imk-16

17(௧௭)

பயங்கர விபத்து

அமிர்தா ராய்! இந்தப் பெயரைக் கேட்ட நொடியிலேயே தமிழச்சிக்கு அளவில்லா வெறுப்பும் கோபமும் தலைதூக்கியது. அன்று மட்டும் அவளை சந்திக்காமல் இருந்திருந்தால் இன்று விக்ரமைத் தான் பிரியும் நிலையே நேர்ந்திருக்காது என்று எண்ணிக் கொண்டவளுக்கு மனவேதனை மட்டுமே மிச்சம்.

தமிழச்சி விரும்பத்தகாத அந்த நாள்… அவள் மனம் நொறுங்கி அவமானப்பட்டு நின்ற நாள்… அடியோடு அவள் வெறுக்கும் அந்த நாள்… அவள் திருமண நாள். இன்று யோசித்தாலும் அந்த நாள் அவளின் திடமான மனதை உலுக்கியது.

டெல்லி மாநகரம் நடுநிசியை எட்டிக் கொண்டிருந்தது. களைப்போடும் சோர்வோடும் அவள் வீட்டின் கதவைத் தட்ட எத்தனித்த போது அவள் விழிகள் ஸ்தம்பித்தன. கதவின் மீது ஒட்டியிருந்த்த அந்த வெள்ளைத் தாளில், ‘தொட தொட மலர்ந்ததென்ன பூவே… தொட்டவனை மறந்ததென்ன?’ என்ற பாடல் வரிகள் எழுதியிருக்க,

“என்ன வேலை இதெல்லாம்?” என்று சலித்துக் கொண்டே அந்தத் தாளைக் கசக்கித் தூர எறிந்துவிட்டு கதவைத் திறந்தாள். ஒருவித மயான அமைதியே அவளை வரவேற்றது.

“விக்ரம்!” என்று அழைத்துக் கொண்டே சோபாவின் மீது அயர்ச்சியோடு அவள் விழ, அதன் எதிரே இருந்த மேஜையின் மீதிருந்த  பூஜாடிக்குள் சுருட்டப்பட்ட மற்றொரு தாள் அவளுக்காகக் காத்திருந்தது.

“என் காதலே… என் காதலே… என்னை என்ன செய்யப் போகிறாய்?” என்றிருக்க அவள் கோபமாகி, “கொல்லப் போறேன்” என்று என்று சொல்லிக் கொண்டே, “விக்ரம்ம்ம்ம்!”என்று  உரக்கக் கத்தினாள். அப்போதும் பதிலில்லை.

“எக்கேடு கேட்டோ போ… எனக்குப் பசிக்குது” என்றவள் கை அலம்பிக் கொண்டு டைனிங் டேபிளில் வந்து அமரப் பார்த்தவள்… அங்கே உணவுப் பண்டங்கள் எதுவும் இல்லாதிருப்பதைப் பார்த்து, “குக் வரலையா என்ன?” என்று கேட்டுக் கொண்டே சமையலறைக்குள் நுழைந்தாள்.

சமையல் மேடையில் எந்த பாத்திரமும் இல்லை. மாறாய் அங்கேயும் ஒரு வெள்ளைத் தாள் சுவற்றில்!

‘உன் சமையலறையில்… நான் உப்பா சர்க்கரையா?’ என்று ஒட்டியிருக்க, “ஹ்ம்ம் உப்பு… என்னடா விளையாட்டு இது… எனக்குப் பசிக்குதுடா… எங்கடா இருக்க நீ?” என்றவள் கோபத்தோடு ஆரம்பித்து சோர்வோடு முகம் சுணங்கினாள்.

மெல்ல அவனைத் தேடிக் கொண்டே படுக்கையறைக்குள் புகுந்தவள் குளியலறையிலும் அலசி ஆராய்ந்துவிட்டு ஒரு நிலைக்கு மேல் பொறுமை இழந்து, “இதுக்கு மேல என்னால உன்னைத் தேட முடியாது… ட்ரஸ் சேஞ் பண்ணிட்டு பேசாம பாலைக் காய்ச்சிக் குடிச்சுட்டு படுத்துத் தூங்கப் போறேன்” என்றவள் தன் வாட்ரோபைத் திறக்கப் போக, அந்த இடத்தையும் அவன் விட்டு வைக்கவில்லை.

“செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே… சேலை உடுத்த தயங்குறியே” என்று எழுதியிருக்க, ‘நேத்து வரை அரை லூசா இருந்தான்… இப்ப முழு லூசாவே ஆயிட்டான் போல…  மவனே! நீ மட்டும் என் கையில கிடைச்ச’ என்றவள் புலம்ப, “கையில கிடைச்சா?” என்று கேட்டுக் கொண்டே அவள் பின்னோடு வந்து நின்றான் அவள் கணவன்!

அவள் அடங்கா கோபத்தோடு திரும்ப அவனோ புன்னகையோடு, ‘‘ஃப்ர்ஸ்ட் ஹாப்பி அனிவர்சரி டார்லிங்!” என்று சொல்லித் தன் கையிலிருந்த பரிசை ரோஜா பூங்கொத்தோடு சேர்த்து அவளிடம் கொடுக்க நீட்டினான்.

‘நாளைக்குதானே’ என்று யோசித்தவள்  மறுகணமே தன் கைப்பேசியைப் பார்க்க… அதில் நேரம் பன்னிரண்டு முப்பது என்று காட்டியது.

அவனை ஆழ்ந்து  நோக்கிக் கொண்டே அந்தப் பரிசை வாங்கி அவள் பிரிக்க, அவன் மௌனமாய் கைக்கட்டி அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

வாடாமல்லி நிறத்தில் ஒரு அழகிய புடவை மெல்லிய தங்கநிற சரிகையில் மின்ன… அவள் விழிகள் வியப்பில் ஆழ்ந்தன. அந்த நொடி அவள் உள்ளமும் விழிகளும் கலங்கியது. தன் இரு கைகளால் அவன் கழுத்தை இறுக்கமாய் கட்டிக் கொண்டு , “தேங்க்ஸ்… லவ் யு சோ மச்” என்றாள்.

அவனோ எந்தவித எதிர்வினையும் காட்டாமல் அப்படியே நின்றிருக்க அவள் தவிப்புற்று, “என் மேல கோபமா?” என்று அவன் முகத்தைப் பார்த்து வாஞ்சையாகக் கேட்டாள்.

அவன் இல்லை என்று தலையசைத்து மறுத்தான். “அப்புறம் என்ன?” என்றவள் ஏக்கமாய் பார்க்க, “எனக்கு இந்த போலீஸ்காரி வேண்டாம்… என் பொண்டாட்டிதான் வேணும்” என்றான்.

அவள் அவனை ஆழ்ந்து பார்க்க… அவனோ அந்தப் புடவையை மாற்றி வந்த பிறகு இருவரும் கட்டிக் கொள்ளலாம் என்று சைகை செய்ய, அவள் செவ்விதழ்கள் மலர முகம் நாணத்தில் சிவந்தது.

அவள் உடனே குளித்துவிட்டு உடைமாற்றி வர செல்ல, “சீக்கிரம் தமிழச்சி” என்று அவன் குரல் கொடுத்துக் கொண்டே வெளியேறினான்.

அவள் குளித்து முடித்து அந்தப் புடவையை அணிந்து கொண்டு கண்ணாடியின் முன்னே வந்து நிற்க, அவளுக்கு மேலும் சில ஆச்சர்யங்கள்! அந்தப் புடவைக்கு பொருத்தமாய் நகை வளையல் தோடு மாட்டல் பொட்டு பூ வரைக்கும் அவன் வாங்கி வைத்திருந்ததைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டாள்.

திருமணத்தின் போது சடங்குகளுக்காக இவற்றையெல்லாம் அணிந்து கொண்டதோடு சரி! அதற்குப் பிறகு அவ்வாறு பார்த்துப் பார்த்து அணிந்து கொள்ளும் பொறுமையும் ரசனையும் அவளுக்கு இல்லை. அப்படியெல்லாம் அணியும்  பழக்கமும்  அவளுக்கில்லை.

