imk -18

(19)௧௯

பனி போல் விலகியது

யாரும் அதிகம் பேசாமல் அவர்களின்  இரவு உணவு அமைதியாய் முடிவடைந்தது. கிட்டத்தட்ட மௌன கெதியில்!

விக்ரம் வந்து சென்ற தாக்கம் எல்லோருக்குள்ளும் இருந்தது. ஆனால் அது வீரேந்திரனுக்கும் தமிழச்சிக்கும் கொஞ்சம் அதிகப்படியாய் இருந்தது. ஆனால் இருவருமே அவரவர்களின் மனநிலையை மறைத்துக் கொண்டு பெயரளிவிலேயே அந்த உணவை உண்டனர்.

விக்ரம் கோபமாய் சென்ற பிறகே வீருக்கு அவர் பேசிய வார்த்தையின் தீவிரம் புரிந்தது. தமிழச்சியின் மனநிலையோ கணவனின் கடைசி வார்த்தைகளிலேயே நின்றது. அதுவும் விக்ரமின் வலி நிறைந்த பார்வை அவள் மனதை ஏதோ செய்தது.

ஒருமுறை அவன் காதலைப் பற்றி அவள் குறைவாய் பேசியதற்காக பார்க்கவே மாட்டேன்… பேச மாட்டேன் என்று சாவல் விட்டுப் போனவன், கடைசி வரை அந்த வார்த்தையிலிருந்து பிறழவில்லை. அவளுக்கே அது ஆச்சரியம்தான். அந்தக் குணம்தான் அவன் மீதான ஈர்ப்பை காதலாய் மாற்றிவிட்டது. அவனே கணவனாய் வர வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாய் அவளுக்குள் விதைத்தது.

அப்படியானவன் கடைசியாய் உதிர்த்த வார்த்தை அவளை உண்மையிலேயே உலுக்கிவிட்டது. நிச்சயம் அவன் சொன்னது போல் இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் அவளைத் தேடி வரமாட்டான். அந்தளவுக்கான பிடிவாத குணம் கொண்டவன்தான். அதுவும் ஒரு விஷயத்தில் இறங்கினால் அதைக் கடைசிவரை செய்து முடித்தே தீருவேன் என்ற உறுதி கொண்டவன் . பார்க்கப் பழக இயல்பாய் தோன்றினாலும் அவன் அதுவல்ல. அவன் நினைத்தக் காரியத்தை முடிப்பதிலும் சொன்ன வார்த்தையைக் காப்பதிலும் அவன்  அதிதீவிரமாய் இருப்பான். அவன்தான் விக்ரம்!

அது அவளுக்கு நன்றாகவே தெரியும். இப்போது அந்த எண்ணம்தான் அவளை மிரட்சிக்குள்ளாக்கியது. அவன் மீது என்னதான் மலையளவு கோபம் இருந்தாலும் அதனை மூழ்கடிக்கும் அளவுக்குக் காதலும் இருந்ததே. அப்படி இருக்க ஒரேடியாய் அவனை வெறுத்து ஒதுக்கிவிட முடியுமா அவளால்!

தமிழச்சி  மாடியில் சுவற்றின் மீது சாய்வாய் அமர்ந்து கொண்டு வானை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். அவன் நினைப்பு ஒன்றே துணையாக. மதியழகி அவள் தனிமைக் கோலத்தை கலைக்க வர, “ப்ளீஸ் அழகி! என்னைக் கொஞ்சம் தனியா விடு” என்று அவள் வருகையைத் தடுத்தாள்.

“ஆமா அழகி! நீ போ… நான் என் பொண்ணுகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்று சொல்லிக் கொண்டே வீரேந்திரன் பின்னோடு வர மதியழகி முகம் மலர்ந்து, “சரிங்க மாமா!” என்று சொல்லிவிட்டு அகன்றாள்.

தமிழச்சிக்கு அந்த நொடி தூக்கி வாரிப் போட்டது. வந்தால் விக்ரமைப் பற்றி என்ன சொல்லப் போகிறாரோ அல்லது என்ன கேட்டு வைக்கப் போகிறாரோ என்று!

