Aadhiye andhamaai 21

Aadhiye andhamaai 21

குடமுழக்கு வேலை

குடமுழக்கு திருவிழா. 

ஆதி பரமேஸ்வரி ஆலயத்தை புதுப்பிக்கும் வேலைகளை சண்முகம் மும்மரமாய் கவனித்து கொண்டிருந்தார். பசுமாடு லட்சுமி இறந்து போன விஷயம் அவரை ரொம்பவும் பாதித்திருந்தது.

 ஏதோ ஒரு மோசமான நிகழ்வு நடக்கபோவதாக அவர் உணர்ந்திருந்த நிலையில் கோவில் குடமுழக்கு வேலையை துரித படுத்திக் கொண்டிருந்தார்.

சிவசங்கரனும் வேல்முருகனும் அந்த வேலையை பொறுப்பாய் கவனித்து கொண்டிருந்தனர். ஆதிபரமேஸ்வரி ஆலயம் அந்த ஆதித்தபுரம் கிரமத்திற்கு மட்டும் சொந்தமானதில்லை. அங்கு சுற்றியுள்ள பல கிரமாங்களிலிருந்து அந்த கோவிலுக்கு வழிப்பட பல பக்தர்கள் வருவது வழக்கம். 

ஆதலால் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பற்றியும் பல ஊர்மக்களுக்கு செய்தி சென்றிருந்தது. அந்த குடமுழக்கு திருவிழாவில் கலந்து கொள்ள பல்லாயிரம் பேர் ஆர்வமாய் இருந்தனர். ஒரு பக்கம் ஆலய திருப்பணி விழா மறுப்பக்கம் தொல் பொருள் ஆராய்ச்சியாளராய் இருக்கும் மனோகரன் சண்முகவேலனின் அனுமதியோடு கோவில் கல்வெட்டுகளை ஆராய்ந்து கொண்டிருந்தான். 

 அவன் கல்வெட்டாராய்ச்சி செய்து கொண்டிருப்பதை பார்த்த சிவசங்கரன்,

“நீங்க எதிர்பார்த்த விஷயங்கள் இந்த கல்வெட்டுகளில் இருக்கா?” என்று கேட்க

அவன் ஒரு கள்ளதனமானாக சிரித்து விட்டு, “இந்த பழமையான எழுத்துக்களை பார்க்கிறப்ப இந்த கோவில் ஆயிரம் வருட பழமையானதா இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனா ரொம்ப முக்கியமான விஷயம் என்னென்னா இந்த கல்வெட்டுகளில் எதுவும் வெளிப்படையா எழுதி இல்ல. நல்ல தமிழ் இலக்கியவாதிகள் தான் இதுக்கு அர்த்தம் சொல்ல முடியும்” என்றான்.

“அப்படி என்ன இங்க ரகசியம் இருக்க போகிறது?” என்று சங்கரன் அலட்சியமாய் வினவ,

‘ரகசியம் இல்ல அதிசயம்’ என்று மனதில் மனோகரன் எண்ணிக் கொண்டானே ஒழிய அதை வெளிப்படையாக சொல்லவில்லை.

“இந்த கோவிலின் பழமையான வரலாறு தமிழனோட வரலாற்றுக்கான சான்றாய் இருக்க உதவலாம்… அதுவும் இல்லாம நம் முன்னோர்களை பற்றி நாம தெரிஞ்சிக்க வேண்டியது ரொம்ப அவசியம்… அது நம் வருங்கால சந்ததிகளுக்கு கொண்டு போய் சேர்க்கனும்” என்று மனோகரன் விளக்க  சிவசங்கரன் அதிசயித்து அவன் புருவங்களை உயர்த்தினான்.

மனோகரன் சொன்னது நூறு சதவீதம் உண்மையாக இருந்தாலும் அது அவனிடம் வார்த்தைகளாகவே இருந்தது.

நம் முன்னோர்கள் நமக்காக படைத்துவிட்டு போன அதிசயங்கள் எல்லாம் சில சுயநலவாத கூட்டங்களால் காலங்காலமாய் ரகசியங்களாய் புதையுண்டு கிடக்கின்றன.

