idhayam – 43

idhayam – 43

அத்தியாயம் – 43

மேனகா காலையிலேயே எங்கோ கிளம்பிக்கொண்டு இருப்பதை கவனித்த ஜெகன் வழக்கம்போலவே அலுவலகம் செல்ல தயாரானார். சாருமதி ஆபீஸ் பொறுப்பை முழுவதுமாக எடுத்துக்கொண்டதால் அவளும் சீக்கிரமே கிளம்பி கீழிறங்கி வந்தாள்.

திருமணத்திற்கு இன்னும் பதினைந்து நாள் மட்டுமே  இருக்கும் நிலையில் மகளுக்கு நகையெடுக்க கிளம்பிய மேனகா, “சிந்து நீயும் வாம்மா. நம்ம இருவரும் போய் அக்காவிற்கு நகை எடுத்துட்டு வரலாம்” என்றார்.

அவரின் குரல்கேட்டு கீழிறங்கி வந்த சின்னவள், “அக்காதான் நகை போட போறது. அதனால் நீங்க அவளையே கூட்டிட்டு போங்கம்மா. நான் என் ஃப்ரெண்ட் வீடு வரை போயிட்டு வரேன்” ஸ்கூட்டியின் சாவியை சுழற்றியபடி வெளியே சென்றாள்.

கணவனும், மகளும் டைனிங் ஹாலில் அமர்ந்து கம்பெனி விஷயம் பற்றி பேசி கொண்டிருப்பதை கவனித்தவர், “சாரு நீ ரெடியாகும்மா. நம்ம நகை கடைக்கு போலாம்” என்றார்.

தந்தையிடம் பேசுவதை நிறுத்திவிட்டு, “எனக்கு இன்னைக்கு ஆபீசில் முக்கியமான மீட்டிங் என்னால் இருக்கும்மா. சோ நீங்க போய் எடுத்துட்டு வாங்க. என்னால இன்னைக்கு கண்டிப்பாக வர முடியாது” என்றாள்.

அவருக்கும் மகள் சொல்வது சரியென்று தோன்றிவிட, “சரிம்மா நீயும் அப்பாவும் சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் கிளம்பிங்க. நான் ஷாப்பிங் போயிட்டு எல்லாம் வாங்கிட்டு வரேன்” என்று வீட்டைவிட்டு வெளியேறினார்.

அவர் சென்றதை உறுதி செய்துகொண்டு தந்தையின் புறம் திரும்பிய சாருமதி தந்தையிடம் சில விஷயங்களை சொல்ல, “சரிம்மா மற்றதை நான் கவனிச்சுக்கிறேன்” என்றார் மகளின் மீது அக்கறை உடையவராகவே.

“தேங்க்ஸ் அப்பா” என்ற மகள் வீட்டைவிட்டு வெளியேற சிந்தனையோடு நிறுவனம் நோக்கி கிளம்பினார்.

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று உணராத மேனகா வழக்கம்போல ஷாப்பிங் சென்று மகளுக்கு நகையை தேர்வு செய்து பில் போட அனுப்பினார். அவர் கையில் கொண்டு சென்ற பணத்தைவிட பில் அதிமாக வந்திருக்கவே தன் கார்டை அவர்களிடம் கொடுத்தார்.

“மேம் உங்க அக்கௌன்ட் ஜாம் ஆகிருக்குன்னு சொல்றாங்க” என்றதும், “என்னப்பா சொல்ற” என்ற மேனகாவால் அந்த விஷயத்தை ஏற்க முடியவில்லை.

அவர் உடனே தன் கணவனுக்கு போன் செய்ய, “மேனகா வருவாய் துறை ரைடு வந்திருக்காங்க. நான் அப்புறம் பேசறேன் போனை வை” என்றவரின் பின்னோடு அதிகாரிகளின் பேச்சுக்குரல் கேட்கவும் பட்டென்று போனை வைத்தார்.

நகை கடைக்காரன் அவரை கேள்வியாக நோக்கிட, “நான் நாளைக்கு வந்து நகை எடுத்துக்கிறேன்” என்று சொல்லிவிட்டு வீடு நோக்கி பயணமானார்.

அவர் செல்லும் வழியில் மாப்பிள்ளை வீட்டார் அழைத்து, “இந்த சம்மதம் சரி வராதுங்க. நீங்க உங்க பொண்ணுக்கு வேற இடம் பாருங்க” என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் பட்டென்று போனை வைத்தனர்.

