NN 21

தனக்கான கிண்ணத்தை வாங்கி கொண்ட கௌதம் “சரி சரி என்ன ஐஸ் கிரீம் எல்லாம்? என்ன ஸ்பெஷல்? ” என்று கேட்க.

“சும்மா குட்டி செலிப்ரேஷன் தான் ! “என்று காயத்ரி சிரிக்க

“சூப்பர் காயு ! என்னன்னு சொன்னா நாங்க இன்னும் சந்தோஷமா சாப்பிடுவோமே ” என்று சிவா ஆர்வமாய் கேட்டான்.

ஐஸ் கிரீம் கிண்ணத்தை விட்டு ஒரு நொடி தலையை நிமிர்த்தியவள் ” நான் ஐஸ் கிரீம் சாப்பிடணும். உதயா சொல்லுவா” என்று மறுபடி ஐஸ் கிரீமிற்குள் மூழ்கிவிட்டாள்.

‘அடியே நான் தான் கிடைத்தேனா ?’ என்பது போல் அவளைப் பாவமாய் பார்த்த உதயா சற்று தயக்கத்துடன் ” அது என்னனா ? ” என்று இழுக்க

சிவாவோ ” பயப்படாதே உதய்மா கௌதம் எதுவும் சொல்லமாட்டான் நான் இருக்கேன்” தங்கைக்கு வாக்குறுதி கொடுக்க.

‘ என் பயமே உங்களைப் பார்த்துத்தானே அண்ணா ! ‘ மனதிற்குள் சொல்லிக்கொண்டவள் கண்ணில் சிறிய மிரட்சியுடன்

“அண்ணாஸ் ! “ என்று வார்த்தைகளை மென்று விழுங்க

“ ம்ம் சொல்லு “ என்று சிவா மறுபடி உதயாவுக்கு ஊக்கமளிக்க

கௌதம் “அடேய் நீ கோச்சுக்க மாட்டேன்னு சொல்லு அதுல நியாயம் இருக்கு. எனக்கும் சேர்த்து ஏன்டா . “ என்று சொல்லும்பொழுதே சிவா அவனை முறைக்க ” சரி சரி ஒன்னும் சொல்லமாட்டேன் தாயே ! ” என்று வேறுவழியின்றி கௌதமும் வாக்கு கொடுக்க.

“ சொல்றேன் ஆனால் என் மேல யாரும் பாயக் கூடாது சொல்லிட்டேன் ! “ என்று உதயா ஆரம்பித்தாள்.

” போதும்டி உன் பில்டப். சொல்லித்தொலை ” என்று கௌதம் கடிந்துக்கொள்ள.

” காயத்ரி எம்.ஜி.யார்க்கு போறா ! ” என்று படப் படவென சொல்லி ஒரு ஸ்பூன் ஐஸ் கிரீமை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ‘ஸ்ஸ்ஸ்’ என்று உதயா பல் கூச்சத்தில் கண்களை மூடத்துடிக்க

“என்ன எம்.ஜி.யார் ? என்ன அது ? ஓ சரிசரி பீச்சில் இருக்குற அவர் சமாதியைப் பார்க்கப் போறியா ? “ என்று சிவா கேட்க

” அடியே அண்ணாவுக்கு விளங்கிச்சு உனக்குச் சமாதி தான் டி ! “ என்று அவன் காதில் முணுமுணுத்தாள் உதயா

” எம்.ஜி.யார் இல்ல எம்.ஜி.எம் ! இவ உங்களைப் பார்த்துப் பயத்தில் உளர்றா ! ” என்று சொல்லி மறுபடியும் ஐஸ் கிரீமினுள் மூழ்கினாள் காயத்ரி

” எம்.ஜி.எம் தீம் பார்க்கா (கேளிக்கை பூங்காவா) ? ஹை சூப்பர் நாங்களும் வரோம், எங்களுக்கும் மனசு நிம்மதிக்கு வசதியா இருக்கும் ” என்று கௌதம் உற்சாகமாக

” முழுசா கேளுடா பட்டர்! அப்புறம் சொல்லு நிம்மதி ஆகுமா ரணகளம் ஆகுமான்னு ! ” என்று உதயா கௌதமிடம் நக்கலாய் சொல்ல.

