mu12

19
அக்னியில் கரைந்தாள்
சுவாமிநாதன் அந்த இருளில் மூலிகையை ஆதுர சாலைக்கு சென்று அரைத்து எடுத்துக் கொண்டு வெளியே வந்த சமயத்தில் குடில் முழுவதும் நெருப்பு பற்றிக் கொண்டு எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்தார். அதே சமயத்தில் ருத்ரதேவன் தன் குதிரையில் அங்கிருந்து செல்வதையும் அவர் கண்கள் கவனிக்கத் தவறவில்லை.
அக்னீஸ்வரி அக்னீஸ்வரி!!” என்று அவர் கதறிக் கொண்டு குடிலை நோக்கி நெருங்க அந்த தீ விஸ்வரூபம் எடுத்து அவரை நெருங்கவிடாமல் செய்தது. அதே சமயத்தில் அந்த தீயினால் ஏற்பட்ட வெளிச்சமும் புகை மூட்டத்தாலும்  நீலமலையில் வாழும் மக்கள் நடப்பது இன்னதென்று அறியாமல் விரைவாக ஓடி வந்தனர்.
சுவாமி நாதன் கண்ணீரோடு தன் குரலை உயர்த்தி, “அக்னீஸ்வரி அக்னீஸ்வரி… என்னவாயிற்று உனக்கு?” என்று புலம்பியபடி தலையிலடித்து கொண்டார்.
உள்ளே இருந்து ஒரு குரல் ஈன ஸ்வரத்தில், “என்னை காப்பாற்ற முயலாதீர்கள் மாமா… விலகிச் செல்லுங்கள்… நான் பிழைக்க மாட்டேன்…அன்று என் கணவரின் சிதையிலேயே நான் எரிந்திருப்பேன்… ஆனால் உங்களை தனிமையில் விடுத்துப் போக மனமில்லாமல் உயிரைக் காத்து வைத்தேன்… ஆனால் மானம் உயிரினும் மேலானதாயிற்றே… எனக்குமே வேறு வழியில்லை… என்னை மன்னித்து விடுங்கள் மாமா!” என்று அவள் உரைக்க சுவாமிநாதன் அதிர்ந்து போய்,
அக்னீஸ்வரி… நீ பயம் கொள்ளாதே நான் வருகிறேன்!” என்றார்.
நீங்கள் என்னை மகளாக எண்ணினால் ஒரு போதும் என்னை காக்க வரக்கூடாது… இந்த மகளுக்காக ஒரே ஒரு உபாகாரம் மட்டும் செய்யுங்கள்… என் தந்தை வீட்டில் இருக்கும் செம்பு கலயத்தையும் அரங்கநாதனையும் அழைத்து கொண்டு இவ்விடம் விட்டு வெகு தூரம் சென்று விடுங்கள்… அவனை நல்ல முறையில் தங்களால் மட்டுமே வளர்க்க முடியும்” என்று அவள் சொல்லி முடித்த பின் ஒருவித அமைதி உண்டானது.
அவர் மேலும் மேலும், “அக்னீஸ்வரி… அக்னீஸ்வரி… ” என்று அழைத்து பார்த்தார். அவளின் குரல் பிறகு ஒலிக்கவில்லை. பின்னர் வேதனையோடு,
 “நான் என்ன பாவம் செய்தேனோ… இப்படி வரிசையாய் என் பிள்ளைகளின் மரணத்தை பார்க்கும் துரதிஷ்டசாலியாய் ஆனேனே… இந்த நெருப்பு வாழ்ந்து முடித்த… இந்த கிழவனை தன் பசிக்கு இரையாக்கி கொள்ளக் கூடாதா?!” என்று கதறியபடி அவளைக் காப்பாற்ற முடியாமல் அந்த அனலின் தாக்கத்தில் மயக்கமுற்றார்.
சுவாமிநாதனை அந்த மலைவாழ் மக்கள் தூக்கிவந்து காப்பாற்றினர். அவர்கள் அந்த நெருப்பை அணைக்க முயல அது சாத்தியமற்ற ஒன்றாய் இருந்தது. ருத்ரதேவன் உயிரை பலி வாங்க முடியாமல் அவளின் கோபத்தீ ஏமாற்றத்தால் அதீத உக்கிரமாய் எரியஎல்லோரும் அது நீல மலைக் காட்டை நோக்கிப் பரவி அழித்துவிடுமோ என்று அச்சம் கொண்டனர். ஆனால் அத்தகைய பாதிப்பு ஏற்படாமல் அந்த நெருப்பு சில மணி நேரங்களில் தன் உக்கிரத்தைத் தானே குறைந்து தணிந்தும் போனது.
