NNA21

நீயும் நானும் அன்பே

அன்பு-21

 

வெற்றி காரைக்குடியிலிருந்து பணிக்கு கிளம்புமுன், மானகிரியில் சிகிச்சைக்குப் பின் தங்கி இருந்த சங்கர் மதுரைக்கு கிளம்பியிருந்தான்.

 

தந்தை வீட்டிற்கு வருவதுபோல, மானகிரிக்கு வந்து மருமகனை நலம் விசாரிக்க எண்ணியிருந்த புஷ்பாவிற்கு, அதற்கான வாய்ப்பைத் தராமலேயே சங்கர் மதுரைக்குக் சென்றிருந்தான்.

 

அதனால், புஷ்பா தன் மன ஆறுதலுக்காக, அவ்வப்போது தாஸிடமும், சசிகலாவிடமும், மருமகனின் உடல்நிலை பற்றியும், மகளைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.

 

“என்ன அண்ணி, புள்ளைக எல்லாம் நல்லா இருக்காங்கள்ல… மருமயனுக்கு இப்ப காலு தேவலையா?, என்று மகளை மனம் நினைக்கும்போதெல்லாம், சசிகலாவிடம் சங்கரைப் பற்றி நலன் விசாரிப்பதையும் வழக்கமாக்கியிருந்தார் புஷ்பா.

 

“நல்லா இருக்காக அண்ணி, நவீனாவுக்குதான் இங்க வர நேரம் கிடைக்கமாட்டிங்குது.  நம்ம சங்கரு இப்பல்லாம் அடிக்கடி ஊருக்கு வந்திட்டுப்போகத்தான் செய்யிறான், என்று சசிகலாவும் அவர்களின் நடப்புகளைப் பற்றிய விடயங்களை மறையாது பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக்கியிருந்தார். 

 

சசிகலா, புஷ்பா இருவருமே தனது அண்ணனுக்கு மரியாதை கொடுப்பதாக எண்ணி, வயது வித்தியாசம் பாராமல் ஒருவருக்கொருவர் அண்ணி என அழைப்பதை ஆரம்பம் முதலே பழக்கமாக்கியிருந்தனர்.

 

கணவன் ஊரில் இல்லாதபோதும், மகளோடு அலைபேசி அல்லது தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுவதை புஷ்பா விரும்பவில்லை.

 

நவீனா தன்னிடம் சங்கரைத் திருமணம் செய்யும் அவளது அவாவைப் பற்றியோ, வேறு அது சார்ந்த விடயங்களைப் பற்றியோ, பகிர்ந்து கொள்ளாத தன் மீதான நம்பகமற்ற தன்மையும், தந்தை ஊரில் இல்லாத வேளைகளில்கூட மகள் தன்னிடம் தற்போது பேச விரும்பாத பட்டற்ற தன்மையை எண்ணியும், வெறுமையில் மனம் தளர்ந்திருந்தார் புஷ்பா.

 

புஷ்பா தாய்ப்பாசம் காரணமாக தவித்தாலும், மகளின் பட்டற்ற ஒட்டாத செயல்களினால், மகளிடமிருந்து ஒதுங்கியிருக்கத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டார்.

 

 

அதற்குமேலும், சில வேளைகளில் பேச மனம் விரும்பினாலும், மகள் தன்னை இதுவரை நாடவில்லை, தேடவில்லை என்கிற எண்ணம் வலுவாக மனதில் வந்துபோக,

 

‘நாம பெத்ததுக்கு இவ்வளவு வீராப்புனா…! நமக்கு எவ்வளவு இருக்கும்?  இன்னும் எவ்வளவு நாளுக்கு இப்டி இருக்கானு பாக்கறேன்!, என்று மனம் கூறுவதை கேட்கத்துவங்கி, மனித மனங்களுக்கே உரிய தன்முனைப்பாலும், தாய்பாசத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு ஒதுங்கியே இருந்தார், புஷ்பா.

 

இவை அனைத்திற்கும் மேலாக… கணவனுக்கு, மகளுடன் தான் இணக்கமாக இருப்பது அறிய வரும் நிலையில், வீட்டில் தங்களுக்குள்  பெரிய பிரளயமே வெடிக்கும் என்பதும் புஷ்பாவிற்கு ஊர்ஜிதமாகத் தெரிந்ததால், பெண்ணிடமிருந்து மனதைக் கல்லாக்கியபடியே விலகி இருந்தார்.

 

தந்தை வீட்டாரோடும், சில நேரங்களில் தாஸிடமும் பேசுவதை மட்டும் வாடிக்கையாக்கியிருந்தார்.

 

ஆனாலும், பெற்ற மனம் பித்து எனும் சொல்லிற்கேற்ப, நவீனாவைப் பற்றிய சிந்தனையிலேயே பெரும்பாலும் புஷ்பாவின் பொழுதுகள் சென்றது.

 

பிள்ளை மனம் கல்லு எனும் சொல்லிற்கேற்ப, நவீனாவோ கண்டதே காட்சி, கொண்டதே கோலம் எனும் நிலையில், அவளது படிப்பு, கணவன் தவிர வேறு எதையும் பற்றியும் அதிகம் சிந்தித்தாளில்லை.

 

பெரும்பாலும், பெண்ணின் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் கணவனாக சங்கர் இருந்ததால் நவீனாவிற்கு வருத்தம் மேலிட்டாலும், அதிகம் அதைப்பற்றி எண்ணி மனதை உழட்ட ஏதுவான மோசமான சூழல் பெண்ணிற்கு அமையவில்லை.

 

பெண் தனித்திருப்பதைப் போன்ற சூழ்நிலை அமையா வண்ணம், சங்கர் தனது மனைவிக்காக நேரங்களை திட்டமிட்டு முறைப்படுத்தியிருந்தான்.

