Ila Manasai thoondivittu poravare 14

அத்தியாயம் 14

முட்டிப் போட்டு தரையைத் துணியால் துடைத்துக் கொண்டிருந்தாள் சுப்பு. அது ஒரு ஞாயிறு காலைப் பொழுது. சாவகாசமாக தூங்கி எழுந்து வந்த எட்வர்ட், அவன் அறையின் கதவில் சாய்ந்து நின்று அவள் துடைப்பதையேப் பார்த்திருந்தான்.

முன் பக்க வாசலில் இருந்து ஆரம்பித்திருப்பாள் போல, பாதி முடித்து நடு ஹாலுக்கு வந்திருந்தாள். பக்கத்தில் இருந்த தண்ணீர் வாளியில் துணியை விட்டு பிழிந்து, தரையைத் துடைத்து, பின் வாளியை நகர்த்தி தானும் நகர்ந்து அடுத்தப் பகுதியைத் துடைத்தாள். அவள் ஒரு ரிதமாக வேலை செய்வதைப் பார்க்க அவனுக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

எட்வர்ட் கவனிப்பதை அறியாத சுப்பு, நெற்றியில் வழிந்த வியர்வையை வழித்து பாவாடையில் துடைத்துக் கொண்டாள். பின் நிமிர்ந்து இடுப்பை தேய்த்து விட்டுக் கொண்டாள். முகம் வலியில் சுணங்கியது.

“என்னாச்சு ப்ளேக்கி?” திடீரென கேட்ட குரலில் தூக்கிவாரிப் போட துடைத்துக் கொண்டிருந்த துணியை தூக்கி வீசினாள். அது நேராக எட்வர்டின் முகத்தில் மோதி கீழே விழுந்தது.

“நான் முகத்த கழுவிட்டு தான் வந்தேன் ப்ளேக்கி. நீ தரை துடைச்ச தூணிய வச்சி என் முகத்த துடைக்க வேணாம்” சிரிப்புடன் தான் சொன்னான்.

இவள் தான் பதறி போனாள்.

“துரை! தீடீர்னு குரல் குடுக்கவும் நான் பயந்துட்டேன். மன்னிச்சிருங்க துரை” எழுந்து நின்றாள்.

அவள் அருகில் வந்தவன், இழுத்து இடுப்பில் சொருகி இருந்த பாவாடையை இறக்கி விட்டான்.

“என்னாச்சுன்னு கேட்டேன்!”

“ஒன்னும் இல்லையே துரை”

“இடுப்பை தேய்ச்சுட்டு இருந்த! இந்த மாசம் வர வேண்டியது வந்துருச்சா?”

ஆமென தலையாட்டினாள் சுப்பு.

“அந்த நேரத்துல கஸ்டமான வேலை எதுவும் செய்யக் கூடாதுன்னு சொல்லிருக்கேனா இல்லையா?”

“சொன்னீங்க!”

“அப்புறம் என்ன சொன்னேன் ப்ளேக்கி?”

“அந்த தட்டு முட்டு சாமான் ரூமுல உக்காந்திருக்க வேணாம். எப்போதும் போல இருன்னு சொன்னீங்க”

சொல்லும்போதே, அன்று பட்டு அவனிடம் வாங்கிக் கட்டியது ஞாபகம் வந்து சிரிப்பு முட்டியது சுப்புவுக்கு.

“ஏ புள்ள சுப்பு, வீட்டுக்கு விலக்கா புள்ள நீ?” என கேட்டார் பட்டு.

“வீட்டுக்கு விலக்குன்னா?”

“வீட்டுக்கு தூரமான்னு கேட்டேன்”

“ஆமாக்கா. எங்க வீடு தூரம்தான். ஆத்த தாண்டி போகனும். உங்களுக்கு தெரியாத மாதிரி கேக்கறீங்க”

“மரமண்டை, மரமண்டை!” தலையிலேயே கொட்டியவர், கணைப்புக் சத்தத்தில் திரும்பிப் பார்த்தார்.

