mu-30

mu-30

மீண்டும் கொங்கு தேசத்தில்

கோவிலில் இருந்து புறப்பட்ட சூர்யாவின் மனமோ தாங்க இயலாத வேதனையில் உழன்றது. எந்த காதலுக்காக ஈஷ்வரை எதிர்த்துக் கொண்டாளோ இப்போது அந்தக் காதலையே விட்டுக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகும் என்று அவள் கனவிலும் எண்ணியிருக்கவில்லை.

 அபியின் உயிரை விடவும் காதல் பெரிதல்ல என்று சொல்வது சுலபமாயிருந்தாலும் அதை நடைமுறையில் செயல்படுத்தும் மனோதைரியம் அவளிடம் இல்லை. இன்னொரு புறம் ஈஷ்வரால் அபியின் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் என்ற கவலை வேறு அவளை ஆட்கொண்டு  தவிப்புற செய்து கொண்டிருந்தது.

எந்நிலையிலும் தைரியத்தை விடாமல் எந்தப் பிரச்சனையானாலும் எதிர்கொள்ள வேண்டும் என்ற சூர்யாவின் துணிவும் இப்போது அவளை விட்டுத் தொலைதூரம் சென்றுவிட, திக்கில்லாத காட்டில் சிக்கிக் கொண்டவளாக சூர்யாவின் நிலைமையிருந்தது.

அவள் வீட்டினை அடைந்த போது வாசலில் நின்றிருந்தக் காரை கவனித்த நொடி ஈஷ்வரின் வருகையை அறிந்து கொண்டாள். அதிர்ச்சியோடு வாசலிலேயே நின்றவளுக்கு உள்ளே சென்று அவனை எதிர்கொள்ளவே வெறுப்பாய் இருந்தது. 

அந்தளவுக்கு அவனின் நடவடிக்கை அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்க, அவன் என்ன திட்டத்தோடு வந்திருக்கிறான் என்பதை அறியவாவது தான் உள்ளே சென்றுதானாக வேண்டும் என விருப்பமின்றி உள்ளே நுழைந்தாள்.

ஈஷ்வர் முகப்பறையில் கம்பீரமாய் இருக்கையில் வீற்றபடி அவளின் தந்தையிடம் பேசிக் கொண்டிருக்க அங்கே நின்றிருந்த அவளின் தாய் சூர்யாவைப் பார்த்து, “இதோ சூர்யா வந்துட்டாளே!” என்று அறிவிக்க அவனோ எதிர்பார்ப்போடு அவளின் மீது பார்வையைத் திருப்பினான். சூர்யாவின் கண்கள் வெறுப்பை உமிழ்ந்தபடி நிற்க, 

சுந்தர் அவளை நோக்கி, “பாஸ்… வந்திருக்காரு… வாங்கன்னு கூட கூப்பிடாம சிலை மாதிரி நிக்கிற” என்றார்.

“என்னை திடீர்னு பார்த்ததும் சூர்யாவிற்குப் பேச்சு வரல போல… ஷாக்காயிட்டிருப்பா” என்றான் ஈஷ்வர்.

“ஆமாம்… திடீர்னு இப்படி உங்களைப் பார்த்ததும் ஷாக்காயிட்டேன்…  முன்னாடியே ஒரு வார்த்தை வரேன்னு சொல்லியிருக்கலாமே?” என்று சூர்யா ஈஷ்வரிடம் கேட்க,”சொல்லியிருந்தா” என்று அவன் அவளைப் பார்த்து விஷமமாய் புன்னகையித்தான்.

“நல்லா கிராண்டா வெல்கம் பண்ணியிருக்கலாம்…” என்று அவள் சொன்ன தொனியில் இருந்த அர்த்தத்தை ஈஷ்வர் உணர்ந்து கொள்ள,

அது புரியாமல் அவளின் தந்தை அவனை நோக்கி, “சூர்யா சொல்றதும் சரிதான்… நீங்க என்கிட்டயாச்சும் வரேன்னு ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே  தம்பி” என்று வினவினார்.