ருத்ர தேவனும் ஏமாற்றத்தோடு அந்த தீயை வெகுதூரத்தில் இருந்து பார்த்தான். அவளின் மீது கொண்ட காதல் கைக்கூடாத ஏமாற்றத்தால்வெறியாய் மாறி இப்போது அது அவளின் உயிரையே பலி வாங்கிவிட்டதை அவன் உணர்ந்தானோ தெரியாதுஆனால் அவன் கண்களின் ஓரம் நீர் கசிந்தது. அவன் முதன் முதலில் நீரில் பார்த்து ரசித்த அவளின் பிம்பம் இப்போது நெருப்பில் கரைந்து போனது.
அக்னீஸ்வரிக்கு என்ன எண்ணம் கொண்டு அவளுக்கு அப்படி ஒரு பெயரிட்டனரோ. அவளின் துயர் நீக்க அந்த அக்னியே அவளை முழுமையாய் ஆட்கொண்டுவிட்டது. அக்னீஸ்வரியின் குடும்பத்தினருக்கு மேலும் அவளின் இழப்பு பேரதிர்ச்சியாய் இருந்தது. இப்படி வரிசையாய் இழப்புகளும் இன்னல்களும் நேரிடுவதன் காரணத்தை அறியாமல் அவர்கள் வேதனையுற்றனர்.
ஆனால் சுவாமி நாதனுக்கு ஓரளவுக்கு நிகழும் மோசமான சம்பவங்களின் பின்னணியில் உள்ள ருத்ரனின் சூழ்ச்சி பிடிபட்டது. விஷ்ணுவர்தனின் மரணத்தில் புதைந்த ரகசியங்களும் அப்போது அக்னீஸ்வரி ருத்ரனின் மீது பழி சுமத்த அதை யாரும் நம்பவில்லை… ஏன் சுவாமிநாதனும் கூட நம்பவில்லை. ஆனால் ருத்ரன் அந்த இரவில் ஏன் குடிலுக்கு வந்தான் யாரைக் காண வந்தான் நெருப்பு மூட்டியது யார் இவற்றை எல்லாம் கடந்து அக்னீஸ்வரி இவ்விடம் விட்டுச் செல்ல சொன்னதன் பொருள் என்ன?இப்படி அவர் மனம் எல்லாவற்றையும் இணைத்து ஒரு முடிவுக்கு வந்தது.
கடைசியாய் அக்னீஸ்வரியின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி பிடிவாதமாய் அந்த சிறு பிள்ளை அரங்கநாதனை அழைத்துக் கொண்டு செம்பு கலயத்தையும் தம்மோடு எடுத்துக் கொண்டு ஆரை நாட்டை விட்டு வெகுதூரம் சென்றார். அவர் எவ்விடம் சென்றார் எனப் பின்னர் யாருமே அறிந்திருக்கவில்லை.
ருத்ரதேவனின் மனதை அக்னீஸ்வரியின் மரணம் வெகுவாய் பாதித்திருந்தது. அந்த இழப்பின் வலியை யாரிடமும் காண்பிக்க முடியாமல் தனிமைப்பட்டான். ஆனால் தன்னை நிராகரித்தவள் என்ற கோபமும் அவனுக்குள் அழுத்தமாய் இருந்தது. அந்த எண்ணம் அவனுக்கு பெண்கள் மீது மரியாதையற்று போகச் செய்தது. அந்த இழப்பிலிருந்து மீட்டுக் கொள்ள பல பெண்களை மணம் புரிந்து கொண்டான்.
ஆனால் ஏனோ எந்த பெண்ணுமே அக்னீஸ்வரிக்கு நிகரானவளாய் அவனால் எண்ண முடியவில்லை. எல்லோரின் முகத்தையும் அவளின் அழகோடு ஒப்புமை செய்து ஏமாற்றமடைந்தான். அவனால் உறவு கொள்ள முடிந்ததே ஒழிய எந்த பெண்ணாலும் அவனின் உணர்வுகளை உயிர்ப்பிக்க முடியவில்லை.
சௌந்தர கொங்கணன் உடல் நலம் குன்றிய நிலையில் அந்த ஆட்சிப் பீடம் ருத்ரதேவனை வந்தடைந்தது. மக்கள் எல்லோரும் ஆனந்தம் கொண்டு அவனின் முடிசூட்டு விழாவை கொண்டாடினர். ஆனால் அதற்குப் பின்னர் ஆரை நாட்டை பெரும் துரதிஷ்டம் பீடித்துக் கொண்டது. ரு
த்ரதேவன் மக்களின் நலனை விட சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிக்கவும் ஆரை நாட்டு சிற்றரசை பேரரசாக மாற்றும் எண்ணம் கொண்டான். அதற்காக ஏற்படும் உயிரிழப்பு பொருளிழப்பு என எதை குறித்தும் அக்கறை கொள்ளவில்லை. அவன் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை எல்லாம் அதிருப்தியாகவும் வெறுப்பாகவும் மாறிவிட அதைக் குறித்து அவன் கவலை கொள்ளவில்லை.
