IM 16

அவள் பேச்சில் கலவரமாப் போனான் விவேக்.

“மயூரி முதலில் இதுவரை நடந்த எல்லா விஷயத்துக்கும் நான் மன்னிப்பு கேட்கணும்! எனக்கு உன் மேல் சந்தேகம் இல்லை மா. ஆனா நான் பேசிய வார்த்தைகள் அதிகப்படி. அதை உணர்ந்துகிட்டேன், அதுக்காக உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்! ஐயம் சாரி மயூரி”

‘சாரியா! அதை நீயே வச்சிக்கோ டா’

“மன்னிச்சிட்டேன் இப்ப கிளம்புங்க. எனக்கு இப்ப உங்க கிட்ட பேச நேரமில்லை”

“மயூரி, நீ என்னை இன்னும் நம்பலை அப்படிதானே? நான் சொல்றது நிஜம், என்னை நம்பித் தான் ஆகணும் நீ. ப்ளீஸ் மயூரி!”

பதில் சொல்லாமல் நின்றிருந்தாள்.

“அப்போ இவ்வளவு நாள் நாம பழகுனதுக்கெல்லாம் என்ன அர்த்தம் மயூரி”

“என்ன அர்த்தம்?”

அவள் கைகளை பற்ற முயன்றான், அவள் பிடி கொடுக்கவில்லை.

“மயூரி எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் அதனால் வந்த உரிமை. என்னால அப்ப அதுக்கு எதுவும் செய்ய முடியலை. உன் வருங்கால புருஷனா ஒரு சராசரி ஆணா, நீ எனக்கு மட்டும் தான் முக்கியத்துவம் தரணும்னு நினைச்சது ஒரு தப்பா? நீயே சொல்லு”

“உங்களுக்கு எல்லாமே அவ்ளோ ஈசியா போயிடுச்சு இல்ல விவேக். உங்களை சொல்லி குற்றமில்லை, நீங்க இழுத்த இழுப்புக்கு எல்லாம் உங்களை பெத்தவங்களும் உங்களை சுற்றி இருப்பவங்களும் வளைஞ்சி கொடுத்து இப்படி ஆக்கிட்டாங்க!”

இடைவிடாமல் தொடர்ந்தாள்.

“உங்களுக்கு மனைவி ஆக போற ஒரு பொண்ணுகிட்ட உரிமை இருக்கலாம் தப்பில்லை, ஆனா உரிமை போராட்டம் ரொம்ப பெரிய தப்பு விவேக். அதுக்கு நான் ஆள் இல்லை. நல்லவேளை கல்யாணத்துக்கு முன்னமே எனக்கு, இல்லை நமக்கு, ஒத்து வராதுன்னு தெரிய வந்தது. இல்லைன்ன காலம் முழுக்க நாம இரண்டு பேரும் இதுக்காக போராடியிருக்கணும். அதுவுமில்லாம உங்க ஒருத்தருக்காக என்னைக்கும் விஷ்ணுவை என்னால விட்டு கொடுக்க முடியாது விவேக்”

“நீ சொல்றதை ஏத்துக்குறேன் மயூரி. நான் மாறியிருக்கேன்னு உனக்கு புரிய வைக்க எனக்கு கொஞ்சம் டைம் கொடு, அதுக்குள்ள இப்படி அவசரமா வேற முடிவுகளுக்கு போகாதே. அம்மா அப்பா கிட்ட நான் வேணா பேசி பார்க்குறேன், அது தப்பில்லை மயூரி!”

“தப்பேயில்லை, யெஸ் அது உங்களை பொறுத்தவரை மட்டும். அவங்க சொந்த மகளை போல் என்னை வளர்த்தவங்களை இன்னமும் சங்கடப்படுத்த என்னால முடியாது. நீங்க எப்போ ‘நார்மல்’னு ஃபீல் பண்றீங்களோ அப்போ உங்களுக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சிகோங்க விவேக் அத்தான். இப்ப கொஞ்சம் வழி விடுறீங்களா, நான் போகணும்”

அவனை அங்கேயே, அப்படியே திகைப்பில் விட்டுவிட்டு கதவை திறந்து கொண்டு போய்விட்டாள்.