 

ஏதேனும் பெண் சிந்தனை வயப்பட்டு இருப்பதைக் கண்டால், “என்னம்மா?, என்று பெண்களின் கண்களை ஊடுருவிச் செல்லும் கூர்மையான பார்வையோடு, ஆனால் இதழில் இனிமையைத் தேக்கியவாறு வந்து நிற்கும் சங்கரைக் கண்டவுடன் பெண் அனைத்தையும் மறந்து

 

“ஒன்னுல்ல டீடா…, என்று சிந்தனையிலிருந்து வெளிவருபவள்

 

“என்ன இன்னிக்கு லேட்டாகும்னு சொல்லிட்டு… முன்னாடியே வந்திட்டீங்க?, என கேள்வியோடே கணவனே தஞ்சம் என்று சரணடைந்துவிடுவாள் நவீனா.

 

அதற்குமேல் பெண்ணைத் தனித்து விடாது, “அத்தைய பாக்கனுமா? மாமா ஞாபகமா இருக்கா? நந்தாட்ட பேசுறியா? காரைக்குடிக்கு ஒரு எட்டு போயிட்டு வருவமா?, என்று அடுத்தடுத்து பெண்ணைக் கேள்வியால் துளைத்தெடுப்பவன்,

 

“காலேஜ்ல எதாவது பிரச்சனைா?  உடம்பு்க்கு என்ன செய்யுது?, என்று மாறி மாறிக் கேட்பதோடு, பெண்ணைக் கண்பார்வையிலேயே வைத்துக் கொள்வான்.

 

சங்கரின் குரலில் உள்ள மென்மையும், அன்பும், ‘என்ன ஆனாலும் பரவாயில்லை…! பெண்ணே…! நீ மகிழ்வாக இருந்தால் போதும்!  அதுவரை என் அன்புத் தொல்லை விடாது நீளும்!, என்கிற விடாத தன்மையோடு கூடிய கரிசனை இவை அனைத்தும், பெண் உண்மையான காரணத்தைச் சொல்லும்படி நேர்ந்துவிடும். 

 

அதுவரை நவீனாவை தன்னை விட்டு அகல விடமாட்டான்.

 

ஒட்டுப்புல்போல தன்னோடு இருப்பவனை எண்ணி பெண்ணுக்கு கர்வமே!

 

நவீனாவின் பொழுதுகள் மருத்துவமனை, கல்வி மற்றும் கணவன் என்ற இணைப்பில் அன்றி வேறு எதிலும் நேரம் ஒதுக்க இயலாத நிலையில் அதிவேகமாகச் சென்றது.

 

சங்கர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்த வேளையில், நவீனாவிற்கு, உடல் உபாதைகள், மன வருத்தங்கள், சோகங்கள் போன்ற உணர்வுகள் மேலிட்ட வேளைகளில் தாயை மனம் தேடினாலும், வைராக்யம் பெண்ணை அவர்களிடமிருந்து தள்ளி நிறுத்தியிருந்தது.

 

அந்த சூழலில் கடவுளை நாடிய மனம், ஏனோ பெற்றோரை நாட மறுத்தது.

 

அதற்காக பாசம் துறந்த பெண்ணாக இல்லை.  மனதிற்குள் அனைத்தும் இருந்தாலும், அவர்களின் நலனுக்காக பிரார்த்தனைகளை மட்டும் வைத்ததோடு அவளின் அன்றாட பணிகளில் நேரங்களைக் கடந்திருந்தாள்.

 

தாயை தனது திருமணம் சார்ந்த விடயங்களுக்கு அண்டாத தனது நிலைக்கும் காரணம் பெண்ணிடம் இருந்தது. 

 

தனது தாய் புஷ்பா எந்த சூழலிலும், தந்தை வெற்றியை மீறி, அவரி்ன் மறுப்பை எதிர்த்து, துரும்பை அசைப்பதைக்கூட கனவிலும் செய்யவே மாட்டார் என்பது பெண்ணுக்கு திண்ணம்.

 

சிதம்பர ஆட்சி நடக்கும் தனது வீட்டில், மீனாட்சிக்கு முடிவுகள் எடுப்பதிலோ அல்லது எதையும் தீர்மானிப்பதிலோ பெரும்பங்கில்லை என்பதால் நவீனா தனது தாயை சங்கடப்படுத்த விரும்பாமல் ஒதுங்கியிருந்தாள்.

 

ஆனாலும், திருமணம்வரை குற்றவுணர்வோடு இருந்தவளுக்கு, திருமணம் முடிந்த அன்றுநேரில் வந்து வாழ்த்த மனமில்லாதபோதும், மனதை நோகச் செய்த சங்கரைப் பற்றிய வார்த்தைகளை தனது தந்தை பேசாமல் இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் தோன்றியிருந்தது.

 

சங்கர் மீது தான் கொண்ட அன்பு என்றுமே தன்னை துன்பத்திற்கோ, துயரத்திற்கோ ஆட்படுத்தாது என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக, ‘எப்டி அவரை(சங்கரை) அவங்களாவே என்னைய விட்டுட்டு வேற ஒருத்தியோட போயிருவாருனு சொல்ல முடிஞ்சது! அவரை எப்படி கீழ்த்தரமானவரா நினைக்கலாம்!  யாரு எப்டியிருந்தாலும் அவங்க அப்டி இல்லை!, என்கிற சங்கரின் மீதான அளவற்ற நம்பிக்கையானது, தந்தையின் பேச்சின் மீது கோபமாக பெண்ணின் ஆழ்மனதிற்குள் மாறி இருந்தது.

