற்றம் எதுவுமே இல்லை, என்று அவளை மீட்பதற்க்குள் நாங்க மட்டுமில்லை அவளும் பல முறை செத்து தான் பிழைத்தாள்.

 எப்படியோ உடல் நலத்தையும், மன நலத்தையும் மீட்டு விட்டோம். அவளை மாதிரி தில்லான பெண்ணை எங்கேயுமே இப்பொழுது பார்க்க முடியாது. ஒரு வித திமிர், ஆணவம், ஆங்காரம் மாதிரி நடந்துப்பா வெளியாட்கள் கிட்டே… 

ஆனா, பழகிட்டால் உயிரைக் கொடுக்கக் கூடத் தயங்க மாட்டா. செம்ம கேரிங் டைப். அவ இருக்கும் இடமே லைவ்லியா இருக்கும். அதிலும் நான் என்றால் இன்னும் ஸ்பெஷல் தான் அவளுக்கு. 

‘மோனலிசா’ என்று பியூட்டி பார்லர் பிரான்ச் கேள்விப்பட்டு இருக்கியா சம்யு?…. இந்தியாவில் நூற்றுக்கணக்கில், franchise மாதிரி இருக்கே!… அது எமி ஆரம்பித்தது தான்… பெரிய பெரிய கோடீஸ்வரர்கள், சினிமா பிரபலங்கள் எல்லாம் இவ கடையில் வந்து தான் தங்களை அழகு படுத்தி கொள்வார்கள்.” என்ற ஈஸ்வரின் குரலே, எமி அடைந்த இன்னலைகளை, அவன் முழுவதுமாய் சொல்லவில்லை, மேம்போக்காக மட்டுமே சொல்கிறான்  என்பதை உணர்த்தியது.

‘எமியின் இன்றைய எடுத்தெறிந்து பேசும் குணமும், திமிர் தனமும், எவனா இருந்தா எனக்கென்ன அந்த முரட்டு தனத்தின் பின் இருப்பது, அன்றைய இரவின் தாக்கமே!

அழகான, மென்மையான மலர் ஒன்றை அன்றைய இரவின் மனித வக்கிரம், இப்படி மாற்றி இருக்கிறது. 

எந்தப் பெண்ணிற்கும், குழந்தைக்கும் நடக்க கூடாத அவலம் அது. ஆனால்,  உலகத்தில் ஐந்து வினாடிக்கு ஒருமுறை அரங்கேறி கொண்டிருக்கும் கொடுமை. நமக்குத் தெரிய வருவது கொஞ்சம். வெளி உலகிற்கு தெரிய வராமல் இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் மாண்டு போகும் உயிர்கள் எத்தனையோ!…   

இன்னொரு உயிரின் வலியைவிட, தன் நொடி நேர சந்தோஷம் பெருசு என்று நினைக்கும் மனித மனம், இன்னும் தரம் இறங்க வேறு எதுவும் இருக்க முடியாது.’ என்று எண்ணங்கள் ஓட, எமியின் நிலை சம்யுக்தாவின் மனதை அப்படியே கசக்கி பிழந்தது.

 ‘பாலியல் வன்கொடுமைகள், இல்லறங்களில் நடக்கும் வன்முறைகள், அடி, உதை என்றுமே பெண்களின் குற்றம் இல்லை. காதல், திருமணம் என்று ஆசை வார்த்தை கூறி பெண்மையானது ஏமாற்றப்பட்டாலும், அதுவும் இந்திய தண்டனை சட்டத்தின் படி குற்றமே என்பது’ orinam, ஸ்னேஹா மும்பை, arpan போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் சம்யுவின் சேவையும் இருப்பதால், ஈஸ்வர் சொல்லாமல் விட்டது எல்லாம் சம்யுவிற்கு புரியவே செய்தது.

 “ரிஷி?…” என்றாள்  சம்யு.

“அவனும் எமி மாதிரி தான். பெண் குழந்தைகளுக்கு மட்டும் தான் பாலியல் வன்கொடுமை நடக்குமா என்ன!… ஆண் குழந்தைகளிடமும் அதை நடத்துபவர்கள் இருக்கிறார்கள்.

அவன் எப்படி, யாரால் அங்கே விற்கப்பட்டான் என்பதெல்லாம் அவனுக்குமே தெரியாது. அப்படி ஆண் குழந்தைகளை வைத்துத் தொழில் நடத்தும் இடத்தில் படாதபட்டு, தப்பி வந்தவன், மயக்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் கிடக்கும்போது தான், அவனை மீட்டோம்.