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்லை… நான் கெஸ்ட்டா வரல உங்க வீட்ல ஒருத்தனாதான் வந்திருக்கேன்…” என்று உரைக்கும் போது சந்தியா காபிக் கோப்பையோடு வந்து நின்றார்.

சில நிமடங்களில் ஈஷ்வர் சந்தியாவிடமும் ரொம்பவும் இயல்பாய் பேசிப் பழகினான். சுந்தரின் புறம் திரும்பி ரம்யாவைப் பற்றியும் விசாரிக்க, அவளும் சில நிமடங்களில் மருத்துவமனையில் இருந்து வந்து சேர்ந்தாள். ரம்யா ஈஷ்வரைப் பற்றி அறிமுகமான சில நொடிகளில் தன் பெற்றோர்களை இணைத்து வைத்த காரணத்திற்காக நன்றி கூறியதில்லாமல் அவனின் மதிப்பான பேச்சு, எளிமையாய் பழகும் திறன் அவளை வியப்பில் ஆழ்த்தியது.

ரொம்பவும் குறுகிய நேரத்தில் அவன் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாய் பழகிவிட்டிருந்தான். இத்தனை  நேரத்திலும் அவன் பார்வை சூர்யாவின் பாவனைகளை மறவாமல் கவனித்துக் கொண்டிருந்தன. நொடி நேரத்தில்  எல்லோரையும் கவர்ந்துவிடும் அவனின் வல்லமையே அவனின் அபாரமான திறமை போல என எரிச்சலோடு எண்ணிக் கொண்டாலும் யாரிடமும் அவள் தன் மனதின் எண்ணத்தைக் காட்டாமல் சிரமப்பட்டு அந்த நொடி நடித்துக் கொண்டிருந்தாள். ஈஷ்வர் புறப்படுகிறேன் என சொன்ன ஒற்றை வார்த்தைதான் அவளுக்குள் நிம்மதியை ஏற்படுத்தியது.

ஆனால் அவன் கிளம்புவதற்கு முன்னதாக சூர்யாவைப் பார்த்து,

 “நாளைக்கு காலையில பத்து மணிக்கு ஃப்ளைட் சூர்யா… அப்புறம் ஒரு டுவன்டி டேஸ் ஆகும் வொர்க் முடிய… எல்லாத்துக்கும் ப்ரிபேர்டா வந்துடு…” என்று சொன்னவனைப் பார்த்து அவள் அதிர்ச்சியில் உறைந்தபடி நிற்க அவன்  எல்லோரிடமும் விடைபெற்றுவிட்டு வேகமாய் வெளியேறினான்.

சூர்யா அவசரமாய் அவன் பின்னோடு வந்து நின்று காரில் ஏறப்போனவனிடம், “யாரைக் கேட்டு நீ எனக்கும் சேர்த்து ப்ரோக்ராம் ஃபிக்ஸ் பண்ணிட்டிருக்க… அதுவும் டுவன்டி டேஸ்… முடியவே முடியாது”  என்றாள்.

“நான் உன்கிட்ட பெர்மிஷன் எல்லாம் கேட்கல… இன்ஃபர்மேஷன் சொன்னேன்” என்றான்.

“நீ என்னைக் கம்பெல் பண்ண முடியாது… நான் வரமாட்டேன்” என்று சொல்லிவிட்டு செல்லப் பார்த்தவளிடம், “நீ வரணும் சூர்யா… அப்பதான் நம்ம சவால் படி அபிமன்யு என்கிட்ட தோற்கிறதை நீ பார்க்க முடியும்… ” என்றான்.

சூர்யா குழப்பமாக அவனை நோக்கித் திரும்ப ஈஷ்வர் காரில் ஏறிவிட்டு,

 “நாளைக்கு நீ வரலன்னா… இப்ப நாட் ரீச்சபிள்ல இருக்குற அபிமன்யு…  எப்பவும் நாட் ரீச்சபிள்ல போயிடுவான்… அப்புறம் உன் இஷ்டம்”  என்று சொன்ன மறுகணம் கார் கதவை மூடிவிட்டு,  வேகமாய் விரைந்தான்.

