UUU–EPI 2

அத்தியாயம் 2

அஷ்டேக்(Aztec) நாகரிகத்தின் போது கொக்கோ பீன்ஸ் தங்கத்தை விட விலை மதிப்புள்ளதாக இருந்தது. பணக்கார மக்களே இதை உணவாக உபயோகித்து வந்தார்கள். அந்த காலகட்டத்தில் கொக்கோ கடவுள் கொடுத்த கொடையாக நினைக்கப்பட்டது.

 

ஹோட்டல் அறையிலேயே சில நாட்களாக அடைந்து கிடந்தவளுக்குத் தூங்கி எழும் போதே தலையை வலிப்பது போல இருந்தது. கட்டிலில் இருந்து மெல்ல எழுந்து அமர்ந்தாள் பாவை. கம்போர்டரை விலக்கியதும் குளிர் எலும்பு வரை ஊடுறுவியது. மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்க உடலை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டாள் அவள்.

“மலைதேசம்னு தெரியும்! ஆனாலும் இந்த போலுஷன், க்ளோபல் வார்மிங், மரத்தை கண்ட மேனிக்கு வெட்டறது எல்லாம் சேர்த்து கேமரன் மலை குளிரை குறைச்சிருக்கும்னு நெனைச்சேன்! அப்படி இல்ல போலிருக்கே! அப்பப்பா என்னா குளிருடா சாமி”

கம்போர்டரை மீண்டும் உடலை சுற்றிப் போர்த்திக் கொண்டவள், மெல்ல நடந்து வந்து ஜன்னல் அருகே நின்றாள். தூரத்தே பச்சை பசேல் என தெரிந்த தேயிலை தோட்டம் அவள் கண்ணைப் பறித்தது. அத்தோட்டத்தைப் பார்த்ததும் தேநீர் அருந்தும் ஆவல் எழுந்தது பெண்ணுக்கு.  

“சூடா ஒரு டீ அடிச்சா எப்படி இருக்கும்! செம்மையா இருக்கும்ல! வேற யாராவது போட்டுக் குடுத்தா சொர்க்க சுகமா இருக்கும்! நானே கலக்கி நானே குடிச்சா பிரியாணி சாப்பிட்டு கைய கழுவுன தண்ணிய வாயில ஊத்திக்கிட்ட மாதிரில இருக்கும்!” என முனகியவள் ரிப்ரேஷ் ஆக பாத்ரூம் நோக்கி சென்றாள்.

பல் துலக்கிக் கொண்டே கண்ணாடியைப் பார்த்தவளுக்கு தன்னைப் பார்த்தே சிரிப்பு வந்தது. தலை முடி கலைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலிப்பிக் கொண்டு நின்றன.

“ஹீரோயின்ஸ் மட்டும்தான் தூங்கி எழுந்தா கூட அழகா அம்சமா இருப்பாங்க போல. நம்மள மாதிரி ஜீரோயின்(ஹீரோயின்கு எதிர்பதம்.ஹிஹி) எல்லாம் தூங்கி எழுந்தா கண்ணு உப்பிப் போய், வாயில எச்சில ஒழுக விட்டுக்கிட்டு அழுக்கா அசிங்கமா இருக்கோம்.” என தன்னைப் பார்த்து சொல்லிக் கொண்டே முகத்தைக் கழுவினாள்.   

“புதிய உலகை

புதிய உலகை தேடிப் போகிறேன்

என்னை விடு”

என பாடியபடியே வெண்மையாய் இருந்த துவாலையால் முகத்தை மென்மையாகத் துடைத்தாள் அவள்.

பாடும் பாவையை அவளறியாமல் நாம் பார்வையிடுவோம் வாருங்கள். முதுகு வரை புரண்டிருக்கும் பட்டுப் போன்ற கேசம், கருப்பும் ஊதாவும் சிகப்பும் கலந்த வண்ணக்கலவையில் அழகாய் பளபளத்தது. அழகிய பெரிய கண்கள். கூர் மூக்கு, அதில் கறுப்பு நிற மெட்டல் மூக்குத்தி அமர்ந்திருந்தது. கிள்ள சதை இல்லாத கன்னம். இதய வடிவில் உதடுகள். மாடல்களை போல நீண்ட கழுத்து! உயரமாய் ஒல்லியாய் இருந்தாள். மாநிறத்தில் மிக மிக அழகாய் இருந்தாள் பெண்.

