நடுநிசியில் காதல்
ஈஷ்வருக்கு அபிமன்யுவிடம் சூர்யா பழகும் விதத்தைப் பார்க்க எரிச்சல் உண்டான நிலையில் இப்போதுத் தன்னை நோக்கி இவள் எந்த உரிமையில் கேள்வி எழுப்புகிறாள் என்ற அதீத கோபமும் ஏற்பட்டது.
இருப்பினும் அவளிடம் அந்தக் கோபத்தை வெளிப்படுத்த மனமில்லாமல், “நத்திங்…” என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொள்ள சூர்யாவோ அபிமன்யுவிற்கும் ஈஷ்வருக்கும் இடையில் அப்படி என்னதான் ரகசியம் இருக்கக் கூடும் என யோசனையில் ஆழ்ந்தாள்.
அபிமன்யுவின் பார்வையில் வெளிப்பட்ட சினமும் ஈஷ்வரின் கண்களில் தெரிந்த துவேஷமும் அவளை மிரட்சியடைய வைத்திருக்க, அவள் முகம் அந்த எண்ணத்தைப் பிரதிபலித்ததை ஈஷ்வரின் மனமும் உணர்ந்தது.
அவன் அப்போது தன் கைப்பேசியில் நேரத்தைப் பார்த்த பின்னர் அவளை நோக்கி, “லேட்டாயிடுச்சுல்ல… உன்னை வீட்டிலேயே டிராப் பண்ணிறேன்… டிரைவர் கிட்ட அட்ரெஸ் சொல்லு” என்று சொல்ல அவள் பதிலுரைக்காமல் அவனைப் பார்த்து தலையை மட்டும் அசைத்துவிட்டு தன் விலாசத்தை ஓட்டுநரிடம் உரைத்தாள்.
அவளின் அந்த மௌனத்தையும் அவர்களுக்கு இடையில் உண்டான அந்த இறுக்கமான சூழலையும் விரும்பாதவன், “சூர்யா” என்றழைத்து அவள் கவனத்தை ஈர்க்க அவள் அவனை நோக்கினாள்.
அவனோ ஆர்வமாய் “ரம்யா உண்மையிலேயே உன்னோட ஓன் சிஸ்டரா?” என்று கேள்வி எழுப்பினான்.
“ம்ம்ம் எஸ்” என்றவள் தலையசைக்க அவன் குழப்பமுற்று,
“சுந்தர் அங்கிள் கூட ஒரு தடவை இன்னொரு டாட்டர் இருக்கிறதைப் பத்தி சொன்ன மாதிரி ஞாபகமே இல்லயே!” என்றான்.
சூர்யா ஒருவித அலட்சியப் பாவனையோடு, “அவருக்கு ஞாபகம் இருந்தாதான் சொல்லியிருப்பாரே!” என்றாள்.
“அப்படின்னா?”
“உங்களுக்கு தெரியாதா ஈஷ்வர்? எங்க பேரண்டஸ் கிட்டத்தட்ட பிரிஞ்சு இருபது வருஷமாயிடுச்சு… நான் அப்பா கூட வளர்ந்தேன்… என் சிஸ்டர் ரம்யா அம்மா கூட… இப்படித்தான் எங்க லைஃப்”என்று சொல்லும் போது அவள் பார்வையில் ஏக்கமும் அழுத்தமான வருத்தமும் வெளிப்பட்டது.
“அப்படியா?” அவன் நம்பமுடியாமல் கேட்க , “ம்ம்ம்… ” என்று அவள் விரக்தியோடு தலையசைத்தாள்.
“நீயும் உன் சிஸ்டரும் உங்க அம்மா அப்பாகிட்ட பேசி அவங்களை சேர்த்து வைக்கலாம்ல” ஈஷ்வரின் இந்தக் கேள்வியில் அவள் அதிர்ச்சியுற,
“நாங்களா?” என்றாள்.