ஈஷ்வரின் வார்த்தைகள் சூர்யாவைக் கலங்கடித்திட அபிமன்யுவிற்கு என்ன நேர்ந்துவிடுமோ என ஒவ்வொரு நொடியும் நெஞ்சம் பதறத் தொடங்கிய அதே சமயத்தில் ஈஷ்வரோடு தனியாய் பயணிப்பதை எண்ணும் போதே அவள் தேகமெல்லாம் நடுக்கமுறச் செய்தது.

அந்த இரவு விடியாமலே நீண்டு கொண்டிருக்கக் கூடாதா என்று ஏங்கியபடி உறங்காமல் படுக்கையில் கிடந்தவளின் தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் சரிந்து போயிருந்தது. பொழுது புலரத் தொடங்க நிலமகளை தம் ஆயிரம் கரங்களால் சிறையெடுத்துக் கொண்டான் ஆதவன்.

வேறுவழியில்லாமல் எழுந்து ஒரு இயந்திரம் போல சென்னை ஏர்போர்ட்டிற்கு செல்லத் தயாரானவள் கண்ணாடியின் முன் நின்ற போது அவள் கண்ட பிம்பத்தை அவளாலயே நம்பமுடியவில்லை. 

முதல்முறையாய் கண்ணாடியில் பிரதிபலித்தது அவளின் பயந்த முகம்தான். ஈஷ்வரோடு இருக்கப் போகும் தருணங்களைக் குறித்த அழுத்தமான அச்சம். எனினும் அதனை சற்றும் விரும்பாதவள் அவள் பிம்பத்திடமே,

 “நான் ஏன் பயப்படணும்? அந்த ஈஷ்வரால் என்னை என்ன பண்ணிட முடியும்… கண்டிப்பா அபிமன்யுகிட்ட ஈஷ்வர் தோற்க்கத்தான் போறான்… அதை நான் பார்க்கத்தான் போறேன்…” என்று தீர்க்கமாய் உரைத்துவிட்டு  மனோதிடத்தை வரவழைத்துக் கொண்டு தெளிவுபெற்றவளாய் புறப்பட்டாள்.

சென்னை விமான நிலையத்தை அவள் வந்தடைந்த நொடி அவள் சுற்றிலும் பார்வையை அவனைத் தேடியபடி  அலைபாயவிட கைப்பேசியில் அவனை அழைக்கவும் விருப்பமில்லாமல் தன் பெட்டியைப் பிடித்து சாய்வாய் நின்றபடி காத்திருந்தவளின் மெல்லிய இடுப்பை ஒரு கரம் வளைக்க பதறியபடி விலகித் திரும்பியவள் பார்வையால் வெறுப்பை உமிழ்ந்தாள்.

 “யூ ஆர் டிஸ்கஸ்டிங் ஈஷ்வர்” என்று அவள் விலக,  அவனோ வசீகரமான புன்னகையோடு அவளைப் பார்த்து கண் சிமிட்ட அவனை அழுத்தமாய் முறைத்துக் கோபத்தை வெளிப்படுத்திவிட்டு பதில் பேசாமல் முன்னே தன் பெட்டியை இழுத்துக் கொண்டு நடந்தாள்.

சென்னையிலிருந்து கோயம்புத்தூர் புறப்படும் விமானத்தில் இருவருமே தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.

சூர்யா விமானத்திலிருந்து இறங்கும் வரை ஈஷ்வரின் புறம் பார்வையைக் கூட திருப்பவில்லை. அவளின் கோபத்தைத் தாண்டிய இந்த நிராகரிப்பு அவனுக்குள் அதீதமான எரிச்சலை உண்டாக்கியிருந்தது.

அவர்களின் எண்ணங்கள் எந்த இடத்தில் நிறைவேறாமல் முடிவுற்றதோ அங்கயே அவர்கள் போராட்டம் மீண்டுமே தொடர இருக்கிறது. இனி வரப் போகும் நாட்கள் அவர்கள் மூவரின் வாழ்க்கையையும் முற்றிலுமாய் புரட்டிப்  போடவும் காத்திருந்தது.