“இந்த குளிருக்கு குளிக்கறது எல்லாம் வேலைக்கு ஆகாது! பெர்பியம அப்பிக்கிட்டு கிளம்பிடலாம்” என முனகிக் கொண்டே தனது லக்கேஜ் பேகை திறந்தாள் அவள்.

தனது உடைகளைப் பார்த்ததும் தானாகவே புன்னகை வந்து முகத்தில் ஒட்டிக் கொண்டது. எல்லாமே பூக்களை தீமாக வைத்த உடைகள். குட்டி ரோஜாக்கள் போட்ட மஞ்சள் நிற ப்ளவுசை எடுத்து அணிந்துக் கொண்டவள், மேட்சிங்கான மஞ்சள் நிற ஸ்லாக்சையும் அணிந்துக் கொண்டாள். கண்ணாடி முன் நின்று தலை வாரி, மஞ்சள் நிற பீனியை(பீனி—க்ரோஷே செய்து பின்னிய தொப்பி) மாட்டிக் கொண்டு பெர்மியூமை அள்ளித் தெளித்துக் கொண்டாள். முகத்துக்கு மெலிதாக பவுடர் போட்டு, உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டு ரெடியானவள், கடைசியாக தனது லென்ஸ் பாக்ஸ்சை திறந்தாள். அதில் இருந்து மஞ்சள் நிற காண்டேக்ட் லென்சை எடுத்துக் கண்களில் பொருத்திக் கொண்டவள், கண்ணாடியில் தன்னை ஆராய்ந்தாள்.

“ச்சந்தேக் மச்சாம் பூங்கா!” (பூவைப் போல அழகு) என தன்னையேப் புகழ்ந்தவள் கைப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள்.

“மீண்டும் நான் மீளப் போகிறேன்

தூரமாய் வாழப் போகிறேன்” என பாடிக் கொண்டே கதவை மூடி வெளியேறினாள்.

சிலருக்கு தலை சீவாமல் கூட வெளியே தெருவே போய் அலைந்து விட்டு வர முடியும். சிலருக்கு ஃபுல் மேக்கப் இல்லாமல் வாசற்படியைக் கூட தாண்டப் பிடிக்காது. கான்பிடண்ட் லெவல் எல்லோருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் போது பூம்பாவையாய், மஞ்சள் ஓவியமாய் டீ குடிக்கப் போகும் நமது நாயகியை ஓவர்டி இதெல்லாம் என சொல்வதற்கு கூட நா எழவில்லை எனக்கு.   

ஹோட்டல் லாபியில் வந்து க்ராப்(grab) புக் செய்தவள், கார் வந்ததும் ஏறி அமர்ந்தாள். கேமரன் ஸ்குவேர் ஷோப்பிங் காம்ப்ளேக்ஸ் போகத்தான் கார் புக் செய்திருந்தாள் பெண். ஆனால் போகும் வழியில் வரிசையாக கடைத்தெருவைப் பார்த்தவள் அங்கேயே நிறுத்த சொல்லி இறங்கிக் கொண்டாள். ஒவ்வொரு கடைகளாய் வெளியே இருந்து பார்த்தவாறே நடைப்பயின்றவளுக்கு, ‘பைட் மீ’(bite me) என அழகான பெயர்ப்பலகை கொண்ட கடையைப் பார்த்ததும் கால்கள் சில நிமிடம் அப்படியே நின்றன.

பெரிய கபே போல இருந்த அந்த பைட் மீக்குள் காலடி எடுத்து வைத்தாள் பெண்ணவள். கதவைத் திறந்ததும் ச்சைம்ஸ் மணியெழுப்பி அவள் வருகையை அறிவிக்க, கவுண்ட்டரில் இருந்தப் பெண் புன்னகையுடன் ‘வெல்கம் டூ பைட் மீ’ என வரவேற்றாள். பதில் புன்னகை தந்தவள், அவ்விடத்தை சுற்றிப் பார்வையை சுழற்றினாள். ஐந்து வட்ட வடிவமான மேசைகள் கடையின் வலது பக்கமாக போடப்பட்டிருக்க, இடது பக்கம் முழுக்க கண்ணாடி தடுப்பில் வித விதமான சாக்லேட்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

கவுண்ட்டர் பெண் நெருங்கி வந்தாள்.