“பின்ன வேற யாரு… நீதான்… பாஸ்னு கூடப் பார்க்காம எனக்கே அட்வைஸ் பண்ற அதிகப்பிரசங்கிதானே… உங்க பேரண்ட்ஸுக்கும் அந்த மாதிரி அட்வைஸ் பண்ணி சமாதானப்படுத்த வேண்டியதுதானே!” நேரம் பார்த்து அவன் குத்திக் காட்ட அவள் முகம் கோப உணர்வைக் காட்டியது.
“முடிஞ்சா செஞ்சிருக்க மாட்டோமா… அவங்க இரண்டு பேருக்கிடையில இருக்கிற ஈகோவுக்கு முன்னாடி நாங்க என்ன சொன்னாலும் நோ யூஸ்… போதாக் குறைக்கு அப்பா மும்பையை விட்டு வரவே மாட்டேங்கறாரு… அவருக்கு வேலைதான் முக்கியம்… அம்மாவும் அவர் வந்து பேசாம சமாதானமாகறதுக்கு சான்ஸ்சே இல்ல” என்றவள் விரிக்தியான பார்வையோடு,
“இவங்களை மீட் பண்ண வைக்கிறதே கஷ்டம்னும்போது சேர்த்து வைக்கிறதெல்லாம்… எப்படி?” என்று அவள் நம்பிக்கையின்றி பேசும் போதே கார் சூர்யாவின் வீட்டு வாசலில் நின்றது.
அவள் அவனிடம் சொல்லிவிட்டு இறங்க முற்படும் போது,”நான் ட்ரை பண்ணட்டுமா சூர்யா?” என்று கேட்டான்.
“என்ன?” என்று அவள் புரியாமல் அவனைப் பார்க்க, “உங்க அம்மா அப்பா இரண்டு பேரையும் ஒண்ணா சேர்த்து வைக்கிறேன்னு சொன்னேன்” என்றான் அழுத்தமாக!
அவன் சொன்ன வார்த்தைகள் அவளுக்கு வியப்பைக் கூட்டினாலும் நம்பிக்கை இல்லா மனநிலையோடு, “உங்க டைம்தான் வேஸடாகும்… வீணா ட்ரை பண்ணாதீங்க” என்று சொல்லியபடி அவள் காரிலிருந்து இறங்கினாள்.
“இந்த ஈஷ்வரால முடியாததுன்னு எதுவும் இல்ல… நான் செய்யணும்னு நினைச்சா செஞ்சு முடிச்சிடுவேன்” என்றவன் கம்பீரமாய் சொல்ல,
“அப்படின்னா ட்ரை பண்ணுங்க…அப்படி நடந்தா எனக்கும் என் சிஸ்டருக்கும் அதைவிட சந்தோஷமான விஷயம் எதுவுமில்ல” என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கிவிட அதை மறைக்க எண்ணியும் அவள் முகம் காட்டிக் கொடுத்தது.
அதனைக் கவனித்தவன், “ரியலி! அப்போ அந்த சந்தோஷத்தை நான் ஏற்படுத்தித் தர்றேன்… பட் அதுக்குப் பதிலா நீ என்ன செய்வ சூர்யா?” என்று அவன் சூட்சமமாய் புருவத்தை உயர்த்திக் கேட்க,
அவள் சற்றும் யோசிக்காமல் உணர்ச்சிவசத்தால், “வாட்டெவர்… என்ன கேட்டாலும் அது என்னால பாஸிபிளா இருந்தா செய்றேன்” என்றாள்.
‘உன்னால மட்டும்தான் நான் கேட்கப் போறது பாஸிபில் மை டார்லிங்!’ என்று ஈஷ்வரின் மனதில் எண்ணிக் கொண்டாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல்,
“ஒகே … சீ யூ… டுமாரோ மோர்னிங் ஷார்ப் அட் நைனோ க்ளாரக்” என்று அவன் சொல்ல சூர்யா தலையை மட்டும் அசைத்தாள். பின் அவன் கார் சீறிக் கொண்டு வெளியேறியதைக் கவனித்தவள் மெல்ல வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவள் உள்ளே நுழைந்த மாத்திரத்தில் ரம்யாவும் அவள் தாய் சந்தியாவும் காரில் வந்து போனது யாரென விசாரிக்க ஈஷ்வரைப் பற்றி உரைத்த அதே நேரம் அவனை உயர்வாக பாராட்டியும் பேசினாள். அத்தகைய இடத்தை இப்போதைக்கு ஈஷ்வர் சூர்யாவின் மனதில் நிலைநிறுத்திக் கொண்டான்.