ஏற்கனவே மேனகாவிற்கு டென்ஷன் அதிகமாக இருக்க, ‘ஒரே நாளில் எப்படி எல்லாம் தலைகீழாக மாறும்’ என்ற சிந்தனையோடு வீட்டிற்குள் நுழைந்தார். அங்கிருந்த வருவாய் துறையினர் மேனகாவை ஆயிரம் கேள்விகள் கேட்டு குடைந்தனர்.

“சார் இப்போ என்  மகள்தான் மேனேஜ்மென்ட் பார்க்கிறா. நீங்க எதுவாக இருந்தாலும் அவளிடம் கேளுங்க தெளிவான விளக்கம் கிடக்கும்” என்று சொல்லி தப்பிக்க நினைத்தார்.

“மேடம் உங்களுக்கு ஒரு விஷயம் புரியல” என்ற அதிகாரியை புரியாத பார்வை பார்க்க, “உங்க மேனேஜ்மென்ட்ல தவறு நடப்பதை கண்டுபிடித்து எங்களிடம் சொன்னவங்களே அவங்கதான். அவங்க நிர்வாகத்தை கையில் எடுத்ததும் தவறுகளை கண்டுபிடிச்சு தன்மேல் தவறு இல்லன்னு தெளிவாக நிருபிச்சிட்டாங்க” என்று மேனகாவின் தலையில் குண்டை தூக்கி போட்டார் உயர் அதிகாரி.

அந்த அதிர்ச்சியோடு சோபாவில் அமர்ந்த மேனகாவிற்கு நடந்த விஷயம் அனைத்தும் தெளிவாக விளங்கிட, “இது எல்லாம் என் கணவரோட சதி செயல்” என்றார் கோபத்துடன்.

“ஸாரி மேடம். மற்றவங்களை ஏமாற்ற நீங்க அவரை கருவியாக பயன்படுத்தி இருக்கும் விஷயமும் எங்களுக்குத் தெரியும். அவரை மற்றவர்களுக்கு எம்.டி.யாக கட்டிட்டு நீங்க தான் அரசாங்கத்தின் நிலங்களை எல்லாம் நேரடியாக வாங்கிய சாட்சிகளை எல்லாம் உங்க மகள் என்னிடம் ஒப்படைச்சிட்டாங்க” என்று மேனகாவை நகரவிடாமல் செக் வைத்தார்.

மேனகா நிர்வாகத்தை கையில் எடுத்த நாளில் இருந்து அவர் நிறைய சொத்துகளை நேரடியாக வாங்கிப் போட்டதும் மட்டும் இல்லாமல் வரி ஏய்ப்பு அதிகமாக செய்து இருந்தார். இதை எல்லாம் நிர்வாக பொறுப்பு ஏற்ற சாருமதி கண்டுபிடித்து அதற்கு உண்டான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து இருந்தாள்.

மேனகாவின் தவறுகளை கண்டுபிடித்த நிர்வாகிகள் அவரை பதினைந்து நாள் ரீமண்டில் வைக்க முடிவெடுத்தனர். அவரின் குடும்ப வக்கீலான சதாசிவம் முன்கூட்டியே ஜாமீன் எடுத்து வைத்திருந்ததால் அவரை உள்ளே செல்லவிடாமல் தடுத்தார்.

அதிகாரிகள் சென்றபிறகு மெளனமாக அமர்ந்திருந்த மேனகாவின் எதிரே வந்து அமர்ந்தவர், “மேடம் நீங்க இப்படி தீடீர்னு உயில் எழுத சொன்னது இதுக்குத்தானா?” என்று கேட்க சிந்தனையோடு நிமிர்ந்து பார்த்தார்.

அவருக்கு விஷயம் தெரியாது என்று அறியாத வக்கீல், “தாத்தா சொத்தை பேத்திகளுக்கு சரி பங்காக பிரிச்சு” என்று சொல்லும் முன்னரே கை நீட்டி தடுத்து, “நான் லீகலாக வாங்கிய சொத்துகள் எல்லாம் என்னாச்சு” எடுத்தார்.

கொஞ்சம் தயங்கிய சதாசிவம், “நீங்கதான் மேடம் அனாதை ஆசரமங்களுக்கு எழுதி வைச்சிட்டீங்க” என்றார்.