“யூ தமிழ்?”

ஆமென தலையாட்டினாள் இவள்.

“இங்க சாக்லேட் சாப்பிடவும் கிடைக்கும். அதோட ஆர்டர் குடுக்கறவங்களுக்கும் செஞ்சு குடுக்கறோம்” என சொல்லியபடியே கடை ப்ரோஷரை அவளிடம் நீட்டினாள்.

ப்ரோஷரை திருப்பித் திருப்பிப் பார்த்தப்படியே,

“கபே இல்லையா இது?” என கேட்டாள் மஞ்சள் ரோஜா.

“கபேதான்! சாக்லேட் தீம் கபே. ட்ரீங்க்ஸ்சும் சேர்வ் பண்ணறோம். அப்படியே சாக்லேட்ல செஞ்ச பேக்கரி ஐட்டம்ஸ்சும் கிடைக்கும்! ஒரு ஹாட் சாக்லேட் போடவா?”

டீ குடிக்க வந்தவள், மனதை மாற்றிக் கொண்டு ஹாட் சாக்லெட்டுக்கு ஓகே சொன்னாள். அதோடு ஒரு சாக்லேட் டோனாட்டும் சேர்த்து சொன்னவள், டிஸ்ப்ளேவில் இருந்த சாக்லேட்களை பார்வையிட ஆரம்பித்தாள். வைட் சாக்லேட், டார்க் சாக்லேட், மில்க் சாக்லேட், என வித விதமாக ரக ரகமாக, வேறு வேறு நிறத்தில், பல வகையான ஷேப்பில் கருத்தைக் கவர்வதைப் போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த தோங்ஸ்(பிடித்து எடுக்கப் பயன்படும் கருவி) கொண்டு ப்ளாஸ்டிக் கவரில் பட்டர்ஸ்காட்ச் சாக்லட்டை அள்ளிப் போட்டுக் கொண்டவள், கவுண்ட்டரில் கொண்டு போய் வைத்தாள்.

அவள் ஆர்டர் செய்த உணவோடு இதற்கும் பணத்தை செலுத்தி விட்டு ஒரு மேசையில் போய் அமர்ந்தாள் அவள். டானட்டை ருசித்து உண்டவள், ஹாட் சாக்லேட்டையும் சுட சுட அருந்தினாள். நடு நடுவே குட்டி குட்டியாய் இருந்த பட்டர்ஸ்காட்ச் சாக்லேட்டையும் வாயில் போட்டுக் கொண்டாள். எப்பொழுதுமே இவ்வளவு இனிப்பாய் அவள் காலை வேளையை ஆரம்பித்தது இல்லை. சுகர் ரஷ் எனும் இனிப்பு அதீதமாய் எடுத்துக் கொண்டால் ஏற்படும் உற்சாகமும் உத்வேகமும் உண்டாக அந்தப் பெண்ணிடம் பாய் சொல்லிவிட்டு கடையை விட்டு வெளியேறினாள் மஞ்சள் ரோஜா.

மெலிதாக விசில் அடித்துக் கொண்டே நடந்தவளின் பார்வையில் அந்த சம்பவம் பட்டது. மோட்டர் பைக்கில் வந்த ஆடவன் ஒருவன் சாலையைக் கடக்க நின்றிருந்த பெண்ணின் பேகை பறித்துக் கொண்டு செல்ல முயல அவளோ விடாமல் போராடிக் கொண்டிருந்தாள். சட்டென தான் அணிந்திருந்த ஹை ஹீல்சை கழட்டி அவன் முகத்தை நோக்கி விட்டடித்தவள்,

“தோலோங்! ஹேல்ப்! சாமூன்!”(உதவி, வழிபறி) என கத்தியவாறே அவர்களை நோக்கி ஓடினாள்.

