KYA-23

                                                  காலம் யாவும் அன்பே 23 

கோயில் வேலைகள் வெகு மும்மரமாக நடந்துகொண்டிருந்தது. காலையில் எல்லோர் முன்னிலையிலும் எப்போதும்போல திசை குறித்துச் சொல்வதிலும் , கோபுரங்கள் எழுப்பக் கலசங்களில் நவதானியங்கள் நிரப்புவதும் போன்றவேலைகளைச் செய்தனர் வர்மாவும் சேனாவும். 
கதிரவன் மேற்கே மறைந்ததும் அனைவரும் கிளம்பிச் சென்ற பின்னர், அவர்களோடு கிளம்புவதாக பாவனைச்செய்துவிட்டு, மீண்டும் இரவில் யாருக்கும் தெரியாமல் கோவில் கற்பகிரகத்திற்கு வந்தனர். 
அங்கே ஊர் பெரியவர் அனுப்பிய ஆட்களை வைத்துக் கொண்டு, ஒரு மூலையில் , ஒரு ஆள் செல்லும்படி மட்டும் துளைபோட்டு, அடியில் பெரிய சுரங்கம் ஒன்றை குடைந்தனர். வேலைகள் தீவிரமாக நடந்தது. கோவில் கட்டுமானம் நடந்துமுடியும் சமயம் இந்தச் சுரங்கமும் யாருக்கும் தெரியாமல் அமைத்து முடிக்கவேண்டும் என்பது அவர்கள் திட்டம். 
அந்தக் கோவில் மிகவும் பெரியது என்று சொல்ல முடியாது தான் , ஆனால் ஓரளவு சற்று விசாலமாகவே இருந்தது. 
சில நாட்களிலேயே சிற்பம் , தூண்கள் போன்ற கலைப்பணிகள் முடிவிற்கு வர, அவர்களது சுரங்கமும் முடியும் நிலையில்இருந்தது. 
அடியில் தென்பட்ட பாறைகளை வைத்து படிகள் கூடச் செதுக்கிவிட்டனர். நாட்கள் மாதங்களாகி, வருடங்களும் ஆனது. 
மூலவர் சிலையை பிரதிஷ்டை செய்தாகிவிட்டது. இன்னும் இரண்டு வாரத்தில் கும்பாபிஷேகம் என்னும் நிலையில்இருக்க, சுரங்கமும் அமைத்து ஆட்கள் சென்றுவிட, 
அடுத்து தங்களின் வேலையைத் தொடங்கினர் இருவரும். 
கற்பகிரக வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் அந்தப் பக்கம் யாரும் செல்வதில்லை. மேல் வேலைகள் மட்டுமேஇருந்தது. 
அதையும் காலையில் வந்துவிட்டு மதியத்திற்குள் முடித்துவிட்டுச் சென்று கொண்டிருந்தனர். 
ரதியிடம் சொல்லிவிட்டு அன்று மாலை இருவரும் சென்றனர். சுரங்கம் வழியாகக் கீழே இறங்கி, படிகளின் கடைசியில்வந்து நிற்க, அந்த இடத்தில் கடப்பாரையும் , மண்வெட்டியும் வைத்துத் தோண்ட ஆரம்பித்தனர் . 
தங்களின் சக்தி அனைத்தும் திரட்டி ஒரு வாரம் வரை நிலத்தை அகலமாகத் தூர்வாரி பத்தடி வரை தோண்டி விட்டனர். 
அடுத்த ஒரு வாரம் இன்னும் துரிதமாக , முன்பு போல் அகலமாக இல்லாமல், ஒரு சிறு வட்டம் போட்டு கிணறு வடிவில்தோண்டினான். 
வர்மா மட்டுமே கிணற்றைத் தோண்ட, சுத்தி இருந்த இடத்தைச் சற்று காற்று வரும்படி சீரமைத்தான் சேனா. பாறைகள்நிறைந்த நிலம் என்பதால் அது ஒரு குகை போல வடிவானது. 
அடுத்தநாள் கும்பாபிஷேகம் என்னும் நிலையில், தோண்டிக் கொண்டிருந்தான் வர்மா. அவன் உழைப்பை வீணாக்காமல், பூமியிலிருந்து லேசாக நீர் கசிந்தது. 
