anima23

anima23

பதினைந்து நாள் படப்பிடிப்பிற்கென, பிரான்ஸ் சென்றிருந்தான் ஈஸ்வர். சகோதரியுடன் இருக்கவேண்டுமென, பிறந்த வீட்டிற்கு வந்திருந்தாள் ஜீவிதா, பிரபாவுடன்.

 

அவர்களைப் பார்த்த நொடி முதல், “சித்தி! சித்தப்பா!” என்று அவர்களுடன் பசை போட்டது போல் ஒட்டிக்கொண்டான் ஜீவன். அதனால்தானோ என்னவோ, ஈஸ்வரை அதிகம் தேடவில்லை அவன்.

 

ஆனால்… அவனுக்குப் பதிலாக, ஈஸ்வரின் நினைவால், அதிகம் பாதிக்கப்பட்டது மலர்தான். அவன் இல்லாமல், அவளது நாட்கள் மிகவும் வெறுமையாகிப்போனது போல் தோன்றியது அவளுக்கு.

 

வழக்குகள் காரணமாக, அவளை தன்னுடன் அழைத்துச் செல்ல இயலவில்லை ஈஸ்வரால்.

 

சூடாமணி, வெங்கடேசன் இருவரும் மலருடைய ராசா மற்றும் ரோசாவை அழைத்துக்கொண்டு சுற்றுலாவிற்குச் சென்றிருந்தனர் அதனால், பிறந்த வீட்டிற்குச் செல்லவில்லை மலர்.

 

வீட்டில் அனைத்து வேலைகளுக்கும் ஆட்கள் இருந்ததால், என்ன செய்வதென்று புரியாமல், தவித்துத்தான் போனாள் மலர்.

 

ஈஸ்வர்  இல்லாமல் இரண்டு நாட்களைக் கூட கடத்தமுடியவில்லை அவளால்.

***

 

இந்த நிலையில் இருந்து தப்பிக்கும் பொருட்டு, ஜெய்யை நேரில் காண அவனுடைய அலுவலகத்திற்கு வந்திருந்தாள் மலர்.

 

அவனுடைய பிரத்தியேக அறையில், குளிர்பானத்தை பருகியவாறே, “என்ன மேடம்! உங்க ஹீரோ ஊரில் இல்லன்னதும்தான் எங்க ஞாபகமெல்லாம் வருதா உனக்கு.” என்ற ஜெய், “போடி… போய் வேற வேலை இருந்தால் பாரு. நான் ரொம்ப பிஸி… உன்கூடல்லாம் பேச எனக்கு டைம் இல்ல…” என்றான் கடுப்பாக.

 

அதில் முகம் மாறியவள், “ஏண்டா… நீ கூட என்னை புரிஞ்சிக்காம எல்லாத்துக்கும் நான் மட்டும்தான் காரணம்கற மாதிரி பேசற… நீயும்தானே பிஸி. இப்ப கூட நான்தானே உன்னைப் பார்க்க வந்திருக்கேன்” என்று சொல்லிவிட்டு,

 

‘நான் ஈஸ்வர் மாமாவுக்குத் தெரியாமல், என்னென்னவோ செஞ்சு வெச்சிருக்கேன். இதை பத்தி ஒரு வார்த்தை கூட கேக்கலேன்னாலும்… அவங்க மனசுக்குள்ள ரொம்பவே வருத்தம் இருக்கும்.

 

எல்லாத்தையும் விளக்கமா சொல்லலாம்னு நினைச்சாலும்… உட்கார்ந்து பேச, ரெண்டுபேருக்கும் இன்னும் நேரம் ஒத்து வரல. அவங்க பாட்டுக்கு பிரான்ஸ்ல போய் உக்காந்துட்டு இருக்காங்க…” என இயலைமையுடன் சொல்லிமுடித்தாள் மலர்.