அன்று அவன் விருப்பத்திற்காக வேண்டி அவற்றையெல்லாம் அணிந்து கொண்டாள். அந்தப் புடவை அவளுக்கு வெகு பொருத்தமாய் இருந்த அதேநேரம் வளையல் தோடு மாட்டலோடு சேர்த்து அவள் கூந்தலில் சூடிக் கொண்ட  மலர்ந்த அந்த மல்லி  அவளின் அழகை பன்மடங்கு கூட்டியது.

அதன் பின்னர் அவள் பார்வை அவனைத் தேடிக் கொண்டு வெளியே வர, டைனிங்கில் வகை வகையாய் அவளுக்குப் பிடித்த உணவுகளை வாங்கி வைத்திருந்தவன் அவளுக்கு பிடித்தமான சாக்லேட் கேக்கையும் வாங்கி வைக்கத் தவறவில்லை. ஆச்சர்யம் மிகுந்திட அவற்றையெல்லாம் அவள் பார்த்துக் கொண்டிருக்க அவன் விழிகளோ அவளிடத்தில் லயித்துவிட்டன.

அவன் முகத்தில் காமரசம் சொட்டிக் கொண்டிருக்க அப்படியே அவளைப் பார்த்தபடி சிலையாய் சமைந்துவிட்டான்.  “விக்ரம்” என்று அவள் தன் கரத்தை தன் கணவனின் முகத்துக்கு நேராய் ஆட்ட அப்போதே தன்னிலை மீட்டுக் கொண்டவன் பலமாய் மூச்சுக் காற்றை இழுத்துவிட்டு, “கொல்றடி” என்றான் .

அவனின் முகபாவனை பார்த்து கேலியாய் சிரிக்க, அவன்தன் ஏற்பாடுகளை காண்பித்து, “திஸ் இஸ் ஃபார் யு… மை டார்லிங்!” என்றதும் அவளுக்கு நெகிழ்ச்சியாய் இருந்தது.

புதுப் புடவையெல்லாம் வாங்கி வைத்து இந்த ஏற்பாடுகளை எல்லாம் அவளுக்காக வேண்டி அவசரம் அவசமாய் செய்து வைத்திருக்கிறான் என்பதை அவன் முகத்திலிருந்த  களைப்பு அப்பட்டமாய் காட்டிக் கொடுத்தது.  அதோடு அவன் தோளிலிருந்த சமையல் துண்டைப் பார்த்து அவளுக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.

“என்னடா இது?” என்று அந்தத் துண்டை அவள் ஓரம் வைக்க அவன் உதட்டை கடித்துக் கொண்டு, “மறந்துட்டேன்” என்றான். பின்னர் அவன் ஆர்வமாய் கேக்கின் மீதிருந்த ஒற்றை மெழுகுவத்தியை ஏற்றிவிட்டு,

“ஹாப்பி அனிவர்சரி டார்லிங்!” என்றான்.

அவள் புன்னகை ததும்ப, “ஃபார் யு டூ மை டார்லிங்!” என்று சொல்ல அவர்கள் இருவருமாய் சேர்ந்து அந்த இனிப்பை வெட்டி மாறி மாறி ஊட்டிக் கொள்ள, அவர்கள் திருமண நாள் கொண்டாட்டம் இனிதே அரங்கேறியது.

இரவு உணவை இருவரும் பகிர்ந்து உண்டு கொண்டிருக்க அவள்  அவனை ஏறிட்டுப் பார்த்து, “எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு விக்ரம்… நான் உனக்காக எதுவுமே வாங்கலடா” என்று வருத்தமுற்றாள்.

“நீதான் எனக்கு பெரிய கிஃப்டா கொடுக்கப் போறியே” என்றவன் சொல்லிக் கொண்டே அவளைப் பார்த்து விஷமமாய் புன்னகைத்தான்.

