IM-13

IM-13

IM 13

பாஸ்கர் ஆதித்யா, கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை பார்த்துக் கொண்டுருந்தான்.. தியா திருமணத்தின் போது , “என்னை மடக்க பாக்கறியா ?” என்று லதிகா கேட்டதும் மனம் நொந்தவன் .. அவளின் நினைவே கூடாதென்று வேலையில் முழு கவனம் செலுத்தி இருந்தான்.. ரிஷப்சனில் அவளை தவிர்க்க நினைக்க.. அவளாகவே வந்தாள், பேசினாள் , அழுதாள், போனாள்…

பாஸ்கருக்கு இன்னமும் புரியாத விஷயம்.. தான் உணர்ந்ததை ஏன் அவள் உணரவில்லை, என்பதுதான் .. ஓரிரு நொடிகள் பார்த்தாலும் .. அவள் கண்கள் என்னை சொந்தம் கொண்டாடுவது ஏன் அவளுக்கு புரியவில்லை? சொல்லித் தெரிவதா காதல்? அது உணர்வது அல்லவா?

அதுதான் அவன் கோபமும் கூட…. சந்தித்த இரண்டாம் நாளே, இவனுக்காகவே வந்து காத்திருந்தும் …அவனை அலட்சியமாய் பேசியது, அத்தனை கோபமாய் வந்தது. இவனுக்கு பொய் எனும் வார்த்தையே அலர்ஜி.. அதிலும் அவன் விஷயத்திலேயே பொய் சொன்னது .. அவள் மேல் கண் மண் தெரியாமல் கோபப்பட வைத்தது.. எனினும் நிதானித்து நேரம் கொடுத்து விலகி நின்றான்.

அதுவும் அக்கா தியாவின் திருமணத்தில், எதிர்பாராமல் வந்து கலந்து கொண்ட லத்திகாவின் பார்வை அவனை மொத்தமாய் களவாட.. அந்த மகிழ்ச்சி, ஒரு மணி நேரம் கூட நீடிக்கவில்லை…….வேறு எதோ பேசி ,, ஏதேதோ தெரிய வந்து.. சே.. என்ன கேட்டு விட்டாள் .. விடு .. மறந்து போ. யோசிக்காதே.. என்று என்னதான் கடிவாளமிட்டாலும்.. எங்கு சுற்றினாலும், லதிகா தான் நினைவில் நின்றாள்.. நெருஞ்சியாய் …

நிச்சயமாய் பெண்களுக்கு அலைவது போல் கூறிய லதிகாவின் குற்றச்சாட்டு, இன்றுவரை அவன் நடத்தையில் ஒரு கறை படாது, காப்பாற்றி வந்த பாஸ்கருக்கு பெரிய அடி …. பாஸ்கர் தன்னிலை விளக்கம் சொல்லத் தயாராய் இல்லை.. “புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ -ன்னு விளக்கம் கொடுத்து காதலிச்சா.. அது எத்தனை நாள் நிற்கும்?” –  இது பாஸ்கரின் எண்ணம். எனக்கு அவள் காதல் தெரிந்ததை போல்.. அவளும் தெளிந்தே வரட்டும் என்று விட்டு விட்டான்…நேற்றும் இரவு முழுவதும் ஏதேதோ டிசைன்-களில் மனதை செலுத்தி இருந்தான்.. காரணம் தூக்கம் வருவேனா பார்? என்கிறது. கண் மூடினால், அழுது… சிவந்த… மூக்குறிஞ்சும் லதிகா வந்தாள் . “இம்சை”, இப்போதும் திட்டத்தான் தோன்றியது ..

ரிசப்ஷன் முடிந்த மூன்று நாட்களில் .. ஒரே ஒரு மெசேஜ்.. “வீடு வந்துவிட்டேன்”, என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை… இவனும் பேசவில்லை.. அவளும் பேசவில்லை.. பாஸ்கருக்கு இன்னுமொரு அலைபேசி கைவசம் இருப்பதால்.. அவளிடம் இருந்த … அந்த பேசி தேவைப்படவில்லை..

