IMIA4

IMIA4

அத்தியாயம் நான்கு

“தம்பி மாமா… கால் வலிக்குது… இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?”
குட்டி செருப்பணிந்த காலை பிடித்து கொண்டு பாப்பி கேட்க அவளை பாவமாக திரும்பி பார்த்தான் தம்பிமாமா! உடன் வந்தது ஒரு சிறிய படை… அதில் பாப்பியின் அண்ணனும் குட்டி தங்கையும் அடக்கம்… வாண்டுகள் அனைத்தும் ஊர் எல்லையை அடைந்தன! இதற்கு தலைமை பாப்பியால் தம்பி மாமா என்றழைக்கப்பட்ட சிறுவன்.  
“கொஞ்சம் பொறுடி பாப்பி… இதோ வந்துடுச்சு தோப்பு…”
செம்மண் மழை நீரில் ஊறி சொத சொதவென சேறாக இருந்தது. கொஞ்சம் ஏமாந்தால் வழுக்கி விழ வேண்டியதுதான். கிராமத்தில் பெரும்பாலும் வளர்ந்த அந்த குழந்தைகளுக்கு இயல்பாகவே அந்த ஜாக்கிரதை உணர்வு இருக்கும். எப்படி அடியெடுத்து வைப்பது என்ற முன்யோசனை இருக்கும். ஆனால் குட்டியாக இருந்த பாப்பிக்கு இன்னும் அவையெல்லாம் கைவரவில்லை. சேறு செருப்பை பிடித்து இழுக்க, நடக்க சிரமமாக, பிஞ்சு பாதங்களும் வலிக்க ஆரம்பிக்க தம்பி மாமாவை நோண்ட ஆரம்பித்து இருந்தது அந்த வாண்டு.
“அய்யே… எல்லாம் சேறா இருக்கு… காலெல்லாம் அழுக்காகாகிடுச்சு…” பாப்பி சிணுங்க ஆரம்பிக்க,
திரும்பி அந்த வாண்டை பார்த்தான் அந்த பெரியவன். உண்மையிலேயே கால் முழுக்க சகதியாகத்தான் இருந்தது. முழங்காலை தொட்டுக் கொண்டிருந்த ஸ்கர்ட் வரை சேறு தெறித்து இருந்தது. அந்த அழகில் தத்தக்கா பித்தக்கா என்று நடை பயின்று வந்திருந்தாள் குட்டி பாப்பி. அதை சிரிப்போடு பார்த்த பெரியவனுக்கு மிரட்ட ஆள் கிடைத்த சந்தோஷத்தில்,
“உனக்கு சேவா வேணுமா வேணாமா? ஒழுங்கா பேசாம வர்றவங்களுக்கு தான் சேவா சீவி கொடுப்பேன்…” அவன் சிறியதாய் மிரட்டவும் கொஞ்சமாக சிணுங்கல் நின்றது!
அதை பார்த்துக் கொண்டிருந்த பாப்பியின் அண்ணன், தங்கையை பரிவாக பார்த்து,
“பாப்பி… அழாம வாடி… அண்ணன் இருக்கேன்ல…” என்று அவளுக்கு ஆறுதல் கூற, அவனது தோளில் குட்டி தங்கை… இரண்டு வயது சிறுமி! மளுக் மளுக் என்று உருண்டை கண்களை உருட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த குட்டியை பார்த்தவளுக்கு இன்னமும் பாதங்கள் வலிப்பது போல இருந்தது. அண்ணனின் தோளில் தான் மட்டுமே ஆண்டது மாறி இப்போது தங்கை அந்த இடத்தை பிடித்துக் கொண்டதில் அந்த குட்டிக்கு செம வருத்தம். வீட்டிலேயே அவனிடம் தனக்கு மட்டுமே உரிமை உள்ளதை போல யாருக்குமே விட்டுக் கொடுக்க மாட்டாள். அப்படியொரு உரிமை. ஆனால் குட்டி தங்கையை ஆசையாக தூக்கும் அண்ணனனை என்ன செய்வது என்று அந்த பிஞ்சு நெஞ்சத்துக்கு தெரியவில்லை. அதற்கு தெரிந்ததெல்லாம், அண்ணனிடமிருந்து அந்த குட்டி குழந்தை தன்னை பிரிக்கிறது என்பதுதான்.