இருவருக்கும் ஆனந்தம் பெருகியது. அந்தச் சந்தோஷத்தில் இன்னும் ஒரு அடி தோண்ட வெள்ளம் போல நீர் பெருகிவந்தது. பத்தடி ஆழத்தில் நின்றிருந்த வர்மா, நீருக்குள் இப்போது இருந்தான். அவனுக்கு நன்றாகவே நீச்சல் தெரியும். 
சேனா மேலே நின்று கொண்டு, “ சிவலிங்கம் ஏதேனும் தெரிகிறதா பார்!” என்று அவன் நீரில் மூழ்கும் முன்பு சொல்ல, 
வர்மா நீருக்குள் இருந்தானே தவிர , எப்படி சிவலிங்கம் வரும் என்று புரியவில்லை. 
‘ஒரு வேளை இன்னும் தோண்ட வேண்டுமோ என்று திணற, பக்கத்தில் இருக்கும் சுவர் போன்றவற்றை கைகளாலேதோண்ட ஆரம்பித்தான். 
அவன் கை பட்டதுமே அந்தச் பக்கச் சுவர் பாறைகளைக் காட்ட , அவனது ஐந்து விரல் பதிந்த அந்தப் பாறை ஐந்துதுவாரங்களை உருவாக்கியது. உடைந்த அந்த ஐந்து சில்லுகளையும் எடுத்து வைத்துக் கொண்டு, ‘இனி பலனில்லை’ எனமேலே நீந்த முயற்சித்தான். 
அப்போது எதிர்த் திசையில் மாயக் கதவு போலத் தோன்ற , வர்மா அதிசயத்தில் அந்தக் கதவினைத் தொட, தொட்டமாத்திரத்தில் உள்ளிருந்து பிளந்து கொண்டு வெளிப்பட்டது சிவலிங்கம். 
மனமெல்லாம் நடுங்க, அந்த நீருக்குள் நிற்கையிலும் அவனுக்குக் கண்ணீர் வந்தது. வெளிப்பட்ட சிவலிங்கம் மிதந்துமேலே சென்றது. 
எப்போதும் கல் நீருக்கடியில் செல்வது தான் வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக, லிங்கம் மிதந்தது. 
மேலே ஓரளவு சேனா நின்ற இடத்தில் அந்தக் கிணற்றில் வாயில் இருக்க, சரியாக அங்கே மிதந்தது லிங்கம். 
கையெடுத்து வணங்கியபடி  இருந்த சேனா , அங்கேயே விழுந்து கும்பிட்டான். 
திகைப்பில் இருந்த வர்மாவும், மெல்ல நீந்தி மேலே வர, இருவரும் தங்கள் ஆனந்தத்தை ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து அடக்கிக் கொண்டனர். 
நீரில் மிதக்கும் சிவலிங்கம் ஒரு நிலை பெற, அடியில் வட்டமாக அமைந்த பாறை ஒன்றை வைத்து சமன்படுத்தினான்சேனா. 
அது தங்களை ஈர்ப்பதை நன்றாகவே உணர்ந்தனர். அந்தச் சிறிய இடத்தில் காந்தப் புலன்கள் அதிகமாக இருந்தது. 
எப்போதுமே ஒரு கோவிலின் கற்பகிரகத்தில் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும். அது தான் ஒரு மனிதன் கோவிலுக்குச்சென்று கடவுளை வணங்கும் போது அவனது கவனம் முழுதும் அங்கேயே குவிந்து மன அமைதி கிடைக்கிறது. 
இப்போது அந்தத் தாக்கம் கற்பகிரகத்திற்கு கீழே இருக்கும் இந்தக் குகையிலும் அபாரமாக இருந்தது. நீரிலிருந்து எழுந்தஅந்த லிங்கத்திடமிருந்து கண்ணுக்குத் தெரியாத அலைகள் பாய்வதை அந்தச் சிறிய இடத்தில் நன்றாக உணர முடிந்தது. 
“நினைத்தது போலவே சிவலிங்கம் தோன்றிவிட்டது. இனி அடுத்து ..?” வர்மா காரியத்தில் கண்ணாய் இருக்க, 
சேனா , “பரஞ்சோதி சித்தரை மனதில் நினைத்துக்கொள் இந்திரா. நாம் அடுத்துச் செய்ய வேண்டியதை அவர் தான்கூறவேண்டும்.” என ஞாபகப் படுத்தினான். 