மதி கோவை விமான நிலையத்திற்கு அவர்கள் இருவரையும் அழைத்துச் செல்ல வந்திருந்தான். மதிக்குத் தன் பாஸைப் பார்த்த மாத்திரத்தில் முகம் அத்தனை பிரகாசமடைய அதே பிரதிபலிப்பு ஈஷ்வரின் முகத்திலும் இருந்தது. மதி சூர்யாவிடமும் இயல்பாய் விசாரிக்க, அவளும் பெயருக்கென்று அவனிடம் பதிலுரைத்தாள்.  

அதுமட்டுமின்றி அவள் எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல்  அழுத்தமாகவே அவர்களோடு வந்தாள். ஈஷ்வரும் மதியும் ஏதோ ரகசியமான சம்பாஷணைகளில் ஈடுபட,சூர்யாவின் கவனமோ அவர்களிடம் இல்லை.

 அவள் அப்படி எதிலும் ஆர்வமின்றி பொருட்படுத்தாமல் இருக்க, ஈஷ்வர் அப்போதைக்கு அவளை அவள் போக்கிலேயே விட்டிருந்தான். அன்று மாலையே கோவை பிராஞ்சில் நடந்த மீட்டிங்கில் ஈஷ்வருக்கு வரவேற்புகள் பலமாய் நடக்க,  அங்கேயும் அவனின் பேச்சு வல்லமையால்  அங்கிருந்த எல்லோருமே ஈர்க்கப்பட்டனர்.

மீட்டிங் நன்றாகவே முடிந்த நிலையில் ஈஷ்வரும் மதியும் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்தபடி உரையாடிக் கொண்டிருந்தனர்.

ஈஷ்வர் மதியை நோக்கி,  “எல்லா ஏற்பாடும் பக்காவா செஞ்சிட்டல்ல மதி…” என்று கேட்க

மதி தலையசைத்தபடி, “எஸ் பாஸ்” என்றான்.

“ஏதாச்சும் தப்பா நடந்துச்சு” என்று முறைக்க மதி அவனின் பார்வையின் கூர்மையால் அஞ்சியபடி,

கண்டிப்பா நடக்காது பாஸ்… எல்லா ஏற்பாடும் பக்காவா பண்ணியாச்சு… இந்த தடவை ஒரு சின்ன தப்பு கூட நடக்காது” என்று உறுதி கொடுக்க ஈஷ்வரும், “ம்ம்ம்… பார்க்கலாம்” என்றான்.

இப்படியாக அவர்கள் பேசிக் கொண்டிருக்க ஈஷ்வரின் கைப்பேசி அவந்திகாவின் அழைப்பை அறிவிக்க,  மதி அந்த அறையை விட்டு நாகரிகமாய் வெளியேறினான்.

ஈஷ்வர் அழைப்பை ஏற்று, “எஸ் மாம்… நானே பேசணும்னு நினைச்சேன்… நீங்களே கால் பண்ணிட்டீங்க” என்றான்.

அவந்திகா மறுபுறத்தில், “அது இருக்கட்டும்… எப்போ மும்பைக்கு வருவ தேவ்?” என்று வினவ,

கொஞ்சம் வொர்க் இருக்கு மாம்… முடிஞ்சதும்” என்றான்.

பிராஞ்ச் மீட்டிங் எல்லாம் முடிஞ்சிடுச்சு இல்ல… இன்னும் என்ன வொர்க்” என்று சந்தேகமாய் கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்ல ஒரு ரிசர்ச் சென்ட்ர் ஓபன் பண்ணலாம்னு ஒரு ஐடியா…  அது ரிகாடிங்கா” என்று சொல்லும் போதே

அவந்திகா உடனடியாக, “என்கிட்ட இதைப்பத்தி சொல்லவே இல்லையே” என்றார்.

