imk-23

imk-23

௨௪

கிரீடம்

செந்தமிழின் முகம் ரொம்பவும் வாட்டமுற்று உடல் மெலிந்த நிலையில்  அவரின் இயல்புத் தோற்றமே ரொம்பவும் வித்தியாசமாய் காட்சியளித்தது. அவர் படுத்திருந்த மெத்தையைக் கொஞ்சம் சாய்வாய் நிமிர்த்தி, அதன் அருகில் அமர்ந்து கொண்டு ரவி கண்கலங்கிக் கொண்டிருந்தார். மகேந்திரபூபதியும் தன் மருமகளின் கையைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் வடிக்க, “நான் நல்லா இருக்கேன் மாமா… நீங்க அழாதீங்க” என்று ஆறுதல் சொல்லவும் அவர் முகம் மலர, “இல்லம்மா… நான் அழல… சந்தோஷத்துல” என்று அவர் திக்கித் திணறினார்.

அப்போது செந்தமிழ் தன் தம்பியைப் பார்க்க அவர் முகத்திலும் கண்ணீர் கோடுகள். 

“சின்ன புள்ள மாதிரி… நீயும் ஏன்டா? ரொம்ப உணர்ச்சிவசப்படறாரு… மாமாவை அவர் ரூமுக்குக் கூட்டிட்டுப் போ” என்றதும் ரவி கைத்தாங்கலாய் மகேந்திரனை அழைத்துக் கொண்டு சென்றார்.

மதி மட்டும் தமிழோடு அவர் அறையில் இருக்க, தமிழ் விபத்திற்கு முன்னும் பின்னும் நடந்த நிகழ்வுகளைத் தன் நினைவுகளில் மீட்கப் போராடிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் நினைவுப்படுத்திக் கொள்ள விழையும் விஷயங்கள் எதுவும் நினைவுக்கு வராமல் ஒருவித  அவஸ்தை நிலையில் இருந்தார்.

அப்போது மதி தன் அத்தையின் தலை முடியை சீர் செய்து வாரி முடிக்கும் போது லேசாய் காயமப்பட்ட இடத்தில் வலியை உணர்ந்த செந்தமிழ், “ஸ்ஸ்” என்று முகம் சுருங்க,

“சாரி அத்தை” என்றாள் மதி அத்தையின் முகம் பார்த்து!

அவர் பரவாயில்லை என்பது போல் மெலிதாய் புன்னகை புரிந்தார். ஆனால் அந்த வலி அவருக்கு நடந்த அந்தக் கோர விபத்துக்கு அழைத்துக் கொண்டு போனது. அந்த நொடி நடந்த நிகழ்வுகள் யாவும் வரிசை கட்டி அவர் நினைவுகளில் அலைமோத அதில் மூழ்கிப் போயிருந்தார்.

மதி அப்போது தன் அத்தையின் நடுநெற்றியில் புருவங்களுக்கு இடையே அழகாய் குங்குமத்தை வைத்துவிட, அவர் மனதில் ஆழப்பதிந்த நினைவுகளோடு வேறு சில விஷயங்களும் அரங்கேறின.

அவர் உடனே, “தமிழச்சி எங்கே?” என்று குரல் எழும்பாமல் மெலிதாய் மதியிடம் கேட்க, “மாமா அவளுக்கு ஃபோன் பண்றேன்னு சொன்னாரு…” என்றுசொல்லி, “ம்ம்… பண்ணி இருப்பாரு” என்று பதில் உரைத்தாள்.

செந்தமிழ் உடனே, “மாமாவைக் கூப்பிடு மதி … நான் அவர்கிட்டபேசணும்” என்று சொல்ல மதி உடனே, “டாக்டர் கிட்ட பேசிட்டு இருக்காரு நான் போய் கூப்பிட்டு வரேன்” என்று அறையை விட்டு வெளியேறினாள்.

செந்தமிழ் முகத்தில் சொல்லவொண்ணா வேதனை. அந்த தவிப்போடு அவர் அமர்ந்திருக்க, “என்னாச்சு… என்ன பண்ணுது உங்களுக்கு?” என்று அருகிலிருந்த  நர்ஸ் கேட்க, அவர் ஒன்றும் இல்லை என்பது போல் தலையசைத்து சமாளித்தார்.

