IM 10

அந்த முறை கல்லூரி விடுதியில் சென்று அவளை விடும் வேலை கனகவேலுக்கு! அவரது இரு மகன்களும் அவரவர் வேலையில் சிக்கிக் கொள்ள இவர் மாத்திரம் மயூரவள்ளியுடன் கால் டேக்சியில் உடன் வந்து கொண்டிருந்தார்.

“இந்த முறை பரிட்சை ரொம்ப சிரமமா, ஏன் மயூரி ஒரு மாதிரி இருக்கே?

விவேக் பையன் உன் கூட நல்லா பேசி வச்சி இருக்கானா?”

அவர் அவளை பெற்ற தகப்பன் இல்லை! தான் வளர்த்த அந்த பெண் முகத்தை பார்த்து அவளுக்கு இது தான் பிரச்சனை என்ற முடிவுக்கும் வர இயலவில்லை!

“இந்த பரிட்சை கஷ்டம் தான் மாமா, ஆனா நல்லா படிச்சியிருக்கேன், பாஸ் பண்ணிடுவேன்!”

“பின்ன வேற என்ன மா விஷயம்! மாமா கிட்ட சொல்லலாமே!”

அவரிடம் முன்தினம் நடந்ததை சொல்லத் தான் வேண்டுமா!

படம் பார்த்துவிட்டு வந்த தினத்தில் இரவு ஒண்ணரை மணி வரைக்கும் மயூரிக்கு படிக்கும் வேலை இருந்தது!

அதன் பின்னர் கூட அவள் அதை தொடரலாம் என்றிருக்க விவேக் வந்தான். அவள் அறையினுள், கையில் ஒரு டீயுடன் வந்தவனை மயூரி அந்த நேரத்தில் அங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை!

“இன்னுமா தூங்கலை!

நாளைக்கு ஆபிஸ் இருக்கில்லையா உங்களுக்கு!”

ஒரே வீட்டுக்குள் இருந்தாலும் ஒருவர் கண்ணில் ஒருவர் படாமல் இருந்திருக்கிறார்கள்!

“தூக்கம் வரலை…இந்தா”

அதை தந்தவன் கட்டிலில் அவள் புறம் அமர்ந்தான்.

“உங்களுக்கு இதெல்லாம் செய்ய தெரியுமா!” மழைக்கு கூட கிட்சன் பக்கம் ஒதுங்காதவன் ஆயிற்றே!

“தெரியாது! இப்ப தான் முதல் தடவை. சமாளிச்சிக்கோ”

தனக்காக அவன் ஏதோ செய்ய முயன்றதை அக்கணம் அவள் மனம் ரசித்தது!

அவன் தயாரித்த அந்த பானம் சுமாராக இருந்தாலும், எதுவும் சொல்லத் தோன்றாமல் சூடாய் எதையோ கொடுத்தானே அதுவே போதும் என்றபடி பருக ஆரம்பித்திருந்தாள் மயூரி!

“இன்னிக்கி அவுட்டிங் பிளான் யாரோடது?” விவேக் கேட்டு

அவள் பதிலளிக்கும் முன்னமே,

“அதை செய்யாம இருந்திருந்தா இப்படி இவ்வளவு நேரம் கண் முழிச்சி படிச்சிருக்க தேவை இல்லையே!”

“ம்ம் சரிதான்! நான் சொன்னா அவன் கேட்கலை!”

“யாரு, உன் பிரண்ட் விஷ்ணுவா?”

உன் பிரண்ட் என்பதில் ஒரு அழுத்தம் தந்தானோ! தந்தானோ இல்லை தந்தான்!

மயூரி அவனை பார்த்துக் கொண்டிருக்க,

“உன் கிட்ட கொஞ்சம் இதை பத்தி பேசணும் மயூரி!”

“சொல்லுங்க”

“பிரண்ட்னாலும் அதுக்கு ஒரு லிமிட் வேண்டாமா மயூரி! உன்னை அதிகாரம் செய்ய அவனுக்கு இனி என்ன உரிமை இருக்கு சொல்லு! முதலில் அது என்ன இப்படி வரைமுறை இல்லாத ஒரு பிரண்ட்ஷிப்!”

கோபத்தில் அவன் முகத்தை பயங்கரமாய் வைத்திருந்தான். சில வருடங்களுக்கு முன்பு வரை மயூரிக்கு பார்க்க பிடிக்காத அவனது தோற்றம் அது! அவனை அப்படி கண்டாலே அடிவயிற்றில் பயம் பற்றிக் கொள்ளும்!

கஷ்டப்பட்டு அந்த பயத்தை ஒதுக்கியிருந்தவள்,

“அவன் எனக்கு பிரண்ட் மட்டும் இல்லை விவேக். அதை சொன்னா உங்களுக்கு புரியாது!”