சிவாவோ காயத்ரியைக் கனிவாய் பார்த்தபடி “ என்ன சொல்றே எங்க தான் போறே ? நல்ல விஷயமா இருக்கவே தானே ஐஸ் கிரீம் கொடுத்துக் கொண்டாடுறே. பயப்படாமல் சொல்லு பேபி” என்று கேட்டான்.

“நான் ஏன் பயப்பட போறேன் ? இவதான் பயப்படுறா எதோ இவ டேட்டிங் போகிற மாதிரி. டேட்டிங் போகப் போறது என்னமோ நான். இவளுக்கு என்ன பயம் ? “ என்று தோளைக் குலுக்கி சொல்லிவிட்டு காயத்ரி மறுபடி ஐஸ் கிரீமிற்குள் தலை விட

“சாரி டியர் ! எனக்கு நிறைய வேலையிருக்கு சோ டேட்டிங் போகிறதுக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்ல காயு “ என்று சிவா வருத்தமாகச் சொன்னான். அவனுக்குக் காயத்ரியுடன் வெளியே செல்ல ஆசைதான் ஆனால் நேரமின்மை காரணமாய் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறான்.

அவனைப் பார்த்துப் புன்னகைத்த காயத்ரியோ “ உங்களை இப்போது யார் கூப்பிட்டா ? டேட்டிங் போறேன்னு தானே சொன்னேன். போறோம்னா சொன்னேன் ? “என்று அவள் கூலாக சொல்ல உதயாவிற்குத்தான் குலை நடுங்கியது

“என்னடி சொல்றே ? நான் இல்லாமல் தனியா எங்க டேட்டிங் போறே ? தனியாப்போனா அதுக்கு பெயர் டேட்டிங் இல்ல லூசே ! “ என்று சிவா அவளைப் பார்த்து கேலியாகச் சொல்ல

“ஹலோ ஹலோ வெயிட் ! நான் உங்ககூட டேட்டிங் போகலைன்னு தானே சொன்னேன் , தனியா போறேன்னா சொன்னேன் ? சின்ன புள்ள தனமால்ல இருக்கு! ” என்று காயத்ரி வாய் பொத்தி சிரிக்க

“என்ன சொல்றே ? ” என்று சிவா முகம் மெதுவாய் சிவக்க

ஓரளவிற்கு நடப்பதைப் புரிந்து கொண்ட கௌதமோ ‘ஆஹா இங்க இனி இருந்தால் சட்னிதான் ‘ மனதில் என்னை தப்பிக்க நினைத்தவன்

“மச்சி எனக்கு ஒரு சின்ன மீட்டிங் இருக்கு நான் போயிட்டு வரட்டா ! ” என்று எழ முயற்சிக்க

“சண்டே ஏதுடா மீட்டிங் ? எழுந்தே மவனே கொன்னுடுவேன்! ” என்று அவனை மிரட்டி அமரவைத்தான் சிவா

சிவாவோ காயத்ரியை நோக்கி ‘ ஒழுங்கா சொன்னதை மாற்றிக்கொள் எச்சரிக்கிறேன் ‘ என்பது போன்ற குரலில்.

” காயு நீ சொன்னது காதில் சரியாக விழலை திரும்ப சொல்லு ” என்று காயத்ரியைக் கேட்டான்

“உங்களுக்கு என்ன காது அவுட்டா? நான் எம் ஜி எம் க்கு டேட்டிங் போறேன் நாளைக்கு அவளோதான் . சும்மா திரும்பத் திரும்ப கேட்டுக்கிட்டு .லூசாப்பா நீ ?! ” என்று காயத்ரி சிவாவைப் பார்த்து முறைக்க

“முறைக்க வேண்டியது நான் நீ என்ன முறைக்குறே ? இதில் லூசான்னு வேற கேட்குறே. எதில் விளையாடுறதுன்னு இல்லை ? ” என்று அவன் கடு கடுக்க

” நீங்க மட்டும் ராத்திரி டிஸ்கோ டேட்டிங் போவீங்களாம் நான் பகலில்
எம் ஜி எம் போனா தப்பா ? தோ டா நல்ல கதையால்ல இருக்கு ” என்று விடாமல் அவள் மல்லுக்கட்ட

‘ஒ இதுதானா சேதி? ‘ போட்டிக்கு எதோ செய்கிறாள் என்று அறிந்ததும் கோவம் களைந்து புன்னகையுடன்

” மண்டூஸ் ! நான் என்ன வேணும்னேவா போனேன் ? சூழ்நிலை அப்படி ஏன்னா என்மேல் அவளுக்கு நம்பிக்கை வரனும்ல.! எல்லாம் தெரிந்த நீயே இப்படி செஞ்சா என்ன அர்த்தம் காயு ? ” என்று சிவா அவளுக்குப் புரியவைக்க முயன்றான்.