திடீரென பறந்து வந்த ஹீல்ஸ் முகத்தைப் பதம் பார்த்ததில் பைக்கைத் தவறவிட்டு தடுமாறி கீழே விழுந்திருந்தான் திருடன். இவள் சத்தத்தில் ஆட்கள் ஓடி வந்து அவனை சூழ்ந்திருக்க, தர்ம அடி விழுந்தது அவனுக்கு. மேடம் குறிப்பார்த்து வீசிய தனது ஹீல்சை கையில் எடுத்துக் கொண்டது மட்டுமில்லாது அதை வைத்து அவன் முதுகிலேயே நான்கு சாத்து சாத்தினாள்.

“ஹோய்! சக்கேட்லா பாபீ”(ஹோய் வலிக்குது பன்னி) என கத்தினான் கீழே விழுந்துக் கிடந்தவன்.

“திருட்டு ராஸ்கல்! என்னையவா பன்னின்னு சொன்ன! சாவுடா” என மலாயில் கத்தியவாறே இன்னும் மொத்தினாள் பெண்.

இவளைப் பிடித்து இழுத்து சமாதானம் செய்த மற்றவர்கள் போலிசை அழைக்க, திருடன் கையில் பிடித்திருந்த கைப்பையைப் பிடுங்கிக் கொண்டு அந்தப் பெண்ணை நோக்கிப் போனாள் இவள்.

“ஓகேவா இருக்கீங்களா? அடி கிடி படலயே?” என கைப்பையைத் திருப்பிக் கொடுத்தப்படியே படபடப்பாக கேட்டாள் பெண். வாய் பேசினாலும் கண்கள் மேலிருந்து கீழ் வரை திருட்டுக் கொடுக்க இருந்த பெண்ணை அவசரமாக ஆராய்ந்தது.

தனது கைப்பையை அணைத்து நெஞ்சோடு பிடித்துக் கொண்டே,

“ஐம் ஓகே! அட்ரஸ் கேட்க வந்தவன் திடீர்னு பேகை இழுக்கவும் கொஞ்சம் தடுமாறிட்டேன்! நல்ல வேளை கீழ விழல நான்!” என திக்கித் திணறி பேசியவளின் நடுக்கத்தை உணர்ந்த மஞ்சள் பாவை, மெல்ல நெருங்கி அவளை அணைத்துக் கொண்டாள்.

“ரிலேக்ஸ், பயப்படாதீங்க! ஒன்னும் நடக்கல! நீங்களும் பேபியும் சேப்பா இருக்கீங்க” என சொல்லியபடியே அவள் முதுகை தடவிக் கொடுத்தாள்.

இவளது அணைப்பில் மெல்ல நடுக்கம் நிற்க, முக வெளுப்பு மெல்ல மாறி நார்மலானது நந்தனாவுக்கு.

“தேங்க் யூ சோ மச்ங்க”

“ங்கலாம் வேணாமே! உங்களோட ரெண்டு மூனு வருஷம் சின்னவளா இருப்பேன் நான்! வா போன்னு கூப்பிடுங்க!”

அதற்குள் போலிசும் வந்திருக்க, நந்தனாவிடம் போலிஸ் ஸ்டேசன் வந்து ஒரு காம்ப்ளேன்ட் கொடுக்க சொல்லிவிட்டு திருடனை அள்ளிப் போட்டுக் கொண்டு கிளம்பினார்கள்.

தனக்கு உதவிய பெண்ணைப் பார்த்து முறுவலித்த நந்தனா,

“பேக்ல பணம்லாம் பெருசா வச்சிருக்கல! ஆனா நான் உயிரா நினைக்கற என்னோட போன் இருக்கு! அது ரொம்ப செண்டிமேண்ட் எனக்கு. அதோட பொக்கிஷமான பல போட்டோஸ் அதுக்குள்ள இருக்கு. நந்தா எல்லாத்தையும் க்ளவுட்ல சேவ் பண்ணுன்னு சொல்லிட்டே இருப்பான். நான் அலட்சியமா இருந்துடேன்! நல்ல வேளை நீ காப்பாத்தி குடுத்துட்ட என் போன! ரொம்ப தேங்க்ஸ், ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்” என கண் கலங்க நன்றி சொன்னாள் நந்தனா.

