imk3

imk3

4
இனிமையான நாள்
அந்த மருத்துவமனை அறையிலிருந்த  நிசப்தத்தை உடைத்தார் வீர்!
“நீ தேவையில்லாம விக்ரமை சந்தேகப்படுற தமிழச்சி… விக்ரம் இப்படி செய்ய வாய்ப்பே இல்லை” என்றார். அவள் தந்தையை நிமிர்ந்து பார்த்தவள், “டேட்” என்று அதிர்ச்சியாக,
“நான் போலீஸ் வேலையை விட்டு பத்து பதிமூணு வருஷமாயிடுச்சுதான்… ஏன்? கொஞ்சம் வயசு கூட ஆயிடுச்சுதான்… ஒத்துக்கறேன்… ஆனா அதுக்காக நீ சொன்னதெல்லாத்தையும் அப்படியே நான் நம்பிடுவேன்னு நினைச்சியா?”  என்றார்.
“இல்ல டேட்… இப்ப இருக்க நிலைமையில உங்கள டென்ஷன் படுத்த வேண்டாம்னு” என்று அவள் இழுக்க,
“சரி அது போகட்டும்… இது யாரை டார்கெட் பண்ண நடந்துச்சு… உன்னையா இல்ல உங்க அம்மாவையா?” என்றவர் தெளிவாய் வினவ,
அவள் முகம் யோசனைக்குறியாய் மாறியது.
“நான் இப்படி யோசிக்கலையே… அம்மாவை ஏன் டார்கெட் பண்ணனும்” என்று அவள் கேட்கும் போதே அவள் மூளை வேகமாய் சில விஷயங்களை ஆராய ஆரம்பித்தது.
“ரைட்… நான் ஒரு கேஸ் விஷயமா சில க்ளாரிபிகேஷனுக்காக சித்தப்பா வீட்டுக்குப் போயிருந்தேன்… அப்போ அம்மா அங்கே இருந்தாங்க… அப்புறம் நான் என் வண்டியை அனுப்பிட்டு அம்மா வந்த காரை டிரைவ் பண்ணிட்டு வந்தேன்” என்று அவள் நடந்தவற்றை யோசித்தபடி சொல்லி முடிக்க,
“இது கண்டிப்பா உங்க அம்மாவைக் கொல்றதுக்கான மோட்டிவ்” என்று வீர் தீர்க்கமானார்.
“இப்போ யோசிச்சா எனக்கும் அப்படிதான் தோணுது டேட்… ஆனா ஏன் அம்மாவை?” என்று தமிழச்சி புரியாத பார்வை பார்க்க, “எனக்கும் தெரியல… ஆனா உங்க அம்மா என்கிட்ட ஏதோ முக்கியமா பேசணும்னு சொன்னா… நான்தான் போன்ஃல வேண்டாம்… நேர்ல பேசிக்கலாம்னு சொன்னேன்” என்று உரைத்தார்.
“ஆமா டேட்! அம்மாவை நான் பார்க்கும் போது கூட அவங்க முகம் ஒரு மாதிரி டிஸ்டர்ப்டா இருந்துச்சு… ஆனா நான் வேறேதோ பிரச்சனைன்னு” என்று அவள் மேலும் குழப்பமுற இருவரும் சில நிமிடங்கள் மௌனமாய் யோசிக்கத் தொடங்கினர்.
அப்போது தமிழச்சி தன் தந்தை முகத்தை ஏறிட்டு, “சித்தப்பாவுக்கு எதாச்சும்” என்று கேட்கவும்,
“இல்ல தமிழச்சி… ரகுவுக்கு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா என்கிட்ட சொல்லி இருப்பான்” என்று வீர் சொல்ல அவளும் அதனை ஆமோதித்தாள்.
“ப்ச்… இந்த பிரச்சனைல சிம்மா அண்ணா வேற எங்கன்னே தெரியல” என்று தமிழச்சி நெற்றியைத் தேய்க்க,
“அவன் இப்போ இந்தியாலேயே இல்ல” என்றார் வீர்!
“அப்படியா?!” என்று தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தியவள், “இதெப்படி உங்களுக்கு?” என்று தன் தந்தையை குழப்பமாய் பார்த்தாள்.
“அவனோட ரூம்ல அவன் பாஸ்போர்ட் இல்ல”
“அண்ணன் சொல்லிட்டு இருந்தாரு… ஏதோ ரிசர்ச்… அது இதுன்னு நிறைய நாடுகளுக்கு போகணும் அப்படின்னு… ஆனா நம்மகிட்ட எல்லாம் சொல்லாம எப்படி?”