 

நாளொரு வண்ணம் தன்மீதான சங்கரின் அதீத கவனிப்பு, காதல், அனுசரனை அனைத்தும் கூடியதே தவிர,  குறைந்தாற்போல பெண்ணுக்குத் தோன்றவில்லை.

 

அன்பு குறையும்போதுதான் அதைத்தேடி… மனம் அது கிடைக்கும் இடம் நாடி… மற்ற இடம் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

 

கணவனிடம் அட்சய பாத்திரம்போல அள்ள அள்ளக் குறையாமல் திகட்டத் திகட்ட அனைத்தையும் அனுபவிப்பவளுக்கு, பெரும்பாலான நேரங்கள் தேவையற்ற எதையும் சிந்திக்க நேரம் வாய்க்கவில்லை.

 

ஆனாலும், தந்தை, தாய் மற்றும் தம்பியின் மீது இருந்த அன்பில் எந்த மாற்றமும் வந்திராத நிலையில், பெண் கணவனோடு இனிமையாகவே வாழ்ந்திருந்தாள்.

 

எல்லாம் ஒரு நாள் சரியாகும் என்ற நம்பிக்கையோடு பெண் வளைய வந்தாள்.

 

தனது செயலை பெண் நியாயப்படுத்த விரும்பாதபோதும், தந்தை தனது விருப்பத்தை வெளிப்படுத்திய சொல்லை பெரும்பொருட்டாகக் கருதி… நல்லதொரு முடிவை தந்தை தனது திருமணம் சார்ந்த விடயத்தில் எடுத்திருந்தால், தான் இதுபோன்றதொரு தான்தோன்றித்தனமான முடிவை நாடாமல் இருந்திருக்கலாம் என்கிற எண்ணம் நவீனாவிற்கு திடமாக இருந்தது.

 

மேலும், எந்தவொரு அசௌகரியமும் தான் சங்கரைத் திருமணம் செய்து கொள்ளும்போது இருக்கும் நிலையில், தந்தை மறையாது தன்னிடம் அதைப்பற்றிப் பேசி, நல்லதொரு முடிவை தன் திருமண விடயத்தில் தன் மன ஒப்புதலோடு எடுத்திருக்கலாம் என்று மனம் வாதாடியது.

 

தந்தையின் பிடிவாதத்தாலும், சாந்தனுவின் முறையற்ற அணுகுமுறையாலும், தான் அவசரப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதை எண்ணி மன வருத்தம் இருந்தபோதிலும், அனைத்திலும் தன் தந்தை தனக்கு துணை நிற்கவில்லை என்கிற ஆதங்கம் மனதில் ஆணியடித்தாற்போல நவீனாவிற்கு பதித்திருந்தது.

 

ஆகையால், அதைப்பற்றி மேலும் சிந்தித்து தனது சொற்பமான சந்தோச நிமிடங்களை வீணாக்கப் பிரியமில்லாமல், கணவனின் அணுகுமுறை, குணம், எதிர்பார்ப்பிற்கிணங்க தன்னை மாற்றிக்கொண்டு இனிமையாக  வாழ தன்னை மாற்றிக் கொண்டிருந்தாள் நவீனா.

 

தனது மருத்துவக் கல்வி இறுதியாண்டில் இருந்தவள், “முடிச்சிட்டு அப்டியே பீஜி பண்ணவா?, என்று சிறுபிள்ளைபோல வந்து சங்கரிடம் நின்றவளை

 

“பீஜி பண்ணு, பீஜிக்கு பின்ன நம்ம ஊருபக்கமா கிளினிக் ஓபன் பண்ற மாதிரி பாத்துப்போம், என்று கணவன் கூறியவுடன் அதற்கான முயற்சியில் பெண் இறங்கியிருந்தாள்.

 

நுழைவுத்தேர்வு எழுத தன்னை தயார் செய்ததோடு, தேர்வு முடிந்ததும், வீட்டில் இருக்க விரும்பாமல், பீஜி படிக்க கல்லூரி செல்லும்வரை பிராக்டிஸ் நிமித்தமாக தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சேர எண்ணினாள் பெண்.

 

அதை கணவனிடம் வந்து தெரிவிக்க,

 

சங்கரும் “உனக்கு பீஜி படிக்க எதுல விருப்பமோ, அதுல ஸ்பெசலைஸ்டு டாக்டருக்கு ஜுனியரா பிராக்டிஸ் பண்ண, எந்த ஹாஸ்பிடல் உனக்கு செட்டாகுதுனு பாத்துக்கோ, என்றதோடு மனைவியின் பணி சார்ந்த விடயத்தில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டான் சங்கர்.

 

முழுநேரம் என்றில்லாமல், பகுதிநேரம் பணிக்குச் சென்று வந்ததோடு, மீதநேரம் வீட்டுப் பொறுப்புகளை சிறிது சிறிதாக கவனம் செலுத்தத் துவங்கினாள் பெண்.

 

அதிகாலையில் எழுவது சங்கருக்கு இயல்பு.  ஆனால் பெண்ணுக்கு தன்னை அவ்வாறு பழக்கிக் கொள்ளும் ஆவல் இல்லாததால், அலாரமாக சங்கர் இன்றுவரை செயல்படுகிறான்.

 

“வீனா… விடிஞ்சிருச்சு… எழுந்திரி, என்று பெண்ணை அணைத்து, வழமைபோல கூறுபவனிடம்

 

பெண்ணும், “என்னங்க… இப்பதான படுத்தோம்.  அதுக்குள்ள எப்டிதான் சீக்கிரமா விடியுதோ…!, என்று கண்ணைத் திறவாமல் கணவனின் கழுத்தைக் கட்டியவாறு பெண் புலம்புவதை திருமணம் நடந்து ஆண்டுகள் கடந்தும், இன்று வரை நவீனா நிறுத்தினாளில்லை.

