Oviyam05

கருணாகரன் டெல்லி போய் விட்டதால் அம்மாவும் பிள்ளைகளும் இரவு உணவிற்காக டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார்கள். மூவரின் உள்ளமும் வேறு வேறு பாதைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன.
கற்பகம் தன் முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார். பிள்ளைகள் சாப்பிடும் போது எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்தவர் அவர்கள் பசியாறும் வரை பேச்சையும் ஆறப் போட்டிருந்தார்.
“அர்ச்சனா…”
“அம்மா!” காலையிலிருந்து தன்னை முறைத்துக் கொண்டே இருந்த அம்மா இப்போது பேசவும் துள்ளிக்கொண்டு பதில் சொன்னாள் இளையவள்.
“இன்னைக்குக் காலையில அம்மா அண்ணாவோட கல்யாணம் பத்திப் பேசினேன் இல்லை?”
“ஆமா…”
“அதைப்பத்தி நீ என்ன நினைக்குறே?”
“சூப்பர்மா… எத்தனை நாளா நானும் அண்ணாவைக் கேட்டுக்கிட்டே இருக்கேன். கல்யாணம்னா ஜாலிதான் இல்லையா?” தங்கை குதூகலித்த போதும் செழியன் அமைதியாகவே இருந்தான். மனம் குழம்பிக் கிடந்தது.
“ம்… ரொம்ப நாளாவே நானும் உங்கண்ணாவைக் கேட்டுக்கிட்டுத்தான் இருக்கேன். ஆனா… இப்போதான் செழியன் பிடி குடுத்திருக்கான்.” அம்மாவின் பேச்சில் பிள்ளைகள் இருவரும் கொஞ்சம் திகைத்துப் போனார்கள்.
“அம்மா! நிஜமாவா சொல்றீங்க? அண்ணா சம்மதம் சொல்லிடுச்சா? பொண்ணு யாரு?” விட்டால் குதித்துவிடுவாள் போல ஆர்ப்பாட்டம் பண்ணினாள் அர்ச்சனா. செழியன் அம்மாவை விசித்திரமாகப் பார்த்தான். ஏனென்றால் இதுவரை அவன் எந்த உறுதி மொழியும் அம்மாவிடம் சொல்லி இருக்கவில்லை.
“ஒரு வரன் வந்திருக்கு அர்ச்சனா. நம்ம சந்திரமோகன் அங்கிள் தான் கொண்டு வந்திருக்காங்க. நானும் அங்கிளும் இன்னைக்கு ஒரு நடை போய்ப் பார்த்துட்டு வந்தோம். அப்பாக்கிட்டயும் பேசினேன். நமக்கெல்லாம் பிடிச்சா அவருக்கும் ஓகே தான்.”
“அப்படியா? என்னையும் கூட்டிக்கிட்டுப் போயிருக்கலாம் இல்லைம்மா… நானும் அண்ணியைப் பார்த்திருப்பேன் இல்லை?” குறைப்பட்ட மகளைத் தீர்க்கமாகப் பார்த்தார் கற்பகம். அம்மாவின் பார்வை மகளுக்கு அத்தனை நல்லதாகப் படவில்லை.
“நீ எனக்கு முன்னாடியே பொண்ணைப் பார்த்திட்டியே அர்ச்சனா?”
“அம்மா! என்ன சொல்லுறீங்க நீங்க? எனக்குத் தெரிஞ்ச பொண்ணாம்மா? யாரது? எங்க காலேஜ் பொண்ணா?”
“உங்க காலேஜ் பொண்ணு இல்லை. ஆனா இன்னைக்கு உங்க காலேஜுக்கு வந்த பொண்ணு.”
“அது யாரு?”
“மாதவி.”
“மாதவியா… அது யாரு? அவங்க இன்னைக்கு எங்க காலேஜு…” அர்ச்சனாவிற்கு இப்போது வார்த்தைகள் லேசாகத் தந்தி அடித்தன. அந்த அருண் இன்று அந்தப் பெயரைச் சொல்லி யாரையோ அழைத்தது அப்போதுதான் அவளுக்கு மெலிதாக ஞாபகம் வந்தது.
“அம்…மா…”
“இன்னைக்கு ஒரு பொண்ணைப் பத்தி வாய்க்கு வந்த மாதிரிப் பேசினியில்லை. அந்தப் பொண்ணு பேரு தான் மாதவி. நான் ஆசையாசையா உங்கண்ணாக்குப் பார்த்திருக்கிற பொண்ணு. சொல்லு… இப்போ நான் என்னப் பண்ணட்டும்?” தன்னை அறியாமலேயே நாற்காலியை விட்டு எழுந்து விட்டாள் அர்ச்சனா. கண்கள் நிலைகுத்திப் போனது.