ஈஷ்வர் திட்டமிடாமலே எல்லாம் அவனுக்கு சாதகமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன் என்ன கேட்கப் போகிறான் என அறியாமலே அப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுத்துவிட்டாள்.
இனி சூர்யாவின் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் அவளுக்கு எதிராய் நிற்கப் போகிறது. இதற்குப் பிறகாய் அவள் கடந்து வரப் போகும் பாதையை அவள் கற்பனை கூட செய்திருக்கமாட்டாள்.
*******
அன்று இரவு நடுநிசியில் வானில் மதியோன் நட்சத்திரத்தோடு பூமியை ரசித்துக் கொண்டிருக்க, சூர்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயம், அவளின் கைப்பேசி ஒலித்து எழுப்பிவிடத் தூக்கக் கலக்கத்தோடு அதில் ஒளிர்ந்த எண்ணைக் கவனித்தவள், யாரெனத் தெரியாமல் அந்த அழைப்பைத் துண்டித்தாள்.
ஆனால் மீண்டும் அவள் கைப்பேசி ஒலிக்க எரிச்சலோடு எடுத்தவள், “அறிவில்ல……. எதுக்கு இந்நேரத்தில கால் பண்றீங்க?” என்று கேட்க எதிர்புறத்தில் பதில் இல்லாமல் போக,”இடியட்!” என்று சொல்லி அழைப்பை மீண்டும் துண்டித்தாள்.
ஆனால் விடாமல் அவள் கைப்பேசி அழைக்க கண்களைக் கசக்கியபடி, ‘ஹூ இஸ் தட் இடியட்?’என்று எரிச்சலோடு போனை எடுக்க அவள் பேசுவதற்கு முன் ஒரு குரல் எதிர்புறத்தில், “நான் அபிமன்யு” என்று சொன்னதும் அவள் திகைப்போடு, “அபிமன்யுவா?” என்று கேட்டாள்.
“ம்ம்ம்ம்… அதே அறிவுகெட்ட இடியட்தான்” என்று அவன் கோபத்தோடு சொல்ல உதட்டைக் கடித்துக் கொண்டவள் மெல்ல தன்னருகில் இத்தனை இடையூறிலும் உறங்கிக் கொண்டிருக்கும் தன் சகோதிரியைத் தொந்தரவு செய்யாமல் சத்தமின்றி முகப்பறைக்கு எழுந்து வந்தாள்.
அவள் மெலிதான குரலில், “என்ன அபி… இந்த நேரத்துல?!” என்று கேட்க,
“தூங்கிட்டிருந்தியா… டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று வினவினான்.
அவன் குரலைக் கேட்ட நொடி அவள் தூக்கம் மொத்தமும் தடம் மாறிப் போனது. ஆனால் அதனைக் காட்டிக் கொள்ள விரும்பாமல் பொய்யானக் கோபத்தோடு,
“என்ன கேள்வி இது? இந்த நேரத்துல தூங்காம என்ன செய்வாங்களாம்… இதுல டிஸ்டர்ப் பண்ணிட்டேனான்னு கேள்வி வேறயா… இட்ஸ் ஒகே… என்ன விஷயம்னு சொல்லுங்க” என்றாள்.
“அது… ” என்று முதலில் தயங்கியவன் பின் தெளிவுப் பெற்று, “எனக்கு இப்போ உன்னைப் பார்க்கணும்” என்றான்.