விவேக்கின் மனம் சுக்குநூறாய் உடைந்திருந்தது. கடைசியாய் பேசிப்பார்க்கலாம் என்று நினைத்தால், எப்படியெல்லாம் தன்னை சொல்லிவிட்டாள். அதில் சிலது மனதை தைத்தது. அவனை அதே யோசனையில் தொடர விட அமுதாவுக்கு விருப்பமில்லை போலும்.

“விவேக் விவேக், கதவை பூட்டிக்கோ பா”

அவரிடம் வந்தவன்,

“தம்பிக்கு கல்யாணமா மா? எப்போ? இன்னிக்கா?”

அவர் எதற்கும் பதில் சொல்லவில்லை. அதை விட கொடுமை அவனை சட்டை கூட செய்யாமல் தன் காரியத்தில் கவனமாயிருந்தார். அவனையும் அவரையும் தவிர அந்த வீடு காலியாக இருந்தது.

“என் கூட பிறந்தவன் அவன் கல்யாணத்துக்கு என்னை கூப்பிட மாட்டீங்களா மா?”

மகனின் கண்கள் அவன் சோகத்தை அந்த தாய்க்கு புரிய வைத்தது.

“ஒரே குடும்பத்துக்குள்ள யாரவது ஒருத்தருக்கு ஒருத்தர் அழைப்பிதழ் வைப்பாங்களா டா? என்னை என்ன அவனா அழைச்சான்! நாமளா போக வேண்டியது தான். விவேக் எனக்கு நேரம் கடக்குது, அப்புறம் பேசலாமா?”

அவனுடனான உரையாடலை வெட்டி விட்டவர்,

“வள்ளி என்ன மா இன்னும் தயாராகலையா! நீ அந்த செயினை எடுக்கப் போய் அரைமணிநேரம் ஆச்சு!”

அவளுக்கு குரல் கொடுத்தபடி வெளியே வந்த நேரத்தில் விஷ்ணுவும் கனகவேலும் காரை தயார் நிலையில் வைத்திருந்தனர். கைகடிகாரத்தை பார்த்து பதறியபடி அதில் போய் ஏறினார் அமுதா!

“அம்மா அந்த மாலை எடுத்தியா…” என்ற விஷ்ணுவிடம்,

“எதையும் எடுக்காம வசதியா வந்து காரில் உட்கார்ந்திரு நீ”

வீட்டினுள் குரல் கொடுத்தார்,

“வள்ளி அந்த மாலை கவரை பூஜை அறையிலிருந்து எடுத்திட்டு வந்திடு”

“சரி அத்தை” பதில் தந்தவள்,

விவேக்கின் பார்வை தன்னை தொடர்வதை உணர்ந்தாலும், நிமிர்ந்து அவனை பார்க்காமல் அந்த கல்யாண மாலையுடன் சென்று காரில் ஏறினாள்.

‘மயூரி ப்ளீஸ் என் கிட்ட திரும்ப வந்திடு’ அழுதது விவேக்கின் மனம்.

“மா மயூரி இங்க இருக்க வேண்டாம்! நம்ம வீட்டில் என்னையும் விஷ்ணுவையும் தவிர யாரும் இருக்க வேண்டாம்!”

டீனேஜ் வயதிலிருந்த் விவேக் தன் அன்னையிடம் வழக்கம் போல் போராடிக் கொண்டிருந்தான்.

அவன் கணீர் குரல் வீட்டின் எந்த மூளைக்கும் கேட்கும்! மயூரிக்கும் துல்லியமாய் கேட்டது.

“விவேக் அப்படியெல்லாம் சொல்லாதே. அவளுக்கு கேட்டிட போகுது!”

அமுதா மகனை அடக்க முயன்று தோற்று போனார்.

“அவளுக்கு சொந்தகாரங்க இல்ல? நம்ம வீட்டில் ஏன் மா இருக்கணும்! ஸ்கூல் பசங்க எல்லாம் அவளை வச்சி என்னை ரொம்ப கிண்டலடிக்கிறாங்க!”