“உக்காரு அர்ச்சனா!”
“அம்மா!”
“அம்மா தான் சொல்லுறேன் உக்காரு.” கறாராக வந்தது கற்பகத்தின் குரல்.
“அம்மா… விடுங்க.” இப்போதுதான் வாயைத் திறந்தான் இளஞ்செழியன்.
“அப்படியெல்லாம் பொண்ணுங்களைப் பேச விடக்கூடாது செழியா. நாளைக்குப் போற இடத்துலயும் இப்படித்தான் பேசச் சொல்லும். இதுல டாக்டர் எங்கிற திமிரு வேற.”
“அம்மா… ப்ளீஸ் விடுங்க. ஏதோ தெரியாமப் பண்ணிட்டா. இனிமேல் இப்படியெல்லாம் பண்ணமாட்டா.” இது செழியன்.
“பொண்ணாடீ நீ? நான் தெரியாமத்தான் கேக்குறேன்… யாரு உனக்கு இப்படியெல்லாம் பேசக் கத்துக் குடுத்தா? ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணைப் பார்த்துப் பேசுற பேச்சா இது? உன்னைச் சொல்லக் கூடாது அர்ச்சனா. உங்கூடத் திரியுதுங்களே… அதுங்களைச் சொல்லணும். அதுலயும் உங்கண்ணனையே சைட் அடிக்குமே ஒன்னு. அவகூட இனிமே உன்னை நான் பார்த்தேன்… அப்போத் தெரியும் உனக்கு அம்மா யாருன்னு.” அம்மாவின் மிரட்டலில் அர்ச்சனா ஆடிப்போனாள்.
“உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்துச் சொல்லுறேன், நல்லாக் கேட்டுக்கோங்க. இந்த விஷயம் அப்பாக் காதுக்குப் போகக் கூடாது. எப்ப எப்படிச் சொல்லணும்னு எனக்குத் தெரியும்.” பேச்சை அத்தோடு கற்பகம் முடித்துக் கொள்ள அர்ச்சனா அவசரமாக அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள். கன்னத்தில் கண்ணீர் கோடாய் இறங்கி இருந்தது.
இளஞ்செழியனும் கையைக் கழுவியவன் அமைதியாக மாடிக்குப் போய் விட்டான். கற்பகத்திற்கு ஓரளவிற்கு மகனின் மனது பிடிபட்டது. அவனுக்கு மாதவியைப் பிடிக்கிறது. இல்லையென்றால் இன்றைக்கு அந்தப் பையனைச் சும்மா விட்டிருக்கமாட்டான்.
அந்தப் பெண்ணின் தம்பி என்பதால் தான் தன் தங்கையின் மீது கை வைத்தவனை எதுவும் பண்ணாமல் விட்டு வைத்திருக்கிறான். யோசனை பண்ணிய படியே டைனிங் டேபிளைக் க்ளீன் பண்ணினார் கற்பகம்.
***
தாவள்யமான நிலவு அந்த ஏகாந்தத்தை நிரப்பி இருந்தது. மாடியில் நின்றபடி அந்த இரவை ரசித்திருந்தான் இளஞ்செழியன். இன்றைய நாள் அவனைப் புரட்டிப் போட்டிருந்தது.
அவன் ஃபோனில் ஒலித்துக் கொண்டிருந்த பழைய பாடல் ஒன்று அவன் கவனத்தைத் திருப்ப முடியாமல் தோற்றுக் கொண்டிருந்தது. சட்டென்று அதை நிறுத்தியவன் தனக்கு மிகவும் பிடித்தமான பாடல் ஒன்றை ஒலிக்கவிட்டான். மனம் இப்போது லேசாகச் சமனப்பட்டது.
‘திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் நான்தானே… என்னை ஒரு முறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே…’ பாடலில் லயித்தவன் எண்ணத்தை இப்போது மாதவி ஆக்கிரமித்துக் கொண்டாள்.
என்றுமில்லாமல் இன்று காலையில் கற்பகம் மகனின் ரூம் வரை வந்திருந்தார். செழியனுக்கு அம்மா தன் ரூம் வரை வந்ததே ஆச்சரியம் என்றால் அதைவிடப் பெரிய ஆச்சரியம் அவர் சொன்ன சேதி.