” அதெல்லாம் தெரியாது நீங்க என்ன விட்டுவிட்டு டேட்டிங் போனீங்க அவளோதான்… சோ உங்களை விட்டுவிட்டு நான் ஒரு டேட் போயே தீருவேன். நான் உங்ககிட்ட பெர்மிஷன் கேக்கல இன்போர்மஷன் கொடுத்தேன் புரியுதா ? ” என்று காயத்ரி விடாமல் வாக்குவாதம் செய்ய .

பொறுமையிழந்த சிவாவோ ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என்று கண்களை மூடி , பற்களை நறநறவென கடித்தபடி தன் கோவத்தைக் கட்டுப் படுத்த போராடிக்கொண்டிருக்க.

கௌதமோ ” என்னடா சிவா ஐஸ் கிரீம் ரொம்ப சுடுதோ? ” என்று அவன் காதில் கிசுகிசுக்க .

சிவாவும் காயத்ரியை எண்ணியபடி ” ஆமாம் டா ரொம்ப சூடா இருக்கு அதான் எப்படி சில்லுனு ஆக்கலாம்னு யோசிக்கிறேன் ! ”

அதற்குள் காயத்ரியோ ” சரி நாங்கள் பார்லர் போயிட்டு வரோம்…வாடி உதயா ! “ என்று கிளம்ப

” ஹே நில்லு ! “ என்று சிவா கோவமாய் எழ முயற்சிக்க , அவன் கையை பிடித்து அமுக்கிய கௌதம் ‘இருடா’ என்று ஜாடை காட்டி

” காயு யார் கூட கண்ணா டேட் ? தனியா அவளோ தூரம் போகணுமா என்ன ? சென்னை சிட்டி உள்ளையே எங்கயான போயேன் இல்ல நம்ம வீட்டுக்கு கூட்டிண்டு வா ! நாங்களும் கம்பெனி தருவோம் என்ன சொல்றே ? ” என்று நயமாக பேச

“ டேட்டிங்னா பிரைவசி வேணும். மடியில் பூனையைக் கட்டிக்கிட்டு யாரான சகுனம் பார்ப்பார்களா? ” என்று அவள் சிவாவைப் பார்க்க

” ஹே ! என்ன நக்கலா நான் பூனையா? ” என்று சிவா எகிற ” சாரி தப்பா சொல்லிட்டேன் ” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டவள்

“நீங்க பூனை இல்ல குரங்கு ! அதுவும் நெட்டை ரெட்டை வால் குரங்கு ! ” என்று நாக்கை துருத்தி காட்டி அவனை வெறுப்பேற்ற

” காயு என்ன இது பேச்சு ! ” என்று கௌதம் அவளை அதட்ட

” பின்ன என்ன அண்ணா ? நான் நாளைக்கு போயிட்டு வரேன் அவளோதான் என் மேல் நம்பிக்கை இல்லைனா சொல்லிடுங்க ” என்று அவள் அஸ்திரத்தை அவன் மீதே திருப்ப

‘ ஆஹா இப்படிக் கோர்த்து விடறாளே. சம்மதம் சொன்னா இவன் கொல்லுவான் , சம்மதம் கொடுக்கலைன்னா காயு சண்டைக்கு வருவா ‘ மனதில் குழப்பம் மேலிடச் சிறு நொடி அமைதிக்குப் பிறகு பெருமூச்சொன்றை விட்டு முகத்தில் போலிப் புன்னகையுடன்

” உன்னை நம்பாமல் யாரை நம்ப போறேன் கண்ணா நீ தாராளமா போயிட்டு வா ! ” என்று கௌதம் ஒருவழியாய் சம்மதம் சொல்ல

“இந்த வீட்டில் அப்புறம் நான் ஒருத்தன் எதற்கு ? எப்படியோ போங்க பின்னாடி வந்து குத்துதே குடையுதேன்னு சொன்னா உன்னையும் உன் தங்கையையும் பிச்சுடுவேன் பிச்சு சொல்லிட்டேன். நான் உன்னை சொல்லலை உதயா கண்ணா ! “ என்று பொரிந்தவன் அதன் பின் ஏதும் பேசாமல் கடுகடுவென போனை நோண்டத் துவங்கினான்.