பெரும் சாம்ராஜ்ஜியத்தை ஆள வேண்டும் என்ற இலட்சியத்தை முன்னிறுத்தியே அவனின் ஆட்சி இருந்தது. மக்களின் நலம் பேணாத அரசன் எங்கனம் பெரும் புகழை அடைய முடியும். மக்களின் ஆதரவும் இல்லாமல் சுற்றியுள்ள சிற்றரசர்கள் எல்லாவற்றையும் எதிரியாய் மாற்றிக் கொண்டான்.
அவன் மனதில் பேரரசரை ஆள வேண்டும் என்ற வெறியால் நிறைய போர்களை மேற்கொண்டான். அதில் வெற்றியும் கண்டான். அவனின் வீரமும் புத்திக்கூர்மையும் பலரை அச்சம் கொள்ள செய்யஅவனிடம் தோல்வியுற்ற சிற்றரசர்கள் பேரரசரின் உதவியோடு பெரும் படையோடு வந்து போருக்கு அறைகூவல் விடுத்தனர்.
ருத்ரதேவன் அச்சமின்றி புத்திக் கூர்மையோடு தம் படைகளை பிரித்து எல்லா திசைகளிலும் தன் தாக்குதலை மேற்கொண்டான். அவனை நேரடியாக வெல்வது சாத்தியமற்று ஒன்று என்று என்பதை அறிந்து கொண்டு போர் தர்மத்தை மீறி அவனைப் பின்னிருந்து தாக்கி சூழ்ச்சியால் வீழ்த்தினர்.
அக்னீஸ்வரியின் மீது ருத்ரதேவன் கொண்ட காதலும் அதனால் ஏற்பட்ட ஏமாற்றமும் அவனை இரக்கமற்றவனாக மாற்றியது. மீண்டும் தோல்வியையோ இழப்பையோ சந்திக்க கூடாது என்கிற பிடிவாத எண்ணமும் அவனின் நற்குணங்களைச் சிதைத்துவிட்டிருந்தது. இப்போது பெரும் ஆட்சியை நிர்வகிக்க வேண்டுமென்ற அவனுடைய இலட்சியமும் வெறும் கானல் நீராய் போனது.
ருத்ரதேவன் தன் எண்ணமும் இலட்சியமும் ஈடேறாமல் மரணிக்க அவன் வாழ்க்கை நிறைவற்றதாகவே முடிந்து போனது. இப்படி ஏக்கமும் காதலும் கோபமும் துவேஷமும் பழிவுணர்வையும் தேக்கி வைத்த மூவரும் அவர்கள் எண்ணம் ஈடேறாமலே மரணத்தை எதிர்கொண்டனர். ஆனால் மரணம் உடலுக்கே அன்றி எண்ணத்திற்கு இல்லை.
வழிவழியாய் பல சந்ததிகளைக் கடந்து நிலமகள் தம் சுழற்சியை இடைவிடாமல் மேற்கொள்ள மீண்டுமே உயிர்த்தெழப் போகும் இந்த மூவரும் தங்கள் ஞாபகங்களை மீட்டெடுத்துக் கொள்ளாவிடிலும் இன்றைய காலகட்டத்தில் தங்கள் வாழ்க்கையை மீண்டுமே தொடரப் போகின்றன.
20
மீண்டும் உயிர்த்தெழு
இந்த பூமித்தாயானவள்  மனிதன் உருவெடுத்த காலகட்டத்திலிருந்து இன்றுவரையில் எத்தனை லட்சபோலட்சம் சந்ததிகளைக் கண்டிருப்பாளோ என யார் கணக்கிடக் கூடும். ஆனால் இப்பூவுலகின் மீது  பிறப்பெடுக்கும் ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு குணங்களையும் திறமைகளையும் கொண்டு தனக்கான தனித்துவத்தை பெற்றிருப்பான் என்பது  மட்டும் அனைவரும் அறிந்த ஒன்று.
அதே நேரத்தில் மனிதன் வழிவழியாய் தம் முன்னோர்களின் தோற்றத்தையும் குணாதிசயங்களையும் நினைவுகளையும் மற்றும் அவர்கள் கற்று கொண்ட பாடங்களையும் மரபியல் ஞாபகங்களாய் தமக்குள் சுமந்திருப்பான் என அறிவியல் உரைக்கிறது.