அவள் முகத்தில் தெரிந்த பதட்டத்தைக் கவனித்த வீர், “ரொம்ப மூட் ஆஃப்ல இருக்கியாடா?” என்று மிதமாய் கேட்க, இல்லையென்று சொல்லுவதா அல்லது ஆமாமென்று சொல்லுவதா என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

சற்று நேரம் விழித்தவள், “இல்ல டேட்… நார்மலாத்தான் இருக்கேன்” என்று முயன்று ஒரு பொய்யை சொல்ல, “அப்படின்னா… கொஞ்ச நேரம் பேசுவோமா?” என்று கேட்ட பொழுதில் அவள் விழியில் முட்டிக் கொண்டிருந்த கண்ணீர் வெளியே வந்து வீழ்ந்துவிட்டது.

“தமிழச்சி!” என்றவர் மகளை நெருங்க அவர் மீது சாய்ந்து கொண்டவள், “என்னால உங்களுக்கு ரொம்ப கஷ்டம்… ஐம் சாரி டேட்” என்று நிறுத்தாமல் அழத் தொடங்கினாள்.

“இப்ப ஏன் அழற?” என்று அவர் மகளை நிமிர்த்திக் கேட்க, “உங்களுக்கு கஷ்டமா இருக்குதானே… அதுவும் விக்ரம் என்னை அடிக்க கை ஓங்கி… அதை நீங்க பார்த்து” என்று அவள் விசும்ப வீர் சத்தமாய் சிரித்தார்.

தமிழச்சியின் அழுகை நின்றுவிட, “டேட்” என்று அழைத்து அவரை முறைக்க அவர் சிரித்தபடியே, “இன்னும் நீ வளரவே இல்ல… நான் பார்த்த அதே பத்து பதினைஞ்சு வயசு குட்டித் தமிழச்சியாவேதான் நீ இன்னும் இருக்க” என்றார்.

அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, “ஏன் அப்படி சொல்றீங்க? அப்படி எல்லாம் இல்ல” என்று முகம் சுருங்க, “பின்ன… இன்னும் குழந்தை மாதிரி சண்டை போட்டுட்டு இருக்க… அதுவும் உன் புருஷன்கிட்ட” என்றவர் சொல்ல,

“நான் எங்க அவன்கிட்ட சண்டை போட்டேன்… அவன்தான் என்கிட்ட சண்டை போட்டான்… நீங்கதான் பார்த்தீங்களே… அவன் என்னை அடிக்க கை ஒங்கினதை” என்று சீற்றமாய்  உரைத்தாள்.

“பார்த்ததுனாலதானே அவசரப்பட்டு இடம் பொருள் தெரியாம கத்திட்டேன்… ஆனா இப்ப யோசிச்சா தப்புன்னு தோணுது… அதுவும் யாருன்னு எல்லாம் கேட்டு” என்றவர் வருத்தம் கொள்ள,

“அதெல்லாம் தப்பு இல்ல… அவன் பண்ண வேலைக்கு யாருக்கா இருந்தாலும் அப்படித்தான் கோபம் வரும்” என்றாள்.

“இல்ல தமிழச்சி… விக்ரம் உன்னை அடிக்க எல்லாம் கை ஓங்கல… ஏதோ உன் மேல இருக்க கோபத்துல கையைத் தூக்கிட்டான்… அவ்வளவுதான்! நான் வரலன்னாலும் அவன் உன்னை அடிச்சிருக்க மாட்டான்”

“அடிக்கவே இல்லைன்னாலும் அடிக்க கை ஓங்கினது கூடத் தப்புதானே” என்றவள் அழுத்திச் சொல்ல,

“அப்போ உங்க அம்மாவை நான் அடிச்சதுக்கு நீ என்ன சொல்லுவ… அதுவும் எங்களுக்கு கல்யாணம் ஆன முதல் நாளே!” என்றதும் அவள் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள்.

“டேட்” என்றவள் ஒற்றை வார்த்தையில் திக்கி நிற்க, “இப்ப மட்டும் உங்க அம்மா நல்லா இருந்திருக்கணும். நிச்சயம் அந்த விஷயத்தை என்கிட்ட சொல்லிக் காட்டி… அவ மருமகனுக்கு சப்போர்ட் பண்ணி இருப்பா” என்றார் அவர் சிரித்துக் கொண்டே!