லதிகாவின் கைப்பையில் எப்போதும் இவன் அலைபேசி இருக்கிறது என்பது, அவனுக்கு தெரியும், அன்று லதிகாவிடம் , இவன் செல்போன்-ஐ தருமாறு கேட்டதும் “வீட்ல இருக்கு “, என்று கூறியது பொய் என்பதும் தெரியும்.. ஆனாலும் கேட்கவில்லை.. எப்படியாவது தொடர்பில் இருக்க வேண்டுமென அவள் மனது நினைப்பது புரிய.. அமைதியானான்…

காரணம்.. இவனது அந்த மொபைல்….” ட்ராக் மை மொபைல்” என்ற ஆப்-புடன் லிங்க் ஆகி இருப்பதால்.. அந்த அலைபேசி இருக்குமிடம் எப்போதும் மேப்-பில் தெரியும்.. அதன் பாட்டரி தீரும்வரை… லதிகாதான்.. அதை எப்போதும் சார்ஜ் செய்தே வைத்திருக்கிறாளே? எனவே அவனது அலைபேசி உயிர்ப்புடனே இருந்தது…

அவள் காரில் ஏறி சென்றவுடன் மொபைல் இருக்குமிடம் தேடி மேப்-பினை பார்க்க.. அவளுடன் அதுவும் பயணப் பட்டுக் கொண்டிருப்பது தெளிவாக.. பாஸ்கருக்கு இதழோரம் சிறு புன்னகை…

மனசு மட்டும் ஒரே ஒரு மெசேஜாவது பண்ணுவாளா ? என்று ஏங்கியது..

அது அங்கே டெலிபதியில் தெரிந்ததோ? “ட்டிங் “.. வாட்ஸ்ப் மெசேஜ் .. இவனது இன்னொரு அலைபேசியில் இருந்து, அதாவது லதிகா…. “எனக்கு உங்க இன்னொரு நம்பர் தெரியாது.. அதான் இதுல தேடினேன், கிடைச்சது…”, ஸ்டேட்டஸ் ஆன்லைன் காட்ட , “ம்ம்..”, என்று பதில் அனுப்பினான

சில நொடிகளில் அடுத்த மெசேஜ் ::

“அன்பே சுகமா ; உன் தாபங்கள் சுகமா

அன்பே சுகமா உன் தாபங்கள் சுகமா

தலைவா சுகமா சுகமா ; உன் தனிமை சுகமா

சுகமா வீடு வாசல் சுகமா ;உன் வீட்டு தோட்டம் சுகமா

பூக்கள் எல்லாம் சுகமா ; உன் பொய்கள் எல்லாம் சுகமா” – என்ற சாதனா சர்கம் பாடிய பகுதியை மட்டும் கட் செய்தோ , ரெக்காட் செய்தோ அனுப்பினாள். பாஸ்கர் .. பெயருக்கு ஏற்றாற்போல் காலை சூரியனாய் ஒளிர்ந்தான்.. 

ஆனாலும், மனதுள் இது என்ன லதிகாவின் திடீர் மாற்றம்? இன்னுமொரு பிரிவு .. தாங்காது என்பதால்.. எதுவும் பதில் அனுப்பவில்லை. ஆனால், பதிவை பார்த்ததை இரண்டு ப்ளூ டிக் காண்பிக்கும், என்பதால்.. அமைதியாய் இருந்தான்..

அடுத்து.. ” ஒரு நாள் சிரித்தேன்.. மறு நாள் வெறுத்தேன் .. உனை நான் கொள்ளாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா ?, மன்னிப்பாயா? மன்னிப்பாயா?” பாடல் வர…

விரிந்த சிரிப்பு பாஸ்கரிடத்தில்.. இவளுக்கு என்ன ஆச்சு? எங்கயாவது போதி மரத்து கீழ உக்காந்ததுல,  “காதிலிக்கறோம்” -னு ஞானம் வந்துடுச்சா?

” ? “, இதை அனுப்ப… [கீழே உள்ளது.. வாட்ஸாப் பேச்சுவார்த்தை.. ]

“தியா-பரிதிண்ணா கல்யாணத்துக்கு .. திருப்பதி-க்கு .. கார்-ல போனீங்களா?”

“ம்ம்”.. என்ன கேட்க வருகிறாள்? புரியவில்லை… கூடவே…. இவளுக்கு பரிதி..அண்ணா-வா ? எப்போதிருந்து இது ? , சிறுநகை அவனிடத்துள்.

“ரெண்டு மொபைலும் எடுத்துட்டு போனீங்களா?”