மேனகாவிற்கு தலையும் புரியாமல் காலும் புரியாமல் குழப்பத்துடன் அமர்ந்திருக்க, “அன்னைக்கு நான் போன் பண்ணி உங்களிடம் இதுபற்றி கேட்டதற்கு, சாரு முடிவுதானே எல்லாம் சரியாக இருக்கும்னு சொன்னீங்க” என்றார்.

அன்று காலையில் இருந்து நடந்த விஷயம் அனைத்தும் சாருவிடம் வந்து நிற்கவே, ‘எல்லாம் உன்னோட வேலையா சாரு? இதுக்குதான் என்மேல் பாசம் இருக்கிற மாதிரி நடிச்சியா? இதெல்லாம் தெரியாமல் நம்பி ஏமாந்துட்டேனே’ என்று மனதிற்குள் நினைத்தவர், “அந்த உயில் நான் எழுத சொல்லல. சோ அதை கிழிச்சு போட்டுட்டு மற்ற வேலையைப் பாருங்க” என்றார் மேனகா.

“ஸாரி மேடம் இனி அது ஒண்ணுமே பண்ண முடியாது” என்றதும்,“ஏன்” எரிச்சலோடு

“நீங்கதான் நானே மனசு மாறி மற்ற சொன்னாலும் சொல்வேன். அப்படி மற்றக்கூடாதுன்னு உங்க கைபடவே லெட்டர் எழுதி சைன் பண்ணி கொடுத்து லீகலாக ரிஜிஸ்டர் பண்ண சொல்லிட்டீங்க. இனி எதுவுமே பண்ண முடியாது மேடம்” என்றவரை கோபத்துடன் பார்த்துவிட்டு எழுந்து வீட்டைவிட்டு வெளியேறினார்.

அனைத்தும் மேனகா தன் வாய்ப்பட கூறியது என்ற ஒரே காரணத்தினால் அவரால் வக்கீலை எதுவும் செய்ய முடியவில்லை.

அப்போது அவரின் செல்போன் சிணுங்கிட, “ஹலோ” என்றார்.

மறுப்பக்கம்,“பிறர்க்குஇன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும்” என்ற ஆணின் குரல் அவரின் உயிர் வரை ஊடுருவிச் சென்றது.

“என்ன குறளுக்கு அர்த்தம் தெரியுமா? நீ முற்பகலில் செஞ்ச வினை இப்போ பிற்பகல் உனக்கே திரும்ப வந்திருக்கு. அன்னைக்கு இருந்த இடத்தில் இருந்தபடியே என்னையும், அபூர்வாவை பிரிச்ச இல்ல. எல்லாம் பணம் இருக்கிற திமிரில் பண்ணின இல்ல. அதுதான் அந்த பணத்தை வைத்தே உன் கணக்கை சரி பண்ணிட்டேன்” என்ற ஆதியின் குரலில் இருந்த தெளிவைக் கண்டு பித்துபிடித்தவர் போல நின்றார் மேனகா.

“பெண்ணுக்கு பெண்ணே எதிரின்னு அன்னைக்கு நீ அபூர்வாவிற்கு பாடம் புகட்ட நினைச்ச இன்னைக்கு உன் மகளை வைத்தே உனக்கு அந்த பாடத்தை நான் புகட்டிடேன். இதுக்கு மேலும் என் வழியில் குறுக்கிட்ட என் முழு சுயரூபத்தை நீ நேரில் பார்க்க வேண்டி வரும்” என்ற ஆதி போனை கட் பண்ணிவிட்டான்.

அவரின் மனதை தெளிவாக படித்து போல இருந்தது ஆதியின் பேச்சு. அவருக்கு ஆண் குழந்தை பிடிக்கும் என்றபோதும் தன் சொத்தை நிர்வாகம் செய்ய தனக்கு ஒரு அடிமை வேண்டும் என்று நினைத்தார். அதற்காக அவர் பாசம் இருப்பது போல பல வருடங்களாக நடித்து ஜெகனை ஏமாற்றி இடையே வந்த அபூர்வாவையும் அவனிடமிருந்து பிரித்து தன்னோடு நிரந்தரமாக வைத்து கொள்ள நினைத்தது எல்லாமே இன்று தரைமட்டமானது.

அவன் கொடுத்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் நின்றிருந்த மேனகாவின் நிலையை கண்டு சதாசிவம் மெளனமாக அங்கிருந்து நகர்ந்தார்.