இன்னும் அவளால் தந்தையின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. “ம்ஹும்… நீங்க பொய் சொல்றீங்க? நான் நம்ப மாட்டேன்” என்றவள் தலையாட்ட, “சத்தியமா நான் உங்க அம்மாவை அடிச்சேன்”என்று அவர் மகளின் தலையில் அடித்தார்.

அவள் தன் தந்தையைக் கூர்மையாய் பார்த்து, “என்னால நம்பவே முடியல டேட்… எதுக்கு அம்மாவை அடிச்சீங்க?”  என்று கேட்க,

“உங்க அம்மா என்னை அவ்வளவு டார்ச்சர் பண்ணா… சொல்றதைக் காது கொடுத்தே கேட்க மாட்டா… அவ செய்றதுதான் சரி… ஒரு லெவலுக்கு மேல என்னால முடியல… அதான் கன்னத்துலயே ஒன்னு வைச்சேன்” என்று சொல்லவும் தமிழச்சிக்கு தன் தந்தையின் மீதிருந்த அபிப்ராயம் லேசாய் இறங்க,

“அதுக்காக கல்யாணம் ஆன அன்னைக்கே அடிச்சதெல்லாம் ரொம்ப ஓவர் டேட்… அம்மா பாவம்” என்றாள்.

“ரொம்ப பாவப்படாதே… எல்லாம் உங்க அம்மா நான் அடிச்ச அடிக்குத் திருப்பி அடிச்சிட்டா?” என்றவர், தற்போது வாங்கிய அடி போல கன்னத்தைத் தடவ தமிழச்சியோ அடுத்த நிலை அதிர்ச்சியில் பேச்சு வராமல் நின்றாள்.  அவள் தந்தை தோளைத் தொடவும் உணர்வு வந்தவள், “நிஜமா அம்மா உங்களை அடிச்சாங்களா?” என்று கேட்க,

“பின்ன… உங்க அம்மாவை நீ சாதாரணமா நினைச்சியா… கோபம் வந்துட்டா எதிர்க்க இருக்கிறவங்க யாரு என்னனெல்லாம் தெரியாது. கிட்டதட்ட நானும் அப்படித்தான்னு வைச்சுக்கோயேன். இதனாலேயே எங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வரும்” என்று வீர் மகளைப் பார்த்து உரைக்க அவள் தந்தையை யோசனையாய் பார்த்தாள்.

“நீங்க ரெண்டு பேரு சீரியஸா கான்வோ பண்ணி பார்த்திருக்கேன்… ஆனா சண்டை போட்டு நான் பார்த்ததே இல்லையே!” என்றவள் ஆச்சர்யமாய் கேட்க,

“கணவன் மனைவி சண்டை போட்டுக்கலாம்… ஆனா அம்மா அப்பா சண்டை போட்டுக்கக் கூடாது… அதனால  என்ன சண்டை மனத்தாங்கல் இருந்தாலும் நாங்க அதை உங்க முன்னாடி எப்பவும் காட்டிக்க மாட்டோம்” என்றவர் சொல்ல அவளுக்கு மேலும் வியப்பானது.

“உங்களை மாதிரி பேரன்ட்ஸ் கிடைச்சுதுக்கு நாங்க ரியலி லக்கி டேட்” என்று அவள் பெருமிதமாய் சொல்லும் போதே கண்கள் கலங்க, “இதுல அதிகப்படியான க்ரெடிட் உங்க அம்மாவுக்குதான் தமிழச்சி… நான் பட்டுன்னு கோபப்பட்ருவேன்… ஆனா உங்க அம்மா மனசுல வைச்சிருந்து ரூம்ல வந்துதான் காட்டுவா… அதேநேரத்துல எதையும் லிமிட் தாண்டி போக விடமாட்டா” என்றவர் தன் மகளை ஆர்வமாய் பார்த்து, “உனக்கு உங்க அம்மாவைப் பத்தி ஒரு விஷயம் சொல்றேன்” என்று ஆரம்பிக்க,

“என்னது டேட்?” என்று தமிழச்சியும் ஆவலாய் கேட்டாள்.

“நாங்க கல்யாணம் ஆன புதுசுல உங்க தாத்தா ஒரு பிரச்சனையைக் கிளப்பினாரு”

“மகேந்திரன் தாத்தாவா?”