“ம்ம்”

” லட்டு குட்டி என்ன கண்ணுடீ உனக்கு?, மயக்கமா  நீ பாக்கும்போது யூ லுக் கார்ஜியஸ்.. உன்னை அப்படியே.. கடிச்சு சாப்பிட தோணுது. “.. இதை பதிலாய் , லதிகா அனுப்ப… பதிவினை கேட்ட பாஸ்கர் ஆதித்யா அதிர்ந்தான்.. அது அவன் குரல்..காரில் தனித்து திருப்பதி செல்லும்போது, லதிகாவுடன் பேசுவதாய் நினைத்து, இவன் தனியாய் பேசியது. இது எப்படி இவளிடம்? ஓஹ் மை காட்…? ஒரு வேளை ரெகார்ட் ஆகி இருக்குமோ? இதயம் வேகமாய் துடிக்க…. அவளை அலைபேசியில் அழைத்தான் ..

[இது போன் பேச்சு ]

‘இது என்னது?”

“உங்க மொபைல் குடைஞ்சேன் ..வாய்ஸ் ரெக்கார்டர் -ல இருந்தது.. இன்னும் கொஞ்சம் போட்டோஸ் எல்லாம் கிடைச்சது..”

“ஓஹ் .. அதுதான் திடீர் ஞானோதயமா?, இல்லன்னா பேசி இருக்க மாட்ட?”, சொன்ன ஆதித்யாவின் குரல் குற்றம் சாட்டியது

“இல்ல.. கொஞ்சம் லேட் ஆகி இருக்கும்.. ரிசப்ஷன்-ல நானா தான வந்து உங்க கூட பேசினேன்.?,சும்மா சும்மா திட்டனும்-னு காரணத்தை ரூம் போட்டு யோசிப்பீங்களோ?”

“ல்ல .. திட்டலை.. சொல்லு.. “

.” எப்படி இல்லாத ஆள் கூட, இவ்வளவு நேரம் பேசறீங்க?.. கிட்ட தட்ட மூன்ற மணி நேரம்.. நடுல அத்தனை கால்ஸ் , ஒரு முறை டீசல் போட்டீங்க .. “

இவன் பயணத்தின் போது செய்தவைகளை அடுக்கினாள் ..

“மூணரை மணி நேரமாவா ரெக்கார்ட் ஆகி இருக்கு?.. ரொம்ப வழிஞ்சிருக்கேனா?”, வெட்கத்தின் சாயல் பாஸ்கரிடம்.

“ம்ம். ரொம்ப.. கொஞ்சமா… “, சிரித்தாள்..

இருவருக்கும் ஒரு புரிதலான விடியல்..

கோபமில்லாத இவன் குரல் கேட்பதற்கே மகிழ்ச்சியாய் இருக்க… “ஹாப்பி மார்னிங்.. “, என்றாள் நிஜமான சநதோஷத்துடன் ..,

“ஆ…க .. புத்தி ஒரு வழியா தெளிஞ்சிடுச்சு ? ம்ம் ?”,

“இப்போ என்ன? போன் பண்ணி திட்ட கூப்பிட்டீங்களா?”, லதிகா கேட்க…

பாஸ்கரின் மனதிற்குள் வார்த்தைகளில் சொல்ல முடியாத நிம்மதி..ஆழ்ந்து  மூச்சு விட்டு, மென்மையாய் சிரித்தான் “ல்ல .. திட்றதுக்கு கூப்பிடலை .. பாக்கணுமே ?”, இவன் குரல் இவ்வளவு மென்மையாயும் வருமா…?

“ஏன் ?”, குரல் குழைவது இவளுக்கே தெரிந்தது..

“ம்ம்ம்.. அப்பாம்மாட்ட பேசணும். உன் சைட் ஓகே சொல்லுவாங்களா-ன்னு தெரியணும்.. உன் பிளான் என்னன்னு தெரிய.. இப்படி நிறைய … “

“அதான் எதுக்கு ன்னு கேக்கறேன் ?”, குறும்பு விளையாடியது…லதிகாவிடம்.. [வாங்கினது பத்தலையோ?]

பதிலுக்கு.. “ம்ஹூம் … நீ என்ன பேசினாலும்.. நான் உன்ன திட்றதா இல்ல… நீயா உன்ன புரிஞ்சு வரணும்-னு தான் வெயிட் பண்ணினேன்… அதான் கோபமும் கூட.. எங்க வர்ற சொல்லு “, என்று அவன் சீரியஸாய் கேட்க..

“அத்தை ஆபிஸ்க்கு வர்ரீங்களா?”