அங்கே அவரை முறைத்தவாறு நின்றிருந்தான் எட்வர்ட்.

“ஹிஹிஹி துரை. வாங்க!”

“எதுக்கு கொட்டுனீங்க?” குரலில் சூடு.

எங்கே துப்பாக்கி எடுத்து விடுவானோ என நடுக்கம் வந்துவிட்டது பட்டுவுக்கு.

“வீட்டுக்கு தூரம்னா யாரு கண்ணுலயும் படாம ரூம்புக்குள்ளார இருக்கனும்னு சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தேன். இந்த புள்ள தான் கொட்டி சொல்லிக் குடுங்க அப்பத்தான் புரியும்னு சொல்லுச்சு. அதான் லேசா கொட்டுனேன். ஏ புள்ள, துரை கிட்ட சொல்லு புள்ள” கண்களால் ஜாடை காட்டினார் சுப்புவுக்கு. வாயால் சொன்னாலே புரியாது அவளுக்கு, கண் ஜாடையை என்னவென்று மொழி பெயர்ப்பாள்!

“இல்ல துரை! நான் அப்படி சொல்லவே இல்ல. அதோட அக்கா லேசா கொட்டுல. அழுத்தி கொட்டுனாங்க. வலிக்குது!”

‘ஐயய்யோ! காட்டிக் குடுத்துட்டாளே எட்டப்பி’

“வீட்டுல புள்ள அழுவுறான். நான் போய் என்னன்னு பாத்துட்டு வந்துருறேன்” என நழுவ பார்த்தார் பட்டு.

“நில்லுங்க” என்றான் எட்வர்ட்.

பயத்துடன் அவனைப் பார்த்தார் பட்டு.

“அவளுக்கு என்ன தொற்று நோயா வந்துருக்கு, ரூமுல அடைஞ்சி கிடக்க? எப்பவும் போலவே இருக்கட்டும். சாங்கியம், சம்பிரதாயம்லாம் என் வீட்டுல வேணாம்”

“சரிங்க துரை!” விட்டால் போதும் என ஓடிவிட்டார் அவர்.

அதை நினைத்து புன்னகைத்தவள்,

“இன்னும் கொஞ்சம் தான் இருக்கு. துடைச்சு முடிச்சுருறேன் துரை” என்றாள்.

“வேணாம்னு சொல்லுறேன்ல. மூனு நாள் முடிஞ்சவுடனே துடைக்கலாம் ப்ளேக்கி. எப்படி வேர்த்துப் போயிருக்குப் பாரு. போய் குளிச்சுட்டு வா”

“போங்க துரை! நான் குளிக்க மாட்டேன்” பிகு பண்ணிக்கொண்டாள் சுப்பு.

“ஏன்?”

“ஒரு நாளைக்கு எத்தனை தடவைதான் குளிக்கறது? எங்க வீட்டுலலாம் ஒரு தடவை தான் குளிப்பேன். அதுக்கூட சில சமயம் ஊறுகாய் போட்டுருவேன்”

“ஊறுகாயா?”

“ஆமாம். குளிக்கலனா எங்க வீட்டுல ஊறுகாய்னு தான் சொல்லுவோம். ரெண்டு நாள் குளிக்காம, புறங்கைய நக்கிப் பாருங்களேன், ஊறுகாய் மாதிரி உப்பு கரிக்கும்” பெரிய கண்டுபிடிப்பை எடுத்துவிட்டாள்.

சிரிப்பு வந்துவிட்டது எட்வர்டுக்கு.

“சிரிக்காதீங்க! இங்க வந்து ஒரு நாளைக்கு ரெண்டு வாட்டி குளிக்கறேன். இடையில சில நாளுல மூனு வாட்டி குளிக்கறேன். இப்படியே போனா, நான் உங்களை மாதிரியே வெளுத்துருவேன். எங்க ஆத்தாவுக்கே அடையாளம் தெரியாம போக போகுது” சிணுங்கினாள்.