“ஹ்ம்ம்… அவரேதான்… உங்க அம்மாவோட குடும்பத்து அரண்மனையை டெமாலிஷ் பண்ணனும்னு சொல்லிட்டாரு”

“சிம்ம வாசல் அரண்மனையவா?”

“பின்ன”

“அப்புறம் என்னாச்சு?”

“அரண்மனை உங்க அம்மா பேர்லதானே இருந்தது… அவளா ஒத்துப்பா… எழுதித் தர மாட்டேன்னுட்டா”

“தாத்தா ரொம்ப கோபப்பட்டாரா?”

“பின்ன… அவர் செம்ம காண்டாகி… உனக்கு உன் புருஷன் வேணுமா அரண்மனை வேணுமான்னு கேட்டாரு”

“ஐயோ! அம்மா அதுக்கு என்ன சொன்னாங்க?”

“உங்க அம்மா அவ்வளவு சீக்கிரம் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டாளே…  அதனால எனக்கு இரண்டுமே வேணும்… நான் எதையும் விட்டுக்கொடுக்க மாட்டேன்னு கட் அன்ட் ரைட்டா உங்க தாத்தா முகத்துக்கு நேரா சொல்லிட்டா” என்று சொல்லி அவர் பெருமிதமாய் சிரிக்க,

“அம்மா செம்ம கெத்து ப்பா”என்று தமிழச்சியும் முகம் மலர்ந்தாள்.

“அதான் என் தமிழச்சி!” என்று வீர் சொல்ல அதில் மனைவியின் மீதான ஆழமான உரிமையும் காதலும் வெளிப்பட்டது.

வீர் மேலும், “உங்க அம்மாவுக்குக் காதலையும் கடமையும் கரெக்ட்டா பேலன்ஸ் பண்ணத் தெரியும்” என்று சொல்ல,

தமிழச்சி முகம் சுணங்கி, “ஆனா எனக்கு அது தெரியலயேப்பா? ரெண்டுத்தையும் என்னால வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியல… அதுவும் விக்ரம்… என்கிட்டயே பக்கா அரசியல்வாதியா நடந்துக்கிட்டான்” என்று அவள் வேதனையோடு உரைத்தாள்.

“அப்படின்னா நீ பக்கா போலீஸா நடந்துக்கோ. அவன் திறமையை அவன் காட்டினா… உன் திறமையை நீ காட்டு… ஆனா எல்லாமே வீட்டுக்கு வெளியே.” என்று வீர் தெளிவாய் சொல்ல

“அதெப்படி டேட்?” என்று கேட்டு தந்தையைக் குழப்பமாய் ஏறிட்டாள்.

“வேலையையும் வாழ்க்கையையும் போட்டு ரெண்டு பேரும் குழப்பிக்காதீங்க… நானும் உங்க அம்மாவும்  அப்படி இருந்ததாலதான் இன்னைக்கும் இப்படி இருக்கோம்” என்று வீர் சொல்ல தமிழச்சியின் முகத்தில் மாறுதல் உண்டானது. அவள் ஆழ்ந்த யோசனைக்குள் மூழ்க, “தமிழச்சி” என்றழைத்தவர்,

“சரி பேசுனது போதும்… முதல்ல போய் நல்லா தூங்கு… நீ செய்ற வேலைக்கு…  உடம்பு மனசு ரெண்டுமே ஆரோக்கியமா இருக்கணும். அப்பத்தான் நீ எடுத்திருக்கிற கேஸை சரியா டீல் பண்ண முடியும்” என்று அவர் அதிகாரமாய் சொல்ல அவளும் சம்மதமாய் தலையசைத்து, “குட் நைட் டேட்” என்றாள்.

“ஹ்ம்ம் குட நைட் டா” என்று மகளை அனுப்பிவிட்டு அவரும் அகன்றார்.

தந்தையின் வார்த்தைகள் ஒருவாறு தமிழச்சியின் மனதிலிருந்த கவலைகளையும் குழப்பங்களையும் தெளிவுபெற  செய்தது. அந்த சிந்தனையோடு  தன் அறைக்குள் நுழைந்தவள் முதலில் தேடியது தன் கணவனின்  புகைப்படத்தைத்தான்.