“விடுங்க! ஸ்மால் மேட்டர் இதெல்லாம்!”

“திருடன ஹை ஹீல்ச ஆயுதமா வச்சு சாய்க்கிறதெல்லாம் ஸ்மால் மேட்டரா? யப்பா! என்னா அடி! அவனுக்கு முதுகு இந்நேரம் பஞ்சர் ஆகியிருக்கும்! ஆவ்சம்லா நீ! பை தெ வே! என் பேரு ரதி நந்தனா! அங்க தெரியுதே ‘பைட் மீ’, அது எங்க கடைதான்! வாயேன் ஒரு கப் சாக்லேட் மில்க் குடிக்கலாம்” என அவள் கைப்பற்றினாள் நந்தனா.

“இல்லைங்க பரவாயில்ல!”

“அட வாம்மா!”

நந்தனாவோடு மீண்டும் உள்ளே நுழையும் போதுதான் கதவின் நுழைவாயிலில் ஒட்டி இருந்த ‘வீ ஆர் ஹையரிங்’ எனும் வாசகத்தைப் பார்த்தாள் பெண். முகத்தில் மெல்லிய புன்னகை வந்தமர்ந்தது.

“ஷீலா! ரெண்டு சாக்லேட் மில்க் ப்ளிஸ்”

“தோ தரேன்கா” என பதில் கொடுத்த கவுண்ட்டர் பெண் உடனே இரண்டு கப் எடுத்துக் கொண்டு வந்தாள்.

“உங்களுக்கு தெரிஞ்சவங்களாக்கா? இப்போத்தான் வந்துட்டுப் போனாங்க” என சொல்லியவள் வேலையைப் பார்க்கப் போய் விட்டாள்.

“ப்ரேக்பஸ்ட் சாப்பிட வந்தேன்” என சொல்லியபடியே சாக்லேட் பாலை அருந்தினாள் இவள்.

“ஓ சரி! என் கூடப் பொறந்தவன் ப்ரேக்பஸ்ட் வாங்கிக் குடுத்துட்டுத்தான் போனான்! அந்த ச்சீஸ் அண்ட் வெஜிடேபிள் சாண்ட்விச்சயே வரட்டு வரட்டுன்னு எத்தனை நாள் தான் சாப்பிடறது! அதான் அவன் அங்கிட்டு கிளம்பனதும் நான் போய் ஒரு நாசி லெமாக்(மலேசிய உணவு) அடிச்சிட்டு வரேன்! திரும்பி வரப்போத்தான் இப்படி நடந்துடுச்சு! பட்ட பகல்லயே இப்படிலாம் சாமூன்(கொள்ளை) பண்ணுறானுங்க! ராஸ்கல்ஸ்!” என படபடத்தாள் நந்தனா.

பேசும் போதே லேசாக மூச்சு வாங்கியது அவளுக்கு.

“எப்போ டியூ உங்களுக்கு நந்தனா?”

“இன்னும் மூனு மாசம் இருக்கு!” என புன்னகையுடன் சொல்லியவளின் கை தன்னிச்சையாய் வயிற்றைத் தடவிக் கொண்டது.

நந்தனாவையே கண் கொட்டாமல் பார்த்திருந்தாள் இவள்.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க நந்தனா”

முகத்தில் புன்னகை விரிய,

“மஞ்ச மைனா, உனக்கு சொர்க்கம் கன்பர்ம்!” என சொன்னாள் நந்தனா.

“ஏன் அப்படி சொல்லறீங்க?”

“ரொம்ப நல்லவங்கத்தான் இன்னொரு பொண்ண பார்த்து தயக்கம் பொறாமைலாம் இல்லாம நீங்க அழகுன்னு சொல்லுவாங்க! இததான் வள்ளுவர் தாத்தா,

‘அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்’ அப்படின்னு சொல்லிட்டு மேல போயிட்டாரு”

“ஓ சாரிங்க நந்தனா! உங்க தாத்தா வள்ளுவர் இப்போ உயிரோட இல்லையா? வெரி சாரிங்க! என்னமோ சுத்த தமிழுல சொல்லிருக்காறே அவரு! நான் மலாய் ஸ்கூலுல படிச்சதுனால எனக்கு புரியல”

இவ்வளவு நேரம் இருந்த படபடப்பு எங்கயோ போயிருக்க நந்தனா விழுந்து விழுந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.