“அத்த ? ..”, ஹா ஹா ஹா ..”.இத . அம்மாட்ட சொல்லவா?”,

லதிகா பதறி.. “இல்லல்ல… வேணாம்.. முதல்ல நாம பேசலாம். நான் பத்து மணிக்குள்ள ஆபிஸ் போய்டுவேன். “

“சரி.. அங்க வர்றேன்.. பை .. “

“ம்ம்.. ஓகே .. பை …”, ஏனோ பேச்சு நிறைவுறாது தொக்கி நிற்பது தெரிய..

பாஸ்கர், “ஹனி…”.. என்றான் ஆழ்ந்த குரலில்.. ..

“ம்ம்”… [ வெறும் காத்து தான் வருது ]

“லைன்ல இருக்கியா ?”

“ம்ம் “

“ஐ லவ் யூ..”, அழுத்தமாய், அடர்த்தியாய்.. உள்ளார்ந்து ஒலித்தது பாஸ்கர் ஆதித்யாவின் குரல்…

இளம்பரிதி பேசி அவன் காதலை தியா-விற்கு புரிய வைத்தான்..

பாஸ்கர் பேசாமலேயே ..அவளை அவளாகவே உணர விலகி நின்றான்..

விழியில் விழுந்து … இதயம் நுழைந்து … உயிரில் கலந்த உறவல்லவா.. காதல் ?

++++++++++++++++++++++++++++++++++++++++++++

இன்று, தியா பணிக்கு திரும்புகிறாள்… காலை நேரம் பரபரப்பாய் இருக்க.. நல்ல வேளையாய் , சரண் சமையலுக்கு ஆள் ஏற்பாடு செய்திருந்தாள். இல்லையென்றால், இவள் பாடு திண்டாட்டமாய் இருக்கும்.. பரிதி க்கு நாளை மறு தினத்தில் இருந்து விடுப்பு முடிந்து பணி ஆரம்பம்..

இளம்பரிதி… அவனின் இடைக்கால பணி நீக்கத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர, பரிதியின், வாதங்களும் தெளிவாய் ஆதார பூர்வமாய் நிரூபிக்க பட்டதால், அவன் மீது தவறில்லை எனவும், கிழக்கு கடற்கரை சாலை (ECR) மற்றும் பழைய மஹாபலிபுரம் சாலை (OMR) இரண்டிலும் நடக்கும் இரு சக்கர & நான்கு சக்கர வாகன போட்டிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது எனவும், அதற்கு இளம்பரிதி எந்த நடவடிக்கை எடுத்தாலும், நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்தால் போதும் & இளம்பரிதின் செயல்களில் மற்ற காவல் துறை தலையீடு தேவையற்றது எனவும் .. நீதிமன்றம் தீர்ப்பளித்தது.. இது இவனை, மக்கள் “இதுதாண்டா போலீஸ்” என்று கொண்டாட வைத்தது…

ஆனாலும் திருமணத்திற்காக விடுப்பு எடுத்திருந்தால்.. அது முடிய காத்திருந்தான்.. இன்று தியாவை, மருத்துவ மனைக்கு அவன் கொண்டு விடுவதாய் ஏற்பாடு..

தியா குளித்து முடித்து, நேர்த்தியாய் கிளம்பி .. டைனிங்- ல் அமர்ந்து அவசரமாய் இரண்டு இட்லிகளை விழுங்கி… டீ.வி. யில் நியூஸ் பார்த்து கொண்டிருந்த கணவனிடம் வந்து.. “பரிதி.. டிபன் ஹாட் பாக்ஸ்-ல இருக்கு.. மங்களாத்தை [cook ], சமையல் பண்ணி வச்சிட்டு போய்டுவாங்க… நீங்க போட்டு சாப்பிடுங்க.. பால் ஃபிரிட்ஜ்-ல இருக்கு…, செவன் ஓ  க்ளாக் குள்ள வர பாக்கறேன்.. ஓகே ?”, என்றாள் ..

“எதுல போற?”

“ஏன் எப்பவும் போல கார்ல தான்..”

“இன்னிக்கு நான் கொண்டுவந்து விடறேன்.. ஒழுங்கா இன்னும் ரெண்டு இட்லியாவது சாப்பிடு.. போ உக்காரு”, போலீஸாய் மிரட்ட..