“அவங்களுக்கு அடையாளம் தெரியலைன்னா நல்லதுதான்” முணங்கியவன்,

“அஞ்சு நிமிசத்துல குளிச்சுட்டு, சாப்பாட்டு ரூமுக்கு வர” என கட்டளையிட்டான்.

முறைத்துக் கொண்டே போனாள் சுப்பு. அவள் திரும்பி அடுப்படிக்கு வந்த போது, இரண்டு தட்டுக்கள் மேசையில் வீற்றிருந்தன. கூடவே சூடான தேநீரும்.

“சாப்டியா ப்ளேக்கி?”

“சாப்புட்டேன்”

“பரவாயில்ல, என் கூட மறுபடியும் சாப்பிடு” என நாற்காலியைக் காட்டி அமர சொன்னான்.

வாயைப் பிளந்தாள் சுப்பு. இத்தனை நாட்களில் தனி தனியாக தான் சாப்பிட்டிருக்கிறார்கள். அவன் சாப்பிட, அவன் அருகில் நின்றவாறே பரிமாறுவாள் இவள்.

“என்ன பார்க்கறே? உட்காருன்னு சொல்லுறேன்ல” குரலை உயர்த்தவும் படக்கென அமர்ந்தாள் சுப்பு.

அவள் தட்டில் தயிர் , பெப்பர் எல்லாம் கலந்த காய்கறிகளையும், ஒரு வாழைப்பழத்தையும் வைத்தான்.

“சாப்பிடு. இந்த மாதிரி நேரத்துக்கு ரொம்ப நல்லது”

முகத்தை சுளித்தவள்,

“ஆடு, மாடு சாப்புடறதெல்லாம் என்னை சாப்புட சொல்றீங்க துரை” என முனகினாள்.

“சாப்பிடறதுக்கு மட்டும்தான் வாய் திறக்கனும்” மிரட்டினான். சுட, சுட தேநீரை ஊற்றிக் கொடுத்தவன்,

“குடி ப்ளேக்கி! வயிறு வலி குறையும்” என்றான்.

அதன் பிறகு அமைதியாகவே சாப்பிட்டனர் இருவரும். பாத்திரங்களை கழுவ போனவளைத் தடுத்தவன்,

“முன்னுக்குப் போய் உட்காரு. நான் சுத்தம் பண்ணிட்டு வரேன்” என துரத்திவிட்டான்.

அவன் ஹாலுக்கு வரும் போது, அமைதியாக சம்மணம் இட்டுத் தரையில் அமர்ந்திருந்தாள் சுப்பு. எட்வர்ட் கணக்கு புத்தகத்தை எடுத்து அமரவும்,

“துரை!” என அழைத்தாள் சுப்பு.

“ஹ்ம்ம்” பார்வையை கணக்கில் இருந்து நிமிர்த்தவில்லை அவன்.

“துரை”

நிமிர்ந்தவன்,

“என்ன ப்ளேக்கி? வயிறு வலிக்குதா? மருந்து தரவா? அடிக்கடி மருந்து சாப்பிடறதும் நல்லது இல்ல. ரொம்ப வலிக்குதுன்னா சொல்லு, மருந்து தரேன்” என கரிசனமாக கேட்டான்.

“வலிக்குதுதான். ஆனா தாங்கிக்குவேன். வேலை ஒன்னும் செய்யக் கூடாடுன்னு சொல்லிட்டீங்களே. இப்படியே உக்காந்துருக்க கடுப்பா இருக்கு துரை”

“அப்போ கணக்கு எழுத எனக்கு உதவி செய்யறியா?” சிரிப்புடன் கேட்டான்.