 

பெண்ணின் செயலில் உள்ளம் நெகிழ்ந்தாலும், விட்டால் பெண் என்ன செய்வாள் என்பதை முற்றிலும் உணர்ந்தவன், “நேரமாகுது வீனா…! இப்போ… எந்திரிச்சு கிளம்புனாத்தான் ஹாஸ்பிடல் போக சரியா இருக்கும்! போயி சீக்கிரமா கிளம்பு!, என்று சங்கரும் பெண்ணைத் துரிதப்படுத்துவான்.

 

தன் மனைவிக்காக நிறையவே தன்னை மாற்றிக் கொண்டு இருந்தான் சங்கர்.

 

பத்து மணி கல்லூரிக்கு, ஒன்பதரை மணிக்கு கிளம்பிச் செல்வான்.  பெண் சென்றபிறகு கிரௌண்டிற்குச் சென்று சற்று நேரம் விளையாடிவிட்டு வந்தே கல்லூரிக்கு கிளம்புவான்.

 

பெண் குளியலறைக்குள் நுழைந்ததும், சமையல் பக்கமாக, “அலமேலுக்கா…! வீனா எந்திருச்சிருச்சு…! பிரேக்ஃபாஸ்ட் ரெடியாகிருச்சுல்ல…! பாக்ஸ்ல எடுத்து வச்சிருங்க..!, என்று கூறுவதோடு, அலுமேலு எடுத்து வைத்ததை, பெண் கிளம்பி வருமுன்.. அனைத்தையும் மறக்காமல் உரிய வகையில் எடுத்து வைத்து, பெண்ணை வழியனுப்புவதை வழக்கமாக்கியிருந்தான்.

 

மகனின் செயலைப் பலமுறை பார்த்த சசிகலா பொறுமை தாளாமல், “எப்டி இருந்த எம்மகனை இப்டி மாத்தி வச்சிருக்கடீ!”, என்று நவீனாவிடம் ஒரு முறை கேட்க

 

“நானெங்க மாத்துனேன்..! அவரெங்க மாறுனாரு…! நாந்தான் அவரு சொல்லாமலே அவருக்கேத்தமாதிரி மாறிட்டே இருக்கேன்!”, என்று பெண் உண்மை பேசியதை யாரும் நம்பும் நிலையில் இல்லை.

 

அங்க ஊருல இருக்கிறவரை, அவனுக்கு அடுப்படி எங்கிட்டு இருக்குனுகூட தெரியாமத்தான் இருந்தான்!  இப்ப அப்டியா இருக்கான்?, சசி என்றாவது மாமியாராக இப்டிக் கேட்டு நவீனாவை சிலிர்க்கச் செய்வார்.

 

“அது என்னனு அவரையே கேளுங்கத்தை…! எனக்கொன்னும் அதைப்பத்தி தெரியலை!, என்று சிரித்தபடியே பெண்ணும் மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றிருந்தாள்.

 

குறுகிய கால இடைவெளியில் நவீனா கிளம்பி வருமுன், அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு தனக்காகக் காத்திருக்கும் கணவன் முன் நின்றவாறு அன்று மலர்ந்த மலர்போல சிரித்தவாறே, சற்றே எம்பி கணவனை முத்தமிட்டு, “தாங்யூ ஸ்வீட் ஹார்ட்!, என்று மனைவி தரும் இதமான இதழ் ஒத்தடத்தில் அன்றைய தினமே அழகாகிப் போவதாக சங்கருக்குத் தோன்றும்.

 

“வர… வர… எனக்கு எதுவுமே தரதே இல்லை! கிளினிக் போயிட்டு வந்து வச்சுக்கறேன், என்று சிணுங்கலோடு பெண்ணின்  பொய்கோப நடையைப் புன்னகையோடு பார்த்து நிற்பவனை

 

ஓடி வந்து அவனுக்கு மட்டும் கேட்கும் வகையில், “என்ன டீடா? இப்டி நான் கோபப்படும்போது நீங்கச் சிரிச்சா என்னையப் பத்தி பாக்கரவங்க என்ன நினைப்பாங்க?”, என்று மெல்லிய குரலில் கேட்டுவிட்டு

 

“எல்லாத்துக்கும் கணக்கு வச்சிருக்கேன்.  வந்து ரிலாக்ஸா ரிட்டனாகி… ரிலேவுல ஓடுனவங்களுக்கு மூச்சுவாங்கற மாதிரி, உங்களை ஓட வைக்கலை… எம்பேர மாத்திக்கறேன்!, என்று பெண் கூறிவிட்டுக் கிளம்புவதை ரசித்தபடியே, சிரித்தவாறு கிரேக்கச் சிலைபோல பேசாமல் நின்றவாறு மனைவிக்கு விடைகொடுப்பதிலிருந்து சங்கரும் மாறவில்லை.

 

அந்த நேரத்தில் சங்கர் பேசினால், பெண் என்ன செய்வாள் என்பதை உணர்ந்தவனால், எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் நிலைக்கு தன்னை மாற்றிக்கொண்டு விட்டான்.

 

மேலும், மேலும் பதிலுக்கு பெண்ணிடம் பேச்சை வளர்த்து, நேரம் கடந்துவிடும்.  அதனால் இருவருமே அன்று விடுப்பெடுத்து, இருவருக்கும் பொய்ச் சண்டை, வாய் வம்பு என்று ஒருவரோடு மற்றவர் வசப்பட்டு, அன்றைய தினமே வசந்தமாகச் சென்றுவிடும்.