விழுந்த வேகத்தில் அவனுக்குப் பழசு எல்லாமே மறந்து போய்  இருந்தது. நினைவு வந்தபோது, தனக்கு நேர்ந்த கொடூரத்தை எல்லாம் தாங்க முடியாதவனாய் போதை மருந்துக்கு அடிமையாகி, ரெண்டு முறை ஓவர் டோஸ் என்ற நிலைக்குப் போய், அவனை அதிலிருந்து மீட்பதற்க்குள் போதும் போதுமென்றாகி விட்டது. எங்கள் மூவரை தவிர வேறு யாரிடமும் பேசமாட்டான்.

இன்று சார் வெளிநாட்டு கார்கள் விற்கும் ஷோ ரூம், ‘urban clap’ மாதிரி வீட்டு வேலைகளுக்கு, சர்வீஸ், ரிப்பேருக்கு   ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்திட்டு இருக்கார். ” என்ற ஈஸ்வரின் குரலில் இருந்தது  ஒரு அண்ணனின் பெருமிதம்.

இந்தமுறை ஆறுதல் தேடி, கேள்விப்பட்ட விவரங்களின் கணம் தாளாதவளாய் ஈஸ்வரை அணைத்து இருந்தாள் சம்யு.

‘தூணாய் இருந்து, சிதைந்து போக இருந்த மூன்று பேரின் வாழ்வை மீட்டு இருக்கிறான் ஈஸ்வர். இவர்கள் மூவரும்  இவன்மேல் இத்தனை பொசெசிவ்நெஸ் காண்பிப்பதில் அர்த்தம் இருக்க தான் செய்கிறது. 

இத்தனை வருடமாய் இவர்கள் நால்வரும் இருந்த குருவி கூட்டிற்குள், புதிதாய் வந்த தன்னை, அந்தக் கூட்டைக் கலைக்க வரும், எதிரியாய் பார்ப்பதில் வியப்பொன்றும் இல்லை’ என்று தான் தோன்றியது சம்யுக்தாவிற்கு.

சம்யுவின் மனதில் தோன்றியதையே ஈஸ்வரின் பேச்சும் பிரதிபலித்தது.

“இப்போ புரியுதா சம்யு… நாங்க யாருமே இல்லாமல், சிறு வயதிலிருந்து ஒருத்தருக்கு ஒருத்தர் என்று இருக்கிறோம். இந்தப் பந்தத்தில் புதுசாய் இணைத்திருக்கும் உன்னை, அவர்கள் சந்தேகத்துடன் தான் பார்ப்பார்கள். எங்கள் மூவருக்குள்ளும் பொசெசிவ்னெஸ் அதிகம். அதிலும் எமிக்கு நான் என்றால் ஸ்பெஷல். 

அவர்கள் மிக மோசமாய் காயப்பட்டவர்கள். ஒன்றுமே இல்லை என்று வாழ்வின் கடைசி படிக்கட்டில், மரணத்தின் விளிம்பில் நின்றவர்கள். எப்பொழுதுமே, ‘செக்கியூர் பீல்/ secure feel’ என்பது அவர்களுக்கு இருக்காது.

ஒரு மருத்துவராய் இவர்களுக்கெல்லாம் உடலில் மட்டுமல்ல, மனதிலும் காயம் பட்டவர்கள் என்பது உனக்குப் புரிந்து இருக்கும். அவர்கள் சூழ்நிலை யாருக்கும் வரக் கூடாத ஒன்று.

அவர்களை ஜட்ஜ் செய்யாதே!… அவர்கள் நிலையிலிருந்து பார்க்கும் போது தான், அவர்களின் செயல்களுக்குக் காரணம் புரியும். ஒருத்தரின் நிலையில் நாம் இல்லாதபோது, எந்தச் சூழ்நிலையில் அவர்கள் அப்படி நடக்கிறார்கள், ஏன் அப்படி பேசுகிறார்கள் என்று ஜட்ஜ் செய்ய யாருக்குமே உரிமை இல்லை சம்யு.

அது காயம் கூட இல்லை. சுக்குநூறாய் உடைந்து போன மனது. இவர்கள் இழந்தது ஏராளம். அதுவும் விலைமதிப்பில்லாத குழந்தை பருவம்… அதுவே இல்லாமல் போனவர்கள்.