வீட்டின் வாயிலைத் தாண்டி வெளியே வீர் டாக்டரிடம் உரையாடிக் கொண்டிருந்தார். செந்தமிழை கவனித்துக் கொள்ள அவர் சொன்ன அறிவுரைகள் யாவையும் அவர் குறித்து கொள்ள, “இவ்வளவு சீக்கிரம் கோமால இருந்து எழுந்தது ரொம்பப் பெரிய விஷயம்… மிராக்கிள்னு தான் சொல்லணும்… எல்லாத்துக்கும் உங்க கவனிப்பும் அரவணைப்பும்தான் காரணம்” என்று மருத்துவர் தன் வியப்பை வெளிப்படுத்த,

வீரேந்திரனுக்கு முகம் இயல்பாய் மலர்ந்தது. “அதெல்லாம் விடவும் என் மனைவியோட மனோதிடம்… அதான்அவளை எழுப்பி உட்கார வைச்சிருக்கு” என்று அவர் பெருமையாய் சொல்ல, “அதுவும் உண்மைதான்” என்று மருத்துவர் ஆமோதித்தார்.

அப்போது மதி அங்கே வந்து தமிழ் அழைப்பது குறித்து வீரேந்திரனிடம் சொல்ல அவர் மருத்துவரை வழியனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தார்.

“மாமா… அப்புறம் தமிழச்சிக்குக் கால் பண்ணி… சொன்னீங்களா?” என்று மதி வீர் பின்னோடு வந்தபடி கேட்க,

“அவ ஃபோனை எடுக்கல… மிஸ்ட் கால் பார்த்துட்டு அவளே கால் பண்ணுவா…” என்று  சொல்லிக்  கொண்டே அவர் தன் மனைவியின் அறைக்குள் நுழைய, அப்போது தமிழச்சி அங்கிருந்த நர்சை பார்த்து தலையசைத்து ஏதோ சொல்ல அவள் அவ்விடம் விட்டு அகன்றாள். 

அதன் பின் செந்தமிழ் தன் கணவரைத் தவிப்பாய் பார்த்து, “வீர்… என் ரூமுக்குப் போய்” என்று செய்கை செய்து எதையோ எடுத்து வர சொல்ல வீரேந்திரன் அதிர்ந்து, “ஏன்? எதுக்கு?” என்று புரியாமல் கேட்டார்.

“பார்க்கணும்… ப்ளீஸ்” என்று செந்தமிழ் முடியாமல் பேச, வீர் முகம் குழப்பமானது. சில நிமிடங்கள் யோசித்தவர், “சரி” என்று தலையசைத்து விட்டுப் போக அப்போது செந்தமிழ் முகத்தில் இருந்த தவிப்பும் எதிர்ப்பார்ப்பும் அபரிமிதமாய் இருந்தது.

வீர் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் செந்தமிழின் பதட்டம் கூடிக் கொண்டே போனது. தான் யூகிப்பது போல் எதுவும் நடந்திருக்கக் கூடாது என்று அவர் மனதில் அவதியுற்றுக் கொண்டிருக்க, வீர் ஒரு பெட்டியோடு உள்ளே நுழைந்தார்.

பழங்கால நகைப்பெட்டியாக அது தென்பட, அதன் அகலம் வடிவமைப்பு மற்றும் வேலைப்பாடு அதன் பழமையைப் பறைசாற்றியது. 

தமிழ் பெட்டியைப் பார்த்ததும் அதனைத் திறக்க சொல்லிக் கண்ணசைக்க அவரும் அவ்வாறே அதன் பூட்டைத் திறந்தார். 

செந்தமிழ் ஆவலாய் அதனுள் எட்டிப்பார்க்க ராஜகம்பீரமான கிரீடம் தென்பட்டது. மின்னிய அந்தக் கிரீடம் சில அபூர்வமான கற்களைப் பதித்திருந்தது. கண்ணைப்பறிக்கும் விதமாய் இருந்த அழகை சிலநொடிகள் உற்று  நோக்கியவருக்கு அப்போதே அதிலிருந்த குறைபாடுகள் தெரிந்தது.