 

ஒன்றிரண்டு முறை இதுபோன்ற நிகழ்வு நடந்து, நண்பர்களோடு, உடன் பணியாற்றும் சக பேராசிரியர்களும், சிரிப்போடு கிண்டலாக வினவ… பிறரின் கேள்விக்கு ஆளாவதை விரும்பாதவன் சுதாரிக்கத் துவங்கிவிட்டான்.

 

ஆனாலும், இதுபோன்ற தர்மசங்கடமான சூழல் உண்டாவதைத் தவிர்த்தானே அன்றி, பெண்ணைக் கவனிப்பதில் யார் என்ன சொன்னாலும், அதைப்பற்றி கண்டு கொள்ளாது வழமைபோலவே செயல்பட்டான்.

 

பெண் தான் ஊரில் இல்லாத நாள்களில் திண்டாடுவாள் என்பது தெரிந்தாலும், மானகிரி கிளம்புமுன் அலமேலுவிடம், “அக்கா நான் வர ரெண்டு நாளாகும்.  அவளை பாத்துக்கங்க, என்று எண்ணமுடியாத அளவிற்கு திரும்பத் திரும்பக் கூறிவிட்டே மதுரையிலிருந்து கிளம்புவான்.

 

சிலமுறை அன்னம்மாள் தனது பேரனின் பேச்சைக் கேட்டு அமைதியாகவே இருப்பார். 

 

சில நேரங்களில், “அடப்போடா…! ஊருக்கில்லாத அதியசமா ஒருத்திய கட்டிட்டனு ரொம்பப் பண்ணாம கிளம்பி போற வழியப் பாருடா!  என்னமோ பச்ச புள்ளய விட்டுட்டுப் போறவங்கணக்கா எத்தனைவாட்டி சொன்னதையே கிளிப்புள்ள கணக்கா சொல்லிகிட்டு இருக்க?, என்று அன்னம்மாள் பேரனை அதட்டுவதை ரசித்தபடியே

 

அறையில் இருந்து வெளிவருபவள், “உங்களுக்கு பொறாமை ஆச்சி…! அதான் அவருகிட்ட என்னைய டேமேஜ் பண்ணப் பாக்குறீங்க! அவருமட்டும் மாறட்டும்…! அப்புறம் இருக்கு உங்களுக்கு கச்சேரி!, என்று நவீனாவும் அன்னம்மாளோடு வார்த்தையாடுவாள்.

 

“ஒரு புள்ளை குட்டின ஆகுறவரை எல்லாரும் இப்டி மந்திரிச்சு விட்டமாதிரிதான் இருப்பாங்க…! அப்புறம் பாரு…! உன்னைய அவன் நீ யாருன்னு கேக்கலைன்னா?, என்று அன்னம்மாளும் நவீனாவை எச்சரிப்பார்.

 

இருவரின் பேச்சைக் கேட்டு அமைதியாக, சிரித்தவாறே இடத்தை கடந்து விடுவானே தவிர, யாருக்கும் எந்தப் பதிலையும் கூறமாட்டான் சங்கர்.

 

பிரபல மருத்துவமனையில் காலை 6 மணிமுதல் மதியம் 2 வரை பகுதிநேர பணிக்கு செல்பவள், காலை ஆகாரத்தை கையில் எடுத்துச் சென்றுவிடுவாள்.

 

சசிகலாவோ, அன்னம்மாளோ மதுரை வரும் சமயத்தில் சங்கர் நவீனாவிற்கு காலையில் பணிக்குக் கிளம்புபவளுக்கு உணவு எடுத்து வைப்பது போன்ற செயலைப் பார்த்து, “ஸ்கூலுக்கு போகப்போற உம் புள்ளைக்கு சாப்பாடு கட்டிக் கொடுக்க… இப்பவே ஒம்பொண்டாட்டி உனக்கு ட்ரெயினிங் கொடுக்கறாளோடா?, என்று சிரித்தவாறே கிண்டல் செய்தாலும், தனது எந்த நடைமுறையையும் நிறுத்தவோ, மாற்றிக் கொள்ளவோ சங்கர் எண்ணவில்லை.

 

சங்கரைப் பொருத்தவரை மனைவியின்மீது அவன் கொண்ட அளவற்ற அன்பு என்றுமே மாறாது என்பதாக இருந்ததை, தாயும், அவனது பாட்டியும் அறியவில்லை.

/////////////

சங்கர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் வந்தபிறகு வாரத்தில் இரண்டு முறை மானகிரி சென்று வருவதை வழக்கமாக்கியிருந்தான்.

 

சங்கரோடு பிரச்சனைக்கு வந்து நின்றவர்கள் அனைவருமே, சங்கரிடம் நேரில் வந்து மன்னிப்புக் கோரியிருந்தனர்.

 

“உங்களையெல்லாம் நம்பி எப்டி திரும்பவும் வேலைக்குச் சேக்க முடியும்…? நாளைக்கே இந்த ஊருக்குள்ள யாராவது காசு, பணம் தரேன்னு சொன்னா, இன்னொரு தடவை இப்டி நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டிங்கனு என்ன நிச்சயம்?, என்று வினவிய சங்கரிடம்

 

“ஐயா…! தெரியாம ஏதோ ஒரு நப்பாசையில இப்டி பண்ணிருச்சுக!  நல்ல மாட்டுக்கு ஒரு சூடுனு பெரியவுக சொல்லுவாக…! அந்த மாதிரி.. ஒரு தடவை தப்பு செஞ்சு… குத்துயிரும் கொற உயிருமா கிடந்தவங்க எந்திரிச்சு வரவரை கொல சாமி கணக்கா எங்க குடும்பத்துல எல்லா வயிறும் வாடாம பாத்துகிட்டீங்க…! அப்டிப்பட்ட மனுசனுக்கு எங்க வீட்டு ஆளுனால எதாவது இனிமே உங்களுக்கு நடந்தா… அதுக்கப்பறமா அவுகளுக்கும், எங்களுக்கும் எந்த ஒட்டுமில்ல… ஒரவுமில்ல…! இது எங்க கொலசாமி மேல சத்தியம்!, என்று வந்திருந்த பெண்கள் அனைவரும் சேர்ந்து கூறியதோடு,