மாதவியைப் பற்றி அம்மா பேசிய போது மகன் அதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும் சந்திரமோகன் அங்கிள் மூலமாக இந்த விஷயம் அம்மாவை வந்து சேர்ந்திருந்தது இன்னும் வியப்பாக இருந்தது.
அந்தப் பெண்ணை அப்போதே பார்க்கவேண்டும் போல சின்னப் பிள்ளைத்தனமான ஆசை ஒன்று அவனுக்குத் தோன்றியது. இதுவரை மாதவியை… மாதவியை என்ன? வேறு எந்தப் பெண்ணையுமே அவன் அந்த நோக்கத்தில் பார்த்ததில்லையே!
அப்படியிருக்க அம்மா சொன்ன விஷயம் அவனுக்குக் கொஞ்சம் பிடித்தமாகத்தான் இருந்தது.
மாதவி… அந்தப் பெண் இனி என் வாழ்க்கையோடு சம்பந்தப்படப் போகிறாளா? அந்த எண்ணமே கொஞ்சம் விந்தையாக இருக்க அந்தப் பொழுதை ரசித்தபடியே தான் ஹாஸ்பிடல் போனான்.
ஆனால் ரிசப்ஷனில் கிடைத்த தகவல் அவனை ஏமாற்றியது. அன்றைக்கு மாதவிக்கு விடுமுறை நாள். வினோதமாகப் பார்த்த மேனகாவைக் கணக்கில் கொள்ளாதவன் வார்டுக்குப் போய்விட்டான்.
எல்லாம் அர்ச்சனாவின் அழைப்பு வரும் வரை தான். அதற்குப் பிறகு வேறாகிப் போனான் இளஞ்செழியன். அவன் கார் புழுதி பறக்க அந்தக் காலேஜ் வாசலில் நின்றபோது தான் பார்க்க ஆசைப்பட்ட மாதவியை இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கே சந்திக்கப் போகிறோம் என்று செழியன் கிஞ்சித்தும் நினைத்திருக்கவில்லை.
புயல் போல உள்ளே நுழைந்தவனை ஆட்டோவில் வந்திறங்கிய அந்தப் பெண்ணின் முகம் சில நொடிகளில் சாந்தப்படுத்தி இருந்தது. தன் தங்கை மேல் கை வைத்தவனை ஒரு வழி பண்ணிவிடும் நோக்கத்தோடு தான் வந்திருந்தான் செழியன். ஆனால் சம்பந்தப்பட்ட பையன் மாதவியின் தம்பி என்ற போது நடந்ததைத் தான் இன்னும் என்னவென்று விசாரிக்கவில்லை என்றுதான் முதலில் தோன்றியது.
மாதவி இருக்கும் இடத்தில் தவறு இருக்க வாய்ப்பில்லை என்று தான் செழியன் நினைத்தான். தன் முன்னால் கண்ணீர் முகமாக நின்ற அந்தப் பெண்ணை ஏனோ அந்தக் கணம் அவனுக்கு அவ்வளவு பிடித்திருந்தது.
எப்போதும் மாதவியை யூனிஃபார்மில் தான் பார்த்திருக்கிறான். அன்று தழையத் தழையப் புடவை கட்டி, பூவும் பொட்டுமாக நின்றிருந்த பெண் அவனை முதன் முதலாகக் கவர்ந்திருந்தாள்.
நெடு நெடுவென்று நின்றிருந்த அந்தப் பையன் மாதவியை அத்தனை உரிமையாக அழைத்தது கூட அவனுக்கு அவ்வளவு பிடித்தமானதாக இருக்கவில்லை. அதற்காகவே வேண்டுமென்று உன் அக்கா மேல் கை வைக்கட்டுமா என்று கேட்டிருந்தான்.
அதீதமான வார்த்தைதான். இருந்தாலும் மாதவி மேல் அந்தப் பையன் எடுத்த உரிமையை உடைக்கவே அப்படிச் சொல்லி இருந்தான். இப்போது நினைக்கும் போது செழியனுக்குச் சிரிப்பாக வந்தது.
அவள் தம்பி, அவளை உரிமையாக அழைக்கிறான். இதில் எனக்கெதற்குக் கோபம் வர வேண்டும்? இது சரியில்லையே! சிரித்தபடி தலையைக் கோதிக் கொண்டான் செழியன்.