நானே சொல்லலாம்னு நினைச்சேன்… அதுக்குள்ள நீங்களே”

அவன் சொன்ன அந்த காரணம் நம்பகத்தன்மை கொண்டதாக இல்லையெனினும் அதை குறித்து அவர் பேசாமல் அமைதியாய் இருந்துவிட்டு மீண்டும் யோசனையோடு,

ஒகே அது போகட்டும்… உன்கிட்ட வேறு ஒரு விஷயம் கேட்கணும்” என்றார்.

ம்ம்ம்… சொல்லுங்க மாம்” 

 “இப்பதான் நான் சூர்யாகிட்ட பேசினேன் ஈஷ்வர்” என்று சொன்ன நொடி அவன் தன்னை பற்றி அவள் என்னவெல்லாம் சொல்லி இருப்பாளோ என்று அவன் அப்படியே சிந்தினையில் ஆழ்ந்துவிட,

அவந்திகா மீண்டும், “நீ செய்றது ரொம்ப தப்பு தேவ்” என்றார்.

ஈஷ்வர் தெரியாதவன் போல், “சூர்யா உங்ககிட்ட என்ன சொன்னா?” என்று வினவினார்.

அவ சொன்னதை இப்பவும் என்னால நம்ப முடியல தேவ்… ரொம்ப ஷாக்கிங்கா இருக்கு” என்று அவந்திகா உரைத்த பிறகு ஈஷ்வர் பதில் பேசாமல் மௌனமாகவே இருந்தான்.

உனக்கு சூர்யாவைக் கல்யாணம் பண்ணி வைக்க நானும் ஆசைப்பட்டேன் தேவ்… ஆனா அவளுக்கு விருப்பமில்லன்னு சொல்லும் போதும் நீ வற்புறுத்துறது சரியில்ல” என்றார்.

ஈஷ்வர் இப்போதும் பதில் பேசாமல் அமைதியாயிருக்க அவந்திகா மேலும், “ஏன் ஸைலன்ட்டா இருக்க தேவ்… பதில் சொல்லு” என்றார்.

என்ன பதில் சொல்றது?… உங்களுக்கு என் விருப்பத்தை விட அவளோட விருப்பம்தான் பெரிசா போச்சு… இல்ல?” என்றான் கோபமான தொனியில்.

அப்படி இல்ல தேவ்…”

பேசாதீங்க மாம்… நீங்க எனக்காக அவகிட்ட பேசி கன்வின்ஸ் பண்ணுவீங்களா… அதை விட்டுவிட்டு எனக்கு அட்வைஸ் பண்ணிட்டிருக்கீங்க”

விருப்பமில்லன்னு மட்டும் சொன்னா பேசி கன்வின்ஸ் பண்ணலாம்… பட் வேறொருத்தனை விரும்புறேன்னு சொல்றவளை எப்படி தேவ் கன்வின்ஸ் பண்ண முடியும்” என்றார்.

சரி உங்களால முடியலன்னா விட்றுங்க… நான் பார்த்துக்கறேன்” என்று சொன்ன நொடி அவந்திகா கொஞ்சம் அதிர்ச்சியுற்றார்.

வேண்டாம் தேவ்… நான் உன் ரேஞ்ச்சுக்கு ஏத்த மாதிரி அழகா அறிவான ஒரு பொண்ணா பார்க்குறேன்… சூர்யாவை விட்டுடு… அவளுக்கு உன் மதிப்புத் தெரியல” என்று அவன் போக்கிலேயே அவர் புரிய வைக்க முயற்சி செய்ய,

“கரெக்ட் மாம்… அவளுக்கு என் மதிப்புத் தெரியல… அதை அவளுக்கு நான் புரிய வைக்கிறேன்……. பட் ஒன் திங்… சூர்யாவைத் தவிர வேறெந்த பொண்ணையும் என்னால நினைச்சுப் பார்க்கக் கூட முடியாது… ஐ நீட் ஹெர்… இந்த விஷயத்தில நான் உங்க பேச்சை கேட்க முடியாது மாம்…சாரி” என்று தீர்க்கமாக உரைத்தான்.