 

“சல்லித்தனம் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி வந்து உம்முனு நிக்கிறியே…! பேச வாயத் திறந்தா… வாயில இருக்கிற முத்து உதிந்திருமாக்கும்!, என்று தன்னோடு அழைத்து வந்தவர்களை நோக்கி பேசியவர்கள்

 

“வாயத் தொறந்து மன்னிப்புக் கேளுயா!, என்று நின்றிருந்த ஆண்களிடம் உடன் வந்திருந்த பெண்கள் கூறத் தவறவில்லை.

 

அதையே, அவர்கள் வீட்டு ஆண்களும் மனம் திருந்தி் மன்னிப்பு வேண்ட… எச்சரிக்கை உணர்வோடு, முன்பிருந்த இடங்களில் இல்லாது, வேறு வேறு ஊர்களில், தன்னோடு பயின்றவர்களின் மேற்பார்வையில் உள்ள பண்ணைகளில் பணிக்கு அமர்த்த உதவினான் சங்கர்.

 

“ஒரு வருசம் அங்கன போயி வேலை பாக்கட்டும்.  இங்க எனக்கு இப்ப ஆளு தேவையில்ல…! தேவைப்படும்போது கூப்டுக்கிறேன், என்று வந்தவர்களிடம் நயமாகப் பேசி அனுப்பியிருந்தான் சங்கர்.

 

மானகிரியில் பணி கிட்டாதபோதும், ஏதோ நித்திய வருமானம் கிடைப்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்த சங்கரை மனதார வாழ்த்தி விடைபெற்றிருந்தனர்.

 

சிலர், “இங்க எதாவது போட்டுத் தருவாகன்னு கூட்டியாந்த… இப்ப என்னடானாக்க… அவரு வேற எங்கயோ போகச் சொல்றாரு?, என்று தங்கள் மனைவியிடம் இழுக்க

 

“நீ செஞ்ச காரியத்துக்கு அவரக்கண்டு எதோ வேலைக்கு ஏற்பாடு பண்ணித் தந்திருக்காரு.  வேற ஆளா இருந்தா… இன்னேரம் பொதைச்ச இடத்துல புல்லு முளைச்சிருக்கும்.  என்னயா மனுசன் நீ.  பேசாம வா, என்று இழுத்துச் சென்றிருந்தனர்.

/////////////

 

முன்பைக்காட்டிலும், உறவுகளுக்கிடையே விரிசல் பெரிதாகியிருக்க, மூன்று வீட்டுப்பகுதிகளும் தனித்தனி சுற்றுச் சுவர்களுக்கிடையே பிரிக்கப்பட்டிருந்தது.

 

சாந்தனுவின் திருமணத்திற்குப் பிறகு, சாந்தனுவின் தந்தை முற்றிலும் வன்மமாக மாறியிருந்தார்.

 

பண்ணை மற்றும் இதர நிலைகளில் ஊருக்குள் அனைவருக்கும் நல்ல இணக்கமான உறவாக தனது இதமான அணுகுமுறை மற்றும் உதவி செய்தல் மூலம் தன்னை உயர்நிலைக்கு மாற்றிக் கொண்டிருந்தான் சங்கர்.

 

தவறு செய்தவர்களைத் தூண்டிவிட்டு சங்கருக்கு எதிராக சாந்தனுவின் தந்தை திட்டமிட்டு எழுப்பிய அனைத்து சதிகளும், அவருக்கே திரும்பி முன்பைவிட மூர்க்கமாக மாற்றியிருந்தது.

 

மூர்க்கமான செயல்களினால், அவருக்கே பெருந்துன்பத்தை அவராகவே ஏற்படுத்திக் கொண்டு, ‘எல்லாம் இந்த சங்கரால வந்தது, எனும் மனநிலையோடு காழ்ப்புணர்வோடு செயல்படத் துவங்கியிருந்தார்.

 

“நாம் பாக்க பிறந்து வளந்த பயலுக்கு என்ன தெரியும்னு… பட்டிக்காட்டானுங்க இவங்கிட்டயே எதுக்கெடுத்தாலும் வந்து நிக்கிறானுங்க, என்று எதிரே காண்போரிடம் கூறி மன ஆறுதல் அடைவதை வழக்கமாக்கியிருந்தார் மனிதர்.

 

தலைமைப் பண்புகளோடு நல்ல குணவானாக இருந்த சங்கரின் செயல்களில் ஈர்ப்புற்ற அவ்வூர் மக்கள் அடுத்தடுத்த ஊர் சார்ந்த நல்ல முடிவுகளில் சங்கரையே முன்னிலைப்படுத்தத் துவங்கியிருந்தனர்.

 

சங்கரைவிட வயதிலும், உறவுநிலையிலும் மூத்தவரான தன்னை யாரும் எதற்கும் கண்டுகொள்ளாதது, சாந்தனுவின் தந்தையை மிகுந்த மனஅழுத்தத்தில் கொண்டு நிறுத்தியிருந்தது.

 

திருமணம் போன்ற நிகழ்வுகள் ஆகட்டும், கணவன் மனைவி சண்டை ஆகட்டும், அரசியல் சார்ந்த முடிவுகள் ஆகட்டும், ஊர் சார்ந்த ஆக்கப்பணிகள் ஆகட்டும் அனைத்திலும் முன் நின்று நேர்படுத்துவதை எந்த நிலையிலும் சமரசம் கொள்ளாது சரிவரச் செய்து மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றிருந்தான் சங்கர்.