“செழியா!” அம்மாவின் அழைப்பில் திரும்பினான் மகன். தன் பிள்ளையின் முகத்தைப் பார்த்த கற்பகத்தின் முகமும் மலர்ந்து போனது.
“என்னம்மா?”
“தூங்கல்லை?”
“தூங்கணும்…”
“தூக்கம் வரல்லையோ?” கற்பகத்தின் குரலில் இப்போது சிரிப்பு இருந்தது. செழியனும் புன்னகைத்தான்.
“அப்படி இல்லைம்மா…”
“எதுக்கு செழியா உம்மனசை அம்மாக்கிட்ட மறைக்கிறே?”
“அம்மா…”
“உனக்கு மாதவியை எவ்வளவு பிடிக்குதுன்னு உம்முகமே சொல்லுது. என்னோட செழியனை எனக்குத் தெரியாதா?” குதூகலமாகத்தான் கேட்டார் கற்பகம். ஆனால்… செழியனின் முகம் மலர்ச்சியைச் சட்டெனத் தொலைத்தது.
“சொல்லு செழியா… மனசுல என்ன குழப்பம்?”
“இது சரியா வரும்னு தோணலைம்மா.”
“ஏம்பா அப்படிச் சொல்லுற?”
“மாதவி இதுக்குச் சம்மதிக்க மாட்டாம்மா.”
“அதை நான் பார்த்துக்கிறேன்.” அம்மாவின் பதிலில் செழியன் ஒரு பெருமூச்சு விட்டான்.
“செழியா… நான் கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு. உனக்கு மாதவியைப் பிடிச்சிருக்கா?” கேட்ட அம்மாவின் கண்களை ஒரு நொடி தீர்க்கமாகப் பார்த்தான் மகன். அடுத்த நொடி அவன் முகத்தில் ஒரு வசீகரப் புன்னகை வந்து போனது. அந்தப் புன்னகையின் அழகில் அம்மாவே தன் மகனை ஒரு நொடி ஆச்சரியமாகப் பார்த்தார்.
செழியன் முகத்தில் அபூர்வமாகப் பூக்கும் புன்னகை அது. அதுவே சொன்னது…
மாதவியை அவனுக்கு எவ்வளவு பிடிக்கிறது என்று. அம்மாவிற்கும் மனது நிறைந்து போனது.
***
அந்த ப்ளாக் ஆடியை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கினான் இளஞ்செழியன். இன்றைக்கு அவனுக்கு ஒன்பது மணிக்கு ட்யூட்டி ஆரம்பிக்கிறது. காலை நேரப் பரபரப்பில் ஹாஸ்பிடலைப் பார்க்கும் பொழுது ஒரு புதுத் தெம்பு அவன் உடலில் உருவானது.
ரிசப்ஷனைத் தாண்டும் போது அந்தப் பொல்லாத இரு பெண்களின் கண்களும் இவனைப் படம்பிடித்தன. நேற்று இவன் மாதவியைப் பற்றி விசாரித்ததை நன்றாக இருவரும் இன்று அரைத்திருப்பார்கள். கண்டும் காணாதவன் போல நகர்ந்து விட்டான் செழியன்.
அன்று மதியம் வரை வேலை அவனை இழுத்துக்கொண்டது. உணவை முடித்துக்கொண்டு அப்போதுதான் ரூமில் வந்து உட்கார்ந்தான். கதவு தட்டும் ஓசை கேட்டது. அனுமதி கொடுத்துவிட்டு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்தான்.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தது மாதவி. செழியனின் முகம் அவன் கட்டுப்பாட்டையும் மீறி மலர்ந்து போனது.
“வாங்க மாதவி.” அவன் கண்கள் அந்தப் பெண்ணின் யூனிஃபார்மையும் மதிக்காமல் ஒரு உரிமையோடு அவளை ரசித்தது. ஆனால் அதை உணர்ந்து கொள்ளும் நிலைமையில் மாதவி இல்லை.
“உக்காருங்க.”
“பரவாயில்லை டாக்டர்.” தடுமாறிய அவள் தோற்றத்தை சற்றுநேரம் ரசித்துப் பார்த்திருந்தான் டாக்டர்.
“ஏதாவது சொல்லணும்னு நினைக்கிறீங்களா மாதவி?”
“டாக்டர்… சாரி. அருண் தப்பான பையன் இல்லை…”
“ம்…”
“ஆனா அவன் நடந்துக்கிட்ட முறை ரொம்பவே தப்புத் தான். நான் இல்லேங்கலை…”
“ம்…”
“சாரி டாக்டர். நடந்ததுக்கு நான் உங்கக்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.”