அவள் திகைப்போடு, “பெரிய கிஃப்டா… அது என்னது? நான் எதுவும் வாங்கலயே” என்றுசொல்ல, அந்த நொடியே அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டு அவள் காதோடு கிசுகிசுத்தான்.

அவள் அதிர்ச்சியோடு அவனைப் பார்க்க அவன் மேலும், “நீ கேட்ட ஒருவருஷம் டைம் முடிஞ்சிடுச்சுதானே… அன்ட் எனக்கும் இந்த தடவை எம்.பி சீட் கிடைச்சிரும்… நானும் நிச்சயம் ஜெயிச்சிடுவேன்… இதுக்கு மேலையும் தள்ளிப் போட வேண்டாமே” என்று சொல்ல அவள் முகம் யோசனையாய் மாறியது.

“ஏ என்னடி? யோசிக்கிற” என்றவன் அவளை அதிர்ந்து பார்க்க, “அதில்ல விக்ரம்” என்று பேச ஆரம்பித்தவளை இடைநிறுத்தி, “இல்ல… கில்லன்னு டபாய்கிற வேலையெல்லாம் வேணாம்… ஐ வான்ட் பேபி… டாட்” என்றான்.

அவள் கன்னங்கள் வெட்கத்தில் குமிழ்ந்தது. அவள் உதடுகள் விரிய அவன் கழுத்தை கட்டிக் கொண்டு, “நீ இவ்வளவு தூரம் கேட்ட பிறகு நான் வேண்டாம்னு சொல்வேனா?” என்று சொல்ல விக்ரம் சந்தோஷத்தின் உச்சத்தில் அவள் முகத்தில் முத்தத்தால் அர்ச்சனை செய்ய, அவள் நாணத்தில் தவிப்புற்றாள். சில விநாடிகள் நடந்த அந்தக் காதல் ஆராதனைகளில் இருந்து விடுப்பட்டவள்,

“இருடா… அவசரக் குடுக்கை… இதெல்லாம் க்ளீன் பண்ணிட்டு வரேன்” என்றவள் தன் உணவை உண்ட இடத்தை சுத்தம் செய்து கொண்டே, “ஆமா! எம்.பி சீட் கிடைச்சிடும்னு எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?” என்று கேட்டாள்.

“கிடைக்கும்…அதான் விக்ரம்” என்று பெருமிதமாய் தன் காலரைத் தூக்கிவிட்டவன், “நீ பார்த்துகிட்டே இரு… நான் இந்த எலேக்ஷன்ல எம்.பி யாகி காட்டுறேன்” என்றான்.

அவள் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது. அவனோ அவள் பின்னிருந்து அணைத்துத் தன் சரசலீலைகளைத் தொடங்க, “இரு விக்ரம்” என்று அவனைத் தள்ளி நிறுத்தியவள்,

“நீ நிஜமா சொல்றியா? உனக்கு சீட் கிடைச்சுருச்சா?” என்று மீண்டும் நம்பாமல் அதே கேள்வியை மீண்டும் கேட்டாள்.

விக்ரம் கடுப்பாகி, “உனக்கு பதில் சொல்லணும்… அவ்வளவுதானே… சொல்றேன்… ஆனா இங்க இல்லை” என்றவன் அவளைத் தூக்கிக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைய, “விக்ரம்” என்று அவள் அதிர்ந்தாள்.

அவனோ அவளைப் படுக்கையில் கிடத்தி, “இதுக்கு மேல என்னால முடியாது” என்று சொல்லி அவளை நெருங்கி அவள் இதழில் முத்தம் பதிக்க வந்தவனிடம், “முதல்ல பதில் சொல்லுடா” என்று அவனைத் தள்ளிவிட்டாள்.

அவன் முறைப்பாகி, “ஏன்? என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? எனக்கெல்லாம் எவனும் சீட் குடுக்க மாட்டானா?” என்று கேட்க,

“அப்படியில்ல விக்ரம்… அவ்வளவு பெரிய கட்சில உனக்கு சீட்… காசும் இல்ல… பெரிய செலவாக்கும் இல்ல… அப்புறம் எப்படி?” என்றாள்.