தாய் மகன் இருவருக்கும் பெரிய சச்சரவாகி,

“விவேக் இது அப்பா எடுத்த முடிவு, நாம அவர் பேச்சை கேட்டுத் தான் ஆகணும். உன்னால ஏத்துக்க முடிஞ்சா இரு, இல்லை ஹாஸ்டல் பார்த்து போயிடு! இன்னும் ஏதாவது ஜாஸ்தி பேசின அப்பாட்ட சொல்லிடுவேன்” அமுதாவின் கடைசி வாக்கியத்தின் பின் தான் அடங்கியிருக்கிறான்.

அன்று மயூரி அழுத அழுகை இன்னமும் அடிக்கடி அவளுக்கு நினைவில் வந்திருக்கிறது. ஏதோ ஒரு அறையின் மூளையில் இருட்டில் அமர்ந்து அந்த சின்ன பெண் சத்தமின்றி அழுதுக் கொண்டிருந்ததை பார்த்து தவித்து போனார் அமுதா.

“வள்ளி, என் தங்கமில்ல, அழாதே ராஜாத்தி. விவேக் பேசினது கேட்டிருச்சா!”

ஆம் என்பதாய் தலையசைத்தாள். “அவனும் சின்ன பையன் தானே, அதான் புரியாம நிறைய பேசிடுறான். அதையெல்லாம் நீ மனசில் வச்சிக்காதே. நீ எங்கேயும் போக வேண்டாம், எங்க கூடத் தான் இருப்பே! இதுக்கெல்லாம் கலங்க கூடாது வள்ளி மா”

அவரும் அவளருகில் அமர்ந்து அந்த சின்ன பெண்ணை மடி சாய்த்து அவள் மனநிலையை சரிசெய்யும் பொருட்டு பழைய கதைகள் எல்லாம் பேசி சிரிக்க வைத்திருக்கிறார். மயூரிக்கு அன்று ஆரம்பித்து இன்று வரையிலுமே அமுதா அத்தை ஸ்பெஷல் தான்.

அதே நினைவில், காரில் தன் பக்கமிருந்த அமுதா அத்தையின் கைகளை ஆதரவாய் பிடித்துக் கொண்டாள். மயூரவள்ளியின் செய்கையில் அவள் கண்களை நேராக சந்தித்தவர்,

‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்றார்.

பட்டுவேஷ்டியும், அடர்ந்த் பச்சை நிற சட்டையிலும் கல்யாண மாப்பிள்ளைக்கு உண்டான எல்லா களையுடன் அன்று இருந்தான் விஷ்ணு. அவனை அடிக்கடி தன் பார்வையால் அளந்துக் கொண்டிருந்த மயூரியை இவனும் பார்த்து புன்னகைத்தான்.

தனக்காக அவன் எடுத்த இந்த அதிரடி முடிவை கண்டு பெருமையாக உணர்ந்தாள் அவள்.

அவர்கள் நின்று கொண்டிருந்தது ‘ரெஜிஸ்ட்ரார்’ அலுவலகம். போனில் யாரிடமோ காரசாரமாய் பேசிக் கொண்டிருந்த விஷ்ணு இவர்கள் புறம் வந்து,

“அம்மா, ஒரு பெரிய தப்பு நடந்து போச்சு. என் பிரண்ட் அவசரமா ஊருக்கு போகணுமாம், சாட்சி போட இப்ப இங்க வர முடியாதாம். நீ என்ன செய்றே அண்ணனுக்கு போன் செஞ்சி அவன் ஆதார் கார்டோட இங்க வர சொல்றே!”

ஏதோ எளிய காரியத்தை சொல்வது போல் சாதாரணமாய் தன் தாயிடம் சொன்னான் விஷ்ணு.

“கொஞ்சமாவது உனக்கு அறிவிருக்கா டா! அவனே ஏற்கனவே நொந்து போய் இருப்பான், மேல மேல அவனை டார்சர் செஞ்சிகிட்டு இருக்கணுமா! வேற யாரையும் கூப்பிடலாமே”

“இந்த கட்டத்தில் நான் யாரை போய் மா இப்ப தேடுவேன். சொல்றதை மட்டும் தயவுசெய்து செய் அமுதா!”