கவலை, வலி, வேதனை என்ற ஒன்றின் நிழலே அறியாத குழந்தை பருவத்தில், அன்னை, தந்தை, குடும்பம் இதன் பாதுகாப்பில் இருந்திருக்க வேண்டியவர்களுக்கு எதுவெல்லாம்  நடக்க கூடாதோ அதையெல்லாம் அனுபவித்தவர்கள்.      

இவர்கள் சாதாரண மனிதர்களின் மன உணர்வுகளுடன் இல்லாதவர்கள் சம்யு. இங்கே இவர்கள் நரகத்தை அனுபவித்த போது, நீளாத எந்தக் கரமும், இவர்களுக்காகச் சிறு துரும்பை கூடக் கிள்ளி போடாத எவருக்கும், இவர்களை ஜட்ஜ் செய்ய உரிமையில்லை.

யேசுநாதர் கூறியது போல், ‘பாவம் செய்யாதவர்கள் முதல் கல்லை எடுத்து வீசட்டும். ‘  இங்கே இதுபோல் நடப்பதை அறிந்தும், அதற்காக எதையும் செய்யாத எல்லோரும் பாவிகளே!… பாவத்தை நாமே செய்து கொண்டு, இன்னொருத்தர் பாவி என்று சொல்ல என்ன அருகதை இருக்கிறது நமக்கு?

‘ஹ்ம்ம்!… இதுக்கெல்லாம் நாம என்ன செய்ய முடியும்?…’ என்று நொண்டிச் சாக்கு சொல்லிட்டு, இருபத்திநாலு மணி நேரமும், நான்கு சுவற்றுக்குள் இருந்து உலகத்தைக் காப்பாற்ற, பேச்சில் முயலும் அனைவரும் பாவிகளே!….உதவ தேவை மனம் மட்டும் தான். அந்த மனம் இல்லாதவர்கள் எல்லோரும் ராட்சசர்களே!…    

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு சம்யு. எப்படி உதவ இவர்கள் முதல் அடியைக் கூட எடுத்து வைக்கமாட்டார்கள் தான். ஆனால் வலைத்தளத்தில் சென்று செக் செய்து பாரு.

ஆயிரக்கணக்கில் முதல் அடி உதவ எடுத்து வைத்த அமைப்புகள் உண்டு. அதில் பணம் கொடுக்க முடியவில்லை என்றால் கூட, ஒரு மணி நேரம் ஒதுக்கி, இவர்களுக்கெல்லாம் உதவ முடியாது என்னும் போது செல்வம், எமி, ரிஷியின் நிலைக்கு இவர்களும் காரணமே.

நாட்டில் உனக்கான உரிமை மட்டுமில்லை. சமூகத்திற்கு உனக்கான கடமையும் உண்டு. நாட்டை, சமுதாயத்தை, லட்சக்கணக்கான மக்களின் உழைப்பை, taken for granted.’ என்று எடுத்துக் கொண்டு, பேச யாருக்கும் உரிமை இல்லை.                

இவர்களை நீயும் ஜட்ஜ் செய்யாதே சம்யு.சேவை என்று நீ உன் வேலை நேரத்தையும் தாண்டிப் போகும் சமயங்களில் எல்லாம் இவர்களைப் போன்றோர்களை நீ கடந்து தான் வந்திருப்பாய். மற்றவர்களைவிட, இவர்களின் பாதிப்பை நேரிடையாக நீ கையாண்டவள். புரிஞ்சிக்கோ!… மலராய் இருந்து வைரமாய் இறுகி போன மனம் இவை .   

இத்தனை வருடமாய் நாங்கள் நால்வர் மட்டுமே ஒருத்தருக்கு ஒருத்தர் பாதுகாப்பாய் இருந்திருக்கிறோம். எங்களுக்குள் ஒளிவு மறைவு இல்லை சம்யு…  இனியும் இருக்காது. 

போன் நான் வைத்து விட்டுச் சென்றிருந்தால், அழைப்பு வரும்போது, இவர்கள் கண்ணில்பட்டால் எடுத்து, என்ன, எதுன்னு கேட்டு வைப்பாங்க தான்மா… இதற்கெல்லாம் டென்ஷன் ஆனா எப்படி சொல்லு?…

நான்  அழைப்பை  ஏற்கவில்லை என்றால், என்னவோ, ஏதோ என்று நீயும் தான் பதட்டப்படுவே. நீ,  பதட்டபடக் கூடாது என்று தானேம்மா, அவங்க செய்யும்  வேலையை விட்டு, உனக்குப் பதில் சொல்றாங்க… 

நானும் அவங்களுக்கு வரும் அழைப்பை ஏற்று தகுந்த பதில் சொல்லி விடுவேனேமா!… முக்கிய அழைப்பாய் இருந்தால் என்ன செய்வது சொல்லு?…

அவர்கள் செய்வது குற்றமாக இருந்தாலும், மன்னிக்கச் சொல்லவில்லை. புரிந்து கொள் என்று தான் கேட்கிறேன்.” என்ற  ஈஸ்வரின் விளக்கத்தைக் கேட்டுச் சம்யுக்தாவிற்கு தான்,  ஒரு மாதிரி ஆகி விடும்.