விக்ரம் அவளை ஆழ்ந்து பார்த்து, “சாணக்கியத்தனம்… யாரை எங்க எப்படி கைக்குள்ள போட்டுக்கணும்கிற சாணக்கியத்தனம்… சட்டம் நேர்மை நியாயம்னு இருக்கிற உனக்கு அதெல்லாம் புரியாது” என்றவன் அவளை இழுத்துத் தன் கரத்திற்குள் கிடத்த அவள் மனம் ஏனோ அவன் தீண்டல்களை ரசிக்கவில்லை. ஏதோ புரியாத குழப்பம் அவள் மனதை ஆட்கொண்டது.

“உனக்கு ஏன் விக்ரம் அரசியலில் இவ்வளவு ஈடுபாடு?” என்று அவள் அவன் தொடுகையை உணராமல் மேலும் கேள்வி எழுப்ப அவன் நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்து, “இந்த நேரத்தில் இந்தக் கேள்வி ரொம்ப தேவையா?” என்றான்.

“ப்ளீஸ் சொல்லேன்” என்றவள் கெஞ்சலாய் பார்க்க அவன் மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டு,

“பெரிய காரணமெல்லாம் இல்ல… ஸ்கூல் டேஸ்ல ஒரு அரசியல்வாதியை சீஃப் கெஸ்ட்டா கூப்பிட்டிருந்தாங்க… அவன் ஒருதன்னுக்கு என்ன பந்தோபஸ்து… என்ன  மரியாதை… படுபயங்கரம்… சத்தியமா ஆடிப் போயிட்டேன்… இதுல மோசமான விஷயம் அவனுக்கு சரியா கூட பேசத் தெரியல… கேட்டா அவன் படிச்சதே இல்லையாம்… அன்னைக்கு முடிவு பண்ணான்… இந்த விக்ரம்… அரசியல்வாதி ஆகணும்னு” என்றதும் அவள் அவனைக் கேவலமாய் பார்த்து, “த்தூ… இதெல்லாம் ஒரு ஃபிளாஷ் பேக்கு… இதுக்கு பேரு இலட்சியம் வேற” என்று முறைத்தாள்.

“பின்ன… வாழ்ந்தா சும்மா கெத்தா அப்படி வாழணும்டி… கஷ்டப்பட்டு படிச்சு ட்ரைனிங்லாம் முடிச்சு எவனுக்கோ சல்யுட் அடிக்கிறதெல்லாம் ஒரு பொழப்பா?” என்றவன் அவள் பார்த்த அதே பார்வையோடு அவளுக்குப் பதிலடி கொடுத்தான்.

அவன் வார்த்தைகளில் முகம் வாடியவள், “என்னடா குத்தி காட்றியா? ஐபிஎஸ் னா உனக்கு அவ்வளவு ஈசியா போச்சா?!” என்ற போதே இருவருக்கும் இடையில் இருந்த நெருக்கம் காணாமல் போயிருந்தது. எந்த நொடி அவர்கள் இருவரும் விலகி வந்தனர் என்பதை அவர்களே உணரவில்லை.

“லாஜிக்கா பார்த்தா நான் சொன்னதுதானே உண்மை” என்றான் அவனும் தன்னிலையில் இருந்து இறங்கி வராமல்!

“விக்ரம் போதும்… இதுக்கு மேல பேச வேண்டாம்… அப்புறம் நமக்குள்ள தேவையில்லாம சண்டை வந்திடும்” என்றவள் சுதாரிப்பாய் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியேற, “தமிழச்சி நில்லு” என்றவன் அழைப்பை அவள் காதில் கூட வாங்கிக் கொள்ளவில்லை.

அவள் முகப்பறையில் சோபாவில் படுத்துக் கொள்ள, ‘அதென்ன அவளுக்கு அவ்வளவு திமிரு… நான் வந்து கெஞ்சி கூப்பிடணுமா?’ என்று அவனும் அவளிடம் இறங்கிப் போக மனமில்லாமல் படுக்கையில் படுத்துக் கொண்டான்.