இத்தனை நாள் அவன் மீது இருந்த கோபம் கிட்டத்தட்ட பனி போல் விலகக் காதல் சூரியனாய் உதித்து தன் ஆளுமையை செலுத்தத் தொடங்கியது.  காதலும் கடமையும் வேறு வேறு என்பதை இப்போது அவள் மனம் ஒருவாறு உள்வாங்கிக் கொண்டது.

கணவனின் நினைவில் அவள் இருக்க கைபேசி அவள் எண்ணங்களைத் தடையிட்டது. எடுத்ததும், “தமிழச்சி!” என்ற அழுத்தமான அழைப்பில் இவான்தான் பேசுகிறான் என்பதை உணர்ந்தாள்.

“என் ரிசர்ச்காக காஞ்சிபுரத்துல இருக்க உங்க ஊர் டெம்பிளைப் பார்க்கணும்… கூட்டிட்டுப் போக முடியுமா?” என்று பணிவாய் வந்த கேள்வியில் சூசகமாய் ஒளிந்திருந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டவளுக்கு இப்போது அவனை சந்திக்க வேண்டியது ரொம்பவும் முக்கியமாகப்பட்டது. அவனிடம் கமலக்கண்ணனைப் பற்றிக் கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருந்தது.

“ஒ! போலாமே… எத்தனை மணிக்கு?” என்று கேட்டு இருவரும் தங்கள் சந்திக்கும் நேரத்தையும் இடத்தையும் முடிவு செய்தனர். பேசியில் கூட வெளிப்படையாகப் பேசிக் கொள்ளவதன் மூலம் அவர்களின் ரகசிய விசாரணையில் இடையூறு எழலாம் என்பதை இருவரின் மனநிலையும் சொல்லாமலே புரிந்து கொண்டது. இரண்டுமே போலீஸ் முளை அல்லவா?

அவர்கள் உரையாடலின் முடிவில் அவர்கள் பயணத்திற்காக வேண்டி இவான் அவள் வீட்டுக்கு வருவதாக சொல்ல, “இல்ல… நானே வந்து உங்களை என் காரில் அழைச்சிட்டுப் போறேன்” என்றாள். அது அவளுக்கு  விக்ரமை சந்திக்கக் கிடைக்கும் சந்தர்ப்பம்!

********

விக்ரம் அன்று விடிந்தும் விடியாமலும் தன் படுக்கை அறை முழுவதையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் தேடியது அவனுக்குக் கிட்டவில்லையே!

இரவு கோபத்தில் தன் பர்ஸில் இருந்த மனைவியின் போட்டோவைக் கிழித்துப் போட்டான். ஆனால் விடிந்ததும் அவன் மனம் அந்த போட்டோவைத் தேடியதே.

“இங்கதானே கிழிச்சுப் போட்டேன்… எங்க போயிருக்கும்?” அதே கேள்வி … மீண்டும் அதே தேடல். திரும்பியும் முதலில் இருந்து. ஆனால் இப்போதும் கிடைக்கவில்லை. இம்முறை விபரிதமாய் அவன் மனம் யோசித்தது. அந்த இவானையும் காணோமே!

ஒரு வேளை என்று யோசித்தவனுக்கு, ‘அவன்தான் எடுத்திருப்பான்… இல்லாட்டிப் போனா கிழஞ்ச ஒரு துண்டு கூட இல்லாம எங்க போகும்’ என்ற முடிவோடு இவானைத் தேடி அறையை விட்டு வெளியே வந்தான்.

அவன் தந்தை சோபாவில் அமர்ந்து மும்முரமாய் ஸ்போர்ட்ஸ் சேனலில் மூழ்க, “நியூஸ் வைங்க… காலங்கார்த்தால ஸ்போர்ட்ஸ்” ஆதியின் குரல். அன்றிலிருந்து இன்று வரை மாற்றமில்லாமல் அதே சண்டை!

கடுப்பானவன், “டேட்… இவான் எங்கே?” என்ற கேட்க,

“உன்னை மாதிரியா… அவன் காலைலேயே எழுந்து எக்சர்சைஸ் பண்ணப் போயிட்டான்” குத்தலாய் அவன் அம்மாவின் பதில். அவனுக்குப் பற்றி எரிந்தது.