அது உண்மை என்பது போல் நாம் சிரமப்பட்ட கற்றுக் கொண்ட ஒன்றை நம் குழந்தைகள் ரொம்பவும் சுலபமாகச் செய்வதையும் வரும் சந்ததிகள் நாளுக்கு நாள் அதிக புத்திக் கூர்மையோடு  விளங்குவதையும் யாரும் மறுக்க முடியாது. தாத்தாவை போன்ற பழக்க வழக்கங்கள் மற்றும் தோற்றம் கொண்ட பெயரன்கள் இருப்பதாகச் சொல்வதும் இவ்விதமே.
பல சமயங்களில் நம் முன்னோர்கள் செய்ய முடியாமல் தோல்வி கண்ட நிறைய விஷயங்களை முன்னிறுத்தி அவர்களின் வருங்கால சந்ததிகள்  சாதித்து வெற்றி கண்டிருப்பர்.  அது மட்டுமல்லாது நாம் சில நேரங்களில் இதுவரையில் ஒரு முற்றைக்கூட பார்க்காத முகங்களை முன்பே பார்த்தது போலவும்பார்த்திராத இடங்களை  ரொம்பவும் பழகிய இடமோ என்ற அனுபவமும் ஏற்பட்டிருக்கும். அவை நம் முன்னோர்கள் கடந்து வந்த பாதையின் மூலம் ஏற்பட்ட மரபியல் ஞாபகங்களாகவும் இருக்கலாம் என அறிவியல் அறிஞர்கள் உரைக்கின்றனர்.
இதே போல் ஆன்மிகம் தன்னுடைய முக்கிய கருத்தாக பறைசாற்றுவது எண்ணங்கள் அபரிமிதமான சக்தி கொண்டது என்றும்அவற்றிற்கு அழிவில்லை என்றும் உரைக்கிறது.  நாம் ஆழமாக எண்ணிக் கொண்ட விஷயம் அழிவுப் பெறாது என்றும் காலத்தின் சுழற்சியில் அவை மீண்டும்  உயிர்பெற்று தான் எண்ணியதை ஈடேற்றிக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
இப்படியாக  காலங்காலமாய் நமக்குள் சில கருத்துக்கள் வெவ்வேறான வடிவில் புகுத்தப்பட்டிருக்கஉண்மைக்கும் பொய்மைக்கும் அப்பாற்பட்ட இத்தகைய கோட்பாடுகளை தழுவியே வரும் நிகழ்வுகள் அமையப் போகிறது.
அக்னீஸ்வரிருத்ர தேவன்விஷ்ணு வர்தன் ஆகிய மூவரும் தங்கள் எண்ணங்கள் நிறைவேறாமலே உயிர் நீத்துவிடமீண்டும் அவர்கள் நீண்ட கால இடைவெளிகளைக் கடந்து தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள உயிர்த்தெழுவார்கள். இவர்கள் தங்கள் ஞாபகங்களை மீட்டெடுத்துக் கொள்ள போவதில்லை எனினும் அவர்கள் தங்களின் முடிவற்ற பயணத்தை முற்றிலும் மாறுபட்ட காலகட்டத்தில் தொடரப் போகிறார்கள்.
நிலமகள் வெளிச்சத்திற்காகச் சூரியனையும் சந்திரனையும் எதிர்பார்த்திருந்த காலங்கள் மலையேறி அவள் தன்னைத் தானே ஒளியூட்டிக் கொண்ட காலகட்டம் அது. எங்கும் பிரகாசமாய் மின்விளக்குகள் எரிந்து கொண்டிருக்க இரவும் பகலும் ஒரேப் போல இருளை தொலைத்துவிட்டு காட்சியளித்தது.
மனிதனின் அறிவியல் கண்டுபிடிப்புகளால் நிலமகள் நாளுக்கு நாள் கலங்கப்படஆதவன் தன் உக்கிரப் பார்வையை கொண்டு அவள் மீது வெப்பத்தைக் கனலாய் வீசிக் கொண்டிருந்தான். ஆதலால் கொஞ்சம் கொஞ்சமாய் நிலமகளின் பசுமை குலைந்து நீர்நிலைகள் வறண்டு போனது. இதனால் பசும் புல்வெளிகளும் நீர் நிலைகளாலும் படர்ந்திருந்த நிலமகளின் தோற்றம் முற்றிலுமாய் மாற்றம் கண்டிருந்தது.
கோபுரம்மாட மாளிகைகள்விவசாய நிலங்கள்நதி பிரவாகங்கள்அடர்ந்த மரங்கள்,பச்சை போர்வையை போர்த்திக் கொண்டிருந்த மலைகள் என இயற்கையோடு இயைந்திருந்த அவளின் சௌந்தரியம் இப்போது உயர்ந்த கண்ணாடி மாளிகைகள் கண்ணை பறிக்கவிவசாய நிலங்கள் வீடுகளாக மாறியிருக்கமின்விளக்குகள் எங்கும் பிரகாசித்து கொண்டிருக்க அவளின் அழகு இன்றைய காலகட்டத்தில் இயந்திரத்தனமாய் மாறியிருந்தது.