மேனகாவிடம் பேசிவிட்டு போனை வைத்த ஆதியின் எதிரே சாருவும், சிந்துவும் அமர்ந்திருக்க, “பிளான் சக்சஸ்” என்றதும் மற்ற இருவரும் ஒருவரையொருவர் பார்த்துகொண்டு பக்கென்று சிரித்துவிட்டனர்.

ஏனோ அவர்கள் சிரிப்பதை பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்க, “அண்ணா இப்படி செஞ்சிட்டேனேன்னு உங்க இருவருக்கும் கோபமா?” என்றான் ஆதி.

மறுப்பாக தலையசைத்த சாரு, “இல்ல அண்ணா. அம்மாவுக்கு இந்த தண்டனை தேவைதான். தவறுன்னு தெரியாமல் செய்த அதை மன்னிக்கலாம். அம்மா தெரிஞ்சே செஞ்சாங்க. அதனால் நீயும், அண்ணியும் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பீங்க” என்றபிறகே அவனின் மனம் லேசானது.

சிந்து சிந்தனையோடு அமர்ந்திருக்க, “என்ன சிந்து நீ எதுவும் சொல்லாமல் இருக்கிற” என்று கேட்க, “இன்னைக்கு உங்களுக்கு செய்தமாதிரி நாளைக்கு எங்க வாழ்க்கையிலும் விளையாட பார்ப்பாங்க அண்ணா. அதனால் நீங்க செய்தது தப்பு இல்லன்னு சொல்வேன்” என்றாள்.

தன் தாய் வயிற்றில் பிறக்க வேண்டிய பெண்கள் இருவரும் மேனகாவின் வயிற்றில் பிறந்துவிட்டதாக நினைத்து முதல் முறையாக கடவுளை சபித்தான். அவனையும் அறியாமல் மேனகாவின் சதித்திட்டத்தை முழுவதுமாக தெரிந்த நாளுக்கு சென்றது அவனின் மனம்.

தாய் – தந்தையின் மூலமாக விஷயம் அறிந்ததும் அவனுக்கு மேனகாவின் மீது கொலைவெறி அதிகமானது. மனதளவில் யாருக்கும் தீங்கு நினைக்காத தன் காதலியை தன் வாயால் துரோகி என்று சொல்ல வைத்தவரை என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தில் தவித்தான்.

அவனின் குழப்பத்திற்கு முக்கிய காரணம் சாருமதியும், சிந்துவும் தான். தன் மீது நிஜமான பாசத்தை காட்டும் தங்கையின் வாழ்க்கை பாதிக்கப்பட தானும் ஒரு காரணம் ஆகிவிட கூடாதென்ற முடிவிற்கு வந்தவன், “அம்மா நடந்த விஷயம் அனைத்தும் உங்களுக்கு தெரியும் இல்ல” என்றான்.

அவரும் ஒப்புதலாக தலையசைக்க, “நான் மேனகாவை பழிவாங்கினால் அது சாருவையும், சிந்துவையும் நேரடியாக பாதிக்கும். அவங்க இருவருக்காக நான் மேனகாவை மன்னிக்கவும் முடியாது. அபூர்வா என்னை பிரிஞ்சி எந்தளவுக்கு கஷ்டபட்டு இருப்பான்னு நினைக்கிறபோது மனசு வலிக்குது. அவங்களுக்கு நான் கொடுக்கும் தண்டனை உயிர் வரை வலிக்கணும். ஆனால் அது என் தங்கைங்க எதிர்காலத்தை பாதிக்கக்கூடாது” என்றான்.

அவன் மன உணர்வுகளை தெளிவாக உணர்ந்த மஞ்சுளா, “நீயே தெளிவாக யோசித்து ஒரு முடிவெடு ஆதி. அதுக்கு முன்னாடி உன் தங்கச்சிங்க இருவரிடமும் ஒரு முறை பேசிவிடு” என்றவர் எழுந்து அவரின் அறைக்கு சென்றார்.

தாயின் வார்த்தைகளில் இருந்த நியாயம் புரிய உடனே இருவரையும் வழக்கமாக சந்திக்கும் காபி ஷாப்பிற்கு வர சொன்னவன், “அம்மா நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்” என்று அங்கிருந்து கிளம்பினான்.

அவன் காபி ஷாப் உள்ளே நுழைய அங்கே மற்ற இருவரும் இவனுக்காக காத்திருந்தனர்.