“உன்கிட்டயும் என்கிட்டயும்தான் சொல்லல… கண்டிப்பா அவங்க அம்மாவுக்குத் தெரிஞ்சிருக்கும்” என்று வீர் சொல்லவும்,
“நான் அண்ணாவோட பாஸ்போர்ட் டீடைல்ஸ் வைச்சு என்குயரி பண்ணசொல்லட்டுமா?” என்று கேட்டாள்.
“அதனால் பெருசா யூஸ் இல்ல… எங்க இருந்தாலும் அவனே நம்மள காண்டேக்ட் பண்ணாத்தான் உண்டு… அன்ட் நீ நினைக்கிற மாதிரி விக்ரமுக்குத் தெரிஞ்சிருந்தா கண்டிப்பா சிம்மாவுக்கு உங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆன விஷயம் போய் சேர்ந்திருக்கும்” என்று வீர் சொல்ல தமிழச்சிக்கு தலையே சுற்றியது.
வீரின் கணிப்புக்கு ஏற்ப விக்ரம் தன் வீட்டில் ஸ்கைப் மூலமாக தன் நண்பனிடம் உரையாடிக் கொண்டிருந்தான். 
“நீ உடனே புறப்பட்டு வா சிம்மா! அம்மாவுக்கு சீரியஸா இருக்கு” என்றவன் சொல்ல,
எதிர்புறத்தில் ஒரு நீண்ட நெடிய மௌனம்.
“சிம்மா!” என்று விக்ரம் அழுத்தமாய் அழைக்க, “எங்க அம்மாவுக்கு எதுவும் ஆகாது… நிச்சயம் எதுவும் ஆகாது… எங்கம்மாவுக்கு அவ்வளவு சீக்கிரம் எதுலயும் தோற்கப் பிடிக்காது…. அவங்க நிச்சயம் நல்லாயிடுவாங்க … அவங்க மனோபலம் அந்த மாதிரி” என்று சிம்மபூபதி வலியோடு சொன்னாலும் அவன் வார்த்தையில் தெளிவும் ஆழமான நம்பிக்கையும் இருந்தது.
“அப்போ நீ வரமாட்டியா?” விக்ரம் அதிர்ச்சியாக,
“இப்போ உடனே முடியாது விக்கி” என்றான்.
“டேய்! உன் தங்கச்சி என்னை கொலையா கொல்றா டா” 
“நான் இருக்குற இடத்தை சொல்லிட்டியா?” என்ற சிம்மன் பதற,
“சொல்லல… ஆனா அவ என்னைக் கண்டுபுடிச்சுட்டா… சரியான கேடி” என்றான்.
“உன் அரசியல் மூளையை யூஸ் பண்ண வேண்டியதுதானே!”
“ஏன்டா… நீயே விட்டா எங்க இரண்டு பேருக்கும் டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்துருவ போல” என்று விக்ரம் கடுப்பாய் கேட்க,
“ப்ச்… அது உன் பிரச்சனை” என்றான் சிம்மா!
“அடப்பாவி!” விக்ரம் இன்னும் தன் அதிர்ச்சி நிலையை கைவிடாமல் தொடர,
“அதை விடு விக்கி… இவான் ஸ்மித்ன்னு என்னோட ஃப்ரெண்ட்… அவர் நாளைக்கு இல்லன்னா  நாளன்னைக்குசென்னைக்கு வந்திடுவாரு… அவரைக் கொஞ்சம் ரிசீவ் பண்ணி உன் வீட்ல தங்க வைச்சுக்கோ” என்றவன் சொல்ல,
“என் வீட்லையா!! போடாங்… எங்க அம்மா என்னை கொன்றுவாங்க” என்றான்.
“அதேல்லாம் மாட்டாங்க… நீ அவங்ககிட்ட சொல்லாத பொய்யா… எதாச்சும் ஒரு பொய்யை சொல்லி சமாளி… நான் உன்கிட்ட அப்புறம் பேசறேன்” என்று சிம்மன் அழைப்பைத் துண்டித்துவிட, விக்ரமுக்கு கடுப்பேறியது. ஏற்கனவே தான் இருக்கும் நிலைமையில் இவன் வேறு புதிது புதிதாகப் பிரச்சனையை சேர்த்து விடுகிறானே என்று அவன் புலம்பிக் கொண்டிருக்க,
அப்போது அவனின் வீட்டின் கதவு தட்டும் ஓசை கேட்க, தன் அறையிலிருந்து சென்று வாயிற் கதவைத் திறந்தான். ஆதி அவனை முறைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைய விஷ்வாவும் பின்னோடு நுழைந்து,
“என்ன விக்ரம் நீ… வந்து கொஞ்சம் நேரம் கூட இல்லாம உடனே ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்பிட்ட” என்று கேட்டார்.