கௌதம் எழுந்து உள்ளே செல்ல இரண்டெட்டு எடுத்து வைக்க பின்னாலிருந்து காயத்ரி சிவா சொன்னது காதில் ஏதும் விழாதது போல் ” தேங்க்ஸ் கௌதம் அண்ணா ” என்று ஓடிச் சென்று கௌதமின் வலக்கையைப் பற்றி

“தேங்க்ஸ் அண்ணா. நான் போயிட்டு வரேன் “ என்று சொல்ல

சிவா கோவமாய் கௌதமை நெருங்கி அவன் இடக்கையைப் பற்றிக்கொண்டான்.

” தலை முடியைக் வெட்டிக்கிட்டு வந்தா தொலைச்சுடுவேன்னு சொல்லிவை கௌதம்! ” என்று அவன் கௌதமை தன் பக்கம் இழுத்து எச்சரிக்கை செய்ய

” செய்துக்கத் தான் போறேன் அதுவும் பாப் கட்டுன்னு சொல்லுங்க அண்ணா ! ” என்று காயத்ரியும் கௌதமை தன் பக்கம் இழுக்க

” வேண்டாம் என் பொறுமைக்கும் எல்லை இருக்கு சொல்லிவை கௌதம் ! ” என்று சிவாவும் விடாமல் கௌதமை மறுபடி தன்பக்கம் இழுக்க

“ எல்லாத்துக்கும் இவர் உத்தரவு வேணுமான்னு கேளுங்கண்ணா “ காயத்ரி சிலிர்த்துக் கொண்டு கௌதமை தன்பக்கம் இழுக்க

“இந்தச் சின்ன விஷயம் கூடச் சொல்லக்கூடாதா கேளுடா கௌதம் “ சிவா சிலிர்த்துக் கொண்டு கௌதமை பலமாகத் தன்பக்கம் இழுக்க

“அப்போ என்னைக் கேட்டா அவர் ஹேர் ஸ்டைல் வைக்கிறார் கேளுங்கண்ணா “ காயத்ரி முடிந்தமட்டும் கௌதமை தன்பக்கம் இழுக்க

“ இனிமே இவள் சொல்றமாதிரியே ஹேர்கட் செய்றேன் இப்போ என் பேச்சைக் கேட்கச் சொல்லுடா கௌதம் “ சிவாவும் கௌதமை தன்பக்கம் இழுக்க

” என் முடி என் இஷ்டம் சொல்லுங்கண்ணா ” என்று காயத்ரி கௌதமை தன் பக்கம் இழுத்து இந்தமுறை நகரவிடாமல் பிடிக்க முயற்சிக்க

” என் காயத்ரி என் உரிமை சொல்லுடா கௌதம் ” என்று சிவா கௌதமின் இடக்கையைப் பலமாய் இழுக்க இரண்டு பக்கமும் மாறி மாறி இழுபட்ட கௌதமோ பொறுமை இழந்து விட்டான்.

“அடச்சே நிறுத்துங்க என்ன இது ? எதானா சொல்லிடப்போறேன் ! இந்த இத்துப்போன விஷயத்துக்கு நான் வேற நாட்டாமையா ? நானும் பாக்குறேன் மாத்தித்மாத்தி இப்படி என்னை இழுத்து வளையாடுறீங்க!”

தன் கையை இரவரிடமுமிருந்து உதறி ” நீங்க ரெண்டுபேரும் கிளம்புங்க! டேய் சிவா நாம செய்ய ஆயிரம் வேலை இருக்கு இதுல என்னத்துக்கு இங்க இப்படி வெட்டி சண்டை போட்டுக்கிட்டு ! ”

சிவாவைப் பார்த்து நாக்கை துருத்தி காட்டிவிட்டு காயத்ரி உதயாவுடன் பார்லர் சென்றுவிட்டாள்.