“ஆமாம் சேனா. இனி நம்முடைய ஆராய்ச்சி தான் நடைபெற வேண்டும்.” அவனையும் சேர்த்துக் கொண்டு சொல்ல, 
சேனா வின் முகம் ஏனோ அசௌரியமாக இருந்தது. 
“ இந்திரா…” தயங்கியபடி அவன் நிற்க, 
“ என்ன நண்பா.. ஆர்வமாகச் செயல்படவேண்டிய நேரத்தில் இப்படிச் சோர்ந்து இருக்கிறாயே!” அவன் தோளைத் தொட, 
“உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும். அது தான் யோசிக்கிறேன்” வர்மாவின் முகத்தைப் பார்த்து தயங்க, 
“ நீ எது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் என்னிடம் எப்போது வேண்டுமானாலும் கூறலாம். உனக்கு என் மீதுஎல்லா உரிமையும் உண்டு நண்பா” நண்பனின் தயக்கத்தை வர்மா விரும்பவில்லை. 
“ நான் இந்த உலகத்தை விட்டு வேறு உலகம் வருவதாக இல்லை இந்திரா. உன்னுடைய ஆராய்ச்சியில் நீ வெற்றி பெறவேண்டும். நான் அதற்கு ஒரு கருவியாக உனக்கு உதவுவேன். எனக்கு உன் அளவு இதில் ஆர்வமில்லை நண்பா. இப்போதுபரஞ்சோதி சித்தர் உன்னிடம்  வழி கூறினால் நீ மட்டும் சென்று அந்த மற்றொரு உலகத்தைப் பார்க்க வேண்டும் என்றுநான் விரும்புகிறேன். நான் இவரிடம் சிஷ்யனாகவே விரும்புகிறேன். என்னுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு நீஇதற்குச் சம்மதிப்பாய் என்று நம்புகிறேன்” அவன் மனதில் அரித்துக் கொண்டிருந்ததை சொல்லிவிட்டு நண்பனைப்பார்க்க, 
அவனுக்கும் சேனாவை அதற்குமேல் என்ன சொல்லி தன்னுடன் நிறுத்திக் கொள்வது என்று விளங்கவில்லை. வர்மாஅதை விரும்பவுமில்லை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு எப்போதும் மதிப்புக் கொடுக்கவேண்டும் என நினைப்பவன் அவன். 
நண்பன் இந்த விஷயத்தில் தன்னுடன் இல்லை என்பதை தனக்குள்ளேயே ஜீரணித்துக் கொண்டான். 
“ சரி நண்பா. உன் விருப்பப்படி செய். அதில் எனக்கும் சந்தோஷம் தான். முழு மனதுடன் சொல்கிறேன்” என அவனது சிறுஉறுத்தலையும் தன் வார்த்தைகள் மூலம் போக்கினான். 
இருவரும் பார்த்து சிரித்துக் கொண்டு, கண்களை மூடி மனதால் பரஞ்சோதி சித்தரை அணுகினர். 
அவர் மீண்டும் கழுகின் நிழல் வடிவம் கொண்டு, அந்த இடத்தை அடைந்தார். 
திடீரென நிழல் மட்டும் அங்கே எப்படி வந்தது என இருவரும் ஆச்சரியம் அடைந்தனர். 
ஆனால் சித்தர்களுக்கு இது பெரிய விஷயம் அல்ல . எங்கேயும் எப்போதும் எந்த உருவம் கொண்டும் அவர்களால் வரமுடியும். 
வந்தவர் நிழலிலிருந்து தன் உருவத்திற்கு வந்தார். 
புதிதாக நீரிலிருந்து வெளிப்பட்டிருக்கும் சிவலிங்கம் அவரது கண்களுக்குள் ஜொலித்தது
அதை வணங்கியவர், குகை வடிவில் இருக்கும் அந்த இடத்தையும் , சில்லென இருக்கும் அந்த நீரினையும் கண்டுமகிழ்ச்சியுற்றார். 