 காலங்கள் கடந்ததினால் ஏற்பட்ட இத்தகைய  மாற்றங்களுக்கு இடையில் வெண்மதியோன் மட்டும் சுயநலமின்றி பூமித் தேவதைக்காக தேய்வதுமாய் வளர்வதுமாய் மாற்றமின்றி இருப்பதின் காரணத்தை யார் அறியக் கூடும் ?!
பாரத தேசம் தம் வல்லமையோடு பெரிய சாம்ராஜ்ஜியங்களை ஆட்சி செய்த காலகட்டம் எல்லாம் காணாமல் போய் ஆங்கிலேயர்கள் மற்றும் வேற்று நாட்டவர்கள்  பிடிக்குள் சிக்குண்டு தம் பெருமைக்குரிய வரலாறுகளை தொலைத்துக் கொண்டிருந்தது.
 அவர்கள் கரையான்களாய் நம் தேசத்தின் புகழை அரித்துக் கொண்டே இருந்தனர்.  சுதந்திர தாகத்தால் செத்து மடிந்த பல்லாயிரக் கணக்கோரின் கல்லறையின் மீது இந்திய தேசம் பிறந்தது.
1947 இந்திய நாடு சுதந்திரப் பெற்றதாக அறிவிக்கப்படஅது வெறும் பிம்பமே! ஆங்கிலேயர்களின் ஆட்சிப் பிடி விலகியதே ஒழிய நாம் நம் பழமையான கலச்சாரம் பண்பு நாகரிகங்களை மறந்து மேற்கத்திய கலாச்சாரம் கல்வி முறை பழக்க வழக்கங்களுக்கு இன்னும்  அடிமைப்பட்டுதான் இருந்தோம். அதில் நாம் தொலைத்த முக்கியமான ஒன்று நம் பழமையான வைத்திய முறை.
 மெல்ல மெல்லப் பழமையான வைத்திய முறைகள் மறக்கடிக்கப்பட்டு மருந்து மாத்திரைகளை மக்கள் நம்ப ஆரம்பித்தனர். சித்த ஆயுர்வேத வைத்தியம்  பழமையான முறை எனவும் அது நோய்களை தீர்க்க வெகு நாட்கள் ஆகும் என்று கருத்து பதியப்படஎல்லோரும் வேகமாய் குணப்படுத்தும் மருத்துவமனைகளை நோக்கிப் பயணப்பட்டார்கள். ஆங்கிலேய மருத்துவ முறை அபரிதமாய் வளர்ச்சி அடைந்த அதே நேரத்தில் நோய்களும் ஏகபோகமாய் வளர்ச்சி பெற்றது.
மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு மருந்து மாத்திரைகளின் பின் விளைவுகளையோ… ஏன் அவற்றின் பெயர்களையோ கூடத் தெரியாமல் விழுங்கிக் கொண்டிருந்த நாம் மருத்துவம் எனும் பெரும் வியாபாரச் சந்தைக்குள் சிக்க வைக்கப்பட்டோம்.
இங்கிருந்தே மீண்டும் நம் பயணம் தொடரப் போகிறது.
இந்தியாவின் சுதந்திரம் பெற்ற பின்னர் குடியரசு நிர்மாணிக்கப்பட சிற்றரசுகள் பேரரசுகள் மற்றும் அவற்றை ஆண்டு கொண்டிருந்த அரசர்களும் பெயரின்றி தொலைந்து போயினர். ஆனால் அத்தகைய விதம் தன்னை தொலைத்துக் கொள்ள மனமில்லாத ராஜமகாதேவன் தம் செல்வங்களை பெரும் வியாபாரங்களில் முதலீடு செய்து மீண்டும் தன் ஆளுமையை நிர்மாணிக்க முடிவெடுத்தார்.
அவ்விதமே சில வியாபாரங்களில் வெற்றியும் கண்டு மெல்ல மெல்ல வளர்ச்சிக் கண்டார். இறுதியில் சில வெளிநாட்டு நிறுவனங்களைக் கூட்டாக கொண்டு ரா‘ மருத்துவ ஆராய்ச்சி மையம் ஒன்றை நிர்மாணித்தார். அங்கே தொடங்கிய வியாபார யுக்தி நம் நாட்டின் பாரம்பரிய வைத்திய முறைகளை மெல்ல மெல்ல முடக்க ஆரம்பித்தது.