அவன் குரல் உயர ஆரம்பித்தது!

“இதையே எத்தனை நாள் சொல்லுவே! முன்னே நீங்க எப்படினாலும் இருந்திருக்கலாம். ஆனா, இனி நீ கொஞ்சம் பார்த்து பழகணும் மயூரி!”

“நீங்க என் கிட்ட சொல்றது எப்படியிருக்கு தெரியுமா? என் சொந்த குடும்பத்துடன் எப்படி பேசணும், பழகணும்னு சொல்லித் தர மாதிரியிருக்கு! ஒரு அம்மாகிட்டையோ, அண்ணனுடனோ யாரும் ரூல்ஸ் வச்சி தான் பழகுவாங்களா! அவனும் எனக்கு அப்படியாக பட்டவன் தான்! அவன் கூட என்னால இந்த மாதிரி தான் பழக முடியும், அது எனக்கு தப்பாவும் தெரியலை! விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து விஷ்ணுகிட்ட எப்படி இருக்கேனோ அப்படியே தான் இருக்கேன், இன்னமும் இருப்பேன், யாருக்காகவும் அதை மாத்திக்க முடியாது”

“அதுக்கில்லை மயூரி…”

“இதெல்லாம் உங்களுக்கு முன்னமே தெரியும் தானே!”

“நான் என்ன சொல்ல வரேன்ன…”

“சாரி விவேக் நீங்க இந்த விஷயத்தில் என்ன சொன்னாலும் என்னால ஒத்துக்க முடியாது! நான் எப்பவும் போல தான் இருப்பேன்!”

விவேக் இன்னமும் தனக்கு சொல்ல நிறைய இருக்கிறது என்பது போல் அங்கேயே அமர்ந்திருந்தான். மயூரிக்கு ஆத்திரம் எல்லையை கடந்திருந்தது!

‘இது என்ன சின்ன பிள்ளைத்தனம்!’

அதற்கு மேல் எதையும் இவனிடம் பேச பிடித்தமில்லை!

“எனக்கு தூங்கணும்! நீங்க வெளியே போகும் போது லைட்டை ஆஃப் செஞ்சிட்டு போங்க!”

என்றவள் போர்வையை போர்த்திக் கொண்டு அவனுக்கு முதுகு காட்டியபடி படுத்துவிட்டாள்.

அவள் உறங்கிவிட்ட பிறகும் கூட

அவன் எத்தனை நேரம் அங்கேயே அவளை பார்த்தபடி யோசனையில் இருந்தான் என்பதை அவள் அறியாள்!

மயூரவள்ளிக்கு அவனை பற்றி யாரிடமாவது சொல்லத்தான் வேண்டும்! அது அவன் தந்தையாக இருந்தால் சிறப்பு என்றபடி சொல்லத் தொடங்கினாள்!

“விஷ்ணு கூட எப்போதும் போல இருக்க கூடாதுன்னு சொல்றார், அவருக்கு பிடிக்கலையாம்! என்னால அதில் எதுவும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டேன்!

நான் சொன்னது சரியா தப்பான்னு எனக்கே ஒரு குழப்பம் மாமா!”

கனகவேலுக்கு புரிந்தது! இது லேசுபட்ட விஷயமில்லை என்பது!

“சொல்லிட்டே இல்லை! அதை பத்தி இனி நீ யோசிக்காதே! அவனுக்கும் மெதுவா தானே எல்லாம் புரியும்! எந்த ஒரு புது உறவுளையும் இப்படி பிரச்சனை வருவது சகஜம் தான் வள்ளி!

விவேக் பத்தி தான் நாம எல்லாருக்கும் தெரியுமே, அவன் மனசில் எதையும் வச்சிக்காம வெளியில் சொன்னானே அதுவே ஆச்சரியம்! இப்போதைக்கு அதை விட்டு தள்ளு வள்ளிமா!”

“நீங்க சொல்றது சரி தான் மாமா! அத்தை கிட்ட நான் இதையெல்லாம் சொல்லலை, நீங்களும் சொல்லாதீங்க. தேவையில்லாம குழப்பிக்க போறாங்க!”

“ம்ம் அதையெல்லாம் நான் பார்த்துக்குறேன்!

நீ ஒழுங்கா பரிட்சை எழுது! அடுத்த வாரமும் வீட்டுக்கு வந்திட்டு போ வள்ளி! வேற ஏதாவதுன்னா போன் பண்ணு!”

அவரிடம் விடைபெற்றவள் அமுதா அத்தை தந்த தின்பண்டங்கள் அடங்கிய பையை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றாள்!

அவள் சொல்லாமல் விட்டது ஏராளம்! அதை அவள் மனம் மாத்திரம் அல்லாமல் விவேக்கின் மனமும் ஒரு முறை நினைத்து பார்த்தது! வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்புமுன் விவேக் அவள் அறைக்கு சென்றிருந்தான்!