“இவள மட்டும் தூக்கிட்டு போற… என்னையும் தூக்குண்ணா…”  பாப்பி அழ ஆரம்பிக்க, பெரியவன் முறைத்தான்.
“உஷ் பாப்பி… இப்போ நீ அழுதீன்னா… உனக்கு சேவா கிடையாது… என்னடி சொல்ற?”  தம்பி மாமனின் மிரட்டல் கொஞ்சம் அதிகமாக,
“ம்ம்ம்… என்னையும் அண்ணன் தூக்கணும்…”  என்று அவளது அழுகை அதிகமாக பரிதாபமாக பார்த்தான் அந்த அண்ணன்,தோளில் இருந்த குட்டி தங்கையை பார்த்தவாறே! அவனை பார்க்கவும் பெரியவனுக்கு பாவமாக இருந்தது. அந்த சின்ன குட்டி அவன் கைகளை விட்டு இறங்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்து கொண்டிருந்தது. கூடவே இந்த குட்டியும் பிடிவாதம் பிடிப்பதை பார்த்தவன், அருகே இருந்த பைப்பில் அவளது கால்களை கழுவி விட்டு,
“சரி வா… நீ என் தோள்ல ஏறிக்கோ…” என்று அவளை தன் தோள் மேல் ஏற்றி கொண்டவன், பனைமரங்களை நோக்கி சென்றான்!
அங்கு பனைமரங்கள் தோப்பாகவெல்லாம் இருக்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருக்கும். ஊருக்கு வெளியே ஒரு தோப்பின் அருகில் பத்து பனிரெண்டு மரங்கள் சேர்ந்தார் போல இருக்கும். மழை காலமென்றால் அந்த மரங்களை தான் குறி வைக்கும் இந்த வாண்டுகள். கீழே விழும் பனங்கொட்டை முளைத்து, பனங்கிழங்கோடு இருப்பதை அப்படியே தோண்டி எடுத்து நெருப்பிலிட்டு எரித்து உண்பதுதான் இவைகளுக்கு அப்போதைய பொழுதுபோக்கு, விளையாட்டு எல்லாம். அதற்கு செய்யும் ஆயத்தங்களை பார்த்தால் ஒரு ஊருக்கே சமைக்க போக போவதை போல ஒரு பில்ட் அப்பை கொடுக்கும் இந்த வாண்டுகள்!
“ஹை பனங்கொட்டை எல்லாம் முளைச்சுடுச்சு…” வாண்டுகள் சந்தோஷமாக முளைத்த பனையை பிடுங்கின! அவசர அவசரமாக சுள்ளி, மட்டை எல்லாவற்றையும் பொறுக்கி சிறிது மேடான இடத்தில் சேர்த்து வைத்தன!
“எங்கடா சீமென்னை?” பெரியவன் கேட்க,
இரண்டு பெரிய பையன்கள் வீட்டிலிருந்து மண்ணெண்ணையும் தீப்பெட்டியும் எடுத்து வந்திருந்தனர்! அவசரமாக அந்த மட்டைகளில் ஊற்றி தீ பற்ற வைக்க, அந்த தீயில் பனம்பழங்களையும் கிழங்குகளையும் போட்டு எரித்தனர்! பனம்பழம் பட் பட் என வெடித்து கொண்டே எரிந்தது! ஒருவாராக தீ அணைந்து முடிக்க, பனங்கிழங்கை எடுத்து எல்லாருக்கும் கொடுத்தவன், வெந்த பனம்பழத்தை எடுத்து ஜாக்கிரதையாக தொட்டுடைத்தான்!