சூர்யா இதைக் கேட்டு அதிர்ந்தபடி, “பார்க்கணுமா?!… அதுவும் இப்பவா?! இட்ஸ் மிட் நைட் அபி…” என்று சொல்ல,
“பரவாயில்ல” என்றான் அவன் வெகுசாதாரணமாக!
“பரவாயில்லயா? அதை நான் சொல்லணும்”
“மீட் பண்ண முடியுமா முடியாதா?” என்று அவன் அழுத்தமாய் கேட்க,
“முடியவே முடியாது… நாளைக்கு டைம் இருந்தா மீட் பண்ணுவோம்” என்றாள்.
“நோ… இப்பவே…” என்றான் பிடிவாதமாக.
சூர்யா அவன் சொன்னதைக் கேட்டு மௌனமானவள் பின் அமைதியான குரலோடு, “இப்பவேன்னா… எப்படி முடியும்?” என்று கேட்டாள்.
“நீ வீட்டிற்கு வெளியே வந்தா முடியும்” என்றான்.
“வீட்டிற்கு வெளியவா… அதுவும் இந்த நேரத்துலயா?” என்று கேட்டவள் ஆவலோடுக் கதவினைத் திறந்து பார்வையை அலைபாயவிட்டாள்.
அந்த வீட்டின் முன்புறம் இருந்த வரந்தாவில் அவள் கண்களுக்கு நட்சத்திரங்களும் நிலவையும் தவிர்த்து எதுவுமே தென்படாமல் போக மீண்டும் கைப்பேசியில், “என்னை ஏமாற்ற ஏதாச்சும் டிராமா பண்றீங்களா அபி?”என்று கேட்டபடி வெளியே வந்தவளை ஒரு கரம் பற்றி இழுக்க கொஞ்சம் மிரட்சியடைந்தவள் பின்னர் அபியின் முகத்தைப் பார்த்து அமைதியடைந்து பெருமூச்செறிந்தாள்.
அவன் விழிகளோ அவளையே பார்த்திருக்க, “இந்த நேரத்துல இங்க எதுக்கு வந்தீங்க… என் சிஸ்டரும் அம்மாவும் பார்த்துட்டா…” என்று சீற்றமாய் கேட்டாள்.
“பார்த்துட்டா இப்ப என்ன… நீதான் கைவசம் நிறைய பொய் வைச்சிருப்பியே… எதையாவது சொல்லி சமாளி” என்றான்.
அவன் பதிலைக் கேட்டு எரிச்சலடைந்தவள், “சமாளிக்கவா… என்ன விளையாடறீங்களா? முதல்ல இங்கிருந்து கிளம்புங்க… யாராச்சும் பார்த்துத் தொலைக்கப் போறாங்க… ” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் செல்லப் பார்த்தவளைக் கரத்தைப் பிடித்துப் போகவிடாமல் தடுக்க,
“இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” என்று அழுத்திக் கேட்டாள்.
“பேசணும்” என்றான்.
“நாளைக்கு மீட் பண்ணி நிறைய பேசுவோம்… இப்போ கிளம்புங்க… எனக்குத் தூக்கம் வருது… நான் போய் தூங்கப்போறேன்… கையை விடுங்க” என்றாள்.
அபிமன்யு அவள் கரத்தை விடாமலே, “என்னை மட்டும் தூங்க விடாம பண்ணிட்டு… நீ போய் தூங்கப் போறியா” என்றான்.
“நான் எப்போ உங்களைத் தூங்க விடாம பண்ணேன்?” என்று அவள் குழப்பமாய் கேட்க,
“பண்றதெல்லாம் பண்ணிட்டு எதுவும் தெரியாத மாதிரியே கேளு…” என்றான்.
“சீரியஸா புரியல… புரியற மாதிரி சொல்லுங்க”
“ப்ரபோஸ் பண்ற இலட்சணமாடி அது… அப்படியே உன்னை” என்று கோபித்துக் கொண்டபடி அவளை நெருங்கியவன் பின் என்ன காரணத்தினாலோ அமைதியடைந்தான்.