‘உதவி செய்பவர்களைத் தான் உபத்திரமாக நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ!… இவர்கள் மூவரும் கடந்து வந்த பாதை வலி மிகுந்தது. இவர்கள் இன்னொருவரை நம்ப தயாராய் இல்லாதவர்கள்.

ஒரே சொந்தமாய் இருக்கும், இவர்களை இணைத்த ஈஸ்வரை, தங்களிடமிருந்து பிரித்து விடுவார்களோ என்ற அவர்களின் பயம், பதட்டம் தான் இப்படி விஷ வார்த்தைகளைச் சுமந்து வருகிறது. பொறுத்து தான்  போக வேண்டும்.’ என்று எண்ணம் எழும் படி, ஈஸ்வரின் தன்மையான பேச்சு இருக்கும்.

அவர்கள் கடந்து வந்த பாதைக்காக, ஈஸ்வர் கேட்டுக் கொண்டான் என்பதற்காகச் சம்யு இவர்கள் செய்வதை, பேசுவதை எல்லாம் மௌனமாய் கடக்க பழகிக் கொண்டாள்.

ஆனால், இன்று அவர்கள் மூவரும்  பேசியது எல்லா எல்லைகளையும் மீறிய ஒன்று.  தன் மேல் தான் தவறு என்றாலும், அதைச் சொல்லும் விதம் என்று ஒன்று இருக்கிறது அல்லவா!… 

“நான் ஈஸ்வர் இல்லை… இனி பேசும்போது யார் அழைக்கிறாங்க என்று பார்த்துப் பேசுங்க…” என்று சொல்வதற்கும், வார்த்தைகளில் தங்க முலாம் பூசி, அதில் விஷம் வைத்துக் கக்குவது போல் இப்படி பேசி வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது இல்லையா!

இவர்கள்,  இப்படி பொடி வைத்துப் பேசுவதன் உள் அர்த்தம் எல்லாம், ஈஸ்வருக்கு புரியுமா என்பதே சந்தேகமே!…

அவன் தான் அன்பு, பாசம் என்ற கண்ணாடி அணிந்தவன் ஆயிற்றே!.. நாம் யாரின் மீது அதிக பாசம் , அன்பு வைக்கிறோமோ அவர்கள் குற்றமே செய்தாலும், அதை கண்ணை திறந்து கொண்டே தான் குருடாய் பார்ப்போம். 

கௌரவ சபை போல்… 

பாதிப்பு அதிகமாய் இருந்தாலும், ‘என் மகன், என் சகோதரன், என் கணவன், என் தந்தை  அப்படிப் பட்டவர்கள் இல்லை என்ற பாசம் கடக்க முடியாத அகழி.   

இந்த அகழி கடக்க முடியாமல் திணறும் நேரத்தில் தான் செல்வம், எமி, ரிஷி போன்றோர்களின் வாழ்வு, நம் கண் முன்னே அழிந்தாலும், கையைப் பிசைந்து கொண்டு நிற்பதை தவிர குடும்பங்களுக்கு வேறு வழியில்லை.          

செல்வம், எமி, ரிஷி    ஈயென்று வாயைக் காதுவரை இளிப்பது போல் வைத்துக் கொண்டு, ஒன்றுமே தெரியாத அப்பாவி மாதிரி முகம் வைத்துக் கொண்டு, ‘அடப்பாவி!…’ வேலையைச் செய்வார்கள்.   

“என்ன டாக்டர் மேடம்!… பதிலே இல்லை!… இருக்கீங்களா?… இல்லை, ‘ஒரு முடி விழுந்தால் கூட உயிர் வாழாது…’ என்று சொல்வார்களே, கவரி மான், அது மாதிரி அங்கே உங்களுக்கு ஏதாவது ஆகிடுச்சா?…”   என்றான் செல்வம் நக்கலாக.