“நான் அங்கிருந்து என்ன ப்பா பண்ண போறேன்” அலட்சியமாய் அவனிடம் இருந்து வந்த பதிலைக் கேட்டு கோபமாய் திரும்பிய ஆதி,
“எப்படிடா நீ இப்படி இருக்க… உன்னை நான்தான் பெத்தேனான்னு எனக்கு சந்தேகமா இருக்கு” என்றார்.
“என்ன பேசுற ஆதி?” என்று விஷ்வா கோபம் கொள்ள, “பின்ன என்ன விஷ்வா… இவன் பண்றதெல்லாம் பார்த்தா எனக்கு அப்படிதான் தோணுது” என்றார்.
விக்ரம் எதுவும் பேசாமல் மௌனமாய் தன் அறைக்குள் சென்றுவிட்டான். இந்த மாதிரி வசைகள் ஒன்றும் அவனுக்குப் புதிதல்ல, பழக்கப்பட்ட ஒன்றுதான்.
ஆதியும் மேலே பேசாமல் வேகமாய் உள்ளே சென்று விட விஷ்வா மகன் பின்னோடு வந்து, “நீ செஞ்சது தப்பு விக்ரம்… தமிழச்சியும் அவங்க அம்மாவும் இந்த மாதிரி நிலைமையில் இருக்கும் போது நீ பாட்டுக்கு இப்படி கிளம்பி வந்திருக்க கூடாது” என்று அவர் நிதானமாய் எடுத்துரைக்க,
“உங்களுக்கு கூட என் நிலைமை புரியலயா ப்பா… நீங்க ஃபோன்ல தமிழச்சிக்கு ஆக்சிடெண்ட்டுன்னு சொன்னதும் நான் எவ்வளவு பதறி போயிட்டேன் தெரியுமா… என் உயிர் என்கிட்ட இல்ல… ஆனா அவ….
நான் ஆறுதல் சொல்லப் போனா…  என்கிட்ட அப்படியே முகத்திலறைஞ்ச மாதிரி பேசுறா… மனசொடிஞ்சு போயிட்டேன்” என்றவன் வேதனையோடு தன் தந்தையின் தோள் மீது சாய்ந்து கொள்ள அவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.
ஆதிக்கு ஒரு முறை விபத்து நேர்ந்த போது தான் என்ன மன நிலையில் இருந்தோமோ அதே மனநிலையில்தான் தன் மகனும் இருந்திருக்கிறான் என்பது புரிய, அவன் தமிழச்சி மீது கொண்ட காதல் இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்று அவருக்குத் தோன்றியது.
எப்படியாவது இவர்கள் இருவரையும் இணைத்து வைத்துவிட வேண்டும் என்று விஷ்வா யோசித்துக் கொண்டிருக்கும் போது ஆதி, “விக்ரம்” என்று சத்தமாய் அழைத்துக் கொண்டே அவன் அறைக்குள் வந்தாள்.
“என்னம்மா?” என்று விக்ரம் கேட்க,
 “நீ எம் பி எலெக்‌ஷன்ல நிக்கப்  போறியா… அதுவும் எஸ்.பி கட்சிக்காக” என்று அதிர்ச்சியாக கேட்க, “ஹ்ம்ம்” என்றான் விக்ரம்.
விஷ்வாவும் வியப்பாய் மகனைப் பார்க்க ஆதி சீற்றத்தோடு, “நீ அந்த கட்சில இருக்க வேண்டான்னு நான் பல தடவை சொன்னேன்… ஆனா நீ காதுல கூட போட்டுக்கல இல்ல… நீ செய்றதைதான் செய்வேன்னு முடிவா இருக்க… அப்படித்தானே?!” என்க, அவன் பதிலின்றி நின்றான்.