 

அவளது குரல், அவளுடைய மனதில் இருக்கும் துயரத்தை வெளிப்படுத்தவும், தான் மலரிடம் பேசிய விதத்தை நினைத்து, நொந்துகொண்டான் ஜெய்.

 

உடனே, அவளுடைய மனதை மாற்றும் பொருட்டு, “ஹேய்… இப்ப அங்கே மார்னிங் சிக்ஸ் தானே ஆகியிருக்கும்? நீ அண்ணா கிட்ட பேசினியா?” என்று கேட்ட ஜெய், அவளுடைய பதிலை எதிர்பார்க்காமல், தனது மடிக்கணினி மூலமாக ஈஸ்வரை, ‘வீடியோ கால்’ மூலமாக அழைத்தான்.

 

திரையில், காஃபி கோப்பையை கையில் ஏந்தியவாறு… ஈஸ்வர் தோன்றவும், “குட் மார்னிங்…ணா! எப்படி இருக்கீங்க?” என்று அவனை நலம் விசாரித்தான் ஜெய்.

 

அதற்கு “டூ டேஸ் முன்னால எப்படி இருதேனோ, அப்படியேதான் இருக்கேன்… நோ சேஞ்ஜஸ்…” என்று சொல்லிச் சிரித்தான் ஈஸ்வர்.

 

“ஆனால், உங்களை பார்க்காம ரெண்டு நாளைக்குள்ளாகவே இங்கே ஒருத்தி, துரும்பா இளைச்சி போயிட்டாண்ணா!” என்று கிண்டலாக சொல்லியவாறே, கணினியை அவள்புறமாக திருப்பினான் ஜெய்.

 

அவனை அடிக்க நீண்ட கையை… சூழ்நிலை கருதி இழுத்துக்கொண்டவள், “அப்படிலாம் இல்ல ஹீரோ! இவன் சும்மா நம்மள கலாய்க்கறான்” என்று நாணத்துடன் மலர் சொல்லவும், அதை ரசித்தவாறு,

 

“நீ விடு ஹனி! மாமா நேரில் வந்ததும் அவனை நல்லா… கவனிக்கறேன்!” என்று சொல்லி தனது சட்டையின் கையை மடித்துவிட்டுக்கொண்டான் ஈஸ்வர்.

 

“அடப்பாவிகளா! புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருமா சேர்ந்து போலீஸ்காரனையே மிரட்டுறீங்களா?” என்று சிரித்தான் ஜெய்.

 

“அதெல்லாம் இருக்கட்டும்… எதுக்கு கூப்பிட்ட ஜெய்… எனி திங் இம்பார்ட்டண்ட்? மலர் வேற இங்க இருக்கா?” என்று தீவிரமாக ஈஸ்வர் கேட்கவும்,

 

“நத்திங் அண்ணா! அவ சும்மா என்னை பார்க்கத்தான் இங்கே வந்தா” என்று சொல்லிவிட்டு, “உங்களுக்கு ஷூட்டிங் இல்லையா?” என்று கேட்டான் ஜெய்.

 

“இல்ல ஜெய்! இங்கே செம்ம மழை. ஸோ! ஷூட்டிங்கை கான்சல் பண்ணிட்டாங்க. ஜிம்முக்கு போலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்…” என்றான் ஈஸ்வர்.

 

அப்பொழுது மலரின் முகத்தைப் பார்த்தவன், “நீ பீல் பண்ணிட்டு இருந்த இல்ல… பேசாம வீட்டுக்கு போய்… அண்ணாவோட பேசு” என்று மலரிடம் சொன்ன ஜெய், ஈஸ்வரனிடம் மலர் புலம்பியவற்றைச் சொன்னான்.

 

அடுத்த நொடியே, “அதெல்லாம் ஒண்ணும் இல்ல, நான் சுபா அண்ணியைப் பற்றி உங்களிடம் பேச முடியலியேன்னுதான் அப்படிச் சொன்னேன்…” என்றாள் மலர்.