இந்த மூவரும் இது மாதிரி பேசுவதையே பிழைப்பாய் செய்பவர்கள் என்பது உறுதியாகி விட,  இப்பொழுதெல்லாம் இதற்குச் சம்யுக்தா அதிகமாய் ரியாக்ட் ஆவதில்லை. ஹேமாவிற்கு தான் கொதித்து கொண்டு வரும்.

“அவனுங்களை கிழித்து தோரணம் கட்டுவதை விட்டுட்டு, இப்போ எதுக்கு அப்படியே கௌதம புத்தர் மாதிரி, ‘புத்தம் சரணம் கச்சாமி’ பாடிட்டு இருக்கே!… 

இப்பவே கிளம்பு… அந்த ஈஸ்வர் முன்னிலையில் இவனுங்களை நாக்கை பிடுங்கி கொள்வது மாதிரி நாலு கேள்வி கேட்கணும்… ஈஸ்வர் முடிவு செய்யட்டும்…  நீ முக்கியமா இல்லை அந்த லூசுங்க முக்கியமா என்று…” என்று இடுப்பில் கை வைத்து ஒரு நாள் வெடித்தே விட்டாள் ஹேமா.

ஈஸ்வர் தன்னை நம்பி கூறிய அந்த மூவரின் கடந்த காலத்தைச் சம்யு, ஹேமாவிடம் சொல்லியிருக்கவில்லை.

‘சின்ன வயசில் ரொம்ப கஷ்டப்பட்டவங்க ஹேமா. அது அவங்களின் பெர்சனல். தோழியாக இருந்தாலும், அவர்கள் அனுமதி இல்லாமல் அதைச் சொல்ல எனக்கு உரிமையில்லை.’ என்பர் மட்டுமே சொல்லியிருந்தாள்.    

ஹேமாவால் அந்தச் சமாதானத்தை ஏற்று கொள்ள முடியவில்லை.

‘தன் தோழிபோல்,  உன்னத பெண்ணை இப்படி கேவலபடுத்துபவர்கள் யாராய் இருந்தாலும், அவர்களை ரெண்டில் ஒன்று பார்க்காமல்’ விட ஹேமா தயாராய் இல்லை’ என்பது சம்யுக்தாவிற்கு புரிந்தே இருந்தது.

“செல்லம்மா… ரிலாக்ஸ். ஒரு குட்டி கதை சொல்லட்டுமா?… புத்தர் ஒரு நாள் பிச்சைக்கு போனாராம். அங்கே ஒருத்தன் ரொம்ப கேவலமாய் அவரைத் திட்டினானாம். அதைக் கேட்டு அவர் சீடர் ஆனந்தனுக்கே கோபம் வந்துடுச்சாம். 

கோபம், ஆசை என்று அனைத்தையும் துறந்த புத்த பிட்சுக்கள் அமைதியின் சொரூபம். அப்படிப்பட்ட புத்த பிட்சு ஆன, ஆனந்தனுக்கே கோபம் வந்து விட்டது என்றால், வார்த்தைகள் எப்படி இருந்திருக்கும் யோசி.

ஆனந்தன் இதைக் கேட்கும்போது, அவரிடம் ஒரு கமண்டலம் கொடுத்து விட்டு,  “இது யார் கமண்டலம்?” என்றாராம் புத்தர்.

“உங்களையுடையது தான் குருவே.” என்றாராம் ஆனந்தன்.

“இல்லை இனி மேல் இது உன்னுடையது.”என்று சொல்லி விட்டு, மாலையில் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டார் புத்தர்.

“என்னுடையது குருவே…” என்றாராம் ஆனந்தன்.

“அது எப்படியொரு பொருள் என்னுடையதாகக் காலையில் இருந்தது, மாலையில் உன்னுடையதாக மாறியது?” என்றாராம்  புத்தர்.

“நீங்கக் கொடுத்தீங்க. நான் வாங்கி கொண்டேன்…”  என்றாராம் ஆனந்தன்.

“நான் கொடுத்து நீ பெற்றுருக்கவில்லை என்றால்…”

“அப்பொழுது உங்களுடையதாகத் தான் இருந்திருக்கும்.”

“அதே போலத் தான் அந்த மனிதன் கொடுத்த வார்த்தைகளை, ‘நான் எனக்கானது என்று ஏற்று கொள்ளவில்லை.  நான் ஏற்றுக்கொள்ளாத ஒன்று எப்படி என்னைப் பாதிக்கும் சொல்லு?…’ 

நான் வாங்கி கொள்ளாத வார்த்தைகள், யாரின் வாயில் இருந்து வருகிறதோ அவர்களுக்கே திரும்பி விட்டதாக அர்த்தம்.” என்று சொன்னாராம்.