அன்று இரவெல்லாம் தூக்கம் கொள்ளாமல் சிவா தன் அறையில் சிங்கம்போல உலவிக் கொண்டே இருந்தான்

” குட்டி பிசாசு எதுல விளையாட்டுன்னு இல்லை ? இடியட் ! ” என்று புலம்பிக் கொண்டே நடக்க அவன் போனில் மணி அடித்தது

கௌதம் தான் வாட்ஸப்பில் மெஸேஜ் அனுப்பி இருந்தான் ” டேய் ரிலாக்ஸ் நண்பா. ஐ வில் டேக் கேர் ”

” என்னமோ போ ” என்று மட்டும் சிவா பதில் அனுப்பினான்

காலை உணவின் பொழுது சிவா கடுகடுவெனவே இருந்தான். கௌதமும் உதயாவும் மௌனமாகவே உண்டு கொண்டிருந்தனர். அறக்கப்பறக்க வந்த காயத்ரியோ அவதி அவதியெனக் கொரித்துவிட்டு எழ

“காயு ஒழுங்கா சாப்பிட்டாவது கிளம்பு “ சிவா ஆதங்கம் தாங்காமல் சொல்ல

“ஏனோ இன்னிக்கி பசியே இல்லை. வயத்துல பட்டாம்பூச்சி பறக்குற மாதிரியே இருக்கு! “ பூரிப்புடன் அவள் சொல்ல சிவாவோ கடுப்பின் உச்சிக்கு சென்றான்

காயத்ரியோ அதை பொருட்படுத்தாமல் துள்ளிக் குதித்து “பை கைஸ்! “ உற்சாகமாய் கிளம்பிச் சென்றாள்.

அவள் கிளம்பும் வரை இருந்த பொறுமைக்கூட அவள் சென்ற மறுநொடி காற்றோடு பறந்தது.

அவளைப் பின் தொடர கௌதம் கார் சாவியுடன் கிளம்ப அவனை வழிமறித்த சிவாவோ “ டேய் நானும் வரேன் டா இரு “ என்று புறப்பட ஆயத்தம் ஆக.

“டேய் நீ வேணாம் இங்கயே இரு நான்தான் போறேன்ல “ கௌதம் மருப்பு சொல்ல

“கௌதம் ப்ளீஸ் ! என்னால இங்க நிம்மதியா இருக்க முடியாது டா. யாரோ எவனோ ? காயு சின்னப் பொண்ணுடா ஏதோ வீம்புக்கு இப்படி செய்றா. அதுக்காக அப்படியே விடமுடியுமா ? “

“ சிவா நீ பயப்படுற அளவுக்கு எதுவும் நடக்காது. நான் உடனே கிளம்பினால் தான் பின்தொடர முடியும் சொன்னா கேளு. கொஞ்சமான என்னை நம்பு ! “

“அப்போ என் மொபைலுக்கு கால் பண்ணி அப்டேட் கொடுத்துக்கிட்டே இருக்கணும் சம்மதமா?” சிவா பேரம் பேச அதை ஏற்றுக்கொண்ட கௌதம் காயத்ரியைப் பின்தொடர விரைந்தான்.

மொபைலில் பிளூடூத் ஆன்செய்து கார் ஸ்பீக்கரில் கனெக்ட் செய்து சிவாவை அழைத்தவன் ” டேய் அப்படியே லைன்ல இரு நான் உனக்கு அப்டேட் பண்ணிகிட்டே இருப்பேன் ! ” என்று சொல்ல

” யார் அந்தப் பீசுன்னு எனக்குத் தெரிஞ்சே ஆகணும் ! ” என்ற சிவா போர் திட்டம் தீட்டுவதைப் போல் தீவிரமான மனநிலையிலிருந்தான்.

கௌதமோ அவ்வப்போது கிரிக்கெட் கமென்டரி போலத் தகவல்களைச் சொல்லத் துவங்கினான்.

” சிவா அவ இப்போ தெருமுனையில் ஆட்டோ பிடிக்கிறா ! “

ஆட்டோவைப் பின்தொடர்ந்த கௌதம் சில நிமிடங்களில்

“ அடையார் பிஸ்ஸா கடை வாசலில் இறங்கி நிக்குறா டா “

“ டேய் ஒரு கருப்பு கார் ஒன்னு வந்து நிக்குது. உள்ள யாருனு தெரியல, காயு உள்ள ஏறிட்டா ! ”

சிவாவின் நாடித்துடிப்பு எகிறத் துவங்கியது.