 

“அடப்பாவி… அன்னைக்கு நான் கிளம்பிப் போன பிறகு, இது வரைக்கும் நீங்க எதுவும் பேசவே இல்லையா?” என்று கேட்டான் ஜெய்.

 

“ப்ச்! இல்ல. பேச ரெண்டுபேருக்குமே டைம் கிடைக்கல!” என்று அலுத்துக்கொண்டாள் மலர்.

 

உடனே ஈஸ்வர், “நான் இப்ப வெட்டிதான். சோ நீ சொல்லனும்னா சொல்லு… எனக்கும் டைம் பாஸ் ஆகும்” என்று முடித்தான் ஈஸ்வர்.

 

மலர் ஜெய்யுடைய முகத்தை பார்க்கவும், “நானும் இப்போதைக்கு வெட்டிதான். மதியம்தான் குழந்தைகளைப் பார்க்க ஹோமுக்கு போகணும்…” என்று ஜெய் சொல்லவும், அவர்களுடன் பழைய நினைவுகளைப் பகிரத் தொடங்கினாள் மலர்.

***

 

ஜீவனுடைய பிறந்தநாளும் அன்றுதான் என்று அறியவும், ஆச்சரியமாகிப் போனது மலருக்கு.

 

அதே மனநிலையில், அவள் ஜீவனையே பார்த்துக்கொண்டிருக்க, அவள் முகத்தைப் பார்த்து சில நொடிகள் தயங்கியவன், “நீ என்கூட அங்கே விளையாட வரியா? என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட, ‘ஷி இஸ் மை கேர்ள் ஃப்ரெண்ட்’ னு உன்னை காமிச்சு சொல்லட்டுமா?” என்று, கேட்டான் ஜீவன்.

 

“ஒய் நாட்… தாராளமா சொல்லு. அதுல என்ன இருக்கு…” என்றவாறு அவனது கையை பற்றிக்கொண்டு அவள் நடக்கத்தொடங்கவும், கிசுகிசுப்பான குரலில், “ஹனீமா! அங்கே வந்து என்னை ‘பாய் ஃப்ரெண்ட்’ னுதான் கூப்பிடனும்… ஓகேவா?” என்று ஜீவன் கேட்கவும், “ஓகேடா… மை டியர் பாய் ஃப்ரெண்ட்” என்றாள் மலர். அன்று தொடங்கியதுதான். பின்னாளிலும் அதுவே தொடர்ந்தது.

 

அதன் பின்பு, அவனுடன் இணைந்துக்கொண்டு, குழந்தைகளுடன் சிறிதுநேரம் விளையாடினாள் மலர்.

 

முதலில் அவளைப் பார்த்துத் தயங்கிய அந்த குழந்தைகள், நேரம் செல்லச்செல்ல அவளுடன் மிகவும் ஒன்றிப்போனார்கள்.

 

அனைவரும் கிளம்பும் நேரம் ஆகவும், ஒவ்வொருவராக அவர்களுடைய பெற்றோருடன் வீட்டிற்குக் கிளம்பவும்தான், ஜீவனுடைய பெற்றோர் அங்கே இல்லை என்பதே புரிந்தது மலருக்கு.

 

அதைப்பற்றி ஜீவனிடம் அவள் கேட்கவும், “அம்மா வெண்ட் டு க்ராசாரி ஷாப்! ஷி வில் பீ பாக் பிஃபோர் 5.30” என்றான் அவன்.

 

அவனைச் சந்திப்பதற்கு முன்பு இருந்த இறுக்கமான மனநிலை மாறி, ஜெய் அருகிலிருந்தால் அவளுக்கு ஏற்படும் குதூகலம் மனதில் எழவும், ஏனோ அவனுடன் சேர்ந்து தனது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆர்வம் உண்டானது அவளுக்கு.