“உஷ்… யாரும் அடிச்சுக்க கூடாது… எல்லாருக்கும் சேவா தருவேன்… ஒவ்வொருத்தரா வாங்க…” உத்தரவிடும் குரலில் கூறியவன் முன் அடித்து பிடித்து கொண்டு வரிசையில் முதல் இடம் பிடிக்க முந்தினர் வாண்டுகள்! ஒவ்வொருவராக வர… அந்த பனம்பழத்தை சீவி கொடுத்தான்! அதை வாங்கிய பாப்பிக்கு அதை எப்படி உண்பது என்று தெரியாமல் கையிலேயே வைத்து கொண்டிருந்தாள்.
“பாப்பிகுட்டி… ஏன்டி தின்னல?” தம்பிமாமா கேட்டான்!
“எப்படிடா திங்கறது?” விழித்தாள் பாப்பி.
அவளிடம் இருந்து வாங்கியவன்… மேலே ஒட்டி கொண்டிருந்த ஓட்டையும் தோலையும் நீக்கி விட்டு, சதைப்பிடிப்பாக வெந்திருந்த கிழங்கை மட்டும் பிட்டு வாயில் ஊட்டி விட,
“ஹை… சூப்பரா இருக்குடா…” வாயை சப்பு கொட்டி கொண்டே சாப்பிட்டாள் பாப்பி!
“என்னது டா வா? போடி உனக்கு சேவா கிடையாது…” முரண்டு செய்தான் அவன்! பெரியவனாயிற்றே… இதையாவது செய்ய வேண்டுமே… பாப்பி திருதிருவென விழித்தது!
“நீ மட்டும் டி சொல்ற…” சிணுங்கி கொண்டே பனம்பழத்தை பிடுங்க போக,
“நான் பெரிய பையன்… நான் டி சொல்லலாம்… நீ மாமா மட்டும் தான் சொல்லணும்… என்ன தெரியுதா?” அதிகாரமாக அவன் கூறவும் பாப்பியும் தலையாட்டி கொண்டே,
“சரி மாமா… எனக்கு ஊட்டு…” சரணாகதி ஆனாள் பாப்பி!
***
ஆராரிராரோ நான் இங்கே பாட
தாயே நீ கண்ணுறங்கு… என்னோட மடி சாய்ந்து…
வாழும் காலம் யாவுமே… தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கும் சொன்னதே…
ஐபாடில் பாடல் மெலிதாக ஒலிக்க கண்களை மூடி ரசித்து கொண்டிருந்தான் ஜீவா… அந்த இரவு வேளையை! உடலின் ஒவ்வொரு செல்லும் ஓய்வை தேடியது… அன்றைய அப்பாயின்ட்மென்ட் எல்லாம் முடிந்து இருக்க …விஷ்வா முக்கியமான அறுவை சிகிச்சையில் இருந்ததால் அவனுக்காக காத்து கொண்டிருந்தான்.
கதவு தட்டப்படும் சப்தம் கேட்டது!
“எஸ்… கம்மின்…” ஐபாடை பாஸில் போட்டபடியே அனுமதி அளித்தான், காதில் இருந்த ஹேண்ட்ஸ் ப்ரீயை கழட்டியபடி!
உள்ளே வந்தது மதுவும் ப்ரவாவும்…
“ஜீவா சார்… எங்க டியூட்டி முடிஞ்சுது… போறதுக்கு முன்ன வர சொன்னீங்களாம்…” கடமையே கருத்தாக கேட்டாள்!
“ம்ம்ம்… யாஹ்… சோ… ஹவ் வாஸ் யுவர் டே… வாட் டு யு பீல் அபவுட் தி ஹாஸ்பிடல்…”  முகத்தை அழுந்த தேய்த்து விட்டு நெட்டி முறித்தபடி கேட்டான். சோர்வு அவனது முகத்தில் அப்பியிருந்தது.  
“யாஹ்… கிரேட் சார்…”  என்று மது கூற, அவனது தலை இடம் வலமாக ஆடியது.  
“ப்ளீஸ் டோன்ட் கால் மீ சார்… ஐம் மச் அன்கம்பர்ட்டபிள் மது… ஜஸ்ட் கால் பை மை நேம்…” என்று இயல்பாக கூற
“ஓகே ஜீவா…” என்று சொல்லி மது சிரித்தாள்.