அவனின் தவிப்பைப் புரிந்தவள் அதனை உள்ளூர ரசித்தாலும் வெளியே முறைப்போடு, “என்ன பண்ணுவீங்க?” என்று கேட்டு எள்ளலாய் ஒரு பார்வை பார்த்தாள்.
“வேண்டாம் சூர்யா… வெறுப்பேத்தாதே ஏற்கனவே நான் கோபத்துல இருக்கேன்” என்றான்.
“உங்களுக்குக் கோபத்தைக் காட்ட இந்த டைம்தான் கிடைச்சுதா?”
அபிமன்யுவோ தான் சூர்யாவைப் பார்க்க எண்ணி அது இப்போது சண்டையாய் உருவெடுக்கிறதே என சிந்தனையில் ஆழ்ந்திருந்தான்.
சூர்யாவிற்கோ அவன் வீட்டில் தன்னை எப்படி எல்லாம் பரிகசித்தான் என எண்ணிக் கொண்டவள் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவனிடம் கொஞ்சம் விளையாடிப் பார்த்தாள். யோசனையில் ஆழ்ந்திருந்தவனை நோக்கி, “என்ன மிஸ்டர். அபி… உயிரோட இருக்கீங்களா?” என்று அவள் கிண்டாலாய் வினவ,
“அது ஒண்ணுதான்டி பாக்கி… அதையும் எடுத்திரு” என்றான்.
“நானும் வந்ததிலிருந்து பார்க்கறேன்… பொண்டாட்டியைக் கூப்பிடுற மாதிரி என்னவோ டீ போட்டு கூப்புடறீங்க… என்ன நினைச்சிட்டிருக்கீங்க உங்க மனசுல?”
“மவளே! இப்போ நீ மட்டும்… என் பொண்டாட்டியா இருந்திருந்த” என்று கேட்டுவிட்டு அவன் அவளை எரிப்பது போல் பார்க்க,
“ஓ அந்த நினைப்பு வேறயா உங்களுக்கு… அந்த மாதிரி எல்லாம் கற்பனை கூடப் பண்ணிக்காதீங்க மிஸ்டர்… ஏன்னா நான் ஒண்ணும் உங்ககிட்ட சீரியஸா எல்லாம் ப்ரப்போஸ் பண்ணல… நீங்க அன்னைக்கு கரிசன் சோழால வைச்சு என்னை எவ்வளவு இன்ஸல்ட் பண்ணீங்க…
போதாக் குறைக்கு உங்க வீட்டில என்னை என்ன எல்லாம் சொன்னீங்க… அதுவும் நான் எது சொன்னாலும் பொய்யுன்னு… ஸோ அதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு உங்களை வெறுப்பேத்தத்தான் அப்படி சொன்னேன்… அதை நீங்க சீரியஸா எடுத்துக்கிட்டுத் தூங்காம இப்படி நடுராத்திரில என்னைப் பார்க்க வருவீங்கன்னு சத்தியமா நான் எதிர்பார்க்கல” என்றாள்.
“இப்பவும் நீ சொல்றது பொய்தான்” என்றவன் எகத்தாளமாய் புன்னகைக்க,
“நான் எது சொன்னாலும் சார் நம்பமாட்டீங்க… அப்போ நான் ப்ரப்போஸ் பண்ணதை மட்டும் ஏன் நம்பணும்?” என்று அவள் புருவத்தை உயர்த்தினாள்.
“முதல்ல நானும் நம்பல… ஆனா எங்க அப்பாகிட்ட நீ என்னை விட்டுக் கொடுக்காம பேசின விதம்… ஈஷ்வர் பக்கத்துல வைச்சுகிட்டு என்னைத் தூக்கி வைச்சுப் பேசின உன் தைரியம்… என் திறமை மேல நீ வைச்சிருந்த நம்பிக்கை… இந்தக் காரணம் போதாதா… நீ சொன்னது பொய்யிலங்கறதுக்கு”
“அதுக்கு பேரு எல்லாம் காதல் இல்ல… நான் உங்க மேல வைச்சிருக்குற மரியாதை”
“ம்ம்ம்… அப்போ நீ ஒத்துக்கமாட்ட”
“அப்படி ஒரு தாட் எனக்கு இருந்தாதானே நான் ஒத்துக்க முடியும்”
“நீ என்னை லவ் பண்றன்னு நான் ப்ரூவ் பண்ணிட்டா?”