 

அவர்களுடைய வீட்டில், அவனுடைய பிறந்தநாளைக் கொண்டாட ஏதாவது ‘பார்ட்டி’ ஏற்பாடு செய்திருக்கிறார்களா என்று மலர் ஜீவனிடம் கேட்கவும், உதட்டைப் பிதுக்கி, விரல்களை இல்லை என்பதுபோல் விரித்து, “நோ!” என்றான் ஜீவன்.

 

அவனது அந்த பாவனை, அவனது ஏக்கத்தை அப்படியே பிரதிபலித்தது.

 

அது அவள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவும், அவனுடைய இருப்பிடத்தைப் பற்றி அவள் விசாரிக்க, அவள் தற்பொழுது தங்கியிருக்கும் அடுக்குமாடிக்குடியிருப்பில்தான் மற்றொரு தளத்தில்தான் அவன் வீடு இருக்கிறது என்பது தெரியவந்தது அவளுக்கு.

 

அதற்குள்ளாகவே அவனை நோக்கி… கைகளில் சுமையுடன், ஓட்டமும் நடையுமாக, அங்கே வந்துகொண்டிருந்தாள் சுபானு.

 

முப்பது வயதைத் தாண்டியதுபோன்ற தோற்றத்தில், கொஞ்சம் பருமனான உடல்வாகுடன், அழகாக இருந்தபோதிலும், சுருக்கங்களுடன் கூடிய, எந்த ஒரு உணர்வையும் வெளிப்படுத்தாத முகம், வெறுமையான கண்கள் என இருந்த சுபானுவை பார்க்கும்பொழுதே மனதில் ஒரு நெருடல் உண்டானது மலருக்கு.

 

ஆனாலும் அவளுடைய முகமும் ஈஸ்வரை மலருக்கு நினைவுபடுத்த, ‘இது என்ன… யாரை பார்த்தாலும் நமக்கு ஜெகதீஸ்வரனை பார்ப்பதுபோல இருக்கு. இந்த சினிமாவில் காண்பிக்கிற மாதிரி, நமக்கு எதாவது ஆகிப்போச்சா?’ என சந்தேகமே வந்துவிட்டது மலருக்கு.

 

அவள் அருகில் வந்தவுடன், மலரைத் தனது அன்னைக்கு அறிமுக படுத்திவைத்தான் ஜீவன். தானும் அவர்கள் வசிக்கும் குடியிருப்பில்தான் இருப்பதாக சுபானுவிடம் தெரிவித்தாள் மலர்.

 

உடனே, “அம்மா! ஹனிமாவை நம்ம வீட்டுக்கு டின்னெர்க்கு கூப்பிடலாம்… ப்ளீஸ்!” என ஜீவன் கண்களைச் சுருக்கி அன்னையிடம் கேட்கவும், தயக்கத்துடன் மலரை அழைத்தாள் சுபானு.

 

அது மலருக்குப் புரியவே, அவள் இங்கிதத்துடன் மறுக்கவும், ஜீவன் பிடிவாதத்தில் இறங்கவே, ‘ஐயோ! இவன் ஏன் இப்படி பண்ணுறான்’ என்று தோன்றியபொழுதிலும், வேறு வழி இன்றி , அவனுடன் அவர்கள் வீட்டிற்குச் செல்ல ஒப்புக்கொண்டாள் அவள்.

 

பூட்டியிருந்த கதவைத் திறந்துகொண்டு, சுபானுவின் வீட்டிற்குள் நுழைந்தனர் மூவரும்.

 

இரண்டு படுக்கை அறைகளை கொண்ட, அந்த வீட்டில், ஜீவன் விளையாடுவதற்கான பொருட்கள் எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை.

 

இருவருக்குமே சரியான அறிமுகம் இல்லாத காரணத்தால், என்ன பேசுவது என்பது புரியவில்லை சுபானுவிற்கு.