ராஜமகாதேவனுக்கு பிறகு அவரின் வாரிசு சௌந்தராஜன் ரொம்பவும் புத்திக்கூர்மையும் திறமை வாய்ந்தவராகவும் இருந்தார். வியாபார நுணக்கங்களை நன்கறிந்து இந்திய தேசம் முழுவதும் பல வியாபாரங்களையும் தன் கைவசப்படுத்த ஆரம்பித்தார் எனலாம்.
அவர் நாளடைவில் கடல் கடந்தும் தன் ஆளுமையைக் கொண்டு சென்றிருந்தார். அதிலும் முக்கியமாக மருந்து உற்பத்தியில் உலகம் முழுக்க உள்ள பல ஆராய்ச்சி மையங்களோடு பிணைத்து கொண்டு ரா‘ மெடிக்கல் ரிசர்ச் சென்டர் மற்றும் ஃபார்மாசிட்டிக்கல் இன்டஸ்டிரிஸ்ஸில் பெரும் ஜாம்பவானாய் மாறிக் கொண்டிருந்தார். மக்களின் நலனுக்காக மருத்துவ துறை  வளர்ச்சியடைந்த அதே நேரத்தில் அதற்கு பின்னணியில்  பெரும் வியாபார அடித்தளம் இருந்ததை யாரும் அறியவில்லை.
சௌந்தராஜன் எல்லா வியாபாரங்களிலும் தம் ஆளுமையை நிரூபித்து வெற்றி கண்ட திருப்தியில்  தன் நாற்பதாவது வயதில் திருமணம் செய்ய முடிவெடுக்கஅழகிலும் அறிவிலும் சிறந்து விளங்கி பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருந்த நடிகை அவந்திகாவை  மணமுடித்தார்.
அவர்கள் இருவருக்கிடையில் கிட்டதட்ட பதினெட்டு வயது வித்தியாசம் இருந்த போதும் பணம் பெயர் செல்வாக்கின் முன் அவை எல்லாம் பெரிய விஷயமாக இல்லை. இரண்டு வருட திருமண வாழ்க்கையில் மூன்று முறை அவந்திகா கருத்தரித்தாள். ஆனால் கருவிலேயே பெண் என்று அறியப்பட சௌந்தரராஜன் தன் முதல் வாரிசு ஆணாகவே இருக்க வேண்டும் என்ற பிடிவாதத்தில் கலைத்துவிட தீர்மானித்தார்
இறுதியாக அவர் எண்ணம் ஈடேறும் விதமாய்  அவந்திகா ஆண் வாரிசை கருத்தறிக்க இன்று அவள் நிறைமாத கர்ப்பிணியாய் இருந்தாள். சௌந்தராஜன் பிறக்கப் போகும் ஆண் வாரிசைக் குறித்து பெரும் கனவுகளை தேக்கி வைத்திருந்தார்.
தொழிற்துறையில் வேகமாய் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த அன்றைய பம்பாய் மாநகரத்தில் உள்ள பெரிய பிரமாண்டமான வீடு. அந்த வீட்டின் பரந்து விரிந்த முகப்பு அறையைப் பார்க்கும் போதே அதன் ஆடம்பரமான வடிவமைப்பு தலைச்சுற்ற வைத்தது.
 அரண்மனை என்றே சொல்லும் அளவிற்குப் பாரம்பரியமான முறையில் அவை நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டின் முதல் தளத்தில் இருந்த படுக்கை அறை பார்ப்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் விதமாய்   அத்தனை விஸ்தாரமாய் இருந்தது.
அந்த அறையைச் சுற்றிலும் வண்ணவிளக்குள் சுவற்றை அலங்கரித்துக் கொண்டிருந்தன. நடுவில் பெரிய படுக்கையும் இடது புறத்தில் உட்கார்ந்து பேச அழகிய  இருக்கைகளும் மேஜைகளும் வைக்கப்பட்டிருந்தன. அங்கே இருந்த பொருட்கள் நுணக்கமான அழகியல்  அமைப்போடு நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்தன.
அங்கே அமைந்திருந்த வட்ட நிற கண்ணாடியின் முன் தன் அழகை ரசித்தபடி இருந்தாள் அவந்திகா. அவளோ அந்த அறையில் இருக்கும் ஓர் அழகு பதுமையாகவே காட்சியளித்தாள். அவள் அணிந்திருந்த நீண்ட ஸ்கட்டில் வயிறு மட்டும் பெரிதாக முன்னாடி நிற்க அதனை தொட்டு பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்தாள்.