உன் பிடிவாதத்தைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்… நீ செய்யணும்னு ஒரு விஷயத்துல இறங்கிட்டின்னா அதை செஞ்சு முடிச்சிடுவ… இந்த ஆட்டிட்யூட் பிஸ்னஸ்ல சக்ஸஸ் ஆகலாம்… பட் இட்ஸ் லைஃப்… நீ உன் விருப்பத்தை நிறைவேத்திக்க சூர்யா வாழ்க்கையில விளையாடுறது… ரொம்ப பெரிய தப்பு” என்று சீற்றத்தோடு உரைக்க,

ஈஷ்வரின் பொறுமையும் கறைந்து போய் கோபம் தலைதூக்கியது. 

நான் செய்றது பெரிய தப்புன்னா… அப்ப நீங்க செஞ்சது” என்று கேட்டான்.

இப்ப என்ன சொன்ன தேவ்?” என்று அவந்திகா புரியாமல் கேட்க,

ஈஷ்வர் சூட்சமத்தோடு, “நல்லா யோசிச்சு சொல்லுங்க… உங்க பர்ஸ்னல் ஃலைப்ல… நீங்க எந்த தப்புமே செய்யலயா மாம்… ” என்று கேட்டான். அவந்திகா அதிர்ந்தபடி மௌனமாய் இருக்க ஈஷ்வர் மேலும்,

டேடுக்கு நடந்தது ஆக்ஸிடேண்ட்டா மாம்?”

என்று அதிரடியாய் கேட்க அவந்திகா அந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

என்ன கேள்வி இது தேவ்?” என்று அவந்திகா குரலை உயர்த்த,

ஈஷ்வர் பொறுமையாக, “டென்ஷனாகாதீங்க மாம்… ரிலாக்ஸ்… நான் இதை பத்தி உங்ககிட்ட கேட்கக் கூடாதுன்னுதான் நினைச்சேன்… பட் ஏதோ கோபத்துல” என்று சொன்னமறுகணம்,

அவந்திகா குற்றவுணர்வோடு ,”தேவ்… நீ நினைக்கிற மாதிரி நான்” என்று ஏதோ சொல்ல வர ஈஷ்வர் அவரைப் பேசவிடாமல், “நீங்க எனக்கு எந்தவிதமான ரீஸனும் கொடுக்க வேண்டாம்… நானும் அதை பத்தி கேட்க விரும்பல… பிகாஸ் நீங்க எது செஞ்சாலும் அதுக்குப் பின்னாடி ஏதோ ஸ்டிராங்கான ரீஸன் இருக்குன்னு நான் உங்களை நம்பறேன் மாம்…” என்றான்.

அவந்திகா பேச முடியாமல் மௌனமாக இருக்க ஈஷ்வர் முடிவாக, “நீங்களும் அந்த மாதிரி என்னை புரிஞ்சுக்கோங்க…” என்று சொல்லி அவந்திகாவை பேச முடியாமல் செய்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அப்போது ஈஷ்வரின் கோபமெல்லாம் சூர்யாவின் மீது திரும்பி இருக்க உடனே அறைக்கு வெளியே நின்ற மதியை அழைத்து, “நம்மோட இந்த பிரொஜக்ட் முடிஞ்சதும் நீ ஒரு விஷயம் செய்யணும் மதி” என்றான்.

அவனும் ஆர்வமாய், “சொல்லுங்க பாஸ்” என்று கேட்க

ஈஷ்வர் வெறி கொண்ட பார்வையோடு, “அந்த அபிமன்யு உயிரோட இருக்கக் கூடாது” என்றான்.

மதி இதை ஏற்கனவே எதிர்பார்த்தான். ஆனால் இப்போது உடனே இவ்வாறு சொல்லிய காரணம் புரியாமல் யோசனை குறியோடு நிற்க ஈஷ்வர் அவன் தோள்களில் கைவைத்தபடி, “அவன் டெத் ரொம்ப மோசமா இருக்கணும் மதி… அப்படி ஒருத்தன் இருந்ததிற்கான தடம் கூட தெரியக் கூடாது… முக்கியமா அவன் செத்தாலும் உயிரோட இருக்குற மாதிரியான இம்பேகட் உருவாக்கணும்” என்றான்.