சில வழிமுறைகளை நாம் வழிபாடு என்ற முறையில் இன்றளவிலும் நாம் தொடர்ச்சியாய் பின்பற்றிய போதும் அதன் அறிவியல் பிண்ணனியை நாம் அறிந்து கொண்டோமா என்பது கேள்வி குறிதான். அப்படி ஒரு வழிமுறையில் ஒன்றுதான் குடமுழக்கு திருவிழா. அந்த திருவிழா நடைபெறுவது மனோகரன் எண்ணத்திற்கும் சாதகமாய் இருந்தது. 

அன்று மதியம் சிவசங்கரன் உணவிற்காக வீட்டிற்கு வந்தான். 

அங்கே கனகவள்ளியும் கண்ணம்மாவும் அமர்ந்திருக்க செல்வியை தேடி வீட்டை சுற்றி வந்தவன் கடைசியில் அவள் மாட்டு கொட்டகையில் ஈஸ்வரனை தடவிக் கொண்டு அமர்ந்திருப்பதை கவனிக்கலானான்.

அவள் பின்பக்கமாய் வந்தவன் தன் கரத்தால் அவள் கண்களை மூட,

 அவளின் விழிகளில் நீர்த்துளிகள் படர்ந்திருப்பதை உணர்ந்து அதிர்ந்தவன்,

  “என்னாச்சு செல்வி?” என்று பதறியபடி அவள் முகத்தை திருப்ப, அவளோ பதில் பேசாமல் மௌனமாகவே அவனை ஏறிட்டாள்.

அவள் கன்னமெல்லாம் கண்ணீர் தடயங்களாய் இருக்க, அவள் முகத்தில் சொல்லவொண்ணாத சோகம் படர்ந்திருந்தது.

அவள் நிலையை பார்த்து அதிர்ந்தவன் அவளிடம் பலமுறை என்னவென்று விசாரிக்க அவள் பதிலேதும் உரைக்கவில்லை.

சிவசங்கரன் தன் பொறுமையிழந்து,

“சரி நீ சொல்ல வேண்டாம்… நான் போய் மதனிங்களை கேட்கிறேன்” என்று  சொல்லிவிட்டு போக முயற்சி செய்தவனின் கைகளை அழுத்தி பிடித்து கொண்டாள். 

“அப்போ என்னன்னு சொல்லு” என்றவன் அழுத்தமாய் வினவ,

அவள் தன் வேதனையை விழுங்கி கொண்டு அவனை வருத்தமுற ஏறிட்டவள், 

“நான் இனிமே முருகனை பாத்துக்க கூடாதாம்… சாப்பாடு ஊட்ட கூடாதாம்… எனக்கு குழந்தை பெத்துக்க வக்கிலயாம்… என் கண்ணு பட்டு குழந்தைக்கு ஏதாவது ஆயிடுமா?” என்று சொல்லி தன் கணவனின் தோள்களில் சாய்ந்து அழுதாள்.

“பைத்தியம்… நமக்கு கல்யாணம் முடிஞ்சி ஒரு வருஷம் கூட முடியல… அவங்கதான் அறிவுகெட்டத்தனமா சொல்றாங்கன்னா… அதை போய் நினைச்சுகிட்டு நீ அழுதிட்டிருக்கவ” என்றவன் சொல்ல,

“நான் அதை எல்லா நினைச்சு கவலை படலங்க… முருகனை என் கூட பேசக் கூடாதுன்னு சொன்னதுதான் எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு” என்று சொல்லி அவள் கவலை கொள்ள அவன் அவள் தலையை தடவி ஆறுதலாய் தேற்றினான்.

அவள் மனம் ஒருவாறு அமைதியடைய, சட்டென்று தான் இப்படி வெட்டவெளியில் கணவனை அணைத்து கொண்டு நிற்கிறோம் என்று எண்ணி துணுக்குற்றவள் நிமிர்ந்து சுற்றும் முற்றும் அச்சத்தோடு பார்த்தாள்.