அந்தச் சமயத்தில் சௌந்தராஜன் கம்பீரமாக அந்த அறைக்குள் நுழைந்தார். அவர் தன் மனைவியின் பின்னோடு வந்து தோள்மீது கைவைத்து நிற்கஅந்தக் கண்ணாடி இருவரின் உருவத்தையும் ஒருசேரப் பிரதிபலித்தது. அவர்களின் பொருத்தமில்லாத  பந்தத்தை பார்க்க விருப்பமில்லாமல் அவந்திகா தன் கணவனை  பார்த்து, “கிளம்பிட்டீங்களா சௌந்தர்!” என்று வினவினாள்.
ம்… ஆனா  இந்த மாதிரி சமயத்தில… உன்னை விட்டுட்டு போக மனசே வரல… டியர்” என்று சொல்லி மனைவியை பிரிய முடியாமல் அவள் கன்னத்தை தடவி பெருமூச்செறிநதார்.
ஜஸ்ட் த்ரீ டேஸ்தானே… போயிட்டு வாங்க… ஐ கேன் மேனேஜ்” என்று அவள் உரைக்க சௌந்தராஜன் முகமோ ஏக்கத்தை பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
மீண்டும் அவந்திகா கணவரின் கவலையைக் கண்டு கொள்ளாதவளாய், “மிஸ்டர். சுந்தரையும் உங்க கூட அழைச்சிட்டு போறீங்களா?!” என்று கேள்வி குறியோடு வினவினாள்.
சௌந்தராஜனின் எல்லா வேலைகளுக்கும் வலது கரமாக திகழ்பவர் சுந்தர். அவள் அப்படி கேட்க அவர் திகைப்போடு “வாட்… சுந்தர் இல்லாம எப்படி அவந்தி? !” என்றார்.
த்ரீ டேஸ் டிர்ப்தானே… நீங்க தனியா மேனேஜ் பண்ண முடியாதா என்ன?லெட் ஹிம் பி ஹியர்… இப்ப இருக்கிற நிலைமையில் நானும் எதையும் கவனிச்சிக்க முடியாது… ஸோ… இங்க எல்லாவற்றையும் கவனிச்சிக்க யாராவது இருக்கனும் இல்லையா?!” என்று கேட்டாள்.
சௌந்தரன் தன் எல்லா வியாபாரங்கள் குறித்த  நுணக்கங்களையும் திட்டங்களையும் அவந்திகாவிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். அதனாலேயே அவந்திகா கணவருக்கு நிகராக வியாபாரத்தைக் கவனித்து கொள்வதில் தேர்ந்தவளாயிருக்க மனைவியின் கருத்து அவருக்கு வேதவாக்கு. ஆதலால் மறுத்துப் பேசாமல், “ஒகே… ஜஸ்ட் த்ரீ டேஸ்தானே” என்று தலையசைத்து ஆமோதித்தார்.
பின்னர் அவந்திகாவின் வயிற்றைப் பார்த்து, “கம் சூன் மை பாய்… யூ கோயிங் டு ரூல் தி வார்ல்ட்” என்றார்.
முதன்முறை இவ்விதம் சௌந்தராஜன் உரைக்கவில்லை. பல்லாயிரம் முறை இந்த வாக்கியத்தை அவர் தொடர்ச்சியாய் உரைக்க அது வயிற்றில் உள்ள அவர் சிசுவின் மனதில் ஆழப் பதிந்திருந்தது. பின்னர் சௌந்தராஜன் மனைவியை அணைத்து முத்தமிட அவந்திகா வேண்டா வெறுப்பை  அதை வாங்கிக் கொண்டு  இயந்திரத்தனமாய் புன்னகைப் புரிந்தாள்.
சௌந்தரன் முகப்பு அறைக்கு வர சுந்தரம் தயாராகக் காத்து கொண்டிருந்தார். அவரிடம் தன்னுடன் வர வேண்டாம் என உரைத்து சில வேலைகளை வரிசைக் கட்டி செய்யும்படி பணித்துவிட்டு முன்னேறிச் சென்றார்.
அந்தப் பிரமாண்டமான வாசலைக் கடந்து சௌந்தரன் வெளியே வந்து வானத்தில் பறக்க தயாராகக் காத்திருந்த ஹெலிக்காப்டரில் ஏறித் தன் பயணத்தை மேற்கொண்டார். அதுவே அவரின் கடைசி பயணமாக அமைந்தது.
கணவருக்கு கையசைத்துவிட்டு வானத்தில் அந்த ஹெலிக்காப்டர் தன் சிறகை சுழற்றிக் கொண்டு மேலே மேலே உயர பறந்து கொண்டிருக்க அதனைப் பார்த்தபடியே நின்றிருந்தாள் அவந்திகா. ரொம்ப உயரத்தில் சென்ற அந்த ஹெலிக்காப்டர் யாரும் எதிர்பாராத விதமாய் திடீரென்று வானிலேயே  சில கோளாறுகள் காரணமாக வெடித்துச் சிதறியது.