இருவரையும் பார்த்து ப்ரவாவுக்கு ஏனோ ஒரு கணம் பொறாமை கூட தோன்றியது. மது எப்போதும் சட்டென்று மற்றவர்களோடு ஒட்டி விடுகிறாள். அதனாலேயே மதுவுக்கு பெரிய நட்பு வட்டம் உண்டு… அதே போல யாருமே அவளை நம்பி அவர்களுடைய பெர்சனல் விஷயங்களையும் பகிர்ந்து கொள்வர்.
நம்பிக்கை!
அந்த நம்பிக்கையை அவள் தனது பேச்சிலேயே கொடுத்து விடுவாள்.
ஆனால் மற்ற எவரோடும் அவள் இப்படி பேசும் போது உறுத்தாத ஒன்று… இப்போது அவளது மனதை உறுத்தியது. ப்ரவாவுடைய மனதை பிசைந்தது!
இருவருமாக பல விஷயங்களை பேசி கொண்டிருக்க ப்ரவா ஏதும் சொல்லாமல் ஜீவாவையும் மதுவையும் மாற்றி மாற்றி கவனித்து கொண்டிருந்தாள். பேசாமல் ஜீவாவை அவ்வப்போது ஊன்றி பார்த்ததில் அவனது ஆண்மை ததும்பும் கைகளும் முகமும் அவளுக்குள் எதையோ நினைவுப்படுத்தி விட்டு சென்றன. ஆனால் அவள் மனம் இப்போது எதிர்பார்த்து கொண்டிருந்தது விஷ்வாவை… அன்று முழுவதுமே அவனை காண முடியாமல் மனம் தவிப்பில் ஆழ்ந்திருந்தது! விஷ்வாவை பார்ப்பதற்காக கண்கள் பரபரத்தது.
“மது… உங்க ரெண்டு பேருக்கும் ஹாஸ்பிடல் டாக்டர்ஸ் குவாட்டர்ஸ்ல வசதியா இருக்கா?” ஜீவா தெளிவுபடுத்தி கொள்ள வேண்டி கேட்க, ப்ரவாவுக்கு ஏனோ உள்ளுக்குள் கடுப்படித்தது!
கையிலிருந்த கடிகாரத்தை பார்த்தபடியும் வாசலை பார்த்தபடியுமாக இருந்தாள். அவளது கவனம் இங்கில்லாததை ஜீவா உணர்ந்தான். அவளை அவ்வப்போது பார்வையிட்டுக் கொண்டிருந்தான். அழகிதான் என்று எண்ணியவனுக்கு அதற்கும் மேல் எதுவும் தோன்றவில்லை. வாசலையும் கடிகாரத்தையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்த செய்கை அவனை சற்றே எரிச்சல்படுத்தியது. சீனியர் பேசிக்கொண்டிருக்கும் போது இதென்ன பொறுப்பற்றதனம் என்ற கோபம்!
“நல்லா இருக்கு ஜீவா…” என்று மது கூற,
“அவசர வேலை ஏதாவது இப்போ இருக்கா…” ஜீவா சிரித்து கொண்டே கேட்டான். ஓரப்பார்வையால் ப்ரவாவை பார்த்தபடி!
“இல்லையே… கேண்டீன்ல டிபன் முடிச்சாச்சு… போய் படுக்க வேண்டியதுதான்… எதாச்சும் வேலை குடுக்க போறீங்களா ஜீவா?”
“இல்ல மது… உங்க பக்கத்துல இருக்கற ஒருத்தர்… ரொம்ப கடமை உணர்வோட மணிய பார்த்துட்டே இருக்காங்க… அதான் கேட்டேன்…” என்று சிரிக்க… மது ப்ரவாவை பார்த்து முறைத்தாள். இவர் முன் ஏன்டி இப்படி மானத்தை வாங்குற என்பது போல இருந்தது அவளது பார்வை!
அவன் இப்படி கூறவும் அவளுக்கே ஒரு மாதிரியாகி விட்டிருந்தது. தான் செய்தது தவறல்லவா. விஷ்வாவை பார்க்க ஆசைப்பட்டு, சீனியரை அவமானப்படுத்தவது போல இப்படி நடந்து கொள்ள கூடாதே என்று எண்ணியவள்,
“சாரி டாக்டர்…” தயங்கி தயங்கி மன்னிப்பு கேட்டாள்.