“வேற வழியே இல்லையா!”

இல்லை என்பதாக தலையசைத்த இளையவனை முறைத்தபடி வேறு வழியில்லாமல் தன் தலைமகனுக்கு போன் செய்தார் அமுதா.

அமுதா போனில் விஷயத்தை சொல்ல,

“அம்மா என்னால அங்க வர முடியாது மா! என்னை மென்மேல கொடுமை படுத்தாதீங்க ப்ளீஸ்.”

விவேக்கின் குரல் இடறியது! அந்த தாய் மனசுக்கு அது வலியை உண்டாக்கியது.

“இப்ப வேற வழியில்லை விவேக். இதைமட்டும் கொஞ்சம் செஞ்சி கொடுத்திரு பா”

மேலே பேசாமல் போனை வைத்தார்.

விவேக் தன் விதியை நிரம்பவும் நொந்து கொண்டான். நடக்க போவதெல்லாம் அவன் கண் பார்வையில் படாமல் இருக்கும் போதே கொடுமையாய் இருக்க, அதை நேரில் சென்று வேறு பார்த்தால் தன் நிலை என்னவாகும்!

‘முடியவே முடியாது’

முடிவெடுத்தவன் அதற்கு மாறாக எப்போது தயாராகி, எப்போது தன் வண்டியை கிளப்பினான் என்பது அவனுக்கே தெரியவில்லை.

கடைசி நிமிடம் கூட ஏதாவது நடக்கலாம் என்ற நப்பாசையில் அவர்கள் அழைத்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தான் விவேக்.

“அவன் வரானாம், நீ ஆக வேண்டிய மத்த காரியத்தை ஆரம்பி விஷ்ணு!”

அமுதா சொன்னதையடுத்து காரியங்கள் விரைவாக்கப்பட்டன.

பதட்டம், ஆர்வம், சங்கடம் எல்லாம் ஒரே நேரத்தில் அவனை ஆட்கொண்டிருக்க, சரியாய் விவேக் அந்த அலுவலகத்தில் நுழைந்த நேரம் விஷ்ணு தாலியை மணப்பெண்ணின் கழுத்தில் கட்டிக் கொண்டிருந்தான். ஏதாவது அதிசயம் நடக்காத என்று வந்த விவேக் உடைந்து போனான்.சுற்றியிருந்த ஆட்களின் கூட்ட நெரிசலில் மயூரியின் முகம் அவனுக்கு தெரியவில்லை.

‘எல்லாம் முடிந்து போனது’

சட்டென்று கலங்கிவிட்ட தன் கண்களை துடைத்துக் கொண்டவன் அந்த திருமண தம்பதிகளை நிமிர்ந்து பார்க்க, விஷ்ணுவின் அருகில் மணப்பெண்ணாய் நின்றிருந்தது மயூரி இல்லை.

அந்த காட்சியில் விவேக் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. குடும்பமாய் சேர்ந்து தன்னை ஏமாற்றி இருக்கிறார்கள். கண்கள் நாலாபுறமும் சுழன்று மயூரியை தேட கூட்டத்திலிருந்து தனியே விலகி சுவற்றில் சாய்வாய் நின்றிருந்தவள் இவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்து புன்னகைத்தான்!

“சாட்சி யார் போடுறா? இந்த பக்கம் வாங்க!”

அவளிடமிருந்து பார்வையை விலக்காதவன் தன்னை அழைத்த இடத்துக்கு செல்ல,

“விவேக், மாப்பிள்ளை சாட்சி, இங்க கையெழுத்து போடுங்க”

அந்த கிளார்க் சொன்னபடி செய்தான்.

“ராஜி, கல்யாண பொண்ணுக்கு சாட்சி யாரும்மா? மயூரவள்ளியா, நல்ல பெயர் இங்க உங்க கையெழுத்தை போடுங்க!”

அப்படியே பக்கத்திலிருந்த விவேக் மயூரியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் வலது கை விரலில் அவன் அணிவித்திருந்த தங்க மோதிரம் ‘விவேக்’ என்ற தன் பெயரை தாங்கி அழகாய் காட்சியளித்தது.