இதையே தான் நம்ம லோக்கல் பாஷையில் சொல்றது என்றால்,  ‘தெருவில் நாய் ஒன்று நம்மைப் பார்த்துக் குலைத்தது என்றால்,  நீயும் நாலு காலில் கீழ் அமர்ந்து, அதைப் பார்த்துக் குலைத்து கொண்டு இருப்பாயா என்ன?… 

நாய் என்றால் அதன் தன்மை குலைப்பது. அப்படி நினைத்துத் தான்,  சில மனிதர்களின் வார்த்தைகளை நாம் கடந்து விட வேண்டும். இந்த மூன்று பேரின் வார்த்தைக்கு என்னிடம் உள்ள மதிப்பு, அந்த நாய் குலைக்கும் அளவிற்கு தான்.

என்னைப் பற்றி எனக்குத் தெரியும். என் குடும்பம், நண்பர்களுக்குத் தெரியும். எனக்குச் சம்பந்தமே இல்லாத நபர் ஒருவன் என்னைத் தரக் குறைவாகப் பேசினால், அது உண்மை இல்லாதபோது கடந்து விட வேண்டும்.

இப்படி வார்த்தைகளால், மற்றவர்களை வதைப்பவர்கள் பலரை நாம் வாழ்வில் கடந்து தான் வர வேண்டி இருக்கும் ஹேமா. இவர்கள் வார்த்தைக்கெல்லாம், நாம் ரியாக்ட் ஆக ஆரம்பித்தால், நம் வாழ்க்கை நம்முடையதாக இருக்காது.

இவர்களின் குறி நம் வேதனை, வலி மட்டும் தான் ஹேமா… நம்மை அவர்கள் வெல்ல ஏன் விட வேண்டும் சொல்லு!.

 நாம் போய் நியாயம் கேட்கிறேன் என்று போனால், அவர்கள் பேசும் வார்த்தைகளுக்கு மட்டும் அல்ல, சொல்லும் அவர்களுக்கும் மதிப்பு கொடுக்கிறோம் என்று அர்த்தம் ஆகி விடும். அந்த வெற்றியை அவர்களுக்கு நான் கொடுக்க விரும்பவில்லை.” என்ற சம்யுவின் வார்த்தைகள் சரியென்றே பட்டது.

அறிவு இல்லாதவர்களிடம் வாதாடுவது என்பது சுவற்றில் முட்டிக் கொள்வது போன்றது தான்.சுவர் எவ்வித சேதாரமும் இல்லாமல் அப்படியே தான் இருக்கும்.இவர்களைத் திருத்தப் போகிறேன் என்று செல்லும் நம் தலை தான் உடையும்.

இப்பொழுதும் சம்யுக்தா இவர்கள் வார்த்தைகளுக்குரிய அங்கீகாரம் கொடுக்காதவளாய்,  அவர்கள் பேசவேயில்லை என்பதை போல், 

“ஈஸ்வர் எங்கே?… அவன் கிட்டே போன் கொடுங்க…” என்றாள் சம்யுக்தா பொறுமையுடன்.

சம்யுக்தாவின் இந்தப் பொறுமை செல்வத்தைப் பல்லைக் கடிக்க வைத்தது.

அவனும் வித விதமாய், ரக ரகமாய் பேசிப் பார்க்கிறான், சம்யுக்தா ரியாக்ட் ஆனால் தானே!… 

“ரியாக்ட் ஆகாமலே, பேசியவர்களின் பிபி ஏற்றிக் கொண்டு இருக்கிறாய் சைலன்ட் கில்லர் மாதிரி.

கோபத்துடன் வாய் வார்த்தையைத் தெறிக்க விடுவது ஒரு வகை. மௌனமாய் கடந்து விடுவது ஒரு வகை. நீ பேசிய பேச்சு எனக்குச் சிறு தூசை விட ஒன்றுமில்லை.’என்று இப்படி ஆப்பை திருப்பிக் கொடுப்பது ஒரு வகை.     

கோபத்துடன் பேசும்போது வார்த்தை தடிக்கும். இன்னும் இன்னும் என்று தரம் இறங்குவார்கள். இவர்கள் புத்தி தான் சாக்கடை என்றால், அதற்குள் நாமும் இறங்குவது என்பது மடத்தனம்.

அமைதியாய் வாய் மூடி விலகினாலும் கோழை என்று மேலும், மேலும் கொட்டி கொண்டே இருப்பார்கள். இப்படி போனால் அப்படி, அப்படி சென்றால் இப்படி என்று.