“அதுதான் நேத்தே கேட்டுட்டீங்களே மாதவி. இன்னும் என்ன?”
“இல்லை டாக்டர்… அப்படியில்லை. அருணைப் பத்தின ஒரு தப்பான அபிப்ராயம் உங்க மனசுல விழுறதை என்னால ஜீரணிக்க முடியலை.”
“அது ஏன் மாதவி?” இதைக் கேட்கும் போது செழியனின் முகத்தில் அத்தனை மலர்ச்சி.
“அது தெரியலை டாக்டர். எனக்கு நீங்க முக்கியம். நான் ரொம்பவே மதிக்குற ஒரு டாக்டர் மனசுல என் தம்பியைப் பத்தின தப்பான அபிப்ராயம் வர்றது எனக்குக் கஷ்டமா இருக்கு.”
“ம்…” அவளுக்குப் புரியாமலேயே அவள் மனதை அவள் திறந்து காட்டிக் கொண்டிருந்தாள். செழியன் புன்னகைத்துக் கொண்டான்.
“ரெண்டு பக்கமும் தவறு இருக்கு மாதவி.”
“இருந்தாலும் அருண் பண்ணினது தப்புத் தான் டாக்டர். அவன் கை நீட்டி இருக்கக் கூடாது.”
“தன்னோட அக்காவை ஒரு பொண்ணு தப்பாப் பேசும் போது கோபம் வர்றது இயற்கை தானே. ஏன்? அர்ச்சனா ஃபோன் பண்ணினப்போ என்ன ஏதுன்னு விசாரிக்காம நானும் ஒரு முடிவோடதானே கிளம்பினேன்.”
“டாக்டர்!” மாதவியின் முகம் கலங்கிப் போனது.
“இல்லை… தப்பான முடிவு எதுவும் எடுத்திருக்க மாட்டேன் தான். இருந்தாலும்… மாதவியைப் பார்த்தப்போ சட்டுன்னு வந்த நிதானம் அந்த இடத்துல வேற யாராவது இருந்திருந்தா அத்தனை சுலபத்துல வந்திருக்காது.”
“டாக்டர்… ரொம்பவே சாரி. உங்க தங்கைக்கிட்டயும் நான்…”
“அதுக்கு அவசியம் இல்லை மாதவி.” அவள் பேச்சைச் சட்டென்று கத்தரித்தான் செழியன்.
“நடந்த விஷயம் வீட்டுல அம்மா காது வரைக்கும் போயிடுச்சு.”
“ஓ…”
“அர்ச்சனா மேல ரொம்பக் கோபப்பட்டாங்க.”
“………..”
“அம்மா எப்பவுமே கொஞ்சம் நியாயவாதி… மாதவியைப் போல.” செழியனின் பேச்சில் மாதவி சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள். அவன் முகத்தில் இருந்த புன்னகை அவளையும் தொற்றிக் கொண்டது.
சட்டென்று கதவு திறக்கவும் இருவரும் ஒன்றாகக் கதவின் பக்கம் பார்வையைத் திருப்பினார்கள். டாக்டர் சந்திரமோகன் வந்துகொண்டிருந்தார்.
இளஞ்செழியனோடு ஏதோ பேச வந்தவர் மாதவியை அங்கு எதிர்பார்க்கவில்லை. அவர் இளையவனைப் பார்த்த பார்வையில் குறும்பு கூத்தாடியது.
“செழியா… டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” சீஃபின் குரலில் இருந்த கேலியை மாதவி புரிந்து கொள்ளாவிட்டாலும் செழியனுக்கு நன்றாகவே புரிந்தது. அவன் முகம் லேசாகச் சிவந்து போனது.
“இல்லை டாக்டர்… சும்மாதான் பேசிக்கிட்டு இருந்தோம்.”
“ம்ஹூம்…” அந்த வார்த்தையே இளஞ்செழியனைக் கேலி பண்ணியது.
“மாதவியோட ப்ரதரும், அர்ச்சனாவும் ஒரே காலேஜ் தான். அதைப்பத்தித் தான் பேசிக்கிட்டு இருந்தோம்.”
“அப்படியா என்ன? எனக்கு இது இத்தனை நாளாத் தெரியாதே!”