“ஹே… ஜஸ்ட் ஜோக்கிங்… ஆனா ப்ரவா கண்டிப்பா நீங்க சில விஷயத்தை சார்ட் அவுட் செய்தே தீரனும்…” என்று சிரித்து கொண்டே ஆரம்பித்தவன் கண்டிப்பான குரலில் முடிக்க, ப்ரவா தவிப்பாக நோக்கினாள்! குரலில் கண்டிப்பு இருந்தாலும் கண்களில் இருந்த சிநேகபாவம் அவளை ஆற்றுப்படுதியது.
“எப்படி நீங்க இந்த ப்ரொபஷன சூஸ் பண்ணீங்க? ஐ ரியலி ஒன்டர்…” ஒற்றை புருவத்தை உயர்த்தி அவளை நோக்க, ப்ரவாவின் மனதினுள் படபட பட்டாம்பூச்சிகள்!
நான் எங்கய்யா சூஸ் பண்ணேன்? எல்லாருமா சேர்ந்து தள்ளி விட்டுட்டாங்களே என்று மூக்கால் அழுகாத குறையாக கூறத் தோன்றியது. தனக்கும் இந்த படிப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கூட தோன்றியிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் வெளிப்படையாக இவனிடம் கூற முடியுமா என்ன?
“ம்க்கும்… ஏ… ஏன்… டாக்டர்…” குரல் வெளியே வர மக்கர் செய்ய, கனைத்து கொண்டே திக்கினாள்!
“நேற்று தான் நான் ஒரு சாம்பிள் பார்த்தேனே…” என்று அவன் கூறும் போது அவனது குரல் மிகவுமே கடினப்பட்டு இருந்தது!
“என்ன ஜீவா ஆச்சு?” குழப்பமாக மது கேட்க,
“நேற்று அந்த பிரைன் டெட் கேஸ் என் கூட அட்டென்ட் பண்ணாங்க இல்லையா மது…”
“ஆமா…”
“அந்த பையன் இறந்து போனதை பார்த்துட்டு கை எல்லாம் நடுங்கி… வேர்த்து… மயங்கி விழற ஸ்டேஜுக்கு போய்ட்டாங்க இவங்க…” இறுக்கமாக அவன் கூற… ப்ரவாவோ குனிந்த தலையை நிமிர்த்தவில்லை!
“ஐயோ… அப்புறம்…” மதுவுக்கு மனதில் ஐயோவென்று இருந்தது!
“என்ன அப்புறம்? இந்த அம்மணிக்கு தனியா ட்ரீட்மென்ட் குடுக்கனுமோன்னு நினைச்சேன்…” என்று கூறியவன் இறுக்கத்தை கைவிட்டு சிரித்தும் விட்டான்.
“அதெல்லாம் இல்ல… நானே சமாளிச்சுட்டேன் டாக்டர்…” மிக மெல்லிய குரலில் சமாளிபிகேஷன் செய்த ப்ரவாவை பார்த்து…
“அதுதான் ஏன் ப்ரவா?ஆஸ் எ டாக்டர்… நாம உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு தான் இயங்கனும்… நோ ரூம் பார் பீலிங்க்ஸ்…” கண்டிப்பான குரலில் ஜீவா கூற,
“எ… எப்பிடி டாக்டர்… மனுஷதன்மைன்னு ஒன்னு இருக்கவங்க எல்லாருக்குமே அந்த மாதிரி சிச்சுவேஷன்ல அப்படிதான்…” என்று இழுத்தாள். அவளை திட்ட முடியாத கோபத்தில் முறைத்தான் ஜீவா.
“மனுஷதன்மையை வெச்சுகிட்டு என்ன பண்ண முடியும் உங்களால?அவன் உயிரை திருப்பி தந்துட முடியுமா இல்ல சுத்தற பூமிய நிறுத்திட முடியுமா? பீலிங்க்ஸ் எல்லாம் ஹாஸ்பிடல்க்கு வெளிய தான் ப்ரவா… டியூட்டில நீங்க இப்படி பிஹேவ் பண்ண கூடாது…” குரலில் கோபம் மெலிதாக வெளிப்பட்டது!