ஆதியின் முகத்தில் கோபம் குறைந்து ஒருவித சலிப்போடு, “செய்டா… உன் இஷ்டம் போல எதையாச்சும் செய்… எக்கேடு கெட்டோ போ… இனிமே நான் எதுவும் சொல்லப் போறதில்ல… இன்னையலிருந்து உனக்கு அம்மான்னு ஒருத்தி இருக்காங்கிறதையே மறந்திடு” என்று படபடவென பொறிந்துத் தள்ளிவிட்டு அவர் சென்றுவிட,
“ம்ம்ம்மா” என்று விக்ரம் அழைக்க ஆதி அவன் அழைப்பைக் காதில் வாங்காமல் அங்கிருந்து அகன்றுவிட்டார்.
“ஆதி” என்று விஷ்வா தன் மனைவியின் பின்னோடு சமாதானம் செய்ய சென்றுவிட அவன் அப்படியே விரக்தியோடு படுக்கையில்  சரிந்தான்.
அம்மா, மனைவி என்று இருவருமே தன்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே என் எண்ணும் போது  அவனுக்கு உள்ளுர வேதனை பொங்கியது. அதுவும் தமிழச்சி அவன் மீது சந்தேகப்பட்டதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
திருமண வாழ்க்கை தொடங்கிய நாளில் இருந்து கடைசியாய் அந்த சம்பவம் நடக்கும் வரை ஒரு சிறு பூசல் கூட இல்லாமல் அத்தனை சந்தோஷமாய் இருந்தோம். அவற்றையெல்லாம்அவள் மொத்தமாய் மறந்து போனாளா?
மனதாலும் உடலாலும் இணைந்து தங்கள் தாம்பத்திய வாழ்கையை தொடங்கிய அந்த நாளை மறக்க முடியுமா?
பூ அலங்காரத்தோடு வண்ணமயமாய் காட்சியளித்தது அந்த அறை. போதாக்குறைக்கு அந்த பூக்களின் நறுமணம் அந்த புது தம்பதிகளுக்கு ரம்மியமான சூழ்நிலையைப் புகுத்த தமிழச்சி தன் காதல் கணவனை எதிர்பார்த்தபடி அறைக்குள் நுழைந்தாள்.
அவள் பார்வைக்கு அவன் அகப்படாமல் போக அவள் குரலைத் தாழ்த்தி, “என்ன விளையாட்டு இது… வெளிய வாங்க விக்ரம்” என்றழைக்க அவள் தேடலுக்கும் கேள்விக்கும் விடையில்லை.
அந்த அறையே நிசப்தமாய் இருக்க, “வர மாட்டீங்களா? சரி நான் போறேன்” என்றவள் திரும்பி நடக்க பட்டென ஓர் வலிய கரம் அவளைக் கட்டிக்கொண்டு பின்னே இழுத்தது.
“ஐயோ! விக்ரம் விடுங்க” என்றவள் குரல் சற்றே உள்ளே போய்விட அவனோ தன் பிடியை தளர்த்துவதாக இல்லை.
அவன் அந்த நொடி தன் காதல் அரங்கேற்றத்தை செவ்வனே தொடங்கியிருந்தான். அவள் மீள்வதற்கான முயற்சியில் ஈடுபட்ட போதும் அவளின் பெண்மை அவனின் எல்லை மீறல்களுக்குள் மெல்ல மெல்ல தோற்றுக் கொண்டிருந்தது.
“விக்ரம்… ப்ளீஸ் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவள் கம்மிய குரலில் சொல்ல,
“அப்புறமா பேசிக்கலாம்” என்றவன் கிறக்கமாய் அவள் உடுத்தியிருந்த சேலை நகைகளை களைந்து கொண்டிருக்க,  அதற்கு மேல் அவள் பொறுக்க முடியாமல் அவனைத் தள்ளிவிட்டு, “யூ ஆர் சோ டிஸ்கஸ்டிங்” என்றாள்.
உதட்டில் வந்த வார்த்தையில் மட்டுமே கோபம் இருந்ததே ஒழிய அவள் முகம் அவன் புரிந்த காதல் லீலைகளில் செந்தூரமாய் மாறியிருந்தது. வெட்கத்தில் சிவப்பேறிய அவள்  முக அழகை கண்கொட்டாமல் ரசித்தவன், “உண்மையை சொல்லு…  டிஸ்கஸ்டிங்கா இருந்துச்சுன்னு” என்றபடி அவளை நெருங்கினான்.
“விக்ரம்… ப்ளீஸ் ப்ளீஸ் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவள் அவனிடம் இருந்து தப்பிக்கும் உபாயமாய் அவள் பின்னோடு நகர,
“அதான் ஃபோன்… வாட்ஸப்னு கல்யாணத்துக்கு முன்னாடி விடிய விடிய பேசினோமே டி… போதாதா?” என்றவன் சற்றே எரிச்சலானான்.