மதி குழப்பத்தோடு, “அதெப்படி பாஸ்?” என்று கேட்க

ஈஷ்வர் அடங்கா கோபத்தோடு, “தட் மீன்ஸ்… அவன் சாகணும்… ஆனா அவனோட உடம்பு யாருக்கும் கிடைக்கக் கூடாது… எங்கயோ காணாமப் போயிட்டான்னு நம்ப வைச்சிருவோம்… சிம்பிள்” என்றான்.

மதியும் அவன் சொன்னதை ஆமோதித்து தலையசைக்க அவனை அங்கிருந்து செல்ல சொல்லிவிட்டு ஈஷ்வர் தன் அறையை விட்டு வெளியேவர சூர்யா அந்த ஹோட்டலின் முன்பு வடிவமைக்கப்பட்டிருந்த கார்டனில் சிந்தனையில் ஆழ்ந்தபடி அமர்ந்திருந்ததை அவன் விழிகள் நோட்டமிட்டன. 

அந்த நொடி ஈஷ்வர் மனதிற்குள், சாரி சூர்யா… உனக்குக் கொடுத்த வாக்கை என்னால காப்பாத்த முடியாது… பிகாஸ் உன் வாழ்க்கையில நீ வெறுக்கவோ காதலிக்கவோ… எதுவாயிருந்தாலும் நான் மட்டும்தான் இருக்கணும்…‘ என்று எண்ணிக்கொண்டான். இந்த எண்ணத்தை சூர்யா நேரடியாக அறிந்திருக்கவில்லை எனினும் அந்த நொடி ஒருவித பதட்டம் அவளுக்குள் சூழ்ந்து கொண்டது.

விடிந்தவுடன் மதி அங்கிருந்து செல்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டான். எங்கே செல்லப் போகிறோம் என்று அறிந்து கொள்ளும் நோக்கில் சூர்யா மதியிடம், “இப்ப நாம எங்க போறோம் மதி?” என்று வினவ அவளின் கேள்விக்கான பதிலை உரைக்காமல் விழித்தபடியே நின்றான்.

சூர்யா மீண்டும், “ப்ளீஸ் மதி… சொல்லு” என்று கேட்க மதி மனமிறங்கினாலும் அவளிடம் ஏற்கனவே வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டது நினைவுக்கு வர, அவன் அப்போதும் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்தான்.

மதி ஈஷ்வரின் அழுத்தமான விசுவாசியாயிற்றே. அவனிடமிருந்து பதிலை வாங்குவது சற்று சிரமம்தான் என எண்ணியவள் மீண்டும் மதியிடம், “எங்க போறோம்னு சொல்ல வேண்டாம்… அட்லீஸ்ட் எதுல போறோம்னாச்சும்” என்று கேட்க,

மதி இப்போது தன் மௌனத்தைக் கலைத்தபடி, “கார்லதான்… ” என்றான்.

சூர்யாவால் அப்போதும் எங்கே என்று யூகிக்க முடியாமல் போக மதி அவளை நோக்கி, “டைமாயிடுச்சு… கிளம்பலாம்” என்றான்.

நம்ம மூணு பேரும் மட்டுமா?”என்று அவள் கேட்க அதற்கு மதி தலையசைத்து ஆமோதிக்க, மதியோடு அவளும் காரை நோக்கி நடந்தாள். அப்போது ஓட்டுநரும் இல்லாததைக் கவனித்தவள் எங்கே இவர்களின் ரகசிய பயணம் என்று யோசித்தாலும் அவள் கேள்விக்கு விடை கிடைத்தபாடில்லை. 