ஒருவரை வைத்துச் செய்வது என்பது இது தான். நாம் ரிலாக்சாசாக இருந்து கொண்டு எதிராளியின் ரத்த கொதிப்பை ஏற்றுவது… இதில் உன்னை அடிச்சுக்க ஆளே இல்லை தாயே!… செத்தானுங்க…” என்றாள் ஹேமா ஏளனமாக.

ஹேமாவின் வார்த்தைகள் அங்கே மூவரின் காதிலும் விழுந்து, அவர்கள் மூவரும் பல்லைக் கடிக்கும் சப்தம் மொபைலில் மிகத் தெளிவாகக் கேட்க, ஹேமா பொங்கி வந்த சிரிப்பை அடக்கப் படாதபாடுபட்டாள்.   

செல்வம் அடுத்து பேசிய வார்த்தைகளும், அவன் குரல் ஒலித்த விதமுமே ஹேமாவிற்கு  சொல்லாமல் சொல்லியது, சம்யுக்தாவின்  குறி இலக்கைச் சரியாகத் தாக்கி இருக்கிறது என்று.

சம்யுக்தாவை கடுப்பாக்க முயன்ற மூவரும் கடுப்பாகி, ரத்த கொதிப்புடன் பெருமூச்சு விட்டது தான் மிச்சம்.

தான் பேசிய அந்தப் பேச்சை வழக்கம்போல் சம்யுக்தா கடந்திருக்க, செல்வம் தன் வழியை மாற்றினான்.  

“எத்தனை தடவை சொன்னாலும் உனக்கெல்லாம் காதில் ஒன்றுமே ஏறாதா?… அது என்ன ஈஸ்வரை அவன், இவன் என்று மரியாதை இல்லாம கூப்பிடுறது!… திரும்பவும் இதைச் செய்யாதே!…” என்றான் செல்வம்.

“லுக் மிஸ்டர் செல்வம்!… என் புருஷனை… நோட் திஸ் பாய்ண்ட்… என் புருஷனை நான் எப்படி வேண்டும் என்றாலும் அழைப்பேன்… இது எனக்கும், என் புருஷனுக்கும் நடுவே இருப்பது…

அதில் கண்ட கண்ட, குரங்குக்குக்கு எல்லாம் எங்க பர்சனல் பத்தி விளக்கம் கொடுக்கணும் என்ற அவசியம் எனக்கில்லை…”  என்றாள் சம்யுக்தா அலட்டிக் கொள்ளாமல்.

‘காதலர்கள், கணவன் மனைவியாகப் போகிறவர்கள் எப்படி வேண்டும் என்றாலும் அழைத்துக் கொள்வார்கள்… இதில் தனக்கு என்ன என்று கூட யோசியாமல் பேசும் இவனைப் போன்ற ஜந்துக்களிடமா சண்டைக்குக் கிளம்பினே?….’ என்ற பார்வை சம்யு பார்க்க, ஹேமாவுக்கு சிரிப்பு வந்தது.  

யாரையும் சரியாக இடை போடும் தோழியின் அந்தத் தெளிவு, ஹேமாவிற்கு வழக்கம்போல் பெருமையைக் கொடுக்க, ‘தான் போய்ச் சண்டை போட்டே இருந்தாலும், இந்த மூன்று  அல்சேஷன் வாயை அடைத்து இருக்க முடியாது தான்’ என்று புரிந்து போனது.      

“ஏய் யாரை பார்த்துக் குரங்குன்னு சொல்றே?…”  என்றான் செல்வம் கோபத்துடன்.

“மனிதர்கள் குரங்கிலிருந்து வந்த டார்வின் தியரியை தான் நான் சொன்னேன். சோ அதை முடிஞ்சா நீங்கப் போய் இல்லைனு ப்ரூப் செய்யுங்க…” என்றாள் சம்யுக்தா.

‘நீ நடந்து செல்லம்…’ என்று கட்டை விரலைக் காட்டிய ஹேமா, ஒன்றுமே தெரியாதவள் போல்,  

“யாருடீ?…”  என்றாள் சத்தமாக.

மொபைலை கை வைத்து மூடாமல், “அதுவா ஹேமா எல்லாம்   ஈஸ்வர்  கூட  இருக்குமே மூன்று குரங்குங்க… அதில் இருக்கும் பெரிய குரங்கு தான் ரொம்ப வாயை விட்டுட்டு இருக்கு…

அதான் கொஞ்சம் வேப்பிலை அடிச்சுட்டு இருக்கேன்… மனுஷ ஜென்மமாய் இருந்தால் நாம பேசலாம்…. 