‘டேய் இவான்!’ என்று சீற்றத்தோடு அவன் மாடிக்குப் போக இவான் சட்டையெல்லாம் களைந்து தன் உடற்பயிற்சியில் தீவிரமாய் இருந்தான்.

அவனின் உடற்கட்டுக்களை எல்லாம்  பார்க்க விக்ரமுக்கே அந்த நொடிக் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது.

‘இந்த ஒயிட் ஒட்டகத்தை முதல்ல பேக் பண்ணி அவன் ஊருக்கு அனுப்பணும்’ என்று எண்ணிக் கொண்டே வந்தவன்,

“இவான்! வேர் இஸ் தட் போட்டோ?” என்று தலையும் புரியாமல் வாலும் புரியாமல் ஒரு கேள்வியைக் கேட்க இவான் உடற்பயற்சி செய்து கொண்டே, ”விச் போட்டோ?” என்று கேட்டான்.

தெரியாதா இல்லை தெரிந்தே தெரியாதவன் போல் நடிக்கிறானா? என்ற யோசனையோடு அவன் முகத்தைக் கூர்ந்து பார்க்க, இவான் முகமெல்லாம் வியர்வைத் துளிகள் வழிய அவனைப் பார்த்தபடி எழுந்து நின்றான்.

விக்ரமுக்கோ தன் மனைவியின் புகைப்படத்தை எப்படி அவனிடம் கேட்பது என்ற ஒருவித சங்கட நிலை பற்றிக் கொள்ள மேலே எதுவும் பேசாமல் அவன் அமைதியானான்.

“வாட் விக்ரம்… யு நீட் எனிதிங்?” என்று இவான் அவன் மனமறிந்து கேட்க, “ஒழுங்கா நீ ஊருக்குக் கிளம்பு… அதான் இப்போதைக்கு எனக்கு வேணும்” தமிழில் அப்பட்டமாய் உரைத்தான் விக்ரம்.  அவனுக்குப் புரியாது என்று எண்ணினானோ?

“சாரி விக்ரம்! தட்ஸ் நாட் பாஸிபிள்” இவான் அவன் கேள்விக்குப் பதிலுரைக்க விக்ரம் அதிர்ந்தான்.

‘நம்ம சொன்னது இவனுக்குப் புரிஞ்சிடுச்சா?’ என்று விக்ரம் ஆடிப் போய் நிற்க அப்போது இவான் வேகமாய் கீழே வாசல் புறத்தை எட்டிப் பார்த்து, “தமிழச்சி!” என்று கை காட்டினான்.

அப்போதுதான் காரின் சத்தத்தை விக்ரம் கேட்டறிந்தான். தமிழச்சி இங்கே எதற்கு வரப் போகிறாள் என்ற யோசனையில் அவனும் எட்டிப் பார்க்க அவள் வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தாள்.

அதுவும் புடவையில் சற்றே வித்தியாசமாய். அவனின் காதல் உணர்வுகள் கரைபுரண்டு ஓடியது. அவன் சுதாரித்துத் திரும்பிப் பார்ப்பதற்குள் இவான் இறங்கிப் போயிருந்தான்.

‘அடப்பாவி அந்த கோலத்துலேயே போயிட்டானா? ஐயோ! இந்த அமெரிக்கன் அனகொண்டா என் வாழ்கையை மொத்தமாய் விழுங்கி ஏப்பம் விட்டிடும் போலயே’ என்று புலம்பிக் கொண்டே அவன் கீழிறிங்கி செல்ல அவர்கள் சம்பாஷனை அவன் காதில் விழுந்தது.

அவள் அப்போது ஆதியிடம் காஞ்சிபுரம் ராஜராஜேஸ்வரி கோவிலுக்கு இவானோடு போவதாக சொல்லிக் கொண்டிருந்தாள். இந்தப் பதிலை கேட்ட நொடி அவன் கால்கள் தடையிட்டு அப்படியே சோர்ந்து போய் கீழிறங்கி வராமல் நின்று விட தமிழச்சியின் விழிகள் அவனை மட்டுமே தேடிக் கொண்டிருந்ததை அவன் அறியான்!