“அவ்வளவு அக்கறை இருக்கிறவர்.. தூங்க விட்டிருக்கணும். காலைல எந்திரிச்சது லேட்.. இன்னிக்குதான் லீவ் முடிச்சு போறேன்.. லேட்டாவா போறது?”

வாய் பேசினாலும், பரிதி சொன்னதை செய்தாள் ..

மெதுவாய் எழுந்து டிவி-யை நிறுத்தி.. , ‘இதுக்கு பதில் நான் பேசினா.. நீ லீவ் எக்ஸ்டென்ட் பண்ணனும் பரவால்லியா ?”, அவளருகில் வந்து சொன்னான்…

புரையேறியது தியாவிற்கு.. “தெய்வமே.. ஒன்னும் பேசாத.. செய்யறது போலீஸ் வேலை.. பண்றது பூரா பொறுக்கித்தனம் “..

“எல்லா பொண்டாட்டிகளுக்கும்.. அவங்கவங்க ” அவன் பேசி முடிக்கும்முன்.. ஒரு முழு இட்லியை அவன் வாயில் அடைத்திருந்தாள் …

“டைம் ஆச்சு வா…”

“மங்களாத்தை .. ஆபிஸ் போய்ட்டு வர்றேன் “, சமையலறை சென்று அவரிடமும் சொல்லி கிளம்பினாள்..

பைக்-இல் ஒரு பக்கமாய் உட்கார பயந்து.. பக்கத்திற்கு ஒரு காலாய் போட்டு தியா அமர, முன்னால் இருந்த பரிதியோ.. “இவ நம்மள ஒரு வழியாக்காம விட மாட்டா போல ? “, என்று பெருமூச்சுடன் நினைத்தான்… சென்னை தெருக்களில் குண்டு குழிகளுக்கா பஞ்சம்..? [பரிதி நீ நிச்சயமா பாவம் தாண்டா]

ஆனால்.. மருத்துவமனையில் இறங்கிய மனைவி.. நிச்சயமாய் அரை மணி நேரம் முன்பு விளையாட்டு பேச்சு பேசிய தியா இல்லை.. இப்போது, அவள் முகம், சீரியஸ்.. சாப்ட் .. மருத்துவருக்கே உண்டான கம்பீரம், கனிவு.. பார்த்த பரிதியை, “இவள் என்னவள்..”, என்ற கர்வம் நிறைத்தது..

சீப் டாக்டருக்கு முகமன் கூறி , இவள் வந்து விட்டதை தெரிவித்து தியா நேரே சென்றது… உள் நோயாளிகள் பிரிவில் இருக்கும் ஸ்ரத்-தை காண.. விடுப்பில் இருந்தாலுமே, அவ்வப்போது இவள் பார்க்கும் அனைத்து குழந்தைகளை பற்றியும் தியா விசாரிக்க தவறியதில்லை.. அவர்களின் உடல் நலம் குறித்த , தினசரி பதிவுகளையும் மெயிலில் கண்காணிக்க தவறியதும் இல்லை.. [ஒன்றிரண்டு நாட்களை தவிர]

அந்த சிசு-விற்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சீராய் சுவாசம் போய்க்கொண்டிருந்தது, நடுவில் ஒருமுறை.. நிமோனியா [நுரையீரல் தொற்று / அழற்சி ] வந்ததால், அதற்கான மருந்துகளும் செலுத்தப்படுகின்றது.. வேறு எவ்விதமான கோளாறுகளும் இல்லாததால்.. தற்போது சிறிது ஆசுவாசமாக இருந்தனர் நிர்மலா அப்பாராவ் தம்பதியினர்.. தியாவை பார்த்ததும் , திருமண வாழ்த்துக்களை கூறி மகிழ்ச்சியை தெரிவித்தார்கள்..

தியா மற்ற குழந்தைகளை பார்த்து வர செல்ல… அவளது அன்றாட பணி துவங்கியது…

+++++++++++++++++++++++++++++++

பொது மேலாளர் முழித்துக் கொண்டிருந்தார் .. SNP கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார்.. கேட்டது ஒரு லட்ச ரூபாய் காசோலை பற்றி.. நேற்று கோப்புகளை பார்வையிட்டதால் , இன்றே காசோலை விபரங்கள் கையெழுத்திற்காக  SNP பார்வைக்கு வந்தது…  நிறுவன வக்கீலுக்கு கொடுக்க சொன்னவனோ, இன்னொரு டைரக்டரான பாஸ்கர் ஆதித்யா..