“ உனக்கு ஏற்ற இடம்! நீ விரும்பிய சூழல்!” எனச் சிவலிங்கத்திடம் பேசினார். 
அந்த இடம் தூர் வாரப்பட்டதில் நிறைய நிலத்தடி மண் அங்கே குவிந்து கிடந்தது. அதை தன் கைகளில் அள்ளியவர், 
கண்மூடி மந்திரங்கள் கூறி உருவேற்றினார். அதை அந்தச் சிவலிங்கத்தின் மேல் அபிஷேகமாகத் தூவ, அது அனைத்தும்திருநீறாக மாறியது. 
இவை அனைத்தையும் கண்ட சேனா தானும் இவ்வாறு ஆகவேண்டும் என குறித்துக் கொண்டான். 
லிங்கத்திற்குப் பூஜை செய்தவர், நண்பர்கள் இருவரையும் பார்த்தார். 
வர்மாவின் மனதில் எப்போது தனக்கு வழி சொல்வார் என்ற நினைப்பு ஓடிக்கொண்டிருந்தது. சேனாவின் மனதில்வெறுமை மட்டுமே இருந்தது. 
சேனாவை முதலில் அழைத்து அவனை தன் முன்னே அமரச் சொன்னார். 
“இந்த நொடி முதல் நீ என்னுடைய சீடன். என்னைப் போல் நீயும் விரைவில் மாறுவாய்!” என்று அவனுக்கு ஆசி கூறினார். 
அடுத்து வர்மாவை அழைத்தார். நிறைய எதிர்பார்ப்புகளுடன் அவர் முன்னே வந்து நின்றவனை, 
“மகனே! நான் உனக்கு வேறு உலகிற்கு வழி சொல்லும் முன்பு , அதனால் விளையப்போகும் சில இன்னல்களையும்உன்னிடம் கூறவேண்டும்.” பெரும் குழப்பத்தை முன் வைத்தார். 
வர்மா ‘என்னவாக இருக்கும்’ என யோசித்தபடி, 
“ சொல்லுங்கள் ஐயா!” என்க, 
“ நீ நினைப்பது போல, இந்தப் பிரபஞ்சம் மிகவும் விசாலமானது. இந்தப் பூமி என்னும் கோள் போல எண்ணற்ற பூமிகள்இங்கே கொட்டிக்கிடக்கின்றது. அது தான் நிஜம். 
ஆனால் அவற்றை நம் மனித இனத்தின் அறிவிற்கு அப்பாற்பட்டவை. உன்னில் இருக்கும் இந்த அறிவாற்றல் தான்உன்னை இந்த அளவு சிந்திக்க வைத்திருக்கிறது. 
அதனால் அதற்கு மதிப்புக் கொடுத்து உனக்கு நான் உதவுகிறேன்.” வர்மாவின் கையில் அந்த ஸ்படிக லிங்கத்தைக்கொடுத்தார். 
“இது உன்னுடைய முன்னோர்கள், அதாவது என் சந்ததிகள் அனைவரும் வழிப்பட்ட சக்தி லிங்கம். இது உனக்கு எல்லாக்காலங்களிலும் உதவியாக இருக்கும். இதை உன்னைவிட்டு எப்போதும் விலக்காதே! இது தான் உனக்கு நான் சொல்லும்முதல் விதி.இது உன்னுடன் இருப்பது, மறைந்த உன் முன்னோர் அனைவரும் உனக்குத் துணையாக இருப்பதற்குச் சமம். 
அவர்கள் சேர்த்த அனைத்துப் புண்ணியமும் உன்னை வந்தடையும்.” கண்ணைமூடி அவனுக்கு அருள் செய்தார். 
“ ஐயா! நான் எப்போதும் இது என்னை விட்டு விலக்காமல் பார்த்துக்கொள்வேன். ஒருவேளை என்னையும் அறியாமல் இதுஎன்னிடமிருந்து தொலைந்துவிட்டால் ….?” சந்தேகத்தை முழுவதும் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்றே கேட்டான். 