இவான் தயாராகி வருவதாக அறைக்குள் சென்றுவிட விக்ரமுக்கு அவள் முன்னிலையில் வந்து நிற்க மனமில்லை. மீண்டும் அவமானப்பட வேண்டுமா என்ற அவன் ஈகோ எட்டிப் பார்க்க அவன் விழிகளோ மறைந்து நின்று அவளை மட்டுமே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது.

அவன் வாங்கித் தந்த அதே வாடாமல்லி நிறப் புடவையைத்தான் அவள் உடுத்தி இருந்தாள். பின் ரசிக்காமல் எப்படி?

‘கொல்றாளே! முடியலயே… ஐயோ! இவளை யாரு இன்னைக்குப் பார்த்து புடவை கட்டிட்டு வர சொன்னது… நமக்கு பாடிதான் ஸ்ட்ராங்… பேஸ்மென்ட் வீக்காச்சே… நேர்ல போனா சத்தியமா காலி… விக்ரம் போகாதே’

என்று அவளின் அழகில் கிறங்கிக் கொண்டிருந்தவனிடம் அவனின் வீணாய்  போன ஈகோ எச்சரிக்கை விடுத்தது. அதோடு சேர்த்துக் கோபமும் வந்தது.

‘நான் வாங்கித் தந்த புடவையில உனக்கு அவன் கூட கோவிலுக்குப் போகணுமா? என்ன கொடுமை சரவணா இது? அவன் வேற இவ போட்டோவையே வெறிச்சு வெறிச்சுப் பார்ப்பான்… இவ இப்போ இப்படிப் போனா…’ கல்யாணம் ஆகாதவனுக்கு ஆயிரம் கவலை… கல்யாணம் ஆனவனுக்கு ஒரே கவலை!

இப்போது விக்ரமின் கவலையும் அதேதான்.

‘விக்ரமா? உனக்கு கட்டம் சரியில்ல…’ என்று மீண்டும் புலம்பிக் கொண்டவனுக்கு அவள் முன்னே சென்று நிற்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

ஆனால் அவன் மனம் தாறுமாறாய் அவளின் அழகில் தடுமாறிக் கொண்டிருந்தது. சில நொடிகள் யோசித்தவன் அவளிடம் அவனாக சென்று பேசுவதில்லை என்ற முடிவை தீர்க்கமாய் எடுத்துக் கொண்டு, “விக்ரம் ரெடி ஸ்டார்ட் கோ” என்று சொல்லிவிட்டு ‘வாம்மா மின்னல்’ என்ற ரேஞ்சுக்கு அவள் நின்ற திசைப் பக்கம் கூடத் திரும்பாமல் நேராய் தன் அறைக்குள் புகுந்து கொண்டான்.

அவன் தன்னை ஒருமுறை கூடத் திரும்பிப் பார்க்கவில்லையே என்று ஏங்கிப் போனாள் தமிழச்சி. அவனோ அறைக்குள் போக இவான் படுவேகமாய் உடை அணிந்து தயாராகி இருந்தான்.

‘இவன் என்னடா ஹீரோ கணக்கா டிரஸ் பண்ணி இருக்கான்… ஐயோ! யாரு ஹீரோன்னு நமக்கே கன்ஃப்யுஸ் ஆகுதே’ என்று அவன் குழப்பம் கொள்ள,

இவான் வேண்டுமென்றே, “ஹவ் இஸ் மை டிரஸ்?” என்று விக்ரமை அபிப்பிராயம் கேட்க,

“படுகேவலமா இருக்கு” என்றான் தமிழில்!

“தேங்க்ஸ்” என்று இவான் புன்னகையோடு பதிலுரைக் கொடுத்துவிட்டு செல்ல இவன் புரிந்து சொன்னானா அல்லது புரியாமலா… என்பதே விக்ரமுக்குப் புரியவில்லை.

“விக்ரம் சாப்பிட வா” என்று தந்தையின் குரல் கேட்க அவர்கள் சென்று விட்டார்களோ… என்ற எண்ணத்தோடு கதவு வழியே அவன் எட்டிப் பார்க்க தமிழச்சியையும் இவானையும் அமர வைத்து ஆதி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார்.