“ப்ச்… அப்போ இந்த விஷயத்தைப் பத்தி நான் எப்படி உங்ககிட்ட சொல்லுவேன்” என்றவள் முகம் சுணங்க,
“அப்படி என்னடி மேட்டர்?” என்றவன் எட்டி நின்றவளை தன்னோடு சேர்த்து அணைக்க, “அது” என்று அவள் அவன் முகத்தை தயக்கமாய் ஏறிட்டாள். அப்போது அவனோ தன் விழிகளாலேயே  அவளைக் களேபரம் செய்து கொண்டிருந்தான். அவள் தலை முதல் பாதம் வரை கிறக்கமாய் பார்த்தவன் இறுதியாய் அவளின் செவிதழ்களில் வந்து மையல் கொள்ள,
அவன் பார்வையை அவள் எதிர்கொள்ள முடியாமல் வேறுபுறம் திரும்பிக் கொண்டு, “இப்பதான் எனக்கு ஆர்டர் வந்திருக்கு… அதுக்குள்ள… ப்ரெக்னென்சி எல்லாம் வேண்டாம்ம்ம்னு…” என்று இழுத்தாள்.
அந்த நொடி அவன் மெலிதாய் முறுவலித்து, “எனக்கும் அதே தாட்தான் தமிழச்சி… நானும் முடிக்க வேண்டிய நிறைய கமிட்மெண்ட்ஸ் இருக்கு” என்க, அவள் பெருமூச்செறிந்தாள்.
 “பேபி மட்டும்தான் இல்ல… ஆனா மத்ததெல்லாம் உண்டுதானே?” என்றவன் கேட்டுக் கொண்டே அவள் காது மடலை உரச, “ஹ்ம்ம் ஹ்ம்ம்” என்று அவளும் மயக்கமாய் சம்மதம் தெரிவிக்க,  அதற்குப் பிறகு அவள் தேகம் அவன் கரத்திற்குள் நெகிழ்ந்தது.
 அவன் அவள் இதழ்களை நெருங்கிய சமயம் அவள் இடையிட்டு,
“விக்ரம் இன்னும் ஒரு விஷயம்” என்றாள்.
அவன் கடுப்பாகி, “இன்னும் என்னடி?” என்று கேட்க,
“எனக்கு போஸ்டிங் டெல்லில” என்றாள். அவன் முகம் லேசாய் மாற்றமடைய அவள் தவிப்போடு, “முன்னாடியே சொல்லணும்னு நினைச்சேன்… ஒரே ஒரு வருஷம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க விக்ரம்” என்றாள்.
“அதெல்லாம் முடியாது” என்றவன் கோபமாய் அவளை முறைக்க,
“முடியாதுன்னு சொன்னா எப்படி?” என்று அவளும் கோபமாய் கேட்டாள்.
“அட்ஜஸ்ட் பண்ணிக்க எல்லாம் முடியாது… நீ எங்க இருப்பியோ அங்கதான் நானும் இருப்பேன்” என்றான்.
அவள் வியப்பாய் அவனை ஏறிட்டுப் பார்க்க அந்த நொடி அவன் விழிகளில் தளும்பிய காதலைக் கண்டு அவள் உள்ளம் சிலாகிக்க, “நிஜமாவா விக்ரம்” என்று அவள் கேட்கும் போதே அவள் உதடுகளைக் கைது செய்து அவளைப் பேசா மடந்தையாக மாற்றினான் அவள் காதல் கணவன். அதன் பின் அவர்களின் உணர்வுகள் பேசத் தொடங்க அவர்கள் உதடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து மௌனவிரதம் பூண்டன.
காதலோடு அன்று அவர்கள் வாழ்வில் தொடங்கிய தாம்பத்தியம் சில மாதங்கள் முன்பு வரை எந்தவித பூசல்களும் இன்றி சிறப்பாகவே நடந்தது. அதாவது அவளின் அதிகாரமும் அவனின் அரசியலும் அவர்கள் உறவுக்குள் நுழையாத வரை!
அந்த இனிமையான நாளை எண்ணி இன்று அவன் உள்ளம் தவிப்புற… கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து அதே நாளில் நிகிழந்த அந்த கசப்பான நினைவும் அவன் மனதை அலைக்கழித்தது.
error: Content is protected !!