இப்போதைக்கான பெரும் பிரச்சனை காரை எப்படி பார்த்தாலும் மதிதான் ஓட்டுவான் எனும் போது ஈஷ்வரோடு பின்னாடி ஒன்றாய் அமர்ந்து கொண்டு பயணிப்பதா என்ற நோக்கில் முன்புறம் இருந்து சீட்டில் அமர்ந்து கொள்ள மதி ஓட்டுநர் சீட்டில் அமரப் போனான்.

 சரியாய் அந்த சமயம் வந்த ஈஷ்வர் சூர்யாவின் எண்ணத்தைக் கணித்தபடி மதியைக் கண்ணசைத்துப் பின்னாடி அமரச் சொல்லிவிட்டு ஓட்டுநர் சீட்டில் அமர்ந்து கொள்ள மதி குழப்பத்தோடு, “நீங்க போய் டிரைவ் பண்ணி… நான் பின்னாடி” என்று கேட்க, “நான் உன்னை விட பெட்டரா ஓட்டுவன் மதி… போய் உட்காரு” என்றான்.

சூர்யா எரிச்சலோடு தலையில் அடித்துக் கொள்ள கொங்கு நாட்டுப் பிரதேசத்தில் மீண்டும் ஒரு பயணம். விர்ரென சென்ற அந்த கார் சென்ற இடமெல்லாம் பசுமை படர்ந்திருக்க கொங்கு நாடு முன்பு போல் இப்போதும் செழித்திருந்தது என்று சொல்ல முடியாமல் போனாலும்அதற்கே உரித்தான சௌந்தர்யத்தை அது இன்னும் மிச்சம் மீதியாய் தன்னகத்தே தேக்கி வைத்திருந்தது என்றவண்ணம் கடந்து வந்த இடங்கள் காட்சியளித்தன.

ஆனால் அந்த அழகான காட்சிகளை சூர்யாவின் மனம் ரசிக்கும் நிலையில் இல்லை. மறுபுறம் ஈஷ்வருக்கோ சூர்யாவைத் தவிர வேறெதுவும் ரசனைக்குரியதாக இல்லை. ஈஷ்வரின் கவனமோ காரை ஓட்டுவதைவிடவும் சூர்யாவின் மீதே லயித்திருக்க, அதனைக் கண்ட மதிக்கோ பத்திரமாய் போய் சேர்வோமா என்ற கவலை ஏற்பட்டது. 

அதற்கு ஏற்றாற் போல் சூர்யாவின் கைப்பேசி ஒலிக்க அது சாதாரணமான அழைப்பாய் இருந்தால் யாருக்கும் பிரச்சனையில்லை. ஆனால் அந்த அழைப்பு அபிமன்யுவிடம் இருந்து வந்தது என்பதை சூர்யாவின் பார்வையில் தெரிந்த வியப்புக்குறி அப்பட்டமாய் உரைக்க, ஒரு பக்கம் அவள் அழைப்பை ஏற்காமல் ஈஷ்வரைத் திரும்பி நோக்கினாள். 

அந்த ஒரு பார்வையிலேயே ஈஷ்வர் அதனைக் கணிக்க சூர்யா அபிமன்யுவின் குரலையாவது கேட்டுவிடலாம் என்ற நொடியில் அழைப்பை ஏற்க போக, ஈஷ்வரின் கரம் அவளின் கரத்தை கெட்டியாய் பிடித்து அவளைத் தடுத்தது.

ஈஷ்வர் அப்போது காரை ஓட்டுவதைவிடவும் சூர்யாவை அபிமன்யுவிடம் பேசவிடக் கூடாது என்ற நோக்கில், “சூர்யா வேண்டாம்” என்று சொல்ல அவளோ கைப்பேசியை விடாமல், “நான் அபிகிட்ட பேசணும்” என்றாள்.

நான் விடமாட்டேன்” என்று அவனும் அவளின் கைப்பேசியைப் பறிக்க முயல அவர்களுக்கு இடையில் நிகழ்ந்த போராட்டத்தில் மதியோ என்ன செய்வது என்று அச்சமுற, அவன் எண்ணத்திற்கு ஏற்றாற் போலவே கார் அதன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

error: Content is protected !!