“ஏங்க, என்னாச்சு? ஏன் சிரிக்கறீங்க?”

“வள்ளுவர் எனக்கு மட்டுமா தாத்தாவா இருந்தாரு. உனக்கும் தாத்தாவா இருந்தாரு! ஏன் இந்த ஊருக்கே தாத்தாவா இருந்தாரு” என சொல்லியவள், இவள் இன்னும் முழித்தப்படி இருக்கவும் பொங்கி சிரிக்க ஆரம்பித்தாள்.

நந்தனா சிரிப்பதை ஆசையாக பார்த்திருந்தாள் மஞ்சள் ரோஜா.

“என்னை வச்சு என்னமோ காமேடியா சிரிக்கறீங்க”

“வள்ளுவர் திருக்குறள் எழுதிய தமிழ்ப் புலவர். ஹ்ம்ம் போயேட்னு வச்சுக்கலாம். அவர் சொன்ன குறள் தான் அது. அதுக்கு என்ன அர்த்தம்னா மத்தவங்க மனசு குளிர்ந்து போகிற மாதிரி நல்ல இனிய வார்த்தைகளை சொல்லறவங்களுக்கு பாவங்கள் குறைஞ்சு நன்மை வளருமாம். என்னை அழகின்னு இனிமையா புகழ்ந்த உனக்கு நெறைய புண்ணியம் தானா சேர்ந்துடும். அப்புறம் கண்டிப்பா செத்தா சொர்க்கம்தான்!” என சொல்லி புன்னகைத்தாள் நந்தனா.

‘எனக்கெல்லாம் எங்க சொர்க்கம் கிடைக்கப் போகுது! நரகம்தான்’

“சரி சொல்லு! எனக்கு பெரிய ஹெல்ப் பண்ணிருக்க இன்னிக்கு! உனக்கு எதாச்சும் செய்யனும்னு எனக்கு மனசு கிடந்து துடிக்குது. சொல்லு என்ன வேணும்? சாக்லேட் கேக் செஞ்சு குடுக்கட்டுமா?”

“வேணாம்”

“சாக்லேட் ஐஸ்க்ரீம்?”

“வேணாம்”

“சாக்லேட் குக்கீ?”

“வேணா”

“அப்போ வேற என்ன வேணும்?”

“இந்த சாக்லேட் கடையில ஒரு வேலை போட்டு குடுக்கறீங்களா?”

“வேலையா?”

“ஆமா நந்தனா! இப்போதைக்கு வேலை தான் வேணும்! எனக்கு பேரெண்ட்ஸ் இல்ல. ஒத்தை பாய்ப்ரேண்ட் வைச்சிருந்தேன்! அவன் கூடயும் ப்ரேக்காப் ஆயிடுச்சு! சோ நான் இப்போதைக்கு மொரட்டு சிங்கிள்! அவன் கடையில தான் வேலை செஞ்சேன். சோ வேலைய விட்டும் தூக்கிட்டான்! மனசு ரொம்ப ஒடிஞ்சு போய் கிடந்தேன். சோகத்த மறக்க ரேடியாதான் துணையா இருந்துச்சு! அதுல வர ஒரு போட்டில கலந்துகிட்டப்போத்தான் கேமரன் ஹைலண்டுக்கு வேகேஷன் வவுச்சர் கிடைச்சது. மனச தேத்தி, காயம் பட்ட ஹார்ட்டுக்கு ப்ளாஸ்டர் ஒட்டலாம்னு தான் இங்க வந்தேன். இப்போதைக்கு செலவுக்கு காசு இருக்கு! ஆனா இன்னும் ஒரு வாரத்துல காசு, பணம், துட்டு, மணி, மணின்னு பாடற ரேஞ்சுக்கு வந்துடுவேன். வெளியே வேகன்சி சைன் பார்த்தேன்! சோ ப்ளிஸ், அந்த வேலையை எனக்கே குடுக்க முடியுமா?” என மஞ்சள் விழிகளால் பாவமாய் பார்த்தாள் அவள்.