அந்த நொடி செந்தமிழுக்குக் கும்பாபிஷேகம் அன்று ராஜராஜேஸ்வரி சிரசில் சூட்டியிருந்த கிரீடத்தின் அழகு கண்முன் விரிந்தது.

“என்ன தமிழ்?” என்று சிலையாய் சமைந்திருந்த தன் மனைவியின் தோளைத் தொடவும் அவர் தாங்கமுடியாத ஏமாற்றத்தோடு கண்ணீர் வடித்தார்.

“தமிழ் என்னாச்சு… அழாதே… நீ டென்ஷன் ஆக கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டுப் போயிருக்காரு” என்று வீர் பதற,

 “எப்படிங்க… டென்ஷன் ஆகாம… நான் இப்படிப் பார்த்துப் பார்த்து பாதுகாப்பா வைச்சிருந்த போதும்… கிரீடத்தை மாத்திட்டாங்களே… ஐயோ! இப்போ நான் என்ன பண்ணுவேன்?” என்று அவர் தலையைப் பிடித்துக் கொள்ள, வீர் முகத்திலும் அதிர்ச்சி உணர்வு எழும்பியது. 

வருடத்திற்கு ஒருமுறை கோவில் திருவிழாவின் போது மட்டுமே அந்த கிரீடம் ராஜராஜேஸ்வரி சிலைக்கு சூட்டப்படுவது வழக்கம். அந்த கண்கொள்ளா காட்சியைக் காணவே பல ஊர்களில் இருந்து மக்கள் சிம்மவாசலில் வந்து குவிந்திருப்பார்கள்.

செந்தமிழ் ஒன்பது நாள் திருவிழா முடியும் வரை கோவிலிலேயே இருந்து அதன் பின் அவரே கிரீடத்தைத் திரும்பவும் எடுத்து வந்துவிடுவார். அப்படியிருக்க எங்கே எப்படி இந்த தவறு நேர்ந்திருக்கும் என்று இருவருமே ஸ்தம்பித்த நிலையில் இருந்தனர்.

ஆனால் செந்தமிழுக்கு இந்த சந்தேகம் அவருக்கு ஏற்பட்ட விபத்திற்கு முன்னதாகவே உதித்தது. தமிழச்சியும் விக்ரமை அந்த திருவிழாவின் போது சந்திக்க வைத்துப் பேச வைத்து அவர்கள் பிரச்சனையை முடித்துவிடலாம் என தமிழும் ஆதியும் திட்டமிட்டனர். அவர்கள் திட்டப்படி சந்திப்பு நிகழ்ந்தது. ஆனால் அவர்களுக்கு இடையில் சமாதானம்தான்  நிகழவில்லை. 

அந்த வருத்தம் ஒருபக்கம் இருக்க, ஏறுக்கு மாறாய் திருவிழா நடந்து முடியும் ஒன்பதாவது நாள் கோவில் வாயிலில் பெரிய களேபரமும் கலாட்டாவும்  நிகழ்ந்தது. காவல்துறை மற்றும் தமிழ்தான் அவர்களை விலக்கிவிட சிலமணிநேரத்தில் அந்த சர்ச்சைகள் நடந்து ஒருவாறு அடங்கிய பின் திருவிழாவும் முடிவுற்றது.

அதன் பின்னர் தமிழிடம் கிரீடம் ஒப்படைக்கப்பட அவர் இருந்த மனஉளைச்சலில் அதனை சரியாக கவனிக்காமல் வாங்கிவந்துவிட்டார்.

 இதற்கிடையில் திருவிழா முடிந்து ஒரு வாரம் கழித்து ஏனோ அவர் மனதிற்கு சரியாகப்படவில்லை. கோவிலில் நடந்த பிரச்சனைகள் இயல்பானதல்ல. யாரோ திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பார்கள் என்று எண்ணியவர் உடனே காஞ்சிபுரம் புறப்பட்டார்.