“கணக்கா? ஒன்னும் வேணா! எங்க தமிழ் வாத்தி ஒரு தடவை கேள்வி ஒன்னு கேட்டாரு. பதில் சொன்னேன். அதுக்கு பிரம்பால பின்னால அடிச்சிட்டாரு. அதில இருந்து கணக்குன்னா எனக்கு ரொம்ப பயம்”

“என்ன கேள்வி கேட்டாரு ப்ளேக்கி?”

“ஒரு ஊருல ஒரு பாட்டி மூனு வடை சுட்டாங்களாம். ஒரு வடைய காக்கா தூக்கிட்டுப் போச்சாம். மீதி எத்தனை வடை இருக்கும்னு கேட்டாரு.”

“நீ என்ன சொன்ன?”

“ஒன்னும் இருக்காதுன்னு சொன்னேன்”

“ஏன் அப்படி சொன்ன ப்ளேக்கி?”

“நீங்க எவ்வளவு அழகா ஏன் அப்படி சொன்னேன்னு கேக்கறீங்க! ஆனா எங்க வாத்தி ஏன்னு கேக்கவே இல்லை. அடி பின்னிட்டு அப்புறம் தான் கேட்டாரு. நான் அழுதுகிட்டே, மீதம் ரெண்டு வடைய நான் சாப்புட்டேன் அதான் ஒன்னும் இல்லைன்னு சொன்னேன். அதுக்கும் அவரு, ஒரு வடைய காக்காவும், ரெண்டு வடைய இந்த அண்டங்காக்காவும் தூக்கிட்டுப் போயிருச்சுன்னு சொல்லி கெக்கேபிக்கேன்னு சிரிச்சாரு. படிக்க வந்த எல்லாரும் சிரிச்சாங்க. நான் எப்படி அழுதேன் தெரியுமா துரை!” ஒரே சோகம்.

“அது ஒன்னும் இல்ல ப்ளேக்கி. நீ ரொம்ப புத்திசாலியா இருக்கியா, அதான் வாத்திக்கு பொறாமை!” சமாதானப்படுத்தினான்.

“நெஜமாவா துரை?”

“நெஜமா தான்!” காலடியில் அமர்ந்திருந்தவள் தலையை மென்மையாக தடவிக் கொடுத்தான் எட்வர்ட். அன்று எல்லோரும் பார்த்து சிரித்தது இன்று நடந்தது போல சோகமளிக்க, அவன் தொடையில் தலையை சாய்த்துக் கொண்டாள் சுப்பு. தலையைத் தடவிக் கொடுத்த கை பட்டென வேலை நிறுத்தம் செய்தது எட்வர்டுக்கு.

“தடவி குடுங்க துரை. நான் எவ்வளவு சோகமா இருக்கேன்னு தெரியுதுதானே” தலையை நிமிர்த்தி அவன் கையைப் பிடித்து தலையில் வைத்தவள், மீண்டும் அவன் தொடையில் சுகமாக சாய்ந்துக் கொண்டாள்.

இந்த தடவை தடவிக் கொடுத்தவனின் கை நடுங்கியது. குரலை சமன் செய்தவன்,

“உனக்கு வேலை இல்லாம கடுப்பா இருந்தா, நாம எதாச்சும் விளையாடலாமா? என கேட்டான்.

“ஓ விளையாடலாமே! நான் ஒளிஞ்சிக்கறேன், நீங்க கண்டுபுடிக்கறீங்களா துரை?” ஆர்வமாக கேட்டாள் சுப்பு.

“நாம என்ன குட்டி பிள்ளைங்களா ப்ளேக்கி ஒளிஞ்சு விளையாட? இங்கயே இரு, நான் வரேன்” என அவள் தலையை தன் தொடையில் இருந்து நகர்த்தி விட்டு எழுந்துப் போனான்.

திரும்பி வரும் போது கையில் ஒரு பெட்டி இருந்தது. குட்டி மேசையில் அந்த பெட்டியை வைத்தவன், தரையில் அவள் எதிரே அமர்ந்தான்.