வானில் நடந்த அந்த விபத்து பெரும் பதட்டமான சூழலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ஆனால் இந்த நிகழ்வை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த அவந்திகா வஞ்சமாகப் புன்னகைத்தாள்.
சௌந்தராஜன் பணபலம் பொருந்திய பெரும் புள்ளியாக இருக்க அவந்திகாவிற்கு விருப்பமில்லாவிடிலும் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் அவளுக்கு உண்டானது. அவள் தன் ஆசை இலட்சியங்களை உடைத்தெறிந்துவிட்டு அந்த முடிவை  ஏற்றுக் கொள்ள நேரிட்டது.
போதாக் குறைக்கு மூன்று கருகலைப்பு மேலும் அவள் வெறுப்பை வளர்த்துவிட்டது.  தலைவிதியே என்று அப்படி ஒரு வாழ்க்கையை வாழ அவள் விரும்பவில்லை. அதனால் அந்த மூன்று வருட வாழ்க்கையில் வியாபாரம் முதற்கொண்டு வேலையாட்கள் வரை சௌந்தரனுக்கு தெரியாமலே அவள் தன் ஆதிக்கத்தைக் கொண்டுவந்தாள்
 சுந்தரம் சௌந்தரனின் வியாபாரத்தை பற்றிய அனைத்து விஷயங்களை அறிந்தவராதலால் அவரைப் போகவிடாமல் சூட்சமமாய் தடுத்துவிட்டாள். சரியான சமயத்தை பயன்படுத்தி அவள் தன் புத்திக்கூர்மையால் வெகுநாளாய்  தீட்டி வைத்த திட்டத்தில் வெற்றி கண்டாள்.
கணவனை கொல்ல அவள் செய்த சூழ்ச்சியை யாரும் கணிக்க கூட முடியவில்லை.  சௌந்தராஜனோ அவந்திகாவின் மீதிருந்த அலாதியான காதலாலும் மயக்கத்தாலும்  அவள் மனதில் குட்டிக்கொண்டிருந்த வெறுப்பை உணரவில்லை. அதுவே அவரின் மரணத்திற்குக் காரணகர்த்தாவாக அமைந்தது.
அவந்திகா தான் நினைத்ததைச் சாதித்த ஆனந்தத்தினால்  சௌந்தரனின் மரணம் நிகழ்ந்த அன்றே அவள் ஓர் ஆண் குழந்தையை பிரசவித்தாள். தன் தந்தையின் சாம்பலில் இருந்து அவரின் கனவுகளை சுமந்து கொண்டு உயிர்த்தெழுந்தான். அவன்தான் ஈஷ்வர்தேவ்!
சௌந்தரனின் மரணம் அவர் நிர்மாணித்த வியாபார சாம்ராஜ்ஜியத்தை சரித்திவிடும் என்று பலரும் எதிர்பார்க்கநடந்தவை நேர்மாறாய் இருந்தது. அரசர் காலத்திலிருந்து வரிசை வரிசையாக ஆண்களின் ஆளுமையை கண்ட மகாதேவன் வம்சம் முதல்முறையாய் ஒரு பெண்ணின் ஆளுமைக்குக் கீழ் வந்தது.
அவளால்  நிச்சயம் நிர்வாகிக்க முடியாது என்று எண்ணி அவளின் வீழ்ச்சிக்காகப் பலரும்  காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவந்திகா எல்லா வியாபாரங்களையும் அந்த இளம் வயதில் திறம்பட ஆதிக்கம் செலுத்தி வியக்க வைத்தாள்.
அது மட்டுமின்றி ஈஷ்வர் தேவ்வை அவனின் பத்தாவது வயதிலேயே எல்லா வியாபார நுணக்கங்களையும் கற்றுக் கொடுத்து நிர்வாகப் பொறுப்புகளை அவன் தலையில் சுமத்தினாள். பெற்றோரின் புத்திக்கூர்மையில் பன்மடங்கு கொண்டவன் அப்போதே  வெகு சாமார்த்தியமாய் செயல்படஇன்று அவனுடைய முப்பதாவது வயதில் வியாபார தந்திரங்களின்  வல்லமை பொருந்தியவனாய் இருந்தான்.
அவனின் ஆதிக்கத்தில் ராக்ரூப் ஆஃப் கம்பனிஸ் எல்லா துறைகளிலும்  தலைசிறந்து விளங்கியது. அதிலும் முக்கியமாய் ஃபார்மாசிட்டிக்கல்ஸ் இன்டஸ்டிரீஸில் முதன்மையான இடத்தில் இருந்தது.