” என்னடா கார்ல விண்டோ மொத்தமா டின்-டிங் செய்திருக்கு? இப்போ இப்படிப் போட ரூல்ஸ் இலையே. பெரிய ஆளா இருப்பானோ ? ” என்று கௌதம் சொன்னதுதான் தாமதம்.

கௌதமின் அழைப்பைத் துண்டித்த சிவா, காயத்ரிக்குக் கால் செய்தான்.

“காயு நீ பாத்திரமாய் இருக்கியா ? எங்க இருக்கே ? இப்போ கூட ஒன்னும் இல்லை வீட்டுக்கு வந்துடு நான் நாளை ஆபீஸ் போகலை. நான் உன்னை வெளியில் கூட்டிண்டு போறேன் ! “ மூச்சு விடமால் பேச

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டவளோ “சிவா நான் பத்திரமா தான் இருக்கேன் ! எனக்கு உங்க மேல கோவமென்னும் இல்லை. சரியா. புருஞ்சுக்கோங்க. நான் அப்புறம் பேசுறேன் ! பை ! “ துண்டித்துவிட்டாள் அழைப்பை.

கௌதமிற்கு மறுபடி போன் செய்தவன் வாயெடுக்கும் முன்னே “டேய் எதுக்குடா கட் பண்ணே ? “ என்று கௌதம் எறிந்துவிழ

தங்கள் உரையாடலைப் பகிர்ந்து கொண்டான்

கௌதமோ “ அவசரக் குடுக்கை ! நான் தான் பின்னாலேயே போறேன்ல அப்புறம் என்ன ? இனி இப்படிச் செய்தே அவளோதான் ! “ என்று கடிந்து கொண்டான்.

பின்பு

” இப்போ திருவான்மியூர் தாண்டியாச்சு ! ”

” இப்போ ஈ சி ஆர் ரோடு ”

” எம்.ஜி.எம் வந்துட்டேன் டா வண்டியைப் பார்க் செஞ்சுட்டு கூப்பிடறேன் ”

ஒவ்வொரு தகவலாய் தந்தவன் சிவாவை மறுபடி அழைத்து

” டேய் ! நான் வண்டிய நிறுத்திட்டு வர்றதுக்குள்ள அவங்க ரெண்டு பெரும் உள்ள நுழைஞ்சுட்டாங்க “

“டேய் டேய் இதுக்குத் தான் சொன்னேன் ! நான் வரேன்னு ! நான் கிளம்புறேன் ! “ சிவா பொறுமையிழக்க

“பிச்சுடுவேன் பிச்சு. அப்படியே லைன்ல இரு ! ” என்று ஓடினான் கௌதம்

டிக்கெட் கவுண்டரில் நுழைவு சீட்டு வாங்கிக்கொண்டு காயத்ரியும் அவ்வாலிபனும் உள்ளே செல்லும் வரை காத்திருந்து தானும் நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு நுழைந்தான்.

“டேய் என் கண்ணு முன்னால்தான் இருக்காங்க நான் பின்னாடியே இருப்பேன் ஏதாவது முக்கியமான விஷயம்ன்னா மட்டும் போன் பண்றேன் ! “ சிவா எவ்வளவு தர்க்கம் செய்தும் மசியாது அழைப்பைத் துண்டித்தான் கௌதம்.

காயத்ரியுடன் இருந்த வாலிபனோ ஐந்தே முக்கால் அடி உயரத்தில் கருப்பு ஜீன்ஸ் கருப்பு முழுக்கைச் சட்டை மற்றும் முகத்தை மூக்கிலிருந்து கழுத்துவரை மறைக்கும் மாஸ்க் (முக மூடி) அணிந்திருந்தான்.

அவர்கள் ஒரு ஒரு விளையாட்டுகளிலும் விளையாடச் செல்லச் செல்ல கௌதம் அவ்வப்போது வாட்ஸப்பில் சிவாவிற்கு தெரியப்படுத்தி கொண்டே இருந்தான். கூடவே சில புகைப்படங்களையும் அனுப்பிவைத்தான்.

எவ்வளவு முயன்றும் அவ்வாலிபனின் முகத்தைப் படம்பிடிக்க முடியவில்லை. அக்கேளிக்கை பூங்காவின் விளையாட்டுகள் ஒவ்வொன்றும் காற்றைக் கிழித்துக்கொண்டு வேகமாகச் சுழல்வது, பறப்பது, சுற்றுவது என இருக்க ஓரிரு புகைப்படங்கள் எடுப்பதற்கே திணறித்தான் போனான் கௌதம் அனைத்திற்கும் மேலாய் புரட்டாசி மாசத்திலும் சென்னை வெய்யில் கௌதமை புரட்டிப் போட்டுக்கொண்டிருந்ததது.