 

முயன்று வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், அவள் சமையல் வேலையில் இறங்க, அங்கே இருந்த இறுக்கத்தை விரட்டும் பொருட்டு, “ஜீவனுடைய அப்பா எப்ப வருவாங்க?” என்று மலர் கேட்கவும், “அவங்க வேற ஸ்டேட்ல வேலை செய்யறங்க. வீகென்ட்ஸ் மட்டும்தான் இங்கே வருவாங்க, மற்றபடி இங்கே நானும் ஜீவனும் மட்டும்தான்…” என்று பதில்சொன்னாள் சுபா. அன்றும் ஞாயிற்றுக்கிழமைதான் என்பதே அவள் மனதில் இல்லை போலும்.

 

ஆனால் அதைக் கேட்க நினைத்த மலர், மகனுடைய பிறந்தநாள் அன்றைக்கும் கூட அவனுடைய தகப்பன் அங்கே வரவில்லை என்பது உறைக்க, ஏதோ சரியில்லை என்பது புரியவும், வாயை மூடிக்கொண்டாள்.

 

அதே நேரம் அவளை கைப்பேசியில் அழைத்த மலருடைய தோழி லாவண்யா, அந்த குடியிருப்பில் அமைந்திருக்கும் பார்ட்டி ஹாலுக்கு அவளை உடனே வரச்சொல்லவும், அவர்கள் ஏதோ கொண்டாட்டத்திற்குத் திட்டமிட்டிருப்பது புரிந்தது மலருக்கு.

 

ஜீவனைப் பற்றி அவளுக்குச் சுருக்கமாக ஒரு குறுந்தகவலை அனுப்பிவிட்டு, ஜீவனையும் சுபானுவையும் தன்னுடன் மலர் கூப்பிட, ஜீவனை மட்டும் அழைத்துக்கொண்டு போகுமாறு சொல்லிவிட்டாள் சுபானு. அவர்களுடைய குடியிருப்பிற்குள்ளேயே என்பதால், ஏதும் பயம் தோன்றவில்லை போலும் அவளுக்கு.

 

அதன் பின்பு ஜீவனுடன் அந்த பார்ட்டி ஹாலுக்கு சென்றாள் மலர். அங்கே லாவண்யா, சஞ்சீவன், அனிதா மற்றும் ரஞ்சனியுடன் சேர்த்து, அங்கே அவர்களுடன் வேலை செய்யும், மேலும் சில நண்பர்கள் குடும்பத்துடன் குழுமியிருக்க, அந்த குடியிருப்பில் இருக்கும் சில குழந்தைகளும் அங்கே வந்திருக்க, ஜீவனை தன்னுடன் சேர்த்துக்கொண்டு, அங்கே தயாராக இருந்த கேக்கை வெட்டி, அவர்களுடைய பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினாள் அணிமாமலர்.

 

ஜீவனுடைய முகத்தில் குடியேறியிருந்த மகிழ்ச்சியைக் கண்டு, மனம் நிறைந்தவளாக, அவனை அவர்களுடைய வீட்டில் விட்டுவிட்டு, சுபானு அவர்களுக்காகச் சமைத்ததைப் பெயருக்கு கொரித்துவிட்டு, அவள் அங்கிருந்து கிளம்பும் சமயம் அவளுடைய கண்களில் விழுந்தது, ஜீவனுடைய தகப்பன் அஷோக்குடைய புகைப்படம்.

 

“யோவ்! அஷோக்னா, நம்ம சுபா அக்கா வீட்டுக்காரா?” என்று இடைபுகுந்த ஜெய், “அவரை நீ பார்த்திருக்கியா? அவரை அக்கா டிவோர்ஸ் பண்ணிட்டாங்களா?” என்று கேள்விகளாய் கேட்டுத்தள்ள,

 

 

“டல்லாஸ்ல இருந்தவரைக்கும் நான் அவனை நேரில் பார்த்ததில்லை. ஆனால் அன்னைக்கு அந்த மகாபலிபுரம் ரெசார்ட்டுக்கு, அவனை பார்க்கத்தான் போனேன்!” என்று மலர் சொல்லவும் அதிர்ந்தனர் ஜெய் மற்றும் ஈஸ்வர் இருவரும்.