“என்ன செல்வி?” என்று சிவசங்கரன் புரியாமல் கேட்க,

“நம்மல இப்படி யாராச்சும் பாத்தா என்ன நினைப்பாங்க?” என்று சொல்லிஅவனை விட்டு விலக யத்தனித்தாள். 

“யார் என்ன நினைக்க போறாங்க? நான் உன் புருஷன்” என்று அழுத்தமாய் உரைத்து அவளை விடாமல் இறுக்கி அணைக்க,

“அச்சோ விடுங்க… அக்கா வந்துட போறாங்க… அப்புறம் நம்ல இப்படி பார்த்தா?” என்றவள் அஞ்ச, அவனோ தன் பிடியை தளர்த்தவுதாக இல்லை.

 அவளோ அவனிடம் போராடி விலகி தள்ளி செல்ல,

“செல்வி வேண்டாம்… ஓடாதே” என்று அழைத்து கொண்டே சிவசங்கரன் அவளை துரத்தினான்.

செல்வி அந்த நிமிடம் அவனிடம் சிக்காமல் ஒரு குழந்தையாக மாறி தன் கவலைகளை மறந்து ஓடிக் கொண்டிருந்தாள். 

அந்த சமயம் எதிர்பாராவிதமாய் அவள்  அறியாமல் மாணிக்கத்தின் மீது மோதிவிட, அவனின் தோற்றத்தையும் பார்வையையும் பார்த்து கலவரப்பட்டவள் அவசரமாய் தன் கணவனின்  பின்புறம் போய் ஒளிந்து  கொண்டாள். 

அதே நேரம் மாணிக்கம் அவள் தன் மீது மோதிய மாத்திரத்தில் வன்மமாய்  ஒரு பார்வை பார்த்து வைத்தான். 

சிவசங்கரன்  தன் தமையனை தயக்கமாய் பார்க்க மாணிக்கம் முறைப்போடு,

“ஏன்டா சங்கரா ?அப்பா உன்னை கோவில்ல தேடிட்டிருக்கிறாராம்… இந்நேரத்தில நீ வீட்டுக்கு எதுக்கடா வந்த” என்று கேட்க,

“தோப்பில வேலை சரியா செய்றாங்களான்னு பாக்கலாம்னுதான் வந்தேன்… அப்படியே சாப்பிட்டு போலாம்னு” என்று சிவசங்கரன் தயங்கியபடி சொல்ல,

“உன் போக்கே கொஞ்ச நாளா சரியில்ல” என்றவன் வினவ,

சங்கரன் எரிச்சலோடு, “நான் கோவிலுக்கு வரனும்… அவ்வளவுதானே நீங்க போங்க” என்று மாணிக்கத்தை பார்த்து உரைக்க

அப்போது மாணிக்கம் பின்னோடு ஒளிந்திருந்த செல்வியை நோட்டம்விட்டபடி நகர, அதனை உணர்ந்தவளுக்கு மனமெல்லாம் பதைத்தது. 

அவள் தவிப்போடும் பயத்தோடும் நிற்க  சிவசங்கரன் அவள் காதை திருகி அவன் முன்புறம் கொண்டு வந்து,

“என்னத்துக்கு அந்த ஓட்டம் ஓடினே?!” என்று கேட்டு அவளை பார்த்து முறைக்கலானான்..  

“தப்புதாங்க… வலிக்குது விடுங்க” என்று அவள் கெஞ்ச சற்று நேரம் அவள் அப்படி கெஞ்சுவதை ஆசை தீர ரசித்தவன்,

பின் அவளை விடுவிக்க தப்பித்தோம் பிழைத்தோம் என ஓரே ஓட்டம் ஓடிவிட்டாள் செல்வி. 

எத்தனையோ பிரச்சனைகள் செல்வி சிவசங்கரனை சூழ்ந்திருந்த போதும் அவர்களின் நெருக்கமும் காதலும் அவற்றை எல்லாம் மறக்கடித்தது. அதே நேரம் அது அளவில்லாமல் நாளுக்கு நாள் பெருகி கொண்டே போனது. 