அங்கே கோவில் கண்காணிப்புப் பதிவுகளை ஆராய்ந்ததில் அவரின் சந்தேகம் வலுக்க,  இது குறித்துப் பேச தன் கணவருக்கு  கோவிலில் இருந்தே அழைக்க அவர் நேரில் பேசிக் கொள்ளலாம் என்றார். அதன் பின் தமிழ் அங்கிருந்து கிளம்பித் தன் நண்பன் வீட்டிற்கு வந்து தன் சந்தேகத்தை உரைத்தார்.

“நீ சொல்ற மாதிரி  அனாவசியமா ஒரு கலாட்டாவைப் பண்ணறதுல அவங்களுக்கு என்ன லாபம்?” என்று ரகு கேட்க, அங்கேதான் செந்தமிழின் மனம் கலவரப்பட்டது. அப்போதுதான் கிரீடத்தைப் பற்றிய எண்ணம் உதித்தது. ஆனால் தெளிவாய் தெரியாமல் இது பற்றி அவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. 

சரியாய் அந்த நேரம் தமிழச்சி அங்கே ஏதோ விசாரணைக்காக வேண்டி ரகுவைப் பார்க்க வந்தாள். அதன் பின் தமிழச்சித் தன் தாயோடு சேர்ந்து அவர் வந்த காரில் புறப்பட,  அந்த கோர விபத்து நிகழ்ந்தது அப்போதுதான்.

ஒருவாறு  செந்தமிழுக்கு அவரின் கொலை முயற்சி உட்பட நடந்த நிகழ்வுகளின் காரணகாரியம் பிடிப்பட்டது. வீரேந்திரன் ஆழ்ந்த யோசனையோடு அந்த கிரீடத்தைப் பார்த்துவிட்டு, “தமிழச்சிகிட்ட இதைப்பத்தி” என்று சொல்லும் போதே, 

 “சிம்மா கிட்ட இதைப்பத்தி பேசணும்” என்று தமிழும் கூற, இவர்கள் வார்த்தைகள் மட்டுமல்ல. பார்வைகளும் மோதிக் கொண்டன. 

வீரேந்திரன் முகத்தில் எரிமலையே வெடித்தது.

“பேசணுமா? அவன் என்னவோ பக்கத்துக்கு ரூம்ல  இருக்க மாதிரி கேட்குற…” என்றவர் எகத்தாளமாய் கேட்டாலும் அதில் அவர் கோபத்தின் விகிதமே அதிகமாய் இருந்தது.

“எனக்குத் தெரியும்… அவன் இங்கே இல்லைன்னு” செந்தமிழ் எங்கேயோ பார்வையை வெறிக்க,

“எனக்கும் தெரியும்… அது உனக்குத் தெரியும்னு” வீர் முறைத்துக் கொண்டே பதிலளித்தார்.

“இல்ல வீர்… நான் உங்களுக்கு எல்லாத்தையும் அப்புறம்” என்று செந்தமிழ் பேசிக் கொண்டிருக்கும் போதே, “நான் எதையும் கேட்கல… நீயும் எதுவும் சொல்ல வேண்டாம்” என்றார். அவர் குரலில் தன்மை இருந்தாலும் வார்த்தைகளில் பெருத்த கோபம்!

“வீர்… சிம்மா கிட்ட” என்று தமிழ் விடமால் அதையே கேட்க, வீர் மனைவியை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து, “நம்பர் தெரியுமா?” என்று கேட்டார்.

“ஹ்ம்ம்… வாஷிங்கடன் போனதும் எனக்கு ஒரு நம்பர் கொடுத்தான்… அது அந்த ப்ளாக் டைரில” என்றவர் தடுமாற்றத்தோடும் தயக்கத்தோடு சொல்ல விழிகள் இடுங்கத் தன் மனைவியைப் பார்த்துவிட்டு அவர் சொன்ன அந்த டைரியை எடுத்துவந்து அதில் குறிக்கப்பட்டிருந்த எண்ணிற்கு தன் பேசியின் மூலம் அழைத்து ஸ்பீக்கர் ஆன் செய்தார்.  

செந்தமிழ் பலவீனமாய் இருக்கும் நிலையும் பேசியைக் கையில் ஏந்தி பேசுவது கூட சிரமமாயிருந்தது. எதிர்புறத்தில் செல்பேசி அடித்துக் கொண்டிருக்க யாரும் எடுக்கவில்லை.