அவர்களின் எதிரே சென்று அமர்ந்த ஆதி சில நிமிட மௌனத்திற்கு பிறகு, “அபூர்வா பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க” என்று நேரடியாக கேட்டான்.

“அவங்க நல்ல அண்ணி. உனக்கு பொருத்தமான ஜோடி. யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டாங்க” என்றாள் சிந்து பதட்டமே இல்லாமல்.

அவளிடம் இருந்த தெளிவை கண்டு, “அப்போ நாங்க பிரிந்த காரணத்தையும், அதுக்கு பின்னாடி நடந்த சதியையும் சொல்றேன். நான் சொன்னபிறகு நீங்க இருவரும் ஒரு முடிவுக்கு வாங்க” என்று சொல்லி நடந்த அனைத்தையும் தங்கைகளிடம் கூறினான் ஆதி.

இறுதியாக, “நான் உங்க அம்மாவை பழி வாங்க எனக்கு இரண்டு நிமிஷம் போதும். இதனால் உங்க வாழ்க்கை வீணாகப் போகக்கூடாதுன்னு பொறுமையாக இருக்கேன். எனக்கு அபூர்வா வேணும் உங்க இருவருக்காக அவளை கைவிட என்னால் முடியாது. அதே நேரத்தில் அவளுக்காக உங்க இருவரின் வாழ்க்கையை கேள்வி குறியாக்க நான் விரும்பல. இந்த தவறை செய்தது உங்க அம்மா. நல்ல யோசிச்சு நீங்களே ஒரு நல்ல முடிவை சொல்லுங்க” என்ற ஆதி டேபிளில் சாய்ந்து அமர்ந்தான்.

“நான் நினைச்சா உட்கார்ந்த இடத்தில் இருந்து உங்க அம்மாவை ஒண்ணுமில்லாமல் பண்ணிவிட முடியும். ஆனால் உங்கமேல் வெச்ச பாசம் என்னை இப்போ தடுக்குது” என்றான் கரகரப்பான குரலோடு.

தன் அண்ணனின் மூலமாக தாயின் தவறுகளை கேட்டபிறகு பெண்கள் இருவரும் சிந்தனையில் ஆழ்ந்தனர். ஆதி தண்டிக்க நினைத்தால் அதை அப்போதே செய்திருப்பான், தங்களின் மேல் வைத்த பாசம்தான் அவனை இப்போது தடுக்கிறது என்ற உண்மையை புரிந்து கொண்டனர்.

ஒரு முடிவுடன் நிமிர்ந்த சாரு, “அண்ணா நீங்க சொல்லுங்க என்ன பண்ணலாம்னு நான் அதை செய்யறேன்” என்றாள் தீர்மானமாக.

அவளின் முடிவை சிந்துவும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ள ஆதி தன் திட்டத்தை தெளிவாக சொன்னான். அவனின்  திட்டப்படி நடித்து நிறுவனத்தில் நடந்த தவறுகளை கண்டுபிடித்தாள் சாருமதி.

அவளுக்கே தாயின்  தவறு புரிய அண்ணனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வருமான வரித்துணையினருக்கு தகவல் கொடுத்துவிட்டாள்.  அவர்களின் கூட்டணியால் இன்று மேனகாவின் சாம்ராஜ்யம் தரைமட்டமானது என்னவோ உண்மை.

ஒரே நாளில் மேனகாவின் சாம்ராஜ்யத்தை தெருவுக்கு கொண்டு வந்துவிட்டான். அதுவும் அவர் பெற்ற மகள் சாருவின் மூலமாகவே.. இதுதான் ஆதியின் ஸ்டைல். தனக்கு நன்மை செய்தவர்களுக்கு அதை இரட்டிப்பாக திருப்பி செய்துவிடுவான். அதே கொள்கைதான் தீமைக்கும்!

அன்று திட்டமிட்டு காதலை பிரித்த மேனகாவை அவரின் மகளை வைத்தே பழி வாங்கிவிட்டான். அதற்காக தங்கைகளை பாதுகாக்க அவர்களுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தான்.

இன்னும் ஒரு வாரத்தில் தமிழரசு – சாருமதி, சிவா – சிந்துஜா இருவருக்கும் ஊரறிய திருமண ஏற்பாடு செய்திருக்கிறான். இந்த விஷயம்  எதுவும் அறியாத அபூர்வாவின் முடிவு என்னவாக இருக்கும்?

Leave a Reply

error: Content is protected !!