அன்று சூரியனின் வருகைக்ககாக பூமியில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் ஏங்கி கொண்டிருக்க, அந்த ஒளியை விரும்பாதவனாய் சிவசங்கரன் மட்டும் தன்போர்வையை மூடிக் கொள்ள செல்வி அவனிடம் சண்டையிட்டபடி அந்த போர்வையை உதறி தள்ளி விட்டு வெளியே வந்தாள்.

“விடிஞ்சு போச்சு… வாசலில தண்ணி தெளிச்சு கோலம் போடனும்” என்றவள் தன் நீளமான முடியை சுருட்டி கொண்டையிட்டாள். 

“அதெல்லாம் மதனிங்க போடுவாங்க” என்று செல்வியின் கைகளை சிவசங்கரன் பற்றி இழுக்க, “கையை விடுங்க.. நேரமாச்சி நீங்களூம் எழுந்திரீங்க” என்க,

“இராத்திரி எல்லாம் என் தூக்கத்தை கெடுத்துட்டு… இவ்வளவு சீக்கிரம் எழுந்திருக்க சொல்றியே… மனசாட்சியே இல்லயாடி உனக்கு” என்று கேட்டு கள்ளத்தனமாய் புனன்னகையித்தான். 

அவள் கோபம் பொங்க, 

“யாரு… நானா உங்க தூக்கத்தை கெடுத்தேன்” என்று கேட்டபடி தலையணையை அவன் மீது தூக்கியடித்தாள். 

“உன்னை” என்று மீண்டும் அவளை படுக்கை மீது தள்ளி அவன் சரசங்கள் புரிய அவள் திண்டாடி கொண்டிருந்தாள்.

அந்த சமயத்தில் அவர்களின் அறை கதவு தட்டும் சத்தம் கேட்க சலிப்புற்றவன்,

“யார்றா அது” என்று கேட்டுவிட்டு அவளை விடுவிக்க,

 “போங்க நீங்க” என்று நாணியபடி அவள் படுக்கையிலிருந்து எழுந்து கொண்டாள்.

அப்போது, “சங்கரா” என்று வேல்முருகனின் குரல் சத்தமாய் கேட்க, அவன் பதட்டமாக எழுந்தமர்ந்தான்.

செல்வி தன் உடையை சரி செய்து கொண்டுவிட்டு அவனை கதவை திறக்க சொல்லி சமிஞ்சை செய்ய சங்கர. துண்டை டுத்து மேலே போர்த்தி கொண்டு கதவை திறந்தான்.

வேல்முருகன் கோபமாய் அவனை முறைத்து, “உனக்கும் உன் பெண்ஜாதிக்கும் கோழி கூவுன சத்தம் கூட கேட்கலயா?” என்று கேட்க,

“அது வந்து அண்ணே” என்று தலையை தொங்க போட்டான் சங்கரன்.

“சரி அது இருக்கட்டும்… உன்னை அப்பா கூப்பிட்டாரு” என்று உரைக்க,

“எதுக்கு அண்ணே?” என்று சந்தேகமாய் கேள்வி எழுப்பினான்.

“ரஞ்சிதத்து வீட்டில ஓரே பிரச்சனையாம்… என்ன ஏதுன்னு சரியா தெரியல” என்க, அந்த நொடி சங்கரன் தன் தமக்கைக்கு என்னவோ ஏதோ என்றெண்ணி கவலையுற்றான். 

மனோரஞ்சிதத்தின் புகுந்த வீட்டில்  பிரச்சனைகள் வருவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இம்முறை பிரச்சனை எல்லையை மீறி இருந்ததாக தகவல் வர சண்முகவேலன் ரொம்பவும் கவலையுற்றிருந்தார். 

அவர் என்னவோ ஏதோ என்று பதறியபடி கோவில் வேலைகளை ஒதுக்கிவிட்டு சிவசங்கரனை அழைத்து கொண்டு அவர் புறப்பட்டுவிட,

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு வேல்முருகனை தன்அம்மா வீட்டிற்கு அழைத்து சென்று விட்டாள் கனகவல்லி. 

செல்விக்கு வீடே வெறிச்சோடி போனது. ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாய் கடந்தது. 