‘என்னை கடுப்பாக்கவே இப்படி எல்லாம் பண்றாங்க… நான் போக மாட்டேன்’ என்று சொல்லிக் கொண்டவன், “நான் வரல… எனக்குப் பசிக்கல” என்று அறையிலிருந்தபடி பதிலுரை மட்டும் கொடுத்தான்.

தமிழச்சிக்கு மீண்டும் ஏமாற்றமானது.

தவிப்பில் கிடந்த விக்ரமுக்கோ அவனின் அலைபேசி அடிக்க அதனை எடுத்துப் பேசினான். அப்போதே அவன் செல்ல வேண்டிய வேலை நினைவுக்கு எட்டியது. வேக வேகமாய் தன் பேகை தயார் செய்தவன்  தானும் தயராகிப் புறப்பட்டு வெளியே வர, எல்லோரின் பார்வையும் அவன் மீது விழுந்தது.

“ஃப்ளைட்டுக்கு டைமாச்சு. நான் கிளம்பறேன் ப்பா… வரேன் ம்மா” என்று எங்கோ சுவற்றைப் பார்த்து சொல்லிவிட்டுக் கிளம்ப, அப்போதும் அவளைப் பார்க்கக் கூடாதென்றே அவன் அவ்விதம் செய்தான்.

தமிழச்சி பதட்டமாகி தன் மாமனாரிடம் காதோடு, “அங்கிள் அவர் எங்க போறாரு?” என்று கேட்க, “எவரு?” என்று மருமகளை உற்றுப் பார்த்தார்.

“உங்க பிள்ளைதான்”

“எனக்கு ஒரே பையன்… அது விக்ரம்தான்” என்றவர் சொல்ல, “அங்கிள்” என்று கடுப்பானாள்.

“நீ தெளிவா யாருன்னு சொன்னாத்தானேம்மா நான் பதில் சொல்ல முடியும்” இப்போது விஷ்வா தெளிவாய் அவளைக் குழப்ப,

“நானும் விக்ரமைதான் கேட்கறேன்” என்று கடுப்பாய் சலிப்பாய் கேட்டாள்.

“அவனுக்கும் உனக்கும்தான் எந்த சம்பந்தமும் இல்லையே… அப்புறம் அவன் எங்க போனா உனக்கென்ன? அவன் உனக்கு யாரு?” என்றவர் அவள் வார்த்தைகளை அவளுக்கே குத்திக் காட்ட,

“ப்ளீஸ் அங்கிள்! தப்புதான்… அப்படி சொல்லி இருக்கக் கூடாது… விக்ரம் என்னோட புருஷன்” என்று சொல்லித் தன் காதுகள் இரண்டையும் அவள் பிடித்துக் கொள்ள ஆதியும் இவானும் அந்தக் காட்சியை விசித்திரமாகப் பார்வையிட்டனர். அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

ஒருவழியாய் விஷ்வா இறங்கி வந்து மருமகளிடம், “அவன் ஒரு வாரம் டெல்லிக்குக் கட்சி வேலையா போறான்” என்று விஷயத்தை சொன்னார்.

அவளுக்கு படபடப்பானது. ஏதோ ஒரு உணர்வு இப்போதே அவனிடம் பேசிவிடச் சொல்ல, அவள் வேகவேகமாய் வெளியேறி வாயிலுக்கு வந்தாள்.

அவன் சரியாய் அப்போது கேபில் ஏறிச் சென்றுவிட நொடிப் பொழுதில் அவனிடம் பேசும் வாய்ப்பைத் தவறவிட்டாள். உடனே தன் பேசியை எடுத்தவள், மீண்டும் அதனை உள்ளே வைத்துக் கொண்டாள்.

ஃபோனில் பேசி மீண்டும் ஏதேனும் பிரச்சனை வந்துவிட்டால். அந்த தயக்கத்தால் நேரில் வந்த பின் பேசிக் கொள்ளலாம் என்று தன் மனதை தேற்றிக் கொண்டாள்.

ஆனால் தமிழச்சி தவறவிட்ட வாய்ப்பையும் வார்த்தையையும் அமிர்தா தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முனையப் போகிறாள்.

அதற்குப் பெயர்தான் விதியோ? (மோனியோட சதி… ரீடர்ஸ் மைன்ட் வாய்ஸ்)