***

 

அதற்குள் குழந்தைகள் காப்பகத்திற்குச் செல்லவேண்டிய நேரம் ஆன காரணத்தினால், ஜெய் கிளம்ப வேண்டிய கட்டாயம் ஏற்படவே, “நீ வேணா, வீட்டுக்குப் போய் கண்டிநியூ பண்ணு மலர், நான் பிறகு பேசறேன்?” என்று ஜெய் சொல்லவும்,

 

தொடர்ந்து கேட்கும் ஆவல் இருந்தாலும், அதை மறைத்துக்கொண்டு, “பரவாயில்லை ஜெய்… நீ மலரையும் உன்னுடன் அழைச்சிட்டு போ. அவளும் அந்த குழந்தைகளை பார்க்கணம்னு சொல்லிட்டு இருந்தா…” என்று ஈஸ்வர் சொல்லிவிட, ஜெய்யுடன் அந்த காப்பகத்திற்குச் சென்றாள் மலர்.

 

அங்கே இருந்த சிறுவர்களின் உடல்நிலை பற்றி அந்த விடுதியின் காப்பாளரிடம் விசாரித்துவிட்டு, நேரில் சென்று அவர்களைச் சந்தித்தனர் இருவரும்.

 

முன்பு இருந்ததை விடக் கொஞ்சம் தெளிவான மனநிலையிலிருந்தனர் அந்த சிறுவர்கள். அதிலிருந்த இரண்டு சிறுவர்கள் ஒரிஸாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் ஒரு சிறுமி ஆந்திராவைச் சேர்ந்தவள் என்பதும் மட்டுமே தெரிந்தநிலையில், அவர்களுடைய இருப்பிடம்பற்றிய எந்த தகவலையும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

 

ஏனென்றால் அவர்கள் காணாமல்போனது பற்றி காவல்துறைக்கு எந்த புகாரும் இதுவரை பதிவாகவில்லை.

 

அந்த குழந்தைகளுக்கும் அவர்களுடைய கிராமத்தின் பெயரைச் சொல்லத் தெரியவில்லை.

 

இதுபோன்ற காரணங்களை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டுதான், இந்த நிலையில் இருக்கும் குழந்தைகள் அதிகம் கடத்தப்படுகிறார்கள் என்பதைச் சொன்னான் ஜெய்.

 

அதன் பின்பு, அங்கே இருக்கும் தெலுங்கு பேசுபவரை அருகில் வைத்துக்கொண்டு, கூகுள் உதவியுடன், ஆந்திர எல்லையில் அமைத்திருக்கும் பின்தங்கிய கிராமங்களின் பெயர்களை, ஒவ்வொன்றாக மலர் அந்த சிறுமியிடம் சொல்லிக்கொண்டே வரவும், ‘ஸ்ரீபுரம்’ என்ற பெயரை அவள் சொல்லும்பொழுது, ஆமாம் என்பதுபோல் தலை அசைத்தாள் அந்த குழந்தை.

 

அதன்பின் அவர்களுடைய அலுவலகம் வந்த ஜெய், ‘ஸ்ரீபுரம்’ கிராமத்தை உள்ளடக்கிய காவல்நிலையத்தைத் தொடர்புகொண்டு பேச, அந்த குழந்தையைப் பற்றிய தகவல்கள் ஏதும் அங்கே இல்லை.

 

ஆனால் அதே ஊரில், ஒரு வருடத்திற்கு முன்பாக, ‘டிப்பு’ என்ற பதின்மூன்று வயது சிறுவன் காணாமல் போனதற்கான புகார் அளிக்கப்பட்டிருப்பதும், அவன் கிடைக்காத துயரத்தில் அவனுடைய அன்னை, சக்ரேஸ்வரி என்பவர் காவல்நிலையத்தின் வாயிலில் தீயிட்டு தற்கொலைக்கு முயன்றதும் அவனுக்குத் தெரியவந்தது.

 

error: Content is protected !!