பெட்டியைத் திறந்து மரக்கட்டையால் ஆன சதுரங்க கட்டைகளை அடுக்க ஆரம்பித்தான் எட்வர்ட். வாய் பிளந்து பார்த்த சுப்பு,

“இது நம்ம விளையாட்டு துரை” என்றாள்.

“ஏன் நம்ம விளையாட்டு?”

“ஒரு பக்கம் கருப்பு காயா இருக்கு, இன்னொரு பக்கம் வெள்ளையா இருக்கு. நம்ம ரெண்டு பேர் மாதிரியே!” வெள்ளையாக சிரித்தாள்.

அவனும் சிரித்தான். (அவளுக்கு இந்த விளையாட்ட சொல்லிக் குடுக்கறதுக்குள்ள உன் பொழப்பு சிரிப்பா சிரிக்க போகுது)

“ஆரம்பிக்கலாமா ப்ளேக்கி? உனக்கு கறுப்பு வேணுமா வெள்ளை வேணுமா?”

“எனக்கு எப்பவுமே வெள்ளைதான்” என்றாள் சுப்பு.

சிரிப்புடன் வெள்ளை காய்கள் இருந்த இடத்தை அவள் புறம் நகர்த்தினான்.

“விதிமுறைப்படி வெள்ளை காய் தான் முதல்ல ஆட்டத்தை தொடங்கனும்”

“இந்த ஆட்டத்துல கூட ஓரவஞ்சனையா பாத்தீங்களா துரை? வெள்ளை தான் ஆரம்பிக்கனும்மாம்! கருப்பு ஆரம்பிச்சா ஆகாதா?” கடுப்பில் கேட்டாள்.

“அந்த வெள்ளையோட வாழ்க்கையே இப்போ உன் கையில தான் இருக்கு ப்ளேக்கி” அவள் முகத்தை ஆழ்ந்துப் பார்த்து சொன்னான்.

“இருக்கட்டும், இருக்கட்டும்! ஒரு வழி பண்ணிருறேன்” இவள் சிரித்தாள். பெருமூச்சு விட்டவன் விளையாட்டை அவளுக்குக் கற்பிக்க ஆரம்பித்தான். ஒரு மணி நேரம் ஓடியது தான் மிச்சம்.

 அவளது வெள்ளைக் காய்கள் என்பதையே பல முறை மறந்து அவனின் கருப்பு காய்களை நகர்த்தி வைத்தாள். அவன் அசந்த நேரம், அவனின் சிப்பாய்களை எடுத்து பாவாடையில் மறைத்து வைத்துக் கொண்டாள். அவளின் காயை இவன் வெட்டி விட்டால், அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.

சதுரங்க மன்னன் எட்வர்டுக்கே தண்ணி காட்டி, தத்தளிக்க வைத்தாள் சுப்பு.

“போதும் ப்ளேக்கி! என்னை விட்டுரு” கெஞ்சும் அளவுக்குப் போனான் எட்வர்ட்.

யார் கிட்ட என்பது போல கெத்தாக பார்த்தவள், தான் ஜெயித்ததாக அவளே அறிவித்துக் கொண்டாள். பின் சமயல் அறைக்கு சென்று அவனுக்கு ஜீஸ் எடுத்து வந்தாள் சுப்பு. அவள் திரும்பி வரும் போது, பரமபத அட்டையும் அதன் காய்களும் மேசை மேல் வீற்றிருந்தன. பழச்சாறை அவனிடம் நீட்டியவள்,

“ஐ துரை, பரமபதம்! இது எனக்கு விளையாட தெரியுமே. இத விட்டுப்புட்டு, எனக்கு தெரியாத விளையாட்டு வச்சு என்னை ஏமாத்தப் பாத்தீங்க!” குறைபட்டுக் கொண்டாள் சுப்பு.

“யாரு நானா? நான் உன்ன ஏமாத்துனனா?”