 “உன் புள்ள என் நம்பரைப் பார்த்து எடுப்பானோ மாட்டானோ?” என்று சொல்ல, “அதெல்லாம் எடுப்பான்” என்று தமிழச்சி சொல்லி முடிக்கும் போது சிம்மா அழைப்பை ஏற்றிருந்தான்.

அதன் பின் செந்தமிழ் தன் மகனின் பெயரை அழைக்க, அவர் குரல் கேட்டு சிம்மாவின் குரல் மகிழ்ச்சியில் திளைத்தது.

வீரின் கோபம் அந்த நொடி உச்சநிலையை எட்டிவிட சிம்மாவிடம், “ஒ! அப்போ உனக்கு ஆக்சிடன்ட் நடந்த விஷயம் தெரியும்… தெரிஞ்சுதான் நீ வரல… அப்படிதானே?” என்று அவர் சிம்மாவிடம் கொதிப்போடு கேட்க இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அவன் மௌனநிலையில் இருந்தான். 

அப்போது செந்தமிழ் கணவரிடம், ‘வீர் ப்ளீஸ்’ என்று  மகனுக்காகப் பரிந்து கொண்டு கெஞ்ச அவர்  தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் அந்த நொடியே அறையைவிட்டு விடுவிடுவென வெளியேறினார்.

அதற்கு பிறகு தாயும் மகனும் தங்கள் உணர்வுகளை பரிமாறிக் கொண்டனர். இறுதியாய் தமிழ் கிரீடம் களவாடப்பட்ட விவரத்தைக் கூற, சிம்மாவிற்குத் தான் கேட்பது நிஜமா என்று நம்பமுடியவில்லை. நம் நாட்டுப் பொக்கிஷங்கள் கடத்தபடுவதை தடுக்கும் முனைப்பில் அவன் இருக்க, தன் வீட்டுப் பொக்கிஷத்தில் அவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியிருக்கக் கூடும் என்று அவன் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.

அதிர்ச்சியில் மௌனகெதியில் இருந்தவனிடம் நடந்த விவரங்களை செந்தமிழ் மேலோட்டமாய் கூறி கொண்டிருக்க சிம்மா பலத்த யோசனைக்குப் பின், “நிச்சயமா சைதன்யா… நம்ம கிரீடத்தை இங்க கடத்தி வந்திருக்க மாட்டான் ம்மா… அவனுக்கு இப்போ நெருக்கடி ஜாஸ்தி ஆகிட்டு இருக்குன்னு அவனுக்கு நல்லா தெரியும்… அதுவும் தமிழச்சி அங்க நெருக்கடி கொடுத்துட்டு இருக்கா… இன்னொரு பக்கம் அமெரிக்கா போலீஸ்… அதனால இப்போ அவன் அவ்வளவு பெரிய அகலக்கால் வைக்க மாட்டான்” என்று அறிவுறுத்த,

“உஹும்… என் மூளைக்கு இதெல்லாம் யோசிக்கிற தெம்பு கூட இல்லை சிம்மா… நம்ம கிரீடம் கை விட்டுப் போயிட்டா… அப்புறம்” என்றவர் வேதனையோடும் வலியோடும் உரைத்தார். அவர் குரல் மொத்தமாய் உடைந்த நிலையில் இருந்தது.

“அப்படி எல்லாம் போகாது ம்மா… நான் உடனே இந்தியா வரேன்… நீங்க எதையும் யோசிக்காம உடம்பைப் பார்த்துகோங்க… ப்ளீஸ்” என்றவன் தன் அம்மாவிற்கு தேறுதல் வார்த்தை சொல்ல அது அவர் காதுக்கு எட்டினாலும் மனதை அமைதிப்படுத்த முடியவில்லை. 

அந்த கிரீடம் அவர் தன் உயிருக்கும் மேலாய் பாதுகாத்து வருகிறார். அதனால்தான் விபத்து நடந்த தருணத்தில் கனவு போல கிரீடம் அவர் கண்முன்னே தோன்றியது. அதை முன்னமே அவர் உள்மனம் கணித்து அவருக்கு சொல்லி இருக்கிறது. 