விடிந்து வெகுநேரம் கழித்தே உறக்கம் களைந்து எழுந்தான் விக்ரம். அவன் வெளியே வந்து… செய்தித் தாளைப் புரட்டிக் கொண்டே அவளை ஒருபுறம் தேட வேலை செய்யும் பெண்மணி காபியோடு வந்து நின்றாள்.

அவன் கேட்பதற்கு முன்னதாகவே அவள் வேலைக்குப் புறப்பட்டத் தகவலைக் கூற அவனுக்கோ  உள்ளுர ஒரு எரிமலையே வெடித்தது. சீற்றமானவன் செய்தித்தாளில் தன் கவனத்தை செல்லுத்த எண்ணிய போதும், அவன் மனம் அதில் செல்ல மறுக்க அதனை மடித்து வைக்கலாம் என்ற போது ஒரு கடிதம் அதிலிருந்து தவறி விழ அவன் அதனை எடுத்து பிரித்துப் படித்தான்.

‘ஐம் ரியலி சாரி விக்ரம்… தப்பு என்னோடதுதான்… நான் உன்கிட்ட தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்டிருக்கக் கூடாது… அதுக்காக  நீயும் என் வேலையைப் பத்தி பேசி இருக்கக் கூடாது… இந்தப் பிரச்சனையை இதோட முடிச்சுக்கலாம்… இனிமே நானும் உன் வேலையைப் பத்தி பேச மாட்டேன்… நீயும் என் வேலையைப் பத்தி பேசாதே… நைட் நம்ம இரண்டு பேரும் டின்னருக்கு வெளியே போகலாம்… அப்புறமா வீட்டுக்கு வந்ததும் நம்ம அனிவர்சரியை செலிப்ரேட் பண்றோம்… ஓகே வா”

‘இதை என்கிட்ட எழுப்பி சொல்லிட்டு போயிருக்கலாம்ல’ என்று அவனுக்குள் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் அந்தக் கடிதம் அவன் மனதின் பாரத்தை லேசாய் இறக்கியிருந்தது. அவள் மீதான கோபத்தையும் கூட.

தமிழச்சி வேலையை முடித்துக் கொண்டு இரவு சீக்கிரம் புறப்படலாம் என்று அவள் எவ்வளவோ முயன்றும் நேராமாகிக் கொண்டே இருந்தது. இரவு பத்தை எட்டிய போது எல்லா வேலைகளையும் தூர வைத்துவிட்டு புறப்பட்டுவிடும் முடிவோடு கிளம்பிவிட்டாள்.

காரில் ஏறி அமர்ந்ததும் அவள் விக்ரமிற்கு அழைக்க அவன் எடுக்கவே இல்லை. தொடர்ந்து முயற்சி செய்தும் அவனிடம் இருந்து பதிலில்லை. நிறைய சாரியோடு அவள் வரிசையாய் அனுப்பிய குறுஞ்செய்திகள் பதிலில்லாமல் தேங்கி நின்றன. இரவு வெகுநேரமனதால் அதிகமான வாகனங்கள் சாலைகளில் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சென்று கொண்டிருக்க அவளுக்கோ விக்ரமைப் பார்த்து அவனை சமாதானபடுத்திவிட வேண்டும் என்ற தவிப்பு மட்டுமே மேலோங்கி இருந்தது.

‘என் லெட்டரை நீ பார்க்கலையோ? இன்னும் என் மேல கோபமாத்தான் இருக்கியா?’ என்று புலம்பிக் கொண்டே அமர்ந்திருந்தவள் அப்போதே தன் வாகனத்தை இமைக்கும் நேரத்தில் கடந்து சென்ற அந்த வெளிநாட்டு உயர் ரக காரைப் பார்த்து அதிர்ந்தாள்.