“அது வந்து..இது பார்ட் டைம் ஜாப் மாதிரிதான். எல்லா வேலையும் செய்யனும்! சாக்லேட் மேக்கிங்ல இருந்து, டாய்லட் கழுவுறது வரை!”

“செஞ்சிடலாம்”

“ஹவர்லி பேய்மேண்ட் தான்! லாங் ஹவர்ஸ் இருக்கும்!”

“செஞ்சிடலாம்”

இன்னும் ஏதோ சொல்ல வந்த நந்தனாவை,

“பரவாயில்ல விடுங்க நந்தனா! உங்க உயிருக்கும் மேலாக மதிக்கற அந்தப் போன் இருந்த பேக்க நான் காப்பாத்தி குடுத்துருக்கேன்ற நன்றி உணர்ச்சில நீங்க தயங்கறது தெரியுது! வேலை குடுக்க முடியலைன்னா நீங்க நேராவே சொல்லலாம். இதுக்கெல்லாம் நான் கோவிச்சுக்க மாட்டேன்! சரி, உங்க டைம்ம வேஸ்ட் பண்ண விரும்பல, நான் கிளம்பறேன்” என சொல்லி எழுந்தாள் இவள்.

“இரு, இரு! இந்த கடையில என் ட்வீன் ப்ரதரும் ஒரு பார்ட்னர் தான். அவனும் சரின்னு சொன்னாதான் வேலைக்கு எடுக்க முடியும்னு சொல்ல வந்தேன். ஆனாலும் பரவாயில்ல! நீ நாளையில இருந்து ஜாயின் ஆகிக்கோ! அவன் கிட்டே நான் பேசிக்கறேன்” என சொல்லி முறுவலித்தாள் நந்தனா.

“தேங்கஸ் சோ மச் நந்தனா! ஆக்சுவலி நான் செஞ்ச ஹேல்ப விட நீங்க செய்யற ஹேல்ப்தான் ரொம்ப பெருசு! ரொம்ப ரொம்ப நன்றி” என மலர்ந்து புன்னகைத்தாள் பெண்.

இன்னும் சற்று நேரம் வேலையைப் பற்றி பேசி இருந்துவிட்டு வெளியேற கதவைத் திறந்தவளை,

“ஹேய்! இவ்ளோ நேரம் பேசனோம், ஆனா பேரு என்னான்னு நானும் கேக்கல! நீயும் சொல்லல பார்த்தியா?” என கேட்டாள் நந்தனா. அவளும் பதிலளித்தாள்.

இரவில் சீனி பாப்பாவைப் பார்க்க வந்த ரிஷியிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொண்டாள் நந்தனா. நாசி லெமாவுக்காக பேகையும் பறிக்கொடுத்து கீழே மேலே விழுந்து அடிபட இருந்தாயா என ஒரு மணி நேரம் லெக்சர் கொடுத்தான் ரிஷி. அவன் பேசிய பேச்சில் மடியில் அமர்ந்திருந்த சீனி பாப்பா கூட தாலாட்டு என நினைத்து உறங்கியே விட்டாள். கிளம்பும் முன்,

“அந்தப் பொண்ணு பேரு என்ன நந்து?” என கேட்டான் தனையன்.

“அந்த மஞ்ச மைனா பேரு சி..சிம்ரன்”

“சி..சிம்ரனா?”

“ஆமா..அப்படித்தான் சொன்னா!”

“பார்க்க எப்படி இருப்பா? என்னமா கண்ணு சிம்ரன் மாதிரியா(கோவை சரளா) இல்லை ஏழுமலை சிம்ரன் மாதிரியா?” என கண்ணடித்துக் கேட்டான் அந்த சிங்கிள் சிங்கம்.

“எந்த சிம்ரனா இருந்தாலும், அது உனக்கு தேவை இல்லாத ஆணி! அவ கிட்ட வச்சிக்கிட்ட, ஹீல்ஸ்ல அடிச்சே இமயமலைக்குத் தொரத்திடுவா! பீ கேர்புல் மை டியர் பிரதர்”

தமக்கை சொல்லியதைக் கேட்டிருக்கலாம் இந்த ரிஷி. மறுநாள் பறிபோனது அவனது குஷி….

 

(உருகுவான்….)