இந்த கவலையோடு இருந்த செந்தமிழின் உடலில் இருந்த தொய்வு அவர் மனதையும்  பீடித்தது. ஆதலாலேயே அவரால் தெளிவான மனநிலையோடு எதையும் சிந்திக்க முடியவில்லை. அதேநேரம் மகன் வருவதாக சொன்ன வார்த்தை அவருக்கு லேசாய் தைரியம் கொடுத்தது.

அப்போது அறையை விட்டு வெளியே சென்ற வீர் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அறைக்குள் பிரவேசித்து, “நீ கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடும்மா… டாக்டர் சொல்லி இருக்காரு… ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண கூடாதுன்னு… தலையில அடிபட்டு இருக்கு… அதுவும் கொஞ்சம்  கொஞ்சமாதான் ரெகவர் ஆக முடியும்… ஸோ நீ பாட்டுக்கு எதையாச்சும் யோசிச்சுகிட்டு இருக்காதே” என்று நிமிர்த்தியிருந்தப் படுக்கையை சாய்க்க முற்ப்பட, “யோசிக்காதேன்னா எப்படி… கிரீடம் தொலைஞ்சது உங்களுக்கு அவ்வளவு சாதாரணமா இருக்கா?” என்றார்.

“வேற சமயமா இருந்தா என் ரியாக்ஷன் வேறயா இருக்கும்… ஆனா இப்போ… எனக்கு அந்த கிரீடத்தை விட நீதான் முக்கியம்” என்றார்.

அவர் கணவனைக் கோபமாய் பார்க்க வீர் மீண்டும்,  “உனக்கு வேணா அந்த கிரீடம் மதிப்பான விஷயமா இருக்கலாம்… ஆனா எனக்கு இந்த உலகத்திலேயே மதிப்பான விஷயம் நீதான்” என்று சொல்ல தமிழிற்கு இந்த வார்த்தைகள் ஏனோ சந்தோஷத்தை நல்கவில்லை.  

“எனக்கும் ஒன்னும் ஆகாது வீர்… இப்போ நீங்கதான் இந்த விஷயத்துல” என்று சொல்லிக் கணவனின் கரத்தை அவர் பிடிக்க, 

“இதுல நான் என்ன செய்யறது… அதான் உன் பிள்ளைகிட்ட எல்லாம் தெளிவா சொல்லிட்ட இல்ல… அவன் எல்லாம் பார்த்துப்பான்… சார் வேற டிடெக்டிவ் வேலையெல்லாம் பார்க்க ஆரம்பிச்சிட்டாரு” என்று வீர் சொன்ன மறுகணம் தமிழச்சி முகம் இருளடர்ந்து போனது.

“நீங்க அவனைப் புரிஞ்சுக்காம” என்று செந்தமிழ் பேச ஆரம்பிக்க,

“உன்னை கெஞ்சிக் கேட்டுக்கறேன்… நான் உன் பிள்ளையைப் பத்தி எதுவும் சொல்லல… நீ தேவையில்லாம் ஸ்ட்ரைன் பண்ணிக்காதே… திரும்பியும் உனக்கு ஏதாவதுன்னா… நானும் என் பொண்ணும்தான் அவஸ்தைப்படணும்” என்று அவர் சிம்மாவின் அக்கறையின்மையைக் குத்திகாட்டினார்.  

இந்த வார்த்தையைக் கேட்ட நொடி, “அது சரி… தமிழச்சி ஏன் இன்னும் வரல? எங்கே அவ?” என்று செந்தமிழ் கேட்க, “அவ காஞ்சிபுரம் போயிருக்கா… வந்திருவா… தெரியல… ஃபோனை எடுக்கல” என்று வீர் சொல்லி கொண்டிருக்கும் போதே,

“நம்ம கோவிலுக்கா  போனா?” என்று தமிழ் அதிர்ச்சியாய் கேட்கும் போதே மகளுக்கு என்னவோ ஏதோ என்ற பதட்டம் முகத்தில் தென்பட்டது.

வீர் முகத்திலும் மாறுதல் உண்டாக, போன முறை கோவிலுக்கு சென்று விட்டு வரும் போதே இருவருக்கும் அந்த விபத்து நேர்ந்தது.