அவளுக்கு எதோ சரியாய் படவில்லை. ஆபத்திற்கான அறிகுறிகள் மனதில் தோன்ற, “சிட்டிக்குள்ள ஏன் இவ்வளவு ஃபாஸ்ட்… டிரைவர் அந்த வண்டியை ஃபாலோ பண்ணுங்க” என்று சொல்லிக் கொண்டே அவள் அந்த வாகனம் சென்ற திசையைக் காண்பித்தாள்.

அதோடு அந்த வாகனத்தின் எண்ணை நோட் செய்யலாம் என்று பார்த்தால் அது ஃபார் ரெஜிஸ்டிரேஷன் என்றிருந்தது. ஆனால் அது இந்தியாவில் ஓடும் ரொம்பவும் அபூர்வ ரக வாகனம். மேல்தட்டு மக்களிலும், பெரிய பதவியில் இருப்பவர்களின் பயன்பாட்டில் மட்டுமே இருந்தது. அவள் தன் பேசியில் அந்த வாகனத்தைப் படம் எடுத்துக் கொண்டாள்.

உடனடியாய் அந்த வாகனத்தைப் பற்றி சொல்லி அந்தத்த ஏரியா அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க, அது ஒன்றும் பலனளிக்கவில்லை. அந்த வாகனத்தின் வேகம் யாருக்கும் அசைந்து கொடுக்கவில்லை.

அந்த வாகனம் படுவேகமாய் சென்று கொண்டிருந்தது. அவளுக்கோ சீற்றமானது.

“அந்த வண்டியை ஓவர்டேக் பண்ணி நிறுத்துங்க” என்று அவளே பிடிவாதமாய் அந்த காரை நிறுத்தியாக வேண்டுமென்ற முயற்சியில் இறங்கினாள். அந்தக் காரின் வேகத்திற்கு இவள் வாகனம் நெருங்குவது அசாத்தியமாக இருந்தது. அவள் அப்போதும் தன் முயற்சியை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

நேரம் கடந்து செல்வதை உணராமல் அந்த வாகனத்தைப் பிடிப்பதிலேயே அவள் மும்முரமாய் இருக்க அப்போது அவள் எதிர்பாராத அந்த பயங்கர விபத்து நிகழ்ந்தது. அவளே ஒருநொடி  மிரண்டு போனாள்.

முன்னே சென்ற அந்தக் காரின் வேகத்திற்கு இரையானாது ஓரமாய்  நிறுத்தத்தில் வரிசையாய் நின்ற இருசக்கர வாகனங்களும் அங்கே நின்றிருந்த சிலரும். அந்த காரும் அதற்கு மேல் செல்ல முடியாமல் தடைப்பட்டு நிற்க  தமிழச்சி உக்கிர கோலமாய் மாறியிருந்தாள்.

தன் வாகனத்தில் இருந்து இறங்கியவள்  காயம் அடைந்தவர்களை உடனடியாய் தன் வாகனத்திலேயே ஏற்றி  மருத்துவமனை அழைத்து செல்ல பணித்துவிட்டு அந்த உயர் ரக கார் அருகில் சென்றாள்.

ஓட்டுனர் பக்கமாய் இருக்கும் கதவை அவள் அழுந்தத் தட்ட அது திறந்த மறுநொடி அந்தக் காரின் ஓட்டுநரைப் பிடித்து வெளியே இழுக்க, அவளோ ஒரு  பெண்!

அந்தப் பெண்ணின் முகத்தைக் கூட சரியாய் பார்க்காமல் தமிழச்சி ஆவேசமாய் அவள் கன்னத்தில் அறைய அப்போது, “தமிழச்சி வேண்டாம்” என்று அவள் ஆருயிர் கணவனின் குரல் வெகுஅருகாமையில் கேட்டது. அவள் புரியாமல் அவன் எங்கே என்று தேடினாள். அவனும் அதே வாகனத்தில் அந்தப் பெண்ணோடுதான் வந்தான் என்பதைக் கண்டு அவள்  எந்தளவுக்கு அதிர்ச்சிக்குள்ளானாள் என்பதை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.