“பின்ன யாரு நானா?” அமர்ந்துக் கொண்டாள்.

“உனக்கு ஜீஸ் ப்ளேக்கி?”

“எனக்கு வேணாம். அப்புறம் அடிக்கடி இதுக்குப் போகனும். கச,கசன்னு கடுப்பா இருக்கும்” ஒற்றை விரலைக் காட்டினாள்.

தலையில் அடித்துக் கொண்டான் எட்வர்ட்.

“எல்லா விஷயமும் என் கிட்ட சொல்லனுமா ப்ளேக்கி?”

“உங்க கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லுவேன்? நீங்க தான் நான் என்ன சொன்னாலும் பொறுமையா, நானும் மனுஷிதான்னு நினைச்சு கேப்பீங்க துரை” என சொன்னாள்.

“சரி வாங்க விளையாடலாம். நான் தான் முதல்ல ஆரம்பிப்பேன்”

“சரி, ஆனா ஒரு பெட் வச்சிக்கலாமா?”

“பெட்டுனா?”

“நீ ஜெயிச்சா நீ கேக்கறத நான் தரேன். நான் ஜெயிச்சா நான் கேக்கறத நீ தரனும். சரியா ப்ளேக்கி?”

“பூ!!!! இவ்வளவுதானே? சரி பெட்டு”

இந்த விளையாட்டிலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஏமாற்றினாள் சுப்பு. ஆறாம் நம்பரை அப்படியே கையில் வைத்து மெதுவாக பகடைக் காயை கீழே போட்டாள். அப்படியே ஆறு ஆறாக போட்டு மறுபடி மறுபடி அவளே விளையாடி அவனை ஆட்டி வைத்தாள்.

“ஏமாத்தாம ஒழுங்கா விளையாடறியா இல்ல காதை பிடிச்சு திருவவா?”

கடுப்பாகி அவன் திட்டும் அளவுக்கு அட்டகாசம் செய்தாள். அவன் ஜெயிக்க நெருங்கும் நேரம், பாத்ரூம் போவதாக கைகாட்டி எழுந்தவள், மேசையை தட்டி விட்டு காய்களை கலைத்து விட்டாள். எட்வர்ட் முறைக்கவும்,

“தெரியாம இடிச்சுட்டேன் துரை. நாம வேணா முதல்ல இருந்து விளையாடலாமா? என கேட்டு மறுபடியும் அமர்ந்தாள்.

“பாத்ரூம் போகலியா ப்ளேக்கி?”

“இப்போ வரல துரை” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

அடுத்த ரவுண்டு ஆட்டத்தில் சுப்புவே வாகை சூடினாள். கைகளை ஆட்டி, ஆட்டி வெற்றியைக் கொண்டாடியவள், எட்வர்டை பார்த்து நாக்கைத் துருத்திக் காட்டினாள்.

“ஏமாத்தி ஜெயிச்சுட்டு உனக்கு இவ்வளவு கொழுப்பு. சரி சொல்லு, என்ன வேணும்?” என கேட்டான் எட்வர்ட்.  

ஐந்து நிமிடம் யோசித்தாள் சுப்பு.

“கை ரெண்டையும் கட்டிக்கிட்டு, கண்ணை மூடிக்குங்க துரை. வாக்கு குடுங்க என்னைத் திட்ட மாட்டேன்னு”

அவள் சொன்ன மாதிரியே செய்தவன்,

“திட்ட மாட்டேன் ப்ளேக்கி” என்றான்.

கண் மூடியவன் அருகில் வந்தவள், அவன் தோளில் தன் இரு கரங்களையும் வைத்து, அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

பட்டென கண்ணைத் திறந்தவன் முகம் எங்கும் அதிர்ச்சி அலைகள்.

“என்ன ப்ளேக்கி பண்ண?”

“இது தெரியலையா? முத்தா கொடுத்தேன்”

(தூண்டுவான்)