நீதிமன்றத்தில் இருந்து வந்த அந்த நோட்டீஸையும் காணவில்லை.. அங்கே தான் இருக்கும்..என்ன ? நாளானதால் கோப்புகளின் அடியில் சென்றிருக்கும்.. ஆனால் இந்த முதலாளி புதிதல்லவா?, ஜி. எம் . மட்டுமல்ல, அனைவருக்குமே ஒரு பயம் ஓடிக்கொண்டே இருந்தது…

“அது நோட்டீஸ் விஷயம் , பாஸ்கர் சாருக்கு தெரியும், அவர் தான் வக்கீலை பாத்து பேசினார்-னு நினைக்கிறன்.. ஆனா.. அவர் பேசினது நம்ம கம்பெனி வக்கீலா ? இல்ல வேறயா-னு தெரில சார் ” , மென்று முழுங்கி ஒருவாறாய் சொல்லியே விட்டார்.. SNP முகம் கடு கடு வென இருந்தது.. பாஸ்கருக்கு தெரிந்த விஷயம், இந்நிறுவனம் சம்பந்தப்பட்டது.. தனக்கு தெரிவித்திருக்க வேண்டியவன், செய்யவில்லை.. ஆனால்,  அது குறித்து மூன்றாம் மனிதரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய நிலை…

“நீங்க போலாம் “.. சொன்னான் ஜி.எம். மிடம்…

பாஸ்கரை அலைபேசியில் தொடர்பு கொள்ள நினைக்க… அது எங்கேஜ்ட்.. [ இனி காதலியோட கடலை வறுக்கத்தான் நேரம் இருக்கும் ] ..

மகன் பிஸியாக இருக்கிறான் என்று எண்ணி, “கம் டு சிப் காட் ASAP “என்று மெசேஜ் அனுப்பினான்..

ஆம்.. SNP எண்ணியது போல பாஸ்கர் பிஸி தான்.. அவன் அம்மா அலுவலகத்தில் லதிகாவின் கன்சல்டிங் ரூமில்.. பேசிக்கொண்டிருப்பதால் பிஸிதான்… முக்கால் மணி நேரத்திற்கு மேல்.. பேசி , கடைசியாய் இவர்கள் தொடுத்த வழக்கு குறித்தும் கேட்டு அறிந்து கொண்டான்.. “அது நம்ம கம்பெனி ஹனி… ரீசென்ட்டாத்தான் வாங்கினோம்…அம்மாட்ட பேசி, கேஸ் வாபஸ் வாங்கிட சொல்லு.. “, என்று மிக சாதாரணமாய் சொல்ல…. சரண்யுசாயாவை அறிந்தவளாய் அதிர்ந்தாள்….லதிகா.. ” அது நம்ம கம்பெனியா?.. கேஸை வாபஸ் வாங்கறதா ? மேம் நிச்சயமா மாட்டாங்க “, என்று வாய் உலர கூறினாள்.

அவளின் பயம் அறிந்து… “ஹே.. இதுக்கு ஏன் பயப்படற?, அம்மாட்ட நாம் பேசறேன்… இல்லன்னா அப்பா பேசுவார்.. யு டோன்ட் ஒர்ரி ஓகே.. ? கிளம்பட்டா ?”, என்று அவளை சமாதானப் படுத்தி விடை பெற ..

“ஆ.. அதுக்குள்ள போறானா ?,லதிகாவிற்கு அனுப்ப மனமே இல்லை… “ம்ம் சரி “, பாஸ்கர் எழுந்து கதவருகில் செல்ல… லதிகாவும் பின்னே வர… சட்டென திரும்பியவனின் …. கைகளில் சிறைப்பட்டாள் .. “ஹனி.. இப்டி பாக்காத… என்னால ஒரு வேலையும் பண்ண முடியாது ப்ளீஸ்… ” ,

“ம்ம் சரி “,

“ம்ப்ச்.. என்னை பாரு..”, என்றதும் அவள் முகத்தினை நிமிர்த்த… இருவரும் காதலின் முதல் படி.. தொட்டனர்…

முத்தம்…

நான் உன்னவள் என்று பெண் கொடுக்கும் உறுதிமொழிப்பத்திரம்…

நான் உன்னை மட்டுமே கொள்ளையிடுவேன் என்ற ஆணின் சாசனம்..

மொழிவோம்….

error: Content is protected !!