முருகனை செல்வியிடம் சேரவிடாமல் கண்ணம்மா தன்னால் இயன்றவரை முயற்சி செய்தாள். 

செல்வியை தனிமை வாட்டி வதைக்க அவள் அன்று இரவு உறக்கம் வராமல் விழித்திருந்த சமயம் யதார்த்தமாய் பரமு கொடுத்த டாலர் கழுத்தில் இல்லாததை கண்டறிந்தாள்.

 அவள் பதறி துடித்து அந்த அறை முழுக்க டாலரை தேடி பார்த்தாள். அந்த டாலர் அவளுக்கு கிடைக்காமல் போக அவள் மனமெல்லாம் வேதனையில் உழன்றது. 

அது பரமுவின் ஞாபகம் என்பதால் செல்வியால் அந்த டாலர் தொலைந்ததை அசட்டையாய் விட முடியவில்லை. ஆதலால் அந்த இரவின் மங்கலான வெளிச்சத்திலும் அந்த டாலரை தீவிரமாய் தேடியவள் வெளியே மாட்டு கொட்டகையில் விட்டிருப்போமோ என்ற குழப்பத்தில், விளக்கை எடுத்து கொண்டு அங்கேயும் தேட சென்றாள். 

வானில் பாதி சந்திரன் மிளிர்ந்து கொண்டிருந்ததால் இயல்பான அந்த இடத்தில் இருளும் வெளிச்சமும் ஒருசேர கலந்திருந்தது.

செல்வி அந்த நிலையிலும் விடாமல்  டாலரை எப்படியோ கண்டெடுத்து பெருமூச்சுவிட்டவள் அதை உடனடியாக கழுத்தில் மாட்டினாள். 

அந்த நேரம் ஈஸ்வரன் அவளை பார்த்த குதுகலத்தில் அவளின் அருகாமையில் வந்து உரச,

“என்னடா ஈஸ்வரா?” என்று அவனை   கொஞ்சலாய் கேட்டாள்.

அவன் தன் ஆனந்தத்தை துள்ளி குதித்து காண்பித்து கொண்டிருக்க அதனை பார்த்து ரசித்திருந்தவளுக்கு அந்த நொடி ஏதோ ஒரு இனம் புரியாத வேதனை அவள் மனதை ஆட்கொண்டுவிட்டது. 

அப்படி தோன்றிய எண்ணத்தை செல்வியால் அசாதரணமாய் தவிர்க்க முடியவில்லை. மீண்டும் ஏதோ ஓர் மரணத்திற்கான வருகையால்தான் தன் மனம் சஞ்சலப்படுகிறது என்பதை உணர்ந்தவளுக்கு நடக்க போகும் நிகழ்வை தடுக்க முடியாது என்பதும் புரிந்தது.

 அந்த இருள் மூழ்கிய இரவில் தன் கலக்கத்தை யாரிடம் தெரிவிப்பது என்று புரியாமல் யோசித்தவள் தன் வேதனையை ஈஸ்வரனிடம் கொட்டி தீர்த்தாள். 

“ஏதோ தப்பா நடக்கப் போகுது… ஆனா நான் இதை யார்கிட்ட போய் சொல்லுவேன்… அவருக்கு ஏதாவது ஆயிடுமோன்னு வேற பயமா இருக்கு… எந்த கெட்டது நடந்தாலும் அது எனக்கே நடக்கட்டும்… அவருக்கு வேண்டாம்” என்றவள் ஈஸ்வரனை தடவியபடி கண்ணீர் சிந்தினாள். அவள் மனவலி புரிந்தும் புரியாமல் ஈஸ்வரன், “ம்மா” என்று குரல் கொடுக்க

அவள் மீண்டும், “அவரு இல்லாம எனக்கு பைத்தியமே பிடிச்சிரும் போலிருக்கு ஈஸ்வரா” என்று மேலும் தன் வேதனையை சொல்லி அவள் புலம்பி கொண்டிருக்க, அந்த தவிப்பிற்கு  பதில் வந்தது. ஆனால் அவளுக்கு பதில் உரைத்தது ஈஸ்வரன் இல்லை.

error: Content is protected !!