லேசாகச் சிரித்தவர், “ அப்படி ஒன்று நடந்தால் … நன்றாகக் கேள். இந்த உலகத்தில் நீ இருக்கும் போது உன்னிடமிருந்துஇது தொலைந்து விட்டால், நீ உன் ஆராய்ச்சியைத் தொடர முடியாது. அதாவது ஏடுகளில் மட்டுமே உன் ஆராய்ச்சிதொடரும். அதை செயல்படுத்திப் பார்க்க ஒருக்காலும் முடியாது. இது இந்த உலகிற்கும் உனக்கும் இருக்கும் பந்தம்என்றே வைத்துக்கொள். இந்த உலகோடு நீ ஒன்றிவிட வேண்டும். 
அடுத்து, நான் உனக்கு வழி சொல்லி..நீ வேறு உலகத்திற்கு நீ சென்ற பிறகு லிங்கம் உன்னை விட்டுப் போனால், நீ அந்தஉலகத்திலேயே தங்கும்படி ஆகிவிடும். மீண்டும் இந்த உலகத்திற்கு உன்னால் வர இயலாது. ஒரு ஜன்னலின் வழியேநின்று எட்டிப்பார்ப்பது போலத் தான், உன்னால் அந்த உலகத்திலிருந்து இந்த உலகைக் காண முடியும்.” 
அவர் குரலும், அவர் சொன்ன விஷயங்களும் வர்மாவின் ஈரக்குலையை நடுங்க வைத்தது. 
‘அப்படி ஒன்று நடந்தால், அங்கேயே சிறை இருப்பது போல் அல்லவா !?’ 
‘மீண்டும் இங்கு வருவது எப்போது?’ 
‘அதன் பின்பு பாகீரதி…….!!!?’ அவன் எண்ணம் அத்தோடு நின்று போனது. 
கண்களின் பயம், மனதில் தன் உயிருக்கு உயிரான ரதியைப் பிரிந்த ஒரு வாழ்வு நிழலாட, அவனால் கற்பனை கூடச்செய்ய முடியவில்லை. 
ஸ்தம்பித்து நிற்பவனைக் கண்டவர், 
“இதையெல்லாம் தாண்டி இன்னொரு விபரீதம் உள்ளது. நீ இந்த உலகிலிருந்து வேறு உலகம் செல்லும் பாதை என்று ஒருகட்டம் ஒன்று உள்ளது. அங்கே நீ இந்தச் சிவலிங்கத்தை தொலைத்தால்….” 
அவர் சொல்லாமல் நிறுத்த, 
“தொலைத்தால்…?!!!!” 
“ திரிசங்குவின் சொர்க்கம் தெரியுமா… அந்த நிலைதான் உனக்கும்!” உணர்ச்சிகளின்றி கூற, 
“அதாவது அந்த உலகிலும் இல்லாமல் இந்த உலகிலும் இல்லாமல் காலங்களுக்கு இடையே , யுகங்களுக்கு இடையேசிக்கிக்கொண்ட நிலை. அந்தச் சிவலிங்கம் மீண்டும் உன்னை வந்து சேரும் வரை நீ இங்கு வர இயலாது.” பெரும்குண்டை அவன் தலை மேல் இறக்கினார். 
அவன் வாய் பேச மறந்து நின்றான். 
“ இந்த லிங்கம் ஒரு வழிகாட்டி. இது இல்லையென்றால் நீ வழி மறந்தவன்.” 
வர்மா தலைசுற்றி விழாத குறையாக நின்றான். 

சேனாவோ எது தன் நண்பன் முடிவு செய்தாலும் அந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்துநின்றிருந்தான். 

 

திருநீற்றுப் பதிகம் 

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல்சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே

வேதத்தால் போற்றப் படுகின்ற பெருமையுடையது திருநீறு. உலக வாழ்க்கையில், ஏற்படும் பிணிகளையும், மனதால் ஏற்படும் துயரங்களையும், தீர்ப்பது திருநீறு ஆகும். நல்லறிவு தருவதும், அறியாமை மற்றும் பழி முதலியவற்றால் நேரும் புன்மைகளை அகற்றுவதும் திருநீறு ஆகும். திருநீற்றின் செம்மை, ஓதத் தகுந்த பெருமையுடையதும், உண்மைப் பொருளாய் எக்காலத்திலும் விளங்குவதாகும். இது திருவாலவாய் அண்ணலாக விளங்கும் ஈசனுக்கு உரிய திருநீறு.