“ம்… நேத்து காலேஜ்ல ஒரு சின்னப் பிரச்சனை. அதுக்காக வேண்டி நானும் அங்க போயிருந்தேன். மாதவியும் வந்திருந்தாங்க. அதைப்பத்தித்தான் பேசிக்கிட்டு இருக்கோம்.”
“ஓ…” இவர்கள் பேசிக்கொண்டிருக்க மாதவி இருவருக்கும் பொதுவாகத் தலை அசைத்தபடி நகர்ந்து விட்டாள். அவளுக்கு ட்யூட்டி ஆரம்பிக்க நேரம் சரியாக இருந்தது.
செழியனிற்குத் தன்னெதிரே குறும்பு முகமாக அமர்ந்திருக்கும் சந்திரமோகனை நோக்குவது சற்றுச் சிரமமாக இருந்தது. பேப்பர் வெயிட்டை உருட்டியபடி இருந்தான்.
“என்ன செழியா… எதுவும் பேசமாட்டேங்கிறே? கல்யாணக் களை முகத்துல தாண்டவமாடுது.”
“அங்கிள்…”
“சொல்லுப்பா… எதுக்கு இப்படித் தயங்குற?”
“இது சரியா வரும்னு எனக்குத் தோணலை.”
“ஏன்? ஏனப்படிச் சொல்லுறே?”
“நேத்து காலேஜ்ல ரொம்பப் பெரிய பிரச்சனையாப் போச்சு அங்கிள்.” கவலை தோய்ந்த முகத்தோடு ஆரம்பித்த செழியன் நேற்றைய நிகழ்வைச் சுருக்கமாக சந்திரமோகனிடம் சொல்லி முடித்திருந்தான்.
“அப்பாக்கு இதெல்லாம் தெரியுமா செழியா?” தாடையைத் தடவிய படி கேட்டார் மனிதர்.
“இல்லை அங்கிள். அப்பா நேத்து டெல்லி கிளம்பிட்டாங்க. அம்மாவும் அர்ச்சனாவை மிரட்டாத குறையாச் சொல்லி இருக்காங்க. அப்பா காதுக்கு எதுவும் போகக் கூடாதுன்னு.”
“அப்புறம் என்ன செழியா?”
“இல்லை அங்கிள். மாதவி இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிப்பான்னு எனக்குத் தோணலை.”
“கஷ்டம்தான்… அதுக்காக அப்படியே விட்டுற முடியுமா என்ன? பேசிப் பார்ப்போம்.”
“அங்கிள்…”
“நான் பார்த்துக்கிறேன் செழியா. உங்கம்மாவுக்கு மாதவியை அவ்வளவு பிடிச்சிருக்கு. மாதவியும் உனக்கு எல்லா வகையிலயும் ரொம்பப் பொருத்தமா இருப்பா. அப்புறம் என்ன? சின்னவங்க பண்ணுற வம்புக்காக எல்லாம் நல்ல விஷயத்தை விட்டுக்குடுக்க முடியுமா?”
“தம்பி மேலக் கொஞ்சம் பாசம் ஜாஸ்தின்னு நினைக்கிறேன். அத்தனை பேர் முன்னாடியும் எந்தத் தயக்கமும் இல்லாம மன்னிப்புக் கேட்டா. இப்பவும் வந்து சாரி சொன்னா. அப்படி இருக்கும் போது…”
“வாழ்க்கைன்னா எல்லாம் தான் செழியா. பாசம் இருக்கிறது தான். தம்பி மேலயே இவ்வளவு பாசமா இருக்கிற பொண்ணு நாளைக்குப் புருஷன் மேல எவ்வளவு பாசமா இருப்பா. அதை நீ மிஸ் பண்ணப் போறியா?”
“………….”
“யோசிக்காதே… முயற்சி செஞ்சு பார்ப்போம். நடந்தா சந்தோஷம். விதிக்கலைன்னா என்னப் பண்ண முடியும்.” நாற்காலியை விட்டு எழுந்த மனிதர் கதவு வரை போய்த்
திரும்பிப் பார்த்தார்.
“செழியா… இன்னைக்கு ஹாஸ்பிடல்ல ஹாட் டாபிக் என்னத் தெரியுமா?”
“என்ன அங்கிள்?”
“நேத்து நீ மாதவியைப் பத்தி ரிசப்ஷன்ல விசாரிச்சது தான். மேனகா கண்ணு, மூக்கு வச்சுட்டா. ஹா… ஹா…” சந்திரமோகன் வெடிச்சிரிப்புச் சிரிக்க, செழியன் தலையில் கையை வைத்துக் கொண்டான்.