ஐந்தறிவு விலங்குங்க மாதிரி பிஹேவ் செய்யும் சில ஜந்துக்களை என்ன செய்ய முடியும் சொல்லு! பரிணாம வளர்ச்சியில் உடல் மட்டும் வளர்ந்து அறிவு வளராமல் சுத்திட்டு இருக்கும் சில லூஸுங்க  இதுங்க ஹேமா…

அப்பவே புரட்சி தலைவர், ‘ஆளும் வளரணும்… அறிவும் வளரணும்… அது தான்டா வளர்ச்சி…’ என்று பாடி விட்டார்…

இதுங்க மூணும் குறை மாத பிரசவ கேஸ்.. மென்டலி ரீட்டர்டெட் குரூப். விட்டுத்தள்ளு…” என்றவள் பேச்சு மிகத் தெளிவாக ஸ்பீக்கரில் காரினுள் கேட்க, மற்ற மூவரும் பல்லைக் கடிக்கும் சப்தம், மீண்டும் மிகத் தெளிவாகச் சம்யுக்தவிற்கு கேட்க, சம்யு முகத்தில் புன்னகை வந்தது.

“ஓஹ்!… எது அந்தக் கீழ்ப்பாக்கம் மெண்டல் ஹாஸ்பிடலிலிருந்து தப்பி வந்த மாதிரியே, என்ன பேசுறோம், யார் கிட்டே பேசுறோம் என்று கூடத் தெரியாமல், உளறிட்டு இருக்குமே மூணு அதுங்களா?…  ரோட்டில் சுற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களிடம் போய் நம்ம என்ன பேசவா முடியும் சொல்லு?…”  என்றாள் ஹேமா தன் பங்குக்கு.

“ஆஹாங் மிஸ்டர் செல்வம். என் புருஷன் கிட்டே கொஞ்சம் போன் கொடுக்கறீங்களா?… ரொம்ப இன்டிமேட்டா நாங்க பேசணும்.” என்றாள் சம்யுக்தா.

“யாரு யாருக்கு புருஷன்?” என்றான் செல்வம் அலட்டிக் கொள்ளாமல்.

“உங்க ஜிகிரி தோஸ்த் ஈஸ்வர் தான், இந்தச் சம்யுக்தாவின் புருஷ் ஆகப் போறவர் மிஸ்டர் செல்வம்… பின்ன உங்க தோஸ்த்தை காதலிச்சுட்டு இன்னொருத்தனையா நான் திருமணம் செய்ய முடியும்?… ரொம்ப காமெடி பீஸா இருக்கீங்களே!… ஒண்ணும் சொல்றதுக்கில்லை…” என்றாள் சம்யுக்தா.

“திருமணம் நடந்து, எங்க ஈஸ்வர் உன்  கழுத்தில் மூன்று முடிச்சு போட்டால் அப்போ பார்த்துக்கலாம்… அப்போ உரிமையோடு சொல்லு… வெறும் கையால் முழம் போட்டுட்டு இருக்காதே!…” என்றாள் எமி நக்கலாக.

“அதானே!… காதலிக்கறவங்க எல்லோர் காதலும் திருமணத்தில் முடிந்து விடுமா என்ன?… பெஸ்ட் ஆப் லக் டாக்டர்… உனக்கு ரொம்பவே தேவை படும் தான்…” என்றான் ரிஷி.

“உங்களுக்கு எங்க ஈஸ்வர் கூடத் திருமணம் என்று பகல் கனவு கண்டுட்டு இருக்கீங்களா டாக்டர் மேடம்!.. .பகல் கனவு எல்லாம் பலிக்காதாமே!… ட்ரீம் ஆன் டாக்டர்…

எங்களைத் தாண்டித் தான் ஈஸ்வர் உங்களை நெருங்க முடியும்.நெருங்க விடமாட்டோம். உங்களுக்கும் ஈஸ்வருக்கும் திருமணம் நடக்காது. நடக்கவும் விடமாட்டோம்.” என்ற செல்வத்தின் சிரிப்புடன் எமி, ரிஷியின் சிரிப்பும் நாராசமாய் சம்யு, ஹேமா காதில் ஒலித்தது.      

அதிர்ந்து திகைத்து விழித்தார்கள் சம்யுக்தாவும், ஹேமாவும்.  

ஆட்டம் தொடரும்…