 

தாஸை முன்னிலைப்படுத்தியிருந்தால்கூட மனம் அதை மனம் ஏற்றிருக்ககூடும்.  ஆனால் அடுத்த தலைமுறையான சங்கரை அனைத்திலும் முன்னிலைப்படுத்தியதை சாந்தனுவின் தந்தையால் எளிதாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. சிறு சிறு விடயங்களில்கூட பிரச்சனையை ஏற்படுத்தத் துவங்கியிருந்தார்.

 

எதிர்பாரா வேளையில், எதிர்பாரா கோணத்தில் பிரச்சனைகளை எழுப்புவதை வாடிக்கையாக்கியிருந்தவரை, எல்லா நிலைகளிலும் சமாளித்து வந்தான் சங்கர்.

///////////////////

 

சாந்தனு, வரலெட்சுமியோடு காரைக்குடியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தான்.

 

வரலெட்சுமியை எண்ணி, சங்கர் மற்றும் நவீனாவிற்கு வருத்தம் இருந்தாலும், இனி வரக்கூடிய காலங்களில் சாந்தனு வரலெட்சுமிக்கு உண்மையாக இருந்தால் போதும் என்று மனதில் எழுந்த வருத்தத்தை ஒதுக்கி, அமைதியாகியிருந்தனர்.

 

வரலெட்சுமி நவீனாவோடு பேச ஆசைப்பட்டு அழைத்தால் ஒன்றிரண்டு வார்த்தையோடு வேலை இருப்பதாகக் கூறி வைத்துவிடுவாள் நவீனா.

 

சாந்தனுவைப் பற்றிய அனுபவம் பெண்ணை அவ்வாறு ஒட்டாமல் இருக்கச் செய்திருந்தது.

 

இதை அறியாத வராவோ, “நீ டாக்டரானதுக்குப்பின்ன எங்கூட எல்லாம் பேசப் பிடிக்கலையாக்கும்…! நீ முன்ன மாதிரி இல்லக்கா…! அவரு எப்பவுமே உங்களைப் பத்தியேதான் கேப்பாரு…! ஆனா நீங்க எல்லாம் பழசை மறந்துட்டீங்க!, என்று வருத்தத்தோடு தொலைபேசியை வைத்திருந்தாள் பெண்.

 

எதைப்பற்றியும் வராவிடம் பேசி, அவளைக் குழப்ப விரும்பாத நவீனாவோ, கணவனிடம் மட்டும் விடயத்தைப் பகிர்ந்ததோடு விட்டிருந்தாள்.

 

நவீனா அடுத்து மேற்படிப்பு படிக்க எண்ணி, நுழைவுத் தேர்வு எழுத இருப்பதை நண்பர்கள் வாயிலாக அறிந்து கொண்டவன், தானும் மேற்படிப்பிற்காக விண்ணப்பிக்கும் எண்ணத்திற்கு வந்திருந்தான் சாந்தனு.

 

சிறுத்தைகள் புள்ளிகளை மாற்றிக் கொள்ளாது எனும் மொழிக்கேற்ப சாந்தனு இருந்ததை, வரலெட்சுமியோ, மற்ற யாவருமோ அறிந்து கொள்ளவில்லை.

 

ஆனால், ஓரளவு உடன் இருந்து வளர்ந்தவளான நவீனா கணித்து, அதற்கேற்றவாறு தனது செயல்களை மாற்றிக் கொண்டிருந்தாள்.

 

வரலெட்சுமி கணவனின் நடவடிக்கையில் எந்த சந்தேகமும் வராத நிலையில் கண்மூடித்தனமான அன்போடு, ஒவ்வொன்றிற்கும் அவளாகவே ஒரு நியாயமான காரணம் கற்பித்து நியாயப்படுத்தி வாழ்ந்திருந்தாள்.

 

மனைவியின் பெருந்தன்மையான செயலை, சாந்தனு மிகவும் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளத் துவங்கியிருந்தான்.

 

மருத்துவர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்ள வேண்டி, பங்களூர் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு, தனித்திருக்க இயலாதெனில் மானகிரிக்கு செல்லுமாறு கூறிவிட்டுக் கிளம்பியிருந்தான் சாந்தனு.

 

வரலெட்சுமி தனியாக காரைக்குடியில் இருக்க முடியாது என்கிற நிலையில், மானகிரியில் உள்ள தாய்வீட்டிற்கு செய்தி அனுப்பவே அவளை வந்து அழைத்து வந்திருந்தனர்.

 

மாமியார், மாமனாரை தாயோடு சென்று அவ்வப்போது நேரில் சென்று பார்த்து வருவாள்.

 

வரலெட்சுமிக்கு, விரும்பியவனே மணாளனாக வந்ததில் மகிழ்ச்சி என்பதுடன், தனது கணவன் மருத்துவன் என்பதில் ரெட்டை மகிழ்ச்சியோடு திருமணத்திற்கு பின் வளைய வந்தாள்.

 

தாய் வீட்டிற்கு வந்தால், கணவன் பெருமை பேசியே பொழுது போக்குவாள்.  உடன் பிறந்தவளைப் பார்த்தால், கணவனின் அருமை பெருமைகளை ஒன்றிற்கு நான்காக அள்ளிவிட்டு சந்தோசப்பட்டுக் கொள்ளுவாள்.

 

வரலெட்சுமியின் பொழுதுகள் எப்பொழுதும்போலச் செல்ல, சாந்தனுவைப் பற்றிய உண்மை  தெரியாமலேயே ஊருக்கு வந்திருந்தவள் தனது வழமையான செயல்களில் ஈடுபட்டிருந்தாள்.