2 மணிநேரம் கடந்த நிலையில் பொறுமை இழந்த சிவா கௌதமை அழைத்தான்.

” அவன் யாருனு தெரியுதா ? “ என்று சிவா கேட்க

” இல்ல மச்சி ! முகம் தெரியலை அவன்தான் அந்தப் பிளாக் மாஸ்க்கை கழற்றவே மாட்டேங்குறானே ! ஒருவேளை டஸ்ட் அல்ர்ஜி இருக்குமோ பாவம் ” என்று உச்சுக் கொட்டி கௌதம் சொல்ல

பொறுமை இழந்த சிவாவோ ” டேய் வந்தேன் உன்ன கொன்னுடுவேன் பாத்துக்கோ. அவன் முகத்தைக் காட்டாமல் சுத்த இப்படி பன்றான் நீ என்னடான்னா அல்ர்ஜி அது இதுன்னு பாவம் வேற பாக்குறே ? இதோ பார் அவன் காயத்ரியை நெருங்கி நடந்தால், தொட்டு பேசினா யோசிக்கவே யோசிக்காதே கைய ஒடைச்சுடு ” என்று ஆவேசப்பட.

“அப்படியெல்லாம் போயி உடைக்க அவன் கையென்ன முருங்கைக்காயா ? “ கேலியாகச் சிரித்தவன் மேலும் சற்று உறுதியான குரலில் “ இது பொது இடம். எடுத்தோம் கவித்தோமென்று எதுவும் செய்ய முடியாது. எனக்குத் தெரியாதா ஒரு அண்ணனா எப்படி என் தங்கையைப் பாதுகாக்கணும்ன்னு ? ”

அவர்கள் இருவர் பின்னாடியே நாள் முழுவது சுற்றித் திரிந்த கௌதம் பாவம் வெயிலில் துவண்டு போனான்

” வெயில்ல இப்படி காஞ்சு கருவாடா ஆகணுமா ? நோ நோ நான் சைவம் …காஞ்சு கருவடாம் மாதிரி ஆகணுமா ? லூசுங்க எங்கயான ஏசி இருக்குறமாதிரி மால் போய்த் தொலையக் கூடாது என்னையும் சேர்த்து பின்னாடியே வெயிலில் சுத்த விடறாங்க! ” என்று மனதிற்குள் பொருமிய படியே அவர்கள் பின்னாடியே அலைந்தான் கௌதம்.

மாலையில்

” மச்சி ! ரோலர் கோஸ்டர்ல ஏற லைன்ல நிக்குறாங்க ! ” என்று கௌதம் பேசிக்கொண்டே இருக்கும் பொது ஒரு கரம் அவனைப் பின்னே இழுக்க. நிலை தடுமாறி பின்பு சுதாரித்தவன் அதிர்ந்தான்

” சிவா என்னடா இது ! ஏன்டா வந்தே ? கொஞ்சமான சொல் பேச்சைக் கேட்டா தானே ? முந்திரிக்கொட்டை! ” என்று கௌதம் சிவாவைக் கோவித்துக் கொள்ள

“ஆமாம்டா யாரோ பேர் தெரியாத ஒருத்தன் இவ கூட டேட்டிங் போவான் நான் வீட்டில் உங்கிட்ட அப்டேட் கேட்டுக் கிட்டு சும்மா இருக்கணுமா? காலையில் 11 மணிக்கு உள்ள நுழைஞ்சவங்க இப்போ மணி ஆறு ஆகப் போகுது ! ” என்று கடு கடுத்தவன் மேலும்

“ஏன்டா அவன் சாப்பிடும்பொழுது கூட மாஸ்க்கை எடுக்கலையா?” என்று கேட்க

” இல்ல மச்சி அவன் வெறும் ஜூஸ் தான் குடிச்சான் அதுவும் மாஸ்க்குக்கு உள்ள ஸ்டரா செட் பண்ணி. ” என்று கௌதம் சொல்லிக் கொண்டிருக்கும்பொழுது சிவா அங்கு இல்லை, அவர்கள் செல்லும் ரோலர் கோஸ்டரில் செல்ல அவனும் வரிசையில் நின்றிருந்தான்

” அடேய் இருடா நானும் வரேன் ” என்று கௌதம் அவன் அருகில் நின்றுகொண்டான் சிறிது நிமிடங்களில் அனைவரும் அந்த ரோலர் கோஸ்டரில் அமர்ந்து கொள்ள.