“பார்க்கலாம்… ப்ரூவ் பண்ணுங்க ”
“ப்ரூவ் பண்ணிடுவேன்… அப்புறம் உனக்குத்தான் கஷ்டம்”
அவள் எகத்தாளமானப் பார்வையோடு, “சும்மா இப்படி எல்லாம் பேசி சமாளிக்காதீங்க” என்று சொல்ல,
“சரி ப்ரூவ் பண்றேன்… பட் நீ கொஞ்சம் கண்ணை மூடணும்” என்றான்.
“எதுக்கு?”
“சொல்றேன் மூடு” என்று அவன் அழுத்தமாய் உரைக்க, அவளும் சாதரணமாய் தம் விழிகளை மூடிக் கொண்டாள்.
அபிமன்யு அப்போது அவளைத் தன் கரங்களால் பிணைத்து அவளின் இதழ்களைத் தன் இதழ்களால் முத்தமிட அந்தக் கணம் அவனுக்குள் சிக்குண்டு மீள முடியாமல் தவித்தவளை தன் முத்தத்தால் மூழ்கடித்தான்.
சூர்யா அந்தத் தருணத்தை வெறுக்கவும் முடியால் ஏற்கவும் முடியாமல் இருதலைக் கொல்லி எறும்பென தவித்தவளின் காதல் உணர்வைத் தூண்டிவிட்டவன் முடியாமல் அவள் மீதான காதலையும் கோபத்தையும் ஏக்கத்தையும் ஒரு சேர தீர்த்துக் கொண்டு அவளைத் தன் கரத்திலிருந்து விடுவித்தான்.
சூர்யாவிற்கோ பூமி தன் சுழற்சியை நிறுத்திவிட்டதோ என்றபடி சில நொடிகள் ஸ்தம்பித்து நின்றாள்.
அவன், “சூர்யா!” என்று அவள் முகத்துக்கு நேராய் சுடக்கிடவும் அவள் உணர்வு பெற்று அந்த நொடியே அடங்கா கோபத்தோடுப் பார்த்தாள். அவனோ குறும்புத்தனமாய் அவளைப் பார்த்துப் புன்னகைத்துக் கண்ணடித்தான்.
சூர்யா அதீத கோபத்தோடு, “ஏன்டா இப்படி பண்ண ராஸ்கல்… இதுக்குதான் என் கண்ணை மூட சொன்னியா?” என்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்க அவனோ சிரித்தபடி, “நான் சொன்னதும் நீ எதுக்குடி கண்ணை மூடின” என்று கேட்டான்.
“நான் கண்ணை மூடினா அந்த சான்ஸை யூஸ் பண்ணிக்கிறதா?”
“இப்படி ஒரு சான்ஸ் கிடைச்சா யாராச்சும் மிஸ் பண்ணுவாங்களா?”
“அபி… திஸ் இஸ் நாட் பேஃர். நான் உங்க மேல வைச்சிருந்த நம்பிக்கையை இப்படி உடைச்சுட்டீங்களே!”
“என்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு… நீ என் நம்பிக்கையை உடைக்கல… அப்படிதான் இதுவும்” என்று அவன் முறைப்பாய் கூற,
“நோ அபி… நான் ஒண்ணும் உங்க நம்பிக்கையை உடைக்கல. நான் உங்களை உண்மையிலேயே லவ் பண்ணேன்… ஆனா” என்றவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ம்ம்ம்… இப்போ ப்ரூவாயிடுச்சா?” என்று கேட்டான் அபி.