//////////////

இளநிலை மருத்துவ கல்வி முடிந்து, முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வுகளும் முடிந்திருந்து.

 

பெண்ணை திருமணத்திற்கு பிறகு எங்கும் அழைத்துச் செல்லாமல் இருந்தவன், ஊட்டிக்கு மனைவியோடு கிளம்பியிருந்தான் சங்கர்.

 

பெண் எதிர்பாராமல் திட்டமிட்டிருந்தவன், கிளம்புவதற்கு முதல்நாள் இரவில் பெண்ணிடம் தன் அவாவைக் கூற, அடுத்த நாள் மதுரை வருவதாக இருந்த மோனிகா மற்றும் அவளது கணவரையும் தங்களோடு அழைத்துச் செல்லக் கேட்ட மனைவியைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டான்.

 

“உன் பிரண்டோட போகனும்னா சொல்லு…!  அனுப்பி வைக்கிறேன்.  ஆனா நான் வரல…!, என்று சற்றே கடின வார்த்தைகளை உதிர்த்தவன், அங்கிருந்து விருட்டென்று ஹாலிருந்த பகுதிக்குள் அகல

 

நீண்ட நேரம் கணவனுக்காக படுக்கையறையில் காத்திருந்தாள் நவீனா.

 

பெண் உறங்கியிருப்பாள் என்று எண்ணி அறைக்குள் சங்கர் வந்தவுடன், “எதுக்குங்க… உங்களுக்கு இவ்ளோ கோபம்… அந்தப் புள்ளை நாளைக்கு இங்க வருதே… அப்டியே அவங்களையும் நம்ம ட்ரிப்ல சேத்துக்கலாம்னு ஒப்பீனியன்தான கேட்டேன்!, என்று பணிவாகவே தனது எண்ணத்தைக் கணவனிடம் எடுத்துக்கூற

 

“எதெதுல, யாரோட எப்ப, எங்க போகும்போது கூட்டு சேரனும்னு ஒரு புரோட்டோகால் இருக்கு…! கல்யாணம் பண்ணி இத்தனை வருசத்துல… காரைக்குடிய விட்டா மதுரை, மதுரைய விட்டா காரைக்குடினு உன் ஸ்டடீஸ்காக டிஸ்ட்ரப் பண்ணாம இருந்தவன், ஆசையா வந்து ஊட்டி போகலாம்னு சொன்னா…! பேச வந்துட்டா…! ஒப்பீனியன் கேக்கறேன்னு! ஊரோட எல்லாத்தையும் கூட்டிகிட்டு ஊட்டிக்குப் போவோம்!, என்று இன்னும் அதே கோபம் குறையாமல் விடாது பேசியவனை

 

தான் ஒன்று நினைத்துப் பேசியது, வேறாக மாறி தன்னையே பதம் பார்த்தபோதும், நேரம் உணர்ந்து, “தெரியாம பேசிட்டேன், என்று இறங்கி வந்து பேசியவளை

 

“இதை நம்பச் சொல்றியா?, என்ற நச்சென்று நடுமண்டையில் கொட்டு வைத்தாற்போல கேட்டவனை என்ன செய்து மலையிறக்குவது என்று தெரியாமல் விழித்தாள் நவீனா.

 

ஆனாலும் விடாது, “என்ன செய்யனும்னு நினைக்கறீங்களோ… அப்டியே செய்யுங்க… எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்ல.  நாளைக்கு எப்போ போகனும்னு சொன்னா அதுக்குள்ள நான் ரெடியாகுறேன், என்றவள் முதன்முதலாக கணவனின் கோபத்தைத் தாங்க இயலாமல் மனபாரத்தோடு படுக்கைக்குச் சென்றுவிட்டாள்.

 

விடியல்வரை என்ன செய்தான் என்பதைக்கூட யோசிக்க இயலாதவளாக, கணவனின் பேச்சில் மனம் சுழல… உறங்காமல் விழித்திருந்தாள்.

 

தன் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் பேசிவிட்டவளை, தான் வெடுக்கென்று பேசியது புரிந்தாலும், மதுரையை விட்டு கிளம்பும்வரை இணக்கமாகப் பேசாமல் இருந்த சங்கரை முதன் முறையாக வித்தியாசமாக உணர்ந்தாள் நவீனா.

 

‘எதுக்கு இவ்ளோ கோபம்.  நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?’, என்பதே பெண்ணின் வாதமாக இருந்தது.  ஆனாலும் கணவனிடம் பேச இயலாத நிலையில் அமைதியாகவே கணவனோடு ஊட்டிக்கு கிளம்பியிருந்தாள்.

///////////

அதேநேரம், சென்னையில் பணிபுரிந்த வெற்றி, பங்களூருவிற்கு பணி நிமித்தமாக செல்ல வேண்டிய சூழல் வந்தது.

 

வழமைபோல தங்கும் லாட்ஜில் அறையெடுத்து தங்கியிருந்தார் வெற்றி.

 

வந்திருந்த வேலை முடிந்து, அறைக்குத் திரும்பியவர், அறையை வகேட் செய்து கொண்டு கிளம்பினார்.

 

காரிடரில் நடந்து வந்தபோது, எதிர்பாராமல் அறையைத் திறந்து கொண்டு அறையை விட்டு வெளிவந்த இளம்பெண்ணைக் கண்டு, ஒதுங்கிய வேளையில், அதே அறைக்குள்ளிருந்த வந்தவனைக் கண்ட வெற்றி திகைத்திருந்தார்.

 

‘இங்க எப்டி?’, என்று மனம் கேட்ட வினாவிற்கு, பதில் வேண்டி யோசனையோடு அவ்விடத்தைக் கடந்திருந்தார் வெற்றி.

அடுத்த பதிவில்…