மனைவியின் முகம் பார்த்தே அவர் மனநிலை அறிந்தவர், “தமிழச்சிக்கு ஒன்னும் இருக்காது… நான் கால் பண்ணி பார்க்கறேன்” என்று தன் பேசியை எடுத்துக் கொண்டு வெளியேறிவிட செந்தமிழின் மனம் கலவரப்பட்டது.

அவரின் எண்ணத்திற்கு ஏற்றார் போல் தமிழச்சி பிரச்சனையில்தான் சிக்கிக் கொண்டிருந்தாள். அவளை சுற்றி பத்து பேர் பயங்கரமான தோரணையில் நின்று கொண்டிருந்தனர். தூணோடு தூணாய் அங்கிருந்த பெரிய தூணில் அவளை கட்டி போட்டிருந்தனர். ஆனால் வாய் கட்டப்படவில்லை. அங்கே அவள் கத்தினாலும் அது யார் காதுக்கும் கேட்காது. அந்த இடத்தில் கடலலை சத்தம் ரொம்பவும் நெருக்கமாய் காதை கிழித்துக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தது. அவற்றையெல்லாம் உணர்ந்தவள் அவர்கள் என்னதான் பேசுகிறார்கள் என்று மௌனமாய் அவர்களை எல்லோரையும் பார்வையிட்டுக் கொண்டிருந்தாள். 

அப்போது அவர்களில் ஒருவன், “ஆமா… உன் கூட ஒரு வளர்ந்து கெட்டவன்  வந்தானே… எங்கடி அவன்?” என்று கேட்க அவள் அவர்களை எல்லாம் சுழற்றிப் பார்த்துவிட்டு, “உங்களை எல்லாம் பார்த்ததும் பயந்து ஓடிட்டாரோ என்னவோ?” என்றவள் அமைதியாக சொல்ல அந்த அமைதிக்குப் பின் கிளம்பப் போகும் புயலை அவர்கள் அறிந்தார்களோ  என்னவோ?!

“அதெல்லாம் இருக்காது… பொய் சொல்றா… அவனைப் பார்த்தா பயப்படற மாதிரியா தெரியுது“ இப்படி சொன்னது குமார்தான். இவான் அடித்த அடியை தடவிக் கொண்டே அவன் சொல்ல,

“அந்த வெள்ளைக்காரன்… ஒரு வேளை போலீஸ் கிட்ட போயிருக்க போறான்” என்று இன்னொருவன் பதட்டமாய் தெரிவிக்க எல்லோரின் முகத்திலும் யோசனைக்குறி!

“நம்ம இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் போடு… அந்த வொயிட் லெகான் அங்க வந்தா… அப்படியே கோழி அமுக்குற மாதிரி அமுக்க சொல்லு… அவனை அப்படியே கடலில் கட்டி தூக்கி போட்றுவோம்… நீந்தியே அவன் ஊர் போய் சேரட்டும்… இல்ல சாகட்டும்” என்றான் அவர்களில் தலைமையானவன். தமிழச்சிக்கு சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது. சிரமப்பட்டு அவள் அதனைக் கட்டுக்குள் கொண்டு வர 

அப்போது அந்த கூட்டத்தின் தலைவன் போல் இருந்தவன், “ஆமா… எங்கடி அந்த கிரீடம்?ஒழுங்கா சொல்லிடு… இல்ல இங்கேயே நீ சமாதி” என்று சொல்லி வெறிகொண்டு அவள் கழுத்தை நெரிக்க வந்தான்.

அவள் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள். ராஜராஜேஸ்வரி கிரீடத்தைப் பற்றியா இவர்கள் கேட்கிறார்கள் என்று அவள் திகைக்க அவன் மேலும், “உன்னை தவிர அதை வேற யாரும் எடுத்திருக்க முடியாது” என்றான்.

அவர்கள் பேசும் விதமே ஒன்றும் அவளுக்குப் பிடிபடவில்லை. எங்கே ? என்று கேட்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. ஆனால் தன் வீட்டுக் கிரீடத்தை தான் எடுத்ததாகக் கூறுவதன் பின்னணி என்ன என்றுதான் அவளுக்கு சத்தியமாய் புரியவில்லை.

error: Content is protected !!