“நா… நாம ட்ரீட் பண்றவங்க பீலிங்க்ஸ்ஸ புரிஞ்சுகிட்டு உள்வாங்கி… அப்புறமா அவங்களை ட்ரீட் செய்றதுதான் ஹோலிஸ்ட்டிக் ட்ரீட்மென்ட்…” பேசுவது நிஜமாகவே ப்ரவாவா என்று ஆச்சரியமாக பார்த்தாள் மது! அதுவும் இவ்வளவு சேர்த்து வைத்து பேசுகிறாளா… என்ற ஆச்சரியத்தோடு நோக்கினாள்!
அவள் கூறுவதை பொறுமையாக கேட்ட ஜீவா… அப்போதுதான் உள்ளே நுழைந்த விஷ்வாவை பார்த்து சிரித்து கொண்டே, அவனை கை காட்டி…
“சரி உங்க கான்செப்ட்க்கே வரேன்… பார் எக்சாம்பில் இந்த சார் செய்யற நியூரோ சர்ஜரிய எடுத்துகோங்க… ரொம்ப ஜாக்கிரதையா செய்ய வேண்டிய சர்ஜரிஸ் அது… ஒரு சின்ன கை நடுக்கம் கூட பெரிய டேஞ்சர்… பேஷன்ட்க்கு!… அந்த இடத்தில உணர்ச்சி பூர்வமா இருக்கேன்னு நீங்க அந்த பேஷன்ட் கூட மெர்ஜ் ஆகிட்டா என்ன ஆகுறது?… தப்பு ப்ரவா… இங்க நோ செண்டிமெண்ட்ஸ்… காட் இட்…”
 மிக அழுத்தமாக சொல்லி முடிக்க ப்ரவா தயங்கி கொண்டே தலை அசைத்தாள்! விஷ்வா புன்னகைத்த முகத்தோடு மூவரையும் பார்த்து கொண்டிருந்தான். அருகிலிருந்த அவன் ப்ரவாவுக்குள் எல்லையில்லாத பாதுகாப்புணர்வை கொடுத்தான்!
கண்டிப்பாக தன்னுடைய குறிக்கோள் நிறைவேறும் என்று மனதில் கூறிக்கொண்டாள் ப்ரவலிகா.
“மது… நீங்க கொஞ்ச நாள் நியுரோல விஷ்வாவுக்கு அசிஸ்ட் பண்ணுங்க…”
“ஓகே ஜீவா…” என்று தலையசைத்தாள்.
“ப்ரவலிகா… நீங்க எனக்கு அசிஸ்ட் பண்ணுங்க…” என்று ஜீவா கூற… ஒரு கணம் அதிர்ந்த மனம் ஏமாற்றமாக விஷ்வாவையும் மதுவையும் பார்த்தது…
“பிகாஸ்… உங்களுக்கு நிறைய ட்ரைனிங் தேவைப்படுது… ஹோல்சம் ட்ரைனிங்…” என்று தொடர்ந்து முடிக்க… அவளது மனம் வெளிப்படையாக ஏமாற்றத்தை உணர்ந்தது.
“நான்… விஷ்வாண்… சர் கிட்ட… இல்ல மது கிட்டயே…” திணறிக்கொண்டே கூற முயன்றவளை உதட்டோரம் வழிந்த சிரிப்போடு பார்த்தவன்,
“இல்லை ப்ரவா… மது கூடவே நீங்க சுத்திட்டு இருந்தா தனிப்பட்ட முறைல நீங்க வளர முடியாது… அவங்க உங்களை ரொம்ப pamper பண்ணி வெச்சு இருக்காங்க…” என்று முடித்துவிட்டு அவன் எழுந்து கொள்ள… ப்ரவலிகா ஏக்கமாக விஷ்வாவை பார்த்தவள் சட்டென்று பார்வையை விலக்கி கொண்டு எழுந்தாள்.
மனதில் குறிக்கோளை இருத்தி கொண்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!