பேச வேண்டும் என்று நினைத்து வைத்ததெல்லாம் வேறு! ஆனால் நடந்து கொண்ட விதம் அவனுக்கே பிடித்தமில்லை.

அவளை நோகடித்துவிட்டோம் என்ற எண்ணமே அவனை அந்த இரவு முழுவதும் பாடாய் படுத்தியிருந்தது!

அவள் அறைக்கு வந்தவன் பார்வையில் பட்டாள்! கண்கள் இரண்டும் சிவந்து பார்க்கவே என்னவோ போல் இருந்தவளை காண்கையில் விவேக்கிற்கு இன்னமும்  சங்கடமாயிருந்தது! கண் விழித்திருந்தாலும் எழுந்து கொள்ளாமல் எங்கோ வெறித்தபடி இன்னமும் தன் படுக்கையில் இருந்தாள்!

கட்டிலை நெருங்கியவன் அவள் பக்கமிருந்து சின்ன இடத்தில் அமர்ந்து,

“மயூரி, ஐயம் சாரி! நேத்து நான் அப்படி பேசியிருக்க கூடாது!” என்றான்.

அவன் அங்கே இருப்பதாக அவள் காட்டிக்கொள்ளவுமில்லை, அவனை பார்க்கவுமில்லை, அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை!

“என்னால் சிலதை ஏத்துக்க முடியலை மயூரி!”

அவள் அதற்கும் மெளனமாயிருந்தாள் ஆனால்

அவளின் கண்கள் மட்டும் கலங்கியிருந்தது! அவள் முகத்தில் பார்வையை பதித்திருந்தவன்,

“அழுதியா மயூரி? நீ அழுவியா!”

போர்வையை விலக்கியவள், அவனை கண்டுகொள்ளாமல் தன் காலை பணிகளை தொடங்கினாள்! முதலில் தன் முகத்தையும் தலைமுடியையும் சீராக்கியவள் பின்னர் தன் பெற்றோரின் படத்தின் அருகே சென்று அதில் இருப்பவர்களை வணங்கி நின்றாள்!

அங்கேயே அமர்ந்து அவள் செய்கைகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு நிறைய நேரம் அப்படி தொடர்ந்து இருக்க முடியவில்லை!

தன்னெதிரே இருந்தவள் கண்மூடி அழுகையை அடக்க முயன்றாலும் அவள் கன்னங்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்திருந்ததை கண்டான்!

அவள் படும் அவஸ்தையை கண்டு தாள முடியாது அவளை நெருங்கி, அணைத்துக் கொண்டான் விவேக்!

“ஐயம் சாரி மயூரி! என் தப்பு தான். நீ வருத்தப்படாதே!”

இறுக்கமாய் அவளை அணைத்தவன், ஒரு கையால் அவள் கண்ணீரை துடைத்து விட்டான். சற்று நேரம் பதிலேதும் சொல்லாமல் அவன் அணைப்பில் இருந்தவள், பின்னர் அவனிடமிருந்து விலகி நின்றாள்!

“நான் சொன்னதையெல்லாம்…”

“நீங்க சொன்னதுக்கு நான் நேத்தே பதில் சொல்லியாச்சு! அதுக்காக எல்லாம் நான் அழலை!” என்றாள் ரோஷம் வந்தவளாய்!

“அப்புறம் ஏன் மா?”

அன்று தான் போட வேண்டிய உடையை அலமாரியிலிருந்து எடுத்து தன் கட்டில் மீது போட்டவள்,

“எனக்கு என் அம்மா நியாபகம் வந்திடுச்சு அதான்!”

மயூரியை மறுபடியும் நெருங்கி பின்பக்கமிருந்து கட்டிக் கொண்டான்!

தானும் சேர்ந்து தானே அவளை துன்புறுத்திவிட்டோம் என்ற எண்ணம் அவனுக்கு!

அவள் இடையை சுற்றி வளைத்திருந்த அவன் வலிய கரங்களை தன்னிடமிருந்து பிரிக்க முயன்று தோற்று போனாள் அவள்! அவளுக்கு எப்போதும் பிடிக்கும் அவனின் வாசனை வேறு இப்போதும் அவளை இம்சை செய்தது! அந்த எதிர்பையெல்லாம் மீறி அவளை தன் புறமாய் திருப்பிய விவேக்

முதலில் அவள் நெற்றியிலும், பின்னர் அவளின் இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டான்!

‘நானே காயம் அதற்கு நானே மருந்து’ என்பது போலிருந்தது அவன் செயல்!

அவனின் இந்த புதிய செய்கையால் மயூரியின் மூளை தன் செயல்திறனை அப்போதைக்கு இழந்திருந்தது!