கௌதமோ முகம் வெளிறி “ டேய் எனக்குப் பயமா இருக்குடா. ஏற்கனவே சாப்பிடலைப் பட்டினி. இப்போ இதுவேற எனக்கு மயக்கம் வந்துரும் போல இருக்கே “ என்று வாய்விட்டே புலம்ப

சிவாவோ சிடு சிடுவென ” இடியட் மூடிட்டு உட்காரு ! ” என்று முறைக்க, மெதுவாக அந்த வண்டி நகர துவங்கியது.

” ஐயோ “ என்று கௌதம் அலற

“என்னடா ? “ என்று சிவா அவனை கோவமாய் பார்க்க

” டேய் அங்க பாருடா ! காயத்திரியும் அந்தப் பையனும் இறங்கிட்டாங்க ! ” என்று கௌதம் சொல்வதற்குள் சீறிப்பாய்ந்து அந்த விளையாட்டு ஆரம்பம் ஆனது.

ரோலர் கோஸ்டெரோ ஏவுகணையைப் போலச் சீறிப் பாய்ந்து பாம்பைப் போல வளைத்து நெளிந்து தலைக்கீழும் மேலுமாய் பாரபட்ஷம் இல்லாமல் ஓட. விளையாட்டு முடிந்து கீழே இறங்கிய கௌதம் பித்தம் தலைக்கேறப் பிரட்டி பிரட்டி வாந்தி எடுத்துப் பாவம் துவண்டு விட்டான்.

ஒரு புறம் துவண்டிருந்த கௌதம் மறுபுறம் காயத்ரியோ சென்ற இடம் தெரியவில்லை,. இருவரில் யாரைக் கவனிப்பது என்று சிவா திணறித்தான் போனான்.

பிறகு பழச் சாறு வாங்கிக்கொடுத்து கௌதமை தேற்றி நகர்வதற்குள் சில நிமிடங்கள் கழிந்துவிட்டது.

“ஸாரிடடா என்னால தான் காயத்ரியை மிஸ் பண்ணிட்டோம் ! ரோலர் கோஸ்டர்ல ரொம்ப மயக்கம் வந்துருச்சு டா ! பசி வேற ! “என்று கௌதம் புலம்பச் சிவா மனம் உடைந்து விட்டான்.

” சாரி கௌதம் நீ பாவம் என்னால தான் இப்படி கஷ்டப்படறே.என் காயத்ரியை நான் தான் பாத்துக்கணும் பாவம் உன்னை அலையை விட்டேன். விடு டா..நாம வீட்டுக்குப் போவோம் ! ” என்று அவனைத் தாங்கிக் கொண்டு நடந்தான் சிவா

” இல்லை இல்லை இருட்ட ஆரம்பிக்கிறது தனியா அவளை அவன் கூட விட முடியாது. நான் காயத்ரிக்கு போன் போடறேன் நாமளே கூட்டிண்டு போவோம் ! ” என்று கௌதம் முரடு பிடிக்க

“ சரி நீயே கூப்பிடு நான் அவ கூட பேசமாட்டேன். கொஞ்சம் மூஞ்சி காட்டினால் தான் அவள் வழிக்கு வருவா. ” என்று சிடுசிடுத்தான்

காயத்ரிக்கு போன் செய்த கௌதம் ” காயு எங்க மா இருக்கே ? நேரம் ஆகிறது ” என்று கேட்கப் பின்பு அவள் சொன்ன எதையோ கேட்டு

கோவமாய் ” ஹே என்ன உனக்குப் பைத்தியமா ? அறிவே இல்லையா ? மரியாதையா அங்கேயே இரு ! ” என்று உறுமி விட்டுத் தள்ளாட்டத்தை மறந்து

” டேய் சிவா அவளை இன்றைக்கு என்ன செய்றேன் பார்….கெளம்புடா ” என்று கௌதம் வேங்கைபோல் கர்ஜிக்க ஆரம்பித்தான்.