“இப்படித்தான் ப்ரூவ் பண்ணுவீங்களா… ஐ ஹேட் யூ… இனிமே என் கண் முன்னாடியே வராதீங்க… நான் உங்களைப் பார்க்கக் கூட விருப்பப்படல” என்று சொல்லித் தன் விழிகளின் நீரைத் துடைத்தபடி செல்லப் பார்த்தவளின் கரத்தைப் பிடித்துத் தன்னருகில் இழுத்து அணைத்துக் கொள்ள, “அபி… விடுங்க” என்றாள்.
“இப்ப எதுக்கடி இவ்வளவு கோபம்… நீ என்கிட்ட விளையாடிப் பார்த்த… நானும் உன்கிட்ட விளையாடினேன்… அவ்வளவுதானே”
“இதுக்குதான் நடுராத்திரல கிளம்பி வந்தீங்களா?”
“ஏய்… நான் உன்னைப் பார்க்கலான்னுதான் வந்தேன்… பட் கிஸ் பண்ற ஐடியாவை நீதான் கொடுத்த”
“நானா?”
“பின்ன… லவ் பண்றதை ஒத்துக்கறதுல உனக்கென்னடி ஈகோ… ”
“எனக்கு ஒண்ணும் ஈகோ எல்லாம் இல்ல” என்று சொல்லி முகத்தை வேறு புறம் திருப்பிக் கொள்ள
அபிமன்யு ஏளனமானப் புன்னகையோடு, “ஆமாம் ஆமாம் உனக்கு ஈகோலாம் இல்ல… கொஞ்சம் திமிரு… தலைக்கனம்… அப்புறம் நுனிமூக்குக்கு மேல கோபம்… ” என்று அவன் சொல்லிக் கொண்டே போக அவன் அணைப்பை உதறி விலகியவள், “போதும் இதுக்கு மேல நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்… ப்ளீஸ் கிளம்புங்க” என்றாள்.
“ஒகே… நான் கிளம்பறேன்… நாளைக்கு வைத்திய சாலைக்குப் போகணும் … வர்றதுக்கு நாளாகும்… பரவாயில்லயா” என்று கேட்க,
சூர்யா சற்றும் மாறாத கோபத்தோடு, “ப்ளீஸ்… தயவு செய்து கிளம்புங்க… இங்க யாரும் உங்களைப் பார்க்காம ஏங்கிட்டு இல்ல” என்றாள்.
அபி புன்னகையோடு, “அப்படின்னா சரி… ஆனா அப்புறமா நீ எனக்கு ஃபோன் பண்ணி உங்களைப் பார்க்கணும் அபின்னு… கெஞ்ச மாட்டேல்ல” என்று கேட்க அவளும் ஈகோவை விடாமல், “மாட்டவே மாட்டேன்” என்றாள்.
“தென் ஒகே… பை” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
சூர்யாவின் மனமெல்லாம் அவன் வாசலைக் கடந்த நொடியே அவனைப் பார்க்காமல் பேசாமல் எப்படி இருக்கப் போகிறோம் என ஏங்க, அவன் கொடுத்த முத்தமும் அவர்களுக்கு இடையில் நடைபெற்ற செல்ல சண்டையையும் நினைத்தபடியே அவளின் இரவு உறக்கமின்றி கறைந்து போனது.
அபிமன்யுவை இந்த நடுநிசி இரவில் சூர்யாவைப் பார்க்க வேண்டும் என்று அவன் மனம் அழுத்தமாய் அறிவுறுத்த என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை என அந்த நொடியே அவளை சந்திக்கவும் வந்தான்.
சில காரியங்கள் நிகழ அதற்குப் பின்னணியில் அதற்கான அழுத்தமான காரணம் ஒளிந்திருக்கும். அப்படித்தான் அவர்களின் இந்த சந்திப்பும்.
இனி மரணத்தோடு போராடும் நாட்களில் இத்தகைய காதல் சரசம் புரிவதற்கான தனிமையும் சந்தர்ப்பமும் அவர்களுக்கு வாய்க்கப் பெறுவது அபூர்வமே.